💞அத்தியாயம் 15💞

“தனுவும் ஷானுவும் வீடு ஷிப்ட் ஆகப் போறேனு சொன்னாங்க… அஸ்வினி மேடம் பேச்சு அவங்களை ரொம்ப பாதிச்சிருச்சுனு நினைக்கேன்… பட் தனியா இருக்கிறது தான் அவங்களுக்கும் நல்லது… ஏன்னா அவங்களுக்கு பாதுகாப்பு வேணும்னு மட்டும் யோசிச்சிட்டே இருந்து அவங்களோட சுயமரியாதைய கேள்விக்குறி ஆக்கிடக் கூடாதுல்ல… என்னால முடிஞ்சது அவங்க ரெண்டு பேருக்கும் மாரல் சப்போர்ட் குடுக்கிறது மட்டும் தான்… அதை நான் என்னைக்குமே பண்ணுவேன்”

                                                                  -தனஞ்செயன்

ஆம்ஹெர்ஸ்ட் அவென்யூ, ரிவர் ஓக்ஸ்….

அன்று மாலையில் சீக்கிரமே வீடு திரும்பிய தன்வியுடன் கண்ணைக் கட்டி விளையாடிக் கொண்டிருந்தாள் அனிகா. புல்வெளி காலில் உரச இதமான உணர்வுடன் விளையாடிக் கொண்டிருந்தனர் இருவரும்.

அனிகா தன்வியைத் தோற்கடித்துவிடவே இப்போது துணியால் கண்ணைக் கட்டிக் கொண்டு அனிகாவைத் தேடுவது தன்வியின் முறை. புல்வெளியில் முழங்காலிட்டு அமர்ந்தவளின் கண்ணைக் கருப்புத்துணியால் அனிகா கட்டிவிடவும் அவள் எழுந்தாள்.

கைகளால் துளாவியபடியே “அனிகுட்டி எங்க இருக்க?” என்று கேட்டபடி அவளைத் தேட ஆரம்பித்தாள்.

அனிகாவின் சிரிப்பு கிண்கிணிநாதமாய் கேட்டாலும் அதை வைத்து அவள் இருக்கும் திசையைத் தன்வியால் யூகிக்க முடியவில்லை. சுற்றும் முற்றும் அவள் தேட அனிகா அவளுக்கு விளையாட்டு காட்டிக் கொண்டு அவள் வசம் சிக்காமல் ஓடிக் கொண்டிருந்தாள்.

இவ்வாறு இருக்கையில் கார் வரும் சத்தம் கேட்டதும் ஷான்வி தான் தனஞ்செயனின் காரில் வருகிறாள் என்று நினைத்த தன்வி தனது தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தாள். திடீரென்று யார் மீதோ மோதிக் கொண்டவள் தடுமாறி விழப் போக அவளை இடையுடன் சேர்த்துப் பிடித்து நிறுத்தின இரு கரங்கள்.

அந்தக் கரங்களின் அழுத்தம் தன்வியின் இதயத்துடிப்பை எகிற வைக்க வேகமாக கண்ணில் கட்டியிருந்த கருப்புத்துணியை அவிழ்த்தவள் தன் எதிரே நின்று தன்னை இடையோடு சேர்த்து வளைத்திருப்பவனைக் கண்டதும் திகைத்துப் போய் செயலிழந்து நின்றாள். விஸ்வஜித் தான் அவளை விழாமல் தடுத்தவன்.

இருவரின் மூச்சுச்சத்தமும் இதயத்துடிப்பும் மட்டும் காதில் விழ வேறு எதன் மீதும் கவனம் செல்லாமல் ஒருவரையொருவர் விழியகலாமல் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் தன்வியின் இமைகள் அழகாய் கொட்டிக் கொள்ள கன்னங்களோ வெட்கத்தில் செவ்வண்ணம் பூசிக் கொண்டன.

விஸ்வஜித் இரண்டாவது முறையாக மிக அருகாமையில் அவளது சந்திரவதனத்தைக் கண்டவன் கன்னங்களின் செவ்வண்ணத்தை அவனறியாது ரசிக்க ஆரம்பிக்கவும் அவர்களுக்கு மிக அருகில் யாரோ தொண்டையைச் செறுமும் சத்தம் கேட்டது.

விஸ்வஜித் அதில் கவனம் கலைந்தவன் தன்வியை விருப்பமின்றி விடுவித்தான். தன்வியும் இவ்வளவு நேரம் இருந்த வெட்கம் எல்லாம் தூரப் போக யார் தொண்டையைச் செறுமிய ஜீவன் என்று எட்டிப் பார்க்க அங்கே குறும்புப்புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான் சித்தார்த்.

