💘கண்மணி 11💘

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

சாந்திவனத்திலும் அஞ்சனாவிலாசத்திலும் திருமணத்துக்கான இனிய பரபரப்பு தொற்றிக் கொண்டது. புத்தாடைகள் நகைகள் வாங்குவது என இரு குடும்பத்தினரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவளித்தனர்.

வானதியும் பாகீரதியும் உற்சாகத்துடன் வெட்டிங் பிளானிங் நிறுவனம் கேட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்ததோடு அவர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்பதை உடனிருந்து கவனித்துக் கொண்டனர்.

திருமணப்பத்திரிக்கையின் முதல் பிரதியை ஈசன் முன்னே வைத்து வழிப்பட்டப் பிறகு பத்திரிக்கை கொடுக்கும் வேலை ஆரம்பித்தது. சுவாமிநாதன் தங்களின் உறவினர்கள் ஒருவர் விடாமல் அழைத்துவிட வேண்டுமென மகனிடம் கூறிவிட தூரத்துச் சொந்தங்களுக்குக் கூட பத்திரிக்கை அனுப்பப் பட்டது.

ஜெகத்ரட்சகனும் தனது நட்புவட்டாரத்தில் அனைவருக்கும் மனைவியுடன் நேரில் சென்று பத்திரிக்கை வைத்துவிட்டு வந்தார்.

இதில் ஆர்வமற்று இருந்தவர்கள் பவானி, சிவசங்கர் மற்றும் அரிஞ்சயன் மூவரும் மட்டுமே.

மற்ற அனைவரும் தங்கள் வயது குறைந்து விட்டது போல திருமணத்தை உற்சாகமாக எதிர்நோக்கி இருந்தனர்.

நகரின் மிகப்பெரிய மண்டபமான விவாஹா மஹால் சிவசங்கர் மற்றும் திருமணத்துக்காக இரண்டு நாட்கள் புக் செய்யப்பட்டது. முந்தைய தினம் மாலையில் மாப்பிள்ளை அழைப்புடன் கூடிய நிச்சயதார்த்தம் செய்வது அவர்களின் வழக்கம். அந்தச் சடங்குக்குப் பின்னர் உறவினர்களுக்கு இரவு விருந்து இரு வீட்டார் சார்பில் ஏற்பாடு செய்யப்படும்.

உற்றார் உறவினர்களாலும் நண்பர்களாலும் நிரம்பி வழிந்த மண்டபம் மலர்களாலும் அலங்கார விளக்குகளாலும் தேவலோகம் போல மின்னியது. எங்கு நோக்கினும் சிரிப்பு சத்தமும் வேடிக்கை பேச்சுக்களும் மட்டுமே நிறைந்திருக்க இளம்பிராயத்தினர் ஆங்காங்கே அவர்களின் வயதுக்கு சமமானவர்களைக் கேலி செய்து கொண்டும் ஓரக்கண்ணால் ரசித்துக் கொண்டும் சுற்றினர்.

நடுத்தர வயதினரோ தத்தம் மகன் மகளுக்கு ஏற்ற வரன் அமையுமா என உறவினர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தனர். முதியவர்கள் தங்கள் திருமண நிகழ்வுகளை அவர்களின் வயதொத்தவர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் மாப்பிள்ளை தோரணையுடன் சிவசங்கர் அவனது குடும்பத்தினருடன் வந்து சேர உறவுப்பெண்கள் ஆரத்தி எடுக்க மணப்பெண்ணின் சகோதரன் என்ற முறையில் அருண் அவனைக் கரம் பற்றி அழைத்துச் சென்றான்.

அதன் பின்னர் நிச்சய நிகழ்வானது இனிதே ஆரம்பித்தது. சிவசங்கரின் பார்வை அவனது குடும்பத்தினரை மட்டுமே சுற்றி வந்தது. நீண்டநாள் கழித்து தங்கையுடன் இயல்பாய் சிரித்துப் பேசி மகிழும் தந்தை, மூத்த மருமகனுடன் வாஞ்சையாய் உரையாடும் தாத்தா பாட்டி, துள்ளலே உருவாக வலம் வரும் தங்கை, நாத்தனார்களுடன் அடுத்து வரும் சடங்குகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்த அன்னை என அனைவரின் முகமும் மகிழ்ச்சி வண்ணம் பூசப்பட்டு ஜொலித்தது.

