💘கண்மணி 3💘

சாந்திவனம்

எப்போதுமே உற்சாகத்துக்கும் மகிழ்ச்சிக்கும் குறைவில்லா இல்லம் அது. வீட்டுத்தலைவரான சுவாமிநாதனின் நேர்மைக்குணமும் அவரது சகதர்மிணி அன்னபூரணியின் அன்பும் தான் அந்தப் பெரியக் குடும்பத்தைக் கட்டிப் போட்டிருக்கும் கயிறுகள்.

அவரது வார்த்தைக்கு மறுபேச்சு பேசாத தவப்புதல்வன் தான் ஞானதேசிகன். தந்தையின் வழக்கறிஞர் தொழிலின் மேல் உண்டான பிரேமையால் தானும் சட்டம் படித்து தந்தையிடம் தொழில் நுணுக்கங்களைக் கற்றறிந்தவர் நகரின் பெரிய வணிகநிறுவங்களுக்கு இன்று சட்ட ஆலோசகர்!

அவருக்கேற்ற அன்பான வாழ்க்கைத்துணைவியாக வாய்த்தவர் தான் லோகநாயகி. அன்பான அன்னை; மாமியாரும் மாமனாரும் மெச்சும் மருமகள். கள்ளம் கபடமற்ற தெளிவான பெண்மணி.

இப்போது கூட மைந்தனின் பிறந்தநாளுக்காக தனது கையாலேயே அவனுக்குப் பிடித்த ஒயிட் ஃபாரெஸ்ட் கேக்கைச் செய்து முடித்தவர் கணவரிடம் அதைக் காட்டிச் சிலாகித்துக் கொண்டிருந்தார்.

ஊரில் அனைவரின் கண்ணிலும் விரலை விட்டு ஆட்டும் வழக்கறிஞர் கணவரோ மனைவியின் கேக்கை உலக அதிசயமாய் எண்ணி வியந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது கிண்கிணி நாதமாய் சிரிப்பொலி ஒன்று கேட்க திரும்பிப் பார்த்த இருவரும் ஒரே குரலில் “நதிம்மா” என்று அழைக்க சந்தன நிற அனார்கலி சுடிதாரில் தேவதையாய் வந்து நின்றாள் வானதி. ஞானதேசிகன் லோகநாயகி தம்பதியரின் மகள்.

தாயாரின் தெளிவும் தந்தையின் நேர்மையும் ஒருங்கே கொண்டு பிறந்த இருபத்தி நான்கு வயது மங்கை. சகோதரனுக்கென இவ்வளவு ஏற்பாடுகளையும் செய்து முடித்தவள் தாயாரும் தந்தையும் கேக் குறித்து செய்த ஆராய்ச்சியைக் கண்ணுற்றுவிட்டுக் குறும்பாய் நகைக்க அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்தாள் பவானி.

சிவப்பு வண்ணத்தில் பச்சை பார்டரிட்ட காட்டன் சில்க் உடலைப் பாந்தமாய் தழுவியிருக்க லேயர் கட்டில் அலை அலையாய் விரிந்திருந்த கூந்தலுடன் அப்சரசாய் வந்தவளைக் கண்டதும் உற்சாகத்துடன் வரவேற்றாள் வானதி.

ஞானதேசிகனும் லோகநாயகியும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்முறுவல் பூக்க பவானி மலர்ந்த முகத்துடன் அவர்களருகில் வந்தவள் தோழியின் தோளில் கை போட்டுக் கொண்டபடியே

“அத்தைக்கும் மாமாக்கும் என்னாச்சு? ஒரே சிரிப்புமயமா இருக்கு? என்னமோ என்னை புதுசா பாக்குற மாதிரி பாக்குறிங்க?” என்று வினவ

“எப்போவும் திரைச்சீலைய சுத்துன மாதிரி டாப்பும் லெகின்சுமா பாத்த பொண்ணு இன்னைக்கு ஷேரில பாக்குறப்போ என் கண்ணே பட்டுடும் போல இருக்கு… எங்க மருமகள் கல்யாணத்துக்குத் தயாராயிட்டானு நினைச்சு சிரிச்சோம்டா பவாகுட்டி” என்றார் லோகநாயகி.

