💞அத்தியாயம் 10💞
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
“எங்க அம்மாவுக்கு நான் ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு குழந்தை குட்டியோட வாழுறதை பாக்கணும்னு ரொம்ப ஆசை… பையனைப் பெத்த ஒரு சராசரி அம்மாவோட நியாயமான ஆசை தான்… ஆனா கடைசி வரைக்கும் எங்கம்மாவோட ஆசைய நான் நிறைவேத்தல… அவங்களும் அந்த ஆசையோடவே கண்ணை மூடிட்டாங்க… இலக்கியா போனதுக்கு அப்புறம் பாதி இருட்டா இருந்த என் வாழ்க்கை எங்கம்மா போனதுக்கு அப்புறம் முழு இருட்டா மாறிடுச்சு”
-தனஞ்செயன்
அன்றைய தினம் ஞாயிறு…
அனிகாவையும் அஸ்வினி தன்னுடன் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுவிட்டாள். அன்றைய தினம் தன்விக்குப் பல்கலைகழகம் விடுமுறை என்பதால் அவளும் ஷான்வியுடன் ஹோட்டலுக்குக் கிளம்பினாள். அன்றைய காலையுணவை ஹோட்டலிலேயே முடித்துக் கொள்ளலாம் என்று தங்கை சொல்லிவிட இருவரும் தனஞ்செயனின் காரில் ஹோட்டலுக்கு வந்துவிட்டனர்.
தனஞ்செயன் ஷான்வியைக் காலையுணவை முடித்துவிட்டு வரும்படி சொல்லிவிட்டுச் சமையலறை சாம்ராஜ்ஜியத்துக்குள் புகுந்து கொண்டான்.
ஷான்வி தனக்கும் தன்விக்கும் நாண், பனீர் பட்டர் மசாலா ஆர்டர் செய்துவிட்டு அவளுடன் பேசியபடி இருந்தாள்
“இந்த ஹோட்டல்ல சவுத் இந்தியன் ஃபுட் இருந்தா நல்லா இருக்கும்… எனக்கு இப்போ தோசை சாப்பிடணும் போல இருக்கு… ஆனா நமக்கு இன்னைக்கு விதிச்சது நாணும் பனீரும் தான் போல” என்று சொல்லிவிட்டுச் சோகமாய் முகத்தை வைத்துக்கொள்ள தன்வி அவளருகே குனிந்தவள் இரகசியம் பேசும் குரலில்
“இன்னைக்கு நைட் ஒர்க் முடிஞ்சதும் நம்ம எதாவது நல்ல சவுத் இந்தியன் ஹோட்டலா தேடிப் போய் ஆல் வெரைட்டி தோசையையும் வெளுத்து வாங்குவோமா?” என்று கேட்டுக் கண்ணை உருட்ட ஷான்வி அவள் கையில் பட்டென்று அடித்துவிட்டு
“அப்போ இந்த ஹோட்டல் நல்ல ஹோட்டல் இல்லனு சொல்லுறியா?” என்று பொய்க்கோபத்துடன் கேட்க தன்வி தோளைக் குலுக்கிவிட்டு
“க்கும்! ஹூஸ்டன்லயே பெரிய ஹோட்டல்னு தான் பேரு… ஆனா சவுத் இந்தியன் மெனு எதுவுமே இல்ல… முடிஞ்சா உன்னோட ரோல்மாடல் மிஸ்டர் வீ.கே கிட்ட சொல்லி அதை மெனுல சேர்க்கச் சொல்லுடி… அப்புறமா டைம் இருந்துச்சுனா இந்த ஹோட்டலையும் ‘நல்ல’ ஹோட்டல்னு சொல்ல ட்ரை பண்ணுறேன்” என்று கிண்டலாய் சொல்லி சிரிக்க அவளுக்கு எதிரே அமர்ந்திருந்த ஷான்வியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.
தன்வி ஷான்வியின் கண் முன்னே கைகளை ஆட்டிவாறு “என்னடி ஏதோ பேயைக் கண்ட மாதிரி முழிக்கிற? வாட் ஹேப்பண்ட்?” என வினவ ஷான்வி தமக்கையின் மோவாயைப் பற்றித் திருப்பி அவளுக்குப் பின்னே நின்றிருந்தவனைக் காட்ட இப்போது ஷான்வியும் அதிர்ந்து தான் போனாள்.
