💘கண்மணி 17💘

மறுநாள் விடியல் சாந்திவனத்துக்குப் பரபரப்புடன் தொடங்கியது. அதற்குக் காரணமானவள் பவானி தான். அவளிடம் முந்தைய நாளிரவு பேசிய அவளது தோழனின் வருகைக்காக வீட்டைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தாள்.

அவளுக்கென இருக்கும் நண்பர்கள் வானதியும் ஈஸ்வரும் மட்டுமே. அவ்வாறு இருக்கையில் அவனது வருகைக்காக அவள் பரபரப்பாக இருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லையே!

வானதிக்கோ அண்ணனின் திருமணத்துக்கு எடுத்த விடுப்பு முடிந்து அலுவலகம் செல்லும் பதற்றம் தொற்றிக் கொண்டது. எனவே அவளை விட்டுவிட்ட பவானி பாகீரதியைப் பிடித்துக் கொண்டாள்.

“பாகி இன்னைக்குப் பார்த்து பெரியவங்க எல்லாரும் கோயில் கும்பாபிஷேகத்துக்குப் போகணும்னு தயாராகுறாங்க… நதியும் ஆபிஸ் போயிட்டானா எனக்கு ஹெல்புக்கு யாரு இருக்கா? நீ மட்டும் தான இருக்க… ப்ளீஸ்டி.. கொஞ்சம் மனசு வையேன்” என்று காலையுணவின் போதே கெஞ்ச

“ஓகே பவா… உன்னோட சோ கால்ட் ஃப்ரெண்ட் எப்போ வர்றாரு?” என்று வினவ பவானி அவளிடம் பேச ஆரம்பித்த சுவாரசியத்தில் அங்கே வந்த சிவசங்கரைக் கவனிக்கவில்லை.

அதைப் பார்த்துவிட்ட அரிஞ்சயனோ “நம்ம பவாக்கு சுத்தமா சகலை நியாபகமே இல்ல போல… சும்மாவா சொன்னாங்க பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லுனு” என்று கேலி போல சொல்லவே

“சித்தப்பா அப்பிடி பாத்தா நீங்களும் தவறிப்போன உங்கம்மா அப்பாவ நினைச்சோ, இல்ல உங்கள வளத்த உங்க பெரியம்மாவ நினைச்சோ அழுது கலங்கி நான் பாத்தது இல்லை… அப்பிடி பாத்தா இந்த பழமொழி உங்களுக்கும் பொருந்தும்ல” என்று பதிலடி கொடுத்தாள் பவானி.

அதைக் கேட்டு அரிஞ்சயனின் முகம் போன போக்கைப் பார்த்து சிவசங்கர் சிரிப்பை அடக்க படாத பாடு பட்டான்.

“இப்போ எதுக்கு சிரிக்கிறிங்க? உங்களுக்கு ஆபிசுக்கு லேட் ஆகலயா?” என்று சிவசங்கரை அதட்டியவளை அன்னபூரணியும் சுவாமிநாதனும் பூடகமாய் பார்த்துச் சிரிக்க அன்றைய காலை நேரம் கலகலப்புக்குப் பஞ்சமில்லாமல் கடந்தது.

வழக்கம் போல அலுவலகத்துக்குக் கிளம்பும் முன்னர் வானதி அன்னைக்கும் அத்தைக்கும் முத்தமிடுவது வழக்கம். இம்முறை புதிதாய் வந்த அண்ணியின் கன்னத்தில் முத்தமிட்டவள்

“போயிட்டு வர்றேன்டி… வர்றப்போ உனக்கும் இவளுக்கும் குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும் வாங்கிட்டு வருவேன்… நீங்க ரெண்டு பேரும் வரப் போற ஈஸ்வர் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்க வாழ்த்துக்கள்” என்று பவானியையும் பாகீரதியையும் கேலி செய்தவள் பவானியை நோக்கி வந்த சிவசங்கரை குறும்பாகப் பார்த்தபடியே

“பாகி கண்ணை மூடிக்கோ… பவாக்கு இன்னொரு கிஸ் கிடைக்கப் போகுது” என்று கிண்டலடித்தவள் சிவசங்கர் முறைத்ததும் வேகமாக வீட்டை விட்டு வெளியேறினாள்.

