💘கண்மணி 22💘
அரிஞ்சயனைத் திட்டிவிட்டு கையோடு செண்பகாதேவியைத் தன்னுடன் அழைத்து வந்த பவானி அவரைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டாள். அன்று வார இறுதி என்பதால் வேலையாட்கள் வழக்கம் போல விடுமுறை எடுத்துக்கொள்ள வானதியும் பாகீரதியும் லோகநாயகியுடன் சேர்ந்து சமையலறையில் கொட்டமடித்துக் கொண்டிருந்தனர்.
தான் பேசுவது அவர்களில் யார் காதிலும் விழுந்துவிடக் கூடாதென பதறியவளாய் தனியே அழைத்து வந்தாள்.
“ஏன் சித்தி இப்பிடி இருக்கிங்க? அவரு திட்டுனார்னா பதிலுக்குப் பேச வேண்டியது தானே… எங்கம்மாவ அப்பா அவ்ளோ லவ் பண்ணுறார்… ஆனா அப்பா காரணம் இல்லாம திட்டுனா அம்மா பொறுத்துப் போக மாட்டாங்க… அந்த இடத்துலயே பதிலடி குடுத்துடுவாங்க… அவங்க தான் அடிக்கடி சொல்லுவாங்க… வாழ்க்கைல காதல் அன்புலாம் முக்கியம் தான்; அது நம்ம சுயமரியாதை உரசிப் பாக்காத வரைக்கும்னு…
அம்மா அப்பாவ விட்டுத் தனியா இருக்குற எங்கம்மா இவ்ளோ தூரம் யோசிக்கிறப்போ நீங்க ஏன் பயப்படுறிங்க? உங்களுக்கு ஒன்னுனா துடிச்சுப் போற தாத்தா, தட்டிக் கேக்குற மாமானு எல்லாரையும் கூடவே வச்சுகிட்டு ஏன் இந்த அடிமை வாழ்க்கை சித்தி?”
செண்பகாதேவியால் அவளுக்குப் பதிலளிக்க இயலவில்லை. இயல்பிலேயே மிகவும் சாந்தசொரூபியான அவருக்கு அஞ்சனாதேவியின் துணிச்சல் கிஞ்சித்தும் கிடையாது.
“நீ சொல்லுறது எல்லாம் சரி தான் பவா… ஆனா அக்காவும் மாமாவும் வீட்டை விட்டு போனப்போ அப்பா ரொம்ப கலங்கி போயிட்டார்டா… மகளுக்குத் தப்பான ஒருத்தரை கல்யாணம் பண்ணிவச்சிட்டோமேனு உள்ளுக்குள்ள அவர் ரொம்பவே உடைஞ்சு போயிட்டார்… ஏதோ என்னோட வாழ்க்கைய நினைச்சு அவருக்கு இருக்கிற அரை குறை நிம்மதியையும் கெடுக்கவேண்டாமேனு தான் நான் பாகி அப்பாவ பத்தி வெளிய யாரு கிட்டயும் மூச்சு விடல” என்று சொல்லவும் பவானிக்கு அதுவும் சரி தான் என்று தோணியது.
ஆனால் இனி இது தொடராது என்று சித்திக்கு வாக்களித்தவள் “இத பத்தி உங்கப்பா கிட்ட சொன்னா தானே பிரச்சனை… நான் சிவா கிட்ட பேசுறேன்… அதோட ட்வென்டி ஃபைவ் லாக்சுக்கு அவருக்கு என்ன செலவுனு நமக்குத் தெரிஞ்சே ஆகணும் சித்தி” என்றாள் தீவிரக்குரலில்.
