💗அத்தியாயம் 6💗

துளசியின் இரண்டாவது கோயம்புத்தூர் பயணம் அவள் எதிர்பார்த்த அளவுக்கு அவளுக்கு எப்பிரச்சனையையும் கொண்டுவரவில்லை என்று தான் கூறவேண்டும். ஆனால் கிருஷ்ணா என்பவன், தான் அவள் வாழ்வில் மீண்டும் பிரவேசித்துவிட்டதை அவ்வபோது தொலைபேசி அழைப்புகளின் மூலம் நினைவுறுத்திக் கொண்டேயிருந்தான்.

துளசி தப்பித்தவறி அவனது அழைப்புகளைக் கவனிக்கத் தவறிவிட்டால் ஊட்டியில் அவளது பொட்டிக்குக்கே நேரடியாக வந்து அவளிடம் பேச்சு கொடுத்துவிட்டுச் செல்பவனை அவளது ஏச்சு பேச்சு எதுவுமே தடுத்து நிறுத்தவில்லை.

அவ்வாறு தான் அன்றும் அவன் வந்திருந்தான். வந்தவன் எடுத்தவுடனே மித்ராவைப் பற்றி விசாரிக்கத் துளசியின் கீழே பணிபுரியும் நான்கு பெண்களின் பார்வையும் இருவரையும் அடிக்கடி தொட்டு மீண்டது. கிருஷ்ணாவுக்கு இது எப்படி இருந்ததோ துளசி தர்மச்சங்கடமாக உணர்ந்தாள்.

நல்லவேளை இன்று சுகன்யா இல்லை என்று நூற்றியோராவது முறையாக எண்ணிக்கொண்டபடி கிருஷ்ணாவை முறைத்தபடி அவளுக்கும் சுகன்யாவுக்கும் பொதுவானத் தடுப்புப்பகுதிக்குள் துளசி செல்ல கிருஷ்ணாவும் எந்தத் தயக்கமுமின்றி அவளை பின்தொடர்ந்தான்.

துளசியின் நான்கு பணியாளர்களும் அதைக் கண்டுகொள்ளாத மாதிரி வேலையில் ஆழ்ந்துவிட்டனர்.

துளசி ஒரு நாற்காலியை தரதரவென்று இழுத்துப் போட்டு அமர்ந்தவள் அவளைத் தொடர்ந்து உள்ளே நுழைந்த கிருஷ்ணாவிடம் தன் ஒட்டுமொத்த எரிச்சலையும் முகத்தில் காட்டி

“ஏன் கிரிஷ் இப்பிடி அடிக்கடி வந்து தொல்லை பண்ணுற? எனக்கு இருக்கிற ஆயிரம் டென்சன்ல நீ வேற ஆயிரத்து ஒன்னாவதா வந்து ரொம்ப டார்ச்சர் பண்ணுற… தயவு பண்ணி போயிடு… எனக்கு வேலை இருக்கு” என்று மெதுவாக ஆனால் அழுத்தமானக் குரலில் வெறுப்பை விரவிக் கூறிமுடிக்க, கிருஷ்ணா இது எதையும் பொருட்படுத்தாமல் தனக்கும் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

கைகளைத் தலைக்குப் பின்னே கட்டியபடி நாற்காலியில் சாய்ந்துக் கொண்டு அவளை ரசனையுடன் அளவிட்டவனை உணர்ச்சியற்ற விழிகளால் வெறித்த துளசி வாய்க்குள் “இம்பாஸிபிள்” என்று முணுமுணுத்தபடி ஏற்கெனவே பாதியில் விட்ட டிசைன் ஒன்றை வரையத் தொடங்கினாள்.

கிருஷ்ணா அவனுக்கு இருக்கும் அனைத்து அலுவல்களையும் ஒதுக்கிவிட்டுத் துளசியின் பார்வைக்காகத் தவமிருக்க, துளசி தலையைக் குனிந்தபடி வரைந்து கொண்டிருந்தாலும் அவளால் கிருஷ்ணாவின் ஆளைத் துளைக்கும் பார்வையின் வீச்சை உணரமுடிந்தது.

