💘கண்மணி 30💘 (Final & Epilogue)

ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர்…

ஆண்டுகள் கடந்தாலும் அதே கம்பீரத்துடன் நின்று கொண்டிருந்தது அந்தச் சிவாலயத்தின் ராஜகோபுரம். அன்று ஆருத்ரா தரிசனம் காண பக்தகோடிகள் கோயிலில் குழுமியிருக்க அவர்களோடு சேர்ந்து நடராஜப்பெருமானை தரிசித்துக் கொண்டிருந்தனர் சுவாமிநாதனும் அன்னபூரணியும்.

அர்ச்சகர் கிடைத்த இடைவெளியில் சுவாமிநாதனை அணுகியவர் “என்ன சுவாமிநாதன் சார் இன்னைக்குப் பேத்திய அழைச்சிண்டு வரலயா? எப்போவும் உங்க ரெண்டு பேரோட ஒட்டிண்டு வருவாளே! குழந்தைக்கு எக்சாமா?” என்று விசாரிக்க

அன்னபூரணி இல்லையென மறுத்துவிட்டு “அவளுக்கு கூட்டம் ஆகாது அர்ச்சகரே… அதான் தல விருட்சம் பக்கத்துல இருக்கிற படிக்கட்டுல உக்காந்துருக்கா” என்று சொல்ல

“குழந்த தனியாவா இருக்கறா? இன்னைக்கு பக்தாள் கூட்டம் அள்ளற நாளாச்சே அன்னபூரணிம்மா” என்று அவர் தயங்கவும்

“அவளும் அவளோட பார்த்தியும் சேர்ந்து தான் இருக்காங்க” என்றார் சுவாமிநாதன் அவரிடம்.

“ஓ! உங்க பேரனும் வந்திருக்கானா? பிள்ளையாண்டானை பாத்து ரொம்ப நாள் ஆகறது… அவன் வழக்கமா கோயிலுக்கு வர மாட்டானு சொல்லுவேளே”

“அவனோட அம்மா தான் சுபிய பாத்துக்கனு சொல்லி அனுப்பிச்சு விட்டா”

அவர்களின் உரையாடல்களுக்கு இடையே அபிசேகங்கள் யாவும் முடிய தரிசனம் முடிந்து பேரன் மற்றும் பேத்தி அமர்ந்திருந்த இடத்துக்குச் சென்றனர் சுவாமிநாதனும் அன்னபூரணியும்.

இருவரும் அதே கற்படிக்கட்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.

அன்னபூரணியும் சுவாமிநாதனும் அவர்கள் அருகே அமர பாட்டியின் வியர்வையைத் துடைத்துவிட்டான் பேரன் பார்த்திபன், சிவசங்கர் மற்றும் பவானியின் ஐந்து வயது மகன்.

அதே நேரம் தாத்தாவிடம் விபூதி பூசுவதற்காக நாசியின் மீது கை குவித்து கண் மூடி அமர்ந்திருந்தாள் பேத்தி சுபத்ரா, அருண் மற்றும் வானதியின் நான்கு வயது புதல்வி. சுவாமிநாதன் சதாசிவனை நினைத்தபடி அவள் நெற்றியில் விபூதியைப் பூசி விட்டவர் பார்த்திபனுக்கும் பூசிவிட்டார்.

பின்னர் சற்று நேரம் கொள்ளுப்பேரன் மற்றும் கொள்ளுப்பேத்தியுடன் அங்கேயே அமர்ந்திருந்தனர் வயோதிகர்கள் இருவரும். இந்த ஆலயம் தான் இத்தனை வருடங்களில் அவர்களின் எத்தனையோ வேண்டுதல்களுக்குப் புகலிடமாகி இருக்கிறது. குடும்பம் ஒன்று சேர்ந்ததிலிருந்து பவானிக்கும் சிவசங்கருக்கும் திருமணம் நடந்தது வரை அனைத்துமே இந்த ஆலயத்தில் உறைந்திருக்கும் சதாசிவனின் அருளால் நடந்ததாகவே நம்பினர் அந்த வயோதிகத் தம்பதியினர்.

அதன் பின்னர் கொள்ளுப்பேரன் பிறந்தது, வானதி – அருண் திருமணம், சுபத்ரா பிறந்தது, ஈஸ்வருக்கும் பாகீரதிக்கும் மணமாகி அவர்களுக்கு வாசுதேவ் பிறந்தது என எல்லாமே இந்த ஈசனின் அருள் தான் என்று எப்போதும் நினைப்பது போல அன்றும் நினைத்துக் கொண்டனர்.

