💘கண்மணி 14💘

அஞ்சனா விலாசம்

ஜெகத்ரட்சகன் காலையுணவை முடித்துவிட்டு அலுவலகம் கிளம்பத் தயாரானவர் அருண் இன்னும் ஷார்ட்சும் டீசர்ட்டுமாய் சுற்றுவதைப் பார்த்துவிட்டுப் புருவம் சுருக்கினார்.

“அருண் ஆபிஸ்கு கிளம்பாம இன்னும் கேசுவலா இருக்கியே? உடம்பு எதுவும் சரியில்லையாப்பா?”

“இல்லப்பா… நான் இன்னைக்கு ஆபிஸ்கு லீவ்… பவாவுக்கு இன்னைக்கு மறுவீடு சடங்கு பண்ணனும்னு அம்மா சொன்னாங்க… அவங்க வீட்டுல இருந்து யாரும் வந்தா உங்களுக்குப் பிடிக்காது.. அதான் நாங்களே அங்க போய் செய்ய வேண்டிய சம்பிரதாயத்தைச் செஞ்சு முடிச்சிட்டு வந்துடுறோம்” என்று அதிராமல் தெளிவாய் பதிலளித்தான் அருண்.

அவனது பதிலை ஆட்சேபிக்கவோ மறுக்கவோ எதிராளிக்கு இடம் கொடுக்காத இந்த வித்தையை அவனது தந்தையிடம் இருந்து தான் கற்றான். இன்று அவரிடமே கற்ற வித்தையைச் செயல்படுத்தவும் ஜெகத்ரட்சகனுக்குப் பெருமிதமாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாது மௌனமாய் தலையாட்டியவர்

“அஞ்சும்மா அவங்களுக்குச் செய்ய வேண்டிய சடங்குக்கு ஆகுற செலவுக்கு….” என்று சொன்னபடியே தனது கார்டை மனைவியிடம் நீட்ட

“வேண்டாங்க! உங்களுக்குச் சம்பந்தமே இல்லாத ஒருத்திக்கு உங்க காசை என்னால செலவு பண்ண முடியாது… என் பையன் சம்பாத்தியத்துல என்னோட பொண்ணுக்குச் செய்யவேண்டிய முறைய செஞ்சிட்டு வந்துடுவேன்” என்று ஒட்டுதலின்றி மறுத்த அஞ்சனாதேவி வேலையாட்களிடம் மதியத்துக்கு ஜெகத்ரட்சகனுக்கு மட்டும் சமைக்கும் படி கட்டளையிட்டுவிட்டு தனது அறைக்குள் சென்று அடைபட்டுக் கொண்டார்.

ஜெகத்ரட்சகனுக்கு இத்தனை ஆண்டுகளில் முதன் முறையாக மனைவியின் விலகல் மனதுக்குள் வலியை உண்டாக்கியது. அருணால் தந்தையின் முகத்திலுள்ள வலியைப் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால் தங்கையை அவர் பேசிய வார்த்தைகளை நினைத்தவனது மனம் இளகலை விட்டு இறுக்கத்தைப் பூசிக் கொண்டது. அவனும் அமைதியாய் விலகி விட தனித்துவிடப் பட்ட மனிதர் தனது வேலையைப் பார்க்க அலுவலகத்தை நோக்கி விரைந்தார்.

அவர் சென்ற பின்னர் அஞ்சனாதேவி மகளைக் காண புகுந்த வீட்டுக்குச் செல்லத் தயாரானவர் “ரெடியாயிட்டியா அருண்?” என்று மகனது அறைக்கதவை தட்ட அவனும் கருப்புநிற முழுக்கை சட்டையும் க்ரீம் வண்ண பேண்ட்டுமாக தயாரானவன் “ஐ அம் ரெடி மம்மி… போலாமா?” என்று உற்சாகமாய் வினவியபடி தாயாருடன் சாந்திவனத்துக்குக் கிளம்பினான்.

