💞அத்தியாயம் 23💞

“தனுக்கு ப்ளூ கலர்னா ரொம்ப பிடிக்கும்னு சொன்னா… நான் என் பெட்ரூமோட இண்டீரியரை ப்ளூவா சேஞ்ச் பண்ணிடலாம்னு இருக்கேன்… அவளுக்கு ஆர்கிட்னா ரொம்ப பிடிக்குமாம்… நெக்ஸ்ட் டைம் நாங்க ரெண்டு பேரும் சீக்ரேட்டா மீட் பண்ணுறப்போ அவளுக்கு ஆர்கிட் பொக்கே வாங்கிட்டுப் போகணும்”

                                                                    -விஸ்வஜித்

ஹோட்டல் ராயல் கிராண்டே, வாஷிங்டன் அவென்யூ, ஹூஸ்டன்…

தனஞ்செயன் அன்று வேலை முடிந்ததும் தனது காரிலேயே ஷான்வியை அஸ்வினியின் வீட்டில் கொண்டு போய் விடுவதாகச் சொல்லிவிட்டான். அவளது நிசான் இன்றோடு முப்பத்திரண்டாவது முறையாக சர்வீசுக்குச் சென்றுவிட்டது.

“நீ இதுக்கு புது காரே வாங்கிருக்கலாம் குட்டிம்மா… உனக்கு ரொம்ப வேலை வைக்குது” என்று தனஞ்செயனும் கேலி செய்தான். போதாக்குறைக்கு அன்றைக்குக் காலையில் சித்தார்த்தும் இதைச் சொல்லித் தான் கிண்டல் செய்துவிட்டுப் போனான்.

“உன் காரை குறை சொன்னா மட்டும் பொங்குவியே! ஆனா அது காயலான் கடை சரக்கு தான்… நீ தான் அதை கார்னு சொல்லி மெச்சிக்கணும்”

அது நினைவுக்கு வரவும் “அண்ணா நீங்களும் சித்துவ மாதிரியே கிண்டல் பண்ணுறிங்க பாத்திங்களா? கார்னா சின்ன சின்ன பிரச்சனை வரத் தான் செய்யும்ணா” என்று முகத்தைச் சுருக்கிக் கொண்டு அவனுடன் ஹோட்டலை விட்டு வெளியேறினாள்.

“சின்னப் பிரச்சனையா? குட்டிம்மா உன் காருக்கு ஸ்டார்ட்டிங் டிரபிள்… ஸ்டார்ட் ஆனா தானே நீ அத யூஸ் பண்ணவே முடியும்” என்று கேலி செய்தபடி காரில் அமர்ந்தவனுடன் அவளும் அமர கார் அஸ்வினியின் வீட்டை நோக்கிச் செல்ல தொடங்கியது.

தனஞ்செயன் காரை ஓட்டியபடியே தன்வியைப் பற்றி பேச ஆரம்பித்தான்.

“விஸ்வா சாரோட அம்மா ஜாதகம் பாத்தாங்களாம்… தனுக்கும் சாருக்கும் நல்ல பொருத்தம் இருக்குதாம்… ஆனா அவரோட ஜாதகப்படி இந்த வருசம் அவருக்கு கல்யாணம் நடக்கலைனா இன்னும் மூனு வருசம் கழிச்சு தான் நடக்கும்னு சொல்லிட்டாராம்… அவங்கம்மா அத சொல்லியே புலம்புறாங்கனு விஸ்வா சார் நேத்து என் கிட்ட சொன்னாரு”

“இப்போவே வீ.கே சாருக்கு இருபத்தியேழு வயசு ஆகுதே… அவங்கம்மாவோட புலம்பலும் நியாயம் தான் அண்ணா… ஆனா எங்க அப்பா அம்மா தவறி இன்னும் ஒரு வருசம் முடியலயே! அதுக்குள்ள கல்யாணம் வைக்கமுடியுமா?”

