💘கண்மணி 28💘

விபத்து நடப்பதற்கு சற்று முன்னர்

சாந்திவனம்

காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துத் தயாராகிக் கொண்டிருந்தாள் பவானி. பேபி பிங்க் வண்ண டாப்புடன் வெண்ணிற லெகின்ஸ் அணிந்து கூந்தலை பக்கவாட்டில் பின்னலாய் போட்டவள் தனது பால் நெற்றியில் அரக்குநிற பொட்டு ஒன்றை ஒட்டிக் கொண்டாள்.

டிரஸ்சிங் டேபிள் கண்ணாடி முன்னே அமர்ந்து அலங்கரித்துக் கொண்டவளின் பார்வை இன்னும் துயில் கலையாமல் சோர்ந்த முகத்துடன் உறங்கிக் கொண்டிருந்த சிவசங்கரைத் தழுவியது. தலைக்காயத்திற்கு போட்ட மாத்திரைகளின் விளைவால் இன்னும் உறக்கம் கலையவில்லை அவனுக்கு.

நேற்றைய சம்பவங்களை யோசித்த போது பெருமூச்சு ஒன்று அவளிடமிருந்து வெளிப்பட்டது. ஆனால் ஈஸ்வரின் வீட்டுக்குச் சென்று அவன் தாயாரிடம் பேசிவிட்டு அவள் அலுவலகத்துக்கும் செல்லவேண்டுமே. இப்போது கிளம்பினால் தான் பெருநகரத்தின் போக்குவரத்து நெரிச்சலில் அவள் இரண்டு பயணநேரத்தையும் சமன் செய்ய இயலும்.

தனது ஹேண்ட் பேகுடன் மொபைலையும் எடுத்துக் கொண்டவள் தூங்கிக் கொண்டிருந்த சிவசங்கரின் நெற்றியை மறைத்துக் கொண்டிருக்கும் சிகையை ஒதுக்கிவிட்டு நெற்றியில் இதமாய் முத்தமிட்டாள்.

பின்னர் திரைச்சீலைகளை இழுத்து மூடியவள் அறைக்கதவை சாத்திவிட்டு வெளியேறினாள்.

ஹாலில் அவளுக்கு முன்னரே பாகீரதி தயாராகி அமர்ந்திருந்தாள். நீண்டநாட்களுக்குப் பின்னர் சிரத்தை எடுத்து அலங்கரித்திருந்தவளைக் காணும் போது பவானிக்குச் சற்று நிம்மதி பிறந்தது.

காலை நேர சமையலின் அமளிதுமளிகளுக்கிடையே அல்லாடிக் கொண்டிருந்த அத்தை, சித்தியிடம் தான் ஈஸ்வரின் இல்லத்துக்குச் சென்று அவன் தாயாரிடம் பேசிவிட்டு வருவதாகச் சொல்ல பாகீரதி தானும் அவளுடன் வருவதாகக் கூறினாள்.

அவளது பளீச் தோற்றத்துக்கான காரணம் புரிந்து நமட்டுச்சிரிப்பு சிரித்தவளின் தோளில் செல்லமாகத் தட்டிய பாகீரதி மூக்கைச் சுருக்கி முறைக்க அப்போது தான் அன்னபூரணியும் சுவாமிநாதனும் ஞானதேசிகன் துணையுடன் சிவாலயத்துக்குச் செல்ல புறப்பட்டு ஹாலுக்கு வந்தனர்.

ஞானதேசிகன் மருமகளிடம் சிவசங்கர் எழுந்ததும் அவனுடன் செல்லுமாறு கூற அவளோ

“அவருக்கு டேப்ளட் போட்டதால இன்னும் முழிப்பு வரல மாமா… அப்பிடியே முழிச்சாலும் டயர்டா இருக்கும்… நான் என்ன நடந்தா அவ்ளோ தூரம் போகப் போறேன்? கார்ல தானே போறேன்… நானும் பாகியும் ஈஸ்வர் வீட்டுக்குப் போயிட்டு வர்றப்போ இவ காரை கொண்டு வந்துடுவா… நான் ஈஸ்வர் வீட்டுல இருந்து கேப் புக் பண்ணி ஆபிஸ் போயிடுவேன்” என்று சொல்ல அவரும் அதற்கு மேல் மருமகளை வற்புறுத்தவில்லை.