**************

நாதன் அண்ட் அசோசியேட்ஸ்

சிவசங்கர் தனது கிளையண்டுடன் பேசிக் கொண்டிருந்தவன் அவர் இடையிடையே போன் கால்களைத் துண்டிப்பதைப் பார்த்துவிட்டு “எதுவும் எமர்ஜென்சியா இருக்கப் போகுது மாதவ் சார்… என்னனு கேளுங்க… நான் வெயிட் பண்ணுறேன்” என்று சொல்லவும் அந்த மாதவ் என்ற நபரும் அழைப்பை ஏற்றார்.

“சொல்லுடா ரதி… இல்லடா… நான் மானிங் லாயர் சாரை மீட் பண்ணணும்கிற அவசரத்துல தான் உன் கிட்ட சொல்லாம கிளம்பிட்டேன்… நான் ஏன்டா உன் கிட்ட கோவப்படப் போறேன்?… ம்ம்… கண்டிப்பா போகலாம்… இப்போவாச்சும் அமைதியா போய் சாப்பிடுடா”

அவரது அக்கறை நிறைந்த பேச்சை செவிகளில் கேட்டபடியே கோப்புகளை ஆராய்ந்தவன் அவர் பேசி முடித்து நிமிரவும் புன்னகைத்தான்.

அவரும் புன்னகைத்தபடியே “என்னோட ஒய்ப் ரதி தான் பேசுனாங்க சார்… மானிங் உங்கள மீட் பண்ணுற அவசரத்துல கிளம்புனதுல அவ கிட்ட போயிட்டு வர்றேனு சொல்ல மறந்துட்டேன்… அதுல ஃபீல் பண்ணி பிரேக்பாஸ்ட் சாப்பிடாம இருந்திருக்காங்க” என்றதும் சிவசங்கருக்குத் தானும் பவானியிடம் அப்படி எதுவும் சொல்லவில்லை என்பது புத்தியில் உறைத்தது.

பிடிவாதமாய் அவளது நினைவுகளை ஒதுக்கிவிட்டு “இட்ஸ் ஓகே சார்! லேடிஸ் எல்லாருமே ரொம்ப சென்சிடிவ் ஆனவங்க தான்… பை த வே, நீங்க கேஸ் போடுறதே உங்களோட மாமனாருக்கு எதிரா தானே! தென் ஹவ்…” என்று கேட்க வந்ததை முடிக்காமல் விட்டாலும் மாதவ் புரிந்து கொண்டார்.

“என்னோட மாமனார் பிரச்சனைக்கார மனுசன் சார்… அவர் கிட்ட இருந்து நானோ ரதியோ சொத்து எதையும் எதிர்பாக்கல… ஆனா அவரு ரதிக்குச் சேர வேண்டிய பூர்வீகச் சொத்தை குடுக்க மாட்டேனு பிரச்சனை பண்ணுறாரு… அவருக்கும் எனக்கும் உள்ள பிரச்சனைல ரதி என்ன பண்ணுவா? அவளையும் விஷமா வெறுக்குறாரு… அந்த மனுசனோட சொத்து எதுவும் எனக்குத் தேவை இல்ல… ஆனா என் ரதிக்குக் கிடைக்க வேண்டிய மரியாதையும் அவளோட உரிமையும் என்னைக்குமே அவளை விட்டுப் போக கூடாது… அதுக்காக தான் நான் இந்தக் கேசை போட்டேன்”

அவரது விளக்கம் சிவசங்கருக்கு மிகவும் பிடித்திருந்தது. கூடவே அவருக்கும் தன்னைப் போல மாமனார் என்றால் ஆகாது என்பதால் நகைப்பு கூட உண்டானது. அவரிடம் வழக்கு விபரங்களைப் பேசி முடித்து அனுப்பி வைத்தவன் காலையில் அப்பாவும் மாமாவும் அவரவர் மனைவியிடம் விடைபெற்றதை நினைத்துப் பார்த்து தான் ஒன்றும் சொல்லாமல் வந்துவிட்டது தவறோ என யோசித்தான்.

மொபைலை எடுத்தவன் பவானிக்கு அழைக்க அவளோ இணைப்பைத் துண்டித்தாள். மீண்டும் மீண்டும் முயற்சிக்க அவனது மனைவியும் சளைக்காது துண்டித்தாள்.

