💘கண்மணி 24💘

சிவசங்கரும் பவானியும் நகரின் பெரிய டெக்ஸ்டைல் ஷாப்புக்கு வந்திருந்தனர். அவன் பொறுமையுடன் அவள் தேர்ந்தெடுக்கட்டும் என்று காத்திருந்தான்.

பவானி என்ன வாங்குவது என்று ஒரு கணம் யோசித்தவள் வழக்கம் போல வெண்ணிற சட்டையையே வாங்கும் முடிவுக்கு வந்துவிட்டாள். சட்டையை வாங்கிவிட்டுக் கிளம்ப எத்தனித்தவள் சிவசங்கருக்கு எதாவது வாங்க வேண்டும் என்று எண்ணினாள்.

அவனிடமே கேட்டுவிடலாம் என்று நினைத்தவள் “உங்களுக்கு ஒரு ஷேர்ட் வாங்கவா?” என்று கேட்க

அவனோ நமட்டுச்சிரிப்புடன் “தாராளமா வாங்கு… பட் எனக்கும் ஒயிட் ஷேர்ட் தான் வேணும்” என்று மனைவியின் கையில் மாமனாருக்காக வாங்கி வைத்திருந்த வெள்ளைச்சட்டையைக் காட்டவும்

“ப்ச்… அது அப்பாவுக்குனு வாங்குனேன்… உங்களுக்கு வேற கலர்ல பாக்கலாம்” என்றவள் அவனைக் கையோடு அழைத்துச் சென்று ஒவ்வொரு சட்டையாகப் பார்த்து உதட்டை பிதுக்கினாள்.

கிட்டத்தட்ட இருபது முதல் முப்பது சட்டைகளைப் பார்த்தும் அவளுக்கு வாங்குவதற்கான எண்ணம் வரவில்லை.

“இந்தக் கலர்ஸ் எல்லாமே உங்க கிட்ட இருக்குதே… நான் இல்லாத கலரா வாங்கணும்னு நினைச்சேன்” என்று முகத்தைச் சுருக்கியபடி தேடியவளுக்கு கடைசியில் அவளுக்குப் பிடித்த மாதிரி ஒரு சட்டையும் அகப்பட்டு விட்டது.

முகமலர்ச்சியுடன் அதையே பில் போட அனுப்பியவள் பில் கவுண்டருக்குச் செல்ல காலெடுத்து வைக்க சிவசங்கர் அவளைக் கரம் பற்றி நிறுத்தினான்.

“நீ மட்டும் எனக்கு வாங்கி குடுத்தியே… உனக்கு எதுவும் வேண்டாமா?”

“என் கிட்ட நிறைய டிரஸ் இருக்கு சிவா… இப்போ போய் எதுக்கு வேஸ்டா வாங்கணும்?”

“இசிட்? அப்போ என் கிட்ட கூட தான் நிறைய ஷேர்ட்ஸ் இருக்கு… நான் நீ வாங்கிக் குடுக்கிறப்போ வேண்டாம்னு சொன்னேனா? நீயும் சமத்து பொண்டாட்டியா நான் வாங்குறத அக்செப்ட் பண்ணிப்பியாம்”

செல்லமாக பேசியபடியே புடவைகள் இருக்கும் பிரிவுக்கு அவளை இழுத்துக் கொண்டு சென்றான். பவானி வேண்டாமென மறுக்க மறுக்க புடவைகளை அவளுக்குக் காட்டச் சொன்னான்.

அவளுக்குப் பிடித்த வண்ணங்கள் எது என்றோ, அவளுக்கு எதை உடுத்தினால் நன்றாக இருக்கும் என்றோ அறியாதவன் அதை எடு இதை எடு என்று விற்பனைப்பிரதிநிதியை பாடாய்ப்படுத்தினான்.

பவானி அவனிடம் “பாவம் அவங்க… ஏன் இவ்ளோ டார்ச்சர் பண்ணுறிங்க சிவா?” என்று சொல்ல

“அவங்க வேலையே அது தான்.. நீ கொஞ்சம் சும்மா இரு… அந்த கிரீம் கலர் ஷேரிய எடுங்க” என்று சொல்ல அந்த விற்பனைப் பிரதிநிதியும் அவன் காட்டிய கிரீம் வண்ணப் புடவையை எடுத்து நீட்டினார்.

அதை வாங்கியவன் அவள் மேலே வைத்துவிட்டு செல்பி கேமராவில் அவளுக்குக் காட்ட பவானியின் விழிகள் புடவையை விட தன்னிடம் புன்னகையோடு அதைக் காட்டிக் கொண்டிருந்த கணவன் மீது தான் பதிந்திருந்தது எனலாம்.

மனம் துள்ளிக் குதிக்க அதே நினைவுகளுடன் அந்தப் புடவையை எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாள்.

