💘கண்மணி 20💘

மணமகளின் தந்தை சுதர்சன் சுவாமிநாதனுக்குத் தூரத்து உறவு. அந்த முறையில் ஜெகத்ரட்சகன் சுதர்சனுக்கு அண்ணன் முறை வேண்டும். அதனால் தான் ஜெகத்ரட்சகனே நேரில் வந்திருந்தார். இல்லையெனில் மனைவியையோ மகனையோ அனுப்பி வைத்திருப்பார். ஆனால் வந்த இடத்தில் மகளையும் மருமகனையும் கண்டவருக்கு மனம் அலைபாய்ந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மணமேடையில் கண் பதித்தார்.

ஆனால் உள்ளமெங்கும் மகள் எப்படி இருக்கிறாளோ என்ற கவலை தான். அவளது பார்வை தன் புறம் திரும்பும் போதெல்லாம் மருமகன் ஏதோ சொல்வது கண்ணில் படவும்

“இவனுக்கு இப்போ என்னவாம்? எப்போவும் பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி ஆடாம அசையாம தானே இருப்பான்… இன்னைக்கு ஏன் ரொம்ப பேசுறான்?” என்று அவனை மனதுக்குள் வறுத்தெடுத்தபடியே மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்தினார்.

சிவசங்கர் மனைவியின் முகம் இறுகி இருப்பதன் காரணம் மாமனார் தான் என தவறாய் ஊகித்தவன் அவள் மனதை மாற்ற என்னென்னவோ பேச அவளோ தந்தை இருப்பதால் தன்னிடம் சகஜமாய் பேசுவதைப் போல காட்டிக் கொள்கிறான் என எண்ணிக் கொண்டாள்.

அவனிடம் மணமக்களுக்குப் பரிசு கொடுத்துவிட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு மணமேடையை அடைந்தவள் பரிசுப்பொருளை நீட்டி வாழ்த்து சொல்ல மணமகள் அவளிடம் சகஜமாக உரையாடியதால் சிரித்துப் பேச வேண்டியதாயிற்று.

அவள் சிரிப்பதை உள்ளூர ஆதுரத்துடன் பார்த்தபடி நின்றவரிடம் வந்த சிவசங்கர் “பொண்ணு மேல இவ்ளோ பாசம் இருக்கிறவர் ஏன் அவளை ஒதுக்கி வைக்கணும்?” என்று கேலி விரவியக் குரலில் கேட்க ஜெகத்ரட்சகன் பார்வையை மேடையிலிருந்து அகற்றித் தன் அருகில் விஷமப்புன்னகையுடன் நின்றவன் மீது திருப்பினார்.

“பாசமா? எனக்கா? உங்க கண்ணுல ஏதோ கோளாறுனு நினைக்கேன் மிஸ்டர் சிவசங்கர்… நான் பொண்ணையும் மாப்பிள்ளையையும் வாழ்த்திட்டுக் கிளம்பலாம்னு வெயிட் பண்ணுறேன்… ஆனா மேடைல உங்க ஒய்ப் நிக்கிறாங்க… அவங்களோட நானும் சேர்ந்து வாழ்த்த விரும்பல… சோ எப்போ இறங்குவாங்கனு வெயிட் பண்ணுறேன்” என்றார் பிசிரற்ற குரலில்.

சிவசங்கர் கேலியாகப் புன்னகைத்தவன் “இசிட்? நீங்க சொன்னா நான் நம்பித் தானே ஆகணும் மாமனாரே” என்று சொல்ல அவரது முகம் சிவக்கத் தொடங்கியது.

“ஷட்டப்.. உன் வாயால என்னை மாமனார்னு சொல்லாத… அவ எனக்குப் பொண்ணே இல்லனு ஆனதுக்கு அப்புறம் நான் என்னடா உனக்கு மாமனார்?”

“சும்மா விளையாடாதிங்க… உங்க மகள் உங்களோட ஜெராக்ஸ் காப்பினு உங்களுக்கும் தெரியும்… எனக்கும் தெரியும்.. அப்புறம் எதுக்கு இந்த வெறுப்பு டிராமா?”