பாகீரதியும் “சரி அத்தான்… அப்போ நான் கிளம்புறேன்” என்று இருவரையும் குறுகுறுவென பார்த்தபடியே தனது அறையை நோக்கிச் செல்ல பவானி கையைக் கட்டிக் கொண்டு அவனை நேருக்கு நேராக பார்த்தபடி நின்றாள்.

சிவசங்கர் மெதுவாக “நான் போயிட்டு வர்றேன்” என்று சொல்லவும் பவானிக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்.

அவள் விழி விரித்து நோக்கியதில் சிரித்தவன் “போயிட்டு வர்றேனு சொன்னதுக்கு ஏன் இவ்ளோ ஷாக் ஆகுற? நான் வேணும்னா நதியோட டெக்னிக்கை ஃபாலோ பண்ணவா?” என்றபடி அவளருகே குனிய அவனது மார்பில் கை வைத்துத் தடுத்தவள்

“நீங்க படிச்ச லா காலேஜ்ல இடம், பொருள், ஏவல் பத்தி சொல்லிக் குடுக்கலனு நினைக்கேன்” என்றாள் உள்ளுக்குள் புகைந்ததை மறைத்தபடியே.

“இல்லயே! அங்க லா சப்ஜெக்ட்ஸ் மட்டும் தான் டீச் பண்ணுனாங்க… வேணும்னா நீ கத்துக் குடு… ஐ அம் ரெடி டு லேர்ன்” என்று பெரிய மனதுடன் சொன்னவன் அவளது கரத்தைக் குறிப்பாய் நோக்க பவானி சட்டென்று தனது கரத்தை எடுத்துக் கொண்டாள்.

சமாளித்தபடியே “பட் ஐ அம் நாட் ரெடி டு டீச்… பிகாஸ் நீங்க நிதர்சனத்தை மீறி யோசிக்கிற மனுசன்” என்று சொல்லிவிட்டு கும்பாபிஷேகத்துக்குச் செல்லத் தயாரான பெரியவர்களிடம் சென்றுவிட்டாள்.

சிவசங்கர் அவளைக் கேலியாகப் பார்த்தபடி நகர்ந்தவன் எதேச்சையாகத் தனது சட்டை பாக்கெட்டைத் தடவ அவனது வாலட் அங்கே இல்லை. அதை எடுக்க அவர்களின் அறைக்குச் சென்றவன் டிரஸ்சிங் டேபிள் மீது இருந்த வாலட்டை எடுத்தபோது அது சரியாய் மூடியிராததால் அதில் இருந்து கீழே விழுந்து உருண்டோடியது ஒரு மோதிரம்.

அது சிவசங்கரின் பிறந்தநாளுக்கு பவானி பரிசாக அளித்த மோதிரமே தான். பின்னர் அவன் அவளிடம் வேண்டாமென கொடுத்தது, அவள் அதை அவன் வசம் ஒப்படைத்த நிகழ்வுகள் எல்லாம் மனக்கண்ணில் திரைப்படம் போல ஓட கீழே கிடந்த மோதிரத்தை மீண்டும் வாலட்டில் பத்திரப்படுத்திவிட்டு அலுவலகத்துக்குச் செல்ல கிளம்பிவிட்டான்.

அவன் சென்ற சில நிமிடங்களில் பெரியவர்கள் கும்பாபிஷேகத்துக்குச் சென்றுவிட பவானியும் பாகீரதியும் வேலையாட்களிடம் மதியவுணவுக்கு மெனு சொல்லிவிட்டு ஓய்ந்து அமர்ந்திருந்தனர்.

அப்போது ஏதோ நினைவில் பவானி சிரிக்கவும் பாகீரதி என்னவென வினவ

“ஒரு காலத்துல உன்னை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது… உன்னை யாராச்சும் பாகினு சொன்னா நான் மனசுக்குள்ள பக்கினு திட்டுவேன் தெரியுமா? ஆனா இப்போலாம் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்குது பாகி” என்று சிரித்தபடி சொல்ல பாகீரதியும் அதை ஆமோதித்தாள்.