ஒரு கட்டத்தில் அவளால் டிசைனில் கவனம் செலுத்த முடியாமல் போக பென்சிலை மேஜை மீது வீசியெறிந்துவிட்டு “உனக்கு இன்னைக்கு வேற வேலை எதுவும் இல்லையா கிரிஷ்? ஏன் இப்பிடி என்னை வேலை செய்ய விடாம தொந்தரவு பண்ணுற?” என்று சலித்துப் போன குரலில் கேட்க

கிருஷ்ணா பொய்யாய் ஆச்சரியம் காட்டிவிட்டு “நான் உன்னை என்ன பண்ணுனேன்? உன்னோட பென்சிலைப் பிடுங்கினேனா? உன் சார்ட் பேப்பரைக் கிழிச்சேனா? இல்லை உன்னோட கையைப் பிடிச்சிட்டு வரையாதே துளசினு உன்னை வரையவிடாம தடுத்தேனா? நான் பாட்டுக்குச் சும்மா ஒரு ஓரமா உக்காந்திருக்கிறது ஒரு குத்தமா துளசி?” என்று கேட்டுவிட்டுத் தோளைக் குலுக்கிக் கொண்டான்.

துளசி கோபத்தில் கண்கள் சுருங்க “நடிக்காதேடா! நான் சொல்லுறது நிஜமாவே உனக்குப் புரியலையா?” என்று கேட்டுவிட்டு முகத்தை வெட்டிக் கொண்டாள்.

கிருஷ்ணா மேஜை மீது இருகரங்களையும் கோர்த்தபடி வைத்தவன் “லுக் துளசி! நீயும் மித்ராவும் நம்ம வீட்டுக்கு வர்ற வரைக்கும் என்னோட இந்தப் படையெடுப்பு தொடரும்… நீ என்ன திட்டுனாலும், கோவப்பட்டாலும் நான் அதை பெருசா எடுத்துக்கவே மாட்டேன்… பிகாஸ் இந்த உலகத்துல என் மேல கோவப்படுறதுக்கான முழு உரிமையும் உனக்கு மட்டும் தான் இருக்கு” என்று சொல்லிவிட

துளசி பல்லைக் கடித்தவாறு “நானோ என் பொண்ணோ உன் வீட்டுவாசலை மிதிக்கவே மாட்டோம் கிரிஷ்…. நான் செத்தாலும் அது நடக்காது.. எத்தனை தடவை சொல்லுறதுடா, மித்ரா உன்னோட பொண்ணு இல்லைனு… உனக்கு இன்னுமா புரியலை?” என்று எரிச்சலுடன் கத்திவிடவே

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த கிருஷ்ணாவுக்கு அவளது செத்தாலும் என்ற வார்த்தை சுர்ரென்று கோபத்தை ஏற்படுத்த அவனும் எரிச்சலடைந்தான்.

அவளுக்குச் சிறிதும் குறையாதக் கோபத்துடன் “ஏய்! போனா போகுதுனு பார்த்தா நீ ஓவரா பண்ணுறடி.. எதோ சின்னப்பொண்ணாச்சேனு கொஞ்சம் விட்டுக்குடுத்தா நீ என்ன பேசுறேனு புரியாம இஷ்டத்துக்குப் பேசுவியோ? இன்னொரு தடவை செத்தாலும் அது இதுனு உளறுனனு வை, நான் மனுசனா இருக்க மாட்டேன்” என்று கர்ஜித்துவிட்டு அதன் பின்னும் அவள் சொன்ன வார்த்தை ஏற்படுத்திய எரிச்சல் அடங்காமல் மேஜையிலிருந்த தம்ளரிலுள்ள தண்ணீர் முழுவதையும் குடித்து அதைத் தணிக்க முயன்றான் கிருஷ்ணா.