அதற்கு மேல் அழைக்க விருப்பம் இல்லாமல் மொபைலை எரிச்சலுடன் தூக்கி வீசியவன் அறையை விட்டு வெளியேறினான். அவர்களின் அலுவலக அறை அமைந்திருக்கும் தளத்தில் கால் வலிக்க நடந்தவன் அரிஞ்சயனின் அலுவலக அறையைக் கடக்கும் போது கதவு திறந்திருந்ததால் அவர் யாரிடமோ பேசுவது கேட்டது.

“அப்பிடிலாம் இல்ல சார்… சந்தேகம் வரல… உங்களுக்கு எந்த உதவினாலும் செய்யுறதுக்கு நானாச்சு… நீங்க கவலையே படாதிங்க… கரெக்டா பிளான் பண்ணி ஒரே காய்ல எல்லாரையும் வெட்டிடலாம்”

சிவசங்கருக்கு சின்னமாமாவின் இந்தப் பூடகமான பேச்சில் ஏதோ வித்தியாசம் தொனிக்கவும் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

சுழல் நாற்காலியில் அமர்ந்து இவ்வளவு நேரம் உதார் விட்டுக் கொண்டிருந்த அரிஞ்சயன் அவனது திடீர் பிரவேசத்தில் திடுக்கிட்டு எழுந்தார். போன் கையிலிருந்து நழுவி அவர் அமர்ந்திருந்த இருக்கையில் விழுந்தது.

“என்… என்னாச்சு சிவா? எனிதிங் இம்ப்பார்டெண்ட்?” என்று திக்கித் திணறி அவர் கேட்ட விதத்தில் புருவம் சுழித்தவன்

“நத்திங் சீரியஸ் மாமா… பட் யார் கிட்ட பேசிட்டிருந்திங்க? என்னமோ ஒரே காய்ல வெட்டிடலாம்னு பெருசா பிளான் போடுற மாதிரி பேசுனிங்களே” என்று கூர்மையாய் நோக்கியபடி வினவ அவர் தடுமாறியபடியே

“அது… அ… ஆங்… அவரு என்னோட கிளையண்ட் தான் சிவா… அவரோட சொத்து விவகாரம் பத்தி பேசிட்டிருந்தாருப்பா… மத்தபடி ஒன்னுமில்ல” என்று சமாளித்து வைத்தார்.

“ஓ! சரி… டோர் ஓப்பன்ல இருந்துச்சு மாமா… அபிஷியல் சீக்ரேட் எதுவா இருந்தாலும் கதவை குளோஸ் பண்ணிட்டு பேசுங்க… நம்ம கிளையண்ட் நம்மள நம்பி குடுக்கிற டீடெய்ல்ஸ் தேவை இல்லாம லீக் ஆனா அது நம்ம கன்சர்னுக்குத் தான் கெட்டப் பேர்” என்று ஆணையிடுவது போல உரைத்துவிட்டு அவன் வெளியேற

“நான் பாத்து வளந்தவன், எனக்கே அட்வைஸ் பண்ணிட்டுப் போறான்… எல்லாம் உன் நேரம்டா அரிஞ்சயா… நீயும் சிங்ககுட்டியாட்டம் ஒரு மகனை பெத்திருந்தா அவனை வச்சு காரியம் சாதிச்சிருக்கலாம்… உனக்கு வாய்ச்ச பொண்டாட்டியும் சரியில்ல… பிறந்த பொண்ணும் சரியில்ல” என்று பொறுமியபடி போனை எடுத்துக்கொண்டு தனது இருக்கையில் சரிந்தார்.

பவானியை மனைவியும் மகளும் தாங்குவதைக் கண்டு உள்ளூர ஒரே எரிச்சல் அவருக்கு. அப்போது தான் இன்று அஞ்சனாவும் அருணும் சாந்திவனம் வருவது நினைவுக்கு வந்தது.

முதலில் பவானி மருமகளாக நுழைந்தாள். இப்போது மறுவீட்டுச்சம்பிரதாயம் என்று அஞ்சனாவும் அருணும் வருகின்றனர். இப்படியே போனால் என்றாவது ஒரு நாள் ஜெகத்ரட்சகனும் வந்து நிற்பார்.

