💘கண்மணி 8💘

கே.ஆர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

மருத்துவமனை படுக்கையில் சோர்வாய் கண் மூடி சாய்ந்திருந்தார் சுவாமிநாதன். மருமகன் பேசிய வார்த்தைகளே மீண்டும் மீண்டும் செவியில் எதிரொலித்தது. அவர் என்றுமே ஞானதேசிகனையும் ஜெகத்ரட்சகனையும் பிரித்துப் பார்த்தது கிடையாது. அன்னபூரணியும் அவ்வாறே! பழைய நினைவுகளில் கண்களில் கண்ணீர் சுரக்க ஆரம்பித்தது அவருக்கு.

தமக்கையும் அவரது கணவரும் விபத்தில் அகால மரணமடைந்த போது ஐந்து வயது பாலகனாய் தன்னுடன் அழைத்து வந்த ஜெகத்ரட்சகனை மகனும் மகள்களும் இலகுவாகத் தங்களின் நட்புவட்டத்தில் இணைத்துக்கொண்டபோது இருவரும் அடைந்த நிம்மதிக்கு அளவே இல்லை.

தங்கள் பிள்ளைகளைப் போலவே ஜெகத்ரட்சகனுக்கும் கல்வியோடு சேர்த்து நற்பண்புகளையும் புகட்டுவதில் சுவாமிநாதனோ அன்னபூரணியோ ஒரு குறையும் வைக்கவில்லை.

செண்பகாதேவியும் அஞ்சனாதேவியும் தன் அண்ணனுக்குக் கொடுக்கும் அதே மரியாதையையும் அன்பையும் ஜெகத்ரட்சகன் மீதும் பொழிந்தனர். ஆனால் வளர வளர செண்பகாதேவி ஜெகத்ரட்சகனைத் தன் சகோதரனாய் நினைத்தது போல அஞ்சனாதேவி எண்ணவில்லை.

அவரது பார்வைக்கு ஜெகத்ரட்சகன் அன்பான அத்தை மகனாகவே காட்சியளித்தார். அத்தை மகன் என்ற உரிமைக்கும் மேலாய் காதல் என்ற புதிய உணர்வும் பரிணாமிக்க இருவரும் பெற்றோரிடம் அதைச் சொன்னபோது அவர்களும் தடை சொல்லவில்லை.

 ஞானதேசிகனுக்கோ தனது நண்பனும் அத்தை மகனுமாய் இருந்தவனே தங்கைக்கும் கணவனாகப் போகும் மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை.

கோலாகலமாய் ஜெகத்ரட்சகனுக்கும் அஞ்சனாதேவிக்கும் திருமணம் நடந்தது. அதே ஆண்டில் செண்பகாதேவிக்கும் அரிஞ்சயனைக் கணவனாய் தேர்ந்தெடுத்த சுவாமிநாதன் உறவேதுமில்லா அரிஞ்சயனை வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக் கொண்டார்.

 ஆனால் கணவன் மனைவி இருவருமே இரு மருமகன்களுக்கும் மரியாதையிலோ அன்பிலோ பேதம் காட்டவில்லை. அச்சமயத்தில் ஞானதேசிகனுக்கேற்ற மனையாளாய் வந்து சேர்ந்தார் லோகநாயகி.

காலம் அருமையாக நகர பேரப்பிள்ளைகளும் பிறந்தனர். அனைவரிலும் மூத்தவன் அருண் தான். அவனுக்கு அடுத்துப் பிறந்தவன் சிவசங்கர். பவானி, வானதி, பாகீரதி மூவருமே ஒரே வருடத்தில் சில மாத இடைவெளிகளில் பிறந்தவர்கள்.

மகன், மருமகள், மகள்கள், மருமகன்கள் இவர்களுடன் பேரன் பேத்திகளின் மழலையும் சாந்திவனத்தைச் சொர்க்கமாக்கிய அழகிய நாட்கள் அவை.

நாட்கள் இவ்வாறே நகர குழந்தைகளும் வளர்ந்தனர். மருமகன்கள் இருவரும் மகனுடன் சுவாமிநாதனின் நாதன் அண்ட் அசோசியேட்ஸில் சட்டத்துறையில் பயிற்சி பெற்று அங்கேயே பணிபுரிந்தனர். அச்சமயத்தில் தான் இப்போது அமைச்சராக இருக்கும் செழியன் அப்போது எம்.எல்.ஏவாக இருந்தார்.

