💞அத்தியாயம் 19💞

“அமெரிக்கன் லைப் ஸ்டைல் ரொம்ப வித்தியாசமா இருக்கு. அதுக்கு பெஸ்ட் எக்சாம்பிள் கிளாரா தான்… அவ டீனேஜ் கேர்ளா இருந்தப்போவே தனியா வந்துட்டாளாம்… அதுக்கு அப்புறம் பார்ட் டைம் ஜாப்கு போயிட்டே தான் படிக்கிறாளாம்… நான் அவ சொன்ன வயசுல இருந்தப்போ ஜாங்கிரி செஞ்சு தரலைனு அம்மா கிட்ட சண்டை போட்டுட்டிருந்தேன்… ஹூம்! எவ்ளோ வித்தியாசமான வாழ்க்கைமுறைல்ல!”

                                                                 -ஷான்வி

டிசம்பர் மாதத்திற்கே உரித்தான குளிர்க்காற்று திறந்திருந்த கண்ணாடி ஜன்னல் வழியே அறைக்குள் தவழ்ந்து வந்தது. கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தபடி அடங்காத சிகையை ஜெல் பூசி சரி செய்த விஸ்வஜித் தனது சட்டையின் மீது கோட் அணிந்து கொண்டு பார்ட்டிக்குச் செல்லத் தயாரானான்.

வருடந்தோறும் டிசம்பர் கடைசிநாளன்று ஹோட்டல் ஊழியர்களுக்குப் புத்தாண்டுக்கான பார்ட்டி கொடுப்பது டேவிட் மில்லரின் வழக்கம். அந்தப் பார்ட்டியில் ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு அழைப்பும் விடுப்பார். வருடம் முழுவதும் ஹோட்டலுக்காக உழைப்பவர்களுக்கு அவர் கொடுக்கும் இந்த பார்ட்டி அவருக்கு மிகவும் முக்கியமானது.

ஹோட்டல் சம்பந்தப்பட்ட ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுத்தால் அதை இந்தப் பார்ட்டியில் தான் அறிவிப்பார் டேவிட் மில்லர். அதற்கு செல்வதற்காக தான் ஜம்மென்று தயாரானான் விஸ்வஜித். தனது அறையிலிருந்து வெளியேறியவன் தம்பியின் அறையை எட்டிப் பார்க்க அவன் வெண்ணிற டீசர்ட்டுக்கு மேல் கருப்பு நிற கோட் அணிந்து அதே கருப்பு நிற ஜீன்ஸில் தயாராகி விட்டிருந்தான்.

விசிலடித்தபடி அவனது அறைக்குள் நுழைந்த விஸ்வஜித் “இன்னைக்கு சார் ரொம்ப டைம் எடுத்து ரெடியான மாதிரி இருந்துச்சு… என்ன சார்? எனக்குத் தெரியாம எந்த கேர்ள் ஃப்ரெண்டையாச்சும் பார்ட்டிக்குக் கூப்பிட்டிருக்கிங்களா?” என்று சித்தார்த்தைக் கேலி செய்ய தமையனைப் பொய்யாய் முறைத்தான் சித்தார்த்.

“இந்நேரம் என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ரே குடுக்கிற பார்ட்டில ஜாலியா என்ஜாய் பண்ணிட்டிருப்பாங்க… நீ ரொம்ப கேட்டியேனு உன் கூட ஒத்துக்கிட்டேன்ல, நீ இதுவும் பேசுவ, இன்னமும் பேசுவ”

“சரிடா! கோச்சுக்காத… இங்க வந்ததுல இருந்து நீ அவங்களோட தானே நியூ இயர் பார்ட்டி செலிப்ரேட் பண்ணுற… இந்த வருசம் என் கூட இரு”

அவனது தோளில் கைபோட்டு தாஜா செய்தபடி வீட்டை விட்டு வெளியேறினான் விஸ்வஜித். சில நிமிடங்களில் அவர்களின் அப்பார்ட்மெண்ட் தரிப்பிடத்திலிருந்து கார் கிளம்பியது.

