💞அத்தியாயம் 18💞

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

“இப்போலாம் ஷானு என்னை அவாய்ட் பண்ணுறா… அவளைப் பிடிவாதமா அஸுக்கா வீட்டுக்குக் கூட்டிட்டு வந்ததுல மேடம் என் கிட்ட பேச அன்கம்பர்டபிளா ஃபீல் பண்ணுறாங்க போல… ஆனா அவ கிட்ட வம்பு இழுக்காம எனக்கு அன்னைக்கு நாள் நல்லாவே போகாதே… சோ இப்போலாம் தனா ப்ரோவ பாக்கப் போற மாதிரி கபே கிச்சனுக்குப் போய் ரெண்டு வார்த்தை ஷானுவ கலாய்ச்சிட்டு வர்றத ரொட்டீனா வச்சிருக்கேன்”

                                                                       -சித்தார்த்

அன்றைய இரவில் ஹோட்டலில் இருந்து கிளம்பும் முன்னர் தனஞ்செயனின் கண்கள் தன்னுடன் வந்த ஷான்வியுடன் தன்வியைத் தேடியது. ஷான்வியும் அவளைத் தான் தேடினாள் போல. அப்போது தான் அவர்களைக் கவனித்த அஸ்வினி ஷான்வியிடம் அவளது அக்கா இன்று சீக்கிரமே சென்றுவிட்டாள் என்று கூற தன்னிடம் கூட சொல்லாது செல்லுமளவுக்கு என்ன அவசரம் அவளுக்கு என்று தன்வியின் எண்ணுக்கு அழைக்க எண்ணியவளை இடுப்பில் கைவைத்து முறைத்தாள் அஸ்வினி.

“வீட்டுக்குத் தானே போறே! அதுக்குள்ள கால் பண்ணி பேசியே ஆகணுமா?”

“அதுவும் சரி தான் அஸுக்கா… நான் கிளம்புறேன்… ஆனா கார் இங்க நிக்குது… தனு அப்போ எப்பிடி வீட்டுக்குப் போயிருப்பா?” என்று தனது நிசான் குவெஸ்ட்டைக் காட்டிக் கேட்கவும்

“அவ விஸ்வா கூட போனா ஷானு… அவனும் இன்னைக்கு ஏதோ எமர்ஜென்சினு சீக்கிரமா கிளம்பிட்டான்” என்று பதிலிறுத்தாள் அஸ்வினி.

“வாட்? வீ.கே சாருக்கு எதுவும் பிரச்சனையாக்கா?” என்று பதறியவளோடு தனஞ்செயனும் விழிக்க இருவரையும் கையமர்த்திய அஸ்வினி

“அட கடவுளே! ஏன் இப்பிடி பதறுறிங்க ரெண்டு பேரும்? அவனும் சித்துவும் இன்னிக்கு ஈவினிங் யாரையோ பாக்கணும்னு சொல்லிட்டிருந்தாங்கப்பா… நீங்க உடனே டென்சன் ஆகிடுவிங்களே” என்று அவர்களைக் கேலி செய்யவும் இருவரும் சமாதானமுற்றனர்.

ஷான்வி அவர்களிடமிருந்து விடை பெற்றதும் தனஞ்செயன் அஸ்வினியிடம் சந்தேகத்துடன் உண்மையைச் சொல்லும்படி கேட்க அஸ்வினி முதலில் என்னென்னவோ சொல்லி சமாளித்தவள் பின்னர் உண்மையைச் சொல்லிவிட்டாள்.

“விஸ்வா தனு கூட தனியா பேசணும்னு சொன்னான்… அதான் அவங்க ரெண்டு பேரையும் தனியா அனுப்பி வச்சோம்”

“அனுப்பி வச்சிங்களா? என்ன மேடம் சொல்லுறிங்க? அப்போ இதுல சித்துவும் உங்களுக்குக் கூட்டா?”

அஸ்வினி ஆமாம் என்பது போல தோளை உயர்த்தியவள் “அவன் எத்தனை நாளுக்குத் தான் மனசுலயே வச்சுட்டுச் சுத்துவான்? அதான் இன்னைக்கு ஓபனா சொல்லிடுனு அனுப்பி வச்சோம்” என்று சொல்லவும் தனஞ்செயன் குழப்பமாய் அவளை நோக்கினான்.