“சாஸ்திரம் பாக்குற பெரியவங்களே அத பெருசா நினைக்கலயேடா… நீ அத நம்புறியா?”

“இங்க என்னோட நம்பிக்கையோ தனுவோட நம்பிக்கையோ பிரச்சனை கிடயாதுண்ணா… இப்போ வீ.கே சாரோட அம்மா மகனோட ஜாதகத்துக்காக அவசரமா மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டு பின்னாடி அவங்க வாழ்க்கைல எதும் பிரச்சனை வந்தா வருசம் கழியாம கல்யாணம் பண்ணுனதால தான் இப்பிடியெல்லாம் நடக்குதுனு ஒரு பேச்சு வந்திடுமேண்ணா! அதான் எனக்கு யோசனையா இருக்கு… இன் ஃபேக்ட் அஸுக்கா கூட இத தான் சொன்னாங்க”

தனஞ்செயனுக்கு ஷான்வியின் கவலை புரிந்தது. ஆனால் பெரியவர்களே அந்த சம்பிரதாயத்தைப் பெரிதுபடுத்தவில்லை எனும் போது யோசிக்க எதுவுமில்லை என்பது தனஞ்செயனின் எண்ணம்.

கார் அஸ்வினியின் வீட்டை அடைந்த போது அனிகா புல்வெளியில் பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். காரிலிருந்து இறங்கியவர்களைக் கண்டதும் பந்தை கையில் எடுத்துக் கொண்டு அவர்களிடம் ஓடினாள்.

“அங்கிள் மம்மி எனக்கு ஃபுட் பால் வாங்கிக் குடுத்துருக்காங்க… நீங்க விளையாட வர்றிங்களா?” என்றவளைத் தூக்கிக் கொண்டவன்

“அங்கிளுக்கு இன்னைக்கு டைம் இல்லடாமா… அனிகுட்டி இப்போ விளையாடுவாளாம்… அங்கிளுக்கு இன்னும் டூ டேய்ஸ்ல வீக்லி ஆப் வர்றப்போ உன் கூட விளையாட வருவேன்” என்று சொல்லவும்

“பிராமிஸா வருவிங்களா?” என்று தனது முட்டைக்கண்ணை சந்தேகமாய் சுருக்கியபடி கேட்டாள் அனிகா.

அவளது முகபாவம் ஷான்விக்குச் சிரிப்பை மூட்ட “உன் கூட விளையாடுறத விட அவருக்கு அப்பிடி என்ன பெரிய வேலை?” என்று சொல்லவும் தனஞ்செயன் அவளுக்கு ஹைஃபை கொடுத்தான்.

அனிகாவை கீழே இறக்கிவிட்டவன் விளையாடுமாறு சொல்லிவிட்டு ஷான்வியை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றான். அஸ்வினி தேஜஸ்வினியிடம் பேசிக் கொண்டிருந்தாள். வீட்டினுள் நுழைந்த இருவரையும் கண்டதும்

“தேஜூ ஷானு கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னியே! அவ வந்துட்டாடி! என்னனு கேளு” என்று பூடகமாய் உரைத்துவிட்டுப் போனை ஷான்வியிடம் நீட்டினாள்.

என்னவென்று கண்களால் வினவிய தனஞ்செயனிடம் கண்களாலேயே வேடிக்கை பார்க்குமாறு சொன்னவள் அவனுக்குக் காபி வேண்டுமா என்று சைகையில் கேட்க, கொடுத்தால் நலமென அவனும் சைகையில் பதிலளித்தான்.

ஷான்வியை தேஜஸ்வினி போனில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தாள்.

