💞அத்தியாயம் 12💞

“என்ன பொண்ணுடா இவ? இந்த உலகம் முழுசுக்கும் சென்ட்ரல் ஏசி போட்டாலும் இவ இருக்கிற இடம் அனலா தான் இருக்கும் போல! தெரியாம ஹக் பண்ணுனது ஒரு குத்தமா? இட்ஸ் ஜஸ்ட் அ ஹக்… இதுக்கு என்னவோ ஒவ்வொரு தடவையும் என்னை பார்க்கிறப்போ ஏ.கே 47ல இருக்கிற தோட்டா மாதிரி வார்த்தையை தெறிக்க விடுறா… ஆனா ஒன்னு, கோவப்படுறப்போ அவ மூக்கு மட்டும் சிகப்பு மிளகா மாதிரி ரெட்டிஷா ஆகுது… அது பார்க்க கியூட்டா இருக்கு… அந்த ஒரு காரணத்துக்காக அவளை அடிக்கடி கோவப்படுத்திப் பாக்கலாம் போல”

                                                             -சித்தார்த்

யாருமற்ற தெருவில் அமர்ந்திருக்கும் ஷான்வியைக் கேள்வியாக நோக்கியபடி காரிலிருந்து இறங்கி அவளருகில் வந்தான் சித்தார்த். ஷான்வி அவனைப் பார்த்ததும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவளது அலட்சியத்தைக் கண்டுகொள்ளாதவனாய் அவள் முன்னே நின்றவன் “இந்த நேரத்துல இங்க என்ன பண்ணுற ஷானு? கையில சூட்கேசோட வந்திருக்க போல… நடந்தே இந்தியாவுக்குப் போற ஐடியாவா?” என்று கேட்டான்.

அவனது ‘ஷானு’ என்ற அழைப்பில் புருவம் உயர்த்தி பொய்யாய் வியப்பு காட்டிய ஷான்வி உனக்கு நான் எதற்கு பதில் சொல்லவேண்டும் என்ற ரீதியில் அலட்சியமான முகபாவத்துடன் மீண்டும் யாருமற்ற தெருவை வெறிக்கத் தொடங்கினாள்.

அவளின் இந்த அலட்சியம் கலந்த பாவனையைக் கண்டுகொள்ளாமல் சட்டென்று அவள் அருகில் அவன் அமரவே ஷான்வி திடுக்கிட்டவளாய் எழ முயல அவளை எழும்ப விடாது தோளை அணைத்து அங்கேயே அமர வைத்தான் சித்தார்த்.

“மரியாதையா நீயே கைய எடுத்துடு… இல்லனா நடக்கப் போற விபத்துக்கு நான் பொறுப்பு இல்ல” என்று சொன்னபடி பல்லைக் கடித்தாள் ஷான்வி.

“ஐயோ பயமா இருக்கே! யாராவது இந்த ஆங்ரி பேர்ட் கிட்ட இருந்து என்னை காப்பாத்துங்களேன் ப்ளீஸ்!” என்று பயந்ததை போல நடித்த சித்தார்த் கேலியாய் சிரித்தபடி தனது முக்கால் நீள டீசர்ட்டை முழங்கை அளவுக்கு மடித்துவிட்டுக் கொண்டான்.

“இந்த பூச்சாண்டி காட்டுற வேலைய எல்லாம் உன் அக்கா அமுல் பேபியோட நிறுத்திக்கோ… நான் இதுக்குல்லாம் பயப்படுற ஆள் இல்ல… சோ கேட்ட கேள்விக்கு குட் கேர்ளா பதில் சொல்லணும்… சரியா?” என்று கேட்டவனின் குரலில் நீ பதில் சொல்லித் தான் ஆகவேண்டும் என்ற கட்டளை மறைந்திருந்தது.

ஷான்வி அவனது முகத்தை ஏறிட்டவள் “நான் வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன்… இனிமே நான் அங்க போக மாட்டேன்” என்றாள் பிடிவாதக்குரலில்.

“நீ இவ்ளோ பெரிய டிசிசன் எடுக்கிற அளவுக்கு என்ன நடந்துச்சு?”

