💞அத்தியாயம் 22💞

“அனிகுட்டி ரொம்ப ஸ்மார்ட்டான பொண்ணு… இப்போலாம் அவ கூட விளையாடுறது என் மனசுக்கு நிம்மதிய குடுக்குது… அவ ஸ்கூல்ல நடந்த கலாட்டா எல்லாமே எனக்கு மனப்பாடம்… அவளோட கியூட் வாய்ஸ்ல அவ சொல்ல சொல்ல என்னோட ப்ரெய்ன் அதை ரெக்கார்ட் பண்ணிடுச்சு… அதுல மறக்க முடியாத விசயம் தனக்கு மட்டும் ஏன் அப்பா இல்லைனு அவ என் கிட்ட கேட்டது தான்… அவளுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? ஆனா ஒன்னு இவ்ளோ அருமையான குழந்தையையும், அன்பான மனைவியையும் ஒதுக்கி வச்சிட்டு ஒருத்தன் இருக்கிறான்னா அவன் கண்டிப்பா துரதிர்ஷ்டசாலி தான்… வைரத்தை கூழாங்கல்லுனு நினைச்சு இருட்டு நேரத்துல ஆத்துல வீசுன துரதிர்ஷ்டசாலி”

                                                                  -தனஞ்செயன்

சென்னை, மெரீனா கடற்கரை…

கதிரவன் உலகிற்கு விடைகொடுத்துவிட்டு கடலுக்குள் மறைந்துவிட வானம் கருமை பூசிக்கொண்டது. கடற்கரையில் காற்று இதமாய் வீசியது. அந்தக் கடல்காற்றை ரசித்தபடி மணலில் அமர்ந்திருந்தனர் விஸ்வஜித்தும் தன்வியும்.

தன்வியின் மனம் நிறைந்திருந்தது. சென்னை வந்து ஒரு வாரத்தில் எத்தனை நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன! அனைத்தும் கனவா நனவா என்று புரியவில்லை. அவளருகில் சாதாரணமாய் அமர்ந்திருந்தவன் அத்தனை சம்பவங்களையும் சிறப்பாக முடித்து விட்டு அமைதி தவழும் முகத்துடன் கடலை நோக்கினான்.

இங்கு வந்ததும் அவன் செய்த முதல் வேலையே மணிகண்டனுக்குச் சொந்தமான ஃப்ளாட்டை ஆக்கிரமித்திருந்த சந்திரகலா, சந்தானமூர்த்தி, சச்சிதானந்தம், வதனாவை சட்டரீதியாக எச்சரித்தது தான். ஒழுங்கு மரியாதையாக வீட்டைக் காலி செய்யாவிடில் நீதிமன்றத்தில் சந்திக்க நேரிடும் என்ற அவனது கடுமையான எச்சரிக்கையைக் கேட்டதும் அவர்கள் அரண்டுவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.

கேட்பாரற்ற சொத்தை சுருட்டிக் கொள்ளலாம் என்று திட்டமிருந்த நேரத்தில் அவன் அதில் ஒரு லாரி மண்ணையள்ளிக் கொட்டிவிட்டுச் சென்றது அவர்களுக்குப் பதற்றத்தைக் கொடுத்தது.

அதிலும் தாரகேஷின் முகத்தைப் பார்க்க வேண்டும்! வியர்த்து விறுவிறுத்துப் போய்விட்டான். விட்டால் தன்வியின் காலில் விழச் சொன்னால் கூட அன்று அவன் விழுந்திருப்பான். தன்னை எள்ளி நகையாடிய பழைய நாட்களின் நினைவில் அவனை அற்ப புழுவைப் போல பார்த்து வைத்தாள் தன்வி.

இத்தனைக்கும் அன்றைய தினம் விஸ்வஜித் அவன் ஏற்பாடு செய்திருந்த வழக்கறிஞரையும் அவர்களுடன் அழைத்துக் கொண்டு மணிகண்டனின் ஃப்ளாட்டுக்குச் சென்ற போதே அங்கே சார்பதிவாளர் ஒருவருடன் திருட்டுத்தனமாகச் சொத்தை தங்கள் பெயருக்கு எப்படி மாற்றலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.

