💘கண்மணி 4💘

அஞ்சனா விலாசம்

அன்று வார விடுமுறை நாள் என்பதால் பவானி மிகவும் தாமதமாக தான் கண் விழித்தாள். முந்தையநாளின் சம்பவங்கள் உண்டாக்கிய சோகம் மனதில் இன்னும் மிச்சமிருந்தது.

சோர்வாய் எழுந்து அமர்ந்தவளின் கரம் படுக்கையின் அருகே கிடந்த மேஜையின் அறையிலிருந்து ஒரு டைரியை எடுத்தது. அளவில் சற்று பெரியது தான். கிட்டத்தட்ட ஆறு வருடத்தின் முக்கிய நினைவுகளை உள்ளடக்கிய பொக்கிஷம் அல்லவா!

அதன் பக்கங்களில் இருப்பது வெறும் எழுத்துக்கள் அல்ல! பதின்பருவத்தின் முடிவில் அவள் மனதில் சிவசங்கரின் மீது அரும்பிய காதலின் இனிய நினைவுகள் அவை.

அவன் மீது காதல் துளிர் விட்டது, அது அரும்பாய் மாறி மலராய் விரிந்தது என ஒவ்வொன்றாய் படித்தவளுக்கு நேற்றைய தினத்தில் அவன் அள்ளி வீசிய வார்த்தைகள் ரம்பமாய் மாறி இதயத்தை அறுக்கத் தொடங்கியது.

என்ன தான் அவள் காதலித்தாலும் தாத்தாவும் பாட்டியுமாய் அந்த வயதில் சொன்ன வார்த்தைகளே தனக்கும் சிவசங்கருக்குமான உறவு வருங்காலத்தில் வலுப்பட வேண்டும் என அவள் எண்ணியதற்கு முக்கியக் காரணம்.

“நம்ம குடும்பம் ஒரு காலத்துல எவ்ளோ ஒற்றுமையா இருந்துச்சுனு நியாபகம் இருக்கா பவாகுட்டி? அதே ஒற்றுமையோட நம்ம மறுபடியும் ஒன்னு சேரணும்னா அதுக்கு நீயும் சிவாவும் தான் மனசு வைக்கணும்டா… நீயும் சிவாவும் வாழ்க்கைல ஒன்னு சேந்திங்கனா அது நம்ம குடும்பத்த ஒன்னு சேர்த்திடும்டா”

அனைவரும் ஒரு குடும்பமாய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்போது அவளுக்குத் தோணியது என்னவோ தனது காதல் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்த்துவிடும் என்பது தான். அந்த ஒரு காரணம் தான் ஆறு ஆண்டுகள் சிவசங்கரின் பதிலுக்காக அவளைக் காத்திருக்க வைத்தது.

ஆனால் முதல் முறையாக தான் காத்திருப்பது வெறும் கானல் நீருக்குத் தானோ என்ற சந்தேகம் வரவும் கண்ணில் நீர் நிரம்பியது. அந்தக் கலங்கிய கண்களினூடே டைரியில் ஒட்டியிருந்த சிவசங்கரின் புகைப்படத்தைப் பார்த்தவள் “நீங்க எப்போ என்னோட காதலைப் புரிஞ்சிப்பிங்க சிவா?” என்று ஏக்கமாய் கேட்டபடி டைரியை மீண்டும் மேஜையறைக்குள் பத்திரப்படுத்தினாள்.

பின்னர் குளியல் சாப்பாடு என அனைத்தும் தாமதமாகவே நடந்தது. பத்து மணி வாக்கில் அஞ்சனாவிலாசத்திற்குள் அடியெடுத்து வைத்தாள் வானதி.

அண்ணனின் நேற்றைய பேச்சு தோழியைப் பாதித்திருக்கும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். கூடவே அவர்கள் வாழ்வில் இணைந்தால் இரு குடும்பமும் இணைவது சுலபமாகிவிடுமென்பது தாத்தா பாட்டியைப் போல அவளுக்குள்ளும் உதயமான எண்ணம் தான்.

இனி தங்களின் வீட்டுக்கு வர மாட்டேன் என்று சொல்லிவிட்டுப் போனவளைச் சமாதானம் செய்ய அவளை அனுப்பி வைத்திருந்தனர் அம்முதியத் தம்பதியினர்.

