💘கண்மணி 2💘

மாநகரத்தின் இயந்திரத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற உணர்வுடன் அழகான மலர்வனமும் நெடிதுயர்ந்த மரங்களும் சூழ்ந்த அமைதியான சூழலில் கம்பீரமாய் நின்றிருந்தது அஞ்சனாவிலாசம் என்ற பங்களா.

வீட்டுக்கு அரணாய் நிற்கும் காம்பவுண்ட் சுவர்களும் அந்த அரணின் நடுவே இரும்பினாலான கேட்டும் அந்த வீட்டுக்குக் கோட்டை போன்ற உருவமைப்பைத் தந்தது என்றால் அது மிகையாகாது.

வீட்டைச் சுற்றிலும் உள்ள நெடிய மரங்களில் தஞ்சமடைந்திருந்த பறவைகளின் கீச் கீச் என்ற ஒலியுடன் அந்த வீட்டின் மகாராணியும் இல்லத்தரசியுமான அஞ்சனாதேவியின் குரலில் கணீரென்ற கானம் காலைப்பொழுதில் ஒலிக்க ஆரம்பித்தது.

பிரம்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜ துக்க விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

லிங்காஷ்டகத்தை பக்தியோடு மனமுருகிப் பாடியவரின் குரலில் அந்தச் சதாசிவன் இந்தப் பாடலைக் கேட்டாவது தனது மன விருப்பத்தை நிறைவேற்றுவேரா என்ற ஏக்கம் நிறைந்திருந்தது.

இது இன்றோ நேற்றோ வேண்டியது அல்ல! கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக வேண்டுவது தான். ஆனால் சதாசிவனுக்கு அவரது வேண்டுதலைச் செவிமடுப்பதை விட வேறு பல காரியங்கள் இருந்தன போல. அதனால் தான் இன்று வரை நிலமை சீரடைவதற்கான சிறு அறிகுறி கூட இல்லை!

அவரது பாடல் வரிகள் மனதை உருகச் செய்ய அந்த பங்களாவின் வேலையாட்கள் அவரவர் வேலைகளில் மூழ்கிவிட அதன் நடுஹாலில் போடப்பட்டிருந்த சோபாவில் கம்பீரமாய் அமர்ந்து அதை ரசித்துக் கொண்டிருந்தார் ஜெகத்ரட்சகன்.

நகரின் பிரபல வழக்கறிஞர். அஞ்சனாதேவியைக் காதலித்து மணந்த கணவர். எங்கும் எதிலும் கணக்கு போட்டு காய் நகர்த்துபவர் மென்மையாய் இளகிக் கொடுப்பது மனைவி மக்களுக்கு மட்டுமே.

அவர் அமர்ந்திருக்கையில் வெள்ளை சட்டை கறுப்பு பேண்ட் சகிதம் அலுவலகம் செல்லும் தோற்றத்தோடு வந்து சேர்ந்தான் அவரது மூத்தப் புதல்வன் அருண். அந்த இருபத்தெட்டு வயது வாலிபனுக்குத் தந்தை சொல்லே மந்திரம்.

தந்தைக்கு வலக்கரமாக இருக்கவேண்டுமென சட்டம் படித்தவன் அவரது ஜெகன் அசோசியேட்சில் முக்கியப்பொறுப்பில் இருந்தான். அவர்களிடம் ஜூனியர்களாகப் பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தான். மொத்தத்தில் தந்தை சொல் தட்டாத தனயன் அவன்!

சோபாவில் ஜெகத்ரட்சகன் அமர்ந்து கண் மூடி அஞ்சனாவின் கானத்தில் மெய் மறந்திருக்க “மானிங்கே மெடிட்டேசனா டாட்?” என்றபடி அவரருகில் அமர்ந்தான்.

மைந்தனின் குரலில் கண் திறந்தவர் “டெய்லியும் அஞ்சும்மாவோட குரல்ல லிங்காஷ்டகம் கேக்குறப்போ மனசுக்கு இதமா இருக்குடா! வீட்டுக்கே ஒரு தெய்வீகக்களைய குடுக்குற குரல்… மெய் மறக்காம இருக்க முடியுமா?” என்றவரின் விழிகள் ஆராய்ச்சியாய் வீட்டை அலச ஆரம்பிக்கையில் பூஜையறையில் இருந்து வெளியேறி ஹாலுக்கு வந்தார் அஞ்சனாதேவி.