“அப்போ சின்னப்பிள்ளைத்தனமா நம்ம அடிச்சுப்போம்… அது ஒரு காலம்… ஆனா ஒன்னு பவா, காலம்ங்கிறது தான் எவ்ளோ வித்தியாசமானது… ஒரு காலத்துல உயிரா நினைச்சவங்களை அடியோட வெறுக்க வைக்குது, ஒரு காலத்துல வெறுத்தவங்களை உயிருக்கு உயிரா நேசிக்க வைக்குது… ஹூம்!” என்று பெருமூச்சுடன் சொன்னவள் தான் காதலித்த கயவனை எண்ணி மீண்டும் ஒரு முறை மனம் குமைந்தாள்.

பவானி அவள் முகம் சோர்வதைக் கண்டவள் அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டாள்.

“நீ இப்போ சொன்னியே அது ஹண்ட்ரெட் பர்சண்டேஜ் கரெக்ட்… உன்னோட அத்தான் மிஸ்டர் சிவசங்கர்னா ஒரு காலத்துல எனக்கு உயிர்… ஆனா இப்போ நானும் அவரும் எலியும் பூனையுமா சண்டை போட்டுக்கிறோம்… இதைலாம் பாக்குறப்போவே சிரிப்பா இருக்கு போ” என்று பேச்சை திசை மாற்றினாள்.

அதைக் கேட்டு பாகீரதியும் நகைக்க இருவரும் பழங்கதைகளைப் பேசிக் கொண்டிருக்கையில் பவானிக்கு அஞ்சனாவிடம் இருந்து அழைப்பு வர அவள் போனுடன் எழுந்து சென்றாள்.

பாகீரதி மட்டுமே முன்பக்க வராண்டாவில் தனித்திருந்தாள். நேரம் போகாமல் போனை நோண்டிக் கொண்டிருந்தவளின் காதில் திடீரென யாரோ “ஓஓஓ!” என்று கத்தவும் அவள் அலறி அடித்துக் கொண்டு எழுந்தாள்.

படபடக்கும் இதயத்துடன் திரும்பியவளின் எதிரே நின்றான் கண்ணில் குறும்பு மின்ன சிரித்துக் கொண்டிருந்த ஒரு வாலிபன். அவளைக் கண்டதும் அவன் முகத்திலும் அதிர்ச்சி.

பின்னர் அவசரமாக “ஹேய் ஐ அம் ரியலி சாரி… நான் பவானு நினைச்சு உங்கள பயம் காட்டிட்டேன்” என்று சொன்னாலும் கண்களில் இன்னுமே அந்தக் குறும்பு மறையவில்லை.

பாகீரதியோ இன்னும் படபடப்பு அகலாதவளாய் “ஏன் சார் யார் என்னனு பாக்காம இப்பிடி தான் கத்துவிங்களா? ஒரு நிமிசம் என் ஹார்ட்டே நின்னு போச்சு தெரியுமா?” என்று சொல்லவும்

“இசிண்ட்? நான் வேணும்னா செக் பண்ணவா?” என்று அவன் கேலி செய்ய எரிச்சலுற்ற பாகீரதி சட்டென்று பின்னோக்கி அடியெடுத்து வைக்க அவன் பக்கென்று சிரித்தான்.

“டோண்ட் ஒரி… ஐ அம் ஜஸ்ட் கிட்டிங்… பை த வே வேர் இஸ் பவா?” என்றவனுக்குப் பதில் அளிக்காது

“பெரிய வெள்ளைக்காரத்துரை… இங்கிலீஸ்லயே தான் பேசுவாரு.. சரி தான் போடா… நீயே தேடிக் கண்டுபிடிச்சுக்கோ” என்று வாய்க்குள் பாகீரதி முணுமுணுக்கும் போதே பவானி வந்துவிட்டாள்.