அஸ்வினி விஸ்வஜித்துக்கு தன்வியின் மீதுள்ள காதலை சொன்னவள் பேசி ஒரு முடிவுக்கு வருமாறு இருவரையும் அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்தாள்.

 தனஞ்செயன் அவளை மெச்சுதலாகப் பார்த்தபடியே “விஸ்வா சார் மாதிரி லைப் பார்ட்னர் கிடைக்க தனு குடுத்து வச்சிருக்கணும்… பட் இந்தியால உள்ள பிரச்சனை பத்தி அவருக்குத் தெரியுமா?” என்று வினவ

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“அவனுக்குத் தெரியும் தனா! நான் தான் சொன்னேன்… லவ்னா சினிமால வர்ற மாதிரி ரொமான்ஸ், மரத்தைச் சுத்திப் பாடுற டூயட் மட்டும் கிடையாது… அதுல நிறைய பிராக்டிக்கல் பிராப்ளம் வரும்னு சொன்னேன்… தனுவோட அத்தை, சித்தப்பா குடும்பத்தைப் பத்தி எனக்கு தேஜூ சொன்ன எல்லா விசயத்தையும் நான் விஸ்வா கிட்ட சொல்லிட்டேன்… யோசிச்சு முடிவு பண்ணுனு அட்வைஸ் பண்ணுனேன்… பையன் எல்லா டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷனுக்கும் சரினு சொல்லிட்டுத் தான் தன்விக்குப் பிரபோஸ் பண்ணப் போயிருக்கான்” என்றாள் அஸ்வினி.

தனஞ்செயனுக்கு எல்லாம் நல்லபடியாய் முடிந்தால் போதும் என்ற எண்ணமே மேலோங்க தன்வி விஸ்வஜித்தின் காதலை ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவன் மனம் விரும்பியது. அஸ்வினிக்கும் அதே எண்ணம் தான்.

கல்லூரிப்பருவத்திலிருந்தே அவள் விஸ்வஜித்தை அறிவாள்! அதே போல தங்கையின் தோழி என்ற முறையில் ஷான்வியைப் பற்றி மட்டும் அறிவாள். ஆனால் தன்வியைப் பற்றி அமெரிக்காவுக்கு வந்த பின்னரே தெரிந்து கொண்டாள்.

மிகவும் அமைதியான அப்பாவிப்பெண் அவள். அவள் மீது காதலைக் கொட்டும் விஸ்வஜித் போன்ற ஒருவன் தான் அவளுக்கு ஏற்றக் கணவனாக இருக்கமுடியும் என்று அஸ்வினி நம்பினாள். இப்போது அவன் தன் காதலை தன்வியிடம் வெளிப்படுத்தியிருப்பான் என்ற மகிழ்ச்சியுடன் தனஞ்செயனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள் அவள்.

ஆனால் அங்கே விஸ்வஜித்தும் தன்வியும் திடீரென வந்து நின்ற ஷான்வியை எதிர்பாராதவர்களாய் திருதிருவென்று விழித்து வைத்தனர். ஷான்வி இருவரையும் யோசனையுடன் பார்த்தவாறு நெருங்கியவள் விஸ்வஜித்திடம் விசாரணையை ஆரம்பித்தாள்.

“நீங்க இங்க என்ன பண்ணுறிங்க வீ.கே சார்?” என்று வினவியவளிடம்

“நான் இந்தப் பக்கமா ஒரு வேலையா வந்தேன்… அப்போ தான் தனு ஹோட்டல்ல இருந்து கிளம்பிட்டிருந்தா.. அதான் நான் டிராப் பண்ணுறேனு சொல்லி என்னோட கார்ல கூட்டிட்டு வந்தேன்” என்று சரளமாகப் பொய்யுரைத்த விஸ்வஜித்தை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் தன்வி.

ஷான்வியோ அவன் சொன்ன அனைத்தையும் கேட்டுவிட்டு “இசிண்ட்? டிராப் பண்ணுனவருக்கு எங்க போகணும்னு மறந்து எங்க ஃப்ளாட்லயே இருந்திட்டிங்களோ?” என்று அடுத்தக்கட்ட விசாரணையை ஆரம்பித்தாள்.