இத்தனைக்கும் காரணம் தனது விவாகம் என்றால் தான் ஏன் அதைச் சந்தோசமாய் எதிர்கொள்ள கூடாது என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டவன் திருமணச் சடங்குகளில் இன்முகத்துடன் கலந்து கொள்ள ஆரம்பித்தான்.

பட்டாடை பூண்டு அணிகலன்கள் ஜொலிக்க வானுலகில் இருந்து இறங்கி வந்த தேவதையைப் போல அவனருகில் வந்து அமர்ந்த பவானி அவனது சிந்தையைக் கவர்ந்தாள்.

அவள் முக லெட்சணமானவள் என்பதை அறியாதளவுக்கு அவனது கண்பார்வையில் குறைபாடு எதுவுமில்லை. ஆனால் இன்றைய தினத்தில் அவளது எழில் கூடிப் போனதாக உணர்ந்தவன் கொஞ்சம் சிரித்தால் பேரழகியாக ஜொலிப்பாள் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

அத்தோடு மெதுவாய் அவள் புறம் சாய்ந்து “கொஞ்சம் சிரிக்கலாம் பவா… எனக்குத் தெரிஞ்சவரைக்கும் சிரிக்கிறதுக்கு நம்ம நாட்டுல ஜி.எஸ்.டி கிடையாது” என்று சொல்லவே பவானி தனது கண்களை விரித்து அவனை நோக்கியவள்

“நீங்க சிரிக்கச் சொல்லுறிங்க… ஆனா உங்க மாமியார் சும்மா முப்பத்திரண்டு பல்லையும் சபை முன்னாடி காட்டாம அடக்க ஒடுக்கமா உக்காரணும்னு ஆர்டர் போட்டுட்டாங்க… நான் என்ன பண்ணுறது?” என்று சலிப்பாய் மொழிந்து தோளைக் குலுக்கினாள்.

ஆனால் தொடர்ந்து பேச விடாமல் வானதி மற்றும் பாகீரதியின் கேலிப்பேச்சுக்கள் இருவரது வாயையும் கட்டிப் போட நிச்சய நிகழ்வு இனிதாய் நடந்தேறியது.

அன்றைய இரவு சிவசங்கரை மண்டபத்தில் தங்கச் சொல்லிவிட்டதால் அருணும் அவனுடன் தங்கிக் கொள்வதாகச் சொல்லிவிட்டான். சில முக்கியமான உறவினர்களும் அங்கே தங்கிக் கொள்ள முதியத்தம்பதியினருக்கு அங்கே சௌகரியப்படாது என்பதால் அவர்கள் வீடு திரும்பினர்.

அன்றைய தினம் சுவாமிநாதன் மனைவியிடம் மனம் விட்டுப் பேசினார். நாளை முதல் தங்களின் பேத்தி இந்த வீட்டில் உரிமையானவளாக வளைய வருவாள் என்ற எண்ணமே இருவரது உள்ளத்தையும் தித்திக்கச் செய்தது.

அந்த நினைவுகளுடன் அவர்கள் உறங்கிப் போயினர். அதே வீட்டில் இன்னொரு ஜீவன் மண்டபம் தனக்கு வசதிப்படாது என்று குறை கூறிக்கொண்டு வந்து தனது அறையில் சயனித்திருந்தது. அந்த ஜீவன் வேறு யாருமல்ல, அரிஞ்சயன் தான்.

பவானி இங்கே வந்துவிட்டால் அடுத்து ஜெகத்ரட்சகனும் நுழைந்துவிடுவார். அதன் பின்னர் மீண்டும் அனைத்து அதிகாரங்களும் அவர் கைக்குச் சென்றுவிடுமென எண்ணி மாய்ந்தவர் மெதுவாய் நித்திரையில் ஆழ்ந்தார்.

மண்டபத்தில் சிவசங்கருக்கும் உறக்கம் வரவில்லை. நாளை முதல் தனது வாழ்வே மாறப்போவது போல ஒரு பிரமை அவனுக்கு. பக்கத்தில் அருண் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க அவனைப் பொறாமையாய் நோக்கியவன் தானும் சில நிமிடங்களில் நித்திராதேவியின் வசம் வீழ்ந்தான்.