ஷான்வி அவனிடம் மறைக்காது எல்லா விஷயங்களையும் கொட்டிவிட்டாள். சித்தார்த் அவள் பேசிய அனைத்தையும் கேட்டுவிட்டு யோசனையில் ஆழ்ந்தான். அவள் குரலில் கோபத்தை விட அஸ்வினியிடம் அவமானப்பட்ட குன்றல் தான் அதிகமாக இருந்தது.

அதைப் புரிந்து கொண்டவனாய் அவளை நோக்க அவளோ அந்தப் பார்வை கூட தன்னை மட்டம் தட்டுவதாகவே எண்ணிக் கொண்டாள்.

“எனக்குப் புரியுது! உதவிக்கு யாரும் இல்லாம அடுத்தவங்க ஆதரவுல வாழுறவளுக்கு இவ்ளோ ரோசம் இருக்கணுமானு தானே நினைக்கிற?”

அவளது சிந்தனை சென்ற விதத்தைப் பார்த்து சித்தார்த் தன் தலையிலடித்துக் கொள்ள அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த இடத்தினருகில் இருந்த வீட்டின் உரிமையாளர் காரில் வந்து இறங்கினார்.

தன் வீட்டினருகே அமர்ந்திருந்த இருவரையும் அவர் வினோதமாய் பார்த்தபடி “இஸ் எனிதிங் ராங்?” என்று கேட்டவண்ணம் ஷான்வியைப் பார்க்க அவள் விவகாரமாய் பதிலளிப்பதற்குள் முந்திக் கொண்டான் சித்தார்த்.

“நத்திங் சீரியஸ்! இவ என்னோட கேர்ள் ஃப்ரெண்ட் தான்… இந்த இடத்தோட அமைதி பிடிச்சிருக்குனு சொல்லி காரை நிறுத்தச் சொன்னா… ரெண்டு பேருமா சேர்ந்து இந்த அமைதிய ரசிச்சுக்கிட்டு இருக்கோம்”

ஷான்வி அவனது பதிலில் மெல்ல அதிர்ந்து அவனைப் பார்க்க அவன் வழக்கம் போல குறும்பாகக் கண்ணைச் சிமிட்டவும் சட்டென்று அந்த வீட்டின் உரிமையாளரை நோக்கினாள்.

அவரோ இளையவர்களைத் தொந்தரவு செய்யவேண்டாமென எண்ணி ஒரு நமட்டுச்சிரிப்புடன் வீட்டுக்குள் சென்றுவிடவே சித்தார்த் ஷான்வியின் புறம் திரும்பி டீசர்ட்டின் காலரைத் தூக்கிவிட்டு பெருமைப்பட்டான்.

“பாத்தியா? நான் சொன்னத அவர் நம்பிட்டாரு… ஐ திங் இவ்ளோ கியூட்டான கபிள்சை டிஸ்டர்ப் பண்ணிட்டோமேனு நினைச்சு தான் மனுசன் சிரிச்சிட்டுப் போறாரு”

“போதும்டா! ஓவரா ரீல் விடாத… இந்தப் பொண்ணு பார்க்கிறதுக்கு இவ்ளோ ஸ்மார்ட்டா இருக்காளே, இப்பிடி மலைமாடு மாதிரி ஒருத்தனைப் போய் செலக்ட் பண்ணிருக்காளேனு நினைச்சு தான் அவரு சிரிச்சிட்டுப் போறாரு”

கடுப்பாய் உரைத்துவிட்டு எழுந்தவள் தனது சூட்கேசை கையில் பிடித்துக் கொண்டபடி அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க அவளை மீண்டும் தடுத்து நிறுத்தினான் சித்தார்த்.

“ஏன் இப்பிடி என்னை போகவிடாம டார்ச்சர் பண்ணுற? ஐ ஹேவ் டு கோ… என்னால மறுபடியும் அந்த வீட்டுக்கு வர முடியாது”

“அப்போ எங்க போற?”