“டிராமாவா? நீ இன்னும் சரியா புரிஞ்சிக்கல சிவா… எப்போ கல்யாணம் பண்ணுனா உன்னைத் தான் பண்ணுவேன்… இல்ல காலம் முழுக்க என் மகளாவே வாழ்ந்துடுவேனு என்னை எமோசனல் பிளாக்மெயில் பண்ணி கல்யாணத்துக்குச் சம்மதிக்க வச்சாளோ அப்போவே நான் மனசாற பவானிய தலை முழுகிட்டேன்… என்னை அசிங்கப்படுத்துன உன் தாத்தாவுக்காக உன்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சவ என்னையும் ஒத்துக்க வைக்க சொன்ன காரணம் இது தான்… எந்த அப்பனுக்குப் பொண்ணு காலம் முழுக்க கல்யாணம் ஆகாம இருக்கிறதுல விருப்பம் இருக்கும்? அதான் நானும் சம்மதிச்சேன்… ஆனா அவளை இனிமே என் மகளா நினைக்க கூடாதுனு எனக்குள்ள சபதம் போட்டுட்டுத் தான் சம்மதிச்சேன்”

அவர் சொல்லி முடிக்கவும் சிவசங்கருக்கு அதிர்ச்சி. தன்னைத் திருமணம் செய்ய பவானி தந்தையிடம் சொன்ன காரணம் அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அவளுக்கு ஜெகத்ரட்சகன் என்றால் உயிர் என்பதை அவன் அறிவான். அப்படிப்பட்டவளா அவரைச் சம்மதிக்க வைப்பதற்காக அப்படி ஒரு வார்த்தையைச் சொல்லியிருப்பாள் என்ற சந்தேகத்துடன் மீண்டும் ஜெகத்ரட்சகன் வாயிலிருந்தே உண்மையைத் தெரிந்து கொள்ள எண்ணினான்.

“நல்லா டயலாக் பேசுறிங்க மாமனாரே… இந்தக் கதைய நான் நம்பியே ஆகணுமா? அன்னைக்கு கீர்த்திவாசன் கிட்ட என்னமோ உங்க மகள் நீங்க பாத்த நவீனை மேரேஜ் பண்ணிக்க சம்மதிச்சிட்டானு பெருமையா சொன்னிங்களே… அவ உங்க பேச்சை தட்ட மாட்டானு உங்களுக்கும் தெரியும்… எனக்கும் தெரியும்… ஏன் வீணா அவளை வெறுக்கிற மாதிரி காட்டிக்கிறிங்க?”

அவனது சீண்டலில் உசுப்பேறியவராய் “அது உன்னை மட்டம் தட்ட நான் சொன்ன பொய்… ஆனா உண்மையா அன்னைக்கு பார்ட்டி முடிஞ்சு வீட்டுக்குப் போனப்போ தான் பவா நவீனை மேரேஜ் பண்ணிக்கச் சம்மதிச்சா… அன்னைக்கு உங்க வீட்டுக்குத் தானே வந்தா… அங்க தான் யாரோ இப்போதைக்குச் சம்மதிக்கிற மாதிரி நடி; அப்புறமா எல்லார் முன்னாடியும் உங்க அப்பாவ அசிங்கப்படுத்தலாம்னு சொல்லிக் குடுத்திருப்பாங்க போல” என்றார் சுவாமிநாதனை மனதில் வைத்து.

ஆனால் மகள் அப்படி செய்யக் கூடியவள் இல்லையே என்று அவரது மனசாட்சி அப்போதும் அவரைக் கடிந்து கொண்டது உண்மை!

சிவசங்கருக்கு அன்று ஏன் பவானி சம்மதித்திருப்பாள் என்பது ஓரளவுக்குப் புரிந்தது. பார்ட்டியிலிருந்து ஜெகத்ரட்சகன் பேச்சு உண்டாக்கிய கோபத்துடன் வந்த தன்னிடம் அவளைப் பற்றிய தனது எண்ணத்தைக் கேட்டு காதலை உறுதிப்படுத்த வந்தவளிடம் தான் பேசக் கூடாத பேச்செல்லாம் பேசியது நினைவுக்கு வந்தது.