செண்பகாதேவியும் மத்திமமாய் தலையாட்டியவர் உள்ளுக்குள் சிறு நிம்மதி துளிர் விட அக்கா மகளின் முகத்தை வருடிக் கொடுத்துவிட்டு
“உன் இஷ்டம்டா.. இன்னைக்கு நீ பேசுனதிலேயே மனுசன் பொட்டிப்பாம்பா அடங்கிட்டார்… அவர் தப்பான வழிக்குப் போயிட கூடாதேனு நான் கடவுள் கிட்ட வேண்டிப்பேன்டா… நீ சிவா கிட்ட பக்குவமா எடுத்துச் சொல்லி அவரைக் கொஞ்சம் கண்காணிக்கச் சொல்லும்மா” என்றார் சற்று கவலையான குரலில்.
“நான் இப்போவே ஆபிஸ்ல போய் அவரை மீட் பண்ணுறேன் சித்தி… மாமா இன்னைக்கு வீட்டுல தானே இருக்கார்… வீட்டுல வச்சு பேசுனா எப்பிடியும் சிவாவோட உம்மணாமூஞ்சிய வச்சே எல்லாரும் சம்திங் ராங்னு கண்டுபிடிச்சிடுவாங்க… நான் சொல்லுறப்போ கோவப்பட்டு அவர் கத்துனாலும் காரியம் கெட்டுடும் சித்தி… சோ நான் ஆபிஸ்ல போய் எல்லா விவரத்தையும் சொல்லிடுறேன் சித்தி.. ரொம்ப லேட் பண்ணுனா நமக்கே பிரச்சனையா மாறிடும்” என்ற பவானி சித்தியை வீட்டுக்குள் செல்லுமாறு சொன்னவள் ஹாலில் அமர்ந்திருந்த அன்னபூரணியிடம் தன் தோழியைச் சந்தித்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
“இன்னும் கொஞ்சநேரத்துல லஞ்சுக்கான டைம் வந்துடும்… சாப்பிட்டுட்டு ஃப்ரெண்ட பாக்க போகலாம்ல பவா” என்றவரைச் சமாளித்துவிட்டு ஸ்கூட்டியை நாதன் அண்ட் அசோசியேட்சை நோக்கி விரட்டினாள்.
மதியவெயிலுடன் சென்னையின் போக்குவரத்தும் சேர்ந்து கொள்ள அலுவலகத்தை அடையும் முன்னர் அவள் வெந்து நொந்து போனாள்.
விறுவிறுவென உள்ளே நுழைந்தவளை காலியான ரிசப்சனும் தரைத்தளமும் தான் வரவேற்றன. படிக்கட்டுகளில் ஏறியவள் மேல்தளத்தின் கடிகார பெண்டுலத்தைப் பார்வையிட்டபடியே சிவசங்கரின் அலுவலக அறையை அடைந்தாள்.
கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்த பின்னர் தான் அவளுக்கு ஏசி காற்றில் போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. கைகளால் காற்றை விசிறியபடியே நாற்காலியில் தொப்பென்று அமர்ந்தவளைக் கண்டதும் கவனம் கலைந்தான் சிவசங்கர்.
கையில் வைத்திருந்த பெரிய புத்தகத்தை மூடி வைத்தவன் ஆட்காட்டிவிரலையும் பெருவிரலையும் சேர்த்து தாடைக்கு அண்டை கொடுத்தபடி சுழல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
பவானி தான் வந்த விசயத்தைச் சொல்லும் முன்னரே தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தவன் “இன்னும் ஒன் ஹவர்ல நானே வீட்டுக்கு லஞ்ச் சாப்பிட வந்திருப்பேன்… தேவையே இல்லாம இப்பிடி வெயில்ல வந்து கஷ்டப்படணுமா?” என்று கரிசனத்தோடு வினவ
“யூ ஆர் ரைட் சிவா…. பட் வீட்டுல வச்சு இத உங்க கிட்ட சொல்ல முடியாதுனு தான் நான் இங்க வந்தேன்” என்று ஆரம்பித்த பவானி தனது சித்தியிடம் சித்தப்பா நடந்து கொண்ட விதத்தைச் சொல்லிவிட்டாள்.
