💞அத்தியாயம் 20💞

“நாங்க ஒரு கார் வாங்கிருக்கோம்… கிளாராவோட ஃப்ரெண்ட் சொன்ன இடத்துல நல்ல செகண்ட் ஹேண்ட் கார் கிடைச்சுது… ப்ளூ கலர் நிசான் குவெஸ்ட் கார்… எனக்குப் பிடிச்ச கலரும் கூட… கார் வீட்டுக்கு வந்ததும் அனிகுட்டி அஸுக்காவ தனா அண்ணா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனோம்… வாவ்! செம ஜாலியா இருந்துச்சு… சீக்கிரம் நானும் ட்ரைவிங் பழகணும்”

                                                                         -தன்வி

தன்னருகில் அமர்ந்து அஸ்வினியிடம் பேசிக் கொண்டிருந்தவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் தன்வி. என்னென்னவோ பேச வேண்டுமென யோசித்து வந்தவளுக்கு அவனது அருகாமையில் கனவு காணத் தான் நேரம் சரியாக இருந்தது. அச்சமயத்தில் தான் ஷான்வி சித்தார்த்துடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு விஸ்வஜித்திடம் கொஞ்சம் தனியாகப் பேசவேண்டுமென கூறினாள் அவள்.

அவள் பேச்சுக்கு மறுப்பவனா அவன்! இருவரும் ஹோட்டலின் பின்பகுதியில் உள்ள புல்வெளியில் போய் நின்றனர். ஹூஸ்டன் நகரமே புத்தாண்டை வரவேற்கும் உற்சாகத்தில் திளைத்திருந்தது.

தன்வி கையைக் கட்டிக் கொண்டு தன்னெதிரே நின்றவனை ஏறிட்டவள் “நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் விஸ்வா… நீங்க கொஞ்சம் கண்ண மூடுங்களேன் ப்ளீஸ்” என்று சொல்லவும் கண்களை மூடிக் கொண்டான் அவன்.

தன்வி அவனை நெருங்கியவள் அவனது கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு மெதுவாக அவனது காதுக்குள் “ஐ லவ் யூ விஸ்வா” என்று சொல்லவும் விழி திறந்தான் விஸ்வஜித்.

“இத சொல்ல உனக்கு இத்தனை நாளாச்சா தனு? இவ்ளோ டேய்ஸ் என்னை வெயிட் பண்ண வச்சதுல மேடம்கு அவ்ளோ சந்தோசம்” என்று சொன்னபடியே அவளது நெற்றியில் தன் நெற்றியை முட்டியவன் கண்களை மூடிக் கொண்டு “ஐ லவ் யூ தனு… லவ் யூ அ லாட்” என்று ஆழ்ந்த குரலில் உரைத்து விட்டு அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான்.

அவனது இதழின் ஸ்பரிசம் நெற்றியில் ஏற்படுத்திய குறுகுறுப்பை மனதாற அனுபவித்தவாறே அவனை அணைத்துக் கொண்டாள் தன்வி. விஸ்வஜித் தனக்குள்ளே புதைந்து கொள்பவளைப் போல அணைத்தவளின் முகத்தைத் தன் கரங்களில் ஏந்திக் கொண்டவன் அவளது செம்பவள இதழ் நோக்கிக் குனிந்த அந்நொடியில் “என்ன நடக்குது இங்க?” என்ற ஷான்வியின் கோபக்குரலில் திடுக்கிட்ட தன்வி அவசரமாக விஸ்வஜித்திடம் இருந்து விலகி நிற்க அவனும் விலகி நின்றான். ஆனால் அவனது கரங்களுக்குள் அடைக்கலமான தன்வியின் கரங்களை முன்னிலும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டபடி நின்றான்.

ஷான்வி ஏற்கெனவே ஆலிவர் ஜோன்ஸின் நடத்தை ஏற்படுத்திய கடுப்பில் இருந்தவள் தன்விக்கும் விஸ்வஜித்துக்கும் இடையே நடக்கும் எதையும் அறியாததால் அவன் தன் தமக்கையிடம் நெருங்கியதற்கான காரணத்தைத் தவறாகப் புரிந்து கொண்டாள்.