லோகநாயகி தான் வெறும் வயிற்றுடன் செல்வதாக குறைபட்டார்.

“நான் காபடேரியால சாண்ட்விச் சாப்பிட்டு இன்னைக்கு நாளை ஓட்டுறேன் அத்தை… ஈவினிங் எனக்குப் பிடிச்ச ஆலு கட்லட் பண்ணி வைங்க… வீட்டுக்கு வந்து முழு பிளேட்டையும் முழுங்கி பிரேக்பாஸ்டையும் லஞ்சையும் டாலி பண்ணிடுறேன்” என்று கேலி செய்தபடி பாகீரதியை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.

இருவரும் வாகனத் தரிப்பிடத்தை நோக்கிச் செல்லும் போதே “இன்னைக்கு நான் டிரைவ் பண்ணவா பவா? மைண்ட் கொஞ்சம் ஃப்ரெஷ்ஷா இருக்குடி.. எதாச்சும் பண்ணுனு என்னைத் தூண்டிகிட்டே இருக்கு” என்று கேட்ட பாகீரதியிடம் கார் சாவியைக் கொடுத்துவிட்டாள் பவானி.

அவர்களது கார் சாந்திவனத்தின் காம்பவுண்டைத் தாண்டும் போது அரிஞ்சயனின் விசுவாசி அவருக்குப் போனில் அழைத்தான்.

“சின்னம்மா கிளம்பிட்டாங்கய்யா… கூடவே நம்ம பாப்பாவும் போகுது” என்று சொல்லவும் மறுமுனையில் அரிஞ்சயன் மகளை நினைத்துத் தலையில் அடித்துக் கொண்டார்.

அவர் இங்கே அவளுக்காக ஒரு ராஜவாழ்க்கையை ஏற்பாடு செய்து கொண்டிருக்க அவளோ ஒரு மாதச்சம்பளக்காரனின் அன்னையைக் காணச் சென்று விட்டாளே என்ற எரிச்சல் அவருக்கு.

சிட்டவுட்டில் அமர்ந்து கடல்காற்றை ரசித்துக் கொண்டிருந்த செழியனிடம் சென்று பவானி கிளம்பிவிட்ட தகவலைச் சொல்லவும் அவர் முகத்தில் உண்டான ஜொலிப்பு கண்களில் மின்னிய பழிவெறி ஏதோ வேட்டைக்குத் தயாராகும் கழுதைப்புலியை நினைவூட்டியது அரிஞ்சயனுக்கு.

செழியன் அதே முகஜொலிப்புடன் போனை எடுத்தவர் “எல்லாம் தயாரா இருக்குதா? ம்ம்… நான் சொன்ன மாதிரி அந்தக் கார் வந்ததும் தூக்கிடு… பாக்குறதுக்கு ஆக்சிடெண்ட் மாதிரியே இருக்கணும்” என்று சொல்லவும் அரிஞ்சயனுக்குத் தன் தலையில் யாரோ இடியை இறக்கியது போன்ற அதிர்ச்சி.