வந்தவள் அந்த வாலிபனைக் கண்டதும் “டேய் வந்துட்டியா?” என்று ஆவலும் ஆச்சரியமுமாய் ஓடி வந்து அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

அப்போது தான் அவள் எதிர்பார்த்திருந்த நண்பன் இவன் தான் என்பது பாகீரதிக்குப் புரிந்தது. அந்த ஈஸ்வர் என்பவன் பவானியிடம் குசலம் விசாரித்துவிட்டு பாகீரதியை ஆள்காட்டிவிரலால் சுட்டிக் காட்டி

“இந்தப் பொண்ணு உன்னோட சாயல்லயே இருக்குது… நான் கூட நீ தான் உக்காந்திருக்கிறதா நினைச்சுப் பயம் காட்டிட்டேன் தெரியுமா?” என்று சொல்ல பாகீரதி மிகவும் சிரமத்துடன் அவனைத் திட்ட யோசித்து வைத்த வார்த்தைகளை சொல்லக் கூடாதென நாக்குக்குத் தடை போட்டாள்.

பவானி அவளைத் தோளோடு அணைத்தவள் “இவ பாகி.. பாகீரதி… என்னோட சித்தி பொண்ணு” என்று ஈஸ்வருக்கு அவளை அறிமுகப்படுத்தி வைக்க அவன் “ஹாய் ஐ அம் ஈஸ்வர்” என்று கை நீட்ட பாகீரதி வணக்கம் என கைகூப்பினாள்.

அவன் நமட்டுச்சிரிப்புடன் அவளை நோக்கியவன் பவானியிடம் “உன் வீட்டுக்கு ஃபர்ஸ்ட் டைம் வந்துருக்கேன்… காபி டீனு எதுவும் தராம துரத்திவிடலாம்னு ஐடியா வச்சிருந்தா அதை எரேஸ் பண்ணிடு… நான் இன்னைக்கு இங்க தான் லஞ்ச் சாப்பிடப் போறேன்… அப்பிடியே தன்னோட வாழ்க்கைய பணயம் வச்சு உனக்கு திருமதி பட்டம் குடுத்த அப்பாவி ஜீவனையும் பாத்துப் பேசிட்டுத் தான் போவேன்” என்று சொல்லிவிடவே அவனுடன் பேசியபடியே உள்ளே அழைத்துச் சென்றாள் அவள்.

பாகீரதியோ அவனது ஓயாத பேச்சில் செவிமடலைத் தேய்த்துவிட்டுக் கொண்டவள் இருவரையும் பின் தொடர்ந்தாள்.

அதன் பின் வந்த விருந்தாளிக்கு காபி கொடுத்து விருந்துபசாரம் நடக்க ஈஸ்வர் தனது பேச்சை மட்டும் நிறுத்தவில்லை. பவானிக்கு அது வித்தியாசமாகப் படவில்லை. ஆனால் பாகீரதியோ இந்த வீட்டின் ஆண்கள் இப்படி வாய் ஓயாது பேசும் ரகம் இல்லை என்பதால் அவனது பேச்சை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

நேரம் செல்ல கும்பாபிஷேகம் பார்க்கச் சென்ற பெரியவர்கள் வீடு திரும்பினர். அவர்களிடம் நண்பனை அறிமுகப்படுத்தி வைத்தாள் பவானி.

அவனோ சில நிமிடங்களிலேயே அவர்களிடமும் சகஜமாய் பேச ஆரம்பித்துவிட பவானியின் காதில் “உன் ஃப்ரெண்டுக்கு வாய் வலிக்காதா பவா? இவனோட நான்-ஸ்டாப் பேச்சுமழைல நனைஞ்சு என் காது ரெண்டும் தீய்ஞ்சு போச்சுடி” என்று முணுமுணுத்தாள் பாகீரதி.