“தெரியல… ஆனா அதுக்காக என்னோட செல்ப் ரெஸ்பெக்டை விலையா குடுத்து உன் அஸுக்காவோட வீட்டுல என்னால தங்க முடியாது”

“லிசன்! நீ கொஞ்சம் ஓவர் ரியாக்ட் பண்ணுற மாதிரி உனக்குத் தோணல?”

ஷான்வி இக்கேள்வியில் அவனை வெறித்தவள் “உனக்கு என்னோட ஃபீலிங்ஸ் புரியாது மிஸ்டர் சித்தார்த்… ஏன்னா உனக்கு அப்பா அம்மா அண்ணானு எல்லாரும் இருக்காங்க… ஆனா எனக்கும் தனுவுக்கும் வேற யாரும் இல்ல… அவளுக்கு நான், எனக்கு அவ…. அம்மா அப்பாவை இழந்தவங்களுக்கு மத்த சொந்தங்கள் இருந்தும் இல்லாத மாதிரி தான்… இன்னைக்கு வரைக்கும் அடுத்தவங்க நிழல்ல வாழுற நிலமை உனக்கு வரல… வந்தா எங்களோட கஷ்டம் உனக்குப் புரியும்” என்று வலியுடன் சொல்லிவிட்டு அங்கிருந்து செல்லத் தொடங்கினாள்.

சித்தார்த்துக்கு அவள் சொன்ன வார்த்தைகளின் வலியை உணர்ந்துகொள்ள முடிந்தது. இருந்தாலும் இப்படி சொல்லிவிட்டாளே என அவளை அவளது போக்கில் விடவும் அவன் தயாராக இல்லை.

வேகமாக நடந்து செல்பவளின் பின்னே ஓடியவன் பாதையை மறிப்பது போல நிற்க ஷான்வி அவனை வழிவிடுமாறு சைகை காட்டினாள். அவன் நகரவில்லை.

“வழிய விடு மிஸ்டர்… ஐ ஹேவ் டு கோ” என்று பல்லைக் கடித்தவளை முடியாது என்பது போல பார்த்தவன் இன்னும் வழியை விட்டு நகரவில்லை.

அவள் இடவலமாக மாறி மாறிச் செல்ல முயன்றும் முடியாது போகவே திரும்பி நடக்க ஆரம்பித்தாள். சித்தார்த் விட்டால் இவள் தன்னை பைத்தியக்காரன் ஆக்கிவிடுவாள் போல என சிந்தித்தவாறு மீண்டும் அவள் முன்னே சென்று நிற்கவும்

“ஏன் வழி மறிக்கிற? என்னைப் போக விடு ப்ளீஸ்… நான் கிளாராவோட ஸ்டே பண்ணிப்பேன்” என்று முகம் சுருக்கிக் கூறியவளை நோக்கி முப்பத்திரண்டு பற்கள் மின்ன புன்னகைத்தான் அவன்.

“இப்போ ஏன் சிரிக்கிற நீ?” – ஷான்வி.

“சாரி ஷானு… என்னை மன்னிச்சிடு” என்று சொன்னவனை இப்போது எதற்கு மன்னிப்பு கேட்கிறான் என குழப்பத்துடன் பார்த்தாள் அவள்.

அவள் அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கையிலேயே சித்தார்த் அவளருகில் வந்தவன் சட்டென்று அவளைத் தூக்கிக் கொள்ள இதை எதிர்பாராத ஷான்வி முதலில் திகைத்தாள். அவன் அவளைத் தூக்கிக்கொண்டு சில அடிகள் நடக்கத் தொடங்கிய பிறகு உணர்வுபெற்றவளாய் அவனை அடிக்கத் தொடங்கினாள்.

“ஏய் என்னடா பண்ணுற நீ? ஒழுங்கா என்னை இறக்கிவிடு… இல்லனா நான் சத்தம் போட்டு இங்க இருக்கிற எல்லாரையும் எழுப்பி விட்டுருவேன்”

“உன்னால எவ்ளோ கத்த முடியுமோ அவ்ளோ கத்து ஆங்ரி பேர்ட்… ஆனா உன்னை தனியா எங்கயும் போக விடறதா இல்ல”

தீர்மானமாய் உரைத்தவன் அவளைக் காரினுள் அமர வைத்துவிட்டுக் கதவை பூட்டினான்.  பின்னர் பொறுமையாகச் சென்று அவளது ரோலர் சூட்கேசைக் காருக்கு உருட்டி வந்தவன் அதை பின்னிருக்கையில் போட்டுவிட்டு ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான்.