அதிர்ச்சியை மறைத்தவாறே “எந்தக் காரை தூக்கச் சொல்லுறிங்க செழியன் சார்?” என்று நடுங்கும் குரலில் கேட்டவரை ஏளனமாகப் பார்த்துச் சிரித்த செழியன்

“உங்க மருமகனோட பொண்டாட்டி போற காரை தான் தூக்கச் சொல்லிருக்கேன் அரிஞ்சயன்… இன்னைக்கு அவளோட சாவு நடந்தே தீரும்… ப்ச்… எனக்கும் புதுசா கல்யாணம் ஆன பொண்ணை இப்பிடி அல்பாயுசுல கடவுள் கிட்ட அனுப்பி வைக்க இஷ்டமில்லை… ஆனா அவளைப் பெத்த தகப்பனும் சரியில்ல; கட்டுன புருசனும் சரியில்ல… பெத்தவன் பண்ணுன பாவம் மட்டுமில்ல, கட்டுனவன் பண்ணுன தப்பும் பொண்ணுங்க தலையில தான் விடியும்… இந்த உலகநியதிப்படி இன்னைக்கு பவானிக்குப் பரலோகயாத்திரைய என்னோட கிப்டா குடுத்துருக்கேன்” என்று சாதாரணமாகச் சொல்லிச் சிரித்தார்.

அவரின் அரக்கத்தனமான சிரிப்பில் அரிஞ்சயன் அதிர்ந்தவர் இப்போது ஆபத்து பவானிக்கு மட்டுமல்ல; அவளுடன் சென்றிருக்கும் தன் மகளுக்கும் தான் என்பதை அறிந்தவர் அழவும் திராணியற்று நின்றார்.

பவானி மட்டுமே சென்றிருந்தாலும் கூட அவள் இப்படி அகால மரணமுறுவதில் அவருக்குச் சம்மதம் இல்லை. வாழ வேண்டிய பெண்ணாயிற்றே! ஆனால் செழியன் முன்னே தன் மன எண்ணங்களைக் காட்டிக் கொள்ள கூடாது என எண்ணி முகத்தைச் சீராக்கிக் கொண்டவர் தான் குளிக்கச் செல்வதாகச் சொல்லிவிட்டு மெதுவாய் நழுவினார்.

செழியனது உதவியாளரும் பாதுகாவலர்களும் வருவதற்கு இன்னும் நேரமிருக்கிறது. அவரும் இப்போது பவானியின் சாவு நிச்சயம் என்ற மகிழ்ச்சியில் ஓய்வெடுக்கத் தனது அறைக்குச் சென்றுவிட அரிஞ்சயன் தனது காரை தரிப்பிடத்திலிருந்து கிளப்பினார்.

கேள்வியாய் நோக்கிய வாயில் காவலரிடம் “இன்னும் கொஞ்சநேரத்துல மினிஸ்டரைப் பாக்க கட்சி ஆளுங்க வர்றாங்களாம்… நான் இருந்தா சரியா வராது… அதான் சார் கிட்ட சொல்லிட்டுக் கிளம்புறேன்” என்று பொய்யுரைத்து விட்டு அந்தப் பங்களாவை விட்டு வெளியேறினார்.

அவர் அடித்துப் பிடித்து வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்த நேரம் கோயிலுக்குப் போய்விட்டுத் திரும்பிய சுவாமிநாதனும் அன்னபூரணியும் ஹாலில் தான் அமர்ந்திருந்தனர். சிவசங்கரும் தலையில் கட்டுடன் தாத்தா பாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தான்.

அப்போது ஞானதேசிகன் மனைவியிடம் ஏதோ சொல்லிக்கொண்டு வந்தவர் தங்கையின் வெறித்தப் பார்வையைத் தொடர்ந்து ஹாலை நோக்க அங்கே வந்து நின்றார் அரிஞ்சயன். அவரைக் கண்டதும் நேற்றைய சம்பவங்கள் மனதில் தலை தூக்க இறுகிப்போன முகத்துடன் அவரை எதிர்க்கொண்டனர் அக்குடும்பத்தினர்.

அரிஞ்சயனோ பதறியடித்து “பவாவும் பாகியும் ஈஸ்வர் வீட்டுக்குப் போயிட்டாங்களானு கொஞ்சம் கேளுங்க… மினிஸ்டர் செழியனோட ஆளுங்க அவங்க போற காரை டார்கெட் பண்ணி வெயிட் பண்ணுறாங்க” என்று அவர்கள் காத்திருக்கும் இடத்தையும் சொல்ல அவர் சொன்னதில் மொத்தக் குடும்பமும் குழம்பிப் போனவர்களாய் அவரை நோக்கினர்.