அச்சமயத்தில் தான் விஸ்வஜித் தனது வழக்கறிஞருடன் வந்து மிரட்டிய சம்பவம் நடந்தேறியது. அந்த சார்பதிவாளர் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாய் தப்பித்து ஓடி விட மற்றவர்கள் மாட்டிக்கொண்டு விழித்தனர். சற்று நேரத்தில் காவல்துறை அதிகாரியும் வந்துவிட அவர்கள் துண்டைக் காணோம்; துணியைக் காணோம் என்று தங்களது உடமைகளை எடுத்துக் கொண்டு காலி செய்துவிட்டனர்.

காவல்துறை அதிகாரி தன்னுடன் வந்த கான்ஸ்டபிளை வைத்து அவர்கள் உடமைகளில் ஏதேனும் சொத்துப்பத்திரம் உள்ளதா என்று தேட சந்திரகலா “இவளுங்க தான் எல்லாத்தையும் எங்கேயோ ஒளிச்சு வச்சிட்டு போயிட்டாளுங்களே” என்று பொருமிய போது தான் அவர்கள் போலிப்பத்திரங்கள் வைத்து சொத்தை மாற்றத் திட்டமிருக்கலாம் என்று ஊகித்துக் கொண்டான் விஸ்வஜித்.

எதற்கும் இருக்கட்டும் என்று அவர்கள் நால்வர் மீதும் தாரகேஷ் மீதும் காவல்துறையில் புகாரும் கொடுத்துவிட்டான். இவ்வளவையும் செய்துவிட்டுச் சாதாரணமாய் அமர்ந்திருப்பவனை வியப்பாய் நோக்கினாள் தன்வி.

அவனது தோளில் சாய்ந்து கொண்டாள் அவள். தந்தையின் தோளில் சாய்ந்து கொண்ட போது உண்டான பாதுகாப்பு உணர்வு இப்போதும் உண்டானது.

“இப்போ நீ சந்தோசமா இருக்கியா தனு?”

கண் விழித்தவள் ஆமென்று தலையை மேலும் கீழுமாக ஆட்டி வைத்தாள்.

“ரொம்ப ஹேப்பியா ஃபீல் பண்ணுறேன் விஸ்வா… உங்களால தான் எங்க வீடு இன்னைக்கு மறுபடியும் எங்களுக்குச் சொந்தமாகி இருக்குது”

“ஷானுவும் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும் தனு… அவளுக்கு இன்னுமே நம்ம மேல கோவம் தீரல… பட் சீக்கிரமே நம்மளை புரிஞ்சுப்பா”

“ம்ம்… அவ கிட்ட பேசி ஒன் வீக் ஆகுது விஸ்வா… அதுக்கு இந்நேரம் என்ன கோவத்துல இருக்காளோ?”

“அவள சித்து சமாளிப்பான்… டோன்ட் ஒரி” என்று விஸ்வஜித் சாதாரணமாகச் சொல்ல தன்வி வெடுக்கென்று நிமிர்ந்தவள்

“என்ன? சித்து சொன்னா கேக்குற அளவுக்கு அவளுக்கும் சித்துக்கும் அவ்ளோ ஸ்ட்ராங்கான ஃப்ரெண்ட்ஷிப்பா? எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் அவ சித்துவை திட்டாத நாளே கிடயாது… அப்பிடி இருக்கிறப்போ அவன் சொல்லி அவ சமாதானமாவாளா? எனக்கு நீங்க சொல்லுறது புரியல விஸ்வா” என்று படபடக்கவும் இளையச் சகோதரன் செய்த எச்சரிக்கை விஸ்வஜித்தின் நினைவுக்கு வந்தது.