தன்வி அவசரமாய் இடையிட்டவள் “டிராப் பண்ணுனவருக்கு காபி கூட குடுக்காம அனுப்ப முடியாதேனு நான் தான் வீட்டுக்குக் கூப்பிட்டேன் ஷானு” என்று விஸ்வஜித் சொன்ன பொய்யை உண்மையாக்க முயன்றாள்.

ஷான்வி இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு “வாட் எவர்… வீ.கே சார் உங்களுக்கு டைம் ஆகுதுனு நினைக்கேன்” என்று சொன்னபடி கிளம்புகிறாயா என்று கேட்காமல் கேட்க விஸ்வஜித் தன்வியை அர்த்தம் பொதிந்த பார்வையுடன் கடந்தவன் ஷான்வியின் விசாரணைப்பார்வையைத் தாங்க இயலாதவனாய் அவளிடமும் சொல்லிக் கொண்டு வெளியேறினான்.

அவன் சென்றதும் ஷான்வி தனது அறைக்குள் சென்றுவிட தன்வி ஓடிச் சென்று ஜன்னல் வழியே கீழே எட்டிப் பார்க்க அங்கே தரிப்பிடத்திலிருந்து கிளம்பிய விஸ்வஜித்தின் கார் அவள் கண்ணில் பட்டது.

அது அங்கிருந்து வெளியேறியதும் பெருமூச்சுடன் நின்றிருந்தவளுக்கு சற்று முன்னர் நடந்த நிகழ்வுகள் புன்னகையை வரவழைத்தது. ஒரு ஆடவனின் காதலை ஜெயித்த மகிழ்ச்சி அவள் மனமெங்கும் நிரம்பி வழிந்தது. மற்றவர்களால் காதலிக்கப்படுவது கூட ஒரு இனிமையான உணர்வு தான் அல்லவா!

 அன்றைய நாள் ஷான்வியின் விசாரணைக்குப் பின்னர் தன்வி தானும் விஸ்வஜித்தும் சந்திக்கும் நேரங்களை ஹோட்டலில் தீர்மானித்துக் கொண்டாள். இருவரிடையே புரிதல் வளர்ந்தது போலவே காதலும் வளர்ந்தது. விஸ்வஜித் அந்தக் காதலை வார்த்தைகளால் வெளிப்படுத்தினான் என்றால் தன்வி அதைத் தன் பார்வையால் வெளிப்படுத்தினாள்.

இந்த இருவரின் பார்வை பரிமாற்றங்களை ஷான்வி கவனித்துக் கொண்டிருந்தாள் என்பதை அவர்கள் அறியவில்லை. ஆனால் இது குறித்துப் பேச முற்படுகையில் சித்தார்த் இடையில் புகுந்து இருவரையும் காப்பாற்றி விடுவான்.

இவ்வாறு ஐந்து மாத காலங்கள் கண் இமைப்பதற்குள் அழகாக ஓடிவிட்டன. தன்வி தங்கைக்குத் தெரியாமல் விஸ்வஜித்துடன் மனதளவில் நெருங்கிவிட்டாள் என்று தான் சொல்ல வேண்டும். அவனது அக்கறையும் சின்ன சின்ன அன்புச்செய்கைகளும் அவளது மனதில் காதல் புகுவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்துவிட்டன.

அதே சமயத்தில் படிப்பிலும் கவனம் செலுத்த மறக்கவில்லை அவள். இந்தப் படிப்பு தனக்கு கிட்டுவதற்காக ஷான்வி எவ்வளவு மெனக்கெட்டு தனக்கு உறுதுணையாக நிற்கிறாள் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். விஸ்வஜித்தும் இருபத்துநான்கு மணிநேரமும் காதலில் உருகும் ஆண்மகன் அல்ல. அவன் எதார்த்தமானவன். தங்களுக்கான தருணங்களில் தன்வியிடம் நல்ல காதலனாக மாறி காதலைப் பொழிபவன் மற்ற தருணங்களில் ஒரு நல்ல நண்பனாக அவளுக்கு நல்லது கெட்டது எடுத்துரைக்கவும் தவறியதில்லை.