கோபத்துடன் அவர்களை நெருங்கியவளை சித்தார்த் தடுக்க முயல அவனை பார்வையால் தடுத்துவிட்டு விஸ்வஜித்தின் கரத்திலிருந்து தன்வியின் கரத்தை வலுக்கட்டாயமாகப் பிரித்தாள். தன் அக்காவை தன்னருகே நிறுத்திக் கொண்டவள் விஸ்வஜித்தை வெட்டுவது போல பார்த்தாள்.

“உங்களுக்குக் கொஞ்சம் கூட மேனர்ஸ் தெரியாதா சார்? பப்ளிக் ப்ளேஸ்ல ஒரு பொண்ணு கிட்ட எப்பிடி பிஹேவ் பண்ணணும்னு கூடவா தெரியாது? தனியா நிக்கிறவ கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கிறது தான் உங்களோட பழக்கமா?”

விஸ்வஜித் அவளது நிலையைப் புரிந்து கொண்டவனாய் அவளைச் சமாதானம் செய்ய முன்வந்தான்.

“இல்ல ஷானு! நீ தப்பா புரிஞ்சிட்டிருக்க… ஆக்சுவலா என்ன நடந்துச்சுனா…” என்றவனை இடைமறித்து

“போதும்! அதான் நான் என் ரெண்டு கண்ணால பாத்துட்டேனே… அன்னைக்கு எங்க வீட்டுலயும் இப்பிடி தான் நடந்துகிட்டிங்க… நான் கேட்டதுக்கு ஏதோ காரணம் சொல்லி மழுப்பிட்டிங்க… இன்னைக்கு உங்களால என்னை ஏமாத்த முடியாது வீ.கே சார்” என்று சினத்துடன் மொழிந்தவளைப் பார்த்து சித்தார்த்துக்கே கோபம் வந்துவிட்டது.

ஆனால் தன்வி அவனுக்கு முன்னரே தங்கையின் செய்கையில் கடுப்புற்றவள் அவள் கையிலிருந்து தன் கரத்தை உதறிக் கொண்டாள். விஸ்வஜித்தை தேவையின்றி திட்டிவிட்டாளே என்ற கோபம் தன்விக்கு.

“ஷட் அப் ஷானு! யாரைக் கேட்டு நீ விஸ்வாவ இப்பிடி கன்னாபின்னானு பேசுற? அவரு ஒன்னும் என் கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணல… நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் டீப்பா லவ் பண்ணுறோம்… என்னோட லவ்வரா அவரு என் கிட்ட உரிமை எடுத்துக்கிட்டது எனக்கே தப்பா தெரியல… நீ ஏன் இப்பிடி ஓவர் ரியாக்ட் பண்ணுற?” என்று வெடித்த தன்வியும் பொறுமையிழந்து விட்டாள்.

அவளது பேச்சில் அதிர்ந்து போனாள் ஷான்வி. தன் அக்கா காதலிக்கிறாளா? இது எப்போதிலிருந்து? யோசனையுடன் விஸ்வஜித்தையும் சித்தார்த்தையும் நோக்க அவர்கள் சாதாரணமாய் நின்றிருந்ததே அவர்களுக்கு இது முன்னரே தெரியும் என்பதை உணர்த்தியது.

அவளது வார்த்தைகள் ஏற்படுத்திய அதிர்ச்சியுடன் இது வரை தன்னிடம் இருந்து எதையும் மறைத்திராதவள் இவ்வளவு பெரிய விசயத்தை மறைத்துவிட்டாளே என்ற ஏமாற்றமும் சேர்ந்து கொள்ள தமக்கையை நோக்கி

“யெஸ்! நான் ரொம்ப ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன் தான்… இனிமே உன் லவ் பத்தியோ, லவ்வர் பத்தியோ உன் கிட்ட நான் எதுவும் பேச மாட்டேன்… கங்கிராஜுலேசன்” என்று இருவரையும் உணர்ச்சியற்ற பார்வையால் வெறித்தவள் அங்கிருந்து வேகமாக வெளியேறினாள்.