“நீயும் தனுக்காவும் ஏன் இவ்ளோ தூரம் யோசிக்கிறிங்கனு தான் எனக்குப் புரிய மாட்டேங்குது ஷானு.. இப்போ மணி அங்கிளும் பூர்ணா ஆன்ட்டியும் இருந்திருந்தா விஸ்வாண்ணா மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடச்சதுக்குச் சந்தோசப்பட்டிருப்பாங்க… அதே சந்தோசத்தோட கல்யாண ஏற்பாட்டையும் ஆரம்பிச்சிருப்பாங்க… அவங்க இப்போ இல்ல.. எனக்கும் புரியுது… ஆனா நீங்க உங்க வாழ்க்கைல சந்தோசமா இருக்கிறத தானே அவங்களும் விரும்புவாங்க”

ஷான்வி அவள் சொன்ன அனைத்துக்கும் உம் கொட்டியவள் தான் கொஞ்சம் யோசித்துவிட்டுச் சொல்வதாகக் கூறவே காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்கும்படி சொல்லிவிட்டுப் போனை வைத்தாள் தேஜஸ்வினி.

அஸ்வினியும் தனஞ்செயனும் இதனை நோக்கியபடியே அமர்ந்திருக்க அவர்களை குழப்பமாய் பார்த்தவள் பேச்சை மாற்ற எண்ணியவளாய் “அனி எங்க போனா? நான் போய் அவ கூட விளையாடுறேன்” என்று இடத்தைக் காலி செய்தாள்.

அஸ்வினி தனஞ்செயனிடம் திரும்பியவள் “நீங்க இந்தியா போகணும்னு சொல்லிட்டிருந்திங்களே! பேசாம விஸ்வா கல்யாணத்த அட்டெண்ட் பண்ணிட்டு அப்பிடியே உங்க ஊரையும் ஒரு பார்வை பாத்துட்டு வந்துட வேண்டியது தானே” என்று கேட்க

“அதுவும் சரி தான் மேடம்… தனா எப்போ வருவான்னு மேட்டுப்பட்டில எனக்குனு எந்த ஜீவனும் காத்திருக்கப் போறதில்லயே” என கேலி போல அவன் சொன்னாலும் அதன் பின்னே இருந்த வலி அவளுக்குப் புரிந்தது.

அம்மா, அப்பா, தங்கை என அனைவரும் இருந்தும் அவளே சில சமயங்களில் அனாதை போல உணர்ந்து மனம் நொந்து போனதுண்டு. அப்படி இருக்க தனஞ்செயனுக்கு வருத்தம் இருப்பதில் வினோதம் எதுவுமில்லை!

இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் ஷான்வி பதற்றத்துடன் உள்ளே வந்தாள்.

“அக்கா அனிகுட்டிய வீட்டுக்கு வெளியே காணும்… நான் எல்லா ரூம்லயும் தேடிப் பாத்துட்டேன்கா”

அவள் அனிகாவை காணவில்லையென கூறவும் அஸ்வினியும் தனஞ்செயனும் தூக்கி வாரிப் போட எழுந்தனர்.

“அவ வெளியே தானே விளையாடிட்டிருந்தா?” என்று பதறிய அஸ்வினி வேகமாக வெளியே செல்ல அவளைத் தொடர்ந்தனர் ஷான்வியும் தனஞ்செயனும்.

அங்கே அனிகா இல்லாது போகவே இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது அஸ்வினிக்கு. பதற்றத்தில் எல்லா இடத்திலும் தேடியவள் எங்கு தேடியும் மகளைக் காணவில்லை என்றதும் நிலைகுலைந்து போனாள்.

தனஞ்செயனும் ஷான்வியும் அவள் வேறு எங்கே சென்றிருப்பாள் என்று கேட்க அவளோ யூகத்தில் பக்கத்துவீட்டை நோக்கினாள். ஏனெனில் அந்த வீட்டுச்சிறுவன் பீட்டர் அனிகாவின் விளையாட்டுத் தோழன்.

அவள் அங்கே பார்த்ததும் தனஞ்செயன் அங்கே வேகமாகச் சென்றவன் அனிகாவைத் தேட ஆரம்பித்தான். ஷான்வியும் அஸ்வினியும் கலக்கத்துடன் அவனைத் தொடர்ந்தனர்.

