💘கண்மணி 25💘

சாந்திவனம்

காலையிலேயே வானதியும் பாகீரதியும் குளித்துச் சீக்கிரமாக தயாராயினர். அன்றைய தினம் ஜெகத்ரட்சகனின் பிறந்தநாள். அருண் அஞ்சனாவிலாசத்தில் தந்தையின் பிறந்தநாளுக்கு ஏற்பாடுகளைச் செய்து முடித்திருந்தான்.

முந்தைய தினம் அவன் போனில் அழைத்து வானதியையும் பாகீரதியையும் மறுநாள் தங்களது இல்லத்துக்கு வந்துவிடும்படி சொல்லிவிட்டான். எனவே வானதி அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்திருந்தாள்.

பாகீரதி உடை மாற்றிவிட்டுப் போனுடன் ஹாலுக்கு வந்தவள் காலையிலேயே ஈஸ்வரிடம் இருந்து அழைப்பு வர சற்றும் யோசிக்காது அழைப்பைத் துண்டித்துவிட்டாள். சில நாட்களாக அவனது அழைப்பை வேண்டுமென்றே தவிர்த்து வந்தாள். எல்லாம் தந்தையின் செயல்பாடுகளை பவானியின் வாயால் கேட்ட பிறகு உண்டான ஞானோதயம் தான்.

மீண்டும் மீண்டும் அவன் அழைக்கவும் போனை சைலண்ட் மோடில் போட்டுவிட்டு வானதிக்காக அவள் காத்திருக்கும் போதே மாடிப்படிகளில் இறங்கி வந்தாள் பவானி.

நேரே பாகீரதியிடம் வந்து நின்றவள் அவளிடம் அந்த புத்தாடை இருந்த பார்சலை ஒப்படைத்தாள்.

காலை நேர சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டுத் திரும்பிய அன்னபூரணியும் சுவாமிநாதனும் கோயில் பிரசாதத்தைப் பாகீரதியிடம் கொடுத்தவர்கள் “இத உன் பெரியப்பா கிட்ட மறக்காம குடுத்துடும்மா” என்று சொல்லிவிட்டு வாடிப் போய் நின்ற பவானியைத் தேற்ற ஆரம்பித்தனர்.

“ஏன் உம்முனு இருக்க பவாகுட்டி? அடுத்த வருசம் உங்கப்பா பிறந்தநாள்ல நீ உரிமையா போய் கலந்துக்குவ… அவன் கோவம்லாம் இன்னும் கொஞ்சநாள்ல காணாம போயிடும்டா” என்றபடி அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தார் அன்னபூரணி.

வானதியும் தனது அலங்காரத்தை முடித்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள். லோகநாயகி அவளிடம் ஒரு சிறிய டிபன் பாக்சில் இனிப்பு செய்து கொடுத்தார்.

“ஜெகாண்ணாவுக்கு அன்னாசிப்பழம் போட்ட கேசரினா உயிர்… இதை மறக்காம அஞ்சு அண்ணி கிட்ட குடுத்துடு” என்று சொல்ல அந்த டிபன் பாக்சை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டாள் அவள்.

சிறிது நேரத்தில் சமையலறையிலிருந்து வெளியே வந்த செண்பகாதேவியும் மகளிடம் தான் வாழ்த்து சொன்னதாக மாமாவுக்குத் தெரிவிக்கும்படி சொல்லிவிட அனைவரின் வாழ்த்தையும் சுமந்தபடி அஞ்சனாவிலாசத்துக்குக் கிளம்பத் தயாராயினர் பாகீரதியும் வானதியும்.

ஞானதேசிகன் தனது காரை மகளிடம் ஒப்படைத்தவர் “ஸ்பீடா டிரைவ் பண்ணக் கூடாது… இங்க இருந்து நேரா அத்தை வீட்டுக்குப் போகணும்… அங்க ஃபங்சன் முடிஞ்சதும் இங்க வந்துடணும்… கார் தான் இருக்கேனு வேற எங்கயும் போயிடக் கூடாது… இப்போ நிலமை சரியில்ல” என்று பொடி வைத்துப் பேசும் போதே சிவசங்கரும் வந்துவிட்டான்.