அத்தோடு அவள் பரிசாக அளித்த மோதிரத்தை நவீனுக்குப் போட்டு காதல் வசனம் பேசுமாறு அவளை சொற்களால் வதைத்து அனுப்பியது மட்டும் தான் அவளைத் தந்தையின் விருப்பத்துக்குச் சம்மதிக்க வைத்திருக்கும் என்பதை அப்போது புரிந்து கொண்டான் சிவசங்கர்.

அன்றைய தினம் அவள் பேச்சைக் காது கொடுத்துக்க கேட்காமல் போனதன் விளைவு தான் இன்று தங்களிடையே கருத்து வேறுபாடாக உருமாறியிருக்கிறது. என்றுமே பவானி அவனை உண்மையாகத் தான் காதலித்திருக்கிறாள். ஆனால் தானோ அவள் காதலைப் புரிந்து கொள்ளாததோடு அவள் மனதையும் வார்த்தையை வாளாகச் சுழற்றிக் காயப்படுத்திவிட்டோம் என்பதை உணர்ந்து வருந்தினான் சிவசங்கர்.

அந்த நிமிடம் அருகில் நின்ற ஜெகத்ரட்சகன் மறைந்து போனார். அந்த திருமண மண்டபத்தில் இருக்கும் மக்கள் கூட்டம் மறைந்து போனது. அவ்வளவு ஏன்! மேடையில் நிற்கும் மணமக்கள் கூட அவன் கண்ணுக்குத் தெரியவில்லை.

அவன் கண்கள் கண்டது எல்லாம் அவனது சரிபாதியானவளை மட்டுமே. அவளது சிரிப்பு மட்டுமே அவன் கண்களில் பதிந்து இதயத்தில் நுழைந்து அவனது மனதின் அடியாழத்தில் இனிய நாதமாய் ஒலித்தது.

அதன் பின்னர் பவானி கீழே இறங்கி வந்ததும் தன்னிடம் பேசாது திகைத்தப் பார்வையுடன் நின்ற கணவனையும் தன்னைப் பார்க்கப் பிடிக்காதவராய் முகம் திருப்பியபடி மேடையேறிய தந்தையையும் ஒரு சேர நோக்கியவள் தந்தையின் பாராமுகம் மனதை வருத்த அங்கிருந்து செல்லலாம் என கணவனிடம் கூற அவனும் மறுபேச்சின்றி அவளுடன் வெளியேறினான்.

காரில் செல்லும் போது சிவசங்கர் அவளிடம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் மனம் முழுவதும் எண்ணற்ற சிந்தனைகள் அலையாய் மோதிக் கொண்டு இருந்தன.

இதே சிந்தனையுடன் வீடு வந்து சேர்ந்த இருவரும் அதன் பின்னரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சிவசங்கர் மனைவியை வீட்டில் கொண்டு வந்து விட்டவன் அன்னையிடம் சொல்லிவிட்டு அலுவலகத்துக்குக் கிளம்பினான்.

பவானி தந்தையின் நினைவில் கலங்கிய முகத்துடன் உலா வந்தவள் அலுவலகத்தில் அனுமதி பெற்று வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய ஆரம்பித்தாள்.

வேலை நேரத்தில் மற்ற நினைவுகள் எதுவும் தாக்காமல் தப்பித்தவள் மதியவுணவுக்கு வந்த கணவனின் பார்வை தன்னை வலம் வருவதைக் கூட கவனியாது உண்டு முடித்தாள்.

மீண்டும் வேலையில் ஆழ்ந்தவள் இடையில் சிவசங்கர் அவர்களின் அறை வாயிலில் நின்று அவளைக் கவனித்ததைப் பார்க்கவில்லை.

அவனும் அவளைத் தொந்தரவு செய்ய விரும்பாதவனாக அலுவலகத்துக்குக் கிளம்பிவிட்டான். தனது அலுவலக அறைக்குள் நுழைந்தவன் கோப்புகளை ஆராய ஆரம்பித்தான்.

இடையிடையே கிளையண்டுகள் வருகை தர அவர்களிடம் வழக்கு விபரங்களை விவரித்தான். பின்னர் ஜூனியரிடம் நிலுவையில் உள்ள வழக்குகளின் விபரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

இவ்வாறு வேலையில் ஆழ்ந்தவன் திடீரென நினைவு வந்தவனாக தங்கைக்கு அழைத்தான்.