தன்வி தங்கையின் இப்பதிலை எதிர்பாராதவளாய் திகைத்து நிற்க சித்தார்த் அவளிடம் வந்தவன் “யூ டோண்ட் ஒரி தனு… நான் அவளைச் சமாதானம் பண்ணுறேன்… அண்ணா! நீங்க எல்லாரும் அஸுக்கா வீட்டுக்குப் போங்க… முன்னாடி பேசுன மாதிரி நம்ம நியூ இயர் செலிப்ரேசனை அங்கேயே வச்சுக்கலாம்… நான் ஷானுவ கூட்டிட்டு வர்றேன்” என்று உறுதியளித்துவிட்டு ஷான்வி சென்ற திக்கில் அவனும் சென்றுவிட்டான்.

தன்வி கண் கலங்க நின்றவள் விஸ்வஜித்திடம் “நான் தப்பா பேசிட்டேனே விஸ்வா… பொறுமையா ஷானுக்குப் புரிய வைக்காம எடுத்தேன் கவுத்தேனு பேசிட்டேனே! இப்போ பேசுன மாதிரி என்னைக்குமே அவ என் கிட்ட பேசுனதில்ல விஸ்வா… அவ பார்வைய கவனிச்சிங்களா? அதுல ஒரு விலகல் தெரிஞ்சுது… எனக்குப் பயமா இருக்கு விஸ்வா” என்று எங்கே தங்கை தன்னை விட்டு விலகிச் சென்றுவிடுவாளோ என்ற பயத்தில் பதற விஸ்வஜித் அவளை ஆதரவாய் அணைத்துக் கொண்டான்.

“அவ உன்னோட தங்கச்சி… உன்னைப் பத்தி அவளுக்குத் தெரியாதா தனு? சின்னப்பொண்ணு தானே! அதான் கோச்சுக்கிட்டா… சித்து அவளைச் சமாதானப்படுத்த போயிருக்கான்ல, அவன் பாத்துப்பான்… நம்ம அஸு வீட்டுக்குப் போய் அவங்களுக்காக வெயிட் பண்ணுவோம்” என்று சொல்லி அவளைக் கையோடு அழைத்துச் சென்றான்.

சில நிமிடங்களுக்குப் பின்னர் நான்கு கார்கள் அந்த ஹோட்டலில் இருந்து அஸ்வினியின் வீடு இருக்கும் ரிவர் ஓக்ஸ் நோக்கி புறப்பட்டன.

அதே நேரம் ஹோட்டலின் முன்னே ஒரு ஓரமாய் நின்றிருந்த ஷான்வியைத் தன் காரில் ஏறும்படி சொல்லிக் கொண்டிருந்தான் சித்தார்த். அவளோ அவனது பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளாது பிடிவாதமாய் நகர்வேனா என்று அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.

சித்தார்த் எரிச்சலுடன் காரிலிருந்து இறங்கியவன் “ஒழுங்கா நான் சொல்லுறப்பவே கார்ல ஏறு ஷானு! இல்லனா நான் அஸ் யூஸ்வல் உன்னைத் தூக்கிட்டுப் போக வேண்டியிருக்கும்” என்றவனை அலட்சியமாய் நோக்கிவிட்டுத் தலையைச் சிலுப்பிக் கொண்டாள் அவள்.

இது வேலைக்கு ஆகாது என்று அவளருகில் சென்றவன் அவள் சுதாரித்து நகர்வதற்குள் தன் கரங்களில் ஏந்தி காருக்குள் அமரவைத்துவிட்டுக் கதவை அறைந்து சாத்தினான்.

ஷான்வி கோபத்தில் கத்தியது எதையும் பொருட்படுத்தாது காரை அஸ்வினியின் வீட்டை நோக்கி செலுத்தியவனை முறைத்தவள் தனது ஜீன்ஸின் பாக்கெட்டில் கைவிட்டுப் போனைத் தேடினாள்.

போன் அங்கே இல்லை என்றதும் சட்டைப் பாக்கெட்டுகளைத் துலாவிப் பார்த்துவிட்டு எங்கே போனை வைத்தோம் என்று யோசிக்க  வீட்டில் அவளது படுக்கையின் மீது வைத்தது நினைவுக்கு வரவும் தலையில் அடித்துக் கொண்டாள்.

சித்தார்த் அவள் போனைத் தேடுவதை ஓரக்கண்ணால் கவனித்தபடி காரைச் செலுத்தியவன் திடீரென்று காரின் வேகம் குறைவதை உணர்ந்து என்னென்னவோ செய்ய ஆனால் அவனது முயற்சிகள் அனைத்தும் பயனின்றி போக அதன் விளைவாக யாருமற்ற சாலையில் ஒருவித குலுக்கலுடன் நின்றது கார்.