“அப்பா சொன்ன மாதிரி கவனமா போயிட்டு வாங்க… இன்னும் கொஞ்சநாளுக்கு நம்ம வீட்டுல உள்ளவங்க யாரும் தனியா வெளியே போகவேண்டாம்… நானோ அப்பாவோ மாமாவோ துணைக்கு வந்தா தான் வெளியே போகணும்” என்று கறாராகச் சொல்ல என்னவோ பெரிய பிரச்சனை கிளம்பிவிட்டது போல என எண்ணிக் கொண்டனர் லோகநாயகியும் செண்பகாதேவியும்.

  சமீபத்தில் ஏதேனும் வழக்கில் பெரிய கைகளுக்கு எதிராக தங்கள் நிறுவனத்தினர் ஆஜராகி இருப்பார்கள். அதில் வெற்றியும் கிட்டியிருக்கும். கூடவே அந்தப் பெரிய கைகளின் விரோதமும் பரிசாய் கிடைத்திருக்கும். இத்தனை வருடத்தில் இம்மாதிரி பல நிகழ்வுகளைக் கண்டுவிட்டதால் இவை அனைத்தும் அவ்வீட்டினருக்குப் பழகி போயிருந்தது.

எனவே தமையனும் தந்தையும் சொல்வதைத் தலையாட்டிக் கேட்ட வானதி நல்ல பெண்ணாய் பாகீரதியை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.

ஆனால் ஒன்று, அந்த வீட்டுப்பெண்மணிகள் இவ்விசயத்தைத் தீவிரமாய் எடுத்துக்கொண்ட அளவுக்கு பவானி யோசிக்கவில்லை. அப்போதே அவளிடம் தாங்கள் சொன்ன பிரச்சனையின் தீவிரம் குறித்து அந்த வீட்டின் ஆண்கள் விளக்காமல் விட்டது பின்னாட்களில் எத்துணை பெரிய இக்கட்டில் அவளை மாட்டிவைக்கப் போகிறது என்பதை அறிந்த விதி கவலையுடன் அந்நாளுக்காய் காத்திருக்க ஆரம்பித்தது.

****************

அஞ்சனாவிலாசம்

அருண் வீட்டின் வேலையாட்கள் உதவியுடன் ஹாலை அழகாக அலங்கரித்திருந்தான். அஞ்சனாதேவி கணவருக்காக தனது கையால் கேக் செய்தவர் அதை அலங்கரிக்கப்பட்ட மேஜையில் வைத்துவிட்டு மகன் செய்த ஏற்பாட்டைச் சிலாகித்து அவனுக்கு உதவிய வேலையாட்களிடம் இன்முகத்துடன் சில வார்த்தைகள் பேச அவர்களுக்கும் சந்தோசம்.

அருண் கேக்கின் அருகில் அன்னையை நிறுத்தி புகைப்படம் எடுத்தான். பின்னர் தானும் அஞ்சனாதேவியும் சேர்ந்து எடுத்த செல்பியை தங்கையின் கட்செவியஞ்சலுக்கு அனுப்பி வைத்தான்.

அப்போது தான் வெளியே காரின் சத்தம் கேட்கவும் “பாகியும் நதியும் வந்துட்டாங்கனு நினைக்கேன்மா” என்றவனின் குரலில் இருந்த உற்சாகம் அவன் அன்னையைக் கூர்ந்து கவனிக்க வைக்க மகனோ அன்னையின் ஆராய்ச்சிப்பார்வையில் நாக்கைக் கடித்து அசட்டுச்சிரிப்பொன்றை உதிர்த்தான்.

அதற்குள் பெண்கள் இருவரும் வீட்டுக்குள் வரும் அரவம் கேட்டு வாயில் புறமாய் திரும்பினர் அன்னையும் மைந்தனும். பாகீரதி ஓடி வந்து அஞ்சனாதேவியை இறுக்கமாய் அணைத்துக் கொண்டு “பர்த்டே பாய் எங்க போனார் பெரியம்மா?” என்று செல்லம் கொஞ்ச ஆரம்பித்தாள்.