ஷான்வி காரின் கதவைத் திறக்க எவ்வளவோ முயல அது திறக்காமல் அடம் பிடித்தது.

“நீ சமத்தா உக்காந்தா கார் இப்போ ஆம்ஹெர்ஸ்ட் அவென்யூக்குப் போகும்… இல்ல இப்பிடி குட்டிக்கலாட்டா பண்ணிட்டே தான் வருவேன்னு பிடிவாதம் பிடிச்சேனா கார் பேலர் அவென்யூக்குப் போகும்”

“பேலர் அவென்யூல என்ன இருக்கு?”

“எங்க அப்பார்ட்மெண்ட் இருக்கு… இப்போ சொல்லுங்க மேடம் கார் எங்க போனா உங்களுக்கு வசதியா இருக்கும்?” என்று குறும்பாய் கேட்டபடி சிரித்தவனின் கழுத்தை நெறிப்பது போல கைகளைக் கொண்டு சென்றவள் அவன் கண் சிமிட்டவும் சட்டென்று கைகளைக் கீழே போட்டுவிட்டு நேரே திரும்பி சாலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

சித்தார்த் அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி காரை அஸ்வினியின் வீடு இருக்கும் ஆம்ஹெர்ஸ்ட் அவென்யூ நோக்கிச் செலுத்த ஆரம்பித்தான். வீடு வந்து சேரும் வரை அவளிடம் எதுவும் பேசவில்லை. கார் வீட்டை அடையும் போது அங்கே புல்வெளியில் அமர்ந்து விஸ்வஜித்தின் மார்பில் சாய்ந்து அழும் தன்வியும் அவர்கள் அருகில் கண்ணீருடன் நின்று கொண்டிருக்கும் அஸ்வினியும் தான் அவர்கள் இருவரின் கண்ணிலும் பட்டனர்.

கார் வரவும் மூவரும் அதை ஆர்வத்துடன் நோக்க அதிலிருந்து இறங்கிய சித்தார்த்தைக் கண்டதும் அஸ்வினி அவன் அருகில் வந்தவள் அவன் காரின் கதவைத் திறக்கவும் இறங்கிய ஷான்வியைக் கண்டதும் அவள் எவ்வித துன்பமுமின்றி திரும்பியதை உறுதிபடுத்திக் கொண்டாள்.

 அடுத்தக் கணம் விம்மல் ஒன்று அவளிடம் இருந்து வெளிப்பட ஷான்வி அதிர்ச்சியுடன் அஸ்வினியைப் பார்த்தவள் விஸ்வஜித்தின் அணைப்பிலிருந்து விலகி அவளை நோக்கி வந்த தன்வியைக் கண்டதும் உணர்ச்சியற்ற முகத்துடன் நின்றாள்.

தன்வி தங்கையை அணைத்துக் கொண்டவள் “என்னைத் தனியா விட்டுட்டு எங்க போன ஷானு? உன்னைக் காணும்னு நான் பதறிப் போயிட்டேன் தெரியுமா? இனிமே எங்க போனாலும் என்னையும் கூட்டிட்டுப் போயிடுடி” என்று நடுங்கிய குரலில் அழுது அரற்ற ஷான்வி அவளது அழுகையில் குலுங்கும் முதுகைத் தடவிக் கொடுத்தாள்.

ஆனால் அவள் கண்ணிலிருந்து துளி கண்ணீர் கூட வரவில்லை. முகம் மட்டும் கூம்பியிருக்க தன்வியை விட்டு விலகியவள் தனது ரோலர் சூட்கேசை சித்தார்த்திடமிருந்து வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி நடைபோட்டாள்.