சித்தார்த் காரைக் கிளப்ப முயல அதுவோ வித்தியாசமான சத்தம் ஒன்றை வெளியிட்டதோடு சரி. காரின் விளக்குகள் கூட எரியவில்லை. ஷான்வி இவையனைத்தையும் பார்த்துவிட்டு “காருக்கு என்னாச்சு சித்து?” என்று வினவ

“காருக்கும் உன்னோட குணம் ஒட்டிடுச்சுனு நினைக்கிறேன்… ஸ்டார்ட் ஆவேனானு பிடிவாதம் பண்ணுது” என்றான் சித்தார்த் அவளை முறைத்தபடி. கார் நட்டநடுப்பாதையில் நின்றுவிட்ட எரிச்சல் அவனுக்கு.

காரை விட்டு இறங்கியவன் காரின் முன்பகுதியைத் திறந்து ஆராய்ந்துவிட்டு இதற்கு மெக்கானிக்கின் உதவி கட்டாயம் வேண்டும் என்பது புரிந்ததும் மொபைலில் உள்ள சர்வீஸ் ஸ்டேசனின் எண்ணை அழைத்தான். ஆனால் இரண்டு மூன்று ரிங் சென்ற பிறகு அவனது போனும் உயிரற்றுப் போக எரிச்சலுடன் “ஷிட்” என்று காரின் முன்பகுதியை எட்டி உதைத்தான்.

இவ்வளைவையும் காரினுள் இருந்து பார்த்த ஷான்வி திருப்தியுடன் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். தன்னை எவ்வளவு பிடிவாதமாக காரில் ஏற்றினான். இப்போது அவனது கார் பாதிவழியில் நிற்கிறது என்று எண்ணி தனக்குள் சிரித்துக் கொண்டாள் அவள்.

கூடவே அவனது தோளைத் தட்டி அழைத்துவிட்டு “யாரோ என்னோட நிசானை கரகாட்டக்காரன் படத்துல வர சொப்பனச்சுந்தரி காரோட கம்பேர் பண்ணுனாங்க… ஆனா அவங்களோட கார் இன்னைக்கு அம்போனு பாதி வழியில நின்னுடிச்சே… த்சூ த்சூ” என்று கேலி செய்தவாறு நின்றவளை அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை.

பல்லைக் கடித்தவண்ணம் நின்றவனைப் பார்த்துச் சிரித்தவள் கார் நின்ற இடத்துக்கு அருகில் உள்ள புல்வெளி சூழ்ந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

“ஹேய்! இருட்டுல போய் விழுந்து வச்சுடாத… நானும் வர்றேன்” என்றபடி அவள் பின்னே சென்றான் சித்தார்த்.

ஷான்வி எதுவும் பதில் பேசாது புல்தரையில் அமர்ந்துவிட்டாள். எப்படியும் இன்று இரவு இங்கே தான் என்று முன்னரே கடவுள் தீர்மானித்துவிட்டார்! இனி தான் பதறி என்ன ஆகப் போகிறது என்று ஜென் மனநிலைக்குச் சென்றுவிட்டாள்.

அவளருகில் அமர்ந்த சித்தார்த் அவள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கவும் மெதுவாய் பேச்சை ஆரம்பித்தான்.

“எப்போவும் தெரியுற வானம் தானே! அதை இவ்ளோ டீப்பா பாக்குறதுக்கு என்ன இருக்கு?”

“ம்ம்… எனக்கு நைட் வானத்தைப் பாக்குறது ரொம்ப பிடிக்கும்… நிறைய ஸ்டார்ஸ் அங்கங்க கொட்டிக் கிடக்கிறது பாக்குறதுக்கு ரம்மியமா இருக்குல்ல”

“எல்லா ஸ்டாருமே கிட்டத்தட்ட நம்ம சூரியன் மாதிரி… தூரத்துல இருக்கிறதால அதோட சைஸ் தெரியுறது இல்ல… இதுல ரசிக்கிறதுக்கு எதுவும் இருக்கிறதா எனக்கு தோணல”

அவளைச் சீண்டாமல் இருந்தால் அவனுக்கு எப்படி பொழுது போகும்! ஆனால் ஷான்வி வழக்கம் போல கோபம் கொள்ளாது அட அற்ப பதரே என்பது போல ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு மீண்டும் வானை நோக்க ஆரம்பித்தாள்.

