💗அத்தியாயம் 42💗

திருமணத்துக்குப் பின்னர் முதல் முறையாக பேரன் தன் மனைவி மகளுடன் வீட்டுக்கு வருகிறான் என்பதால் சமையல் எல்லாம் தடபுடலாகத் தயார் செய்யச் சொல்லியிருந்தனர் ரங்கநாயகியும் சுபத்ராவும்.

நீண்டநாட்களுக்குப் பின்னர் அனைவரும் ஒன்றாக இணைந்து சாப்பிடும் இந்த மகிழ்ச்சிக்கு எதுவும் ஈடாகாது என்று எண்ணியபடி சாப்பிட்டவர்களுக்கு அன்றைய உணவு அமிர்தம் போல இருந்ததென்றால் அது மிகையில்லை.

சாப்பிட்டதும் பெரியவர்கள் ஓய்வெடுக்கச் செல்ல மித்ரா கிருஷ்ணாவுடன் தென்னந்தோப்புக்குச் சென்றுவிட்டாள். செல்லும் முன்னர் கிருஷ்ணா டவல் எடுத்துக் கொள்ளவே, துளசி புரியாமல்

“டவல் எதுக்கு கிரிஷ்? நீங்க சுத்திப் பார்க்கத் தானே தோப்புக்குப் போறிங்க?” என்று கேட்டு வைக்க

கிருஷ்ணா துளசியின் முகத்தை வழித்து நெட்டி முறித்து திருஷ்டி கழித்துவிட்டு “அடியே என் அறிவாளி பொண்டாட்டி! தோப்புல விளையாடுறதுக்கு இடம் இருக்கிற மாதிரியே பம்ப்செட்டும் இருக்கு… அங்கே குளிக்கிற சுகத்துக்கு ஈடே கிடையாது… நான் மித்ராவோட விளையாடிட்டு அப்பிடியே குளிச்சிட்டு வந்துடுவேன்… வரட்டுமா?” என்று சொல்லி அவன் கன்னத்தைத் தட்டிவிட்டுக் கிளம்பினான்.

அவனும் மித்ராவும் கிளம்பியதும் துளசியும் சுகன்யாவும் மட்டும் தனித்திருக்க, சுகன்யா சேலை கட்டியிருப்பதால் நிலையின்றி தவித்தபடி இருந்தாள். அவளால் இந்தப் புடவையைச் சமாளிக்கவே முடியவில்லை என்று துளசியிடம் குறைபட்டுக் கொண்டாள்.

இருவரும் வீட்டைச் சுற்றி பரந்திருந்த தோட்டத்தில் நடைபோட்டவர்கள் ஒரு பக்கம் முழுவதும் மலர்ச்செடிகள் மட்டும் நிறைந்திருக்க அதிலிருந்து புறப்பட்ட கம்மென்ற மலர்களின் நறுமணம் அவர்கள் நாசியை நிறைத்தது.

“இந்த இடம் ரொம்ப அழகா அமைதியா இருக்குல்ல துளசி… சுத்தி பச்சை பசேல்னு மரம் செடி கொடி மட்டும் இருக்கிற இடம் எல்லாமே அழகு தான்” என்று சுகன்யா ரசனையுடன் கூறிக்கொண்டே வர துளசி அதற்கு உம் கொட்டிக்கொண்டே நடந்தவள் மல்லிகைத்தோட்டத்துக்குள் நுழைந்துவிட்டாள்.

இருவரும் செடிகளை உரசாமல் ஓரமாக நடந்துவர அதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட நபர் “என்னங்க அம்மிணி வேணும்?” என்று கொங்குத் தமிழில் பேச

துளசி “ஒன்னுமில்லை… நாங்க இங்கே சுத்திப் பார்க்கலாமா?” என்று பவ்வியமாகக் கேட்கவும்

அவர் “இந்தப் பண்ணையே உங்களுது தானுங்களே! தாராளமா சுத்திப் பாருங்க… நான் அப்பிடியே தென்னந்தோப்பு பக்கமா போறேனுங்க… தோப்புக்குத் தண்ணி பாய்ச்சோணும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல, இரு தோழியரும் யாருடைய இடையூறுமின்றி தோட்டத்தை வலம் வந்தனர்.