மெதுவாக அவர்களை நெருங்கி “இன்னைக்கு மார்னிங் தான் ‘அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்’னு சொல்லிட்டிருந்தேன்… பட் என்னோட அண்ணா அதை லைவ்வா காட்டிட்டான்… வாவ்! வாட் அ கார்ஜியஸ் சீன்… இத ரெண்டு குழந்தைங்க பாத்துட்டிருக்குங்கிறத தான் நீங்க மறந்துட்டிங்க” என்று சிலாகிப்பது போல இருவரையும் கேலி செய்தவன் அனிகாவுடன் சேர்த்துத் தன்னையும் குழந்தை என்று சொல்லிவிட தன்வி தனது நெற்றியில் குட்டிக் கொண்டு அசட்டுச்சிரிப்பை உதிர்த்தாள்.

விஸ்வஜித் பதிலுக்கு “நானாச்சும் பரவால்லடா… நீ வெறும் கேக்கையும் ப்ரெட்டையும் கவுண்ட் பண்ணுனத கூட வச்ச கண் வாங்காம பாத்தேல்ல… வாவ்! வாட் அ ஃபெண்டாஸ்டிக் சீன்… ஆனா அப்போ நீயும் உன் கூட ஒரு குழந்தை நின்னுட்டிருந்தத கவனிக்கல” என்று இப்போது தன்னைக் குழந்தையாக்கிச் சித்தார்த்தைக் கேலி செய்ய அவனோ தலைக்கு மேல் கையை உயர்த்திக் கும்பிடு போட்டான்.

“போதும்டா குழந்தை! காதல் வந்துச்சுனா எல்லாருக்கும் கவிதை தான் வரும்… உனக்கு மட்டும் ஹியூமர் சென்ஸ் வந்திருக்கு… இத இப்பிடியே மெயிண்டெய்ன் பண்ணு” என்று நக்கலடித்துவிட்டு இருவரையும் அழைத்தவன் அனிகாவைத் தூக்கிக் கொண்டு வீட்டினுள் சென்றான்.

மூவரும் உள்ளே சென்று அஸ்வினியுடன் பேச ஆரம்பித்தனர். அப்போது விஸ்வஜித்தின் பார்வை அடிக்கடி தன்வியை ரசனையுடன் தழுவ அஸ்வினி சித்தார்த்திடம் கண் காட்டி என்னவென்று வினவ அதைக் கண்டுகொண்ட தன்வி

“அஸுக்கா நான் அனிகுட்டிக்கு ஹோம் ஒர்க் செய்யுறதுக்கு ஹெல்ப் பண்ணப் போறேன்… யூ கய்ஸ் ப்ளீஸ் கேரி ஆன்… அனி கம்… லெட்ஸ் கோ” என்று அனிகாவை அழைத்துக் கொண்டு அஸ்வினியின் அறையிலிருந்து வெளியேறிவிட்டாள்.

அவள் சென்றதும் விஸ்வஜித்தின் முகம் வாடிவிட அஸ்வினியும் சித்தார்த்தும் அவனைக் கிண்டல் செய்து ஒரு வழியாக்கிவிட்டனர். நீண்டநாட்களுக்குப் பின்னர் மூவரும் மனம் விட்டு உரையாடிக் கொண்டிருக்கையில் ஷான்வியும் தனஞ்செயனுடன் வீட்டுக்குத் திரும்பினாள்.

வந்தவள் தனஞ்செயனிடம் அஸ்வினியை நலம் விசாரிக்கச் சொல்லிவிட்டுத் தங்களின் அறைக்குச் செல்ல படியேறினாள்.

தனஞ்செயன் அஸ்வினியின் அறையில் விஸ்வஜித் மற்றும் சித்தார்த்துடன் அவள் உரையாடுவதைக் கேட்டபடியே உள்ளே நுழைந்தவன் அவர்கள் இருவருக்கும் சினேகப்புன்னகையை வீசிவிட்டு அஸ்வினியிடம் நலம் விசாரிக்க ஆரம்பித்தான்.