ஆனால் சிவசங்கர் நேற்று அவர் யாரையோ சந்திக்கச் சென்றது, இரவில் வீடு திரும்பாததை எல்லாம் வைத்து அமைச்சருடன் தான் இருந்திருப்பாரோ என்ற யூகத்துடன் அரிஞ்சயனை நெருங்கினான்.

“என்ன சொல்லுறிங்க? அவங்க போனது அவருக்கு எப்பிடி தெரியும்?” என்று கேள்விகளால் திணறடிக்க அரிஞ்சயன்

“பேச நேரம் இல்ல சிவா… ப்ளீஸ்… பவானிக்குக் கால் பண்ணு… அவரோட ஆளுங்க நம்ம காரை தூக்குற பிளானோட வெயிட் பண்ணுறாங்க சிவா… பவானி இன்னைக்கு ஈஸ்வர் வீட்டுக்குப் போறானு அவர் கிட்ட நான் தான் சொன்னேன்” என்று வேதனையுடன் உரைக்கவும் செண்பகாதேவிக்கு எங்கிருந்து தான் ஆத்திரம் வந்ததோ வேகமாக கணவரின் அருகில் வந்தவர் அவரது சட்டையைப் பிடித்து உலுக்கத் தொடங்கினார்.

“அடப்பாவி! பணத்துக்காக பவானிய கொல்ல அந்தாளுக்கு உடந்தையா இருந்துருக்கியே… நீ எல்லாம் மனுசனா? ஜெகா மாமா என்னைக்காவது பவாவையும் பாகியையும் பிரிச்சுப் பாத்திருக்காரா? நீ ஏன் இப்பிடி மட்டமா போன? ஐயோ என் பொண்ணுங்களுக்கு என்னாச்சுனு தெரியலயே… இப்போ ஏன் இங்க வந்து நடிக்கிற? அன்னைக்கு நீ என்னை திட்டுனப்போ உன்னை அதட்டுனானு தானே இப்பிடி அந்தப் பொண்ணைக் கொல்ல திட்டம் போட்டவனுக்கு துப்பு குடுத்துட்டு வந்து நிக்குற… உன் முகத்தைப் பாக்குறதே பாவம்”

அவரை உலுக்குவதை நிறுத்திவிட்டுத் தன் தலையில் மடேர் மடேரென அடித்துக்கொண்டவரை லோகநாயகி தாங்கிக் கொள்ள மகள் சொன்னதையெல்லாம் தாங்க முடியாதவர்களாய் அன்னபூரணியும் சுவாமிநாதனும் அழுவதற்குக் கூட தெம்பில்லாதவர்களாய் சிலையாய் சமைந்திருந்தனர்.

அப்போது தான் சிவசங்கரின் போன் இசைத்தது. அழைப்பு வந்தது பவானியின் எண்ணிலிருந்து தான்.

சிவசங்கர் போனை எடுத்து “ஆர் யூ ஓகே பவா? நீயும் பாகியும் எங்க இருக்கிங்க?” என வினவ போனில் பேசியவர் ஜெகத்ரட்சகன்.

“ரெண்டு பேரும் இப்போ கே.ஆர் ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க சிவா… அருண் என் கூட இருக்கான்… நீயும் தேசிகனும் மட்டும் வாங்க” என்றவரிடம்

“ஏன்? என்னாச்சு? நீங்க எப்பிடி அங்க போனிங்க?” என்று வரிசையாய் கேள்விகளை அடுக்கியவனிடம் சம்பவத்தைச் சுருக்கமாக கூறியவர் இப்போது பாகீரதியைத் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்திருப்பதாகவும் பவானிக்கு இரத்தம் ஏற்றிக் கொண்டிருப்பதாகவும் கூற சிவசங்கர் “சரி மாமா… நாங்க வர்றோம்” என்று சொல்லிவிட்டுப் பதறிய மனதுடன் அழைப்பைத் துண்டித்தான்.