தனஞ்செயன் பதற்றத்துடன் தேடும் போதே யாரோ தண்ணீரில் கை கால்களை அடிக்கும் சத்தம் கேட்க “இங்க குளம் எதுவும் இருக்கா?” என்று அஸ்வினியிடம் கேட்க

“ஆமா! பீட்டர் ஆல்ரெடி இங்க ஒரு நீச்சல் குளம் இருக்குனு சொல்லிருக்கான்” என்று சொல்லவும் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினான் தனஞ்செயன்.

அஸ்வினியின் வீட்டுக்கு அடுத்த காம்பவுண்ட் மதிலை ஒட்டி அமைந்திருந்த அந்த நீச்சல்குளத்தை அடைந்தான் அவன். அங்கே அனிகா தண்ணீரில் நீந்த தெரியாது தத்தளித்துக் கொண்டிருந்தவள் தண்ணீரைக் குடித்ததில் கண் சொருகி மயக்கநிலைக்குச் செல்ல தண்ணீரில் குதித்து அவளைத் தூக்கிக் கொண்டான் அவன்.

மெதுவாய் தண்ணீரை விட்டு வெளியே வந்தவன் குழந்தையின் கன்னத்தைத் தட்ட அவள் விழி திறக்கவில்லை. தண்ணீரில் விழுந்தவர்களுக்குக் கொடுக்க வேண்டிய முதலுதவியைக் கொடுக்க குழந்தை அளவுக்கதிகமாக குடித்த தண்ணீரை கொப்புளித்தப் பின்னர் கண் திறந்தாள்.

கண் திறந்ததுமே தன் அருகில் கண் கலங்க பதற்றத்துடன் அமர்ந்திருந்த தனஞ்செயனை தாவி அணைத்துக் கொண்டாள். அதன் பின்னர் ஆவலுடன் அவன் முகம் நோக்கி அவள் கேட்ட ஒரு கேள்வி மூவரையும் உலுக்கிவிட்டது.

“தண்ணில முங்குனதும் நான் பயந்துட்டேன்… ஆனா நீங்க வந்து காப்பாத்திட்டிங்க… நீங்க தானே என்னோட அப்பா” என்று கேட்க தனஞ்செயனுக்கு என்ன சொல்லவென்று புரியவில்லை.

உடலெங்கும் சிலிர்ப்பு ஓட அன்பாய் அவளை நோக்கியவன் ஒன்றும் பேசாது அவளைத் தூக்கிக் கொண்டவன் “உனக்கு ஸ்விம்மிங் தெரியாதாடா?” என்று கேட்க குழந்தை தெரியாதென்று உதட்டைப் பிதுக்கினாள்.

“நான் உனக்கு ஸ்விம்மிங் சொல்லித் தர்றேன்… அனிகுட்டிக்குத் தெரியாததுனு எதுவும் இருக்க கூடாது… சரியா?” என்று பேசியபடி அஸ்வினியின் வீட்டை நோக்கிச் செல்லத் தொடங்கினான் அவன்.

அதே நேரம் அஸ்வினியும் ஷான்வியும் அனிகாவின் ‘அப்பா’ என்ற வார்த்தையில் அதிர்ந்து நின்றிருந்தவர்கள் சுய உணர்வு வரப்பெற்று அவனைத் தொடர்ந்தனர்.