அதே நேரம் ஷான்வி இதோடு ஆயிரமாவது முறை தனது புதிய கவுனை கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்த தன்வியை இடுப்பில் கைவைத்தபடி முறைத்துக் கொண்டிருந்தாள்.

“எவ்ளோ நேரம் இந்த கவுனையே பாத்துட்டிருப்ப தனு? டைம் ஆகுது… சீக்கிரம் கிளம்பு”

அவள் அருவியாய் வழிந்த லேயர் கட் செய்திருந்த கூந்தலைச் சரி செய்துவிட்டு தங்கையின் புறம் திரும்பினாள்.

“நான் எப்பிடி இருக்கேன்?” என்று கவுனைப் பிடித்தபடி வட்டமடித்தவளைப் பார்க்கும் போதே மகிழ்ச்சியாக இருந்தது ஷான்விக்கு.

வெண்ணிற முழுநீள கவுன் பாந்தமாய் அவளுடன் பொருந்தியிருந்தது. அதன் கழுத்திலும் இடையிலும் க்ரீம் நிறத்தில் பூக்கள் சுற்றியிருந்தது. காதில் அழகிய முத்து தோடுகளுடன் மிதமான அலங்காரத்தில் தேவதையாக மிளிர்ந்தாள் தன்வி.

அவளுக்கு நெட்டி முறித்து திருஷ்டி கழித்த ஷான்வி “நீ அழகி தனு” என்று பெருமிதமாய் சொல்ல

“நீயும் நான் சொன்ன பேபி பிங்க் கலர் கவுன் வாங்கியிருந்தா ரெண்டு பேருமே அழகா இருந்திருப்போம்” என்று குறைபட்டாள் தன்வி.

ஷான்வி அவளைப் பொய்யாய் முறைத்தவள் “அப்போ நான் இந்த காஸ்ட்யூம்ல அழகா இல்லனு சொல்லுறியா தனு?” என்று கேட்டுவிட்டு உதட்டைப் பிதுக்கி குழந்தை போல முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டாள் தன்வி.

“என் ஷானு எப்போவுமே அழகி தான்… ஆனா இந்த ப்ளாக் ஜீன்ஸ், ப்ளாக் டீசர்ட், டார்க் ப்ளூ டெனிம் சர்ட்ல நீ கியூட்டா இருக்க… ஆனா அந்த பிங்க் கவுன்ல நீ இன்னும் அழகா இருந்திருப்ப… போதாததுக்கு இந்த பூட்ஸ் வேற… நீ மட்டும் உன் டெனிமோட கைய மடிச்சு விட்டுட்டு என் கூட வந்தேனா உன்னை என்னோட பாடிகார்ட்னு நினைப்பாங்க”

அவள் சொல்லவும் ஷான்வி கலகலவென்று நகைத்தவள் தனது நீண்ட கூந்தலை ஹை போனிடெயிலாகப் போட்டுக் கொண்டாள். குளிருக்காக லிப்கிளாஸ் போட்டதோடு அவளது அலங்காரம் முடிந்தது.

இருவரும் திருப்தியோடு வீட்டை மூடிவிட்டு வெளியே வந்த போது கிளாராவும் அவளுடன் சேர்ந்து கொண்டாள்.

“வாவ் தனு இஸ் லுக்கிங் லைக் அ டால்… அண்ட் மை டியர் டாம்பாய்… கேன் யூ ப்ளீஸ் கம் ஹியர்?” என்று ஷான்வியைத் தனது இடதுபுறத்திலும் தன்வியை வலதுபுறத்திலும் நிறுத்திக் கொண்டவள் செல்பி எடுத்துக் கொண்டாள்.