இருவரும் வாங்கிய ஆடைகள் அனைத்துக்கும் பில் போடும் போது சிவசங்கரும் பவானியும் ஒரே நேரத்தில் தங்களின் கார்ட்களை நீட்ட பில் போடும் சிப்பந்தி யாரிடம் வாங்குவது என புரியாது விழித்தார்.

“நானே பில் பே பண்ணுறேன் சிவா… உங்க கார்டை உள்ள வைங்க” என்று முணுமுணுத்தாள் பவானி.

“நோ வே… நான் தான் பே பண்ணுவேன்” என்றான் சிவசங்கர் பிடிவாதமாக.

“எங்கப்பாவுக்கு பர்த்டே கிப்ட் குடுக்கிறது என்னோட செலவா இருக்கட்டுமே சிவா”

“உனக்கு அவர் அப்பானா எனக்கு மாமனார்… ஏன் நான் செலவளிக்க கூடாதா? ஃபர்ஸ்ட் அஃப் ஆல் உனக்கும் எனக்கும் இடையில என்னோடது, உன்னோடதுனு ஏன் பிரிச்சுப் பாக்குற பவா?… இங்க எல்லாமே நம்மளோடது மட்டும் தான்… புரியுதா?” என்று அதட்டலாய் மொழிந்தவன் தனது ஏ.டி.எம் கார்டை பில் போட நீட்டினான்.

பணம் செலுத்தியதும் பிக் ஷாப்பர்களை வாங்கிக் கொண்டு இருவரும் கிளம்பும் போது சிவசங்கரின் முகம் உம்மென்று இருக்கவே பவானி யோசனையுடன் வாங்கிய உடைகளை காரின் பின்னிருக்கையில் வைத்துவிட்டு முன்னிருக்கையில் அவனருகில் அமர்ந்து கொண்டாள்.

கார் வேகமெடுத்ததும் அவனது புஜத்தைச் சுரண்டியவள் “கோவமா? அது ஏன் உங்களுக்குச் சட்டுசட்டுனு கோவம் வருது?” என்று குழந்தையாய் கேட்க அவனோ அவளது கரத்தைச் சட்டென்று தள்ளிவிட்டான்.

கண்களை இறுக மூடித் திறந்தவன் காரை ஓட்டியபடியே பேச ஆரம்பித்தான்.

“உனக்கு இப்போ வரைக்கும் நான் ஒரு ஹஸ்பெண்டா மனசுல பதியவே இல்லயா பவா? நீ ஏன் இப்பிடி பிரிச்சுப் பாக்குற? ஓகே! எனக்கு மிஸ்டர் ஜெகத்ரட்சகனைப் பிடிக்காது… அதுக்காக அவர் உன்னோட அப்பாங்கிறத நான் மறந்துட மாட்டேன்… உனக்காக அவரை சகிச்சிட்டுப் போறது எனக்கு ஒன்னும் அவ்ளோ கஷ்டம் இல்ல பவா” என்று இறுகியக்குரலில் முடித்தான்.

அவனது கோபம் நியாயமானது என்று பவானிக்கும் புரிந்தது. கூடவே சில நாட்கள் அவனது விட்டேற்றியான போக்கை அனுபவித்ததால் அவளால் அவனிடம் உரிமை எடுத்துக்கொள்ள முடியவில்லை. அதை அவனிடம் சொல்லவும் தயக்கமாக இருக்க கண்களை உருட்டி விழித்தாள் அவள்.

“என்ன பேச்சையே காணும்?” என்றவனின் குரல் அதட்டவும் அவனை நோக்கியவள் மெதுவாய் தன் மனதில் உள்ளதை மறைக்காது சொல்லிவிட்டாள்.

“அது… நீங்க என் கிட்ட சொன்னிங்கள்ல நம்ம ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிப்போம்னு… அது வரைக்கும் சரி… ஆனா என்னால உங்க கிட்ட அப்பிடி உரிமை எடுத்துக்க முடியல சிவா… அது ஏன்னு…” என்றவளைத் தன் பார்வையால் அமைதியாக்கினான் அவன்.

அதன் பின் இருவரும் பேசிக்கொள்ளாமலே வீடு வந்து சேர்ந்தனர். அன்னபூரணியும் சுவாமிநாதனும் ஹாலில் இருக்க அவர்களிடம் தாங்கள் வாங்கிய ஆடைகளைக் காட்டிய பவானி சிவசங்கர் மௌனமாய் தாத்தாவின் அலுவலக அறையை நோக்கிச் செல்லவும் பெருமூச்சு விட்டாள்.

லோகநாயகி மருமகள் காட்டிய புடவையைப் பார்த்துவிட்டு மகனது தேர்வைப் பாராட்டினார். வானதியும் பாகீரதியும் கேலியாய் பேசி பவானியை நாணச் செய்ய அவள் வேகமாக தங்களின் அறைக்குள் வந்து சேர்ந்தாள்.