வீட்டிற்குள் நுழைந்ததும் தனஞ்செயன் ஷான்வியிடம் அனிகாவுக்கு உடை மாற்றிவிடுமாறு சொன்னவன் இன்னும் ஈரத்துணியுடன் நிற்க அஸ்வினி அவனுக்கு டவல் எடுத்துக் கொடுத்தாள். அவனோ அவள் முகம் பாராமல்

“இல்ல மேடம்! நான் வீட்டுக்குக் கிளம்புறேன்… நீங்க அனிகாவ பத்திரமா பாத்துக்கோங்க… நான் அவளுக்கு வீக்லி ஆப் டேய்ஸ்ல ஸ்விம்மிங் கத்துக் குடுக்கிறேன்” என்று சொல்லி நிறுத்தியவன் அவளை ஆழ்ந்து நோக்கிவிட்டு “வித் யுவர் பெர்மிசன்” என வார்த்தையை முடித்தான்.

அஸ்வினியின் தலை ஆமோதித்ததன் அடையாளமாய் அசைந்தது. அவளது சம்மதம் கிடைத்ததும் அவன் அவளிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

காரில் அமர்ந்தவனின் மனக்கண்ணில் பத்து வருடங்களுக்கு முன்னர் இதே போல நீச்சல் தெரியாது நீரில் மூழ்கி இறந்து போன இலக்கியா வந்து சென்றாள். எத்தனை முறை நீச்சல் கற்றுக் கொள் என்று சொல்லியிருப்பான்!

விளையாட்டுப்பெண்ணாய் அதைக் காதில் போட்டுக் கொள்ளாது துள்ளித் திரிந்தவள் பொதுத்தேர்வு விடுமுறையின் போது அவர்களின் பூர்வீக கிராமத்திற்கு வந்த போது கிணற்றில் குளிக்கப்போகிறேன் என சென்றவள் திரும்பி வந்த போது உயிரற்றச் சடலமாய் தான் வந்தாள்.

அந்த நிமிடமே தனஞ்செயனும் அவனது தாயாரும் பாதி உயிராய் மாறிவிட்டனர். தந்தையற்ற தனஞ்செயனுக்கு தங்கையும் போய் விட அவன் வாழ்வில் உற்சாகமற்றவனாகிப் போனான்.

அதன் பின்னர் அன்னையே உலகமென வாழ்ந்தவன் மீது கடவுளுக்கு என்ன கோபமோ அவரையும் அழைத்துக் கொண்டார். யாருமற்றுத் தனியனாய் நின்றவனுக்கு அன்னியதேசத்தில் கிடைத்த சகோதரப்பாசமும் நட்புக்களும் தான் தனஞ்செயன் என்ற மனிதனுக்குள் மீண்டும் உயிர்ப்பு வர காரணமே!

இன்றைய தினத்தில் அனிகாவுக்கு மட்டும் ஏதேனும் ஆகியிருந்தால் என்னவாகி இருக்கும்? நினைத்தாலே உள்ளுக்குள் வலித்தது அவனுக்கு. இந்தச் சில மாதங்களில் அந்தச் சிறுமியுடன் ஒரு நல்ல உறவு உண்டாகிவிட்டது அவனுக்கு. அவளுக்கு ஏதேனும் ஒன்றென்றால் அவனுக்கு மனம் துடிக்கும்.

இதே மனவுளைச்சலுடன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் அவன். அவனது கார் கிளம்பிய ஓசை காதில் விழ அஸ்வினி சிலையாய் சமைந்து ஹாலின் சோபாவில் அமர்ந்திருந்தாள்.

அனிகா அவனை அப்பா என அழைத்தது அஸ்வினியை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. அனிகா என்ன நினைத்து இப்படி ஒரு வார்த்தையைக் கூறினாள் என்று தெரியவில்லை.

அவள் யோசிக்கும் போதே ஷான்வி அனிகாவுடன் வந்தாள். உடை மாற்றியிருந்த அனிகாவின் கண்கள் தனஞ்செயனை தேட “அப்பா எங்க மம்மி?” என்று மீண்டும் கேட்டு இருவரையும் அதிரவைத்தாள் அவள்.