பவானியோ “அட நீ காலேஜ் டேய்ஸ்ல அவனோட பேச்சைக் கேட்டது இல்ல… அதோட கம்பேர் பண்ணுறப்போ அவன் இப்போ கம்மியா தான் பேசுறான்… இதுக்குத் தான் மெச்சூரிட்டி வந்துடுச்சுனு நானும் நதியும் அவனைக் கலாய்ப்போம்… இப்போ புரியுதா மானிங் நமக்கு ஏன் நதி வாழ்த்து சொல்லிட்டுப் போனானு?” என்று கேட்கவும் தலையாட்டிய பாகீரதியின் செவியில் விழுந்தது அன்னபூரணியிடம் அரட்டை அடித்துக் கொண்டிருந்த ஈஸ்வரின் குரல்.

அவனது சகஜப்பேச்சில் அனைவரையும் மயக்கிவிட்டான் என்றே சொல்ல வேண்டும். மதியவுணக்காக வீட்டுக்கு வந்த ஞானதேசிகனும் சிவசங்கரும் கூட அதை ஒத்துக்கொண்டனர்.

அவன் போதாக்குறைக்கு சிவசங்கரிடம் “உங்க மனவலிமைய பாராட்டியே ஆகணும் லாயர் சார்… எப்பிடி தான் இவளைச் சமாளிக்கிறிங்களோ? திடீர் திடீர்னு வினோதமா எதாச்சும் பண்ணி வைப்பா…. சோ கொஞ்சம் கவனமா இருங்க” என்று கேலியாய் சொல்ல

“டெபனைட்லி… முதல்ல இவ கிட்ட இருக்குற வினோதமான பழக்கத்தை மாத்தணும்… அவ தலைக்குள்ள நிறைய பட்டி டிங்கரிங் ஒர்க்ஸ் பண்ண வேண்டியது இருக்கு” என்று பதிலுக்குக் கேலி செய்ய பவானி இருவரையும் முறைத்து வைத்தாள்.

மதியவுணவு முடிந்ததும் ஈஸ்வர் தம்பதியினருக்குத் தான் வாங்கி வந்த பரிசான தங்கச்செயின்களை அளித்தான். இரண்டிலும் அவரவர் பெயர் வைத்த டாலர் இருக்க

“பவா உன்னோட நேம் இருக்கிற செயினைச் சாருக்குப் போட்டுவிடு” என்று சொல்ல அவள் தயங்கினாள்.

“கம் ஆன் பவா! அவருக்குத் தாலி கட்டுறதா நினைச்சுப் போட்டுவிடு…” என்று கிண்டல் செய்ய பவானி நமட்டுச்சிரிப்புடன் சிவசங்கரின் கழுத்தில் செயினை மாட்டிவிட்டாள்.

“சார் இப்போ உங்க டர்ன்” என்று அவன் சொன்னதும் சிவசங்கர் தன் கையிலுள்ள செயினை பவானியின் கழுத்தில் போட்டுவிட அவன் விரல்கள் பிடறியில் உரசியதில் உள்ளுக்குள் இலேசாய் அதிர்ந்தவள் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்னகைத்தாள்.

“இதே போல ரெண்டு பேரும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்… முக்கியமா சீக்கிரம் ஒரு ஜூனியரை ரிலீஸ் பண்ணணும்… வீ ஆர் ஈகர்லி வெயிட்டிங்யா” என்று அவன் சொல்லவும் சிவசங்கரும் பவானியும் திகைத்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

பின்னர் ஈஸ்வர் விடைபெற்றவன் “இன்னும் பத்து நாளுக்கு சென்னைல தான் இருக்கப்போறேன்…. சோ வீக்கெண்ட்ல வர்றேன்… நதிய பாத்து நாலு வார்த்தை பேசாம மனசுக்குப் பாரமா இருக்கு” என்று கிண்டலாய் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

செல்லும் முன்னர் ஒரு நிமிடம் அவன் கண்கள் பாகீரதியின் முகத்தில் ஆர்வத்துடன் படிந்ததை அன்னபூரணியும் லோகநாயகியும் கவனித்துவிட்டனர்.

அவனும் பார்ப்பதற்கும் பழகுவதற்கும் இனிய பண்புள்ளவனாகவே இருப்பதால் செண்பகாதேவியின் காதில் ஈஸ்வரைப் பற்றி போட்டு வைத்தனர் இருவரும்.

தொடரும்💘💘💘