பின்னர் நேரமானதால் குழந்தைகள் ஒரே குரலில் “வீட்டுக்குப் போவோம் தாத்தா” என்று சொல்லவும் இருவரும் அவர்களை அழைத்துக் கொண்டு கிளம்பினர்.

************

அஞ்சனாவிலாசம்

“நதி இன்னுமா ரெடியாகல? டைம் ஆகுதுடி” என்று பரபரத்தான் அருண். அவனது வழக்கமான வெள்ளை சட்டை மற்றும் கருப்பு பேண்ட்டில் ரெடியானவன் இன்னும் அரை மணி நேரத்தில் நீதிமன்ற வளாகத்துக்குள் நின்றே ஆக வேண்டும். ஆனால் அவனது தர்மபத்தினி வானதி இன்னும் தயாராகி கொண்டிருக்கிறாள்!

“இதோ வந்துட்டேன் அருண்… சில்க் ஷேரி கட்டுறது எவ்ளோ கஷ்டம்னு உங்களுக்கு எப்பிடி தெரியப்போகுது? சும்மா ஷேர்ட்டையும் பேண்ட்டையும் மாட்டிக்கிற மாதிரியா இது? ஃப்ளீட்ஸ் ஒழுங்கா வரலனா என்னோட ஷேரி லுக்கே ஸ்பாயில் ஆயிடும்” என கவலையும் ஆதங்கமுமாக ஒலித்தது வானதியின் குரல்.

அதே நேரம் அஞ்சனாதேவி பட்டாடை பூண்டு அளவாய் அணிகலன்கள் அணிந்து தயாரானவர் ஜெகத்ரட்சகனிடம் “நாங்க எல்லாரும் அப்பா வீட்டுல இருந்து மண்டபத்துக்குப் போயிடுவோம்… நீங்க, அண்ணன், அருண், சிவா, அப்புறம் உங்க சகலை அஞ்சு பேரும் மதியச்சாப்பாட்டுக்காச்சும் வந்துடுங்க… இல்லனா ஈஸ்வரோட அம்மா வருத்தப்படுவாங்க” என்று கட்டளையிட

அலுவலகம் செல்லும் உடையில் நின்ற ஜெகத்ரட்சகன் “கண்டிப்பா வந்துடுவோம் அஞ்சும்மா… இன்னைக்கு எங்களுக்கு பார் கவுன்சில்ல மீட்டிங்… இல்லனா உங்களுக்கு முன்னாடியே நாங்க மண்டபத்துக்குப் போயிருப்போம்… ஆமா உன் மகன் இன்னும் ரெடியாகலயா? அவனுக்கு இன்னைக்கு ஹியரிங் இருக்கு… அதை முடிச்சுட்டு தான் பார் கவுன்சில் மீட்டிங்குக்குப் போகணும்… இப்போவே லேட் ஆகுது” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அருணும் வானதியும் அவர்களின் அறையிலிருந்து வெளியேறி ஹாலுக்கு வந்துவிட்டனர்.

“சுபி இல்லாமலே இவ்ளோ லேட்… அவ மட்டும் இருந்திருந்தா இன்னைக்கு முகூர்த்தநேரம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் நீங்க மண்டபத்துக்குப் போயிருப்பிங்க” என்று கேலி செய்தபடியே குடும்பத்துடன் சாந்திவனத்துக்குச் செல்ல கிளம்பினார் ஜெகத்ரட்சகன்.

*********************

சாந்திவனம்….

“பாகி நான் ரெடியாயிட்டேன்டி… தாத்தாவும் பாட்டியும் சுபியையும் பார்த்தியையும் கோயிலுக்குக் கூட்டிட்டுப் போயிருக்காங்க… இன்னைக்குத் திருவாதிரைல்ல… அதான் ஆருத்ரா தரிசனம் பாக்க கிளம்புனாங்க… நோ நோ…. இப்போ வந்துருவாங்கடி… நாங்க முகூர்த்தநேரத்துக்கு முன்னாடி வந்துடுவோம்…. கோச்சுக்காதடி…. நீ நேத்ரா கிட்ட போனை குடு… நான் அவளைச் சமாதானம் பண்ணுறேன்” என்று போனில் பேசியபடியே பட்டுச்சேலைக்கான கொசுவத்தை மடித்துச் செருகிக் கொண்டிருந்தாள் பவானி.

அன்றைய தினம் பாகீரதியின் நாத்தனாரும் ஈஸ்வரின் உடன் பிறந்த தங்கையுமான நேத்ராவின் திருமணம். இரு குடும்பத்துக்கும் அழைப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இரு குடும்ப ஆண்களுக்கும் பார் கவுன்சிலில் கூட்டம் இருக்கவே பெரியவர்களோடு குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெண்கள் மட்டும் செல்வதாக ஏற்பாடு.