அஸ்வினி அவளைத் தன்னிடம் அழைத்து “ஏன்டா தனா அங்கிளை அப்பானு சொல்லுற? யாரு உனக்கு அப்பிடி சொல்லிக் குடுத்தாங்க?” என்று கேட்க

“பீட்டர் தான் சொன்னான்மா! நம்ம கஷ்டத்துல இருக்கிறப்போ நம்மள காப்பாத்துறவங்க தான் சூப்பர் ஹீரோஸ்… அதுல முதல் சூப்பர் ஹீரோ அப்பா தானாம்… அதுக்கு அப்புறம் தான் மத்தவங்கள்லாம் வருவாங்களாம்… என்னை இன்னைக்கு காப்பாத்துனது தனா அங்கிள் தானே! அதான் அவரை அப்பானு சொன்னேன்” என்றாள் அவளது மகள் நிதானமாக.

இந்தக் குழந்தைகள் தான் எவ்வளவு புத்திசாலித்தனமாகப் பேசிக் கொள்கிறார்கள்! என்ன ஒன்று, இந்த மிதமிஞ்சிய புத்திசாலித்தனம் பெரியவர்களைப் பல நேரங்களில் தர்மசங்கடத்துக்கு ஆளாக்கிவிடுகிறது.

ஷான்விக்கும் கூட அனிகாவின் பேச்சில் பொறி தட்டியது. அவள் சொன்னபடி இப்போதில்லாவிடினும் பின்னாட்களில் நடக்க வாய்ப்பு இருக்கலாமே என யோசித்தாள் அவள்.

அஸ்வினியின் முகம் மகள் சொன்னதைக் கேட்டு கலங்கியது. தன் வாழ்வு மகள் மட்டுமே என்று எண்ணியிருந்தவள் அவள். விஸ்வஜித், சித்தார்த் தவிர்த்து வேற்று ஆண்மகன்களை தனது நட்பு வட்டாரத்தில் சேர்த்துக் கொள்ளாதவள் தனஞ்செயனை மட்டும் அனுமதித்தது அவனது கண்ணியமான பழக்கவழக்கம், மற்றவர் மீது அவன் எடுத்துக்கொள்ளும் அக்கறையால் தான்!

இப்போது அவன் அவளுக்கு ஒரு நல்ல நண்பன். ஆனால் மகள் இவ்வாறு சொன்னதை அவன் தவறாக எடுத்துக் கொண்டிருப்பானோ என மனதிற்குள் முரண்டியது. முன்னர் கூட தன்வி ஷான்வியின் விசயத்தில் அவன் தன்னை தவறாக நினைத்த போதும் இப்படி தான் முரண்டியது.

அவனிடமே போன் செய்து கேட்டுவிடலாமா என யோசித்தவளுக்கு இது சரியான தருணம் இல்லை என்பது புரிபட அமைதியானாள். அனிகாவைத் தன்னுடன் அழைத்துச் சென்ற ஷான்வி அவளைப் படிக்கச் சொல்லிவிட்டு அஸ்வினியிடம் தானே இரவுணவைப் பார்த்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டாள்.

ஷான்வி இரவுணவைத் தயாரித்து முடிக்கும் போது சித்தார்த் வந்துவிட்டான். அவனது திடீர் வருகை அஸ்வினியைப் போல ஷான்வியையும் வியப்பில் ஆழ்த்தியது. என்ன விசயம் என்று விசாரிக்கவும் விஸ்வஜித், தன்வியின் கல்யாண விசயத்தை ஆரம்பித்தான் அவன்.

“இன்னும் ஏன் முடிஞ்சு போனத யோசிச்சு நல்ல விசயத்த தள்ளிப் போடணும்னு அம்மா நினைக்கிறாங்க அஸுக்கா… எனக்கும் அது தப்புனு தோணல… இவளும் அமுல்பேபியும் தான் ரொம்ப யோசிக்கிறாங்க” என குறைபட்டான் அவன்.

அஸ்வினி அப்போது கொஞ்சம் மனம் தெளிந்தவள் தனக்கும் வள்ளி சொல்வது தான் சரியாகப் படுகிறது என்று சொல்லவும் ஷான்வி சித்தார்த்தை நோக்கினாள்.