அவன் வாங்கிக் கொடுத்த புடவையைத் தன் மீது வைத்து டிரஸ்சிங் டேபிள் கண்ணாடியில் காணும் போதே தனக்கு அருகில் அவன் பிம்பம் நிற்பது போன்ற தோற்றம் ஏற்பட அவள் முகத்தில் ஏற்கெனவே இருந்த நாணம் இன்னும் சிவப்பு வண்ணத்தை அழகாய் பூசி அவள் கன்னங்களை ரோஜா மொட்டுகளாய் மாற்றியது.

எல்லாம் ஒரு சில நொடிகள் தான். கணவனின் கோபம் இன்னும் தீரவில்லை என்ற நினைவு வந்ததும் முகம் மாறிப்போனது அவளுக்கு.

இரவுணவின் போதும் அவனது பாராமுகம் தொடர பவானிக்கு அது பெருத்த வேதனையை உண்டாக்கியது. முகம் மாறாது சிரமத்துடன் காத்தவள் ஒருவழியாய் இரவுணவை ருசி தெரியாமல் விழங்கி வைத்தாள்.

பின்னர் சிறிது நேரம் வீட்டினருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டுத் தங்களின் அறைக்குள் அடைக்கலமானவளின் உள்ளம் கணவனின் வருகைக்காக காத்திருந்தது.

சிவசங்கர் அன்று வெகு நேரம் கழித்து தான் அறைக்குத் திரும்பினான். பவானி அவனைக் கண்டதும் வேகமாக எழுந்தாள்.

“ஐ அம் ரியலி சாரி சிவா… நான் உங்கள ஹர்ட் பண்ணனும்னு எப்போவும் யோசிச்சது இல்ல… ஆக்சுவலி நான்…” என்றவளின் இதழில் கை வைத்துத் தடுத்தவன்

“ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்… நீ உன்னோட லவ்வ சொன்ன நாள்ல இருந்து நான் அதுக்கு ஆமா இல்லனு பதில் சொன்னதே கிடையாது… உன்னைக் கிண்டல் பண்ணிருக்கேன்… முதல்ல நீ என் கிட்ட உன்னோட லவ்வ சொன்னப்போ நான் அத சீரியசா நினைக்கல… ஆனா ஆறு வருசமா உன்னோட லவ் மாறாம அதே லெவல்ல இருந்தப்போ கொஞ்சம் ஆச்சரியமாவும் இருந்துச்சு… இந்த வருசம் நீ மோதிரம் போட்டுவிட்டப்போ எனக்கும் ரொம்ப பிடிச்சிருந்துச்சு…

அப்போ எனக்கு என்ன தோணுச்சுனா நீ என்னைக்கு இருந்தாலும் எனக்குத் தான்னு தோணுச்சு… ஆனா பார்ட்டில உங்கப்பா நீ நவீனை மேரேஜ் பண்ணிக்கச் சம்மதிச்சிட்டேனு சொன்னதும் எனக்குள்ள எதுவோ உடைஞ்சு போன மாதிரி ஒரு வலி… அந்த வலி தான் கோவமா மாறி வார்த்தையால அன்னைக்கு உன்னை காயப்படுத்தக் காரணமா மாறுச்சு..

உன்னை நான் ஹர்ட் பண்ணுனது தான் நான் செஞ்ச பெரிய தப்பு… அது தான் உன்னை என் கிட்ட இருந்து தள்ளி வைச்சிடுச்சுனு நினைக்கேன்” என்று சொல்லிவிட்டு அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

பவானி கணவனது அணைப்பில் கட்டுண்டு நின்றவள் “சிவா…” என்று முணுமுணுக்க அவனது கரங்கள் அவளது தோளை வருடிக் கொடுத்தன.

“இனிமே எப்போவும் நீ வேற நான் வேறனு யோசிக்க கூடாது… சிவாவும் பவாவும் வேற வேற இல்ல… ரெண்டு பேரும் ஒருத்தர் தான்… சரியா?” என்று கொஞ்சலாய் கேட்டவனை நிமிர்ந்து நோக்கினாள் அவள்.

“நானே சொன்னாலும் நீங்க விட மாட்டிங்கனு எனக்குத் தெரியும் சிவா” என்றவள் எம்பி நின்று அவனது தாடையைப் பற்றித் தன் புறம் திருப்பி தனது செவ்விதழைப் பதித்தாள்.

மனைவியின் செவ்விதழ் ஸ்பரிசத்தை முதல் முதலில் உணர்ந்தவன் கண் மூடி அதை அனுபவிக்க பவானி அவன் கன்னத்தில் தட்டியவள்

“என்ன கண்ணை மூடித் தூங்கிட்டிங்களா? உங்களலாம் என்ன தான் பண்ணுறது? ஒரு மனுசி கிஸ் பண்ணுனா அதை ஃபீல் பண்ணணும்… இப்பிடி தூங்க கூடாது மிஸ்டர் ரோபோ மூஞ்சி” என்றாள் கேலியாக.