அப்போது மாமனார் இத்தனை நாள் பிரச்சனையையும் மறந்துவிட்டுக் கண்டிப்பாக நாதன் அண்ட் அசோசியேட்சின் பொறுப்பு அனைத்தையும் மகனுக்கும் மூத்த மருமகனுக்கும் தான் கொடுப்பாரேயன்றி தன்னைக் கண்டுகொள்ளவே மாட்டார்.

அது நடக்கவே கூடாது. இதற்கு எல்லாம் சீக்கிரம் ஒரு முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டுமென மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டார் அரிஞ்சயன்.

**********

சாந்திவனம்

எப்போதுமே கலகலப்புக்குப் பஞ்சமில்லாத வீடு தான். ஆனால் அன்றைய தினம் புதுவித மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. அதற்கு காரணம் அஞ்சனாதேவி. சுவாமிநாதனுக்கு எப்போதுமே மூத்தமகள் மீது ஒரு தனிப்பிரியம் உண்டு.

அவரது கலகலப்பான குணம், நேர்த்தியான பேச்சு எல்லாம் தாயாரை நினைவுப்படுத்துவதால் அவர் என்றால் சுவாமிநாதன் பாசத்தில் உருகிப் போவார்.

ஆனால் கணவனா தந்தையா என்ற நிலையில் மகள் கணவனைத் தேர்ந்தெடுத்ததும் அத்தோடு மகளுக்கும் தனக்குமான உறவு முடிந்து விட்டது என எண்ணியிருக்கையில் கடவுள் பேரப்பிள்ளைகளின் திருமணம் என்ற வாய்ப்பைக் கொடுத்து மகளின் பாசத்தை அனுபவிக்கும் வாய்ப்பை அந்த வயோதிகத் தந்தைக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார்.

அந்தச் சந்தோசமும் இம்முறை மகளுக்கு எது நியாயம் என்பது புரிந்துவிட்ட மகிழ்ச்சியுமாய் சுவாமிநாதன் ஆனந்தவானில் பறந்தார் என்றால் மிகையாகாது.

பவானி கூட கேலியாக “என்ன மிஸ்டர் நாதன் வாயெல்லாம் பல்லா சிரிக்கிறிங்க? மகளைக் கண்ட குஷியோ” என்று கேட்டுக் கண்ணைச் சிமிட்ட

“அப்பிடி தான் போல பவா.. அப்போ இத்தனை நாளா என் பேத்திங்களோட அன்பு மட்டும் கிடச்சா போதும்னு சொன்னதுலாம் பொய்யா கோபால்?” என்று வானதியும் கிண்டலடிக்க அந்த ஹாலில் சிரிப்பலை எழுந்தது.

செண்பகாதேவியும் அஞ்சனாதேவியும் சமையலறையில் வேலையாட்கள் உதவியுடன் சமைத்துக் கொண்டிருந்தவர்கள் அங்கே இரு இளம்பெண்களும் அடிக்கும் லூட்டியைக் கேட்டு நீண்டநாட்களுக்குப் பின்னர் மனம் விட்டு நகைத்தனர்.

இரு சகோதரிகளுக்கும் இடையே என்றுமே நல்லப் பிணைப்பு உண்டு. இரு வீட்டாரும் பேசாதிருந்த தருணத்திலும் அவர்கள் ஒருவரோடுவர் இன்முகத்துடனே பழகிக் கொள்வர். லோகநாயகியும் அவ்வாறே! அதனால் தான் இந்த வீட்டின் குழந்தைகள் அஞ்சனாவிலாசத்துக்கும், அங்கிருந்த பவானி சாந்திவனத்துக்கும் அத்துணை எளிதாக வந்து செல்ல முடிந்தது.

அதையெல்லாம் யோசித்தவர்களுக்கு இன்று தங்களுக்குள் புது சொந்தம் உண்டாகியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி.