வானதியின் பார்வை வீட்டின் அலங்காரங்களை திருப்தியுடன் அளவிட்டதோடு அவ்வபோது அருண் மீது பட்டு மீண்டது. அருண் அவளது பார்வை தன்னை தழுவிச் செல்வதைக் கண்டுகொண்டவனாய் புருவம் உயர்த்தி என்னவென வினவ அவளோ ஒன்றுமில்லையே என்று உதட்டைப் பிதுக்கித் தோளைக் குலுக்கினாள்.

அஞ்சனாதேவியிடம் “அத்தை மாமாவோட பர்த்டேக்கு ஸ்பெஷலா என்ன பண்ணிருக்கிங்க? எங்க மம்மி அவங்க அண்ணாவுக்குப் பிடிச்ச அன்னாசிப்பழம் போட்ட கேசரி குடுத்துவிட்டுருக்காங்க… இதை பிடிங்க” என்று டிபன் பாக்சை ஒப்படைத்தாள்.

அப்போது அவரது அறையிலிருந்து ஹாலுக்குள் நுழைந்த ஜெகத்ரட்சகன் இருவரையும் கண்டதில் மகிழ்ந்தவர் வானதி நீட்டிய புத்தாடையைப் பார்த்ததும் புருவம் சுருக்கினார்.

வருடந்தோறும் மகள் வாங்கித் தரும் புத்தாடையை அணிந்து பிறந்தநாள் கொண்டாடும் பழக்கம் உடையவருக்கு இந்த வருடம் அப்படி இருக்கப் போவதில்லை என்ற வருத்தம் உள்ளுக்குள் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தான் நடமாடினார்.

ஆனால் அந்தக் குறையைப் போக்கும் விதமாய் மருமகள் புத்தாடையை நீட்டவும் அவர் முகம் தானாய் மலர்ந்தது. ஆவலுடன் பிரித்துப் பார்த்தவர் “ரொம்ப நல்லா இருக்குடாம்மா… தேங்க்ஸ்டா” என்று சொல்லவே வானதி அவரை முறைத்து வைக்க நன்றியை வாபஸ் வாங்கிவிட்டு மருமகள் கொடுத்த சட்டை அடங்கிய பிக் ஷாப்பருடன் தனது அறைக்குள் நுழைந்தார்.

அதை அணிந்துவிட்டு பிக் ஷாப்பரை எடுக்கவும் உள்ளே கிடந்த வானதியின் மொபைல் கிண்கிணி நாதமாக இசைத்தது. அதை எடுத்தவர் “நதிம்மா உன்னோட போனை மறந்து இதுக்குள்ளவே வச்சு குடுத்திட்டியாடா?” என்று சத்தமாய் அழைக்க

ஹாலில் இருந்த அருண் “ஏய் நதி! உன் போனை பிக் ஷாப்பர்ல போட்டுட்ட போல… போய் வாங்கிட்டு வா” என்று சொல்ல வானதி அவசரமாய் அவன் வாயைப் பொத்தியவள் சட்டென அருகில் இருந்த அறைக்குள் அவனைத் தள்ளிவிட்டுத் தானும் உள்ளே சென்றாள்.

கேள்வியாய் பார்த்த பாகீரதியையும் அஞ்சனாதேவியையும் கண்ணால் அடக்கிவிட்டு திகைத்து நின்ற அருணிடம் திரும்பியவள் “நான் வேணும்னு தான் போனை அதுக்குள்ள போட்டு விட்டேன்… மாமா பவா கிட்ட பேசட்டும்” என்று சொன்னதும் அவனும் அமைதியானான்.

“உனக்கு இவ்ளோ மூளை இருக்குதா? நாட் பேட்” என்று பாராட்டியவனின் பேச்சில் மனம் குளிர்ந்தவள் அவனைத் தனது கண்ணால் படம் பிடிக்க ஆரம்பித்தாள்.