அவரைக் கேள்வியாய் பார்த்த ஜெகத்ரட்சகன் “பவாகுட்டி எங்க அஞ்சும்மா?” என்று கேட்க அஞ்சனாவுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாது மைந்தனை நோக்கினார்.

அன்னையின் சங்கடம் சூழ்ந்த முகபாவத்தில் இரங்கியவன் கண்ணாலேயே “ஏன் தான் இப்பிடி பண்ணுறிங்களோ?” என்ற கேள்வியைக் கேட்டான். கூடவே நேற்று இரவில் பவானி சொன்னதை வைத்து அவள் எங்கே சென்றிருப்பாள் என யூகித்தவனுக்கு முணுக்கென்று கோபமும் வந்தது.

“அப்பிடி என்ன பெரிய மகாராஜானு நீ அவன் பின்னாடி ஓடுற பவா? நீ இப்பிடி உன்னோட செல்ப் ரெஸ்பெக்டை விட்டுட்டு அவன் பின்னாடி சுத்துதால தான் அந்தச் சிவாக்கு இவ்ளோ ஆட்டிட்டியூட்” என்று பொறுமியவனிடம்

“காதல்ல செல்ப் ரெஸ்பெக்ட் பாக்க கூடாதுண்ணா! முக்கியமா குடும்பத்துக்குள்ள பாக்கவே கூடாது” என்று புன்முறுவல் பூத்த தங்கையின் முகம் நினைவுக்கு வந்தது.

கூடவே தன்னையும் தந்தையையும் காணும் போது சிவாவின் முகத்தில் உண்டாகும் அலட்சியமும் நினைவுக்கு வந்து எரிச்சலூட்டியது. ஆனால் தங்கை சென்றிருப்பது அந்தச் சிவாவுக்காக மட்டுமில்லையே.

எனவே தந்தையைச் சமாதானம் செய்யும் விதமாகப் பேச ஆரம்பிக்கும் போதே வெளியே ஸ்கூட்டியின் சத்தம் கேட்க ஜெகத்ரட்சகன் மகள் தான் வருகிறாள் என்பதை கண்டுகொண்டார்.

அஞ்சனாவும் அருணும் பவானியைக் கண்டதும் ஜெகத்ரட்சகன் என்ன சொல்வாரோ என்று விதிர்விதிர்த்து போயிருக்க அவளோ துள்ளிக் குதித்தபடியே வீட்டுக்குள் நுழைந்தவள் தந்தையைக் கண்டதும் விழி விரித்து நோக்கியபடி நடையில் அமைதியைக் காட்டி அவரருகில் வந்து நின்றாள்.

“நீங்க இன்னைக்கு மினிஸ்டரைப் பாக்கப் போகணும்னு சொன்னிங்களே! போகலயா?” என்று கேட்டவளை ஏறிட்ட ஜெகத்ரட்சன்

“இவ்ளோ காலைல நீ எங்கேம்மா போயிட்டு வந்த?” என்று நிதானமாக வினவினார்.

“கோயிலுக்குப்பா” என்றாள் தயக்கத்துடன்.

ஜெகத்ரட்சகன் கூர்ந்து நோக்கியபடியே “உன் தாத்தா பாட்டி எப்பிடி இருக்காங்க?” என்று வினவவும் மூவரும் திடுக்கிட்டு விழிக்க

“அப்பா… அது… நான்” என்று வார்த்தைகளில் தந்தியடிக்க ஆரம்பித்தாள் பவானி. அஞ்சனாவும் அருணும் விழித்துவைக்க மூவரையும் அமைதியாக பார்த்தபடியே

“உன் தாத்தா பாட்டிய பாக்க கோயிலுக்குப் போயிருக்க… ஏன்னா இன்னைக்கு அவங்க கண்டிப்பா அவங்க பேரனோட பிறந்தநாளுக்கு அர்ச்சனை பண்ண கோயிலுக்கு வந்திருப்பாங்க” என்று சொல்லவும் மூவரும் திருதிருவென விழித்தனர்.

