💞அத்தியாயம் 1💞

அப்பாவ பொறுத்தவரைக்கும் பொண்ணுனா தைரியமானவளா இருக்கணும்; சொந்தக்கால்ல நிக்கணும்; மனசுக்குப் பிடிச்சது சரியான விசயமா இருந்தா யாரு தடுத்தாலும் அதை செஞ்சு முடிக்கணும். இதை தான் நான் ஃபாலோ பண்ண நினைக்கிறேன். தன்மானத்தோட வாழ சிங்கப்பெண்ணா இருக்க வேண்டிய அவசியம் இல்லசாதாரணப் பொண்ணா இருந்தா கூட தன்மானத்தை இழக்காம கவுரத்தோட வாழ முடியும்

                                                                 –ஷான்வி

ஜார்ஜ் புஷ் இண்டர்கான்டினென்டல் ஏர்போர்ட், ஹூஸ்டன்

பயணிகள் அங்கும் இங்குமாக போவதும் வருவதுமாக இருக்க யாருக்காகவோ காத்திருந்தாள் அந்த இளம்பெண். வயது பின்னிருபதுகளில் இருக்கலாம். நீண்ட நெளிநெளியான கூந்தலை எந்தவித செயற்கை அழகுபடுத்துதலுமின்றி அப்படியே போனிடெயிலாக இறுக்க கட்டியிருந்தாள். நீலநிற ஸ்கின்னி ஜீன்ஸ், வெள்ளைநிற டீசர்ட், அதன் மேலே வெள்ளையில் கட்டம் போட்ட ப்ளெய்ட் ஷேர்ட், வெண்ணிற ஸ்னிக்கர்ஸ் அணிந்து இக்கால யுவதியாய் தோற்றமளித்தவள் அலங்காரத்தில் நாட்டமற்றவள் என்பதை முகப்பூசு ஏதுமற்ற அவளது வதனம் சொல்லாமல் சொன்னது.

திருத்தமான முகத்தில் வெறுமை மட்டும் நீண்டநாள் வாடகைதாரராக குடியிருந்தது. அவள் யாருக்காக காத்திருந்தாளோ அவர்கள் இன்னும் வராமல் இருக்கவே எரிச்சல் மூள ஜீன்ஸின் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து தொடுதிரையில் தட்டத் துவங்கினாள்.

“நீ சொன்ன கேர்ள்ஸ் இன்னும் வரலையே தேஜூ? எவ்ளோ நேரம் நான் ஏர்போர்ட்லயே வெயிட் பண்ணுறது? அனி எனக்காக வெயிட் பண்ணிட்டிருப்பா.. உன்னோட ஃப்ரெண்ட்ஸ்னு சொன்னதால தான் நான் என் வீட்டுல தங்கிக்க ஒத்துக்கிட்டு நான் ஒர்க் பண்ணுற ப்ளேஸ்ல அவளுக்கு ஜாப்கு அரேஞ்ச் பண்ணுனேன்… பட் திஸ் இஸ் ரிடிகுலஸ்”

படபடவென்று வெடித்தவளை அவளால் தேஜூ என்று அழைக்கப்பட்ட தேஜஸ்வினி மறுமுனையில் அமைதிப்படுத்த தொடங்கினாள்.

 “அஸு! கோவப்படாத… அவங்க ரெண்டு பேருக்கும் யூ.எஸ் புதுசு… லக்கேஜ் கிளியர் பண்ணி எடுத்துட்டு வர டைம் ஆகிருக்கும்னு நினைக்கேன்… கொஞ்சம் வெயிட் பண்ணி கூட்டிட்டுப் போயிடு ப்ளீஸ்! என் செல்ல அக்கால்ல, என் புஜ்ஜு குட்டில்ல”

அவளது கொஞ்சலில் அடங்கிய அந்த அஸுவின் முழுப்பெயர் அஸ்வினி. போனில் பேசிய தேஜஸ்வினி வேறு யாருமல்ல, இவளது உடன்பிறந்த தங்கை. இப்போது அஸ்வினி காத்திருப்பது அவளது தங்கை தேஜஸ்வினியின் உயிர்த்தோழிக்காவும் அவளது அக்காவுக்காகவும் தான்.