“இன்னைக்கு வரைக்கும் ஷான்வி யாரையும் லவ் பண்ணுற மாதிரி தெரியல அண்ணா… அண்ட் அவ கண்ணுல ஃபயர் ஸ்டேசன் வச்சுக்கிட்டே சுத்துறதால வேற யாரும் அவ கிட்ட நெருங்க கூட மாட்டாங்க… அப்பிடி இருக்கிறப்போ அவ தனா ப்ரோக்கு அப்புறம் பேசுற ரெண்டே பேரு நீயும் நானும் மட்டும் தான்… நீ அவளோட ரோல்மாடல்… உன் மேல எக்கச்சக்க மரியாதை வச்சுருக்கா… சேம் டைம் நான் உன்னோட தம்பிங்கிறதால என் மேலயும் கொஞ்சம் மரியாதை இருக்கலாம்… இல்லனா என்னையும் மத்த ஜெண்ட்ஸ் மாதிரி ஒதுக்கி வச்சிருப்பாளே! முறைச்சிக்கிட்டே சுத்துனாலும் அந்த மரியாதை போதும்டா… அதை நான் கூடிய சீக்கிரமே லவ்வா மாத்தி காட்டுறேன்… பட் அதுக்கு முன்னாடி இது அமுல்பேபிக்குத் தெரியவேண்டாம்னு நினைக்கிறேன்டா அண்ணா”

சித்தார்த்தின் வேண்டுகோள் நினைவுக்கு வரவும் பேச்சை மாற்றினான் விஸ்வஜித்.

“ஐ மீன் சித்து, அஸு, தனா எல்லாருமா சேர்ந்து அவளைச் சமாதானப்படுத்துவாங்கனு சொல்ல வந்தேன் தனு… சரி அத விடு… நம்ம பீச்சுக்கு வந்து ரொம்ப நேரமாச்சு… அம்மா நமக்காக வெயிட் பண்ணிட்டிருப்பாங்க… வீட்டுக்குப் போகலாமா?” என்றபடி எழுந்தவன் அவளுக்கும் கை கொடுக்க அவனது கரத்தைப் பற்றியபடி எழுந்தாள் தன்வி.

தன் கரத்தை அவன் கரத்துடன் கோர்த்துக் கொண்டு கடற்கரை மணலில் கால் புதைய அவன் தோளில் சாய்ந்தபடியே நடக்க ஆரம்பித்தாள்.

***********

பேலர் அவென்யூ, ரிவர் ஓக்ஸ்….

கதவு படபடவென தட்டப்பட துயில் கலைந்த சித்தார்த் இந்நேரத்தில் யாரென எரிச்சலுடன் எழுந்தான். வேகமாக தனது அறையிலிருந்து வெளியேறி வாயில் கதவைத் திறக்கச் சென்றான்.

யாரென்று கதவைத் திறந்தவன் அங்கே நின்று கொண்டிருந்த ஷான்வியை எதிர்பார்க்கவில்லை. ஜனவரி மாதக் குளிரில் வந்திருந்ததால் கைகளைத் தேய்த்துக் கன்னத்தில் வைத்துக் கொண்டபடி தோளைச் சுருக்கி நின்று கொண்டிருந்தாள் அவள்.

திகைத்து நின்றவனைப் புருவம் உயர்த்திப் பார்த்தவள் “என்ன லுக்? வீட்டுக்கு வந்தவங்கள வாசல்ல நிக்க வச்சு பேசி அனுப்பிடுனு உங்கண்ணா ஆர்டர் போட்டுட்டுப் போயிருக்காரா?” என்று கேட்டுவிட்டு வீட்டினுள் நுழைந்தாள்.