தன்வி அழுகையுடன் திரும்பி வீட்டுக்குள் செல்பவளைப் பார்த்தவள் செய்வதறியாது நின்றாள்.

சித்தார்த் அஸ்வினியிடம் வந்தவன் “உனக்கு அட்வைஸ் பண்ணுற அளவுக்கு நான் பெரிய ஆளு இல்லக்கா… ஆனா நீ முன்ன மாதிரி இல்லனு தோணுது… ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்… அந்தப் பொண்ணு கொஞ்சம் முன்கோவக்காரி தான்… ஆனா நீ எப்போ இப்பிடி மாறிப் போன? நமக்கு கிடைச்ச மோசமான அனுபவங்களை மத்தவங்களுக்கு நம்ம குடுக்க கூடாதுனு அடிக்கடி சொல்லுவியே! ஏன் காரணமே இல்லமே மிஸ்டர் தனஞ்செயன் மேல உனக்கு இவ்ளோ கோவம்? நீ என்னையும் விஸ்வாவையும் உன் வீட்டுக்குச் சாப்பிட கூப்பிடுற மாதிரி தானே அவங்களும் இன்வைட் பண்ணுனாங்க… இதுல ஏன் உனக்கு இவ்ளோ கோவம்?” என்று கேள்விக்கணைகளை வீச அஸ்வினியால் அழ மட்டுமே முடிந்தது.

விஸ்வஜித் தம்பியைக் கண்ணால் அடக்கிவிட்டு “அஸு! காலேஜ் டேய்ஸ்ல நீ தான் ரோல்மாடல் தெரியுமா? லைப்ல எந்த பிரச்சனை வந்தாலும் சிரிச்சிட்டே கடந்து போகணும்னு நீ அடிக்கடி சொல்லுவ… அந்த அஸுவ நான் மீஸ் பண்ணுறேன்… சீக்கிரம் அவளைப் பார்க்கணும்னு ஆசைப்படுறேன்… நடந்த எல்லாமே கெட்டக்கனவா நினைச்சு மறந்துடு… தனா கிட்டவும் ஷானு கிட்டவும் கோவப்பட்டதையும் சேர்த்துத் தான் சொல்லுறேன்” என்று சொல்லவும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள் சரியென்று தலையாட்டினாள்.

சித்தார்த் அவளது கரம் பற்றி அழுத்திவிட்டு “குட் கேர்ள்… அந்த ஆங்ரி பேர்ட் கிட்ட நீ பேசலனாலும் பரவால்ல… தனு அப்பாவி பொண்ணு… அவ கிட்ட கொஞ்சம் அமைதியா நடந்துக்கோ… என் கிட்டவும் அண்ணா கிட்டவும் கேரிங்கா இருக்கிறல்ல… அதே கேரிங்கை அவ கிட்டவும் காட்ட டிரை பண்ணு” என்று சொல்ல அதற்கான காலம் கடந்துவிட்டது என்று எண்ணிக் கொண்டாள் அஸ்வினி.

தன்னிடமும் அனிகாவிடமும் அன்பாய் இருந்தவர்களை தனது வார்த்தைகளால் விலக்கி வைத்தப் பின்னர் இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர்களிடம் பேசுவது என்ற கலக்கம் அவளுள் எழுந்தது. ஆனால் அதை விஸ்வஜித்திடமும் சித்தார்த்திடமும் வெளிக்காட்டிக் கொள்ளாது தான் சரியாகி விட்டதைப் போல காட்டிக் கொண்டாள் அவள்.

இனி எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் விஸ்வஜித்தும் சித்தார்த்தும் கிளம்பிச் சென்றுவிட அஸ்வினி தனது அறையில் அனிகாவை அணைத்தபடி உறங்கிப் போனாள். ஷான்வியும் தன்வியிடம் இனி என்ன நடந்தாலும் தான் அவசரப்பட்டு இனி எந்த முடிவும் எடுக்கமாட்டேன் என உறுதி அளித்தாள். பெரும் புயல் அடித்து ஓய்ந்தது போன்ற அமைதியுடன் அந்த இரவு மெதுவாய் கடந்தது.