தந்தையிடம் “அப்பா கே.ஆர் ஹாஸ்பிட்டலுக்குப் போகணும்… வாங்க” என்று சொல்ல வீட்டின் பெரியவர்களோடு பெண்மணிகளும் பதற ஆரம்பிக்கவும் அவர்களைச் சமாதானம் செய்தவன் ஜெகத்ரட்சகன் சொன்ன விசயத்தை அப்படியே ஒப்பித்தான்.

கூடவே “எல்லாரும் போனா டாக்டர்ஸ் அலோ பண்ண மாட்டாங்க… ஆல்ரெடி மாமாவும் அருணும் இருக்காங்க… நீங்க எல்லாரும் தைரியமா இருங்க” என்று சொல்லிவிட்டு அரிஞ்சயனை அற்பப்புழுவைப் போல பார்த்துவிட்டுக் கடந்தான்.

அவரோ தீவிர சிகிச்சை பிரிவில் மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் தெரிந்ததும் ஜடமானவர் தான். வெறித்தப் பார்வையுடன் அமர்ந்துவிட்டார்.

லோகநாயகி கதறியழும் செண்பகாதேவியைச் சமாதானம் செய்யவா, சிலையாய் கண்ணீர் பெருக அமர்ந்திருக்கும் வயோதிகர்களை தேற்றவா என தெரியாது விழித்தார்.

ஞானதேசிகனும் சிவசங்கரும் மருத்துவமனைக்கு வந்த போது ஜெகத்ரட்சகனும் அருணும் இறுகிப் போன முகத்துடன் பதபதைத்தவர்களாக அமர்ந்திருந்த கோலம் தான் அவர்கள் கண்ணில் பட்டது.

இவர்களைக் கண்டதும் எழுந்த ஜெகத்ரட்சகன் “பவாவுக்கு டிரீட்மெண்ட் முடிச்சிட்டாங்க… அவளுக்கு வெளிக்காயம் மட்டும் தான்… பயப்படுற மாதிரி எதுவும் இல்லனு சொல்லிட்டாங்க… பாகிக்கு அடி கொஞ்சம் பலம்… அவளை நார்மல் வார்டுக்கு இப்போதைக்கு மாத்த முடியாதுனு சொல்லிட்டாங்க” என்று சொல்லிமுடிக்கும் போதே குரல் கம்மி விட்டது அவருக்கு.

அருண் தந்தையின் கரத்தை ஆறுதலாகப் பற்றியவன் “சிவா நீ வீட்டுக்குப் போன் பண்ணி பயப்பட வேண்டியதில்லனு சொல்லிடு… பாவம் அவங்க பதறிகிட்டே இருப்பாங்க”  என்று சொல்லவும் சிவசங்கர் வீட்டுக்கு அழைத்து விவரம் சொல்லிவிட்டு மனைவியை வைத்திருக்கும் அறை எண்ணை கேட்டான்.

அங்கே சென்றவன் கதவின் சிறிய கண்ணாடி வழியே உள்ளே தலை கை கால்களில் கட்டுகளுடன் படுத்திருப்பவளைக் கண்டதும் கண் கலங்கிவிட்டான். இத்தனை நாட்கள் அவள் தன்னருகில் இருக்கும் சமயங்களில் தோன்றாத பயம் அவனுக்குள் அப்போது முகிழ்த்தது.

வேறு என்ன பயம்! எங்கே அவளை இழந்துவிடுவோமா என்ற பயம் தான். அதன் அடிப்படை கணவன் மனைவி என்ற உறவாகவும் இருக்கலாம்; அவள் மீதான காதலாகவும் இருக்கலாம். ஆனால் அக்கணத்தில் அவன் பயந்தது என்னவோ உண்மை!