வானதி போனை எடுத்தவள் “என்னடா அண்ணா திடீர்னு கால் பண்ணிருக்க? நான் தான் இன்னும் கொஞ்சநேரத்துல வீட்டுக்கு வந்துடுவேனே” என்று சொல்ல

“உன் கிட்ட ஒரு விசயம் கேக்கணும்… எங்க மேரேஜுக்கு முன்னாடி ஒரு நாள் பவா நம்ம வீட்டுக்கு வந்திருந்தா… நீங்க எல்லாரும் கீழ இருந்தப்போ அவ மட்டும் என் ரூமுக்கு வந்தாளே, அன்னைக்கு அவ எதுக்கு வந்தா?” என வினவ

“உனக்கு இப்போ வரைக்கும் அது தெரியாதாண்ணா?” என்றாள் வானதி ஆச்சரியத்துடன்.

தனக்குத் தெரியாது என சகோதரன் சொல்லவும் திகைத்தவள் அன்றைய தினம் பவானி அவளுக்கும் நவீனுக்கும் ஜெகத்ரட்சகன் திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பதாகச் சொல்லி அவளது காதலைப் பற்றி சிவசங்கர் என்ன நினைக்கிறான் என கேட்டுத் தெரிந்து கொள்ள வந்தாள் என்றாள்.

அவன் மட்டும் நேர்மறையாகப் பேசியிருந்தால் கண்டிப்பாக அவள் தந்தையிடம் சிவசங்கர் மீதான காதலைப் பற்றி சொல்லி அத்திருமண விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பாள் என்றாள்.

இதைக் கேட்டதும் சிவசங்கரின் குற்றவுணர்ச்சி இன்னும் அதிகரித்தது. மாலை சீக்கிரமே வீடு திரும்பியவனுக்கு அவளிடம் பேச கொஞ்சம் தயக்கமாக இருந்தது.

தங்களின் அறைக்குள் நுழைந்தவன் அவள் மடிக்கணினியில் கவனமாய் இருக்கவும் தொண்டையைச் செறுமி தனது இருப்பைக் காட்டவே பவானி அவனை நிமிர்ந்து நோக்கினாள்.

“என்ன வேணும்? காபியா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று எழுந்தவள் அவனைச் சுற்றிக் கொண்டு வெளியேற முயல அவளது கரம் பற்றி இழுத்துத் தன்னருகே நிறுத்திக் கொண்டான்.

பவானி அவனது அருகாமையில் தடுமாறியவள் விலக முயல சிவசங்கர் அவளைப் பிடிவாதமாகத் தடுத்து நிறுத்தினான்.

“என்ன பண்ணுறிங்க சிவா? லீவ் மீ… என்னைத் தேவை இல்லாம டச் பண்ணாதிங்க” என்று பல்லைக் கடித்தாள் அவள்

“தேவையோட தான் டச் பண்ணுறேன் பவா… நீ என் பக்கத்துல நின்னா தான் என்னால கோர்வையா பேச முடியும்” என்றவனின் விழிவீச்சை எதிர்கொள்ள இயலாதவளாய் அவள் முகம் திருப்ப அவளது மோவாயைப் பற்றி தன்னை நோக்கி திருப்பிவிட்டுப் பேச ஆரம்பித்தான்.

“ஆறு வருசத்துக்கு முன்னாடி என் கிட்ட ஒரு பொண்ணு வந்து ஐ லவ் யூ சொன்னா… அப்போ எனக்கு அவளோட பேச்சு சைல்டிஷா தோணுச்சு… ஆனா அவளோட காதல் மேல ஒரு மதிப்பு இருந்துச்சு… அதைப் பாத்து பிரமிப்பு கூட வந்துச்சு… நான் எவ்ளோவோ காரணம் சொன்னாலும் அதைலாம் தூக்கிப் போட்டுட்டு என்னை ட்ரூவா லவ் பண்ணுனா… இந்த வருசம் என்னோட பர்த்டேக்கு அவ குடுத்த கிப்ட் என்னைக் கொஞ்சம் தடுமாற வச்சுது… லவ் பண்ணிப் பாத்தா தான் என்னனு என்னை யோசிக்க வச்சுது… ஆனா அதே நாள்ல நடந்த பிராப்ளமால என்னோட மனசு பூரா இருந்த கோவம் காதலிக்கிற ஆர்வத்தை மழுங்க வச்சிடுச்சு… அவ குடுத்த கிப்டையும் கழட்டி எறிய வச்சுது… அப்புறமும் என்னென்னவோ நடந்து ஃபைனலி நாங்க ஒன்னு சேந்துட்டோம்… சோ அவ குடுத்த கிப்டை மறுபடியும் கைல போட்டுக்கிட்டா என்னனு தோணுது” என்றான் அவன்.