“சரி! உங்கம்மாக்கு வீடியோ கால் பண்ணு… நான் அவங்க கிட்ட பேசணும்” என்றதும் அன்னைக்கு அழைத்தான் அவன்.

எடுத்ததும் திருமண தேதியைக் குறித்துவிடலாமா என்று தான் கேட்டார் வள்ளி. கார்த்திக்கேயனும் ஆர்வமாய் அவள் முகத்தை நோக்க ஷான்வியோ தன்வியைப் பார்த்தாள்.

“எனக்கு இப்போ கல்யாணம் நடக்குறதுல பிரச்சனை எதுவும் இல்ல ஆன்ட்டி… ஆனா பின்னாடி யாரும் இந்தக் காரணத்த சொல்லி தனுவ கஷ்டப்படுத்திடக் கூடாது” என தன் மனநெருடலைச் சொல்லிவிட்டாள்.

“எனக்கு பொம்பளை பிள்ளைங்க இல்லாத குறை எப்போவுமே உண்டு ஷானு… தனுவ நான் என் மக மாதிரி பாத்துப்பேன்… அதுக்காக அவ சொல்லுற எல்லாத்துக்கும் ஆமா சாமி போட மாட்டேன்… தப்பு செஞ்சா கண்டிப்பேன், எனக்கு விஸ்வாவும் சித்துவும் எப்பிடியோ அப்பிடி தான் தனுவும்… என் பிள்ளை அவன் விரும்புற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருந்தா போதும்னு நினைக்கிறேன்டா”

வள்ளி தனது நிலையை வெளிப்படையாகச் சொல்லிவிட ஷான்விக்குப் பெரும்பாரம் அகன்றது. இனி அவள் மட்டும் வேண்டாம் என சொல்லுவாளா என்ன! வீடியோவில் தெரிந்த தன்வியிடமும் விஸ்வஜித்திடமும் சிறிது நேரம் வளவளத்தவள் கல்யாணதேதியைக் குறித்துவிட்டுத் தங்களுக்குச் சொன்னால் விடுமுறை எடுக்க வசதியாக இருக்கும் என்று சொல்லிவிட்டாள். அஸ்வினி தனது அறைக்குச் செல்வதாக அவர்களிடம் சொல்லிவிட்டுச் சென்றாள்.

வள்ளியும் கார்த்திக்கேயனும் நாளையே குடும்ப ஜோதிடரிடம் நாள் குறித்துக் கொள்ளலாம் என்று சொன்னவர்கள் திருமணத்தை எளிமையாக நடத்திக் கொள்ளலாம் என்ற விஸ்வஜித்தின் கோரிக்கையையும் அவளிடம் கூறிவிட்டு இனி இளையவர்கள் பேசட்டும் என எண்ணியவர்களாய் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

“ஏன் சிம்பிளா மேரேஜ் வச்சிக்கலாம்னு சொன்னிங்க வீ.கே சார்? உங்க பேரண்ட்சுக்கு உங்க மேரேஜ் பத்தி நிறைய கனவுகள் இருக்குமே”

“சோ வாட்? அவங்களுக்கு தான் இன்னொரு மகன் இருக்கானே! அவன் கல்யாணத்தை கிராண்டா நடத்துவாங்க! எனக்கு சிம்பிள் வெட்டிங் போதும்பா” என்றவனது பார்வை காதலுடன் அவனருகில் அமர்ந்திருந்த தன்வியின் மீது படவும் இவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த சித்தார்த் பேச ஆரம்பித்தான்.

