💘கண்மணி 5💘

ஜெகத்ரட்சகன் அமைச்சர் செழியன் வீட்டுச் சம்பந்தம் மகளுக்குக் கிடைத்த மகிழ்ச்சியில் உற்சாகத்துடன் காணப்பட்டார். அவருக்கும் செழியனுக்குமான பழக்கம் தொழில்ரீதியான நட்பையும் தாண்டி இன்று இருவரும் சம்பந்திகள் ஆகிவிட்ட பூரிப்பு அவர் முகத்தில் தெள்ளத்தெளிவாய் தெரிந்தது.

அஞ்சனாதேவியும் மகளுக்கு அமையப் போகிற ராஜவாழ்க்கையை எண்ணி மகிழ்ந்திருக்க அருண் மட்டும் நவீனைப் பற்றி யாருமறியாது விசாரிக்க ஆரம்பித்தான். விசாரித்த வரையில் அவனைப் பற்றி யாரும் குறைவாகச் சொல்லாத நிலையில் அவனுக்கும் இச்சம்பந்தத்தில் சம்மதமே!

ஆனால் இதையெல்லாம் நினைத்து யார் மகிழ வேண்டுமோ அந்த பவானியின் வதனம் வாடிக் கிடந்தது. அவளால் எப்படி சிவசங்கரைத் தவிர்த்து வேறு ஒருவனை மணாளனாக கற்பனை செய்ய இயலும்?

தந்தையின் பேச்சுக்கு மறுபேச்சு பேச இயலாத பவானி அந்தப் பேச்சுவார்த்தை நடந்த அன்றே சிவசங்கருக்கு அழைத்து விசயத்தைச் சொல்லிவிடலாம் என்று போனில் அவனைத் தொடர்பு கொள்ள அவனோ போனை எடுக்க விருப்பமற்றவனாய் இணைப்பைத் துண்டித்துவிட பவானி தான் காதலுக்கும் தந்தையின் பாசத்துக்கும் இடையே சிக்கித் தவித்தாள்.

மறுநாள் அலுவலகத்தில் வானதியிடம் இதைச் சொல்லி கலங்கியவளை தேற்றிய வானதி

“நான் அண்ணா கிட்ட உன் நிலமையைச் சொல்லிப் புரியவைக்கிறேன் பவா… நீயும் மாமா கிட்ட உனக்கு அண்ணாவ தான் பிடிச்சிருக்குனு மறைக்காம சொல்லிடுடி.. இல்லனா தேவையில்லாம விசயம் வளந்துட்டே போகும்… கடைசி நேரத்துல மாமா கிட்ட நீ காதல்னு போய் நின்னா அவருக்குக் கோவம் தான் வரும்” என்று சொல்லவும் பவானிக்கும் அதுவே சரியென பட்டது.

வானதி வேறு பவானியின் திருமணவிசயம் கேள்விப்பட்டதில் இருந்து சுவாமிநாதனும் அன்னபூரணியும் முகத்தில் சுரத்தின்றி இருப்பதாகச் சொல்லிவிட அவளால் தாத்தா பாட்டியின் வருத்தத்தைக் கேள்விப்பட்ட பிறகும் அமைதியாக இருக்க முடியவில்லை.

அன்று மாலை வீடு திரும்பும் போது வானதியுடன் சாந்தி நிலையத்தை அடைந்தவளுக்கு வரவேற்பெல்லாம் பலம் தான். கூடிய விரைவில் கல்யாணப்பெண் ஆகப் போகிறாளே! பின்னர் வரவேற்புக்குக் கேட்பானேன்!

லோகநாயகியும் செண்பகாதேவியும் அஞ்சனாவின் மகளுக்கு வந்த அதிர்ஷ்டத்தை எண்ணி மகிழ ஞானதேசிகன் மருமகளை மனதாற ஆசிர்வதித்தார். அங்கு ஜீவனற்ற முகத்துடன் இருந்தவர்கள் சுவாமிநாதன், அன்னபூரணி மற்றும் பாகீரதி மட்டுமே!