பெரும்பாலான கணவர்கள் அப்படி தானே! இருக்கும் வரை இல்லாளின் அருமை புரிவதில்லை. காலம் சென்ற பின்னர் எண்ணி மருகுவது அவர்களுக்கு என்ன புதிதா!

சிவசங்கர் தானும் பவானியும் அந்தப் பட்டியலில் இடம்பிடித்து விடக் கூடாதென கடவுளிடம் மானசீகமாக வேண்டுதல் வைத்தான்.

“சீக்கிரமா கண் முழிச்சிடு பவா… நீ கண்ணை மூடி இருக்குற ஒவ்வொரு நிமிசமும் எனக்கு நரகமா தான் இருக்கும்”

அப்போது யாரோ பின்னே இருந்து அவன் தோளைத் தொடவும் திரும்பியவன் அருணைக் கண்டதும் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

“அவளுக்கு ஒன்னும் ஆகாது சிவா… மெடிசின்ஸ் உள்ள போனதாலயும் ப்ளட் லாஸ்னாலயும் வந்த மயக்கம் தான் இது… எப்பிடியும் ஈவினிங்குள்ள கண் முழிச்சிடுவானு டாக்டர் சொல்லிட்டார்”

அருணின் வார்த்தைகள் அவன் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க மனைவி கண் விழிக்கும் நேரத்துக்காக காத்திருக்க ஆரம்பித்தான் அவன்.

அதே நேரம் ஜெகத்ரட்சகன் இயந்திரம் போல அமர்ந்தவர் “எல்லாம் நான் பண்ணுன பாவம் தேசிகா… எத்தனை கேசுல நீதி நியாயம் பாக்காம வாதாடிருப்பேன்? எல்லாம் சேர்ந்து தான் என் மகளுக்கு இப்பிடி ஒரு நிலமை வந்துடுச்சு… மாமாவும் நீயும் நீதி நேர்மைனு சொன்னப்பலாம் உங்களை பிழைக்கத் தெரியாதவங்கனு நினைச்சேனே…. அது எவ்ளோ பெரிய முட்டாள்தனம்? அதுக்குத்தான் கடவுள் எனக்கு தண்டனை குடுத்துட்டாரோனு பயந்துட்டேன்… பயப்படுற மாதிரி எதுவுமில்லனு டாக்டர் வாயால கேக்குற வரைக்கும் என் உயிர் என் கைல இல்ல தேசிகா… நான் பாவி” என்று வாய் விட்டுக் கூறி தோள்கள் குலுங்க அழ ஆரம்பிக்கவும் அவரைத் தோளோடு சேர்த்து ஆறுதலாக அணைத்துக் கொண்டார் ஞானதேசிகன்.

“அழாத ஜெகா… எல்லாம் நமக்கு ஒரு பாடம் தான்…. நீ மட்டுமா தப்பு பண்ணுன? பன்னிரண்டு வருசத்துக்கு முன்னாடி நடந்த சில சம்பவங்கள்ல நானும் அப்பாவும் கூட பெரிய தப்பு பண்ணிருக்கோம் போல தோணுது” என்றார் அரிஞ்சயனை மனதில் வைத்து.

சற்று நேரத்தில் ஐ.சி.யூவில் இருந்து வெளியே வந்த மருத்துவர் பாகீரதிக்கு வெளிக்காயத்தோடு உள்காயங்களும் இருப்பதால் அவள் உடல் தேற சற்று நாள் பிடிக்கும், மற்றபடி அவள் உயிருக்கு இனி ஆபத்து ஏதுமில்லை என்று சொல்லவும் தான் நால்வருக்கும் உயிரே வந்தது.

நால்வருமே இவ்விசயத்தை இன்னும் அஞ்சனாதேவிக்கும் வானதிக்கும் தெரிவிக்கவில்லை. பவானி கண் விழித்துவிட்டால் தைரியமாக அழைத்துச் சொல்லலாம் என அமைதியுடனே அந்த மருத்துவமனையில் மாலை வரை காத்திருந்தனர்.