“இது ரொம்ப நாளா நடக்குது சிவா… சித்தி தான் யார் கிட்டயும் சொல்லல… அவங்களுக்குக் கல்லானாலும் கணவன்ங்கிற டிபிக்கல் இந்தியன் ஒய்ப் மெண்டாலிட்டி… அதோட ஆல்ரெடி அம்மாவோட லைபை நினைச்சு தாத்தா ஒரி பண்ணுறார்.. இதுல தன்னைப் பத்தியும் ஏன் நினைச்சு வருத்தப்படணும்னு சித்தி இத்தனை வருசமா எல்லா விசயத்தையும் மறைச்சிட்டாங்க… இது பாகிக்குக் கூட தெரியாதுனு நினைக்கேன்… ப்ளீஸ் டூ சம்திங் சிவா” என்று வேண்டுகோள் வைத்தவளை புருவம் சுழித்தபடி பார்த்தான் சிவசங்கர்.
அவனது பார்வையைத் தவறாகப் புரிந்துகொண்டாள் பவானி. உடனே உள்ளுக்குள் கோபம் ஊற்றெடுக்க ஆரம்பிக்க முகம் சிவந்தாள்.
“என்ன லுக்? ஓ! ஜெகத்ரட்சகனோட பொண்ணு சொல்லுறது உண்மையா பொய்யானு சந்தேகப்படுறிங்களோ? சை… உங்க கிட்ட சொல்லணும்னு வந்தேன் பாருங்க… என்னைச் சொல்லணும்” என பொரிந்து கொட்டினாள்.
சிவசங்கர் அவளது பேச்சை நிறுத்த முயன்று தோற்றவன் “ஷட்டப்” என்று மேஜையில் தட்டி அதட்டவும் திடுக்கிட்டு அமைதியானாள் பவானி.
“நான் என்ன யோசிச்சேனு தெரியாம உன் வாய்க்கு வந்தபடி பேசாத பவா… நான் சின்ன மாமாவ பத்தி தான் யோசிச்சேன்… ரீசண்டா அவரோட பிஹேவியர்ல நிறைய மாற்றம் இருக்குற மாதிரி தான் எனக்கும் தோணுச்சு… பட் இவ்ளோ பெரிய அமவுண்ட் எதுக்குனு தான் புரியல” என்றவன் ஆட்காட்டிவிரலால் நெற்றியைத் தட்டிக் கொண்டான்.
“ஓகே! இனிமே அவரை நான் வாட்ச் பண்ணுறேன்… நீ சின்னத்தை கிட்ட வீணா டென்சன் ஆகவேண்டாம்னு சொல்லிடு” என்று சொன்னவன் அதில் அவள் முகம் தெளியவும் குறுநகை புரிந்தான்.
“அவ்ளோ தானா விசயம்? இல்ல இன்னும் எதுவும் இருக்குதா?”
அவன் குறும்பாய் கேட்ட விதத்தில் ஒரு நிமிடம் அவளது இதயம் ஹிப்ஹாப் ஆடி அடங்கியது. ஆனால் முகத்தில் அதைக் காட்டிக் கொள்ளாமல் இருந்தாள் அவள்.
“இன்னும் உங்க கிட்ட பேசுறதுக்கு எனக்கு என்ன இருக்கும்னு நீங்க நினைக்கிறிங்க?”
“நிஜமா ஒன்னும் இல்லயா? நியூ மேரிட் ஒய்புக்கு ஹஸ்பெண்ட் கூட பேசுறதுக்கு எவ்ளோ விசயம் இருக்கும்… ஃபார் எக்சாம்பிள் எங்கயாச்சும் அவுட்டிங் போலாமா, ஹனிமூன் போலாமா, பிறக்கப் போற குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம் இப்பிடி நிறைய விசயம் இருக்குதே பவா… நீ ஏன் என் கிட்ட இப்பிடி எதையும் கேக்குறது இல்ல?”
“பிகாஸ் இது எதையும் எதிர்பாத்து உங்கள நான் மேரேஜ் பண்ணிக்கல… நான் இந்த மேரேஜுக்குச் சம்மதிச்சது தாத்தாவுக்காகவும் நம்ம ஃபேமிலிக்காகவும் தான்…”
“அப்போ உனக்கு என் மேல லவ் இல்ல!”