மற்ற இருவரையும் என்னென்னவோ சொல்லி சமாதானப்படுத்தினர் வானதியும் பவானியும். ஆனால் பாகீரதியின் சமீபத்திய சோகத்துக்கான காரணம் மட்டும் இருவருக்கும் புரிவேனா என்றது.

அவளிடமே கேட்டுவிடலாம் என்று எண்ணினால் அவள் வாழ்க்கையை வெறுத்துவிட்டது போன்ற முகபாவத்தோடு வெறித்தப் பார்வையுடன் பவானியை ஏறிட்டாள். பின்னர் மாடியில் காற்று வாங்கப் போகிறேன் என கிளம்பிச் சென்றுவிட்டாள்.

வானதிக்கும் பவானிக்கும் அவளது நடவடிக்கை புதிராய் தெரிய செண்பகாதேவியின் காதில் அவளது இம்மாற்றம் பற்றி போட்டு வைத்தனர் இருவரும்.

அவரும் தான் அவளிடம் என்னவென்று கேட்பதாக கூறிவிட்டு லோகநாயகியை அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றுவிட பேத்திகள் இருவரும் தாத்தா பாட்டியுடன் தனித்துவிடப்பட்டனர்.

அன்னபூரணி பவானியின் முகத்தை வருடிக் கொடுத்தவர் “உன் கல்யாணத்தைப் பத்தி எவ்ளோ கனவு வச்சிருந்தேன்… இப்போ திடுதிடுப்புனு ஜெகா இப்பிடி ஒரு முடிவை எடுத்ததுக்கு அப்புறம் நம்ம யாராலயும் அவனைத் தடுக்க முடியாதுல்ல” என்றார் நம்பிக்கையற்ற குரலில்.

பவானி பாட்டியின் கையைப் பற்றிக் கொண்டவள் “ஏன் பாட்டி இப்பிடிலாம் பேசுற? என்னால சிவாவ தவிர யாரையும் மனசால நினைச்சுக் கூட பாக்க முடியாது… அவரே என்னை வெறுத்தாலும் என்னால சிவாவ வெறுக்க முடியாது பாட்டி” என்றாள் உறுதியான குரலில்.

அந்தக் குரலின் உறுதியில் நிம்மதியுற்றனர் சுவாமிநாதனும் அன்னபூரணியும். ஆனால் வானதியோ வேறு விதமாய் சிந்தித்தாள். பவானியின் மனம் பற்றி உள்ளங்கை நெல்லிக்கனி போல அவள் அறிவாள்.

ஆனால் அவளது சகோதரன் இந்த விசயம் பற்றி கேள்விப்பட்டும் எவ்வித பதற்றமுமின்றி அவனது அன்றாட வேலைகளைச் செய்வதைக் கண்டதும் பவானி பற்றிய எந்த அபிப்பிராயமும் அவன் உள்ளத்தில் இல்லை போல என்று ஐயம் கொண்டாள் அவள்.

பவானியும் இன்று சிவசங்கரைப் பார்த்து அவன் மனதிலிருப்பதை கேட்டு உறுதி செய்தே தீருவேன் என்று அங்கேயே அவனுக்காக காத்திருந்தாள்.

எந்தச் சிவசங்கரை வெறுக்க முடியாதென அவள் உறுதியாய் நம்பினாலோ அவனை இன்னும் சிலமணி நேரங்களில் வெறுத்து ஒதுக்கப் போவதை அவள் அப்போது அறிந்திருக்கவில்லை.

*****************

காரை ஓட்டிக் கொண்டிருந்த சிவசங்கரின் மனம் எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தது. அதற்குக் காரணமானவர் ஜெகத்ரட்சகன் தான். ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொள்வதற்காக ஞானதேசிகனுக்கு அழைப்பு விடுக்கப்பட அவரது பணிச்சுமை காரணமாக அவரது மைந்தன் அவருக்குப் பதிலாக பார்ட்டியில் கலந்து கொண்டான்.