அதை மூவரும் பார்த்துத் திருப்திப்பட்ட பின்னர் கீழ்த்தளத்துக்கு விரைந்தனர். புல்வெளியில் தன்வியும் ஷான்வியும் காத்திருக்க கராஜிலிருந்து காரை எடுத்துக் கொண்டு வந்த கிளாரா அவர்களை அழைக்க மூவரையும் சுமந்து கொண்டு அந்தக் கார் ராயல் கிராண்டேவை நோக்கிச் சென்றது.

ஹோட்டல் ராயல் கிராண்டே, வாஷிங்டன் அவென்யூ, ஹூஸ்டன்…

புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. ஹோட்டலை சுற்றியிருந்த மரங்களிலும் விளக்குகள் அலங்கரிக்க, குழந்தைகளுக்கான பூங்கா பகுதியும் இன்று ஜேஜேவென்று இருந்தது.

ஹோட்டலின் இரண்டாவது தளம் பார்ட்டிக்காக தயாராகி இருந்தது. ஊழியர்கள் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த மேஜைகளில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அமர்ந்திருந்தனர்.

விஸ்வஜித்தும் சித்தார்த்தும் தங்களுக்கான மேஜையில் தனஞ்செயனுடன் அமர்ந்திருந்தனர். மூவரிடமும் அனுமதி பெற்றுக் கொண்டு மிசஸ் டேவிசும் அவர்களின் உரையாடலில் கலந்து கொண்டார்.

என்றைக்கும் சீருடையில் பரபரப்புடன் சுற்றிக் கொண்டிருக்கும் ஊழியர்கள் இன்று இலகு உடையில் அமர்ந்திருக்க மகளுடன் வந்து சேர்ந்தாள் அஸ்வினி. அம்மாவும் மகளும் ஒரே மாதிரி முழுநீள டாப் அணிந்து கூந்தலை பக்கவாட்டில் பின்னலாகப் போட்டிருந்தனர்.

ஆண்கள் மூவரையும் பார்த்ததும் அனிகா அவர்களை நோக்கி ஓட அஸ்வினி அவள் பின்னே வேகமாக நடந்து மேஜைக்கு வந்தாள். மிசஸ் டேவிஸ் ஆடை நன்றாக இருப்பதாகச் சொன்னதற்கு நன்றி சொல்லிவிட்டு தனஞ்செயனுக்கு ஒரு புன்னகையை வீசினாள்.

அவள் நாற்காலியில் அமர்ந்தபடி விஸ்வஜித்தைக் கண்ணால் காட்டி சித்தார்த்திடம் வினவ, அவனோ

“அவரு அவங்களுக்காக காத்திருக்கிறாராம்” என்று அழுத்தமாகச் சொல்லி தமையைனைக் கேலி செய்ய ஆரம்பித்தான்.

அஸ்வினி அதற்கு கலகலவென நகைக்க, தனஞ்செயன் முதன் முதலாக அவள் கலீரென்று சிரிப்பதைப் பார்த்து ஒரு கணம் தன்னிலை மறந்து அவளது சிரிப்பை ரசிக்க ஆரம்பித்தான். பின்னர் அனிகா பூங்கரங்களால் தன் கன்னத்தில் தட்டுவதை உணர்ந்து கவனம் கலைந்தான்.

“என்னடாம்மா?” என்று அவளிடம் கேட்க அவளோ அந்த ஹாலின் நுழைவு வாயிலைக் காட்ட தனஞ்செயனுடன் விஸ்வஜித்தும் நோக்க அங்கே தேவதை போல வெண்ணிற பார்ட்டி கவுனில் வந்து கொண்டிருந்தாள் தன்வி. அஸ்வினி தான் தேர்ந்தெடுத்த கவுன் அவளுக்கு அழகாகப் பொருந்தியிருப்பதைப் பார்த்தவள் ஓடிச் சென்று அவளையும் அவள் அருகில் நீல நிற ஸ்கர்ட்டில் அழகியாய் ஜொலித்த கிளாராவையும் அணைத்துக் கொண்டாள்.