“சின்ன வயசுல நான் எங்கப்பா கிட்ட நட்சத்திரம் ஏன்பா மினுக் மினுக்னு கண் சிமிட்டுதுனு கேப்பேன்… அதுக்கு எங்கப்பா எனக்கு ஒரு கதை சொல்லுவாரு… வானம்ங்கிற கருப்புப்போர்வைக்குப் பின்னாடி கடவுள் நிறைய வைரத்தை மறைச்சு வச்சிருக்காராம்! அது மனுசங்களுக்குத் தெரிஞ்சா அதயும் திருடிவாங்களோனு கவலைப்பட்டு நட்சத்திரங்களை காவல் இருக்கச் சொன்னாராம்! நட்சத்திரங்களும் மினுக் மினுக்னு கண்ணைச் சிமிட்டி மனுசங்களோட கவனம் அதுங்க மேல மட்டும் இருக்கிற மாதிரி அட்ராக்ட் பண்ணிடுமாம்… இப்போ நினைச்சாலும் எங்கப்பா பக்கத்துல உக்காந்து கதை சொல்லுற மாதிரியே இருக்கு”

சொன்னவளின் குரலில் மெல்லியதாக சோகம் இழையோடியது. முகபாவனையை வைத்து அவள் சோகமாக இருப்பது தெரிந்தாலும் அவளது இதழில் நெளியும் சிரிப்புக்கு என்ன அர்த்தமென்று சித்தார்த்துக்குப் புரியவில்லை.

மெதுவாக அவளது மோவாயைப் பற்றி தன்புறம் திருப்பி “நீ உங்க அப்பாவ மிஸ் பண்ணுறியா?” என்று கேட்டவனிடம் கண் கலங்க ஆமென்று தலையாட்டினாள் அவள். கண்கள் கலங்க தான் செய்ததே தவிர ஒரு சொட்டுக் கண்ணீர் கூட அவளது இமை என்ற எல்லைக்கோட்டைத் தாண்டவில்லை.

சித்தார்த் அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டவன் “வாழ்க்கைல எல்லாரும் எப்போவும் நம்ம கூடவே இருக்க மாட்டாங்க… ஏதாவது ஒரு கட்டத்துல நம்ம தனியா தான் வாழ்க்கைய வாழணும்” என்று என்றைக்கும் இல்லாத விதமாய் மென்மையாக அவளுக்கு ஆறுதல் சொல்ல அதை மௌனமாய் ஆமோதித்தவள்

“நீ சொல்லுறது ஹண்ட்ரெட் பர்சண்டேஜ் கரெக்ட் சித்து… முதல்ல அப்பாவும் அம்மாவும் என்னையும் தனுவையும் தனியா விட்டுட்டுப் போனாங்க… இப்போ தனு என்னைத் தனியா விட்டுட்டா” என்று உடைந்து போன குரலில் சொல்லிவிட்டு அவன் தோளில் முகத்தை அழுத்திக் கொண்டாள்.

சித்தார்த் அவளது தோளைத் தட்டிக் கொடுத்தவன் “நீ ஏன் அப்பிடி நினைக்கிற? தனுவும் விஸ்வாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க ஷானு… நீ விஸ்வாவ திட்டுன கோவத்துல தான் தனு உன்னைத் திட்டுனாளே தவிர அவ என்னைக்குமே உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டா” என்று ஆறுதல் சொல்ல அதற்கு அவள் பதிலளிக்கவில்லை.