துளசி இவனது இந்தக் கர்ஜனைக்கெல்லாம் நான் ஏன் அஞ்ச வேண்டும் என்ற அலட்சியத்துடன் “இங்க பாருங்க மிஸ்டர் கிருஷ்ணா! மித்ரா என்னோட பொண்ணு… உங்களுக்கும் அவளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று கைநீட்டிப் பேச கிருஷ்ணா அவனது அக்மார்க் ஏளன உதட்டுவளைவுடன் அவளைப் பார்த்துச் சிரித்தான்.

பின்னர் ஆச்சரியத்துடன் “இஸிண்ட்? ஆறு வருசம் கழிச்சு என் பொண்ணைப் பார்க்க வந்தா நீ என் கிட்ட இல்லாத ஒரு கதையைச் சொல்லி ஏமாத்துவ! அதைக் கேட்டுட்டுத் தலையாட்ட நான் ஒன்னும் இளிச்சவாயன்  இல்லை துளசி..

சும்மா உன் பொண்ணு உன் பொண்ணுனு சொல்லுறியே, உன் பொண்ணுனா அவ எனக்கும் பொண்ணு தான். சும்மா மெண்டல் மாதிரி பேசாதடி” என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை எடுத்துப் பற்றவைக்கப் போனவனைத் தடுத்தது துளசியின் கரங்கள்.

“இதை இன்னும் நீ விடலையா கிரிஷ்?” என்றவளின் குரலில் இருந்த அக்கறையை ஆறு வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாகக் கேட்டவனுக்கு அந்தக் கணத்தில் அவள் பழைய துளசியாகத் தோன்ற, சிகரெட்டைத் தூர வீசிவிட்டு அவளது கரங்களைப் பற்றிக்கொண்டான் கிருஷ்ணா.

அவளது கரங்களைப் பற்றியிருந்தவனின் கண்கள் கலங்கியிருந்தனவோ… அவள் அதைக் கவனிக்கும் முன்னரே கண்ணை மூடி அவளின் அக்கறையை அனுபவித்தவன்

“துளசி இவ்ளோ நாள் நடந்த எல்லாமே மறந்துடலாம்.. உன்னை ரொம்பவே மிஸ் பண்ணுனேன் தெரியுமா? இனிமேலும் என்னால உன்னையும் குழந்தையையும் பிரிஞ்சிருக்க முடியாது. நீயும் குழந்தையும் கிளம்புங்க. நம்ம கோயம்புத்தூர் போயிடலாம்” என்று அவளது கரங்களை விடாமல் எழுந்தான் கிருஷ்ணா.

துளசி இவ்வளவு நேரம் அவன் குரலில் இருந்த வருத்தத்தில் கட்டுண்டிருந்தவள் அவனது கடைசி வாக்கியம் ஏற்படுத்திய கோபத்தில் அவன் கையை உதறிவிட்டு

“கோயம்புத்தூர் போய் என்ன பண்ணுறது? உன்னோட லிஸ்ட்ல இருக்கிற எத்தனையோ கேர்ள் ஃப்ரெண்ட்ல நானும் ஒருத்தியா சேர்ந்துக்கணுமா? லிசன் கிரிஷ்! நீ இன்னும் என்னை அதே பதினெட்டு வயசுல உன்னைப் பார்த்ததும் மயங்கி, நீ சொன்னதுக்கெல்லாம் தலையாட்டுன துளசியா நினைச்சிட்டிருந்தா, ஐ அம் சாரி. அவ எப்போவோ செத்துட்டா. இங்கே இருந்து ஓவரா பெர்ஃபார்மென்ஸ் பண்ணாம கிளம்புடா” என்றபடி அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.

அவள் சென்று சில நிமிடங்கள் வரை அங்கேயே தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தவன் மெதுவாக எழுந்து அங்கிருந்து வெளியேறி நடுவில் இருக்கும் பெரிய அறைக்கு வந்தான். அங்கே அந்த நான்கு பெண்களிடமும் துளசி ஏதோ டிசைனைக் காட்டியபடி பேசிக்கொண்டிருக்க அவளை அதற்கு மேல் தொந்தரவு செய்ய விரும்பாமல் அவளது பொட்டிக்கின் கண்ணாடிக்கதவுகளைத் திறந்து வெளியேறினான்.