அவர்களை அதிகம் சோதிக்காமல் மாலையில் பவானி கண் விழித்து விட்டாள். காரின் பாகங்கள் அவள் உடலில் ஏற்படுத்தியிருந்த காயத்தின் வலியால் உண்டான முகச்சுளிப்பைத் தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை அவளிடம்.

முகத்தில் ஆங்காங்கே சிறு சிறு காயங்கள். இடது கன்னத்தில் இரத்தம் கன்றிய தடம். மற்றபடி அவ்வபோது மருந்தின் வீரியத்தால் சிரமத்துடன் கண்ணை மூடிப் பேசினாள் அவள்.

நால்வரின் ஓய்ந்த தோற்றத்தையும் பார்த்தவள் “ஐ அம் ஆல்ரைட்… பாகி எப்பிடி இருக்கா?” என்று சிரமத்தினூடே கேட்க

“அவ இன்னும் ஐ.சி.யூல தான் இருக்கா… பட் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லனு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க” என்றான் அருண்.

ஜெகத்ரட்சகன் எதுவும் பேசாமல் கலங்கிப் போய் நிற்க “இப்போவும் பேச மாட்டிங்களாப்பா?” என்றவளின் குரலில் தெரிந்த வலி அவரைத் திடுக்கிடச் செய்யவும் வேகமாக மகளருகே மண்டியிட்டார் அவர்.

“உன் கிட்ட எந்த முகத்த வச்சிக்கிட்டுப் பேசுவேன்டா? நீ பாசமா பேச வந்தப்போலாம் எவ்ளோ வீறாப்பா அதை அலட்சியம் பண்ணிருக்கேன்… நான் பாவிம்மா…. பாவி” என்று கதறியழவும் பவானி உடல்வலியைப் பொருட்படுத்தாது சிரமத்துடன் எழுந்து அமர முயற்சிக்க சிவசங்கர் ஓடி வந்து அமருவதற்காக அவளை அணைத்து எழுப்பியவன் சாய்ந்திருக்க வசதியாய் தலையணையை வைத்தான்.

அவளை அரவணைத்து நிற்கும் கரங்களுக்குச் சொந்தக்காரனான மருமகனை பல வருடங்களுக்குப் பின்னர் பாசமாய் ஏறிட்டார் ஜெகத்ரட்சகன்.

ஏன் இவனைத் தான் திருமணம் செய்வேனென மகள் அடம்பிடித்தாள் என்பது இப்போது தானே புரிகிறது! இவ்வளவு அன்பானவனை வேண்டாமென மறுக்க யாருக்குத் தான் மனம் வரும்!

பவானிக்குக் காயம் வலித்தாலும் பாகீரதிக்குப் பயப்படும்படி ஒன்றுமில்லை என தெரிந்ததும் நிம்மதியுற்றாள். அதோடு எப்போதும் எதிரும் புதிருமாய் நிற்கும் தந்தையும் கணவனும் இன்று ஒருவருக்கொருவர் ஆதுரத்துடன் பேசுவதும், தந்தை தன்னிடம் இருந்த கோபம் நீங்கி சாதாரணமாய் பேசுவதுமே அவளுக்கு அளவில்லா ஆனந்தத்தைக் கொடுத்தது.

அன்று இரவு அருணும் சிவசங்கரும் மருத்துவமனையில் தங்கிக் கொள்ள சாந்திவனத்தின் பெண்மணிகளைச் சமாளிக்கும் பொறுப்பு ஞானதேசிகனுடையதாகி விட்டது.

அதிலும் வானதி கதறியழத் துவங்க அவளுக்கு ஒன்றுமில்லையென சமாதானம் செய்தவர் அனைவரையும் அதட்டி உருட்டிச் சாப்பிட வைத்ததோடு சிவாவுக்கும் அருணுக்கும் வேலையாட்கள் மூலம் இரவுணவை அனுப்பி வைத்தார்.