அந்த இரு பெண்களில் இளையவள் தான் அஸ்வினி வேலை செய்யும் ஹூஸ்டனின் மிகப்பெரிய ஹோட்டலான ராயல் கிராண்டேவில் ‘அசிஸ்டெண்ட் பேஸ்ட்ரி செப்’பாக தேர்வாகியிருந்தாள். அஸ்வினியின் சிபாரிசால் தான் தேர்வானாள் என்று சொல்ல முடியாது. அந்தப் பெண்ணின் மதிப்பீடுகளும் அவள் மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் எடுத்திருந்த பயிற்சியும் தான் அவளுக்கு இவ்வேலையைப் பெற்றுத் தந்திருந்தது.

அஸ்வினி அமெரிக்காவுக்கு முற்றிலும் புதியவர்களான அவர்களைத் தன்னுடன் தங்க வைத்துக்கொள்வதாக தங்கைக்குக் கொடுத்த வாக்கை காப்பதற்காகத் தான் இவ்வளவு நேரம் காத்திருக்கிறாள்.

அதே நேரம் அவளது காத்திருப்புக்குக் காரணமான இருவரும் ஒரு இளைஞனிடம் பேச்சு கொடுத்தபடி வந்து கொண்டிருந்தனர். அவர்களில் மூத்தவள் நெடுநெடுவென்று உயரமாக ஒல்லியான உடல்வாகுடன் தமிழ்நாட்டுப்பெண்களுக்கே உரித்தான களையான முகத்துடன் இருந்தாள்.

இளையவளோ உலகத்தின் குறும்புத்தனம் மொத்தமும் குத்தகைக்கு எடுத்திருந்தவளைப் போல குறும்புத்தனத்தின் மொத்த உருவமாய் துருதுருவென்ற முகவெட்டுடன் கன்னங்களில் குழி விழும் அளவுக்கு அவளுடன் வந்து கொண்டிருந்த அந்த இளைஞனிடம் ஏதோ பேசிச் சிரித்தபடி வந்து கொண்டிருந்தாள்.

அந்த இளைஞன் ஆஜானுபாகுவாக கம்பீரத்தின் மொத்த உருவாய் பக்கத்து வீட்டு இளைஞன் போன்ற தோற்றத்தில் இயல்பாய் அந்தப் பெண்களுடன் பேசியபடி வந்து கொண்டிருந்தான்.

அஸ்வினிக்கு அந்தப் பெண்களின் புகைப்படத்தை ஏற்கெனவே தேஜஸ்வினி கட்செவியஞ்சலில்(Whatsapp) அனுப்பியிருக்க அவர்களுடன் வரும் இந்த மூன்றாமவன் யார் என்பது தான் அவளது கேள்வி. ஆனால் அவர்களிடம் இதைக் கேட்கும் எண்ணம் அவளுக்கு இல்லை. இப்போதெல்லாம் அனைவரிடமும் ஒரு எல்லைக்கு மேல் அவள் பேசுவதில்லை.

அவள் முகம் இறுக்கமான பாவத்துக்கு மாற அந்தப் பெண்களும் அவர்கள் உடன் வந்தவனும் அவளைப் பார்த்துவிட்டனர். அவர்களில் இளையவள் அஸ்வினியைக் கண்டதும் வேகமாக ஓடிவந்தாள். அஸ்வினியே எதிர்பாராவிதமாய் அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள்.

“அஸுக்கா எப்பிடி இருக்கிங்க?” என்று அவளிடம் ஏதோ நீண்டநாள் பழகியதைப் போல அவள் உரிமை எடுத்துக்கொள்ள நிஜமாகவே அஸ்வினி திகைத்துப் போனாள்.

அவளது திகைத்த தோற்றத்தைக் கண்ணுற்ற இளையவள் தன் தலையில் தானே குட்டிக்கொண்டு

“அச்சோ! நீங்க தான் என்னை பார்த்ததே இல்லயே! ஓகே! லெட் மீ இன்ட்ரடியூஸ் மைசெல்ப்… ஐ அம் ஷான்வி மணிகண்டன்… அதோ வர்றாளே அவ தான் என்னோட அக்கா தன்வி” என்று சற்று தொலைவில் அந்த இளைஞனுடன் நடந்து வந்த க்ரீம் வண்ண ஃப்ளாரல் டாப்பும் ஜீன்சும் அணிந்து ரோலர் சூட்கேசை உருட்டிவந்த நெடுநெடு பெண்ணைக் கைகாட்டினாள்.