மல்லிகை மொக்குகள் அனைத்தும் விரிவதற்குள் பறிக்கப்பட்டு விடுவதால் அங்கே இளம்மொட்டுக்கள் மட்டுமே மிச்சமிருந்தன. அதைப் பார்த்தபடியே கதை பேசியவர்கள் சிறிதுநேரத்தில் வீடியோ காலில் மீராவை அழைத்துத் தாங்கள் வந்திருக்கும் இடத்தைக் காட்டியபடி பேச ஆரம்பித்தனர்.

பேசிவிட்டுப் போனை வைக்கும் நேரம் கார்கள் வரும் சத்தம் கேட்க, துளசி “சுகி ராகுலண்ணா ஃபேமிலி வந்துட்டாங்கனு நினைக்கிறேன்… வா! போய் அவங்களைப் பார்ப்போம்” என்று சுகன்யாவை அழைத்துக்கொண்டு வீட்டை நோக்கிச் சென்றாள்.

சொன்னது போலவே ராகுலும் சஹானாவும் உமாவையும் மகேஷ்வரியையும் அழைத்து வந்திருந்தனர். துளசி அவர்களைக் கண்டதும்

“வாங்கம்மா! சந்துருப்பாவும் தியாகுப்பாவும் வரலையா?” என்று கேட்க இரு பெண்மணிகளும் தங்களின் கணவன்மார் இளைய மகனுடன் ஏதோ தொழில்முறைக்கூட்டம் என்று சென்றுவிட்டதால் நாளை தான் அவர்களால் வர முடியும் என்று சொல்லிச் செல்லமாகச் சலித்துக் கொண்டனர்.

சுகன்யா ராகுலின் கரத்தைப் பற்றியபடி நின்ற சஹானாவிடம் கிண்டலாக “என்ன மேடம் இந்தக் கையைப் பிடிக்கலைனா உங்களால ஸ்டெடியா நிக்க முடியாதா?” என்று கேட்டுக் கண் சிமிட்ட

சஹானா சிவந்த முகத்தை மறைத்தபடியே “ஒரு நாள் இதே போஸ்ல நீ உன் புருஷரோட நிப்பல்ல! அப்போ பார்த்துக்கிறேன்” என்று சொல்ல

சுகன்யாவோ “ச்சே ச்சே! அதுக்கெல்லாம் சான்ஸே இல்லைக்கா” என்று இல்லாதக் காலரைத் தூக்கிவிட்டுப் பெருமைப்பட்டுக்கொள்ளவே

ராகுல் சுகன்யாவின் கரத்தைப் பற்றிக் குலுக்கிவிட்டு “அம்மா தாயே! கையைக் குடு…. நல்ல முடிவு எடுத்துருக்க…  ஒரு பையனோட வாழ்க்கை உன் கிட்ட இருந்து தப்பிச்சுச்சு… இந்த முடிவை யாருக்காகவும் எதுக்காகவும் மாத்திக்கக் கூடாது” என்று சொல்லவும்

சுகன்யா “யூ ஆர் சோ மீன் அண்ணா!” என்று சொல்லிவிட்டு முகத்தைத் தூக்கிவைத்துக் கொள்ள சஹானா அவளைச் சமாதானப்படுத்தியபடியே அனைவருடனும் சேர்ந்து வீட்டுக்குள் நுழைந்தாள்.

“இன்னுமா கோவம் போகலை? ராகுல் உனக்கு லாலிபாப் வாங்கித் தருவான் சுகி… எங்கே சிரி பார்ப்போம்” என்றபடி உள்ளே நுழைந்தவளுக்குத் திடீரென்று கண்கள் இருட்டிக்கொண்டு வர அவள் நடை தடுமாற ஆரம்பித்தது.