“டாக்டர் சொன்ன ஒன் வீக் பெட் ரெஸ்ட் நாளையோட முடியுது தனா… இனியும் நான் ரெஸ்ட் எடுத்துட்டே இருந்தேன்னா எனக்கே நான் அஸ்வினியானு சந்தேகம் வந்துடும்… எனக்கு வேலை எதுவும் செய்யாம சும்மா இருக்கிறது போர் அடிக்குது”

“ரெண்டு நாளா ப்ரேக்பாஸ்ட் நீங்க தான் செய்யுறிங்கனு ஷானு சொன்னாளே”

தனஞ்செயன் அவ்வாறு கேட்டதும் அஸ்வினி திகைப்பில் வாயைப் பிளந்தவள் “அவ இருக்காளே, உங்க கிட்ட எதையும் மறைக்க மாட்டா தனா! நீங்களே சொல்லுங்கடா, ஒரு மனுசியால ஏழு நாள் எந்த வேலையும் செய்யாம சும்மாவே இருக்க முடியுமா?” என்று விஸ்வஜித்தையும் சித்தார்த்தையும் துணைக்கு அழைக்க அவர்களோ பழைய அஸ்வினியாய் உருமாறி கலகலப்பாக பேசியவளை மனநிறைவுடன் நோக்கிக் கொண்டிருந்தனர்.

தனஞ்செயன் அவளது பேச்சைக் கேட்டவன் “கஷ்டம் தான் மேடம்… எங்கம்மாக்கு ஆஸ்துமா கம்ப்ளெய்ண்ட் இருந்தப்போ நானும் இலக்கியாவும் அவங்கள வேலை செய்ய விட மாட்டோம்… அதுலயும் கிச்சனை அவங்க நுழையுறதுக்குத் தடை செய்யப்பட்ட பகுதினு அறிவிப்பே குடுத்துடுவோம்” என்று பழைய நினைவுகளை அவளிடம் பகிர்ந்து கொள்ள இரு இறுக்கமான நபர்கள் முகமூடியைக் கழற்றிவிட்டு மனம் விட்டுப் பேசிய அத்தருணத்தை இரு சகோதரர்களும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் உரையாடலுக்கு இடையே மூவருக்கு காபியும் அஸ்வினிக்குப் பசலைக்கீரை சூப்பும் கொண்டு வந்தாள் ஷான்வி.

மற்றவர்களுக்குக் காபியை நீட்டியவள் அஸ்வினியின் கையில் சூப் கிண்ணத்தை கரண்டியுடன் திணித்தாள். கூடவே ஒரு சொட்டு விடாமல் குடித்துவிட வேண்டும் என்ற கட்டளை வேறு.

அவள் அதைக் குடிக்கும் போதே தன்வியுடன் உள்ளே வந்த அனிகா அன்னையின் கையில் இருந்த சூப் கிண்ணத்தை எட்டிப் பார்த்துவிட்டு “ஐயே! ஸ்பினாஷ் சூப்பா?” என்று முகம் சுளிக்க ஷான்வி அது எவ்வளவு சத்தானது என்று காரணங்களை அடுக்கியவள் கடைசியில் சொன்ன காரணத்தைக் கேட்டு பெரியவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர்.

“யூ நோ ஒன் திங்க்? பாப்பாய் தி செய்லர் கார்ட்டூன் பாத்திருக்கியா? அதுல பாப்பாய்கு எப்போலாம் சக்தி வேணுமோ அப்போலாம் அவரு ஸ்பினாஷ் தான் சாப்பிடுவாரு.. அத சாப்பிட்டதும் அவரு ரொம்ப ஸ்ட்ராங்கா மாறிடுவாரு… ம்ம்ம்… இதோ இவனை மாதிரி” என்று சித்தார்த்தை நோக்கி கை காட்டவும் அனைவரும் அவள் சொன்ன விதத்தில் சிரித்தனர்.

அனிகா ஆர்வத்துடன் “அது என்ன கார்ட்டூன்?” என்று கேட்க ஷான்வி ஆர்வமாய் பாப்பாய் என்ற தொண்ணூறுகளின் பிரபலமான கார்ட்டூனைப் பற்றி அவளிடம் விளக்க ஆரம்பித்தாள்.

அதில் இடையிட்ட சித்தார்த் “நீ இன்னுமா அந்தக் கார்ட்டூன்லாம் பாக்குற?” என்று கேட்க

“ஏன் பாக்க கூடாதா? நான் குழந்தைமனசு உள்ள நைன்டீஸ் கிட்… நான் பாப்பேன்டா” என்று அமர்த்தலாய் சொல்லிவிட்டு தன்வியிடம் ஹைஃபை கொடுத்தவள் அனிகாவிடம் பாப்பாயின் சாகசங்களை விளக்க ஆரம்பித்தாள் அவள்.