பவானி ஏதோ சொல்லவர அவளைக் கையமர்த்தியவர் “உன் தாத்தா பாட்டிய பாக்குறதுக்கு நான் எப்போவுமே தடை சொல்ல மாட்டேன்டா பவா… சண்டை எல்லாமே பெரியவங்களுக்கு இடைல தான்… நீங்க விலகி இருக்கணும்னு அவசியம் இல்லடா.. அருண் இது உனக்கும் தான்” என்றவரை உற்சாகத்துடன் அணைத்துக் கொண்டாள் பவானி.

“அப்பானா அப்பா தான்! எனக்குத் தெரியும்… என்னோட அப்பாவோட மைண்ட் ரொம்ப ப்ராட்… ஐ லவ் யூ சோ மச் அப்பா” என்று சொல்ல மகளின் சிகையை வருடிக் கொடுத்தவர் அஞ்சனாவை அர்த்தம் பொதிந்த பார்வை பார்க்கவும்

“சரி! அப்பா கிட்ட கொஞ்சுனது போதும்.. வந்து ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டுட்டு ஆபிஸ் கிளம்புற வேலையைப் பாரு” என்றார் அஞ்சனா.

பவானி தந்தையை அணைத்தபடியே “அப்பா இன்னைக்கு ஈவினிங் பர்த்டே பார்ட்டிக்கு நதி என்னை இன்வைட் பண்ணிருக்காப்பா… நான் போகவா? போயிட்டுச் சீக்கிரமா வந்துடுவேன்பா.. ப்ளீஸ்பா” என்று சலுகையுடன் வேண்ட அவரும் சரியென்று சொல்லிவிட்டு அலுவலகம் கிளம்பத் தயாராவதற்காக தனது அறைக்குச் சென்றுவிட்டார்.

அஞ்சனாவும் அருணும் பெருமூச்சு விட பவானியோ “என்னமோ ரெண்டு பேரும் ஓவரா பயந்திங்களே! பாத்திங்களா? என்னோட அப்பா உண்மைலயே ஹீரோ தான்” என்று சொல்லிவிட்டு உணவுமேஜையை நோக்கி நகர அருணும் தங்கையைத் தொடர்ந்தான்.

ஜெகத்ரட்சகனும் அலுவலகம் செல்ல உடைமாற்றி வந்துவிட அனைவரும் ஒன்றாய் காலையுணவை முடித்துவிட்டு அவரவர் அலுவலகத்துக்குக் கிளம்பிச் சென்றனர்.

அவர்கள் சென்றதும் அஞ்சனாதேவி கணவரது பேச்சு ஏற்படுத்திய குழப்பத்துடன் அன்றைய பொழுதை ஆரம்பித்தார்.

**************

விஹான் டெக் மென்பொருள் நிறுவனம்

வாகனத் தரிப்பிடத்தில் தனது ஸ்கூட்டியை நிறுத்தி அந்த நான்கு மாடி கட்டிடத்தின் தரைத்தளத்துக்குள் அடியெடுத்து வைத்தாள் பவானி.

வழக்கமான நேரத்துக்குள் வந்துவிட்டோம் என்ற நிம்மதியுடன் ஓ.டி.சிக்குள் நுழைந்தவளை அழுது சிவந்த கண்களும் கலங்கிய முகமுமாய் வரவேற்றாள் அவளது தோழி ரேணுகா.

மணமாகி ஒரு வாரம் தான் ஆகியிருக்க அவளது அழுதிருந்த தோற்றம் பவானியைத் திகைக்கச் செய்தது. என்னவென்று விசாரிப்பதற்குள் அவர்களின் டீம் லீடர் வந்துவிட வேலை சம்பந்தப்பட்ட உரையாடல்கள் ஆரம்பித்தது.

“டெட் லைனுக்குள்ள புராஜக்டை ஃபினிஷ் பண்ணி அனுப்பணும்… நம்ம கிளையண்டுக்கு நம்ம மேல உள்ள நம்பிக்கை போயிடக் கூடாது” என்றவரின் பொதுப்படையான அறிவுரையுடன் அன்றைய வேலையை ஆரம்பிக்க கணினியின் திரைக்குள் கவனமானாள் பவானி.

ஆனால் இடைவேளையில் ரேணுகாவிடம் விசாரிக்க ஆரம்பித்தாள். அவளுக்குச் சமீபத்தில் தான் பதிவு திருமணம் முடிந்திருந்தது. அவளது கணவன் மதனும் இவர்களின் டீமில் தான் இருக்கிறான். வழக்கமான மென்பொருள் நிறுவனக்காதல் கதை தான் அவர்களுடையதும்!