அங்கே நின்றிருந்தவன் விஸ்வஜித். வழக்கம் போல கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி அவனது அக்மார்க் புன்னகையுடன் நின்றிருந்தான் அவன். தன்வி கார்ட்டூன் சேனல் கதாபாத்திரங்களை போல கண்களை மூடித் திறக்கவும் சிரித்தபடி அவர்களருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
ஷான்வி தனது ரோல்மாடலை வைத்தக் கண் வாங்காது பார்க்க தன்வியோ அவன் இருப்பது தெரியாது இப்படி உளறி கொட்டிவிட்டோமே என்று அசடு வழிய அமர்ந்திருந்தாள்.
“இந்த ஹோட்டல்லயே ஒர்க் பண்ணிட்டு அதே ஹோட்டலை கிண்டலும் பண்ணுவிங்களோ?”
“சாரி சார்… நான் சும்மா விளையாட்டுக்கு…” என்று தட்டுத்தடுமாறி அவள் சமாளிக்க அவளைக் கையமர்த்தியவன் அதற்குள் அவர்கள் ஆர்டர் செய்திருந்த உணவு வரவும் சாப்பிடுமாறு கை காட்டினான்.
இரு சகோதரிகளும் சாப்பிடாமல் விழிக்கவே “அட சாப்பிடுங்கம்மா! பை த வே மிஸ் தன்வி, நீங்க சொன்ன பாயிண்ட் கூட ஓகே தான்… ஹூஸ்டன்லயே பெரிய ஹோட்டல்ல சவுத் இந்தியன் டிஷ் இல்லனா நல்லா இருக்காது தான்… இந்த மாசம் நடக்கப் போற மீட்டிங்ல மேனேஜ்மெண்ட் கமிட்டி கிட்ட இந்த சஜெசனை வைப்போம்… ஒத்துக்கிறதும் ரிஜெக்ட் பண்ணுறதும் அவங்க இஷ்டம்” என்று சொல்லிவிடவே தன்வி நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
இவ்வளவு நேரம் தனது பேச்சை எப்படி எடுத்துக் கொள்வானோ என்ற சங்கடத்துடன் இருந்தவள் அவன் இதை மேலாண்மையிடம் ஆலோசிப்பதாகக் கூறவும் அவன் தன்னை தவறாக எண்ணவில்லை என நிம்மதியுற்றாள்
அதே நேரம் சித்தார்த் அண்ணனுடன் வந்திருந்தவன் அவன் யாரோ இரு பெண்களுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு வேகமாக அவனை நோக்கிச் சென்றான்.
“டேய் அண்ணா! யாருடா இவங்க?” என்றபடி அவனருகில் சென்றவனின் பார்வை அண்ணனை அடுத்து அமர்ந்திருந்த தன்வியின் மேல் விழுந்தது.
“ஹாய் அமுல் பேபி! இன்னும் ப்ரேக்பாஸ்ட் சாப்பிடலயா?” என்று அவன் சாதாரணமாகப் பேசவும் அவர்களுடன் அமர்ந்திருந்த ஷான்விக்கு இவனை எப்படி தன் அக்காவுக்குத் தெரியும்; அதுவும் அமுல் பேபி என்று செல்லப்பெயர் வைத்து அழைக்குமளவுக்கு இவன் தன் அக்காவுக்கு அவ்வளவு நெருக்கமா என்று ஆச்சரியத்துடன் விழிக்க அவன் அப்போது தான் ஷான்வியைப் பார்த்தான் போல!
“ஹேய் ஆங்ரி பேர்ட்! நீயும் இங்க தான் இருக்கியா? இதோட பத்து நாணை காலி பண்ணிருப்பியா?” என்று கேட்டபடி நாற்காலியில் அமரவும் ஷான்வி கையில் வைத்திருந்த விள்ளலை வாயருகே கொண்டு சென்றபடி அவனை முறைக்க ஆரம்பிக்கவே அவனே அவளது கையைப் பற்றி அந்த விள்ளலை அவள் வாயில் திணித்து விழுங்க வைத்தான்.