அவர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதாகச் சொல்லி ஏமாற்றி வயிற்றில் குழந்தையுடன் கைவிட அப்பெண்ணின் தந்தை வழக்கம் போல சிவன் கோயிலுக்கு வந்த சுவாமிநாதன் அன்னபூரணி தம்பதியிடம் முறையிட இறைவன் சன்னதியில் அவரிடம் கொடுத்த வாக்குக்காக அந்த வழக்கை ஏற்று நடத்த ஒப்புக்கொண்டார் சுவாமிநாதன்.

அதில் தான் பிரச்சனை ஆரம்பித்தது. நகரத்தின் பிரபல வழக்கறிஞர் என்பதால் செழியன் சுவாமிநாதனின் இல்லத்திலேயே வந்து அவரைச் சந்தித்தவர் அந்த வழக்கில் தனது சார்பில் வாதாட அவரிடம் வேண்டிக்கொள்ள சுவாமிநாதனோ நியாயத்துக்குப் புறம்பான வழக்கில் தன்னால் ஆஜராக முடியாது என நிர்தாட்சணியமாக மறுத்துவிட்டார்.

அப்போது தான் ஜெகத்ரட்சகனின் எதிர்ப்புக்குரல் முதல் முதலாக எழும்பியது. அந்தப் பெண்ணுக்காக வாதாடுவதால் சல்லிக்காசு பெயராது என்று தெரிந்தும் ஏன் இவ்வளவு சிரமமப்பட வேண்டும்; அதற்கு எம்.எல்.ஏவுக்காக வாதாடினால் பெருந்தொகை கிடைக்குமே என்பது அவரது ஆதங்கம்.

ஆனால் பணத்துக்காக நீதியை விற்கும் எண்ணம் தனக்கு இல்லை என மருமகனிடம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டார். அவ்வாறு இருக்கையில் அவ்வழக்கில் சுவாமிநாதன் தோற்றுப் போனார். அதுவும் அவர் வைத்திருந்த முக்கிய ஆதாரமான செழியன் கையெழுத்திட்ட கோப்பு ஒன்று வீட்டிலிருந்த அவரது அலுவலக அறையிலிருந்து காணாமல் போயிருந்தது.

அந்தக் கோப்பு மட்டும் இருந்திருந்தால் கண்டிப்பாக செழியனுக்குத்  தண்டனை வாங்கிக் கொடுத்திருப்பார். அன்றைய தினம் அவர் வருந்தியது தோற்றதற்கு அல்ல; ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கு நீதி வாங்கித் தர இயலவில்லையே என்பதற்கு தான்.

வீட்டில் அனைவரும் அவரைத் தேற்றிக் கொண்டிருக்கும் போது தான் சிவசங்கர் முந்தைய தினம் தாத்தாவின் அலுவலக அறையில் இருந்து ஜெகத்ரட்சகன் வெளியேறியதைப் பார்த்ததாகச் சொன்னான்.

அந்த அறைக்கு இருப்பது இரண்டு சாவிகள் மட்டுமே. அதில் ஒன்று சுவாமிநாதனிடமும் மற்றொன்று ஜெகத்ரட்சகனிடமும் இருக்கும்.

எனவே தன்னைத் தவிர ஒருவர் அந்த அறையைத் திறக்கவேண்டுமாயின் அது தமக்கையின் மைந்தனாக மட்டுமே இருக்க முடியுமென தீர்க்கமாக நம்பியவர் ஏற்கெனவே செழியன் தனக்குப் பிழைக்கத் தெரியவில்லை என்று சொன்னது, செழியனுக்குப் பரிந்து பேசியது என எல்லாவற்றையும் யோசித்துக் குழம்பிப் பொங்கியெழுந்த சினத்துடன் ஜெகத்ரட்சகனை முதல் முறையாக கைநீட்டி அறைந்துவிட்டார்.