துளசி அவன் வெளியேறுவதை ஓரக்கண்ணால் பார்த்தாலும் தடுக்க நினையாது தனது வேலையில் மும்முரமானாள்.

அதே நேரம் கிருஷ்ணா அந்தப் பொட்டிக்கிலிருந்து வெளியேறுவதை அதன் அருகிலிருந்த மாடிப்படியின் மறைவிலிருந்து கண்காணித்த ஒரு மனிதன் போனை எடுத்து “ஹலோ சார்! நான் தான் தேவா பேசுறேன்… கிருஷ்ணா இப்போ தான் ஒரு பொட்டிக்கில இருந்து வெளியே போறாரு… அங்கே அவரு யாரைப் பார்க்க வந்தாருனு தெரியலை… கண்டிப்பா சார்… நான் தொடர்ந்து வாட்ச் பண்ணி உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணுறேன்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.

கிருஷ்ணா காரை எடுக்க அந்தத் தேவாவும் தன்னுடைய காரில் அவனைத் தொடர ஆரம்பித்தான். கிருஷ்ணா காரை வேகமாக ஓட்டிச் சென்றவன் தன்னை பின்தொடரும் காரைக் கவனிக்கவில்லை. கிருஷ்ணாவின் கார் கோயம்புத்தூரை அடையும் வரை தேவாவும் விடாமல் பின்னே வந்தான்.

கிருஷ்ணாவுக்கு திடீரென்று போன் வரவும் ப்ளூடூத்தைக் காதில் மாட்டியவன் “ஹலோ ராகுல்! சொல்லுடா….” என்று பேச ஆரம்பித்தான்.

போனில் பேசியவன் தான் ராகுல். கிருஷ்ணாவின் சிறுவயது நண்பன். சாவித்திரியின் மறைவுக்குப் பிறகு கிருஷ்ணா அமெரிக்கா சென்றுவிட்டாலும் அங்கே சென்றபிறகு தான் நண்பனைப் பிரிந்திருப்பதன் வலியை உணர்ந்தான்.

ஒவ்வொரு முறை விடுமுறைக்கு இந்தியா வரும் போதும் ராகுல் மற்றும் அவனது சித்தப்பா மகன் விஷ்வாவுடன் ஒட்டிக்கொண்டே அலைவான் கிருஷ்ணா. டீனேஜில் அடியெடுத்து வைத்தப்பின் அவனது இந்தியவருகை கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போலக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில் நின்றே போய்விட்டது.

அந்தச் சமயத்தில் தான் நமது வாழ்வியலுக்குச் சற்றும் ஒத்துவராத மேற்கத்தியக் கலாச்சாரத்தில் கிருஷ்ணா மெதுவாக இறங்கத் தொடங்கியிருந்தான் என்பது ராகுல் மற்றும் விஷ்வாவின் எண்ணம். பதினெட்டுவயதில் அந்தக் கலாச்சாரம் அவனை முழுவதுமாகத் தன் வசம் இழுத்துக் கொண்டதே அவனது வருகை நின்று போனதற்கான காரணம் என்று அவன் நண்பர்கள் அனுமானித்திருந்தார்கள்.

இவ்வாறு ஒவ்வொருவரும் அனுமானித்ததன் பலனைத் தான் பதினோரு வருடங்கள் கழித்தும் கிருஷ்ணா அறுவடை செய்து கொண்டிருக்கிறான், துளசியின் ஏச்சின் மூலமாகவும், அவனது தந்தையின் புறக்கணிப்பின் மூலமாகவும்.

இவ்வாறு சிந்தித்தபடியே ஆர்.கே பேமிலி ரெஸ்ட்ராண்டிற்குள் காரைச் செலுத்தினான் அவன். அவனைத் தொடர்ந்து தேவாவும் உள்ளே நுழைந்தான் கிருஷ்ணா அறியாவண்ணம்.