அங்கே ஜெகத்ரட்சகன் அவரது மகன் அருணுடன் வரும் வரை அனைத்தும் சரியாகத் தான் போய் கொண்டிருந்தது. அங்கே ஞானதேசிகனை எதிர்பார்த்தவருக்கு கண்ணில் கூர்மை மின்ன நின்றிருந்த சிவசங்கரைக் கண்டதும் மனதுக்குள் எரிச்சல் மூண்டது.

இத்தனைக்கும் அவர் தூக்கி வளர்த்த சிறுவன் தான் அவன். அவனுக்கு இப்பெயரைச் சூட்டியவர் கூட அவர் தான். அதற்கு பொருத்தமாய் மகளுக்கு பவானி என்று பெயர் வைத்துப் பூரித்தவர்.

ஆனால் அவனோ என்றுமே சுவாமிநாதனின் பேரனாக மட்டுமே இருந்தான். பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த அசம்பாவிதத்தின் போது தனக்கு எதிராக அவன் முன் வைத்த வாதங்கள் தான் இன்றளவும் அவர் மனதை ரம்பமாய் மாறி அறுத்துக் கொண்டிருக்கிறது.

அதன் விளைவு அமைச்சருடனான சம்பந்தம் பற்றி சக வழக்கறிஞர் கேட்டதை சாக்காக வைத்து அங்கேயே சிவசங்கரை மறைமுகமாய் தாக்கத் தொடங்கினார்.

“செழியன் சாருக்கும் எனக்கும் பன்னிரண்டு வருச ஃப்ரெண்ட்ஷிப்… இப்போ எங்க பசங்களுக்கு நடக்கப் போற மேரேஜால நாங்க சொந்தக்காரங்களாவும் ஆகப் போறோம்… என் பொண்ணோட அழகு, அறிவு, குணத்துக்கு ஏத்த மாதிரி செழியன் சாரோட மகன் நவீனும் கிரேட் தான்… ரியல் எஸ்டேட் பிசினஸ்ல கொடி கட்டிப் பறக்கிறாரு… அவரைப் பாத்ததும் என் பொண்ணும் சந்தோசமா சம்மதம் சொல்லிட்டா… என் பேச்சை என்னைக்குமே அவ தட்ட மாட்டா கீர்த்திவாசன் சார்”

அவர் சொல்லி முடிக்கும் போது கர்வம் மின்னிய அவரது குரலே பவானி இத்திருமணத்துக்கு மனதாற சம்மதித்து விட்டாள் என்பதற்கு சாட்சியாய் அமைந்தது.

அதற்கு மேல் அங்கே இருக்கப் பிடிக்காதவனாய் வீட்டுக்குச் செல்ல காரைக் கிளப்பினான். கார் சாலையில் செல்லும் போதே அவனது நினைவுகள் பின்னோக்கி சென்றது.

ஆறு வருடங்களுக்கு முன்னர் தன்னிடம் பூவாய் மலர்ந்த முகத்துடன் பிறந்தநாள் பரிசை நீட்டியபடியே தன் காதலை உரைத்த பவானி நினைவுக்கு வந்தாள்.

அதற்கு அவன் சொன்ன மறுப்புகள் அனைத்தையும் தனது ஒற்றை புன்னகையால் தூள் தூளாக்கிவிட்டு அவன் மனதுக்குள் ஒவ்வொரு படியாக ஏறியவள் இன்று அவளது தந்தையின் பேச்சைக் கேட்ட பின்னர் மொத்தமாகக் கீழே இறங்கிவிட்டாள்.

அமைச்சரின் மகனை மணந்தால் ராஜபோக வாழ்க்கை கிடைக்குமே. அதற்கு முன்னர் காதலாவது மண்ணாங்கட்டியாவது! எரிச்சலுடன் எண்ணியவன் எங்கேயும் இடித்துக் கொள்ளாமல் வீடு வந்து சேர்ந்ததே பெரிய விசயம் தான்.

வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் போது பவானியின் குரல் கேட்கவும் முதலில் விதிர்விதிர்த்தவன் பின்னர் இயல்புக்குத் திரும்பி ஹாலுக்குள் நுழைந்தான். அவனைக் கண்டதும் பூவாய் மலர்ந்த அவளது முகத்தில் கள்ளம் கபடம் ஏதுமில்லை.