“அடேய்! ரெண்டு சிங்கிள் பிள்ளைங்க உங்களை வீடியோ கால்ல பாக்குதுங்கிற ஸ்ரமணை இல்லாம ரொமான்ஸ் பண்ணுறிங்களேடா… இருங்க! நாங்களும் ஒரு நாள் இப்பிடி கண்ணாலயே ரொமான்ஸ் பண்ணுவோம்” என்று சொல்லி ஷான்வியின் தோளை அணைக்க அவள் குழம்பி அவனை முறைக்க இருவரையும் வீடியோ காலில் பார்த்துக் கொண்டிருந்த தன்வியும் விஸ்வஜித்தும் நமட்டுச்சிரிப்புடன் அமர்ந்திருந்தனர்.

ஷான்வி வெகுண்டு போய் அவனைத் திட்ட வரவும் நிறுத்து என சைகை காட்டி தடுத்தவன் “இப்போ என்னை கழுவி ஊத்த போற! அதானே! அதை ஏன் ஆன்லைன்ல பண்ணனும்? ஆப்லைன்ல கூட விம் போட்டுக் கழுவி ஊத்தலாமே!” என்று சொல்லவும்

“ஓகே கய்ஸ்! நான் உங்க கிட்ட அப்புறமா பேசுறேன்… இவனை ஃபர்ஸ்ட் என்னனு விசாரிக்கிறேன்” என்ற ஷான்வி இணைப்பைத் துண்டித்தாள்.

அவள் இணைப்பைத் துண்டிக்கவும் தன்வி விஸ்வஜித்திடம் “இப்போ சித்து என்னமோ சொன்னான்ல, அதுக்கு என்ன அர்த்தம் விஸ்வா? ஒருவேளை சித்துவும் ஷானுவும்…” என்று யோசனையாய் இழுக்க

“சே சே! அப்பிடி எதுவும் இல்ல தனு! நீ ஏன் இந்த மாதிரி யோசிக்கிற? சித்து எப்போவும் போல ஷானுவ கலாய்க்கிறான்! அவ்ளோ தான்” என்று அவசரமாய் மறுத்தான்.

ஆனாலும் தன்வியின் நெற்றியில் யோசனைக்கோடுகள் விழ அவளது நெற்றியில் முத்தமிட்டவன் “அமெரிக்கால இருக்கிறவங்கள பத்தி இவ்ளோ தூரம் யோசிக்குற! ஆனா உன் பக்கத்துலயே நிக்கிற என்னை தான் கண்டுக்கவே மாட்ற தனு… ஒரு வழியா உன் தங்கச்சி நம்ம மேரேஜுக்கு ஓகே சொல்லிட்டா… இத செலிப்ரேட் பண்ணுர மாதிரி எதாச்சும் குடுக்கலாமே” என்று கொஞ்சலாய் கேட்க தன்வி அவனது பேச்சில் மற்ற அனைத்தையும் மறந்து முகம் சிவந்து போனாள்.

ஆனால் உடனே சுதாரித்தவள் “நட்ட நடு ஹால்ல நின்னுகிட்டு சாருக்கு செலிப்ரேசன் ஒன்னு தான் குறைச்சல்… ஆளைப் பாரு” என்று சொல்லி உதட்டைச் சுழித்து அழகு காட்ட அவளது இதழ் அவனது விரல்களில் சிறைபட்டது.

அவள் பேசாது விழிக்கவும் இதழை விடுவித்தவன் “அடிக்கடி சுழிச்சு லிப்சுக்கு வேலை குடுக்காத தனு… நீ இப்பிடி சுழிக்கிறப்போ என்னால வேடிக்கை மட்டும் பாத்துட்டு இருக்க முடியாது” என்று ஹஸ்கி குரலில் உரைக்கவும் தன்விக்குள் மெல்லியதாய் வெட்கம் பூ போல அரும்பத் தொடங்கியது.

அந்த நொடியிலிருந்து அவளின் வெட்கமும் அவனது காதலும் ஒன்று சேரப் போகும் திருமணநாள் என்று வரும் என ஆவலுடன் அவர்களது இதயங்கள் காத்திருக்க ஆரம்பித்தன.