அன்னபூரணியை உறங்க அனுப்பிவிட்டுச் சுவாமிநாதன் மகனுடன் அமர்ந்திருக்க அவர்களிடம் வந்தார் அரிஞ்சயன்.

ஞானதேசிகன் எதுவும் சொல்லும் முன்னரே கரம் கூப்பியவர் “உங்க கிட்ட மன்னிப்பு கேக்க தகுதியில்லாதவன் நான்… நான் தான் எல்லாத்துக்கும் காரணம்… ட்வெல்வ் இயர்சுக்கு முன்னாடி செழியன் கிட்ட மாமா வச்சிருந்த எவிடென்ஸ் ஃபைலை குடுத்தது நான் தான்… சகலை அந்த ரூமை விட்டு வெளியே வர்றத மட்டும் தான் சிவா பாத்தான்… ஆனா அவர் சாவிய எடுக்க மறந்ததை அவன் பாக்கல… ரெண்டு பேரும் போனதுக்கு அப்புறம் நான் ஆபிஸ் ரூம்ல நுழைஞ்சு ஃபைலை எடுத்துட்டுப் போய் செழியன் கிட்ட குடுத்தேன்… எல்லாம் பணத்துக்காகத் தான்… பணம் பணம்னு அலைஞ்சு நான் செஞ்ச தப்பு ஒன்னு ரெண்டு இல்ல” என்று அனைத்தையும் ஒன்று விடாது ஒப்பித்து முடித்தார்.

அனைத்தையும் மௌனமாய் கேட்டு முடித்தனர் தந்தையும் மகனும். அவரை எதுவும் சொல்லும் நிலையில் ஞானதேசிகனும் சுவாமிநாதனும் இல்லை. ஏனெனில் அரிஞ்சயன் செய்தது தவறென்றால் ஒரு பாவமும் அறியாத ஜெகத்ரட்சகனுக்கு எதிராக சிவசங்கர் சொன்ன குற்றச்சாட்டை ஆராய்ந்து பாராது ஒருதலைபட்சமாக தாங்கள் நடந்துவிட்டோமே என்ற வேதனை உள்ளுக்குள் அவர்களை துவம்சம் செய்கையில் எவ்வாறு அரிஞ்சயனை அவர்களால் கண்டிக்கவோ தண்டிக்கவோ இயலும்!

சொல்லப் போனால் தாங்களும் ஒரு விதத்தில் குற்றவாளிகள் தானே! எவ்வளவு பெரிய அநீதியைத் தாங்கள் ஜெகத்ரட்சகனுக்கு இழைத்திருக்கிறோம் என்ற குற்றவுணர்ச்சியில் மனம் நொறுங்கி போனது அவர்களுக்கு.

ஆனால் மகள் இன்னும் கண் விழிக்காத நிலையில் அரிஞ்சயனிடம் என்ன பேசினாலும் அது அவரைப் புண்படுத்தும் என்பதால் அமைதியாய் அமர்ந்திருந்தனர். அவரை உறங்கச் சொல்லிவிட்டு அவர்களும் உறங்கச் சென்றனர். அதே நேரம் அஞ்சனாதேவி மகளுக்கும் பாகீரதிக்கும் நேர்ந்த விபத்தைக் கேள்விப்பட்டுத் துடித்துப் போக அவரைப் பெரும்பாடு பட்டு அமைதிப்படுத்தினார் ஜெகத்ரட்சகன். இரு குடும்பத்தினருக்கும் அன்றைய இரவு முழுவதும் கண்ணீரில் கரைந்தது. ஆனால் தங்கள் வீட்டுப் பெண்களுக்கும் ஆபத்தில்லை என்ற சிறு நிம்மதி அவர்களுக்கு தைரியத்தைக் கொடுத்தது.

தொடரும்💘💘💘