சுகன்யா அவளிடம் ஏதோ சொல்ல வந்தவள், சஹானா கண்களை மூடிக்கொண்டு தடுமாறவும் “அக்கா என்னாச்சு உங்களுக்கு?” என்று பதறியபடி தடுமாறியவளைப் பிடித்துக் கொண்டு

“ராகுலண்ணா! அக்காவுக்கு மயக்கம் வருது…என்னன்னு பாருங்க” என்று கத்த ராகுல் என்னவோ ஏதோ என்று பதறியடித்துக் கொண்டு வந்தான்.

இவ்வளவு நேரம் உமாவிடமும் மகேஷ்வரியிடமும் உரையாடிக் கொண்டிருந்த துளசியும் கலக்கத்துடன் அவர்களை அழைத்துக் கொண்டு சஹானாவும் சுகன்யாவும் இருந்த ஹாலுக்குள் ஓடிவரவே, அதற்குள் மதியவுணவுக்குப் பின்னர் கண்ணயர்ந்த பெரியவர்களும் விழித்துக்கொண்டு ஹாலுக்கு வந்துவிட்டனர்.

அங்கே சுகன்யாவின் தோளில் சஹானா கண் மூடி மயங்கியிருக்க ராகுல் அவள் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவளை எழுப்ப முயன்று கொண்டிருந்தான்.

சாரதா மகளின் மயக்கத்தைக் கண்ணுற்றவர் “உமாண்ணி! டென்சன் ஆகவேண்டாம்… நல்ல விஷயமா தான் இருக்கும்… சஹானாவும் ராகுலும் மட்டும் டாக்டர் கிட்ட போய் செக் பண்ணிட்டு வரட்டும்” என்று சொல்லவும் தான் மற்ற அனைவருக்கும் ஒரு வேளை இப்படியுமிருக்கலாம் என்று தோன்றியது.

உமா மகனிடம் “ராகுல் நீ சஹானாவை அழைச்சிட்டு டாக்டர் கிட்ட போ” என்று சொல்ல

ராகுலோ “மா! அதுக்கு இவ கண் முழிக்கணுமே… எனக்குப் பயமா இருக்கும்மா.. சஹா கண்ணைத் திறந்து பாருடி… ஏய் நூடுல்ஸ் கண்ணைத் திறடி” என்று அவளை உலுக்கியதில் சஹானா மெதுவாகக் கண் திறந்தாள்.

தன்னைச் சூழ்ந்திருந்த பெரியப்பா, அப்பா, மாமியார்கள் அனைவரையும் பார்த்தவள் தன் எதிரில் இருந்த கணவனிடம் “டாக்டர் கிட்ட போகலாம் ராகுல்… நான் கிட் வச்சு செக் பண்ணுனதுல பாசிட்டிவ்னு வந்துச்சு” என்று சாதாரணமாகச் சொல்லி அங்கிருந்தவர்களை அதிர வைத்தாள்.

ரங்கநாயகிக்கும் சுபத்ராவுக்கு இரண்டாம் முறையாகக் கொள்ளுப்பாட்டி ஆகப்போகிறோம் என்ற ஆனந்தம். ராகவேந்திரனுக்கோ தன் செல்ல சஹா அன்னையாகப் போகிறாள் என்ற மகிழ்ச்சி.

உமாவும் மகேஷ்வரியும் தங்கள் வீட்டுக்கு வாரிசு வரப்போகிறது என்ற இன்ப அதிர்ச்சியில் பூரித்துப் போய் நிற்க, துளசி, சுகன்யா மற்றும் மீராவின் முகங்களில் சந்தோச மத்தாப்பு.