ஹாலைச் சுற்றி முற்றி நோட்டமிட்டு விட்டு “ம்ம்… நாட் பேட்… வீட்டை நீட்டா அழகா வச்சிருக்கிங்க” என்றவளின் பாராட்டில் உச்சி குளிர்ந்தாலும் இவள் திடீரென்று இங்கே ஏன் வந்திருக்கிறாள் என்ற கேள்வி அவனுள் எழ

“நீ உக்காரு… நா ப்ரஷ் பண்ணிட்டு உனக்கும் எனக்கும் காபி எடுத்துட்டு வர்றேன்” என்றபடி தனது அறைக்குள் சென்றுவிட்டான்.

சில நிமிடங்கள் கரைய கையில் காபி கப்புடன் வந்தவன் அவளிடம் நீட்ட இப்போதைய குளிருக்கு சூடாகக் குடித்தால் இதமாக இருக்குமென வாங்கிக் கொண்டாள் ஷான்வி.

காபியை அருந்திவிட்டு நேரடியாக அவனிடம் தான் வந்த காரணத்தைக் கூற ஆரம்பித்தாள்.

“தனுவும் வீ.கே சாரும் இந்தியா கிளம்பிப் போய் இன்னையோட ஒன் வீக் ஆகுது சித்து… அங்க இருந்து ஒரு போன் கால் இல்ல.. என்ன தான் நடக்குது அங்க? எனக்கு டென்சனா இருக்கு… அங்க தாரகேஷும் அத்தையும் இருக்காங்க… அந்தப் பொறுக்கிய நினைச்சா எனக்கு டென்சன் ஆகுது சித்து”

அவளது படபடப்பைப் பார்த்தவன் “ஹூம்! பாவம் தான் நீ! பேசாம நீயே கால் பண்ணி என்ன விசயம்னு அமுல் பேபி கிட்ட கேட்டுக்கோ… அதான் பெஸ்ட்” என்று சாவகாசமாக உரைத்தவனை முறைத்தாள் ஷான்வி.

அவளது முறைப்பை பார்த்த்தும் “ஓ! மேடம் தானா கால் பண்ணிப் பேசுனா ப்ரஸ்டீஜ் இஸ்யூ ஆகிடும்ல… நான் இத யோசிக்கல பாரேன்” என்று அலட்சியமாய் ஆரம்பித்துக் கேலியாய் முடிக்க ஷான்வி சலிப்பாய் அவனை நோட்டமிட்டாள்.

“ஏன் நானே தான் கால் பண்ணணுமா? அவங்க பண்ணுனா ஆகாதா? என்னைத் தனியா விட்டுட்டு போனது கூட அவங்களுக்கு நியாபகம் இல்ல” என்று சிறுகுழந்தை போல முகம் சுருக்கிக் கோபம் கொண்டவளைப் பார்த்து மனதிற்குள் நகைத்துக் கொண்டான் சித்தார்த்.

“நீ தானே அவங்க கூட போக மாட்டேனு அடம் பண்ணுன… இப்போ மட்டும் மேடம்கு அக்கா மேல பாசம் பொத்துக்கிட்டு வந்துடுச்சா?”

அவனது கேலிக்குப் பதிலடி கொடுக்க நாக்கு துறுதுறுத்தாலும் அவன் சொன்னது போலவே தன்னை அவ்வளவு தூரம் அழைத்தும் அவர்களுடன் செல்ல மறுத்தது தனது தவறு தானே என்று நொந்தவளாய் சோபாவிலிருந்து எழுந்தவள் “சரி! அப்போ நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு அவனது பதிலை எதிர்பாராதவளாய் அங்கிருந்து செல்ல சில அடிகள் எடுத்து வைத்தாள்.

அப்போது “சொல்லுங்க மம்மி! உங்க மருமகளும் மகனும் என்ன பண்ணுறாங்க?” என்ற சித்தார்த்தின் குரலில் கால்கள் அங்கிங்கு நகராது நிற்க திரும்பினாள் ஷான்வி.

போனில் பேசிக் கொண்டிருந்த சித்தார்த் ஓரக்கண்ணால் போன் திரையை நோக்கியபடி தன்னை ஷான்வி கவனிக்கிறாளா என்று பார்த்து வைக்க ஷான்வி விறுவிறுவென்று அவனிடமிருந்து போனை பிடுங்கினாள்.