“கண்ணை மூடுனா தூங்குறேனு அர்த்தமா? நானும் ஃபீல் பண்ணிட்டுத் தான் இருந்தேன் மை டியர் ஒய்ப்” என்றான் குறும்பாக.

“இசிட்? உங்க மூஞ்சி எப்போவும் ஒரே ரியாக்சனை காட்டுது… நீங்க ஃபீல் பண்ணுறிங்கனு எனக்கு எப்பிடி தெரியும்?” என்று விழி விரித்து கூறியவளின் மூக்கை நிமிண்டியவன்

“தெரிஞ்சிக்க ஒரு ஐடியா இருக்கு” என்றபடி அவள் புறம் குனிந்தவன் அவளது கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட பவானியின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது.

சிவா அவளை விடுவித்தவன் “இப்பிடி ப்ரூவ் பண்ணா போதுமா மேடம்? இல்ல பிளேசை மாத்தி கிஸ் பண்ணனுமா?” என்றபடி அவளின் இதழ் நோக்கிக் குனிய பவானியின் இதயம் தடதடவென அதிர ஆரம்பித்தது.

நெற்றியில் வியர்வை மொட்டுகள் மலரட்டுமா என கேட்க ஆரம்பிக்க சிவசங்கருக்கு அவளது பதற்றம் புரிந்தது.

“ஏன் இவ்ளோ டென்சன்?” என்றவன் அவளது நெற்றி வியர்வையை தனது கைக்குட்டையால் ஒற்றி எடுக்க

“அது… வந்து… நீங்க…. நீங்க இன்னும் என் கிட்ட ஐ லவ் யூனு சொல்லவே இல்ல… அப்புறம் எப்பிடி?” என்று சன்னமான குரலில் குறை பட்டவளின் பதிலில் அவனுக்குச் சிரிப்பு தான் வந்தது.

அவள் முறைக்கவும் சிரிப்பை அடக்கியவன் “இது என்ன சினிமாவா? டிராமாவா? முழங்கால் போட்டு டூ யூ லவ் மீனு கேக்குறதுக்கு? நீ நிறைய சினிமா பாத்து கெட்டுப் போயிருக்க பவானி… காதல்ங்கிறது ஐ லவ் யூங்கிற மூனு வார்த்தைல அடங்குற விசயம் இல்ல… அந்த வார்த்தைய சொல்லிட்டா அவங்க லவ்வர்ஸ்னு அர்த்தமும் இல்ல… காதலை வாழ்ந்து பாத்து உணரணுமே தவிர வெறும் வாய் வார்த்தையால உணர்றது என்னைப் பொறுத்தவரைக்கும் பத்தாம்பசலித்தனம்” என்று அவளிடம் லெக்சர் அடித்தவனை வியப்பாய் நோக்கினாள் பவானி.

“வாவ்! என்னை விட உங்களுக்குக் காதலை பத்தி ஏகப்பட்ட விசயம் தெரிஞ்சிருக்கே சிவா… இந்தக் கட்டப்பாக்குள்ளவும் ஒரு ரோமியோ ஒளிஞ்சிருக்கான்… நாட் பேட்” என்றவள் அவன் கன்னத்தைக் கிள்ளி தன் உதட்டில் ஒற்றிக் கொண்டாள்.

“உன்னை மாதிரி மூச்சுக்கு முன்னூறு தடவை ஐ லவ் யூனு சொல்லுறவங்கள விட என்னை மாதிரி காதலை தன்னோட செய்கைல காட்டுறவங்க தான் லவ்ல ரொம்ப ஸ்ட்ராங்கா இருப்பாங்க”

அழுத்தமான குரலில் இதைச் சொல்லும் போதே ‘நானும் காதலில் உறுதியானவன் தான்’ என்பதை அவள் மனதில் பதியவைத்தான் சிவசங்கர். அதில் மகிழ்ந்தவளாய் அவனை இறுக அணைத்துக் கொண்டவள் “ம்ம்… லவ்வுக்கு புது டெபனிசன் குடுத்திருங்க… நான் மனப்பாடம் பண்ணிக்கிறேன் சிவா” என்றாள் பவானி கேலியாக.

அவளது இந்த உரிமையான பேச்சுக்கும் காதல் பார்வைகளுக்கும் இத்தனை நாட்கள் ஏங்கியிருந்தவனின் மனம் அன்றைய இரவு மனைவி தனது அணைப்பில் சிறைபட்டபடி நின்றதிலேயே நிறைந்து போனது.

Hதொடரும்💘💘💘