அனைவருக்கும் சந்தோசத்தைக் கொடுத்த சஹானாவின் வார்த்தைகள் அவளவனுக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தந்திருக்கும்! ராகுல் அந்த மகிழ்ச்சியில் பேசத் திணறியவன் ஒருவாறாகச் சமாளித்துவிட்டு “ஓகே! நீ கிளம்பு சஹா… நம்ம டாக்டரைப் பார்த்துட்டு வந்துடுவோம்” என்று அவளை எழுப்பிவிட

மகேஷ்வரி “எதுக்கும் துளசியைக் கூட கூட்டிட்டுப் போ ராகுல்… அவ விஷயம் தெரிஞ்சவ… அவ கூட இருந்தா சஹானாவுக்கு செக்கப் பண்ணுறப்போ அசவுகரியமா இருக்காது” என்று கூறவே ஒரே சமயத்தில் துளசியின் முகமும் சஹானாவின் முகமும் இருண்டு பின்னர் சாதாரண நிலைக்குத் திரும்பியது.

தன் முகத்தைச் சீராக்கியத் துளசி சட்டென்று நிமிர்ந்து சஹானாவைப் பார்க்க ,அவள் முகமும் தன்னைப் போலவே மாறுவதைக் கவனித்தவள் இச்செய்தி அறிந்ததும் மகிழவேண்டிய சஹானா ஏன் அமைதியின்றி விரக்தி இழையோட இருக்கிறாள் என்ற கேள்வி அவளுக்குள் எழுவதை துளசியால் தடுக்க இயலவில்லை.

ராகுல் சஹானாவின் முகமாற்றத்தைப் பார்த்ததும் சுதாரித்துக் கொண்டவன் “இல்லைம்மா! நானும் சஹானாவும் மட்டுமே போறோம்… துளசியும் எங்க கூட வந்துட்டானு வைங்க, மித்ரா அவளைத் தேடி அழ ஆரம்பிச்சிடுவா” என்று சொல்லிச் சமாளித்தவன் மனைவியை அணைத்தபடி காரை நோக்கி அழைத்துச் சென்றான்.

அவர்கள் கிளம்பியதும் ரங்கநாயகி பூஜையறைக்குள் செல்வது துளசியின் கண்ணில் பட்டது. அவரைத் தொடர்ந்து சென்றவள் அவர் அங்கே இருந்த வேங்கடவனின் பெரிய புகைப்படத்தின் முன் கரம்கூப்பி வேண்டுவதைக் கண்டாள்.

“என் பேத்தி நல்லச்செய்தியோட வரணும் ஏழுமலையானே” என்று மனதாற வேண்டிக்கொள்ள அக்கணம் துளசியும் அவ்வாறே அந்தப் பரந்தாமனிடம் மனமுருகி வேண்டிக்கொண்டாள்.

ரங்கநாயகி பூஜையறையில் இருந்து வெளியேறியவர் துளசி கண்மூடி நிற்பதைப் பார்த்துவிட்டு அமைதி தவழ்ந்த அவள் முகத்தை ஒரு கணம் நோக்கினார்.

கள்ளம் கபடமற்றக் குழந்தை முகம். இவள் ஒரு குழந்தைக்குத் தாய் என்றால் யாராலும் நம்ப இயலாது என்று எண்ணியவர், காதலிக்கும் போதே கருவுற்றாலும் தைரியமாகக் குழந்தையைப் பெற்றெடுத்து அதைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தவளை நினைத்து அந்தப் பழமைவாதியானப் பெண்மணிக்குப் பெருமையாகத் தான் இருந்தது.

அவள் கண் திறப்பதற்குள் அங்கிருந்து நகர்ந்தவர் தனது அறைக்குச் சென்று மூத்தமருமகளின் புகைப்படத்தை வருடிக்கொடுத்தார்.

“சவிம்மா! உன் மருமகள் மாதிரி ஒருத்தி நம்ம கிருஷ்ணாவுக்குப் பொண்டாட்டியா வர்றதுக்கு நம்ம குடுத்து வைச்சிருக்கணும்… மரியாதையான, பதவிசான பொண்ணு…. உன் பேத்தியை எவ்ளோ அருமையா வளர்த்திருக்கா தெரியுமா? நானும் சுபத்ராவும் இந்தக் குடும்பத்தைக் கட்டிக்காப்பாத்துன மாதிரி அவளும் நம்ம சஹானாவும் இந்த ரெண்டு குடும்பத்தையும் பொறுப்பா பார்த்துப்பாங்கனு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு சவிம்மா” என்று சொல்லிக் கண்ணீரை உகுத்தவர் சிறிதுநேரம் ஓய்வெடுக்கலாம் என்று எண்ணி படுக்கையில் சாய்ந்து கண்களை மூடினார்.