இவர்களின் டீமில் உள்ள அனைவருமே அத்திருமணத்துக்குச் சென்றிருந்தனர். என்ன ஒன்று, இத்திருமணம் ரேணுகாவின் குடும்பத்துக்குத் தெரியாமல் நடந்தது.

ரேணுகாவின் தந்தை சாதி விசயத்தில் கண்டிப்பானவர். எனவே பதிவு திருமணம் செய்துவிட்டுப் பின்னர் சொன்னால் அவர் மன்னித்துத் தங்களை ஏற்றுக் கொள்வார் என்ற குருட்டு நம்பிக்கை ரேணுகாவுக்கும், மதனுக்கும்.

ஆனால் வார இறுதியில் ஊருக்குப் பயணமாகி வீட்டில் விசயத்தைச் சொன்ன ரேணுகாவுக்கும் மதனுக்கும் நடந்ததோ வேறு! ரேணுகாவின் தந்தையும் மதனின் குடும்பத்தினரும் இத்திருமணத்தால் வெகுவாய் கோபமுற்று அவர்களை ஒதுக்கிவிட்டனர்.

அதிலும் ரேணுகாவின் தந்தை அவளைத் தனது மகள் இல்லையென தலைமுழுகி விட தந்தையின் அன்பை மட்டும் பார்த்தவளுக்கு அவரது கோபம் தாங்க முடியாத துயரத்தைக் கொடுத்தது. அதன் விளைவே இந்த அழுகை!

“நம்மள பெத்தவங்களோட அன்பு எவ்ளோ ஆழமானதோ அதே போல நம்ம குடுக்கிற ஏமாற்றத்தால அவங்களுக்கு உண்டாகுற கோவமும் ஆழமானது பவா! அந்தக் கோவம் நம்ம சாகுற வரைக்கும் அவங்க மனசுல இருக்கும்டி”

ரேணுகா சொல்லவும் பவானி திடுக்கிட்டாள். அது எப்படி பெற்ற பெண்ணை ஒரு தந்தையால் ஒதுக்கி வைக்க முடியும்?

இந்தச் சிந்தனைகளினூடே பவானி இருக்க ரேணுகா அவளிடம் “அதை விடு… நதி ஏன் இன்னைக்கு லீவ்?” என்று கேட்க

“அவளோட அண்ணாவுக்கு இன்னைக்கு பர்த்டே… மேடமுக்கு அண்ணானா உயிருடி” என்று சொன்னவள் தான் இன்று மாலை அவர்களின் வீட்டில் நடைபெறப் போகும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள போவதையும் தெரிவித்தாள். பின்னர் இருவரும் வேலையில் ஆழ்ந்துவிட்டனர்.

அன்று மாலை வீட்டுக்குத் திரும்பிவந்தவள் புடவை கட்டி லேயர் கட் செய்த கூந்தலை அழகாய் விரித்துவிட்டுத் தேவதையாய் தயாராக அஞ்சனாதேவி மகளுக்கு நெட்டி முறித்து திருஷ்டி கழித்தவர் மனக்கண்ணில் அவளைச் சிவாவின் அருகில் நிறுத்திப் பார்த்தார்.

ஜோடி பொருத்தம் என்னவோ அபாரம் தான்! ஆனால் இது நடக்குமா? நெஞ்சைப் பிளக்கும் பெருமூச்சை வெளியிட்டபடி “சீக்கிரமா வந்துடணும் பவா… நதிக்குட்டிக்குப் பிடிக்கும்னு நான் பால்கோவா செஞ்சு இந்த பாக்ஸ்ல வச்சிருக்கேன்… இதையும் ஹேண்ட்பாக்ல வச்சுக்கோ” என்று அண்ணன் மகளுக்குப் பிரியமான இனிப்பையும் கொடுத்து விட்டார்.

பவானி அன்னைக்கு டாட்டா காட்டிவிட்டு ஸ்கூட்டியைத் தாத்தாவின் இல்லத்தை நோக்கிச் செலுத்தினாள். உள்ளமெங்கும் அவள் மனம் கவர்ந்தவனின் பிம்பம் தான்!