மறுநாள் ஆதவன் தனது ஆரஞ்சு நிறக் கதிர்களால் வானுக்கு வண்ணம் தீட்டியபடி உதயமானான்.

மண்டபத்தில் முகூர்த்தத்துக்கான பரபரப்பு தொற்றிக் கொண்டது. பெண் அழைக்கும் சடங்கு நடைபெற அதைத் தொடர்ந்து மணப்பெண்ணின் தாய்மாமாவான லோகநாயகியின் சகோதரர் பவானியை ஆசிர்வதிக்க அவளுக்கு மணப்பெண் அலங்காரம் ஆரம்பித்தது.

சிவப்பு வண்ணப் பட்டில் பொன் ஆபரணங்கள் ஜொலிக்க கூந்தலை அலங்கரிக்கும் மலர்களுடன் தயாரானாள் பவானி. பாகீரதியும் வானதியும் அவளது அலங்காரத்தில் சிற்சில திருத்தங்களைச் சொல்லிக் கொண்டிருக்க “என்னம்மா என் பொண்ணு ரெடியாயிட்டாளா?” என்றபடி உள்ளே நுழைந்தார் ஜெகத்ரட்சகன்.

அவரைக் கண்டதும் பவானி எழுந்தவள் “நான் எப்பிடி இருக்கேன்பா?” என்று தலைசாய்த்துக் கேட்க

“எங்கம்மா மாதிரி இருக்கடா” என்று ஒற்றைவார்த்தையில் பதிலளித்தவர் மகளை உச்சிமுகர்ந்து முத்தமிட்டார்.

அவரது குரலில் தெரிந்த ஏதோ ஒன்று அங்கிருந்த அஞ்சனாதேவியைத் துணுக்குற செய்தது. ஆனால் பவானியோ அப்படியெதுவும் உணரவில்லை. தந்தையின் பாசத்தில் மூழ்கியிருந்தவளுக்கு மற்ற எதுவும் கவனத்தில் பதியவில்லை.

அவளது அன்புத்தந்தை அவளுக்காக பழைய பகை அனைத்தையும் மறந்து இன்முகமாய் வலம் வருவதில் உண்டான மகிழ்ச்சியும், புதுமணப்பெண்ணுக்கு உண்டான இயல்பான உற்சாகமுமாய் வானதியும் பாகீரதியும் உடன் வர உறவுப்பெண்கள் சூழ மணமேடையை நோக்கி அடியெடுத்து வைத்தாள் பவானி.

மணமேடையில் சிவசங்கர் கர்மச்சிரத்தையாய் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தவன் பவானியை நோக்க மணமகனாய் பட்டு வேஷ்டி சட்டையிலிருந்தவனின் தோற்றம் அவள் மனக்கண்ணில் பதிந்தது.

ஆறு வருடங்கள் இத்தருணத்துக்காக அவள் ஏங்கியிருக்கிறாள். அந்த ஏக்கம் ஆசை அனைத்தும் இன்னும் சில நிமிடங்களில் நிஜமாகப் போகும் மகிழ்ச்சியில் அவள் முகமும் ஜொலிக்க அவளது செவ்விதழ்கள் வளைந்து புன்னகையைச் சிந்தியது.

இளஞ்சிரிப்புடன் அப்சரஸ் போல சிவசங்கரின் அருகில் அமர்ந்தவளின் பேரழகு மீண்டும் ஒரு முறை சிவசங்கரை திக்குமுக்காடச் செய்ய மிகுந்த கவனத்துடன் தனது சிந்தையை அவளிடமிருந்து பிரிக்க முயன்றான் அவன்.

மாங்கல்யதாரணத்துக்கான நேரம் வர வானதி பெரியவர்களிடமும் உறவினர்களிடமும் திருமாங்கல்யத்தைக் காட்டி ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு வந்தாள்.