அவளது பார்வை மாற்றத்தை மனதில் குறித்துக் கொண்டவன் “இப்போலாம் அடிக்கடி எங்க வீட்டுக்கு வர்ற மாதிரி இருக்கு… திடீர்னு மாமா அத்தை மேல பாசமா?” என்று கேட்க

“மாமா அத்தை மேல பாசம் தான்… ஆனா அதை விட மாமா பெத்த மகன் மேல கொஞ்சம் எக்ஸ்ட்ரா பாசம்” என்று கண்ணைச் சுருக்கி தனது ஆட்காட்டிவிரலின் நுனியை அளந்து காட்டினாள் வானதி.

அதைக் கேட்டதும் குறும்பாய் இதழ் வளைத்த அருண் “கொஞ்சநாளா நீ ஒரு மார்க்கமா சுத்துற… இது சரியில்லயே” என்று கேலியாய் ராகம் பாட

“கொஞ்சநாளா இல்ல என் அத்தை மகனே… என்னைக்கு என்னை உங்க கையால கீழ விழாம பிடிச்சு நிறுத்தி கியூட்டா ஒரு மேக்னட்டிக் ஸ்மைல வீசுனிங்களோ அப்போ இருந்தே நான் ஒரு மார்க்கமா தான் இருக்கேன்… அத்தை மகன் மனசு வச்சா பழைய மாதிரி நார்மல் ஆயிடுவேன்” என்றாள் கண்களில் குறும்பு மின்ன.

அருண் வாயடைத்துப் போய் நிற்க அவள் அழகாய் புன்னகைத்தவள் “இனிமேயாச்சும் மனசு வைங்க அருண்” என்று சொல்லி கண்ணைச் சிமிட்டினாள். அருண் அவளது குறும்புச்செய்கையில் திகைத்துப் போய் நிற்க அங்கே ஜெகத்ரட்சகன் வானதியின் போனில் வந்த அழைப்பை ஏற்கவா துண்டிக்கவா என்று புரியாது விழித்தவர் அவளிடமிருந்து பதில் வராததால் அழைப்பை ஏற்றார்.

போனை காதில் வைத்து “ஹலோ” என்றவர் மறுமுனையில் “அப்பா” என்ற மகளின் குரல் கேட்டதும் ஒரு கணம் கலங்கி நின்றார்.

அவர் அமைதியாய் இருக்கவும் “அப்பா பேசுங்கப்பா… ப்ளீஸ்பா” என்ற மகளின் கெஞ்சல் குரல் அவர் மனதை அசைக்கவும் மெதுவாய் “சொல்லு பவா” என்றார் சுருதி இறங்கிய குரலில்.

அவர் பழையபடி பவா என்று அழைத்ததில் மகிழ்ந்த பவானி மகிழ்ச்சியில் கண்ணீர் பெருக்கியவளாய் “ஹாப்பி பர்த்டேப்பா… டிரஸ் பிடிச்சிருந்துச்சா?” என்று ஆசையாய் கேட்க ஜெகத்ரட்சகனுக்கு அழுகையில் குரல் கட்டிக் கொண்டது.

அவர் கண்ணீர் விட்ட கணங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவரது தாயாரின் மரணம் அதன் பின்னர் அவரது பிரியத்துக்குரிய நாதன் மாமாவின் முதல் கோபம் இந்த இரண்டு சம்பவங்களின் போது மட்டுமே அவரது கண்களில் கண்ணீர் சுரந்ததாக அவருக்கு நியாபகம்.

அதன் பின்னர் இன்று தான் மகளின் குரலை நீண்டநாட்களுக்குப் பின்னர் கேட்ட சந்தோசமும் நெகிழ்ச்சியுமாய் கண்ணீர் விடுகிறார் அவர்.

“ரொம்ப நல்லா இருக்குடா…” என்றவரால் கோபத்தை விடுத்து திறந்த மனதுடன் மகளிடம் பேச முடியவில்லை. இன்னுமே தனது நம்பிக்கையை உடைத்த விசயத்தில் அவருக்கு மகள் மீது வருத்தம் மிச்சமிருந்தது.

எனவே தாமரை இலை தண்ணீராக பேச்சை முடித்துவிட்டுத் தன் அறையிலிருந்து தெளிவான முகத்துடன் வெளியே வந்தார்.

நமட்டுச்சிரிப்புடன் ஹாலுக்கு வந்த வானதி மாமாவிடம் இருந்து போனை வாங்கிக் கொண்டாள்.