ஞானதேசிகனும் அதை ஆமோதித்தவர் “ஏன்டாம்மா நீ ஆறு மணிக்கே வந்துடுவேனு நதி சொன்னாளே! நீ வர ஏன் லேட் ஆச்சு?” என்று அக்கறையாய் வினவ

“அது ஒரு சில்லறை பிரச்சனை மாமா… டிராபிக் போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்டேன்… உங்க பேரைச் சொன்னதும் பதறிப் போய் என்னை விட்டுட்டாங்கனா பாத்துக்கோங்க” என்று சொன்னவளின் காதை யாரோ திருக அவள் பொய்யாய் “அவ்வ்… என் காது போச்சு” என்று சிணுங்க

“என் பேத்திய ஏன் பூரணி அழ வைக்கிற? அவ காதை விடு” என்று உரைத்தவாறு வந்து சேர்ந்தார் சுவாமிநாதன்.

அன்னபூரணி அவளின் செவிமடலை விடாதவராய் “வர வர இவளுக்குக் குறும்புத்தனம் ஜாஸ்தி ஆகிடுச்சுங்க… ஸ்கூட்டில வர்றவ பேப்பரை கரெக்டா கொண்டு வந்தா என்னவாம்? போலீஸ்காரங்களை மிரட்டுறதுக்கு என் பையன் பேரை யூஸ் பண்ணிட்டு அதையும் கிண்டல் பண்ணுறா… வாயாடி” என்று செல்லமாய் திட்டினார்.

அப்போது மாடியிலிருந்து இறங்கி வந்தபடியே “லாயரோட பொண்ணுக்கு பேசுறதுக்குச் சொல்லியா குடுக்கணும்? சகலையோட பேச்சுத்திறமைல கொஞ்சம் கூடவா பவானிக்கு இருக்காது?” என்று நைச்சியமான குரலில் பேசியபடி வந்தார் சுவாமிநாதனின் இளைய மருமகனான அரிஞ்சயன்.

ஜெகத்ரட்சகனை விட இரண்டு வயது இளையவர். அவரது கழுகு கண்களின் பார்வை தன் எதிரில் வந்து நின்ற பவானியைக் குத்தீட்டியாய் தீண்டி அடங்கியது.

பவானியோ அதைக் கண்டுகொள்ளாதவளாய் “எப்பிடி பாகிக்கு உங்களோட குணம் இருக்குதோ அதே போல தான் எனக்கு எங்கப்பாவோட குணம் இருக்குது சித்தப்பா… எங்கப்பாக்குப் பேச்சுத்திறமையோட சேர்த்து எதிராளியைச் சரியா எடை போடுற குணமும் உண்டு… அதுவும் உங்களுக்குத் தெரிஞ்சுருக்குமே?” என்று புருவம் உயர்த்தி வினவ அப்போது இடை மறித்தார் சாந்தமே உருவாய் நின்ற செண்பகாதேவி, அரிஞ்சயனின் மனைவி.

சுவாமிநாதன் அன்னபூரணி தம்பதியினரின் இளையமகள். அவரருகில் பொம்மை போல நின்றிருந்தாள் பாகீரதி. அரிஞ்சயன் செண்பகாதேவியின் செல்லமகள்.

அவளைப் புருவச்சுழிப்புடன் பார்த்த பவானிக்கு அவளது முகத்தில் வழக்கமாய் குடிகொண்டிருக்கும் அலட்சியம் காணாமல் போய் ஜீவனற்றத்தன்மையுடன் வெறுமை படர்ந்த கண்களுடன் இருந்த அவளது தற்போதைய தோற்றம் சிறிது அதிர்ச்சியைக் கொடுத்தது.

ஆனால் அதை மறைத்துக் கொண்டவளாய் வானதியுடன் சேர்ந்து பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாட்டில் கவனம் செலுத்தினாள். அனைத்தும் முடிந்த பிறகும் சிவசங்கர் வீட்டுக்கு வரவில்லை.