ஐயர் மாங்கல்யத்தை எடுத்துத் தர அதைக் கையில் ஏந்தியவன் பவானியின் கழுத்தில் மூன்று முடிச்சிட உற்றார் உறவினர்களுடன் அன்னபூரணியும் சுவாமிநாதனும் தங்கள் எண்ணம் ஈடேறிய மகிழ்ச்சியில் அட்சதை தூவ அஞ்சனாதேவியோ இனி பிறந்தவீட்டாருடன் இருக்கும் உறவு வலுப்படுமென்ற நம்பிக்கை துளிர்க்க மணமக்களை ஆனந்தக் கண்ணீருடன் அட்சதை தூவி ஆசிர்வதித்தார்.

அட்சதைப்பூக்களில் நிறைந்த மணமேடையில் நடுநாயகமாய் அக்னிசாட்சியாய் மணந்தவனின் விழிகளை நோக்கிய பவானி அதில் ‘இனி எனக்கு நீ; உனக்கு நான்’ என்ற அர்த்தம் தோன்றியதில் கண் விரித்தவள் அவனது இதழில் விரிந்த குறுஞ்சிரிப்புக்கு அடிமையானாள்.

அவளறியாது கன்னத்தில் வெட்கப்பூக்கள் மலர அவனது விரல் பிடித்து ஹோமகுண்டத்தை வலம் வந்தவள் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள்.

சுவாமிநாதனும் அன்னபூரணியும் வாழ்த்த வார்த்தை எழாது திக்குமுக்காடினர் என்றால் அஞ்சனாதேவி முகம்கொள்ளா புன்னகையுடன் மகளையும் மருமகனையும் ஆசிர்வதித்தார்.

ஜெகத்ரட்சகனிடம் ஆசி பெற்றபோது சிவசங்கர் அவர் காலில் விழாது நிற்க பவானி தன் வாழ்வின் முதல் தர்மசங்கடத்தை அப்போது அனுபவித்தாள்.

ஆனால் அருண் கலகலப்பாக பேசி சூழ்நிலையை இயல்பாக்க முயன்றான். மகனைக் கவனித்த ஞானதேசிகனோ “சபைல உன் மாமனாருக்கு மரியாதை குடுக்க வேண்டியது உன்னோட கடமை” என்று முணுமுணுக்க அவனோ

“இது அவருக்கும் பொருந்தும் தானே! தாத்தா கிட்ட அவர் உண்மையான சந்தோசத்தோட பேசலப்பா… அவர் தாத்தாவுக்குச் செஞ்சத நான் அவருக்குத் திருப்பி பண்ணுறேன்… இதுல தப்பிருக்கிறதா எனக்குத் தோணல… என்னை வற்புறுத்தாதிங்கப்பா” என்று நிர்தாட்சணியமாக மறுக்க லோகநாயகியும் செண்பகாதேவியும் செய்வதறியாது விழித்து வைத்தனர்.

ஆனால் அவர்களின் மகள்கள் அனைவரின் கவனத்தையும் சடங்கு சம்பிரதாயங்கள் வசம் மாற்றிவிட்டனர். அப்பளம் உடைக்கும் சடங்கு, தேங்காய் உருட்டும் விளையாட்டு என அனைவரும் அதில் கவனமான பின்னர் வானதி தன் அன்னையிடம் கண்ணால் பேசுவதை அருண் கவனித்துவிட்டான்.

மனதுக்குள் “நாட் பேட்… இந்தப் பொண்ணுக்கும் கொஞ்சம் அறிவு இருக்கு” என்று சொல்லிக் கொண்டவனின் செவிகளில் உறவினர்கள் பேசிக்கொள்வது விழுந்து வைத்தது.

“சுவாமிநாதனோட இன்னொரு பேரனுக்கும் பேத்திக்கும் முடிச்சு போட்டுட்டா அவங்க உறவு இன்னும் பலமாயிடும்”

அதைக் கேட்டவன் புன்சிரிப்புடன் கடந்துவிட அது வானதியின் காதிலும் தவறாது விழுந்து வைக்க அவளோ “க்கும்! இந்தச் சிடுமூஞ்சி சின்னப்பாவ என்னோட லைப் பார்ட்னரா நினைச்சுப் பாத்தாலே இரிட்டேட் ஆகுது” என்று சொன்னபடி சடங்குகளில் கவனமானாள்.