இப்பேர்ப்பட்ட ஒருவன் தன்னைக் காதலிப்பதில் தன்விக்குப் பெருமை தான்.

அதே சமயம் சித்தார்த் தனது அண்ணனும் தோழியும் காதலிப்பதை அறிந்திருந்தவன் இன்னுமே ஷான்வியிடம் தனது நிலைப்பாடு என்ன என்பதை இப்போது வரை வெளிப்படுத்தவில்லை.

அதே நேரம் தங்கள் அனைவருக்கும் தெரிந்த விஸ்வஜித்தின் காதல் விவகாரத்தை இன்னும் ஷான்வியிடம் தெரிவிக்கவில்லை. அவனுடன் சேர்ந்து அஸ்வினி, தனஞ்செயன், கிளாரா என ஒருவர் கூட அவளிடம் விசயத்தைச் சொல்லவில்லை. அஸ்வினி தகுந்த சமயத்தில் இதை ஷான்வியிடம் சொல்லுமாறு தன்வியிடம் அறிவுறுத்தியிருந்தாள். எனவே தான் அனைவரும் அமைதி காத்தனர்.

அவ்வாறு இருக்கும் போது அன்றைய தினம் நாடு முழுவதும் பொதுவிடுமுறை. எனவே தன்வி அஸ்வினியையும் தனஞ்செயனையும் தங்கள் ஃப்ளாட்டுக்கு அழைத்திருந்தாள். ஆனால் அவர்களுடன் இலவச இணைப்பாக விஸ்வஜித்தும் சித்தார்த்தும் வந்து நிற்கவும் ஷான்வி தன்வியைக் கேள்வியாக நோக்க அவள் என்ன சொல்லி சமாளிப்பது என்று புரியாது விழிக்க ஆரம்பித்தாள்.

ஆனால் அஸ்வினி ஆபத்பாந்தவளாக வந்து தன்வியைக் காத்துவிட்டாள். தான் அழைத்ததால் அவர்கள் இருவரும் வந்திருப்பதாக அவள் கூறவும் ஷான்வி சமாதானமானாள். இருப்பினும் விஸ்வஜித்தின் பார்வை அலைபாய்வதையும் அது இடைவிடாது தன்வியைத் தொடர்வதையும் புருவச்சுழிப்புடன் கவனித்துக் கொண்டிருந்தாள் அவள்.

அதோடு விஸ்வஜித் தானே சமைப்பதாகச் சொல்லிவிட்டுச் சமையலறைக்குள் புகுந்து கொள்ள அஸ்வினியும் தனஞ்செயனும் அவனுடன் சேர்ந்து அங்கேயே அடைக்கலமாகி விட்டனர்.

தன்வியோ சித்தார்த்துடன் சேர்ந்து அனிகாவுடன் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தாள். இவர்களின் எதிரே யோசனையுடன் அமர்ந்திருந்த ஷான்வியைக் காட்டிய சித்தார்த்

“அவ யோசனை செய்யுற மாடுலேசன் சரியில்ல தனு… என்னமோ வில்லங்கமா யோசிக்கிறா… முன்னலாம் அண்ணாவ பாத்தா அவ கண்ணுல நட்சத்திரம் மின்னும்… இப்போ கொஞ்சநாளா சந்தேகமா பார்க்குறா… நீ சீக்கிரமா இந்த விசயத்தை அவ கிட்ட சொல்லுறது தான் நல்லது” என்று நல்ல நண்பனாக அறிவுறுத்த அதை ஆமோதித்தாள் தன்வி.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

ஆனால் அவள் இன்னும் உரியவனுக்கே காதலை சொல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறாளே! அதையும் சித்தார்த் விட்டுவைக்கவில்லை.