பவானி கேள்வியாய் பார்க்கும் போதே தனது வாலட்டில் வைத்திருந்த பவானி பரிசளித்த மோதிரத்தை எடுத்தவன் அவளிடம் நீட்டி “என் கைல போட்டு விடு பவா” என்று சொல்ல அவள் விழி விரிய அவனை நோக்கினாள்.

பின்னர் சுதாரித்தவளாக “உங்களுக்குக் கை இல்லயா என்ன? நீங்களே போட்டுக்கோங்க” என்று சொல்லிவிட்டு விலக முயல அவன் அவளை நெருக்கமாய் அணைத்துக் கொண்டபடி

“நீ கிச்சனுக்குப் போ; கார்டனுக்குப் போ; வராண்டாவுக்கு போ… ஆனா அதுக்கு முன்னாடி இந்த மோதிரத்தை என் கைல போட்டு விட்டுட்டுப் போ” என்று ராகமாய் இழுத்துச் சொல்லவும் கடுப்புடன் பல்லைக் கடித்தாள் பவானி.

“இவர் அப்பிடியே ஓகே கண்மணில வர்ற துல்கர் சல்மான்… ஆளையும் டயலாக்கையும் பாருங்க… சும்மா இரிட்டேட் பண்ணாம விடுங்க சிவா”

“அப்போ மோதிரத்தை போட்டு விடு”

“ஏன் இப்பிடி குழந்தை மாதிரி பிஹேவ் பண்ணுறிங்க? இப்போ என்ன மோதிரம் போட்டுவிடணுமா? கைய நீட்டுங்க”

அவன் விரலை நீட்டவும் மோதிரத்தை மாட்டிவிட்டு நகர முயல இம்முறை அவளை இடையோடு சேர்த்து இழுத்தவன்

“அன்னைக்கு நீ மோதிரம் மட்டுமா போட்ட? நல்லா யோசி” என்று சொல்லவும் பவானியின் முகம் செவ்வானமாய் மாறிப் போனது.

அவனை அணைத்து ‘ஐ லவ் யூ’ என்று சொன்னது எல்லாம் அவள் மனக்கண்ணில் திரைப்படம் போல ஓட இப்போது தன்னால் அவனை அணைக்க முடியாது என்பதில் தெளிவானவள் அவனிடமிருந்து விடுபடுவதில் குறியாய் இருந்தாள்.

சிவசங்கர் அவளது நோக்கம் புரிந்தவனாய் அவளை விடுவித்தான். விட்டால் போதுமென ஓடிவிட எண்ணியவளை அடுத்த நொடி மார்போடு அணைத்துக் கொண்டவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

“அன்னைக்குச் சொன்னது தான் இன்னைக்கும்… ஐ டோண்ட் நோ வெதர் ஐ அம் இன் லவ் வித் யூ ஆர் நாட்… பட் இனி வாழுற ஒவ்வொரு நாளும் உனக்கு நான்; எனக்கு நீ… நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல வேற யாரும் வர முடியாது” என்றவன் அவளை விலக்கி நிறுத்தினான்.

“அது உன் அப்பாவா இருந்தாலும் சரி” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டுப் புன்னகையுடன் குளியலறையை நோக்கிச் சென்றுவிட்டான்.

பவானியோ அவனது இந்த புதிரானச் செய்கைகளுக்கும் உணர்ச்சிப்பூர்வமான பேச்சுக்கும் காரணம் புரியாது சிலையாய் சமைந்து நின்றாள். இப்போது அவளுள் எழுந்த உணர்வு கோபமா நாணமா என பிரித்தறியக் கூட இயலாதவளாய் சிவசங்கரின் இந்தத் திடீர் செய்கைகள் அவளது மூளையை ஸ்தம்பிக்க வைத்து விட்டன.

தொடரும்💘💘💘