“ஹாய் ஆன்ட்டி! தனு இருந்தா போனை அவ கிட்ட கொஞ்சம் குடுங்களேன் ப்ளீஸ்!” என்று கேட்க திரையில் தெரிந்த அவனது தாயார் வள்ளி சித்தார்த்தை அழைத்தார்.

“டேய் என்னடா நடக்குது அங்க?”

“மா! உன் சின்னமருமக உன் கிட்ட பேச ஆசைப்பட்டாமா! நான் பேசிட்டுத் தர்றேனு சொன்னேன்… ஆனா அவளுக்கு வருங்கால மாமியார் மேல பாசம் அதிகம்! அதான் வேகமா பிடுங்கி பேசுறா”

போனைப் பிடித்திருந்த ஷான்விக்குப் பின்னே நின்று கொண்டிருந்த சித்தார்த் அவனது அம்மாவிடம் இவ்வாறு கூறவும் அவனை முறைத்த ஷான்வி அவன் காலில் மிதிக்க கால்வலியில் அவன் முகம் சுளித்தான்.

அவளோ வள்ளியிடம் சாதாரணமாக உரையாட ஆரம்பித்தாள்.

“ஆன்ட்டி! தனுவும் வீ.கே சாரும் சென்னை வந்து ஒன் வீக் ஆச்சு… எனக்கு அவங்க போன் பண்ணவே இல்ல… அதான் சித்து கிட்ட என்னாச்சுனு கேக்கலாம்னு வந்தேன்… இவன் சொல்லுறத நம்பாதிங்க ஆன்ட்டி!”

“உன் அக்காக்கு உன்னோட நியாபகம் தான்… ஆனா நீ தான் போன் பண்ணி ஒரு வார்த்தை கூட கேக்கலயேடிம்மா… இந்த ஒரு வாரத்துல அவளும் விஸ்வாவும் அங்க இங்க அலைஞ்சு திரிஞ்சதுல உனக்குப் போன் பண்ண நேரம் இருந்திருக்காது… அதுக்குனு நீயும் சைலண்டாவே இருந்துப்பியா?”

அவள் அமைதியா இருக்கவும் வள்ளியே தொடர்ந்தார்.

“உங்க வீட்டுப்பிரச்சனையும் நிலப்பிரச்சனையும் தீர்ந்துடுச்சு… நாளைக்கு நல்ல நாளா இருக்கு… அதான் நான் எங்க குடும்ப ஜோசியரை பாத்துட்டு வரலாம்னு இருக்கேன்”

ஜோதிடரா என சித்தார்த்தும் ஷான்வியும் குழம்பிப் போய் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு பின்னர் திரையில் தெரிந்த வள்ளியைப் பார்க்க அவரோ

“என்ன மாத்தி மாத்தி பாத்துக்கிறிங்க? விஸ்வாவுக்கு இந்த பிப்ரவரி வந்தா இருபத்தியெட்டு வயசு வரப் போகுது… இன்னும் எவ்ளோ நாளுக்கு என் பிள்ளைய ஒண்டிக்கட்டையாவே பாக்குறது? கடவுளா பாத்து தன்விய அவன் கண்ணுல காட்டிருக்காரு… இப்போவே பொருத்தம் பாத்துட்டா நல்லதுனு நினைக்கிறேன்” என்றார் ஒரு சராசரி தாயாக.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கடற்கரையிலிருந்து தன்வியும் விஸ்வஜித்தும் திரும்பிவிட்டனர். கூடவே நண்பரைக் காணப் போயிருந்த கார்த்திக்கேயனும் வந்துவிட அவரிடம் மரியாதைநிமித்தமாக உரையாடிய ஷான்வி அக்காவையும் விஸ்வஜித்தையும் திரையில் கண்டதும் கண் கலங்கிவிட்டாள்.