அஸ்வினி புருவம் சுருக்கிப் பார்க்க அவர்கள் இருவரும் அருகில் வந்து விட்டனர்.

அந்த நெடுநெடு பெண் சினேகமாய் அஸ்வினியிடம் புன்னகைத்து “ஹாய் அக்கா! எப்பிடி இருக்கிங்க? நான் தன்வி… தேஜூ உங்களை பத்தி நிறைய சொல்லிருக்கா” என்று மென்மையாய் பேச அவளுக்கு ஒரு தலையசைப்பை மட்டும் பதிலாய் அளித்தவள் அருகிலிருந்த இளைஞனை கேள்வியாய் நோக்க அவனும் இவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அஸ்வினியின் பார்வையை உணர்ந்த ஷான்வி “இவர் தனா ப்ரோ… ஃபர்ஸ்ட் டைம் ஃப்ளைட் எக்ஸ்பீரியன்ஸ் எப்பிடி இருக்குமோனு பயந்துட்டே ஏறுனோம்… ப்ரோ தான் எங்க கூட ஜாலியா பேசி எங்க பயத்தைப் போக்குனாரு” என்று அவனைப் பெருமையாய் பேச

அந்த இளைஞன் அஸ்வினியை நோக்கி முறுவலித்து “ஹாய் ஐ அம் தனஞ்செயன்” என்று சொல்லிவிட்டுக் கை குலுக்குவதற்காக நீட்ட அஸ்வினி பதிலுக்குக் கரம் நீட்டாமல் இரு பெண்களிடமும்

“நம்ம போகலாமா? பிகாஸ் ஆல்ரெடி ரொம்ப லேட் ஆகிடுச்சு” என்று சொல்ல அவளது ஒட்டாத பேச்சு இரு பெண்களுக்கும் சற்று அதிர்ச்சியைக் கொடுத்தது. தனஞ்செயனும் அவள் தன்னை கண்டுகொள்ளாததை பொருட்படுத்தாது இரு பெண்களிடமும் விடைபெற்றவன் எதுவும் அவசரம் என்றால் தயங்காது தன்னை தொடர்பு கொள்ளுமாறு சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

அவர்களைத் தாண்டி சில அடிகள் நடந்த போது ஷான்வி யாரோ அனிகாவைப் பற்றி கேட்க அதற்கு அஸ்வினி அவள் நலம் என்று பட்டு கத்தறித்தாற்போல சொல்லுவதும் தனஞ்செயனின் காதில் விழுந்தது. கூடவே அவள் கண்களில் இருந்த வெறுமையும் அவன் மனதில் பதிந்தது. ஆனால் விமான நிலையத்தை விட்டு வெளியேறியவனுக்கு அதற்கு மேல் அஸ்வினியைப் பற்றி யோசிப்பதற்கு ஏதுமில்லை. ஷான்வியையும் தன்வியையும் பற்றி சிந்தித்தவாறு கால்டாக்சியை வரவழைத்துக் கிளம்பிவிட்டான்.

அஸ்வினி தன்வியிடம் “வீடு ரிவர் ஓக்ஸ்ல இருக்கு… கபேக்கும் வீட்டுக்கும் ஜஸ்ட் ஃபிப்டின் மினிட்ஸ் ஜர்னி தான்… உனக்கு யூனிவர்சிட்டிக்குப் போறதுக்கும் வசதியா இருக்கும்” என்று உருப்போட்டு ஒப்பிப்பதைப் போலச் சொன்னவள் அவர்களின் உடமைகளை கார் டிக்கியில் வைத்துவிட்டு இருவரையும் காரினுள் அமரச் சொன்னாள்.

ரிவர் ஓக்ஸில் தான் தன்ஞ்செயன் தங்கப் போகும் அப்பார்ட்மெண்டும் உள்ளது என ஷான்வி மெதுவாக தன்வியின் காதில் முணுமுணுத்தாள். இருவரும் இரகசியம் பேசுவதை அஸ்வினி கவனித்தாலும் அதைக் கண்டுகொள்ளாதது போல சாலையில் கண் பதித்தாள்.