ஷான்வி திடீரென நடந்த இந்நிகழ்வை எதிர்பாராது விழித்தவள் வேறு வழியின்றி நாணை விழுங்கி வைத்தாள்.
“நீங்க ரெண்டு பேரும் ஒரே இடத்துல என்ன பண்ணுறிங்க? நீங்க ஃப்ரெண்ட்ஸா?” என்று கேட்டவனிடம்
“இல்ல சித்து! ஷானு என்னோட சிஸ்டர்… அவ இங்க பேஸ்ட்ரி செஃபா ஒர்க் பண்ணுறா” என்று பெருமையாக உரைத்தாள் தன்வி.
சித்தார்த்துக்கு இப்போது தான் முழுவிவரமும் புரிந்தது. ஆனால் தன்வியைப் போல சாந்தசொரூபியின் உடன் பிறந்த தங்கை இப்படி சண்டைக்கோழியாக இருப்பது தான் அவனுக்கு ஆச்சரியம்.
ஷான்வி அவர்கள் யாரையும் கண்டுகொள்ளாமல் நாணை காலி செய்தவள் “தனு சீக்கிரமா ப்ரேக்ஃபாஸ்டை முடி…. டைம் ஆகுதுல்ல” என்று தமக்கையை அவசரப்படுத்த அவளோ
“இன்னும் டைம் இருக்கு ஷானு… சித்து தான் என்னோட சுப்பீரியர்… சோ நோ ப்ராப்ளம்” என்று சொல்ல சித்தார்த் அவளுக்கு ஹைஃபை கொடுக்கவும் ஷான்வி புருவமுடிச்சுடன் அவர்களை கேள்வியாய் நோக்கினாள். விஸ்வஜித்தோ சகோதரன் அரட்டை அடிப்பதையும் தன்வி அவனுடன் இயல்பாய் பேசுவதையும் புன்னகை வழியும் முகத்துடன் பார்த்தபடி இருந்தான்.
ஷான்வியின் முகத்திலிருந்த உணர்வை படித்தவனாய் “தனுவும் நானும் குளோஸ் ஃப்ரெண்ட்ஸ்… யூ நோ ஒன் திங்! உன்னோட அக்கா உன்னை மாதிரி இல்ல… ஷீ இஸ் சோ ஸ்வீட்… அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லாத பொண்ணு… ரேயானுக்கு அப்புறம் எனக்குக் கிடைச்ச நல்ல ஃப்ரெண்ட் தனு தான்” என்றான் சித்தார்த் உளமாற.
ஷான்வி அவனது பேச்சில் தனக்கு அக்கறை இல்லை என்று உடல்மொழியில் அவனுக்குப் புரியவைத்துவிட்டுத் தனது சீருடையைக் கையில் வைத்துக் கொண்டாள்.
தன்வி அவளிடம் “ஷானு! என்னை விட சித்து தான் ரொம்ப ஸ்வீட்… நான் ஃபர்ஸ்ட் டே யூனிவர்சிட்டிக்குப் போனப்போ இவரோட பேச்சு தான் எனக்கு சக மனுசங்களை ஃபேஸ் பண்ணுற தைரியத்தைக் குடுத்துச்சு” என்று சொல்லவும் தான் அக்காவுக்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில் பேசி அவளது பயத்தைப் போக்கியவன் சித்தார்த் என்பதே ஷான்விக்குப் புரிந்தது.
தான் அவனுக்குச் சொல்லவேண்டிய நன்றி பாக்கி இருக்கிறது என்பது நினைவுக்கு வர அதை மறக்க முயன்றபடி நேரம் பார்த்தவள் அவர்களிடம் “ஓகே கய்ஸ்! எனக்கு டைம் ஆகிடுச்சு… நான் கிளம்புறேன்.. பை வீ.கே சார்… பை தனு” என்றவள் சித்தார்த்திடம் மட்டும் ஏதும் சொல்லிக்கொள்ளவில்லை.
மற்ற இருவரும் ஆமோதிப்பாய் புன்னகைக்க, தன்னை சித்தார்த்தின் பார்வை துளையிடுவதைப் பொறுக்காதவளாய் “பை த வே, தனுக்கு நம்பிக்கை குடுத்து அவளோட பயத்தைப் போக்குனதுக்கு தேங்ஸ்” என்று அமர்த்தலாக மொழிந்துவிட்டு விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தாள்.