அவர் உறக்கம் கலைந்து கண் விழித்த போது மித்ரா அவரது கையைப் பற்றிக் கொண்டிருந்தவள் “ரங்கா பாட்டி! சஹானா அத்தைக்கு தம்பி பாப்பா பிறக்கப் போறானாம்” என்று சொல்ல ரங்கநாயகி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வேங்கடவனுக்கு மனதிலேயே நன்றி சொன்னபடி எழுந்தார் அப்பெண்மணி.

இந்த நல்லச் செய்தியைத் தன்னிடம் சொன்ன கொள்ளுப்பேத்தியை முத்தமழையில் நனைய வைத்தவர் “எல்லாம் நீ வீட்டுக்கு வந்த நேரம் ராஜாத்தி! என் தங்கம்” என்று கொஞ்சிவிட்டு அவள் கரத்தைப் பிடித்தபடி நடு ஹாலுக்குச் சென்றார்.

அங்கே குடும்பத்தினரின் முகங்கள் மகிழ்ச்சியில் விகசித்திருக்கக் கண்டவர் நடுங்கும் கரங்களால் சஹானாவின் முகத்தை வருடிக் கொடுத்துவிட்டு “நல்லா இருக்கணும்” என்று அவளையும் ராகுலையும் மனதாற ஆசிர்வதித்தார். அதன் பின்னர் சிறியவர்களின் கேலிக்கிண்டலும், பெரியவர்களின் சிரிப்புமாய்ச் சேர்ந்து அந்த வீடே ஆனந்தத்தில் மிதந்தது.

கிருஷ்ணா ராகுலிடம் “எனக்கு மருமகன் பிறக்கப் போறாங்கிற சந்தோசத்துல தலை ஈரமா இருக்கிறது கூட உறைக்கலைடா ராகுல்… பொண்டாட்டினு ஒருத்தி இருக்கா… ஆனா அவ என்ன பண்ணிட்டிருக்கா பாரு” என்று சுகன்யா மற்றும் சஹானாவுடன் சேர்ந்து கதை பேசிக்கொண்டிருந்த துளசியைச் சுட்டிக் காட்டினான்.

“இப்பிடி புருசன் மேல அக்கறை இல்லாத ஒரு பொண்டாட்டியை எங்கேயாவது நீங்கள் கண்டதுண்டா மிஸ்டர் ராகுல்?” என்றவனின் கேள்விக்குப் பதில் சொல்வதற்குள் ராகுலுக்குச் சிரிப்பு தான் வந்தது.

“டேய் இது உனக்கே ஓவரா தெரியலை? இன்னும் குட்டிப்பாப்பானு நினைப்பு ஐயாக்கு… உன் பொண்ணுக்கே ஆறு வயசாகுதுடா நல்லவனே! ஒழுங்கா நீயே தலையைத் துவட்டிக்கோ… இல்லைனா ஜன்னி கண்டுடப் போகுது” என்று ராகுல் கேலி செய்யவே கிருஷ்ணா அவனிடம் பொய்யாய்க் கோபித்துவிட்டு துளசியை ஓரக்கண்ணால் பார்த்தபடி தனது அறையை நோக்கி நடந்தான்.