ஷான்விக்கும் தன்விக்கும் அஸ்வினியின் இந்த ஒட்டாத்தன்மை மனதுக்கு நெருடலைக் கொடுத்தது என்றாலும் சென்னையில் இருந்த நல்ல உள்ளங்களுக்கு இவர்கள் பரவாயில்லை என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை. மனிதர்களா அவர்கள்? கடைசி சொட்டு இரத்தத்தையும் உறிஞ்சிவிடும் அளவுக்கு கீழ்த்தரமான அட்டைப்பூச்சிகள்.

நினைத்தாலே ஷான்விக்கு உள்ளுக்குள் எரிமலை கொதித்தது. கிள்ளுக்கீரைகளைப் போல தங்களை நடத்தியவர்களைப் பற்றி எண்ணி அவள் முகம் மிளகாய் பழம் போல சிவப்பதைக் கண்டு தன்வி அவளது கரத்தை ஆதரவாய் பற்ற அவளால் இன்னுமே இயல்பாய் இருக்க முடியவில்லை.

அந்த தனஞ்செயன் தங்களுக்கு என்ன உறவு? விமானப்பயணத்தில் தாங்கள் இருவரும் பயந்துவிடக் கூடாதென வேடிக்கை கதைகள் பேசி சிரிக்க வைத்துப் பார்த்தானே! அதே போல தான் இந்த அஸ்வினி தங்களுக்கு என்ன உறவு? தங்கையின் தோழி என்ற முறையில் யாருமறியா இந்த தேசத்தில் ஆதரவுக்கரம் நீட்டுகிறாளே! மூன்றாவது மனிதர்களான இவர்களுக்கு இருக்கும் மனிதாபிமானம் ஏன் சொந்தங்களுக்கு இல்லாது போனது?

ஆயிரம் கேள்விகள் ஷான்வியின் இதயத்தைத் துளைத்தது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொண்டால் அக்காவுக்குத் தங்கள் நிலையை எண்ணி கழிவிரக்கம் மிகுந்துவிடும் என்று யோசித்து அவள் தன்னை பழையபடி கலகலப்பாக காட்டிக் கொண்டாள்.

சொல்லப் போனால் விமானப்பயணத்தில் தனஞ்செயனின் உதவியால் இருவரும் கலகலப்புக்குத் திரும்பியிருந்தனர் தான். ஆனால் அஸ்வினியின் ஒட்டாத்தன்மை நெஞ்சில் சுருக்கென்று வலியை உண்டாக்கியது  இருவருக்கும். எனவே மறக்க விரும்பிய முகமூடி மனிதர்கள் ஒவ்வொருவராக நினைவுக்கு வர ஆரம்பித்தனர்.

அதன் விளைவு தான் ஷான்வியின் முகத்திலிருக்கும் இந்த கோபச்சிவப்பு.

தன்வியோ தனக்குப் பிடித்த படிப்பைத் தொடரப் போகிறோம் என்ற மகிழ்ச்சி ஒருபுறமும், தங்கை கஷ்டப்பட்டு உழைக்கும் போது தான் மட்டும் படிக்கிறேன் என அவளது சுமையைப் பகிராது நாட்களைக் கடத்தப் போகிறோமே என்ற வருத்தம் மறுபுறமுமாய் கலவையான மனநிலையுடன் தான் அமெரிக்க மண்ணில் காலெடுத்து வைத்திருந்தாள்.

ரிவர் ஓக்ஸின் நுழைவு வாயிலை பார்த்ததும் ஷான்விக்கு மனதில் சில்லென்ற ஒரு உணர்வு. விரும்பிய ஏதோ ஒன்றை நம்மையறியாது நெருங்கும் போது உள்ளுக்குள் ஒரு  சிலிர்த்தெழும் இனம்புரியாத உணர்வு எழுமே அதே உணர்வு தான் இது.

தன்விக்கு தங்களது வாழ்வில் இருந்த எதிர்மறை மனிதர்களும் எதிர்மறை எண்ணங்களும் தூரமாய் போனது போல மனம் இலேசாகி இருந்தது.