மறக்காமல் கண்மையை வைத்து திருஷ்டி பொட்டு வைத்தவள் “ரெண்டு பேரும் ஏஞ்சல் மாதிரி இருக்கிங்க கேர்ள்ஸ்… லவ் யூ” என்று கொஞ்சிவிட்டு “ஆமா ஷானு எங்க?” என்று கேட்க

“அவ காரை பார்க் பண்ண போயிருக்கா” என்று ஒரே குரலில் பதிலளித்தனர் இருவரும்.

பேசும் போதே தன்வியின் முகம் செந்நிறத்துக்கு மாற அஸ்வினியும் கிளாராவும் அவளது பார்வை போன திசையைப் பார்க்க அங்கே விஸ்வஜித் அவளைப் பார்த்தபடி நின்றிருந்தான். ஒரு நமட்டுச்சிரிப்புடன் இருவரும் விலகிக் கொள்ள தன்வியின் அருகில் வந்தான் அவன்.

தன்னை விழுங்குவது போல பார்த்தவனை காதலாய் நோக்கியவள் அவனிடம் ஏதோ சொல்ல வர அதற்குள் அந்த அறைக்குள் நுழைந்தாள் ஷான்வி.

சித்தார்த் எழிலோவியமாய் வந்திருந்த தன்வியை மனதில் வைத்து ஷான்வி எப்படி இருப்பாள் என்று ஆவலாய் காத்திருந்தவன் முரட்டு ஜீன்சும், டெனிம் சட்டையுமாக வந்தவளைப் பார்த்ததும் “அடியே இன்னைக்கும் டாம்பாய் கெட்டப்பா? எப்போ தான் பொண்ணு மாதிரி நீ ட்ரஸ் பண்ணுவ?” என்று மனதிற்குள் செல்லமாய் அவளைக் கடிந்து கொண்டான். வெளிப்படையாக கடிந்துகொண்டு வாங்கிக் கட்டிக்கொள்ள அவன் தயாராக இல்லை.

ஷான்வி விஸ்வஜித்தையும் தமக்கையையும் விசாரணைப் பார்வையுடன் நெருங்கியவள் பின்னர் முகத்தைச் சீராக்கிக் கொண்டு அவனிடம் சிரித்தமுகமாய் பேச ஆரம்பித்தாள். தன்வி அவளது வருகையில் படபடத்த இதயத்தை அமைதிப்படுத்தியவாறு மற்றவர்களிடம் உரையாட ஆரம்பித்தாள்.

ஷான்வி விஸ்வஜித்துடன் பொதுப்படையாகப் பேசிக்கொண்டிருக்கும் போதே கபேயின் பாரிஸ்டாவான கென் அவளிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான். அவன் மட்டும் தான் ஷான்விக்கு இங்கே இருக்கும் ஒரே ஒரு தோழன்.

அவனையும் தங்களது மேஜைக்கு அழைத்துச் சென்றவள் அவனது பார்வை அடிக்கடி கிளாராவைத் தழுவவும் மானசீகமாகத் தலையிலடித்துக் கொண்டாள்.

அப்போது டேவிட் மில்லர் அவரது குடும்பத்தினர் சகிதம் வர ஊழியர்கள் மரியாதை நிமித்தம் எழுந்து நின்றனர். அவர் அனைவரையும் அமரச் சொல்லிவிட்டு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்க ஊழியர்களின் கரகோசத்தால் அந்த அறை அதிர்ந்தது.

பின்னர் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஹோட்டல் அதிபர் ஒருவருடன் இணைந்து இந்தியப் பெருநகரங்களில் ராயல் கிராண்டேவின் கிளைகள் திறக்கப்படும் நற்செய்தியை ஊழியர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார். அவர் முடிக்கவும் மீண்டும் கரகோசம்.

வழக்கம் போல இந்தாண்டும் ஊதிய உயர்வை அறிவிக்க ஊழியர்களின் முகத்தில் சந்தோசம் நிரம்பி வழிந்தது. அறிவிப்புகள் அனைத்தும் முடிய பார்ட்டியை சிறப்பிக்கும்படி அனைவரிடமும் வேண்டிக்கொண்டவர் தானும் பார்ட்டியில் மூழ்க ஆரம்பித்தார்.