அதே நேரம் மகளின் ஸ்கூட்டி வெளியே சென்றதும் ஜெகத்ரட்சகனின் கார் அஞ்சனாவிலாசத்திற்குள் நுழைந்தது.

கணவரைக் கண்டதும் புன்னகைத்த அஞ்சனா “டயர்டா இருக்கிங்களேங்க! காபி கொண்டு வரட்டுமா?” என்று கேட்க, அவரை ஏறிட்ட ஜெகத்ரட்சகன்

“பவா உங்கப்பா வீட்டுக்குக் கிளம்பிட்டா போல?” என்று விசாரிக்கவும் அவர் தயங்கினார்.

“ஆமாங்க! இப்போ தான் கிளம்புறா”     

“ம்ம்… உனக்கு இப்போ சந்தோசமா இருக்குமே”

“சந்தோசம் தான்… என் பொண்ணு எங்கப்பா அம்மா கூடவும் அண்ணன் குடும்பத்தோடவும் பழகுறதுல சந்தோசம் இல்லாம இருக்குமா? உங்களுக்கும் ஒரு பிரச்சனையும் இல்லைனு சொல்லிட்டிங்களே”

ஜெகத்ரட்சகன் யோசனையுடன் மனைவியை நோக்கிவிட்டு “எனக்குச் சந்தோசம்னு நான் எப்போ சொன்னேன்? அந்தக் குடும்பத்துல என் பொண்ணு ஒட்டுறது எனக்குச் சுத்தமா பிடிக்கல” என்று இறுகியக்குரலில் உரைக்க

“ஆனா நீங்க தானே…” என்று இழுத்த அஞ்சனாவை கூரியவிழியால் ஏறிட்டவர்

“நான் தான் சொன்னேன்… எல்லா அப்பாவும் தன்னோட பொண்ணுக்கு ஹீரோவா தெரியணும்னு தான் ஆசைப்படுவாங்க… நானும் அப்பிடி தான் நினைச்சேன்… மத்தபடி எனக்கு பவா அவங்க கூட பேசிப் பழகுறதுல துளியும் இஷ்டமில்ல.. ஆடு பகை குட்டி உறவா?” என்று வார்த்தைகளை நெருப்புத்துண்டங்களாக வெளியிட்டுவிட்டு அவர்களின் அறைக்குள் சென்று மறைய அஞ்சனாதேவி கணவரின் பிடிவாதக்குணத்தை நீண்டநாள் கழித்து மீண்டும் ஒரு முறை கண்ட அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இது அறியாத பவானி பலவிதக் கனவுகளுடன் சென்றவள் இடையில் போக்குவரத்து காவலரைச் சமாளித்துச் சலித்து ஒரு வழியாக தாத்தாவின் இல்லத்தை அடைந்தாள்.

 சாந்திவனம் என்று பெயரைத் தாங்கிய அந்த மாளிகைக்குள் நுழைந்தாள் பவானி. வீட்டின் காவலாளிக்கு அவள் பழக்கமானவள் என்பதால் மரியாதைக்கு வணக்கம் வைக்கவும் புன்னகையுடன் அதை ஏற்றபடி உள்ளே சென்று ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு வழக்கமான ரசனை ததும்பும் விழிகளால் வீட்டை நோக்கினாள்.

பெயருக்கேற்றபடியே சாந்தம் நிலவும் மரங்கள் சூழ்ந்த இடத்தில் தான் அவளது தாத்தா சுவாமிநாதனின் தந்தை கட்டியிருந்தார். வரிசையாக வைக்கப்பட்டிருந்த மலர்ச்செடிகளாகட்டும்; பச்சைக்கம்பளம் விரித்து அதன் இடையில் கோடிழுத்தாற்போல செல்லும் நடைபாதையாகட்டும்;

அனைத்தையும் திட்டமிட்டு அழகாய் கட்டியிருந்த கொள்ளுத்தாத்தாவின் ரசனையை மெச்சிக் கொண்டபடியே வீட்டுக்குள் செல்லும் பாதையில் நடைபோட தொடங்கினாள். தந்தையின் மனதிலிருக்கும் இந்த வீட்டாருடன் எந்த உறவும் தேவையில்லை என்ற எண்ணத்தை அறியாதவளாய் அவள் கனவு காணத் தொடங்கிவிட்டதை அறிந்த விதி சிரிக்கத் தொடங்கியது!

தொடரும்💘💘💘