பாகீரதி ஆர்வத்துடன் “பெரியம்மா உங்களுக்காக செஞ்ச கேக்கை சீக்கிரமே வெட்டுங்க… ப்ளீஸ்” என்று சொல்லவே அனைவரும் மேஜையின் முன்னே குழுமினர்.

ஜெகத்ரட்சகன் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு கேக்கை வெட்டியவர் முதல் துண்டை மனைவிக்கு ஊட்டிவிட வானதி அதைத் தனது மொபைலில் புகைப்படமாய் சேமித்தாள்.

அடுத்தடுத்து பாகீரதிக்கும் அருணுக்கும் ஊட்டிவிட்டு வானதிக்கும் ஊட்டினார்.

அதன் பின்னர் கேக் துண்டுகளை வேலையாட்களுக்கு வினியோகிக்க சொன்னவர் ஓய்வாகச் சோபாவில் அமர்ந்தார். வானதியும் அஞ்சனாவும் கேக்கை வினியோகிக்க அருணும் பாகீரதியும் அவருக்கு எதிர் சோபாவில் அமர்ந்து கொண்டனர்.

அப்போது அருணுக்குப் போனில் கிளையண்டிடம் இருந்து அழைப்பு வரவே அவன் எழுந்து சென்று விட பாகீரதியின் போனில் அழைத்தான் ஈஸ்வர். வழக்கம் போல இணைப்பைத் துண்டித்தாள் அவள். ஆனால் அவன் விடாமல் அழைக்க அவள் அடிக்கடி இணைப்பைத் துண்டித்ததில் புருவம் சுருக்கிய ஜெகத்ரட்சகன்

“எடுத்துப் பேசும்மா… ஏன் கட் பண்ணுற?” என்று வினவ

“ஈஸ்வர் தான் பெரியப்பா… அவனுக்கு வேற வேலை இல்ல” என்றாள் பாகீரதி விட்டேற்றியாக.

ஏற்கெனவே ஈஸ்வர் பற்றிய தகவல் வானதி மூலமாக அஞ்சனாவுக்கும் அஞ்சனா மூலமாக ஜெகத்ரட்சகனுக்கும் சென்றுவிட்டது.

அதை வைத்து “ஏன்டா அவனுக்கு என்ன? நல்ல பையன்…. கை நிறைய சம்பாதிக்கிறான்” என்றார் அவர் தண்மையாக.

அதோடு ஈஸ்வரின் கலகலப்பான சுபாவம் பற்றி ஒரு லெக்சர் அடிக்கவும் பாகீரதி அனைத்தையும் காது கொடுத்து கேட்டவள் தனக்கு ஆண்கள் மீதே நம்பிக்கை இல்லை என்றாள் உறுதியானக் குரலில்.

அந்தப் பதிலில் ஜெகத்ரட்சகன் திடுக்கிட்டார். ஆண்கள் மீதே நம்பிக்கையற்று போகும் வகையில் அந்த நவீனின் செயல்பாடுகள் பாகீரதியைப் பாதித்துவிட்டது போல என எண்ணியவர்

“எல்லாரும் நவீன் மாதிரி இருப்பாங்கனு ஏன் நினைக்கிற பாகி? உன் வீட்டு ஆம்பளைங்களை மாதிரி நல்லவங்களும் இருப்பாங்கடா” என்று சொல்லவும்

“வீட்டு ஆம்பளைங்க சரியானவங்க தான்… ஆனா என்னோட அப்பா…. அவர் சரியில்லையே பெரியப்பா” என்றாள் கம்மிய குரலில்.

“சகலைக்கு என்னடா? நல்ல மனுசன்” – ஜெகத்ரட்சகன்.