அனைவரும் சாந்திவனத்திலிருந்து ஒன்றாக கிளம்பிச் செல்லலாம் என பேசி வைத்திருந்ததால் அருணும் வானதியும் கூட ஜெகத்ரட்சகன் மற்றும் அஞ்சனாதேவியுடன் அங்கே வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டனர்.

கீழே ஹாலில் லோகநாயகியும் செண்பகாதேவியும் தயாராகி காத்துக் கொண்டிருந்தனர். ஞானதேசிகனும் அரிஞ்சயனும் அவர்களைக் கேலி செய்ய அதற்கு அவர்களும் பதிலுக்குக் கிண்டலாய் பேசுவது மாடியறை வரை கேட்டது.

பவானி போனில் பேசியபடியே புடவை மடிப்புகளைச் சீராக்கியவள் “வாசுகுட்டி உங்கம்மாவ பாருடா பெரியம்மாவ திட்டுறா” என்று பாகீரதியின் மகன் வாசுதேவிடம் புகார் தெரிவித்தபடியே தனது முக அலங்காரத்தை டிரஸ்சிங் டேபிள் கண்ணாடியில் பார்த்து திருப்தியுற்றாள்.

மறுமுனையில் வாசுதேவ்விற்கு ஈஸ்வர் பேச வார்த்தைகளைச் சொல்லிக் கொடுக்க “ஏய் ஈஸ்வர் எருமை… அதான் அவனே அழகா பேசுறானே… நீ கெட்டது போதாதுனு நீ அவனுக்கும் கிண்டல் பண்ண கத்துக் குடுக்கிறியா?” என்று கடுப்பாய் திட்ட ஈஸ்வருடன் சேர்ந்து அவனது மகனும் மனைவியும் நகைப்பது அவளுக்கு நன்றாக கேட்டது.

அவர்களிடம் பேசி முடித்து போனை வைத்தவள் “இன்னும் இந்தச் சிவா என்ன பண்ணுனார்?” என்று தனக்குத் தானே சத்தமாய் பேசியபடி திரும்ப

“சிவா அவரோட பொண்டாட்டிய ரசிச்சிட்டிருக்கார்” என்ற பதிலுடன் அறையின் வாயிலில் இருந்து உள்ளே நுழைந்தான் சிவசங்கர். அவனது வழக்கறிஞர் தொழிலுக்கானச் சீருடையைத் தான் அன்றும் அணிந்திருந்தான்.

வருடங்கள் ஓடிவிட்டது. தோற்றத்தில் கூட முதிர்ச்சிக்கான சில அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் அந்தப் புன்னகை மட்டும் இன்னும் மாறாது ஒவ்வொரு முறையும் அவளை அவனிடம் மயங்க வைத்தது.

அவளருகே வந்தவன் இடையோடு இழுத்து அணைத்துக் கொண்டபடியே “யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ்… இதுக்காகவே உன்னை எக்ஸ்ட்ராவா லவ் பண்ணலாம் போல” என்று அவளது வசனத்தை அவன் பேசவும் பவானி தனது செவ்விதழ் சிறைக்குள் அடைபட்ட முத்துப்பற்களைக் காட்டி நகைத்தாள்.

“ஒரு பையனுக்கு அப்பா ஆனதுக்கு அப்புறம் தான் உங்களுக்கு பொண்டாட்டி மேல லவ் பொங்குதோ?” என்று கணவனைக் கேலி செய்ய

“இன்னும் நாலு குழந்தைங்களுக்கு அப்பா ஆனாலும் இதே டயலாக்கைத் தான் சொல்லுவேன்…. ஐ லவ் யூ” என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு அவன் கன்னத்தில் இதழ் பதித்தான்.

அவனது ஸ்பரிசம் அவளுக்குள் மாயாஜாலங்களை நிகழ்த்தியது. அவனை ஆழ்ந்து நோக்கிய பவானியின் விழிகளில் மின்னிய காதல் அவனுக்குள் இருந்த காதலை இன்னும் அதிகரிக்க “ஐ லவ் யூ கண்மணி” என்று சொல்லிவிட்டு அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

அப்போது கீழே ஹாலில் சளசளப்பு கேட்கவும் வேகமாக அவனிடம் இருந்து விலகினாள் பவானி.