வீட்டுக்குள் அடியெடுத்து வைத்ததும் அவள் பார்வையில் விழுந்தார் ஜெகத்ரட்சகன்.

“என்ன மாமா ஹாலிடேய என்ஜாய் பண்ணுறிங்க போல?” என்று இலகுவாய் கேட்டபடி வந்தவளை மலர்ச்சியுடனே அவரும் வரவேற்றார். அவரது கோபம் எல்லாம் அவள் வீட்டுப் பெரியவர்கள் மீதும், சிவசங்கர் மீதும் தானே தவிர வானதியை அவருக்கு எப்போதுமே பிடிக்கும்.

“எங்கடா என்ஜாய் பண்ணுறது? கேஸ் ஃபைல் தான் பாக்குறேன் குட்டிமா”

“ஏன் மாமா இவ்ளோ சிரமப்படுறிங்க? உங்க பையனை இதை பாக்கச் சொல்லிட்டு ரெஸ்ட் எடுங்க… உங்களை வேலை பாக்க வச்சிட்டு அவரு என்ன நெட்டி முறிக்கிறாராம்?”

ஜெகத்ரட்சகனிடம் கண்ணை உருட்டிப் பாவனையுடன் பேசிக் கொண்டிருந்தவளின் குரல் கேட்டு அஞ்சனாவும் வந்துவிட அத்தை மாமாவின் உரையாடலில் வந்த விசயத்தை மறந்தே விட்டாள் வானதி.

பின்னர் நினைவு வந்தவளாய் “மாமா உங்க பிரின்சஸ் எங்க போனா?” என்று கேட்க ஜெகத்ரட்சகன் மாடியில் இருக்கும் அவளது அறையை ஆட்காட்டிவிரலால் சுட்டிக் காட்டிவிட்டு

“அவ முகம் நேத்து நைட்ல இருந்து சரியில்லடா குட்டிமா… அவ அப்பிடி இருக்கிறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றார் கவலையுடன்.

அந்த நிமிடம் இவரா அண்ணன் சொல்லுவது போல நியாய தர்மத்தைக் கடாசும் மனிதர் என்று ஒரு நொடி யோசித்தவள் பின்னர் பவானியின் கூற்றுப்படி ஒரு மனிதரின் தொழிலையும் அவரது சொந்தவாழ்க்கையையும் குழப்பிக் கொள்ள கூடாது என தீர்மானித்தாள்.

“நான் வந்துட்டேன்ல… இனிமே உங்க பிரின்சஸ் கலகலனு சில்லறைய சிதற விட்ட மாதிரி சிரிப்பா.. வெய்ட் அண்ட் வாட்ச் மாமா” என்றபடி மாடிப்படிகளில் துள்ளலுடன் ஏறிச் சென்ற பெண்ணை ஜெகத்ரட்சகனின் விழிகள் வாஞ்சையுடன் வருடிவிட்டு மீண்டும் கையிலுள்ள கோப்பில் பதிய அஞ்சனாதேவி மீண்டும் கணவரின் செய்கைக்கான அர்த்தம் புரியாதவராய் பாதியில் விட்ட புத்தகத்தைப் படிக்க சென்றுவிட்டார்.

வானதி பவானியின் அறைக்குள் நுழைந்தவள் தோழியின் முகம் வாடிப் போயிருப்பதைக் கவனித்தவளாய் அவளருகே சென்று தொப்பென்று அமர அவள் அப்போது தான் வானதியைக் கவனித்தாள்.

“என்ன மேடம்? ஏன் இப்பிடி ஒரேயடியா அழுது வடியுறிங்க?” என்ற தோழியின் கேள்வியில் முகம் சுருக்கியவள்