அந்த நிமிடம் அவளுக்குள் இருந்த பிடிவாதம் தூள் தூளாக “எப்பிடி இருக்க தனு? உனக்கு வீ.கே சார் ஃபேமிலிய பாத்ததும் என்னை மறந்து போச்சுல்ல?” என்று குழந்தை போல குறை கூற அங்கிருந்த பெரியவர்கள் மனதுக்குள் நகைத்துவிட்டு அவளைச் சமாதானம் செய்யவே விஸ்வஜித்தும் அவளை தாஜா செய்ய ஆரம்பித்தான்.

 விஸ்வஜித்தே திருப்பூரில் அவளது தந்தை வாங்கிப் போட்டிருந்த நிலத்தில் அவரது ஆசைப்படி விவசாயத்துக்குக் குத்தகைக்கு விட்டதையும், அவர்களின் அத்தை குடும்பத்தையும் சித்தப்பா குடும்பத்தையும் எச்சரித்து வீட்டை விட்டு வெளியேற்றியதையும் தெரிவித்தான்.

அந்தக் கணம் விஸ்வஜித் மீது அவளுக்குப் புதிய மரியாதை பிறந்தது. காதலுக்காக இவ்வளவு மெனக்கெட்டிருக்கிறானே என்ற பிரமிப்பால் உண்டான மரியாதை தான் அது. அதன் பின்னர் தன்வி அவளிடம் தங்கள் வீடு இனி தங்களுக்குச் சொந்தம் என குதூகலிக்க அக்காவும் தங்கையும் கொஞ்சி முடிக்கட்டும் என்று மற்றவர்கள் விலகிக் கொண்டனர்.

இருவரும் பேசி முடித்ததும் ஷான்வி போனை சித்தார்த்திடம் நீட்டினாள். அவன் போனை வாங்கிக் கொண்டவன் அவள் கிளம்பத் தயாராகவும் “இப்போவே போகணுமா ஷானு?” என்று ஏக்கமாய் கேட்க அவன் கேட்ட தொனி மனதில் வித்தியாசமாய் பட பதிலளிக்காது நின்றாள் ஷான்வி.

அவளருகே வந்தவன் “எனக்கு அண்ணா இல்லாம லோன்லியா ஃபீல் ஆகுற மாதிரி தானே உனக்கும் அமுல் பேபி இல்லாம போரடிக்கும்… இப்போ கிளாரா கூட அங்க இல்லயே” என்று சொல்ல அவளுக்கு உண்மையாகவே தன்வி இல்லாத தனிமை நத்தை வேகத்தில் நகர்ந்தது போல தான் இருந்தது.

“அதுக்கு என்ன பண்ணுறது?” என்று மெதுவாய் வாய்க்குள் முணுமுணுத்தபடி தலை குனிந்து நின்றாள் ஷான்வி.

“நீ இங்கேயே இரு ப்ளீஸ்” என்றவனை சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள் வெட்டுவது போல முறைக்கவும் அவன் கைகளை சரணாகதி போல உயர்த்திக் காட்டியவன்

“உடனே ஃபயர் ஸ்டேசனை ஆன் பண்ணிடாத தாயே! இத நான் ஒரு ஃப்ரெண்டா கேக்குறேன்… இன்னைக்கு ஈவினிங் நானே உன்னை ஷெல்டன்ல கொண்டு போய் விட்டுருவேன்” என்று சொல்ல அவளுக்கும் தான் தனியாக இருந்து என்ன செய்யப் போகிறோம்! பேசாமல் இங்கே இருந்தால் பேச்சுத்துணைக்கு இவனாவது இருப்பான் என்று யோசித்துவிட்டு சரியென்றாள்.

அதன் பின் ஷான்வி சமைக்கிறேன் என்று அடித்த கலாட்டாக்களும் அதற்கு உதவுகிறேன் என சித்தார்த் அடித்த லூட்டிகளும் அந்த வீட்டை கலகலப்பாய் மாற்றிவிட்டது.