💘கண்மணி 15💘

ஜெகன் அசோசியேட்ஸ்…

இளம் வழக்கறிஞர்கள் பட்டாளம் உற்சாகத்துடன் வேலையில் கண்ணாய் இருந்தனர். அவர்களில் பெண்களும் அடக்கம். ஜெகத்ரட்சகன் அவரது அலுவலக அறையில் வேலையில் மூழ்கியிருந்தார். அவரது நீண்டநாள் கிளையண்டான அமைச்சர் செழியன் இனி தன் நிறுவனத்தைத் தொடர்பு கொள்வது அரிது என்பதைப் புரிந்து கொண்டவர் தனது உதவியாளரிடம் செழியனது கோப்புகளின் மென்பிரதிகள் அனைத்தையும் அவரது மின்னஞ்சலுக்கு அனுப்பிவிட்டு மற்றவற்றை அவரது அலுவலகத்தில் ஒப்படைத்து விடும்படி கட்டளையிட்டிருந்தார்.

அந்த வேலை முடியும் தருவாயில் இருக்க ஜெகத்ரட்சகனின் ஜூனியர் அந்தக் கோப்புகளை அட்டைப்பெட்டியில் வைத்துக் கட்டியவர்

“சார் நான் செழியன் சாரோட பி.ஏ கிட்ட இதை ஹேண்ட் ஓவர் பண்ணிட்டு வந்துடுறேன்” என்று சொல்ல ஜெகத்ரட்சகன் சரியென தலையசைத்தவர்

“இது எல்லாமே கான்பிடென்சியல் ஃபைல்ஸ் அஸ்வின்… கேர்ஃபுல்லா கொண்டு போய் அவங்க கிட்ட ஒப்படைக்கணும் மை பாய்” என்று கவனம் சொல்ல அந்த அஸ்வின் சினேகச்சிரிப்புடன் அட்டைப்பெட்டியை எடுத்துக் கொண்டவன் அங்கிருந்து வெளியேறினான்.

அவன் வெளியேறவும் உள்ளே நுழைந்தார் அரிஞ்சயன். ஜெகத்ரட்சகன் அவரைத் தனது அலுவலகத்தில் எதிர்பார்க்கவில்லை. மாமனார் மற்றும் மைத்துனரின் பேச்சே வேதமென எண்ணினாலும் அரிஞ்சயன் மீது ஜெகத்ரட்சகனுக்கு ஒரு நன்மதிப்பு உண்டு.

தனது அறிவுக்கண்ணைத் திறந்து வைத்தவர் என்ற எண்ணத்தினால் உண்டான நன்மதிப்பு தான் அது. உள்ளே நுழைந்தவரைப் புன்னகையுடன் வரவேற்றவர்

“என்ன சாப்பிடுறிங்க சகலை?” என்று அன்பாய் கேட்க, அரிஞ்சயனோ

“இது லஞ்ச் சாப்பிட வீட்டுக்குப் போற டைம் தான் சகலை… நான் போற வழில உங்களைப் பாத்துட்டுக் கையோட உங்களையும் மறுவீட்டு விருந்துக்கு கூட்டிட்டுப் போகலாம்னு வந்தேன்” என்றார் நைச்சியமாக.

மறுவீட்டு விருந்து என்ற வார்த்தையைக் கேட்டதும் ஜெகத்ரட்சகனின் முகம் கன்றி சிவப்பதை மனதுக்குள் ரசித்தவர் பெருமூச்சு ஒன்றை எடுத்துவிட்டார்.

“உங்களை நினைச்சு நான் எவ்ளோ பெருமைப்படுறேன் தெரியுமா சகலை? என்னை மாதிரி அந்த வீட்டுல அடிமையா இல்லாம தனியா வந்து சொந்தமா லா கன்சர்ன் நடத்தி இன்னைக்கு இந்த சிட்டியோட பெஸ்ட் லாயர்ஸ்ல ஒருத்தரா வளந்துருக்கிங்க… இதுக்குக் காரணம் உங்களோட டெடிகேசனும், ஹார்ட் ஒர்க்கும் தான்… உங்களோட புத்திசாலித்தனம் தான் இது எல்லாத்துக்கும் அடிப்படை… ஆனா அண்ணி கிட்ட அது இல்லையே… இருந்திருந்தா அவங்களோட பிறந்தவீட்டுக்காரங்களோட தந்திரம்லாம் அவங்களுக்கும் புரிஞ்சிருக்குமே”

ஆமென்பதைப் போல ஜெகத்ரட்சகனின் தலை அசையவும் உற்சாகமானவர் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் மாமனாரையும் மைத்துனரையும் எவ்வாறெல்லாம் ஜெகத்ரட்சகனின் முன்னே கெட்டவர்களாகச் சித்தரித்தாரோ அதே போல இன்று சிவசங்கரையும் சித்தரித்தார்.