“அண்ணா நீ எப்போ உன் வாயால ஐ லவ் யூ சொல்லுவேனு ரொம்ப ஆவலா இருக்கான்… நீ பிரபோசலை அக்செப்ட் பண்ணிட்டா எப்பிடி ரியாக்ட் பண்ணனும்னு டெய்லியும் மார்னிங் கண்ணாடி முன்னாடி நின்னு ரிகர்சல் வேற பார்க்குறான்… எவ்ளோ ஸ்மார்ட்டா கம்பீரமா சுத்துனவன நீ காமெடி பீஸ் ஆக்கிட்டிருக்க… ஒழுங்கா என் அண்ணனுக்கு பதிலைச் சொல்லு… அப்புறமா உன் தங்கச்சி கிட்ட சொல்லிக்கலாம்”

“ஆனா எனக்கு விஸ்வா சார் கிட்ட போனாலே வார்த்தை எல்லாம் மறந்து போயிடுதே சித்து”

தன்வி இவ்வாறு சொல்லி சிணுங்கும் போது ஷான்வியின் கவனம் கலைந்து அவர்கள் பக்கம் திரும்பவே சித்தார்த் சுதாரித்துக் கொண்டான்.

“முகத்த சாதாரணமா வச்சுக்கோ தனு… லேடி ஜேம்ஸ் பாண்ட் நம்மளயே பாக்குறா” என்று அடிக்குரலில் அவளிடம் முணுமுணுத்தான் அவன்.

அதை கண்டுகொண்டவளாய் அவர்களிடம் நெருங்கிய ஷான்வி “நீங்க எதோ சீக்ரேட் பேசிட்டிருந்த மாதிரி இருந்துச்சே… உண்மைய சொல்லுங்க… நீங்க சொல்லலனா நானே கண்டுபிடிச்சிடுவேன்… அதுக்கு முன்னாடி நீங்களே சொல்லிட்டா நல்லது” என்று கேட்டுவிட்டுக் குறுகுறுவென்று பார்க்க

“நாங்க வருங்காலத்த பத்தி பேசிட்டிருந்தோம் ஆங்ரி பேர்ட்… நான் என் ஒய்ப் பத்தி எனக்கு இருக்கிற எக்ஸ்பெக்டேசனை சொன்னேன்… அமுல் பேபி அவளோட ட்ரீம் பாய் பத்தி சொன்னா.. வேற ஒன்னும் இல்லயே!” என்று தோளை அசட்டையாக குலுக்கியவனை ஷான்வி இன்னும் நம்பவில்லை.

அவளின் நம்பிக்கையில்லா பார்வையைத் தன்வியிடம் காட்டிய சித்தார்த் “நான் சொல்லுறப்போ நம்ப மாட்டேனு சொன்னியே! நீயே பாரு இவ என்னை எப்போவும் நம்பவே மாட்டாங்கிறதுக்கு இவளோட இந்த சந்தேகப்பார்வையே சாட்சி” என்று சொல்லவே

“நீ என்ன சொல்லி தனு உன்னை நம்ப மாட்டேனு சொன்னா?” என்று ஷான்வி இடைமறித்துக் கேட்டாள் சித்தார்த்திடம்.

அவன் தனது டீசர்ட்டை இழுத்துவிட்டவாறே “என்னோட வருங்கால மனைவிக்கு என் மேல நம்பிக்கையே இல்லனு சொன்னேன்… இவ நம்ப மாட்டேனு சொன்னா… அதான் நீ இப்போ உன் பார்வையிலயே என் மேல நம்பிக்கை இல்லனு சொல்லிட்டியே! இனியாச்சும் அமுல்பேபி நம்புவா” என்று சொல்லி இரு சகோதரிகளுக்கும் ஒரே சமயத்தில் அதிர்ச்சியளித்தன்.

அவன் சொன்னதன் அர்த்தம் தாமதமாக புரியவரவே கடுப்பான ஷான்வி சதுரங்கப்பலகையில் உள்ள காய்களை கலைத்துவிட்டு பலகையையும் தரையில் தள்ளிவிட்டு நிற்க, சித்தார்த் அவளைத் தலையிலிருந்து கால் வரை சுட்டிக்காட்டியவன் தன்வியிடம்

“இதுவும் சொன்னேனா இல்லையா? என் வருங்கால மனைவிக்குக் கோவம் கொஞ்சம் அதிகமா வரும்னு… பாத்தியா! அதையும் இவளே டெமோ காட்டிட்டா… இப்போவாச்சும் நான் இவளை எவ்ளோ புரிஞ்சு வச்சிருக்கேனு தெரிஞ்சுக்கோ அமுல் பேபி” என்று மீண்டும் சொல்லிவிட்டு ஷான்வியைப் பார்த்துக் கண் சிமிட்டவும் அவள் வெகுண்டு விட்டாள்.