காரைப் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு இறங்கியவன் உள்ளே செல்ல தேவா யாருமறியாவண்ணம் அவனைத் தொடர்ந்தான். கிருஷ்ணா அங்கே நுழைந்ததும் அவன் வயதையொத்த இரு வாலிபர்கள் அவனை உற்சாகத்துடன் வரவேற்க அவனும் ஹைஃபை கொடுத்தபடி அவர்களுடன் சேர்ந்து ஒரு மேஜையை நோக்கி நகர்ந்தான்.

தேவா அவர்களின் பேச்சு கேட்குமாறு அருகில் மற்றொரு மேஜையில் அமர்ந்தவன் என்ன வேண்டுமென்று கேட்ட சர்வரிடம் காபியை ஆர்டர் செய்துவிட்டு காதைக் கூர்த்தீட்டிக் கொண்டான்.

கிருஷ்ணா சோர்ந்த முகத்துடன் அமர்ந்திருக்க அவன் வலப்புறம் அமர்ந்திருந்த வாலிபன் ராகுல் கிட்டத்தட்ட கிருஷ்ணாவின் உயரத்தில், கம்பீரமானத் தோற்றத்துடன் இருந்தவன் கிருஷ்ணாவிடம் “கிரிஷ் ஊட்டிக்குப் போன விஷயம் என்னாச்சுடா? காயா பழமா?” என்று கேட்க, கிருஷ்ணா அதற்கு விரக்தியாய் உச்சுக்கொட்டவே கிருஷ்ணாவின் இடப்பக்கம் அமர்ந்திருந்தவனிடம் கவலையாய்க் கிருஷ்ணாவைச் சுட்டிக்காட்டினான்.

அந்த இன்னொருவன் தான் விஷ்வா, ராகுலின் சித்தப்பா மகன். அவனுக்கும் ராகுல் மற்றும் கிருஷ்ணாவின் வயது தான். மேல்தட்டு வாலிபர்களின் பிம்பமாய் மற்ற இருவருக்கும் சற்றும் குறையாத வசீகரத்துடன் இருந்தவன் ராகுலைப் போல முழு அழுத்தக்காரன் என்றும் கூறமுடியாது. கிருஷ்ணாவைப் போலக் குறும்புக்காரன் என்ற முடிவுக்கும் வர இயலாது.

இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட விஷேச குணத்தினன் தான் விஷ்வா. ராகுலைப் போல இவனுமே கிருஷ்ணாவுக்கு மிகவும் நெருக்கமானவன் தான். சொல்லப் போனால் ஆறுவருடங்களுக்கு முன்னர் கிருஷ்ணாவின் வாழ்வில் துளசி வந்தது முதற்கொண்டு தற்போது அவனது பள்ளியில் துளசியைச் சந்தித்தது வரை ராகுலுக்கே தெரியாத சிலபல இரகசியங்களும் விஷ்வாவுக்கு மட்டுமே தெரியும்.

ராகுலுக்கு துளசி என்பவள் ஆறு வருடங்களுக்கு முன்னர் கிருஷ்ணா காதலித்தப் பெண் என்பது மட்டுமே தெரியும். ஏதோ மனக்கசப்பால் அவள் கிருஷ்ணாவை விட்டு விலகிவிட்டாள் என்று மட்டுமே அறிந்தவன் ஆறு வருடங்களுக்குப் பின்னர் அவளைக் கோயம்புத்தூரில் சந்தித்தாக நண்பன் சொன்னதும் இனி கிருஷ்ணாவின் வாழ்வில் தனிமை இராது என்று எண்ணி மகிழ்ந்திருந்தான்.

அதே துளசி தான் தனக்கும் சஹானாவுக்கும் நடக்கவிருக்கும் திருமணத்துக்கான உடைகளை வடிவமைத்தது என்று கிருஷ்ணாவின் வாயிலாக அறிந்தவன் கிருஷ்ணாவின் காதலை மறுபரிசீலனை செய்ய அவள் தொடர்ந்து மறுத்ததை அறிந்து வருந்தினான்.