“எல்லாத்துக்கும் உன்னோட அண்ணா தான் காரணம்… யாரும் பண்ணாததையா நான் பண்ணிட்டேன்? நேத்து நான் நியாபகமறதில வண்டியோட பேப்பர்ஸ் எதையும் எடுத்துட்டு வரலடி… போலீஸ் கிட்ட அப்பா நேம் சொல்லி தப்பிச்சிருக்கலாம்… ஆனா நான் அப்பிடி செய்ய விரும்பல… இன்னும் குழந்தை மாதிரி அப்பா பேரை சொல்லி தப்பிக்க எனக்கு பிடிக்கல… அதான் நான் அப்பிடி பண்ணுனேன்… நான் செஞ்சது தப்பாவே இருக்கட்டும்… அதுக்குனு அப்பாவுக்குத் தப்பாத பொண்ணு அது இதுனு பேசி என்னை இவ்ளோ அவமானப்படுத்திருக்க வேண்டாம்…

எங்கப்பா அவரை நம்புன கிளையண்டுக்கு எது நியாயமோ அதை தான் பண்ணிருக்காரு… தொழில்ல வெற்றி தோல்வி சகஜம் தானே நதி! இதைப் புரிஞ்சிக்காம அப்பாவ வாய்க்கு வந்தபடி பேசுனதும் எனக்குப் பிடிக்கலடி” என்று கசந்த குரலில் உரைக்க வானதி அவளைச் சமாதானம் செய்ய ஆரம்பித்தாள்.

“சின்ன வயசுல இருந்தே அண்ணாவுக்குத் தாத்தாவோட சொல் தான் வேதவாக்கு.. அதுப்படி பாத்தா மாமா செஞ்ச வேலை அவனுக்குப் பிடிக்காம போயிருக்கலாம்… அண்ணா எல்லா விசயத்துலயும் நீதி நேர்மைனு பாக்குற ஆளுனு நான் சொல்லி உனக்குத் தெரியணுமா?”

“உன் அண்ணா நீதிமானாவே இருக்கட்டும்… நானும் எங்கப்பாவும் குத்தம் குறையுள்ள சராசரி மனுசங்க தான் நதி… அவரோட பிரின்சிபிள்ஸ் படி நாங்க மோசமானவங்களாவே இருந்துட்டு போறோம்… நான் அவரை ரொம்பவே காதலிச்சிட்டேன் நதி… அதான் அவரோட ஒவ்வொரு வார்த்தையும் கத்தியால குத்துன மாதிரி இருக்கு”

வானதிக்கு அவளின் நிலமை புரிந்தது. எனவே ஒரேயடியாக அண்ணனுக்கு ஆதரவாக பேசாது அவள் மீது தன் குடும்பத்தினர் வைத்திருக்கும் அன்பைச் சுட்டிக்காட்டி பேசவும் பவானி கொஞ்சம் மனம் தெளிந்தாள்.

“அண்ணாவுக்கு நீதி நேர்மை பெருசா தெரியலாம்… ஆனா எனக்கு, சின்னத்தைக்கு, அம்மாவுக்கு உன்னோட அன்பு தான் பெருசு பவா… நீ வீட்டுக்கு வர மாட்டேனு சொன்னதும் தாத்தாவும் பாட்டியும் எவ்ளோ ஃபீல் பண்ணுனாங்க தெரியுமா? எங்களுக்காக பழையபடி நீ மாறக்கூடாதா?”

கண்ணில் அன்பையும் ஏக்கத்தையும் காட்டி கேட்ட தோழியின் பாசத்துக்கு முன்னே தனது பிடிவாதம் அர்த்தமற்று தெரிய அவளைக் கட்டிக்கொண்டாள் பவானி.

அந்த அணைப்பில் தோழி சமாதானம் ஆகிவிட்டதை அறிந்தவள் “ஓகே! அழுகாச்சி சீன்ஸ் எல்லாம் ஓவர்… இப்போ கிளம்பு… ரெண்டு பேரும் ஸ்பென்சர்ஸ், பீனிக்ஸ்னு சுத்திட்டு வரலாம்” என்று அவளை அவசரமாக கிளப்பி தன்னோடு அழைத்துச் சென்றாள்.

இருவருக்குமே ஷாப்பிங் என்றால் கொள்ளை இஷ்டம் தான். ஆனால் அதை விட விண்டோ ஷாப்பிங்கில் தான் ஆர்வம் அதிகம். அந்தப் பெரிய பல்கடை அங்காடியில் நுழைந்தவர்களுக்கு அங்கே நடமாடிய மனிதர்களையும் வரிசையாய் இருந்த கடைகளையும் அங்கே குவிந்திருந்த பொருட்களையும் கண்டு மனம் இதம் கொண்டது.

மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு மாறிய பவானி பழைய கலகலப்பை முகத்தில் பூசிக் கொண்டபடி வீட்டை அடைந்தாள். ஆனால் அங்கே அவளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

பவானியும் வானதியும் வீடு திரும்பும் போது ஜெகத்ரட்சகன் மகிழ்ச்சியில் பூரித்துப் போனவராய் மகளுக்காய் காத்திருந்தார்.

அவள் உள்ளே நுழைந்ததும் ஜொலிப்புடன் நின்றிருந்த அன்னையையும் தந்தையையும் கண்டவள் என்ன விசயம் என்று வினவ

“மினிஸ்டர் செழியனோட பையன் நவீன் உன்னை சோழால நடந்த பார்ட்டில பாத்திருக்காராம் பவாகுட்டி… செழியன் சாரும் அவங்க ஒய்பும் உன்னை முறைப்படி பொண்ணு கேட்டு வரவானு கால் பண்ணுனாங்க… நாங்க சந்தோசமா வரச் சொல்லிட்டோம்டா” என்றார் ஜெகத்ரட்சகன் முகம்கொள்ளா புன்னகையுடன்.

அஞ்சனாதேவியின் முகமும் மலர்ந்திருக்க வானதியும் பவானியும் தான் திகைத்துப் போய் நின்றனர். ஜெகத்ரட்சகன் மகளின் அதிர்ச்சியை வெட்கம் என்று தப்பர்த்தம் எடுத்துக் கொண்டதோடு வானதி வந்த நேரம் மகளுக்கு நல்ல சம்பந்தம் கிடைத்திருக்கிறது என்று அவளையும் இணைத்துக் கொள்ள வானதியால் அந்தச் சந்தோசத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.

அவள் மனதில் சிவசங்கரும் பவானியும் தம்பதியாய் வலம் வந்த நிலையில் இப்போது வேறு ஒருவனுடன் அவனுக்குத் திருமணப்பேச்சு என்றால் எப்படி அவள் மனம் இதை ஒத்துக்கொள்ளும்?

ஆனால் பவானியோ முகத்தில் எவ்வித உணர்வையும் காட்டாது தந்தைக்காகச் சிரிக்க முயன்றாள். அதே நேரம் சிவசங்கரின் குரல் “அப்பனுக்குத் தப்பாத பொண்ணு” என்று அழுத்தமாய் அவள் செவியில் ஒலித்தது.

அவளும் வானதியும் எதிர்மறையாய் ஏதும் பேசாது அஞ்சனா கொடுத்த இனிப்பை உண்டு முடித்தனர். அப்போது அருண் ஒரு வழக்கு தொடர்பாக வெளியே சென்றிருந்தவன் வீடு திரும்பினான். அவனைக் கண்டதும் வானதி முகத்தைச் சீர்படுத்திக் கொண்டாள்.

ஏனெனில் முகபாவத்திலேயே மனதைப் படிப்பதில் தன் அண்ணன் வல்லவன் என பவானி அடிக்கடி கூற கேட்டிருக்கிறாளே! அவனிடம் இனிப்புக்கிண்ணம் நீட்டப்பட சாவகாசமாய் அமர்ந்து கரண்டியில் அள்ளி வாயில் போட்டபடி வானதியை ஆராய்ச்சிப்பார்வையுடன் நோக்கினான்.

அவனது குத்தீட்டிப் பார்வை வழக்கம் போல வானதியைக் கூறு போட அவளோ அசௌகரியமாய் உணர்ந்தவள் அத்தை வீட்டாரிடம் விடை பெற்றுக் கிளம்பினாள்.

அருண் ஸ்கூட்டியுடன் அஞ்சனாவிலாசத்தை விட்டு வெளியேறிவளின் முதுகை வெறிக்க ஆரம்பித்தவன் மனதுக்குள்

“இவ ஃபேஸ் சரியில்லையே! எப்போவும் போல நம்மள கண்டுக்காத மாதிரி இருந்தாலும் அம்மாவும் அப்பாவும் பேசுன விசயத்தை விதியேனு கேட்ட மாதிரி ரியாக்ட் பண்ணுனாளே… சம்திங் இஸ் ராங் அருண்” என்று சொல்லிக் கொண்டான்.