சித்தார்த் கபேயின் சமையலறையை நோக்கிச் செல்பவளைக் கையால் சுட்டிக் காட்டிவிட்டு “இந்தப் பொண்ணு வயித்துல இருந்தப்போ உங்கம்மா மிளகாய் அதிகமா சாப்பிட்டிருப்பாங்கனு நினைக்கேன் தனு… எவ்ளோ ஆட்டிட்டியூட் பாரேன்! இந்த உலகத்துல இவ்ளோ ஆட்டிட்டியூடா யாராவது தேங்ஸ் சொல்லி நீ பார்த்திருக்கியா விஸ்வா?” என்று அண்ணனிடமும் தன்வியிடம் மாறி மாறி ஷான்வியைப் பற்றி அங்கலாய்த்துத் தள்ளிவிட்டான்.
அதற்கு விஸ்வஜித்தும் தன்வியும் நகைக்க இருவரையும் முறைத்தவன் தன் தலையில் தட்டிக் கொண்டான்.
“ஓ மை காட்! அந்த ஆங்ரி பேர்டோட காத்து என் மேல அடிக்க ஆரம்பிச்சிடுச்சு போல… எப்போவும் ஸ்வீட் ஸ்மைலோட இருக்கிற நானே முறைக்கிறேன்… இது நல்லதுக்கு இல்ல.. தனு நம்ம போய் வேலைய பார்ப்போம்… டேய் அண்ணா நீ உன்னோட கிச்சன் கிங்டம்முக்கு போ… பை” என்று படபடத்துவிட்டுக் கையோடு தன்வியை அழைத்துக் கொண்டு மின்தூக்கியை நோக்கிச் சென்றான்.
விஸ்வஜித் தம்பியுடன் சினேகமாய் புன்னகைத்தபடி செல்லும் தன்வியைப் பார்த்தபடி நின்றிருந்தான். என்னவோ யோசனைகள் சூழ தலையை உலுக்கி அவற்றைத் தள்ளிவிட்டுத் தன் வேலையைக் கவனிக்கச் சென்றான்.
அங்கே அஸ்வினி அவனுக்கு முன்னரே வந்திருக்க “நீ சீக்கிரமாவே வந்துட்டியா அஸு?” என்று கேட்டபடி ஏப்ரனை மாட்டிக் கொண்டான் விஸ்வஜித்.
“நோ! டென் மினிட்ஸ் தான் ஆச்சு விஸ்வா… நீயும் சித்துவும் தனு, ஷான்வி கூட பேசிட்டிருந்தப்போவே வந்துட்டேன்” என்று அஸ்வினி பதிலளிக்கும் போதே அந்தப் பெரிய சமையலறையின் கடைக்கோடியில் அனிகா மற்றொரு ஊழியரான ஸ்டீபனிடம் பேசிச் சிரிப்பது கேட்டது.
“அனிகுட்டி வந்திருக்காளா? ஓ! இன்னைக்கு சண்டேனு கூட மறந்துட்டேன் அஸு” என்றவன் சித்தார்த்துக்கும் ஷான்விக்கும் நடந்த காரசாரமான உரையாடலை அஸ்வினியிடம் பகிர்ந்து கொண்டபடி வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
அதே நேரம் ஷான்வி தனஞ்செயனிடம் சித்தார்த்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள்.
“அண்ணா அவன் தான் தனுவுக்குத் தைரியம் குடுத்தானாம்.. ஐ காண்ட் பிலீவ் திஸ்… அவனுக்கும் மெச்சூரிட்டிக்கும் காத தூரம்… என் கிட்ட இது பத்தாவது நாணானு கேக்குறான்… என்னைப் பார்த்தா சாப்பாட்டுராமி மாதிரியா இருக்குதுண்ணா?”
அவள் படபடக்க அதை ஒரு புன்சிரிப்புடன் கேட்டபடியே தனஞ்செயன் கேக் கலவையைத் தட்டில் கொட்டி ஓவனில் வைக்க ரோசியிடம் கொடுத்து அனுப்பினான்.
அவளைச் சமையலறையின் ஊழியர் அவர் செய்த டோனட்டைச் சுவை பார்க்க வரச் சொல்லவும் அவரது இடத்துக்குச் சென்றாள்.