செண்பகாதேவி பணியாளிடம் வற்றல்குழம்புக்கான பக்குவத்தைச் சொல்லிக் கொண்டிருப்பதை பார்த்தபடி நின்ற அஞ்சனாதேவி அவரிடம் “பாகிக்கும் பவா வயசு தானே… எப்போ மாப்பிள்ளை பாக்குறதா இருக்க செண்பா?” என்று கேட்க

“நான் பாத்துட்டே இருக்கேன் அஞ்சுக்கா.. ஆனா அவரு ரொம்ப பெரிய இடமா பாக்குறாரே… மகளை மகாராணி மாதிரி வச்சிக்கிறவனைத் தான் மாப்பிள்ளையா ஏத்துப்பாராம்” என்றார் செண்பா சலித்தக் குரலில்.

“அது எல்லா அப்பாக்கும் இருக்கிற ஆசை தானே செண்பா… ஆனா வசதிய மட்டும் மனசுல வச்சுட்டு பொண்ணைக் கட்டிக் குடுத்துடாதடி… பணம் காசை விட ஒரு மனுசனுக்குக் குணம் முக்கியம்… நாலு காசு சம்பாதிச்சாலும் நியாயமா சம்பாதிக்கணும்… ஒழுக்கமானவனா இருக்கணும்… பெரியவங்களை மதிக்கணும்… இதெல்லாம் பாத்துட்டுத் தான் சம்பந்தம் பேசணும்” என்று அக்கறையாய் சொன்ன அஞ்சனாவுக்குத் தன் கணவரின் நினைவு வந்தது.

மற்ற அனைத்துமே அவருக்குப் பொருந்தும் என்றாலும் அந்த நியாயம் என்ற ஒரு வார்த்தை அவருக்குப் பொருந்தாதே என்று வருத்தத்துடன் மனம் குமைந்தார் அஞ்சனாதேவி.

ஆனால் அதிகநேரம் அவரை மனம் குமைய விடாமல் அவரது சகோதரனும் மருமகனும் அலுவலகத்திலிருந்து மதியவுணவுக்காக வீட்டுக்கு வந்துவிட அனிச்சை செயலாக இரு சகோதரிகளின் முகங்களும் மகிழ்ச்சி வண்ணம் பூசிக் கொண்டது.

சிவசங்கர் உள்ளே நுழைந்ததும் “வாவ்! வாசனையே ஆளை தூக்குதே… இன்னைக்குச் சமையல் அஞ்சு அத்தையா?” என்று கேட்டபடி சோபாவில் அமர்ந்தான். அருண் அதற்கு ஆமோதிப்பாய் தலையசைக்க அவனது விழிகள் தன்னைக் கண்டும் காணாதது போல அமர்ந்திருந்த பவானியின் முகத்தில் நிலைத்தது.

“அப்பிடியே இதோ இருக்காங்களே இந்த மேடம்கு சமையல்ல ஏபிசிடி சொல்லிக் குடுத்துட்டுப் போகச் சொல்லு அருண்” என்றான் மனைவியைக் கேலியாய் பார்த்தபடியே.

அவனது சீண்டலில் வெடுக்கென நிமிர்ந்தவள் “ஐ அம் நாட் அ குக் அண்ணா… யாருக்காச்சும் எதுவும் வேணும்னா ஒன்னு அவங்களே செஞ்சு சாப்பிடணும்… இல்ல சர்வெண்ட்ஸ் கிட்ட செய்யச் சொல்லி சாப்பிடணும்” என்று சொல்லவும் சிவசங்கரோடு சேர்ந்து பெரியவர்களும் அதிர பாகீரதியும் வானதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

சொன்ன பிற்பாடு தான் பவானிக்கு தான் அவசரப்பட்டுவிட்டோமென புத்தியில் உறைக்க என்ன செய்வென்று புரியாது விழித்தாள்.

சிவசங்கரோ நீ தானே பேசினாய்; நீயே சமாளி என்பது போல கைகளைச் சோபாவின் மீது வாகாக வைத்தபடி அமர்ந்து கொண்டான். அதைக் கண்டு பவானி உறுத்து விழிக்க அவனோ அலட்சியமாய் அவளைப் புறக்கணித்துவிட்டுப் போனில் கண்ணைப் பதித்தான்.

இந்த விளையாட்டை சிறியவர்கள் பெரியவர்கள் அனைவரும் கண்டுகொண்டாலும் வழக்கமான கணவன் மனைவி ஊடலாக இருக்கலாம் என எண்ணிக் கொண்டனர்.

தொடரும்💘💘💘