அங்கே பார்ட்டிக்கான நிகழ்வுகளான உற்சாக பானங்கள், நடனம் ஆரம்பிக்கவும் தனஞ்செயன் அஸ்வினியின் அனுமதியுடன் அனிகாவை அழைத்துக் கொண்டு குழந்தைகள் பூங்காவுக்குக் கிளம்பிவிட்டான்.

அஸ்வினியும் தன்வியும் மிசஸ் டேவிசுடனும் பழச்சாறு அருந்தியபடி பேச ஆரம்பிக்க கென்னும் கிளாராவும் நடனம் ஆடச் சென்றுவிட்டனர்.

விஸ்வஜித் அஸ்வினியின் அருகில் அமர்ந்திருந்தவன் தன்வியை ரசிக்க ஆரம்பிக்க அவள் அதற்கு வெட்கப்பட இது எதையும் கவனிக்காது நடனம் ஆடும் ஜோடிகளை கிண்டலாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ஷான்வி. அவள் அருகில் நாற்காலியை நகர்த்தி அமர்ந்தான் சித்தார்த்.

“என்ன மேடம் டான்ஸ் ஆட ஆசைப்படுறிங்களா? அவனது குரலில் கவனம் கலைந்து அவன் புறம் திரும்பியவள் இல்லையென்று மறுத்தாள் ஷான்வி.

“எனக்கு இந்த பார்ட்டி, டான்ஸ் இதுல்லாம் செட் ஆகாது சித்து” என்று அசட்டையாக மொழிந்தவளை சுவாரசியத்துடன் ரசிக்க ஆரம்பித்தன அவனது விழிகள்.

“கம் ஆன்! பார்ட்டில கலந்துக்கிறது, டான்ஸ் பண்ணுறதால இந்தியன் கல்சர் ஒன்னும் ஸ்பாயில் ஆகிடாதும்மா”

“நான் அப்பிடி சொல்ல வரல… எனக்கு நினைவு தெரிஞ்ச வரைக்கும் இந்தப் பார்ட்டி, டான்ஸ்லாம் நான் சினிமா, சீரியல்ல தான் பாத்திருக்கேன்… எங்க குடும்பத்துல இதுலாம் வழக்கம் இல்ல… சோ இது கொஞ்சம் வினோதமா இருக்கு”

“ரோம்ல இருக்கிறப்போ ரோமனா இருக்கிறது தான் புத்திசாலித்தனம் மேடம்… காலம் மாறிடுச்சு”

“இட்ஸ் ஓகே! நான் செவ்வாய் கிரகத்துக்கே போனாலும் இந்தியப் பொண்ணா இருக்க தான் ஆசைப்படுறேன்… பிகாஸ் இப்பிடி இருக்கிறது தான் எனக்கு கம்பர்டபிளா இருக்கு சித்து… அதோட பார்ட்டிக்குப் போறது, டான்ஸ் பண்ணுறதுலாம் நம்ம ஊருலயே சகஜமாகிடுச்சு… சோ இதுல்லாம் தப்புனு சொல்லுற அளவுக்கு நான் கட்டுப்பெட்டி இல்ல… அதே சமயம் இது எனக்கு ஒத்து வராது”

தனது நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாய் அவள் சொன்ன விதம் சித்தார்த்துக்கு மிகவும் பிடித்திருந்தது. கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்த விதம், முகத்தில் ஒட்டியிருந்த துளி பிடிவாதம், கண்ணில் படர்ந்திருக்கும் அலட்சியம் என அவளது அலட்டலற்ற தோற்றம் அவனை அசைத்துவிட்டது.