நண்பனும் கஜினி முகமது போல தொடர்ந்து முயற்சித்தாலும் துளசியின் பிடிவாதம் குறைவதைப் போலத் தெரியாததால் வருந்தியவன் நண்பனின் இன்றைய ஊட்டி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததும் நண்பனை நினைத்து வருந்த ஆரம்பித்தான்.

ஆனால் விஷ்வாவுக்கு கிருஷ்ணா மற்றும் துளசிக்கிடையேயான உள்விவகாரங்கள் அனைத்துமே தெரியுமென்பதால் ராகுல் அளவுக்கு அவன் வருந்தவில்லை.

கிருஷ்ணாவின் தோளில் தட்டிக்கொடுத்த விஷ்வா “கிரிஷ்! எனக்குத் தெரிஞ்சு நீ துளசியைப் போய்ப் பார்த்து, பேசி முடிவுக்கு வர்றது நடக்காத காரியம். அதுக்குப் பதிலா நீ குழந்தையைப் போய்ப் பாரு… அவ கிட்டப் பேசு.. அவளுக்கு அப்பா பாசம்னா என்னன்னு புரிய வை… அப்புறம் உன் பொண்ணு அப்பா வேணும்னு கேட்டா துளசி தானா உன் கூட வாழறதைப் பத்தி யோசிக்கப் போறா” என்று நண்பனுக்குத் தைரியம் கொடுத்தபடி அவன் செய்யவேண்டியவற்றைச் சுட்டிக்காட்டினான்.

ராகுலும் அதை ஆமோதித்தவன் “ஹீ இஸ் ரைட் கிரிஷ்… உனக்கு ஒய்ஃப், குழந்தைனு ஒரு குடும்பம் இருந்தும் நீ இப்பிடி தனிமரமா நிக்கிறதைப் பார்த்தா எனக்கு கஷ்டமா இருக்குடா… நீ இப்பிடி இருக்கிறப்போ நான் மட்டும் எப்பிடி சஹானா கூட சந்தோசமா இருக்க முடியும்? ப்ளீஸ் டூ சம்திங்” என்று விஷ்வா சொன்ன கருத்தையே வேறு வார்த்தைகளில் விளக்கினான்.

கிருஷ்ணா தனது உயிர்நண்பர்கள் இருவரும் சொல்லும் அறிவுரையைக் கேட்டுக் கொண்டவன் அடுத்து செய்யவேண்டியது என்னவென்று புரிபட சிந்தனைவயப்பட்டான்.

இவர்கள் மூவரின் பேச்சையும் அருகே இருந்த மேஜையிலிருந்து ஒட்டுக்கேட்ட தேவா காபியை அருந்திவிட்டு அதற்கானப் பில்லை செலுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறி மீண்டும் கார் பார்க்கிங் ஏரியாவுக்கே வந்தான்.

போனை எடுத்தவன் முக்கியமான நபருக்கு அழைத்து “சார் நீங்க சொன்ன மாதிரி நான் ஃபாலோ பண்ணிப்போனேன்… அங்கே அவரோட ஃப்ரெண்டுனு ரெண்டு பேரு பேசுனதை வச்சு பார்த்தா கிருஷ்ணா சார் அந்தப் பொட்டிக்கில போய் பார்த்தது அவரோட ஒய்பைத் தான்…. அது மட்டுமில்ல, அவங்க ரெண்டு பேருக்கும் ஒரு பெண்குழந்தை இருக்கு” என்று கூற மறுமுனையில் அதைக் கேட்டவன் நம்ப இயலாது வெடிக்க ஆரம்பித்தான்.

“இடியட் மாதிரி பேசாதே தேவா! கிருஷ்ணா இஸ் அன்மேரிட்… அவனுக்கு இப்போ வரைக்கும் கல்யாணம்னு ஒன்னு ஆகவேயில்லை… நீ என்னடானா பொண்டாட்டி, குழந்தைனு இஷ்டத்துக்குச் சொல்லுற… நீ முதல்ல நேர்ல வா… வந்து தெளிவா எல்லா விஷயத்தையும் சொல்லு” என்று தேவாவுக்கு கட்டளையிட்டுவிட்டு போனை வைத்தான் அவன்.