கூடவே பெற்றோரின் நினைவுகளும்.

“தனுகுட்டிக்கு ராஜகுமாரன் மாதிரி ஒரு மாப்பிள்ளைய கொண்டு வந்து நிறுத்துவான் என் தம்பி”

இதைச் சொன்ன போது தந்தையின் குரலில் தான் எத்துணை நம்பிக்கை!

“அப்போ எனக்கு?” என்று கேட்ட ஷான்விக்கு

“இந்தச் சண்டைக்காரிக்கு ஏத்த கத்திச்சண்டை போட தெரிஞ்சவன் மூனு லோகத்திலயும் இல்லைனு எங்களுக்கு நல்லாவே தெரியும்டி” என்ற அன்னையின் குறும்பான பதிலடியை எண்ணிப் பார்க்கையில் தன்விக்குக் கண்ணீர் சுரந்தது.

மூன்று மாதங்களுக்கு முன்னர் வரை தங்கள் முன் உலாவியவர்கள் இன்று நினைவுகளாய் மாறிப் போனது காலத்தின் கட்டாயமா? அவர்கள் இருக்கும் வரை தங்களை ராஜகுமாரிகளாகப் போற்றி பாடிய நாவுகள் அவர்களின் மறைவுக்குப் பின்னர் வேலைக்காரிகளினும் கேடாக தங்களை தூற்றியது விதியின் விளையாட்டா?

அனைத்திலிருந்தும் தப்பித்தவர்களாய் பெருமூச்சு விட்டவர்கள் கார் நிற்கவும் அஸ்வினியைப் பார்க்க அவளோ “வீடு வந்துடுச்சு” என்று உரைக்கவே அவர்கள் காரின் கண்ணாடிக்கதவு வெளியே தெரியும் வீட்டைப் பார்த்தனர். சிறியதாக இருந்தாலும் சுற்றிலும் பசும்புல்வெளி சூழ அதன் நடுவில் சந்தனவண்ணப்பூச்சுடன் செந்நிற ஓடுகளும், சிம்னியுமாக அழகாய் கம்பீரமாய் நின்றது ஷான்வியும் தன்வியும் இனி அஸ்வினியுடன் வாழப் போகும் அந்த வீடு.

காரிலிருந்து உடமைகளுடன் இறங்கியவர்களின் செவியில் “மம்மி வந்துட்டிங்களா?” என்ற ஆவலான சிறுமியின் குரல் கேட்க இரு சகோதரிகளும் திரும்பி பார்க்க அங்கே கழுத்து வரை இருந்த கூந்தல் அசைந்தாட மெழுகுபொம்மை போல ஓடி வந்தாள் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருத்தி. அவளைக் கண்டதும் இவ்வளவு நேரம் வெறுமை பூசியிருந்த அஸ்வினியின் முகத்தில் கனிவு பிறந்தது.

தன்னிடம் ஓடிவந்தவளின் கூந்தலை வருடிக் கொடுத்த அஸ்வினி “அனி பேபி மம்மிய மிஸ் பண்ணுனிங்களாடா?” என்று கேட்க அவள் மத்திமமாய் தலையசைத்து விட்டு “இவங்க யாரு மம்மி?” என்று ஷான்வியையும் தன்வியையும் காட்டி கேட்கவும் அஸ்வினி ஒரு நொடி அமைதியானாள்.

பின்னர் தெளிவான குரலில் “இவங்க பேயிங் கெஸ்ட் அனி… இனிமே மாடில தான் தங்க போறாங்க” என்று மீண்டும் அவர்களை மூன்றாவது மனிதர்களாக்கிச் சொல்ல ஷான்விக்கும் தன்விக்கும் அதிர்ச்சியுடன் கூடவே ஒரு ஏமாற்றமும் சூழ்ந்தது.

மகளுடன் பேசியவாறு அஸ்வினி வீட்டை நோக்கி நடைபோட விதி இனி அவர்கள் வாழ்வில் நிகழ்த்தப் போகும் மாயாஜாலங்களை அறியாத ஷான்வியும் தன்வியும் அவளைத் தொடர்ந்தனர்.