ஒருவேளை தந்தையிடம் இருந்து முகபாவத்தை மறைக்கும் வித்தையையும் கற்றிருப்பாள் என எண்ணியவனாய் அவளிடம் அலட்சியம் காட்டி மாடிப்படிகளில் ஏறி மறைந்தான் சிவசங்கர்.

பவானி முகம் சுருங்கியவள் பின்னர் சமாளித்துக் கொண்டு “நீங்க மூனு பேரும் இங்கயே இருங்க..  நான் சிவா கிட்ட பேசி நல்ல முடிவோட வர்றேன்” என்று சொல்லிவிட்டுப் படியேறினாள்.

நேரே அவனது அறைக்குள் நுழைந்தவள் அவனைத் தேட அவனோ டீசர்ட்டுக்கு மாறியிருந்தவன் “வாங்க மேடம்! இப்போ எங்க வீட்டுக்கு சுவாமிநாதனோட பேத்தியா செல்லம் கொஞ்ச வந்திங்களா? இல்ல மினிஸ்டரோட வருங்கால மருமகளா சீன் கிரியேட் பண்ண வந்திங்களா?” என ஏளனமாய் வினவ பவானிக்குச் சுருக்கென்றது.

இருப்பினும் “ரெண்டும் இல்ல..  உங்க மனசுல என்னைப் பத்தி என்ன நினைக்கிறிங்கனு தெரிஞ்சுக்க வந்தேன்” என்றாள் அமைதியாக.

சிவசங்கருக்கு பார்ட்டியில் ஜெகத்ரட்சகன் பேசிய வார்த்தைகள் நினைவுக்கு வரவே அடக்கி வைத்திருந்த மொத்தக் கோபத்தையும் அவளிடம் கொட்ட ஆரம்பித்தான்.

“உன்னைப் பத்தி நினைக்கிற அளவுக்கு நீ எனக்கு முக்கியமானவ இல்ல பவானி… நான் அடியோட வெறுக்குற ஜெகத்ரட்சகனோட பொண்ணு நீ… பதினெட்டு வயசுல காதல் கீதல்னு அசட்டுத்தனமா பேசுனப்போ இன்னும் குழந்தைத்தனம் போகலனு நினைச்சேன்… இருபத்திநாலு வயசுல என் விரல்ல மோதிரம் மாட்டிவிட்டப்போ கொஞ்சம் தடுமாறிட்டேன்! ஆனா பாம்புக்குப் பிறந்தது பாம்பா மட்டும் தான் இருக்கும்னு இன்னைக்குப் புரிஞ்சுகிட்டேன்…”

அவனது பேச்சு பவானிக்கு நியாயமற்ற குற்றச்சாட்டாக தெரிய “லுக் சிவா! நீங்க எதோ தப்பா புரிஞ்சுகிட்டு பேசுறிங்க… நான் உங்களை காதலிச்சது நிஜம்” என்றவளின் பேச்சில் குறுக்கிட்டான் அவன்.

“ஓ! ‘காதலிச்சதா’… ம்ம்.. பாஸ்ட் டென்ஸ் யூஸ் பண்ணுறப்போவே தெரியுது… இப்போ உன் மனசுல காதல் இல்லனு… குட்… தெளிவா கேட்டுக்கோ பவானி… என் மனசுல உன் மேல எந்தக் காதலும் இப்போ வரைக்கும் இல்ல… இனியும் வர வாய்ப்பு இல்ல… எனக்கு உன் கிட்ட பேசவோ உன் முகத்த பாக்கவோ கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல… கெட் அவுட்” என்று சீறியவனின் கோபம் அவளுக்குள்ளும் கோபத்தீயை மூட்டியது.

தந்தைக்கும் அவனுக்குமான தொழில் ரீதியான மோதலில் முதலில் தன்னை தவறாய் எண்ணியவன் இப்போது வெறுக்கவே ஆரம்பித்து விட்டான் என்று எண்ணியவளுக்கு மனமெல்லாம் மீண்டும் ரணமானது.