சித்தார்த் அவளைத் தன் தோளிலிருந்து எழுப்பி “அவ உன்னை உரிமையா திட்டுனது தப்புனு நினைக்கிறியா? உன்னோட ரோல்மாடல் வீ.கே உன் அக்காவ லைப் பார்ட்னரா வர்றதுல உனக்கு இஷ்டமில்லயா ஷானு?” என்று கேட்க

“சே சே! இதுக்கு மேல நானே வேண்டாம்னு சொன்னாலும் தனுவால வீ.கே சாரை தவிர வேற யாரையும் லைப் பார்ட்னரா யோசிக்க முடியாது… என் அக்காவ பத்தி எனக்குத் தெரியும்… இன்னைக்கு வீ.கே சாருக்கு அவ சப்போர்ட் பண்ணி பேசுனப்போ அவ கண்ணுல தெரிஞ்ச உறுதியும் காதல் தான் அதுக்கு சாட்சி… எனக்கு அவங்க லவ் பண்ணுறதுல ஒபீனியன் சொல்ல இஷ்டமில்ல சித்து… இனி அவங்க சம்பந்தப்பட்ட எதுலயும் நான் ஒபீனியன் சொல்லப் போறது இல்ல… அண்ணன் தம்பியோ, அக்கா தங்கச்சியோ அவங்களுக்குனு வாழ்க்கைத்துணை வர்ற வரைக்கும் தான் அந்த உறவுல ஒற்றுமை இருக்கும்… இப்போ தான் தனுவ பாத்துக்க விஸ்வா சார் இருக்காரே!” என்று விரக்தியாய் சொல்ல

சித்தார்த் எரிச்சலுடன் அவளை நோக்கி “ஏய்! லூசு மாதிரி உளறாதடி… அவங்க லவ் பண்ணுனத உன் கிட்ட சொல்லல… அதுக்குனு நீ இப்பிடி விட்டேத்தியா பேசுறது கொஞ்சம் கூட நல்லா இல்ல ஷானு… ஷீ இஸ் யுவர் சிஸ்டர்” என்று சொல்லிவிட்டு எழுந்தான்.

“எனக்கும் அது மறக்கல… ஆனா இன்னைக்கு உன் அண்ணாவுக்கு சப்போர்ட் பண்ணிட்டு அவ என்னைத் திட்டுனதையும் நான் மறக்கமாட்டேன்… அவங்களோட காதல், கல்யாணம் இது எதுலயும் நான் தலையிட மாட்டேன்… இது தான் நான்! நான் யாருக்காகவும் எதுக்காகவும் என்னோட இயல்பை மாத்திக்கிறதா இல்ல” என்று பிடிவாதக் குரலில் உரைத்தவளைப் பார்த்த போது தான் தனது இயல்புக்கு மீறி இவளிடம் கத்தியிருக்கிறோம் என்பதே சித்தார்த்தின் புத்தியில் உறைத்தது.

ஜீன்சின் பாக்கெட்டில் கைவைத்தபடி மூக்குநுனி குளிரில் சிவந்திருக்க விறைப்பாய் நின்றவள் தனது இயல்பை மாற்றிவிடுவாள் போல என்று எண்ணியவன் இப்போது எப்படி தாங்கள் இங்கிருந்து செல்வது என்று புரியாமல் விழித்துவைத்தான்.

ஷான்வியின் நிலையும் அதுவே! அன்றைய தினம் சாலையில் வாகன போக்குவரத்து கூட இல்லை. என்ன தான் செய்வது என்று யோசித்தவளுக்கு அங்கிருந்து எப்படி செல்வது என்பது மட்டும் புலப்படவில்லை.

திடீரென்று வானில் வர்ணஜாலத்துடன் வாணவேடிக்கைகள் நிகழ மற்ற அனைத்தையும் மறந்தவளாய் சித்தார்த்தை அழைத்தவள் “ஹேப்பி நியூ இயர் சித்து” என்று முகம் விகசிக்கப் புன்னகைத்தபடி சொல்லிவிட்டு வானில் நிகழ்ந்த வர்ணஜாலங்களை அவனுக்குக் காட்ட அவனோ அவளது சிரிப்பில் மனம் நெகிழ்ந்திருந்தான்.

வானை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் சித்தார்த். அந்தக் குளிர் இரவில் அவனது அணைப்பு அவளுக்கு வித்தியாசமாகத் தோணவில்லையா அல்லது மனதின் கிலேசங்களுக்கு மத்தியில் வண்ணமயமாய் வானம் காட்டிய வேடிக்கையில் நெகிழ்ந்திருந்ததால் அவளுக்கு சண்டை போடும் மன நிலை இல்லையா என்ற கேள்விக்கு விடை ஷான்விக்கு மட்டுமே தெரியும்.