ஜெகத்ரட்சகன் “நான் வேற, தேசிகன் வேறனு நீங்க பிரிச்சுப் பாத்ததே இல்லனு அடிக்கடி சொல்லுவிங்களே! இன்னைக்கு நடந்த இந்த ஒரு சம்பவம் போதும், நீங்க என்னை எந்தளவுக்கு மதிக்கிறிங்கனு எனக்குப் புரிஞ்சு போச்சு. இதுக்கு மேலயும் நான் இந்த வீட்டுல இருந்தா நான் சாப்பாட்டுல உப்பு போட்டுச் சாப்பிடுறேனானு எனக்கே சந்தேகம் வந்துடும்” என்று ஆவேசமாய் உரைத்தவர் அஞ்சனாதேவியைப் பார்க்க அவர் கணவர் பக்கமா தந்தை பக்கமா என குழம்பிக் கண்ணீருடன் தவித்தார்.

ஆனால் காதல் கணவனுடன் கஷ்டகாலத்தில் இருப்பதே ஒரு மனைவியின் கடமை என அன்னையால் மனதில் உருவேற்றப்பட்ட கருத்தின் காரணமாக மகனையும் மகளையும் அழைத்துக் கொண்டு அன்றே ஜெகத்ரட்சகனுடன் சாந்திவனத்தை விட்டு வெளியேறினார்.

அதன் பின்னர் காலமும் ஓடிவிட்டது. ஜெகத்ரட்சகனும் அவருக்கென ஒரு தொழில்தர்மத்தை உருவாக்கிக் கொண்டார். தன்னிடம் வரும் நபருக்கு எது நியாயமோ அதுவே தனக்கும் நியாயம்; தன்னை நம்பி வழக்கை ஒப்படைப்பவருக்கு உண்மையாக இருப்பதே தனது தொழில் தர்மம் என மனதில் பதியவைத்துக் கொண்டவர் மிகவேகமாக வெற்றிப்படியில் ஏறிவிட்டார்.

அஞ்சனாவிலாசம் என்று மகளின் பெயரில் ஜெகத்ரட்சகன் வீட்டைக் கட்டி முடிக்கும் போது சுவாமிநாதன் மகிழ்ந்து தான் போனார். ஆனால் தொழிலில் நியாயமற்று இருக்கும் மருமகனின் செயல்பாடுகளில் இன்று வரை அவருக்கு அதிருப்தி மட்டுமே.

 ஆனால் வயோதிகம் நெருங்குகையில் பிளவுபட்டக் குடும்பம் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்குமென்ற ஏக்கம் அவருக்கும் அவரது மனைவிக்கும் எழுந்த நேரத்தில் பவானி தாத்தா பாட்டியிடம் தான் சிவசங்கரைக் காதலிப்பதாகச் சொல்லிக் கொண்டு வந்து நின்றாள்.

பதினெட்டு வயதில் காதலா என்று முதலில் அதிர்ந்தாலும் பின்னர் அவளுக்குப் புத்திமதி கூறிய தாத்தா பாட்டியிடம்

“நீங்க சொல்லுறத நான் கேக்குறேன்… ஆனா எனக்கு சிவாவ தவிர வேற யாரையும் லைப் பார்ட்னரா ஏத்துக்கிற ஐடியா இல்ல… சோ நான் அவர் கிட்ட பிரபோஸ் பண்ணியே தீருவேன்” என்று சொன்னதோடு சிவசங்கரிடமும் தன் காதலை வெளிப்படுத்தினாள்.

அவனோ “உன் வயசுக்கு லவ் ரொம்பவே அதிகம் பவா… உங்கப்பா என்னை அவரோட மருமகனா ஏத்துக்க மாட்டாரு.. சோ குழந்தை மாதிரி பிஹேவ் பண்ணாம படிப்புல கான்சென்ட்ரேட் பண்ணு” என்று அறிவுரை சொன்னதோடு விட்டுவிட்டான்.

 ஆனால் பேத்தியின் உறுதி சுவாமிநாதனையும் அன்னபூரணியையும் அசைத்து விட்டது. எனவே குடும்பத்தை இணைக்கும் கருவியாக பேரன் பேத்தியின் காதல் இருக்குமென நம்பி அவர்கள் வாழ்வில் இணையும் நாளுக்காய் காத்திருந்தனர்.

அதுவும் நடக்காது போகவும் மனதைத் தேற்றிக் கொண்டு பேத்தியின் திருமணம் நல்ல இடத்தில் முடிவாகியிருக்கும் என எண்ணும் போதே சம்பந்தம் பேசியிருப்பது செழியன் மகனுடன் என்ற தகவல் செவியை அடைய அப்போதே மனதில் அவருக்கு நெருடல் தான்.