“அவங்க காரணம் இல்லாம ஒன்னும் நம்ம பவா குட்டிய அந்த வீட்டுக்கு மருமகள் ஆக்கல சகலை… இப்போ அண்ணிக்குச் சேர வேண்டிய சொத்து இன்னும் பிரிக்கப்படாம தான் இருக்கு… சப்போஸ் பவாவ வெளியாளுக்கு மேரேஜ் பண்ணி வச்சா சொத்து வெளியே போகுமே… அதுக்குப் பதிலா பேரனுக்கே முடிச்சு போட்டுட்டா சொத்தும் போகாது… தாத்தா தாத்தானு உருகிட்டுப் பவாகுட்டியும் அவரை முழுசா நம்பிடும்… இந்தக் கணக்கு போடுற விசயத்துல நம்ம மாமனாரை நம்மளால எப்போவுமே ஜெயிக்க முடியாது சகலை” என்றார் முத்தாய்ப்பாக.

“சரி சகலை… நீங்களும் வர்றிங்களா?” என்று கீழ்க்கண்ணால் பார்த்தபடியே வினவியவரிடம்

“இல்ல சகலை… நீங்க கிளம்புங்க… நான் எந்தக் காரணத்துக்காகவும் அந்த வீட்டுல காலடி எடுத்து வைக்க மாட்டேன்” என்று உறுதியாய் உரைத்தார் ஜெகத்ரட்சகன்.

கூடவே “நீங்க சூழ்நிலைக்கைதினு எனக்குத் தெரியும் சகலை… அந்த வீட்டுல நான் மதிக்கிற ஒரே ஆளு நீங்க மட்டும் தான்… அதனால கவலைப்படாம கிளம்புங்க” என்றதும் திருப்தியான அரிஞ்சயன் உள்ளுக்குள் மகிழ்ந்தவராய் எழுந்தார்.

வந்த வேலை முடிந்து விட்ட ஆனந்தத்தில் வீட்டில் தயாராகும் விருந்தை ஒரு பிடி பிடிக்கும் ஆவலுடன் சாந்திநிலையத்துக்குக் கிளம்பினார் அவர்.

அதே நேரம் ஜெகத்ரட்சகனின் மனதில் மனைவி மற்றும் மகனது விலகலாய் உண்டான இளக்கம் அரிஞ்சயன் ஏற்றி விட்டதால் அப்படியே மறைந்து போயிற்று.

****************

சாந்தி வனம்..

அஞ்சனாதேவி, செண்பகாதேவி, லோகநாயகி மூவரும் பரிமாற புதுமணத்தம்பதியினருடன் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து உணவுண்ண ஆரம்பித்தனர்.

அஞ்சனாதேவி அரிஞ்சயன் வரட்டுமென சொல்ல செண்பகாவோ “அவரு வேலைனு வந்துட்டா பசி தூக்கம் பாக்க மாட்டாருக்கா.. அவருக்காக இவங்கள எவ்ளோ நேரம் வெய்ட் பண்ணவைக்கிறது? அவர் வர்றப்போ வரட்டும்கா” என்று சொல்லிவிட விருந்து இனிதே ஆரம்பித்தது.

மருமகனுக்காக முதல் முறை சமைத்ததாலோ என்னவோ அன்றைய மெனுவில் சிவசங்கருக்குப் பிடித்தமான உணவுவகைகளையே செய்திருந்தார் அஞ்சனா.

பவானி அதைக் கண்டுபிடித்தாலும் பெரிதுபடுத்தாமல் உண்டு முடித்தவள் இறுதியில் பாயசம் வரும் போது முகத்தைச் சுருக்கிக் கொண்டாள். ஏனெனில் வெல்லம் தட்டிப் போட்ட பயத்தம் பருப்பு பாயசம் முந்திரி திராட்சையுடன் பெரிய தம்ளரில் அவளைப் பார்த்துச் சிரித்தது.