அப்போது சமையலறைக்குள் பூனை போல நுழைந்தாள் அனிகா. அவள் விழிகள் ஷான்வியைத் தேடியது. ஷான்வி இருப்பது அந்த பெரிய சமையலறையின் மத்தியில். அனிகா நின்று கொண்டிருப்பது நுழைவு வாயிலுக்கு அருகில். அதனால் அங்கிருந்த ஊழியர்களுக்கிடையே அவளால் ஷான்வியைக் கண்டுபிடிக்க இயலவில்லை.
தனஞ்செயன் அங்கே மற்றவர்களின் வேலையைப் பார்வையிட்டபடி வந்தவன் “ஓகே கய்ஸ்! டைம் டு ப்ரேக்” என்று சொல்ல ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் அந்தச் சின்ன இடைவெளியில் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வெளியேறினர்.
இம்மாதிரி நேரங்களில் ஹோட்டலில் மக்கள் கூட்டமும் அவ்வளவாக இருப்பதில்லை. இதை மனதில் வைத்து தான் அவர்களின் வேலைநேர அட்டவணை மனிதவளத் துறையினரால் வடிவமைக்கப் பட்டிருந்தது.
பெரும்பாலான ஊழியர்கள் வெளியேறிவிட தனஞ்செயன் அங்கே நடைபோட்டவன் கண்ணை உருட்டி சமையலறையை வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்த சிறுமியைக் கண்டதும் அவளை அழைத்தான்.
அனிகா அவனருகில் வந்தவள் “அங்கிள் நீங்க ஷானுக்காவ பார்த்திங்களா? அவங்க இங்க தான் ஒர்க் பண்ணுறாங்கனு ஜூலி ஆன்ட்டி சொன்னாங்க” என்று பார்வையால் அந்தச் சமையலறை முழுவதையும் அலசி ஆராய்ந்தபடி கேட்டாள் அனிகா.
தனஞ்செயன் அவளைத் தூக்கி சமையலறையின் மத்தியில் இருந்த சமையல் மேடையில் வைத்தவன் “உங்க நேம் என்ன மேடம்? மேடமுக்கு எப்பிடி ஷானுவ தெரியும்?” என்று அவளைப் போலவே கேட்க
“ஷானுக்காவும் தனுக்காவும் எங்க வீட்டுல தான் இருக்காங்க” என்று அனிகா சொன்னதும் விமான நிலையத்தில் அஸ்வினியிடம் யாரோ அனி பற்றி சகோதரிகள் விசாரித்தது நினைவுக்கு வந்தது. கூடவே “அனிக்கு ஆப்பிள் பைனா ரொம்ப இஷ்டம்ணா… நான் இன்னைக்கு அவளுக்காக ஸ்பெஷலா செய்யப் போறேன்” என்று ஷான்வி குதூகலித்ததும் மனக்கண்ணில் வலம் வந்தது.
“லேடி ஹிட்லரோட மகளா இந்தப்பொண்ணு? பார்க்கிறதுக்கு அந்தம்மா ஜாடையில இருந்தாலும் நல்லவேளையா குணம் அவங்களை மாதிரி முசுடு இல்ல” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் அனிகாவிடம் தோழமையாய் பேச ஆரம்பித்தான்.
“ஆங்! அனிகுட்டிய பத்தி ஷானு என் கிட்ட நிறைய சொல்லிருக்காளே! அனிகுட்டிக்கு ஆப்பிள் பை, ஸ்ட்ராபெரி டார்ட், சாக்லேட் மஃபின் இதுல்லாம் ரொம்ப பிடிக்குமாமே! அப்பிடியா?”