பவானியின் செல் கீதமிசைத்து அவளது தந்தை அழைப்பதாகச் சொல்ல அவள் அழைப்பை ஏற்று “ஹலோ! நான் வந்துடுறேன்பா… இன்னும் ஹாஃப் அன் ஹவர்ல வந்துடுவேன்… ம்ம்.. சரிப்பா” என அனைத்துக்கும் ஆமாம் சாமி போட்டுவிட்டுப் பேசி முடித்தாள்.

சோர்ந்த முகத்துடன் “இன்னைக்கு நான் கிளம்புன நேரமே சரியில்ல தாத்தா… டிராபிக் போலீஸ் கிட்ட பேப்பர் இல்லாம மாட்டி ஐநூறு ரூபா செலவு… சிவாவும் இன்னும் வரல” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஷூ கால்களின் சத்தம் கேட்டது.

ஹாலுக்குள் அழுத்தமான காலடிகளுடன் வந்து நின்ற சிவசங்கரின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது. அவனது விழிகள் கத்திகளாய் மாறி பவானியைக் கூறு போட “டிராபிக் போலீசுக்கு லஞ்சம் குடுத்தியா?” என்று அதிராத குரலில் அழுத்தமாக வினவினான்.

“ஆமா! வர்ற அவசரத்துல எல்லாத்தையும் வீட்டுல வச்சுட்டு வந்துட்டேன் சிவா… அவரு கோர்ட்ல பெனால்டி பே பண்ணச் சொன்னாரு… அதுக்கு எங்க நேரம் இருக்கு? அதான் ஐநூறு ரூபா குடுத்து அவரைச் சமாளிச்சிட்டு வந்தேன்” என்றாள் பவானி சாதாரணமாக.

அவள் அப்படி சொன்னதும் சிவசங்கரின் முகத்தில் ஏளனம் தெறித்தது. அதை அவனது குடும்பத்தினர் கண்டுவிட ஞானதேசிகன் மகனது முகபாவத்துக்கு அர்த்தம் புரிந்தவராய்

“சரி விடு சிவா! நீ போய் ஃப்ரெஷ் ஆயிட்டு ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா” என்று சொல்ல

“எதுக்கு டாட்? ஓ! என்னோட பர்த்டே செலிப்ரேசனா? ஆனா இந்த மேடமோட அப்பா என்னோட மூஞ்சில இன்னைக்குக் கரிய பூசினதுக்கு அப்புறமும் எனக்கு பர்த்டே செலிப்ரேசன் ஒன்னு தான் குறைச்சலா?” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பவும் ஞானதேசிகனுக்கு மகன் சமீபத்தில் அமைச்சருக்கு எதிராக விவசாயிகள் சார்பில் தொடுத்த பொதுநல வழக்கின் கடைசி கட்ட விசாரணை இன்று தான் என்பது நினைவுக்கு வந்தது.

அதில் அமைச்சரின் சார்பில் வாதிட்ட ஜெகத்ரட்சகன் தனது ஜூனியர்களை வைத்து சாட்சிகளை இறுதி நேரத்தில் கவிழ்த்துவிட்டதாக உறுமித் தீர்த்தான் சிவசங்கர்.

“நேர்மைங்கிற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாத மனுசன்… கருப்பு கோட் போட்டு போட்டு மனசு முழுக்க கருப்பா மாறிடுச்சு அவருக்கு… அந்த மினிஸ்டர் எலும்புத்துண்டு மாதிரி வீசுற பணத்துக்காக எந்த எல்லைக்கு வேணும்னாலும் போவாரு அந்த மனுசன்… அவரு பெத்த பொண்ணு தானே இவ! அப்பனுக்குத் தப்பாத பொண்ணு”

இவ்வளவு நேரம் சிரமத்துடன் அமைதியாய் நின்ற பவானி பொறுக்க முடியாது சீறத் தொடங்கினாள்.