ஆனால் நவீன் பவானியை விரும்பி மணக்கக் கேட்டதால் சற்று நிம்மதியுற்றவர் தான் சொன்னாலும் மருமகன் கேட்கப் போவதில்லை என்பதால் வேறு வழியின்றி நிச்சயதார்த்தத்தில் கலந்துகொள்ள சென்றார்.

அங்கே நடந்த கலவரத்தையும் அதைத் தொடர்ந்து மருமகன் தன்னைக் குற்றம் சாட்டியதையும் யோசித்துப் பார்த்தவருக்கு கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

ஆனால் ஜெகத்ரட்சகன் சொன்னதிலும் அர்த்தம் உள்ளது. சிவசங்கர் முன்னரே காவல்துறையில் புகார் தெரிவிக்க மோனிகாவிடம் பேசியிருந்தால் பேத்தி இப்படி சபை முன்னர் தலை குனிந்து நின்றிருக்க மாட்டாளே என்ற ஆதங்கம் அவருக்கும் இப்போது எழுந்தது.

பவானிக்கு நேர்ந்த தலைகுனிவைப் போக்க வேண்டும்; அதே நேரம் பிரிந்த குடும்பமும் ஒன்றிணைய வேண்டும். அதற்கு ஒரே வழி சிவசங்கருக்கும் பவானிக்கும் திருமணம் செய்து வைப்பது தான் என தீர்மானித்தவரின் கண்ணில் இழந்த ஜீவன் திரும்பி வந்தது.

மருத்துவர் உள்ளே வந்தவர் அவரைச் சோதித்துவிட்டு செவிலியிடம் “இவருக்கு ஷாக்ல வந்த ஸ்ட்ரோக் தான்… சோ பயப்படவேண்டாம்னு அவங்க ரிலேட்டிவ்ஸ் கிட்ட இன்ஃபார்ம் பண்ணிடுங்க” என்று சொல்ல சிறிது நேரத்தில் அனைவரும் உள்ளே நுழைந்தனர்.

அன்னபூரணி கணவரைக் கண்டதும் கண்ணீர் உகுக்க ஆரம்பிக்க “பூரணி அழாதம்மா… எனக்கு ஒன்னுமில்ல” என்றவரின் கரத்தைப் பற்றிக் கொண்டார் அவர்.

பவானி தாத்தாவை நோக்கியவள் “ச்சூ… ஏன் பாட்டி இப்போ அழுற? நாதன் இஸ் வெரி ஸ்ட்ராங்… இல்லயா தாத்தா?” என்று சொல்ல அவள் பின்னே நின்ற பாகீரதியும் முயன்று புன்னகைத்தாள்.

அஞ்சனாதேவி தந்தையை நோக்கிக் கண் கலங்கி நின்றவர் பேச முடியாது திகைக்க அவரோ “அஞ்சும்மா கொஞ்சம் இங்க வா” என்றவர் தன் மருமகளையும் அழைக்க லோகநாயகியும் அஞ்சனாவும் அருகே வந்தனர்.

இருவரையும் பார்த்தவர் “இந்தக் கிழவன் ஆசைக்காக ஒன்னே ஒன்னு பண்ணுங்கடாம்மா… எனக்குச் சிவாவையும் பவாகுட்டியையும் வாழ்க்கைல சேர்த்து வைக்கணும்னு ஆசை… உங்களுக்குச் சம்மதமா?” என்று கேட்கவும் இருவரும் முதலில் அதிர்ந்தாலும் பின்னர் புன்னகைத்தனர்.

ஒருமித்தக் குரலில் இருவரும் “அவங்க சேர்ந்தா எங்களுக்கும் சந்தோசம் தான்” என்று சொல்லவும் பவானி மெல்லியதாய் திடுக்கிட அதைக் கண்டும் காணாதது போல இருந்து கொண்டார் அஞ்சனாதேவி.

இந்த முறை தனது தந்தையின் விருப்பத்துக்குச் செவி சாய்க்க முடிவு செய்தவருக்குப் பவானியின் அதிர்ந்த தோற்றம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

லோகநாயகிக்குப் பவானி என்றால் சும்மாவே கொள்ளை இஷ்டம். இப்போது சந்தோசத்துக்குக் கேட்கவா வேண்டும்! செண்பகாதேவிக்கும் பாகீரதிக்கும் கூட மகிழ்ச்சி தான்!