“எனக்கு உங்க மேல எந்த ஃபீலிங்கும் இல்ல… என்னை விடுங்க… நீங்க மட்டும் காதல்ல கசிந்துருகியா என்ன மேரேஜ் பண்ணிக்கச் சம்மதிச்சிங்க? எல்லாமே தாத்தாவுக்காக தானே”
“அப்போ நான் சம்மதிச்சது தாத்தாவுக்காக தான்… ஆனா இப்போ என்னோட மனசுல உன் மேல குட் ஒபீனியன் வந்துடுச்சு… நீ கொஞ்சம் போல ஜெகத்ரட்சகன் மாதிரி தான்… பட் யார் கிட்ட தான் குறை இல்ல? ஐ கேன் அட்ஜெஸ்ட்… அதே மாதிரி நான் என்னென்னவோ பேசிருக்கலாம்… உன்னை ஹர்ட் பண்ணிருக்கலாம்.. அதை நீயும் மறந்துடு… வீ வில் ஸ்டார்ட் அ நியூ லைஃப் பவா”
அவன் குரலில் இருந்த ஆர்வமும் இலகுபாவமும் பவானிக்குச் சிலிர்ப்பை உண்டாக்கியது. ஆனால் இன்னும் அவன் மன்னிப்பு கேட்கவில்லையே என எண்ணி முறுக்கிக் கொண்டாள் அவள்.
“என்னாச்சு? உன் முகத்துல இன்னும் சந்தோசம் வரலயே?” – சிவசங்கர்.
“அதுக்கு நீங்க இன்னும் கொஞ்சம் கஷ்டப்படணும்… பட் அதுக்கு அவசியம் இல்ல சிவா” என்றாள் பவானி விட்டேற்றியாக.
அவளின் இந்த அலட்சியம் அவனை உசுப்பேற்ற “என்ன பண்ணனும்னு சொல்லு… ஐ வில் டிரை” என்று அழுத்தமான குரலில் அவன் ஆணையிடவும்
“நீங்க என் கிட்ட மன்னிப்பு கேக்கணும்… என்னோட காதலை தூக்கி எறிஞ்சு பேசுனதுக்காக, உங்களுக்கு நான் ஆசையா குடுத்த மோதிரத்தை எவனோ ஒருத்தனுக்குக் குடுனு சொன்னதுக்கு, வார்த்தையால என்னைக் கொன்னதுக்கு இப்பிடி நிறைய விசயத்துக்கு நீங்க என் கிட்ட மன்னிப்பு கேக்கணும்” என்றாள் பவானி தெளிவாக.
அதைக் கேட்டதும் சிவசங்கரின் முகம் கறுத்து இறுகவும் இவனுக்கு இருக்கும் ஆணவத்துக்கு இவனாவது, தன்னிடம் மன்னிப்பு கேட்பதாவது என்று அலட்சியமாய் எண்ணமிடும் போதே அவன் எழுந்தான்.
எழுந்தவன் அவளருகே கிடந்த நாற்காலியில் அமர்ந்தான். பின்னர் பொறுமையாக “நான் மன்னிப்பு கேட்டுட்டா நீ என்னை முன்னாடி மாதிரி லவ் பண்ணுவியா என்ன?” என்று கேட்க “ஐ வில் டிரை” என்று அவளும் மிதப்பாக பதிலளித்தாள்.