இந்த உற்சாகமும் சந்தோசமும் மாலையில் வரவேற்பு நேரத்திலும் நீடித்தது. ஆனால் எல்லாம் முடிந்து பவானி சாந்திவனத்துக்குக் கிளம்புவதற்காக தயாரானவள் தந்தையிடம் சொல்லிக் கொண்டு செல்ல அவர் இருக்கும் இடத்துக்கு வந்தாள்.

உறவினர்கள் அனைவரும் வேறு இடத்தில் குழுமியிருக்க அங்கே இரு குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர்.

பவானி யோசனையுடன் அமர்ந்திருந்த தந்தையிடம் வந்தவள் “நான் போயிட்டு வர்றேன்பா” என்று முகமலர்ச்சியுடன் கூற ஜெகத்ரட்சகன் எழுந்தவர் மகளை உணர்ச்சியற்ற விழியால் வெறித்தார்.

மெதுவாய் “நீ தாராளமா போகலாம் பவானி… ஆனா திரும்ப வரக்கூடாது” என்று உரைக்க பவானிக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவள் பின்னே சிவசங்கர் முகம் கல்லாய் இறுக நின்று கொண்டிருந்தான்.

பவானியோடு சேர்ந்து மற்றவர்களும் அதிர அஞ்சனாதேவி “கல்யாணம் ஆகி புகுந்த வீட்டுக்குப் போற பொண்ணு கிட்ட என்ன பேச்சு பேசுறிங்க?” என்று பதற

அவரோ “யாரு என்னோட பொண்ணு?… இப்போ என் முன்னாடி நிக்கிறது சிவசங்கரோட ஒய்ப் பவானி… இவனோட ஒய்ப் என்னைக்குமே எனக்கு மகளா ஆக முடியாது… இன்னையோட இவளுக்கும் நம்ம குடும்பத்துக்குமான சம்பந்தம் முடிஞ்சுது… எனக்குப் பிறந்தது அருண் மட்டும் தான்” என்று அழுத்தம் திருத்தமாய் மகளைத் துறந்தார்.

அவர் உற்சாகமாய் திருமணவிழாவில் கலந்து கொண்டது, சுவாமிநாதன் குடும்பத்தினரிடம் இயல்பாகப் பேசியது அனைத்துமே வெறும் நடிப்பு தான்; மனதுக்குள் வருத்தமும் வைராக்கியமும் மட்டுமே நிறைந்திருக்க கற்பாறையாய் இறுகி நின்ற ஜெகத்ரட்சகனை வேதனையுடன் ஏறிட்டனர் இரு குடும்பத்தினரும்.

சிவசங்கர் இவ்வளவு நேரம் அமைதி காத்தவன் பவானியின் கரத்தை அழுத்தமாகப் பற்றி

“ரொம்ப சரியா சொன்னிங்க மிஸ்டர் ஜெகத்ரட்சகன்… என்னோட ஒய்ப் உங்களோட மகளா இருக்குறதுல எனக்கும் இஷ்டமில்ல… நான் பண்ண வேண்டியத நீங்களே பண்ணிட்டிங்க… தேங்யூ சோ மச்” என்று தெளிவாய் உரைத்தான்.

பின்னர் அஞ்சனாதேவியிடமும் அருணிடமும் மட்டும் “நாங்க கிளம்புறோம்” என்றவன் பவானியைக் கரம் பற்றி அழைத்துச் செல்ல, சிலையாய் அவளும், பேச இயலாதவர்களாய் அவன் குடும்பத்தினரும் அவனைத் தொடர்ந்தனர்.

சுவாமிநாதனும் அன்னபூரணியும் எந்தத் திருமணம் இரு குடும்பங்களையும் ஒன்றிணைக்கும் என்று எண்ணி ஆனந்தம் கொண்டார்களோ அந்தத் திருமணமே பேத்திக்கும் அவளது தந்தைக்கும் இருந்த உறவைக் கேள்விக்குறி ஆக்கிவிட்டது.

ஆனால் புதிதாய் ஆரம்பித்த கணவன் மனைவி பந்தத்தையாவது வலுவாக்குமா இத்திருமணம்? இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தவன் அந்த ஈசன் மட்டுமே!

தொடரும்💘💘💘