“நல்ல மனுசனா? அந்த நல்ல மனுசன் தான் இத்தனை வருசமா எங்கம்மாவ மதிக்காம வாய்க்கு வந்தபடி பேசி அடக்கி வச்சிருந்தார்… தாத்தாவும் மாமாவும் அவருக்கு எவ்ளோ மரியாதை குடுப்பாங்க தெரியுமா? ஆனா அவங்களுக்குத் தெரியாம சைடுல நிறைய சம்பாதிக்கிறார் பெரியப்பா… இத நான் இன்னும் வீட்டுல யாரு கிட்டவும் சொல்லல… தாத்தாவையும் மாமாவையும் என் காது பட ஒரு நாள் திட்டுனார்… அப்போ தான் பவா சொன்னது உண்மைனு எனக்கே புரிஞ்சுது…. எங்கப்பா ஒரு சந்தர்ப்பவாதினு தெரிஞ்சதுமே எனக்கு ஆம்பளைங்க மேல இருந்த கொஞ்சநஞ்ச மதிப்பும் போயிடுச்சு”

அவள் சொன்னதைக் கேட்ட ஜெகத்ரட்சகனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. எந்த அரிஞ்சயனை அவர் கள்ளமற்றவர் என எண்ணினாரோ அவரின் இன்னொரு பக்கத்தை அவரது மகள் மூலமாக தெரிந்து கொண்டார் இன்று.

இரு மருமகன்களையும் மகனுக்கு நிகராய் மதிப்பவர் சுவாமிநாதன். அதிலும் தன் விசயத்தில் மகனைக் காட்டிலும் தன்னிடம் அவர் அதிகம் அக்கறை காட்டினார் என்பதில் ஜெகத்ரட்சகனுக்கு எவ்வித சந்தேகமுமில்லை.

ஆனால் எந்த அரிஞ்சயன் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் தன் மனதில் தனது மாமா குடும்பத்தினரைப் பற்றிய தீய எண்ணங்களை விஷமாய் ஏற்றினாரோ அவரது கருத்துக்களில் முதல் முறை ஐயம் கொண்டார் ஜெகத்ரட்சகன்.

செண்பகாதேவி போன்ற அப்பாவியிடம் மோசமாய் நடந்து கொள்ளும் மனிதன் எப்படி தனக்கு நல்லது நினைத்து தன் நலனை விரும்பியிருப்பார் என்ற கேள்வியோடு காலம் கடந்து அவரது பேச்சைக் கேட்டுத் தான் கொஞ்சம் தடம் மாறிவிட்டோமோ என்ற பயமும் ஜெகத்ரட்சகனுக்குள் எழுந்தது.

பல வருடங்களுக்கு முன்னர் செழியன் ஒரு பெண்ணை ஏமாற்றிய வழக்கில் ஜெயித்ததில் அவரது பங்கு எதுவுமில்லை. அதோடு அந்தப் பெண்ணுக்காக ஜெகத்ரட்சகனும் வருந்தினார் தான். ஆனால் மாமனார் அந்த வழக்கின் முடிவால் ஆடிய ருத்திர தாண்டவத்தில் கோபத்தில் வீட்டைக் காலி செய்து விட்டு சொந்தக்காலில் நிற்க முடிவு செய்தவர் பெரிதாய் நீதி நேர்மை பார்த்ததில்லையே!

அதற்கெல்லாம் மாமனாரும் மைத்துனரும் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று தனது மனதில் பதிய வைத்த அரிஞ்சயன் தானே முக்கியக் காரணம். தன்னைப் போல பெற்றோரை இளம்வயதில் இழந்தவர் தனக்கு தீமை நினைக்க மாட்டார் என்று எண்ணித் தான் அரிஞ்சயன் சொன்னதை ஆழ்ந்து யோசிக்காது ஒப்புக்கொண்டார் ஜெகத்ரட்சகன்.

ஆனால் அது தவறோ என்ற சந்தேகம் முதல் முதலாய் அவர் மனதில் துளிர் விட்டது. காலம் கடந்த அந்தச் சந்தேகத்தால் அவரது செயல்பாடுகளில் மாற்றம் வருமா? மீண்டும் தனது மாமா குடும்பத்தினருடன் பழைய ஜெகாவாக அவர் வாழும் நாள் வருமா? இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் விடை தெரிந்தவர்கள் ஜெகத்ரட்சகனின் மனசாட்சியும் அவரைப் படைத்த இறைவனும் மட்டுமே!

தொடரும்💘💘💘