“பருப்பு பாயசமா? மா! எனக்குப் பால் பாயசம் தானே பிடிக்கும்… ஏன்மா இதை வச்சிங்க?” என்று சிணுங்கியவள் மூக்கைச் சுருக்கிக் கோபப்பட சுவாமிநாதனோடு சேர்ந்து அனைவரும் அவளையும் சிவசங்கரையுமே நோக்கினர்.

அவன் நிதானமாக தம்ளரிலிருந்த பாயசத்தைக் கரண்டியால் சுவைத்தபடியே

“ஏன்னா எனக்குப் பருப்புப் பாயசம் தான் பிடிக்கும்… அது மட்டுமில்லாம பால்ல கொழுப்பு ஜாஸ்தி… ஆல்ரெடி ஒருத்தவங்களுக்கு அது அதிகப்படியா தான் இருக்கு… அதான் அத்தை பால் பாயசம் பண்ணல… பருப்புல புரோட்டின் இருக்கும்மா… இதைக் குடிச்சாலாச்சும் நீ வளருறியானு பாப்போம்” என்று சொல்லவே பவானி கடுப்புடன் ஏதோ சொல்ல வந்தவள் அனைவரின் கவனத்துடன் அன்னையின் பார்வையும் தங்களை நோக்குவதைக் கவனித்துவிட்டு முகபாவத்தைச் சீராக்கிக் கொண்டாள்.

“இசிண்ட்? ஆனா பாருங்க மிஸ்டர் சிவா பருப்பு வேகவேல்ல… ஐ மீன் பாயசத்துல போட்ட பருப்பு அரைவேக்காடா இருக்கு… அதை விரும்பிக் குடிக்கிறவங்க மாதிரியே!” என்று அவனுக்குப் பதிலடி கொடுத்தவள் பாயசத்தை ஒதுக்கிவைத்தாள்.

“ஓவர் ஸ்மார்ட்டா இருக்கிறதுக்குப் பதிலா அரை வேக்காடா இருக்கிறது எவ்ளோவோ மேல் பவா” என்றவன் கர்மச்சிரத்தையுடன் அவள் வேண்டாமென வைத்த பாயசத்தையும் தானே அருந்தினான்.

வீட்டினர் இதைக் கண்டுகொண்டாலும் வானதி மட்டும் பவானியைத் தனியே அழைத்துச் சென்றவள்

“என்னடி ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்? எலியும் பூனையுமா சிலிர்த்துக்கிட்டு சண்டை போடுறிங்க? எல்லாரும் உங்களை கவனிக்கிறத கூட மறந்துட்டு இண்ட்ரெஸ்டா சண்டை போடுறதெல்லாம் சரி தான்… ஆனா தாத்தாவும் பாட்டியும் உங்களோட ஃபைட் சீக்வன்சை பாத்துட்டு மனசு வருத்தப்படுவாங்கனு யோசிக்கவே மாட்டிங்களா?” என்று கேட்கவும் தான் பவானிக்குத் தனது தவறு புரிந்தது.

 இனி கவனமாக இருக்கிறேனென தோழிக்கு வாக்களித்தவள் “எனக்கு மட்டும் பக்கம் பக்கமா அட்வைஸ் பண்ணுற… உன் நொண்ணா மட்டும் கம்மியாவா என்னை கலாய்ச்சாரு?” என்று முறுக்கிக் கொள்ள வானதி அவளிடம் பாகீரதி சிவசங்கரிடம் தீவிரமான முகபாவத்துடன் பேசுவதைக் காட்டினாள்.

“பாகி அங்க அண்ணனுக்கு அட்வைஸ் பண்ணிட்டிருக்கா… இப்போ நிம்மதியா தாயே? கல்யாணத்துக்கு முன்னாடி லவ்ல மூழ்கி என்னை மாதிரி சிங்கிள் பொண்ணை வெறுப்பேத்துனிங்க… கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் ரொமான்ஸ் சீக்வன்ஸ் இருக்கும்னு பாத்தா ஒரே ஃபைட் சீனா வருது… என்ன தான் லவ் பண்ணுறிங்களோ?” என்று தலையிலடித்துக் கொண்டு நகர்ந்தவள் அங்கே வந்த அருண் மீது இடித்துக் கொண்டு கீழே விழப் போக அவளை விழாது தாங்கினான் அவன்.