ஆனால் பவானியின் முகமும் வானதியின் முகமும் தான் தெளிவற்று இருந்தது. வானதி தன் அண்ணனின் மனதை அறிந்தவளாய் “ஆனா தாத்தா அண்ணா இதுக்குச் சம்மதிக்கணுமே?” என்று யோசனையுடன் கேட்க

“என் பேரன் என் பேச்சைத் தட்ட மாட்டான்… அவனுக்கும் பவானியை ரொம்ப பிடிக்கும்” என்றார் சுவாமிநாதன் நம்பிக்கையுடன்.

அதைக் கேட்டுப் பெண்கள் அனைவரும் நிம்மதியுற்றாலும் பவானியும் வானதியும் இன்னும் தெளிவற்ற மனதுடன் தான் புன்னகைத்தனர்.

பெண்கள் நிம்மதியாய் மூச்சு விடும் போதே ஞானதேசிகனுடன் உள்ளே வந்தனர் அருணும் சிவசங்கரும். அவர்கள் மூவரைக் கண்டதும் சுவாமிநாதன் சிரிக்க அதைப் பார்த்த பின்னர் தான் மூவருக்கும் போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது.

சுவாமிநாதன் இரு பேரன்களையும் அருகே அழைத்தவர் “தாத்தாவுக்கு ஒன்னுனு வந்ததும் ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்துட்டிங்களே! இதே போல வாழ்க்கை முழுக்க நீங்க ஒற்றுமையா இருக்கிறதுக்கு நான் ஒரு ஏற்பாடு பண்ணிட்டேன்டா என் செல்லங்களா!” என்று புதிராய் முடிக்கவும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள ஞானதேசிகன் மனைவியிடம் என்னவென கண்ணால் வினவினார்.

லோகநாயகி சற்று பொறுக்குமாறு சைகை செய்ததும் அமைதியானவர் தந்தை சொல்ல வருவதைக் கவனித்தார்.

சுவாமிநாதன் தன்னருகே நின்றிருந்த பவானியின் கரத்தைப் பற்றியவர் மற்றொரு பக்கம் நின்றிருந்த சிவசங்கரின் கரத்தை அதோடு சேர்த்து வைக்கவும் இருவரும் அதிர்ந்து விழிக்க அவரோ “உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணலாம்னு நான் முடிவு பண்ணிருக்கேன்” என்றார் சிரித்த முகத்துடன்.

சிவசங்கரின் விழிகள் பவானியை ஆராய அவளோ உணர்வற்ற விழிகளால் அவனை வெறித்தாள். அவளுக்குள் இன்னுமே அவனது வார்த்தைகள் உண்டாக்கிய காயம் ஆறவில்லை.

அப்படி இருக்க அவன் கரம் தனது கரத்தை மூடுவதை விரும்பாதவளாய் மெதுவாய் கரத்தை உருவ முயல, சிவசங்கரின் கரம் அதைத் தடுக்கும் விதமாய் அழுத்தத்துடன் பதியவும் அவள் விதிர்விதிர்த்தாள்.

உடனே தலையுயர்த்தி சிவசங்கரின் பார்வையை எதிர்கொள்ள அவனோ அவளது அதிர்ச்சியைக் கண்டுகொண்டான்.

“எனக்குச் சம்மதம் தாத்தா… ஆனா மிஸ்டர் ஜெகத்ரட்சகன் என்ன சொல்லுவாரோ?” என்று இழுக்க

“அப்பா கண்டிப்பா இந்தக் கல்யாணத்தை வேண்டானு சொல்ல மாட்டாரு சிவா… ஏன்னா அம்மாவோட பேச்சை அவர் என்னைக்குமே தட்ட மாட்டாரு” என்றான் அருண் நம்பிக்கையூட்டும் விதமாய்.

அந்த அறையில் அனைவரின் மனமும் நிறைந்திருக்க பவானி மட்டும் சிவசங்கர் எப்படி திடீரென சம்மதித்தான் என்ற குழப்பமும் அவனது வார்த்தைகள் உண்டாக்கிய கோபமும் கலந்த கலவையாய் நின்றிருந்தாள்.

தொடரும்💘💘💘