“சரி… அப்போ என்னை மன்னிச்சிடு… நான் சொன்னது எதுவும் இப்போ வரைக்கும் எனக்குச் சரியா நியாபகம் கூட இல்ல… ஆனா நான் சொன்னது உன்னை இவ்ளோ தூரம் காயப்படுத்திருக்கும்னு நான் யோசிக்கல பவா… பட் அன்னைக்கு பார்ட்டில உங்கப்பா நீ நவீனை மேரேஜ் பண்ணிக்க மனசாற சம்மதிச்சிட்டனு சொன்னார்…
உனக்கும் அப்பானா ரொம்ப இஷ்டம்னு தெரியும்… அதனால எனக்கு அன்னைக்குக் கண் மண் தெரியாம கோவம் வந்துடுச்சு… நீ என் கிட்ட என்ன சொல்ல வந்தேனு கூட யோசிக்காம உன்னைக் கத்திட்டேன் பவா… ஆனா அன்னைக்கு மேரேஜ் ஃபங்சன்ல உங்கப்பா வாயால நீ ஒன்னும் சந்தோசமா சம்மதிக்கலனு தெரிஞ்சுது… நதி கூட அன்னைக்கு நீ என் மனசுல என்ன இருக்குனு கேட்டு என்னைப் பத்தி உங்கப்பா கிட்ட பேசணும்னு டிசைட் பண்ணிருந்தனு சொன்னா… அப்புறம் தான் எனக்குப் புரிஞ்சுது உன் மனசுல இருந்த லவ்வ நான் என்னோட கோவத்தால கொன்னுட்டேன் பவா… ஐ அம் ரியலி சாரி… வில் யூ ஃபர்கிவ் மீ?”
மனதாற மன்னிப்பு கேட்டவனின் விழிகளில் அன்று அவளைக் தவறாகப் புரிந்துகொண்டு காயப்படுத்திவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சி தெரிய சிவசங்கரின் கரத்தைப் பற்றி ஆதுரத்துடன் அழுத்தினாள் பவானி.
அவன் இவ்வளவு எளிதில் மன்னிப்பு கேட்பான் என்று கனவிலும் அவள் நினைத்தது இல்லை. முன்னர் எப்படியோ இப்போது அவனது மனைவியாக ஒரே கூரைக்குக் கீழ் வசிக்கும் போது அவனது குணநலன்களைப் பற்றி ஓரளவிற்கு அவளும் புரிந்து வைத்திருந்தாள். அப்படிப்பட்டவன் தன்னிடம் மன்னிப்பு கேட்டதும் அவளது மனதுக்கு நிறைவாக இருந்தது.
தவறே செய்யாது வார்த்தைகளால் வதைபட்டவள் அல்லவா அவள்! அந்நேரத்தில் தக்க பதிலடி கொடுத்துவிடுவாள் என்றாலும் மனதில் அவனது வார்த்தைகள் உண்டாக்கிய வலி அடிக்கடி முணுக் முணுக்கென தலை காட்டும். இன்றோடு அந்த வலிக்கு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று என்ற நிம்மதி பவானிக்கு.
“நீங்க என் கிட்ட சாரி கேப்பிங்கனு நான் எதிர்பாக்கல சிவா… உங்க வார்த்தை என்னைக் காயப்படுத்துனது எவ்ளோ உண்மையோ அதே அளவுக்கு நீங்க கேட்ட மன்னிப்பு அந்தக் காயத்துக்கு மருந்து போட்ட மாதிரி இருக்கு… ஆம்பளைங்கிற ஈகோ இல்லாம பேசுற இந்த குணம் ஒன்னு மட்டும் போதும், இதுக்காகவே நீங்க கோவத்துல பேசுன எல்லா வார்த்தையையும் நான் மறந்துடுவேன் சிவா” என்று மென்மையாக உரைத்தாள் பவானி.
அதன் பின்னர் இருவரும் இலகுவாகச் சிரித்துப் பேச ஆரம்பிக்க பழைய நாட்கள் திரும்பி வந்தது போல இருந்தது இருவருக்கும்.
தனது வார்த்தைகள் உண்டாக்கிய காயத்துக்குத் தனது மன்னிப்பு வார்த்தைகளால் மருந்து பூசியவன் மனைவியின் மென்மையான பேச்சில் மெதுமெதுவாய் தன்னை மறந்து அவளது பேச்சில் அமிழத் தொடங்கினான்.
தொடரும்💘💘💘