“முதல்ல யாராவது அக்கம் பக்கம் வர்றாங்களானு பாத்து நடக்க கத்துக்கிட்டு என் தங்கச்சிக்கு அட்வைஸ் பண்ண வாங்க மேடம்” என்றவனின் குறும்புச்சிரிப்பை முதன் முதலாய் கண்டவள் கண் இமைக்க மறந்து அவனையே நோக்கினாள்.

அருண் அவளை விசித்திரமாய் பார்த்தபடியே “ஹலோ! கண்ணைத் திறந்துட்டே மயங்கிட்டியா என்ன? வானதினு பேர் வச்சதுக்குப் பொருத்தமா நடந்துக்கிற போ” என்று கேலியாய் உரைத்தவன் அவளை விடுவித்துவிட்டுத் தங்கையிடம் சென்று விட்டான்.

என்றும் சிடுமூஞ்சியாய் திரிபவனது அருகாமையும் சிரிப்பும் ஏற்படுத்திய வினோதமான உணர்வுடன் அவன் தாங்கி நிறுத்தும் போது அவனது கரம் பதிந்த தோள்களின் குறுகுறுப்பும் சேர்ந்து கொள்ள வானதிக்குச் சற்று நேரம் தன்னைச் சுற்றி நடப்பது எதுவும் பிடிபடவில்லை.

பின்னர் உணர்வு பெற்றவள் தன் தலையிலடித்துக் கொண்டு பாத்திரங்களை ஒதுங்க வைக்க அத்தைகளுக்கும் அன்னைக்கும் உதவச் சென்றுவிட்டாள்.

பவானி கை கழுவி விட்டுத் திரும்பவும் சிவசங்கரும் வந்து விட இம்முறையும் கை கழுவி விட்டு அவளின் முந்தானையை எடுக்க இடையை நோக்கி கை நீட்டியவனுக்கு முன்னே அவளே நீட்டினாள். காலையில் அவன் விரல் பட்ட இடை இன்னுமே குறுகுறுக்கும் உணர்வு அவளுக்கு.

“குட் கேர்ள்… சமயம் தெரிஞ்சு நடந்துக்கிற” என்று சிலாகித்தான் அவள் கணவன்.

வெளியே நின்று அன்னையும் மாமியாரும் தங்களை நோக்குவதைக் கண்டு “உங்க கையை டவல்ல துடைச்சா ஆகாதா? முந்தானைல தான் துடைப்பிங்களோ?” என்று சிரித்தவண்ணம் சீறியவளை அவன் நெருங்கவும்

“வாட் த ஹெல்? நம்ம கிச்சன்ல நிக்கிறோம்னு புரிஞ்சுகிட்டு நடந்துக்கோங்க” என்றாள் பவானி எரிச்சலுடன்.

சிவசங்கரோ அவள் செவியில்

“வெளியே நின்னு அத்தையும் அம்மாவும் நம்மள தான் பாக்குறாங்க… மானிங்கும் சித்தி நின்னுட்டிருந்ததால தான் நான் அப்பிடி பண்ண வேண்டியதா போச்சு” என்று தனது செய்கைக்கான விளக்கத்தைச் சொல்லவும் அவள் கொஞ்சம் இறங்கி வந்தாள்.

புன்சிரிப்புடன் நிமிர்ந்தவள் “இட்ஸ் ஓகே… நான் அவங்க நின்னதை இப்போ தான் பாத்தேன்… எனி வே அவங்க போயிட்டாங்க… கொஞ்சம் தள்ளி நிக்கிறிங்களா?” என்று புருவம் உயர்த்த சிவசங்கர் மெச்சுதலாய் அவளைப் பார்த்துவிட்டு விலகிச் சென்றான்.

அவன் சென்று சில நிமிட இடைவெளியில் ஹாலுக்கு வந்தவளின் கண்கள் குடும்பத்தினரின் முகபாவத்தை ஆராய்ந்தது. தங்களுக்குள் நடக்கும் கருத்து வேறுபாடுகள் எதுவும் அவர்களை தவறான விதத்தில் பாதிக்கவில்லை என்பதை அவர்களின் நமட்டுச்சிரிப்பிலும் இவர்களைக் கண்டதும் இரகசியமாய் முணுமுணுப்பதிலும் கண்டுகொண்டாள் அவள்.