போனை ஆத்திரத்துடன் மேஜை மீது வீசியெறிந்தவனின் எண்ணம் முழுவதும் கிருஷ்ணாவே ஆக்கிரமித்திருந்தான். கையை மேஜையின் மீது ஆத்திரத்துடன் குத்திக்கொண்டான் அவன். அவன் தான் அகிலேஷ் சக்கரவர்த்தி. சக்கரவர்த்தி குழுமத்தின் தலைமைப்பொறுப்பில் இருப்பவன்.

அவர்களின் குழுமத்தின் கீழே டெக்ஸ்டைல் மில்கள், இயந்திர உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், கல்விநிறுவனங்கள், மருத்துவமனைகள் என்று அனைத்தின் நிர்வாகத்தையும் தந்தை விமலாதித்த சக்கரவர்த்தியுடன் சேர்ந்துக் கவனித்து வந்தான் அவன்.

இவ்வளவு பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தின் இளவரசனான அவனுக்குக் கிருஷ்ணாவிடம் தீர்க்கப்படாத கணக்கு ஒன்று நீண்டகாலமாக இருக்கிறது.

தொழிலும் சரி, வாழ்க்கையிலும் சரி அவன் கிருஷ்ணாவைத் தனக்குப் போட்டியாக நினைத்து அந்த வெறுப்பில் செய்து வைத்தக் காரியங்கள் யாவும் அவன் மனக்கண்ணில் படமாய் ஓடியது.

அவ்வளவு செய்தும் கிருஷ்ணா தொழிலில் வெற்றி மேல் வெற்றி ஈட்டுவது அவனுக்கு ஒரு புறம் எரிச்சல் என்றால், இப்போது அவனது வாழ்க்கையில் மீண்டும் வசந்தகாலம் வந்துவிடுமோ என்ற எண்ணம் வேறு மனதை வறுத்தெடுத்தது.

ஆறு வருடங்களுக்கு முன்னர் எவ்வளவோ கஷ்டப்பட்டு அவனது வாழ்வைப் பாலையாக்கி நிம்மதியடைந்தவன், அந்தச் சோகத்தில் கிருஷ்ணா சுக்குநூறாகி விடுவான், அவனது மனநிம்மதியின்மை அவனது தொழிலில் தோல்விக்குக் காரணமாகிவிடும் என்று தப்புக்கணக்கு போட்டான்.

ஆனால் கிருஷ்ணாவின் சொந்தவாழ்க்கையில் அவன் அடைந்த துயரங்ளைப் போக்கும் வடிகாலாய் அவன் தொழிலை ஏற்றுக்கொண்டான். இந்த ஆறு வருடத்தில் கண் மண் தெரியாது, இரவுபகலாக உழைத்தவன் தனது சோகம் முழுவதையும் அவ்வாறு உழைப்பதன் மூலம் கரைக்க நினைத்தான்.

அவனது கடின உழைப்பின் பலனாக கோயம்புத்தூரில் ஆர்.கே குழுமம் தான் தொழிலில் முதலிடம் என்ற நிலை உருவாக, அதன் போட்டி நிறுவனமான சக்கரவர்த்தி குழுமம் வழக்கம் போல இரண்டாவது இடத்திலேயே இருந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற கணக்கில் கிருஷ்ணாவின் சொந்த வாழ்க்கையையும், தொழிலையும் ஒரே நேரத்தில் ஆட்டம் காணவைக்கத் தான் போட்ட திட்டங்கள் யாவும் விழலுக்கு இரைத்த நீர் போல வீணாகிவிட்டக் கோபத்தில் பல்மடங்கு வெறுப்புடன் “கிருஷ்ணாஆஆஆ” என்று அவன் கத்திய சத்தம் அவனது அறையின் கண்ணாடிக்கதவில் பட்டுத் தெறித்தது.

தொடரும்💗💗💗