அதே நேரம் சாந்திவனத்தில் பேரனைச் சமாதானம் செய்து கொண்டிருந்தார் சுவாமிநாதன்.

“அவ சின்னப்பொண்ணுடா கண்ணா! உன் கிட்ட தேசிகனோட நேர்மை ஒட்டிக்கிட்ட மாதிரி தானே அவளுக்கும் ஜெகாவோட குணம் இருக்கும்… பவா எடுத்துச் சொன்னா கேட்டுக்கிற டைப் தான்”

“அவங்கப்பாவ பத்தி சொன்னா அவ காதுல போட்டுக்க மாட்டா தாத்தா… நீங்களும் பாட்டியும் என்னன்னமோ கனவு காணுறிங்க… அது எதுவுமே பலிக்கப் போறது இல்ல… ஒரு சின்ன விசயத்துல கூட ஜெகத்ரட்சகனை பிரதிலிபலிக்கிற அந்த பவானி என் வாழ்க்கைல என்னைக்குமே வர முடியாது”

சிவசங்கரின் தீர்மானக்குரல் சுவாமிநாதனுக்குள் ஏமாற்றத்தை துளிர வைத்தது என்றால் அஞ்சனாவிலாசத்திலிருந்து திரும்பிய வானதி சொன்ன பவானிக்கு பார்த்த மாப்பிள்ளையைப் பற்றிய செய்தி அந்த ஏமாற்றத்தை மரமாய் வளர்த்துவிட்டது.

மொத்தக் குடும்பமும் அதைக் கேட்டு மகிழ்ந்து தான் போயினர். ஏனெனில் சிவசங்கருக்கும் பவானிக்கும் முடிச்சு போடும் எண்ணமுள்ளவர்கள் சுவாமிநாதன் அன்னபூரணி தம்பதியினரும், வானதியும் தான்.

மற்றவர்களோ பிரிந்திருந்தாலும் தங்கள் வீட்டுப்பெண்ணின் மகளுக்கு நல்ல வரன் அமையட்டும் என்று மனதுக்குள் கடவுளிடம் வேண்டிக்கொண்டனர்.

அரிஞ்சயனுக்கும் இதில் மகிழ்ச்சி தான். இனி தன் மகளுக்கும் மைத்துனர் மகனுக்கும் திருமணம் பேசுவதில் தடையில்லை என்ற ஆறுதல் அவருக்கு.

சிவசங்கர் தங்கையின் முகம் வாடியிருப்பதைக் கண்டவன் அவளையும் தாத்தா பாட்டியையும் அர்த்தபுஷ்டியுடன் நோக்கினான்.

“நேத்து என் கிட்ட அவ பேசுன வசனம் எல்லாம் இப்போவும் நியாபகம் இருக்கு… ஆறு வருசக்காதல்… ம்ம்” என்று நக்கலாய் சிரித்தவன்

“அவ ஜெகத்ரட்சகனோட பொண்ணு… வாழ்க்கைல பெஸ்ட் ஆப்சன் கிடைக்கிறப்போ அதை யூஸ் பண்ணிப்பாளே தவிர வேஸ்ட் பண்ண மாட்டா” என்று சொல்லிவிட்டு தனது அறைக்குள் சென்று அடைபட்டான்.

கணினியின் திரையை உயிர்ப்பித்து அமர்ந்தவனுக்கு திரையில் விண்டோசின் அடையாளம் தெரிவதற்கு பதில் பவானியின் “எஸ் ஃபார் சிவா அண்ட் பி ஃபார் பவா… சிவா வெட்ஸ் பவா… கேக்கவே செமயா இருக்குல்ல..” என்று குதூகலித்த பூமுகம் தான் தெரிந்தது. இனி அவனால் கணினியில் கண் பதிக்க இயலாது. டிரஸ்சிங் டேபிளில் கிடந்த மோதிரத்தை நோக்கியவனின் மனதில் இனம் புரியாத வெறுமை சூழ ஏன் தான் இப்படி உணர்கிறோமென புரியாதவனாய் அமர்ந்திருந்தான் சிவசங்கர்.

தொடரும்💘💘💘