கடந்த ஆறு ஆண்டுகளில் இது வரை அவளின் காதல் சாத்தியப்படாது என்று மட்டுமே சொன்னவனின் வாயிலிருந்து அவளது முகத்தில் விழிக்க கூட இஷ்டமில்லை என்ற வார்த்தையைக் கேட்ட பின்னர் அவளுக்கும் அவனிடம் தணிந்து பேச வேண்டுமென தோணவில்லை.

பேச வந்த வார்த்தைகள் தொண்டையிலேயே சமாதியாகிவிட அமைதியாய் அங்கிருந்து வெளியேற எத்தனித்தவளை “ஒரு நிமிசம்” என்று சொல்லி நிறுத்தியது சிவசங்கரின் குரல்.

அவள் திரும்பிப் பார்க்கவும் டிரஸ்சிங் டேபிள் மீதிருந்த மோதிரத்தை எடுத்து வந்தவன் அவளது கையில் திணித்து

“இதை மினிஸ்டர் செழியனோட மகன் கிட்ட குடுத்து என் கிட்ட பேசுன அதே லவ் டயலாக்கைப் பேசு… உன் வருங்கால புருசன் கண்டிப்பா மயங்கிடுவான்” என்க, அவனது குத்தல் பேச்சில் விலுக்கென நிமிர்ந்தவளின் கண்ணில் கண்ணீர் நிரம்பி நின்றது.

ஆனால் அவன் முன்னிலையில் அழுவதற்கு சுயமரியாதை இடம் தரவில்லை. உணர்வற்ற பார்வையுடன் அவனை வெறித்தவள் மௌனமாய் அங்கிருந்து வெளியேறிவிட்டாள்.

கீழே அவளுக்காக காத்திருந்த தோழியிடமோ, தாத்தா பாட்டியிடமோ எதுவும் பேச விரும்பாதவளாய் வேகமாய் வெளியேறியவள் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு சாந்திவனத்தை விட்டு வெளியேறினாள்.

அவள் தரிப்பிடத்தில் ஸ்கூட்டியை எடுக்கும் முன்னர் கண்ணீரைத் துடைத்துக் கொண்டதை ஜன்னல் வழியே பார்த்த சிவசங்கருக்கு மனம் வலித்தது.

ஆனால் அந்த வலியை விட கோபம் பெரிதாய் விஸ்வரூபமெடுத்திருக்க அவளைக் காண விரும்பாதவனாய் தனது அறையை விட்டு வெளியேறி ஹாலுக்கு வந்தவன் அங்கே தவிப்புடன் அமர்ந்திருந்த தங்கையையும், தாத்தா பாட்டியையும் ஏறிட்டான்.

“ஜெகத்ரட்சகனோட பொண்ணுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல… இனியும் நீங்க அர்த்தமில்லாம கனவு காண வேண்டாம்… அவ இப்போ மினிஸ்டர் செழியனோட வருங்கால மருமகள் ஆகப் போறா… கல்யாணத்துக்கு அவ சம்மதம் சொல்லிட்டதா ஜெகத்ரட்சகனே பார்ட்டில சொல்லிட்டாரு” என்று மனப்பாடம் செய்து ஒப்பிப்பவனை போல சொன்னவன் தோட்டத்தை நோக்கிச் சென்றுவிட்டான்.

மூவரும் என்னென்னமோ எண்ணியிருக்க நடந்தது அனைத்தும் அதற்கு எதிர்மறையாய் இருந்தது. தன்னை அடியோடு வெறுத்துவிட்டான் என பவானி சிவசங்கரைப் பற்றி தவறாய் புரிந்து கொள்ள, அவனோ ஜெகத்ரட்சகனின் மகள் ஒரு சந்தர்ப்பவாதி என்று தனது மனதில் பதிய வைத்துக்கொள்ள விதி எனும் கதாசிரியனோ இவர்களின் காதல் கதையில் அடுத்தத் திருப்பத்தை எழுதுவதில் தீவிரமாய் இறங்கியிருந்தான்.

தொடரும்💘💘💘