அஸ்வினி மற்றவர்களுடன் சேர்ந்து மனதாற சிரித்தவள் அன்றைய தினத்தில் அனைவருடனும் உரையாடியதில் முழு உடல் நலனும் திரும்பி வந்ததாய் உணர்ந்தாள். அன்பிற்குரியவர்கள் அருகில் இருக்கும் போது மனதோடு உடலும் சரியாவது இயல்பு தானே!

அன்றைய தினம் அனைவருக்கும் இரவுணவு அங்கேயே தயாரானது. ஷான்வி சமையலறைக்குள் வேலையாய் இருக்க மற்றவர்கள் அஸ்வினியின் அறையில் அரட்டையடிக்க சித்தார்த் மட்டும் சமையலறைக்குள் எட்டிப் பார்த்தான்.

“எதாவது ஹெல்ப் வேணுமா? தயங்காம கேளு ஆங்ரி பேர்ட்”

“நீ எனக்குப் பண்ண போற பெரிய ஹெல்ப் இங்க இருந்து போறது தான்… நீ இப்பிடி நின்னு பாத்துட்டே இருந்தா எனக்கு வேலை ஓடாது”

“இஸிண்ட்? என்னோட பிரசன்ஸ் மேடமை அவ்ளோ டிஸ்டர்ப் பண்ணுதா? அப்போ கண்டிப்பா நான் இங்க தான் இருக்கணும்”

சமையலறைக்குள் ஒரு நாற்காலியுடன் நுழைந்தவன் காய்கறி நறுக்கிக் கொண்டிருப்பவளின் அருகில் அமர்ந்து கொள்ள ஷான்வி அவனைக் கவனியாதது போல திரும்பி நின்று நறுக்க ஆரம்பித்தாள்.

சொன்னது போல அவன் நாற்காலியில் சாய்ந்தபடி அவளைப் பார்த்துக் கொண்டிருக்க ஷான்வி முடிந்தளவு அவனைப் பார்க்காமல் காய்கறிகளில் கண் பதித்திருந்தாள். பார்த்தால் தானே பிரச்சனை!

ஆனால் சில நிமிடங்களுக்கு மேல் அமைதியாக இருக்க முடியாத சித்தார்த் “ஷானு உன்னோட மொபைல் நம்பர் சொல்லு” என்று கேட்க “ஏன் கேக்குற?” என்ற கேள்வி வந்தது அவளிடமிருந்து.

“என் போன்ல ஏதோ நெட்ஒர்க் ப்ராப்ளம்னு நினைக்கேன்… கால் போகுதானு செக் பண்ணுறதுக்கு தான்” என்று சொன்னவனை அவள் நம்பினால் தானே! சொல்ல முடியாது என்பது போல தோளைக் குலுக்கிவிட்டு வேலையைக் கவனிக்க ஆரம்பித்தவளின் தோளைத் தட்டியவன்

“லுக்! எப்பிடி பாத்தாலும் நீயும் நானும் ஒரே ஊர்க்காரங்க… எதாவது பிரச்சனைல மாட்டிக்கிட்டோம்னா அட்லீஸ்ட் ஹெல்ப் கேக்குறதுக்காச்சும் நம்பர் வேணும் தானே”

“பை காட்’ஸ் க்ரேஸ், இன்னைக்கு வரைக்கும் எனக்கோ தனுக்கோ அப்பிடி எந்த பிரச்சனையும் வரல… சப்போஸ் ஃபியூச்சர்ல வந்தாலும் அத நாங்களே பார்த்துக்குறோம்… எந்த சூப்பர் ஹீரோவும் எங்களுக்காகப் பறந்து வந்து ஹெல்ப் பண்ண வேண்டாம்” என்று நொடித்துக் கொண்டவளிடம் எப்படி மொபைல் எண்ணை வாங்குவது என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே தன்வி சமையலறைக்குள் நுழைந்தாள்.

அவளைக் கண்டதும் அவன் மனதில் அற்புதமான திட்டம் உதிக்க அதை செயல்படுத்த ஆரம்பித்தான் சித்தார்த்.

“ஹாய் அமுல்பேபி! உங்க நியூ ஃப்ளாட் எப்பிடி இருக்கு? என்னைக்கு ஹவுஸ் வார்மிங்?” என்று பேச ஆரம்பிக்கவும் தன்வியும் தங்களின் புதிய வீட்டைப் பற்றி பெருமையாகச் சொல்ல ஆரம்பித்தாள்.