இனி தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென எண்ணிக் கொண்டவள் சிவசங்கர் கிளம்பும் வரைக்கும் அவன் பின்னே தான் சுற்றினாள்.

சிவசங்கர் புருவத்தை உயர்த்திக் கேலியாகப் பார்க்க அதைக் கண்டுகொள்ளாதவள் தனது செய்கையால் குடும்பத்தினரின் முகம் மலர்வதை மட்டும் மகிழ்வாய் எடுத்துக் கொண்டாள்.

மதியவுணவு முடியவும் ஞானதேசிகனும் சிவசங்கரும் கிளம்பினர். அஞ்சனாவும் அருணும் லோகநாயகியிடம் பவானியைப் பார்த்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ள

“பவாவும் எனக்கு நதி மாதிரி தான் அண்ணி… நான் அவளைப் பாத்துக்கிறேன்… நீங்க எதையும் நினைச்சு கவலைப்படாதிங்க” என்றார் லோகநாயகி.

சுவாமிநாதனும் அன்னபூரணியும் “ஜெகாவும் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும் அஞ்சு” என்று ஏக்கத்துடன் பெருமூச்சு விடவே அஞ்சனாதேவி பெற்றோரின் கையைப் பற்றிக் கொண்டார்.

“அவர் மனசு இப்போதைக்கு மாறாதும்மா… அவரை நினைச்சு நீங்க வருத்தப்படாதிங்க… கொஞ்சம் நாள் போனா அவரோட செய்கை எவ்ளோ அபத்தம்னு அவருக்குப் புரியும்… நம்ம அவரை நினைச்சு ஒரி பண்ணிக்க வேண்டாம்”

அவரது பேச்சு மனதுக்கு இதமாக இருக்கவே முதியத்தம்பதியினருக்கு மனம் இலேசானது.

பின்னர் அஞ்சனாதேவியும் அருணும் கிளம்பிய பிறகு வீடு வெறுமையான உணர்வு. வானதிக்கும் அருண் சென்றதும் வீட்டின் ஒளி குறைந்தது போல தோன்றியது.

பின்னர் பாகீரதியும் பவானியும் சேர்ந்து கலகலப்பாய் பேசியதில் அருணின் ஆதிக்கம் அவள் மனதிலிருந்து அகன்றது. நேரம் செல்ல செல்ல அந்நாளின் நினைவுகள் மட்டும் நெஞ்சில் நிறைந்திருக்க சாந்தி வனம் முழுவதும் அன்றைய மாலைப்பொழுதில் சந்தோசம் மட்டுமே நிறைந்திருந்தது.

பவானிக்குத் தந்தையைப் பற்றி மட்டும் தான் கவலை. அவர் வந்திருந்தால் அவளுக்கு இன்னுமே மகிழ்ச்சியாய் இருந்திருக்குமோ என்னவோ! அன்னையும் அண்ணனும் வாங்கி வந்த பொருட்களை ஆசையுடன் பார்வையிட்டாள்.

உடைகளும் சரி; அணிகலன்களும் சரி! எல்லாமே அவளுக்குப் பிடித்தமானவையாகப் பார்த்துப் பார்த்து வாங்கி இருந்தனர் இருவரும். அதுவும் அண்ணன் அவனது வருமானத்தில் தனக்காக வாங்கி வந்திருக்கிறான் என யோசித்தபடியே அதை வார்ட்ரோபில் எடுத்து வைத்தாள்.

அதே நேரம் அஞ்சனாவிலாசத்தில் ஜெகத்ரட்சகனின் காது தீய்ந்து போகும் அளவுக்கு மகளின் புராணத்தையும் பிறந்தவீட்டாரின் பெருமையையும் அஞ்சனாதேவி பேசித் தீர்க்க அவருக்குக் காதில் புகை வராதக் குறை தான்.

அருணோ “நீங்களும் கொஞ்சம் யோசிங்கப்பா… உங்களால பவாவ அப்பிடி ஒதுக்கி வைக்க முடியாதுப்பா” என்று சொல்லிவிட்டு அகன்றான்.ஜெகத்ரட்சகன் எரிச்சலுற்றவர் “செத்தாலும் ஜெகத்ரட்சன் இந்த விசயத்துல இறங்கி வர மாட்டான்” என்று பிடிவாதமாகச் சொல்லிக் கொண்டார்.

தொடரும்💘💘💘