“இன்னொரு வாட்டி நீ என்னை இன்டேரக்டா இப்பிடி சீண்டுனேனு வையேன், நான் பொல்லாதவளா மாறிடுவேன்”

“அட போமா! பொல்லாதவன், படிக்காதவன்னு சூப்பர் ஸ்டார் படம் பேரா சொல்லி டைம் வேஸ்ட் பண்ணாம சுகர் கம்மியா ஸ்ட்ராங்கா ஒரு கப் ப்ளாக் காபி கொண்டு வா… மாமாக்கு நீ கத்துனதுல தலைவலியே வந்துடுச்சு”

“யாரு மாமா? என்ன உளருற?”

“வேற யாரு! உன் முன்னாடி இவ்ளோ சட்டமா உக்காந்திருக்கேனே நானே தான்… போ! போய் நல்ல காபியா கொண்டு வா செல்லகுட்டி” என்றவனைப் பார்த்து நறநறவென்று அவள் பற்களைக் கடிக்க தன்வி இவர்களின் சண்டையை வேடிக்கை பார்க்கும் பார்வையாளராக மாறிவிட்டிருந்தாள். சித்தார்த் தங்கள் பேச்சின் சாராம்சம் என்ன என்று கேட்டவளை வெற்றிகரமாக தங்கள் பேச்சிலிருந்து திசை திருப்பி இருந்தானே!

“நீ என்ன டூத் பேஸ்ட் யூஸ் பண்ணுற ஷானு?” திடீரென்று கேட்டவனை கடுப்பாக முறைத்த ஷான்வி

“ஹான், த்ரீ ரோசஸ் டூத்பேஸ்ட்” என்றாள் வேண்டாவெறுப்பாக.

     “ஓஹோ! அப்போ உன் டூத்பேஸ்ட்ல இஞ்சி, ஏலக்காய், அதிமதுரம்னு எல்லா மூலிகையும் கலந்துருக்கும் போல… வெரி ஸ்ட்ராங் டீத்… இல்லைனா என்னைப் பாத்து நீ பல்லைக் கடிச்சதுக்கு இந்நேரம் உன்னோட வாய் பொக்கை வாயா போயிருக்கும்

தன்வி புரியாதவளாய் “என்னது? இதெல்லாம் எப்போ டூத்பேஸ்ட்ல கலக்க ஆரம்பிச்சாங்க?” என்று கேட்டுவிட்டு விழி விரிக்க

“உப்பு எலுமிச்சைலாம் சேர்த்துட்டு டேஸ்ட் பத்தலனு இந்த மூனு ஐட்டத்தையும் சேர்த்துட்டாங்க அமுல் பேபி… உனக்கு தெரியாதா? உலகம் தெரியாத பொண்ணா இருக்கியே தனு… வேணும்னா உன் தங்கச்சி கிட்ட கேளு…  அவ அதை தான் ரெகுலரா யூஸ் பண்ணுறாளாம்” என்று தன்விக்கு விளக்கம் கொடுக்கிறேன் பேர்வழியாக ஷான்வியைச் சீண்டி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

இவையனைத்தையும் நமட்டுச்சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அனிகாவுடன் விளையாட ஆரம்பித்த சித்தார்த், தன்விக்குப் பதிலளித்தபடி அமர்ந்திருந்த ஷான்வியை நோக்கிக் கண் சிமிட்ட அவள் வழக்கம் போல தலையைச் சிலுப்பிக் கொண்டாள்.

அவன் சொன்னதை கேட்டுவிட்டு அது என்ன பற்பசை ப்ராண்ட் என்று கேட்கும் தன் தமக்கையை எண்ணி தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து அகன்று சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

சிறிது நேரத்தில் கிளாராவும் வந்துவிட அன்றைய தினம் சமையலை அஸ்வினி, விஸ்வஜித், தனஞ்செயனின் கைமணம் விருந்தாக மாற்றிவிட்டிருந்தது.