“சுத்தி இதே மாதிரி லான் இருக்கு சித்து… கராஜ் யூஸ் பண்ணனும்னா தனி சார்ஜ், அதே மாதிரி பெட் அனிமல்ஸ் வளக்கணும்னா அதுக்கும் தனி சார்ஜ்… மத்தபடி கிச்சன், வாஷிங் ஃபெஷிலிட்டி, பர்னிஷர் எல்லாமே பக்கா… எப்போடா புதுவீட்டுக்குப் போவோம்னு இருக்கு”

அவள் சொன்னதைக் கேட்டபடியே “எல்லாம் ஓகே! அங்கே இருந்து நீ யூனிவர்சிட்டிக்கு வரணும்னாலோ, ஷானு ஹோட்டலுக்கு வரணும்னாலோ கண்டிப்பா உங்களுக்குக் கார் தேவைப்படுமே” என்று அப்போது தான் அதைப் பற்றி யோசித்தது போல பேசினான் சித்தார்த்.

“ம்ம்… பட் புதுசா கார் வாங்குற அளவுக்கு இப்போ நிலமை இல்ல… சோ கிளாரா கிட்ட தான் செகண்ட் ஹேண்ட் கார் பத்தி தகவல் தெரிஞ்சா இன்பார்ம் பண்ணுனு ஷானு சொல்லிருக்கா” என்றாள் தன்வி பெருமூச்சுடன்.

சித்தார்த் அதைக் கேட்டவாறே “இசிண்ட்? என் ஃப்ரெண்ட் ஒருத்தனுக்கு பயன்படுத்தின காரை சேல் பண்ணுற ஒரு ஏஜெண்ட் ஒருத்தரைத் தெரியும்…. நீ உன் நம்பரைக் குடு அமுல் பேபி… நான் அவன் கிட்ட நல்ல கார் இருந்துச்சுனா உனக்கு இன்பார்ம் பண்ணுறேன்” என்று சொல்லிவிட்டு ஷான்வியை ஓரக்கண்ணால் பார்க்க அவளோ சரி தான் போடா என்பது போல ஏளனமாகச் சிரித்துவிட்டு வேலையைக் கவனித்தாள்.

தன்வி கர்மசிரத்தையாக தனது எண்ணை சித்தார்த்துக்குக் கொடுத்தாள். கூடவே

“சில நேரம் நீ கால் பண்ணுறப்போ நான் அவைலபிளா இருக்க மாட்டேன் சித்து… பிகாஸ் கிளாஸ்ல இருக்கிறப்போ, ஆபிஸ்ல ஒர்க் பண்ணுறப்போ என் மொபைல் சைலண்ட்ல தான் இருக்கும்… சோ நீ ஷானு நம்பரையும் நோட் பண்ணிக்கோ” என்று சொன்னதும் ஷான்வி திடுக்கிட்டுத் திரும்பியவள் தமக்கையின் வெகுளித்தனத்தைப் பார்த்துத் தலையிலடித்துக் கொண்டாள்.

அதனால் ஒரு பயனும் இல்லையே! ஏனெனில் அவள் கடுப்பாகி முடிப்பதற்குள் ‘ஆங்ரி பேர்ட் ஷானு’ என்ற பெயரில் அவளது மொபைல் எண் சித்தார்த்தின் போனில் பதிவுசெய்யப்பட்டு விட்டது.

ஷான்வியின் எண்ணை சித்தார்த்துக்குச் சொல்லிவிட்டு ஏதாவது உதவி செய்யவா என்று கேட்ட தன்விக்கு ஒரு கும்பிடு போட்டு சமையலறையை விட்டு அனுப்பி வைத்தாள் அவள்.

“வந்த வேலை முடிஞ்சுதுல்ல… நீயும் கிளம்பு… இல்லனா நான் பேச மாட்டேன்… இது தான் பேசும்” என்று காய்கறி நறுக்கும் கத்தியைக் காட்டி மிரட்டி சித்தார்த்தையும் வெளியேறச் சொல்ல அவனோ வழக்கம் போல கண் சிமிட்டி அவளைக் கொதிநிலைக்குப் போகச் செய்துவிட்டு வெளியேறினான்.

அன்றைக்கு இரவுணவு அருமையாக இருந்தது. என்ன காரம் தான் கொஞ்சம் அதிகம் என்பது அங்கிருந்த அனைவரின் ஒட்டுமொத்த கருத்து. சமையல் செய்த ஆள் அப்படி என்று சித்தார்த் கேலி செய்ய அனைவரும் அதைக் கேட்டு நகைத்தனர். ஷான்வி முள்கரண்டியைக் காட்டி அவனை மிரட்ட அன்றைய இரவுணவு அவர்கள் அனைவருக்கும் இனிமையான நினைவாக நெஞ்சில் பதிந்து போனது.