“எல்லாரும் வந்துட்டாங்க சிவா… வாங்க கீழ போவோம்” என்று சொன்னபடியே கணவனது கரத்தைப் பற்றிக் கொண்டு கீழே சென்றாள். படிகளில் இறங்கி வந்து நின்ற சிவசங்கரைப் பார்த்திபன் ஓடி வந்து அணைத்துக் கொண்டான்.

“அப்பா நீங்களும் என் கூட வர்றிங்களா?” என்று அவன் கேட்க

“இல்லடா கண்ணா! இப்போ நீயும் அம்மாவும் எல்லார் கூடவும் சேர்ந்து போங்க… அப்பா, தாத்தா, சின்ன தாத்தா எல்லாரும் மதியம் வந்துடுவோம்” என்று மகனிடம் கொஞ்சினான் சிவசங்கர்.

“அப்போ ஜெகா தாத்தா வருவாங்களா?” என்று பார்த்திபன் அடுத்தக் கேள்வியைக் கேட்கும் போதே ஜெகத்ரட்சகன் மனைவி மக்களோடு வந்தவர் பேரனின் கன்னத்தில் முத்தமிட்டார். பேத்தி சுபத்ராவுக்கும் தான்.

பின்னர் சுவாமிநாதனிடம் “நீங்க கிளம்புங்க மாமா… நான் மதியம் வந்துடுவேன்” என்று ஜெகத்ரட்சகன் பேச ஆரம்பித்தவர் அன்றைய தினம் பார் கவுன்சில் கூட்டத்தைப் பற்றி அவரிடம் ஏதோ விளக்கம் கேட்க ஆரம்பித்தார்.

அந்த இடைவெளியில் அஞ்சனாதேவியும் செண்பகாதேவியும் தங்கள் புடவைகளைக் காட்டிப் பேச ஆரம்பித்தனர்.

அன்னபூரணி மருமகனுடன் பேசிக் கொண்டிருந்த கணவரையும் புடவை விசாரணையில் இறங்கியிருந்த மகள்களையும் பார்த்தபடி எழுந்தார்.

கொள்ளுப்பேரனையும் கொள்ளுப்பேத்தியையும் தன்னுடன் அழைத்துச் சென்று உடை மாற்றிவிட்டவர் தானும் ஒரு பட்டுப்புடவையை கட்டிக் கொண்டு கிளம்பினார்.

“பேசினது போதும்… எல்லாரும் கிளம்புங்க… முகூர்த்தத்துக்கு இன்னும் கொஞ்சநேரம் தான் இருக்கு” என்ற அன்னபூரணியின் அதட்டலுக்குப் பின்னர் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.

ஞானதேசிகனும் அரிஞ்சயனும் ஜெகத்ரட்சகன் மற்றும் சிவசங்கரோடு பார் கவுன்சிலுக்குக் கிளம்ப அதே நேரம் அருண் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு மகளின் கன்னத்தில் முத்தமிட்டவன் நீதிமன்றத்துக்குக் கிளம்பினான்.

சிவசங்கர் மனைவியிடமும் மகனிடம் டாட்டா காட்டியவன் தந்தை, மாமனார் மற்றும் சித்தப்பாவுடன் காரிலேறினான். பெண்கள் அனைவரும் இன்னொரு காரில் ஏற வானதி அந்தக் காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர அவளருகில் அமர்ந்து கொண்டாள் பவானி.

சுவாமிநாதனும் அன்னபூரணியும் பார்த்திபனையும் சுபத்ராவையும் தங்கள் மடியில் இருத்திக் கொள்ள அவர்களுக்கு பின்னே இருந்த இருக்கையில் செண்பகாதேவியும் அஞ்சனாதேவியும் லோகநாயகியும் அமர வானதி பொலேரோவைக் கிளப்பினாள்.

அவர்கள் அனைவரும் சந்தோசமாகக் கிளம்பிச் சென்றதும் பறவைகளின் கீச்சொலிகளும், வேலையாட்களின் சின்ன சின்ன சத்தங்களும் தவிர வேறு எந்த அநாவசியமான கூச்சலும் இல்லாமல் அமைதியில் ஆழ்ந்தது அந்த வீடு.

இனி இப்பிறவியில் மீண்டும் ஒன்று சேர்வோமா என்ற கேள்வியுடன் இடையில் பிரிந்து சென்ற சொந்தங்களும், பிரிந்து நின்ற பெரியவர்களும் இளையவர்களின் காதலால் ஒன்றாக இணைந்து ஒரு குடும்பமாய் தன் குடைக்குக் கீழே வாழ்வதில் உண்டான பெருமிதத்துடன் கம்பீரமாய் நின்றது சாந்திவனம்.

இனிதே நிறைவுற்றது!