“ஷட் அப் சிவா! என்னமோ உங்களுக்கு மட்டும் தான் நேர்மை நீதி நியாயம்லாம் தெரியும்னு பேசாதிங்க… எங்கப்பா அவரோட கிளையண்ட் ஜெயிக்கிறதுக்கு என்ன செய்யணுமோ அதை தான் செஞ்சிருப்பாரு… அதுக்கு ஏன் ஓவர் ரியாக்ட் பண்ணுறிங்க? எல்லாரும் உங்கள மாதிரி இருக்கணும்னு எக்ஸ்பெக்ட் பண்ணாதிங்க… கொஞ்சமாச்சும் நார்மல் மனுசனா மாறுங்க”

“எப்பிடி? உன்னைப் பெத்தவரை மாதிரி ஊரை ஏமாத்திப் பிழைக்கிறதும், உன்னை மாதிரி லஞ்சம் குடுத்து தப்பிக்கிறதும் நார்மல் மனுசத்தனம்; அதுவே நியாயமா நேர்மையா வாழணும்னு ஆசைப்பட்டா அது ஓவர் ரியாக்சன்… வெல்! ஓவர் ரியாக்ட் பண்ணுறவனோட வீட்டுல நீ எதுக்கு நிக்கிற? கெட்டவுட்” என்று வாயிலைக் காட்ட

“இதுக்கு மேல இங்க நின்னா என்னோட அப்பாவுக்குத் தான் அசிங்கம்… இனிமே நீங்களே கூப்பிட்டாலும் நான் இங்க வரமாட்டேன்” என்று சபதமிட்டவளின் மனம் அவனது வார்த்தைகளில் இரணமாகியிருக்க அங்கிருந்து கோபத்துடன் வெளியேறினாள்.

அவள் சென்றதும் முதுகுக்குப் பின்னே கதவை அறைந்து சாத்தும் சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்த்த பவானி அடங்காத சினத்துடன் தனது ஸ்கூட்டி நிறுத்தியிருந்த இடத்துக்குச் சென்றவள் கோபத்துடன் அதை உதைத்து வீட்டுக்குக் கிளம்பினாள்.

அவள் சென்றதும் சுவாமிநாதனும் ஞானதேசிகனும் எவ்வளவோ முயன்றும் சிவசங்கரின் கோபம் தணியவில்லை.

எவ்வளவு நம்பிக்கையுடன் அந்த விவசாயிகள் வந்திருந்தனர். நீதிமன்றத்தை விட்டு வெளியேறும் போது அவர்களின் முகத்தில் தெரிந்த ஏமாற்றம் அவனுக்கு வலியை உண்டாக்கியது.

தொழிலில் நேர்மை தவறாது இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏமாற்றத்தின் போது உண்டாகும் வலி அது! தனது நேர்மைக்குணம் கூட உலகத்தின் பார்வைக்கு ஒவ்வாமையாகத் தோற்றமளிப்பதால் உண்டான வலி அது!

விறுவிறுவென தனது அறையை அடைந்தவன் தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டான். எதேச்சையாக பார்வை கையின் மோதிரவிரலை நோக்க காலையில் பவானி பேசிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. அதோடு அந்த இலஞ்சம் கொடுத்த விசயமும் தான்! கடுஞ்சினத்துடன் அதைக் கழற்றியவன் டிரஸ்சிங் டேபிள் மீது அதை வீசியெறிந்தான்.

பேரனைத் தேடி வந்த சுவாமிநாதனுக்கு அவனது ருத்திர ரூப தரிசனம் கிடைக்க அவனருகே சென்று அமர்ந்தவர் அவனது சிகையை வருடிக் கொடுத்தார்.

“எப்போவுமே நியாயமும் தர்மமும் தான் ஜெயிக்கும்னு எதிர்பாக்குறது தப்புடா கண்ணா! சில நேரங்கள்ல அநீதி கூட ஜெயிக்கும்… நீ முடிஞ்சத நினைச்சு கோவப்படுறத விட்டுட்டு நடக்கப் போறத பத்தி யோசி” என்றார்.