அந்நேரம் தான் ஏதாவது குடித்தால் தேவலாம் போல என்று எண்ணியவள் சித்தார்த்துக்கு என்ன வேண்டும் என்று கேட்க அவன் அவளைப் போலவே பழச்சாறு அருந்த விரும்பவும் இருவருக்கும் எடுத்து வருவதற்காக சென்றாள்.

அங்கே அனைவரும் நடனமாடிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்தபடியே பழச்சாறை இரு கண்ணாடி தம்ளர்களில் ஊற்றி எடுத்துக் கொண்டு திரும்பியவள் முன்னே நின்றிருந்தான் ஆலிவர் ஜோன்ஸ்.

அவன் இப்படி நின்றிருந்தது அவளுக்கு எரிச்சலை மூட்ட “எக்ஸ்யூஸ் மீ! ப்ளீஸ் மூவ் அ லிட்டில்” என்றாள் வருவித்துக் கொண்ட பொறுமையுடன்.

அவனோ நகர்வேனா என்று பிடிவாதத்துடன் நின்றதோடு அவளை நெருங்க வேறு செய்ய பெண்களுக்கே உரித்தான எச்சரிக்கையுணர்வுடன் பின்னே இரு எட்டுகள் எடுத்துவைத்தவள் அவனது கரம் அவளைத் தீண்ட நீளவும் இயல்பான கோபம் மூள கையில் வைத்திருந்த பழச்சாறை அவன் முகத்தில் ஊற்றினாள்.

“டேமிட்! ஹவ் டேர் யூ?” என்று அவன் சீற்றத்துடன் அவளை நெருங்கவும் அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்தவள் அவனது சட்டைக்காலரைப் பிடித்து மற்றொரு கரத்தால் மீண்டும் அறையப் போக அதற்குள் பழச்சாறு எடுத்துவரச் சென்றவள் திரும்பாத காரணத்தால் அவளைத் தேடி வந்த சித்தார்த்தின் கண்ணில் பட்டுவிட்டாள்.

அவள் பத்திரக்காளி அவதாரம் எடுத்து நின்ற விதம், அவள் முன்னே நின்ற ஆலிவரை அவள் அறையச் சென்றது என அனைத்தையும் பார்த்தவாறே அவர்களை நெருங்கியவன் ஷான்வியிடம் இருந்து அவனை விலக்கிவிட்டு அவளைத் தன்னோடு இழுத்துக் கொண்டான்.

“என்னை விடு சித்து… இன்னைக்கு இந்த ட்ரேயால இவன் மண்டைய பொளக்கலனா என் பேரு ஷான்வி இல்ல” என்று சீறியபடி மீண்டும் ஆலிவரின் சட்டையைப் பிடித்து அவன் கன்னத்தில் அறையப் போனவளை சிரமப்பட்டுத் தடுத்தவன் அவளை இழுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

“எதுக்கு என்னை இழுத்துட்டு வந்த நீ? அந்த பொறுக்கிய துவம்சம் பண்ணிருப்பேன் நானு… எல்லாம் உன்னால தான்” என்று கத்தியவாறு அவன் இழுத்த இழுப்புக்கு அவனுடன் வேகமாக நடந்தபடி புலம்பிக் கொண்டே வந்தவள் ஹோட்டலின் பின்பகுதி புல்வெளிக்கு வந்ததும் சித்தார்த்தின் கையை உதறினாள்.

கோபத்தில் புசுபுசுவென்று மூச்சுவிட்டபடி சித்தார்த்தைத் திட்ட போனவள் எதேச்சையாகப் பக்கவாட்டில் திரும்பியபோது அங்கே கண்ட காட்சியில் அதிர்ந்து நின்றாள்.

ஏனெனில் அங்கே தன்வியின் முகத்தைத் தன் கைகளில் ஏந்தியவண்ணம் அவள் இதழ் நோக்கிக் குனிந்திருந்தான் விஸ்வஜித். தன்வி கண்களை இறுக மூடி நிற்க இக்காட்சியைக் கண்டு ஷான்வியும் அவளுடன் நின்ற சித்தார்த்தும் திகைத்து நின்றனர்.