“ஆமா அங்கிள்! ஷானுக்கா இதுல்லாம் சூப்பரா செய்வாங்களாம்… தனுக்கா சொன்னாங்க… நான் வீக்லி என்னென்ன டிஷ் செய்யணும்னு ஷெட்யூல் கூட போட்டிருந்தேன்… ஆனா மம்மி ஷானுக்காவ திட்டுனதால அவங்க என் கூட டூ விட்டுட்டாங்க.. பேசவே மாட்றாங்க தெரியுமா? அன்னைக்கு நான் லூடோ விளையாடக் கூப்பிடப் போனேனா, அப்போவும் வரல”
அந்தச் சிறுமி வெள்ளந்தியாய் பேசுவதைக் கேட்க தனஞ்செயனுக்குத் தெவிட்டவில்லை. அவள் முகம் வாடுவது பொறுக்காமல்
“ஷானுக்காக்கு இங்க ஒர்க் பிரஷர் அதிகம்… அடுத்த மாசத்துல இருந்து அவ ரிலாக்ஸ் ஆகிடுவா… அப்புறம் உன் கூட ஜாலியா பேசுவா, விளையாடுவா, உனக்கு வேணுங்கிறத செஞ்சு குடுப்பா… அனிகுட்டி இப்போ சிரிப்பியாம்… அங்கிள் உனக்கு பனானா புட்டிங் தருவேனாம்” என்று அவன் செல்லம் கொஞ்சியபடி அங்கே தயாராய் இருந்த வாழைப்பழ புட்டிங்கில் வெட்டிய சிறு முக்கோணத்துண்டை அவளுக்கு ஒரு சிறிய தட்டில் கரண்டியுடன் நீட்ட அச்சிறுமி ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டாள்.
அவள் உண்பதை வாஞ்சையுடன் பார்த்திருந்தவன் எதேச்சையாகத் திரும்ப சமையலறையின் நுழைவுவாயில் அருகே பத்திரக்காளியாய் நின்றிருந்த அஸ்வினியைக் கண்டதும் முகம் மாறினான்.
அவள் வேகமாக உள்ளே வந்தவள் அவனைக் கடந்து அனிகாவிடம் சென்றாள்.
“அனி! யார கேட்டு இங்க வந்த? உன்னை நான் கிட்ஸ் பார்க்ல விளையாடத் தானே சொன்னேன்? இங்க என்ன பண்ணுற?… முதல்ல அதைக் கீழ வை” என்று அவள் கையிலிருந்து புட்டிங் இருந்த தட்டைப் பறித்து டக்கென்று சமையல் மேடை மீது வைத்தவளின் கோபத்தில் அனிகா மருண்டாள்.
அதைக் கண்ட தனஞ்செயன் பொறுக்காது “ஏன் குழந்தைய திட்டுறிங்க? நான் தான் அவளுக்குச் சாப்பிடக் குடுத்தேன்” என்று ஆற்றாமையுடன் சொல்லிவிட இப்போது அஸ்வினியின் கோபம் அவன் புறம் திரும்பியது.
தன்னைப் பற்றி இவனுக்கு நல்லெண்ணம் இல்லை. அப்படி இருக்க தனது மகளிடம் மட்டும் என்ன கரிசனை இவனுக்கு என்ற எரிச்சல் மூண்டது அஸ்வினிக்குள்.
“நீங்க யாரு சார் என் பொண்ணுக்கு இதெல்லாம் செய்யுறதுக்கு? உங்களோட சகோதரப்பாசம் டிராமாவ ஷானு, தனுவோட நிறுத்திக்கோங்க… என் பொண்ணைப் பாத்துக்க எனக்குத் தெரியும்… அவ அதிகமா ஸ்வீட் சாப்பிடக் கூடாதுனு டென்டிஸ்ட் சொல்லிருக்காரு… இப்பிடி ஆளாளுக்கு எதையாச்சும் குடுத்து வச்சிடுவிங்க… கடைசில நான் தான் அவளுக்குப் பல்வலி, வயிறுவலி, காய்ச்சல்னு வந்ததுக்கு அப்புறம் கஷ்டப்படணும்”
படபடவென பொரிந்தவளை புருவம் சுழித்து நோக்கிய தனஞ்செயன் எதுவும் பேசாது நின்றான்.
அஸ்வினி அவனது அமைதியில் எரிச்சலுற்று மகளிடம் திரும்பியவள் அவள் முதுகில் பொத்தென்று அடி வைத்து “கண்டவங்க குடுக்கிறதலாம் வாங்கி சாப்பிடக் கூடாதுனு எத்தனை தடவை சொல்லிருக்கேன்… வா என் கூட” என்று சொல்லிவிட்டு அவளை இழுத்துச் செல்ல அதைத் தடுக்கும் வழியறியாது பார்த்துக் கொண்டே நின்றிருந்தான் அவன்.