சிவா அவரை ஏறிட்டவன் “உங்களுக்கு நியாபகம் இருக்கா தாத்தா? ட்வெல்வ் இயர்சுக்கு முன்னாடி மிஸ்டர் ஜெகத்ரட்சகன் இதே மினிஸ்டருக்கு ஆதாரத்தை லீக் பண்ணி உங்கள தோற்கடிச்சாரு… இப்போ அதே ஆளுக்காக நான் கலெக்ட் பண்ணி வச்சிருந்த எவிடென்சை தெரிஞ்சுகிட்டு சீட் பண்ணி என்னைத் தோற்கடிச்சிட்டாரு… போதாக்குறைக்கு வீட்டுக்கு வந்ததும் அவரு பெத்த பொண்ணு லஞ்சம் குடுத்த பிரலாபத்தைச் சொல்லிட்டிருக்கா… இவ்ளோவும் நடந்ததுக்கு அப்புறமும் என்னை கோவப்படக் கூடாதுனு சொல்லுறிங்களே தாத்தா?” என்றான் ஆதங்கத்துடன்.

அவன் சொல்வதும் உண்மை தான்! பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் தனக்குக் கிடைத்த தோல்விக்கும் இன்று  பேரனுக்குக் கிடைத்த தோல்விக்கும் காரணம் ஒரே மனிதர் தான்.

ஒரு காலத்தில் தனது மகனாய் எண்ணி வளர்த்த மருமகனே தனக்கும் பேரனுக்கும் எதிராய் நிற்பது கண்டு அந்த முதியவரால் வேதனை மட்டுமே பட முடிந்தது.

அதே நேரம் யாருக்கும் தெரியாது போனை எடுத்துச் சென்று தோட்டத்தில் நின்று பேச ஆரம்பித்தார் அரிஞ்சயன்.

“ஹலோ மினிஸ்டர் சாரா? நான் தான் அரிஞ்சயன்.. வேலை முடிஞ்சதும் என்னை மறந்துட்டிங்களே சார்!” என்று ஆரம்பித்தவர் மறுமுனையில் தனக்குச் சாதகமான பதில் வந்ததும் வாயெல்லாம் பல்லாக அழைப்பைத் துண்டித்தார்.

வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான அமளிதுமளி ஓய்ந்து வீடே சோகக்கடலில் ஆழ்ந்திருந்தது.

ஆனால் அவர் பட்ட கஷ்டத்துக்கு ஈடாக அவருக்குக் கிடைக்கப் போகும் சன்மானத்துக்கு முன்னே இந்த வீட்டினரின் துன்பமெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல.

இன்று நேற்று அல்ல. என்றுமே அவர் அப்படி தான். அவர் உள்ளே வருவதை வெறுமை ததும்பும் விழிகளால் ஏறிட்ட மனைவியை ஒரு நொடி குற்றவுணர்ச்சியுடன் பார்த்தவர் பின்னர் தனது அக்மார்க் அலட்சியம் வழியும் முகபாவத்துடன்

“இப்போ எதுக்கு மூஞ்சிய தூக்கி வச்சிட்டு நிக்கிற? அண்ணன் மகன் பிறந்தநாள் செலிப்ரேசன் நின்னு போன வருத்தமா? போடி! எனக்குத் தலை வலிக்குது. ஸ்ட்ராங்கா பில்டர் காபி போட்டு ரூமுக்குக் கொண்டு வா” என்று அதட்டிவிட்டு தனது அறையை நோக்கிச் சென்றார்.

செண்பகாதேவிக்கு இதெல்லாம் பழகிப் போனதால் விரக்தி இழையோடும் முகத்துடன் சமையலறைக்குச் சென்றார்.

அதே நேரம் கோபத்துடன் வெளியேறிய பேத்தியை என்ன சொல்லி சாந்தப்படுத்துவது என்று அறியாது அன்னபூரணியும், பேரனுக்கு மருமகன் மீது உள்ள கோபம் பேத்தியின் மீது திரும்பாது தடுப்பது எப்படி என புரியாது சுவாமிநாதனும் மனதுக்குள் உழன்று கொண்டிருந்தனர்.

அச்சமயம் அவர்களது நினைவுக்கு வந்தவள் வானதி மட்டுமே. அவளால் மட்டுமே இந்த இருவரையும் சமாதானம் செய்ய முடியுமென நம்பி அவளை அவர்களுக்கிடையே சமாதான தூது அனுப்ப முடிவெடுத்தனர் அந்த முதியத்தம்பதியினர்.

தொடரும்💘💘💘