அறைக்குள் நுழைந்ததும் வேறு உடைக்கு மாறியவனின் வாய் “டேய் கிரிஷ்! பதிபக்தினா என்னன்னு உன் பொண்டாட்டி கிட்ட தான்டா கேக்கணும்… நீ வந்ததுக்கு அப்புறம் உன்னைப் பார்த்து ஒரு ஸ்மைல், ஒரு லுக் எதுவும் இல்லை! சரியான மடச்சாம்பிராணி” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

தலை துவட்ட டவலைத் தேடியவனின் மூளைக்குள் திடீரென்று ஒரு யோசனை ஓட அதைச் செயல்படுத்த எண்ணி “துளசிஈஈஈ” என்று கத்தியவனின் குரலில் நடு ஹாலில் அமர்ந்திருந்த அனைவரும் ஒரு நிமிடம் தூக்கிவாரிப்போட்டுக் கொண்டனர்.

சஹானா துளசியிடம் “கிரிஷ் ஏதோ எமர்ஜென்சினு கூப்பிடுறான்.. நீ முதல்ல என்னன்னு பாரு” என்று அவளைத் துரத்திவிட துளசி அவனுக்கு அப்படி என்ன எமர்ஜென்சி என்று யோசித்தபடி தங்களின் அறைக்குள் நுழைந்தாள்.

உள்ளே வந்தவளை டவலினால் வளைத்து தனது கரத்துக்குள் கொண்டு வந்தான் அவளது ஆருயிர்க்கணவன்.

துளசி திகைத்தபடி ”கிரிஷ் இது என்னடா சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு? அப்பிடி என்ன தலை போற காரியம்னு அந்தக் கத்து கத்துன நீ?” என்று கேட்க

கிருஷ்ணா டவலை வீசியவன் தன் கரங்களால் அவளை வளைத்தபடி “என்ன காரியமா? ஏன்டி நான் வந்து ஒன் ஹவருக்கு மேல ஆகுது… மித்ராவுக்கு மட்டும் தலை துவட்டி, டிரஸ் சேஞ்ச் பண்ணி விட்டியே! புருசன்னு ஒரு அப்பாவி ஜீவன் இருக்குதே! அதுவும் பம்ப்செட்டில குளிச்சிட்டுத் தானே வந்துச்சு… அதோட தலையைத் துவட்டலைனா ஜலதோசம் பிடிச்சுக்குமே… இந்தக் கவலையெல்லாம் உனக்குத் துளியாச்சும் இருக்கா?” என்று கேட்கவும் துளசிக்குச் சிரிப்பு தான் வந்தது.

“கிரிஷ் சஹானாவுக்குப் பிறக்கப் போற பேபியைப் பத்தி எல்லாரும் பேசிட்டிருந்தோமா அதான் உன்னைக் கவனிக்கலைடா! சாரி”

“உன் சாரி, பூரியை நீயே வச்சுக்கோ… இப்போவாச்சும் என் தலையைத் துவட்டி விடுற ஐடியா இருக்கா? இல்லையா?”

துளசி அவனைப் புருவம் உயர்த்திப் பார்த்தவாறு தலையைத் துவட்ட ஆரம்பித்தாள்.

கிருஷ்ணா அவளது இடையைக் கட்டிக்கொண்டபடி “துளசி நமக்கும் இன்னொரு பேபி இருந்தா நல்லா இருக்கும்ல” என்றவனின் கேள்வியில் துளசிக்கு ஒரு நிமிடம் இதயம் நின்று துடித்தது.

இவ்வளவு நேரம் அவன் தலையைத் துவட்டிக் கொண்டிருந்த துளசியின் கரங்கள் திடீரென்று வேலைநிறுத்தம் செய்யவும் கிருஷ்ணாவுக்குப் புரிந்துவிட்டது தான் கேட்டதும் அவள் மித்ராவைப் பற்றி யோசிப்பாள் என்று.

மெதுவாக எழுந்தவன் மனைவியின் கூந்தலை ஆதுரத்துடன் வருடிக்கொடுத்தபடி “மித்ரா தான் அப்பாங்கிற ஸ்தானத்தை முதல்ல எனக்கு குடுத்தவ… அவளோட இடத்தை என்னைக்குமே நான் வேற யாருக்கும் விட்டுக்குடுக்க மாட்டேன்… நீ என்னை நம்புறல்ல?” என்று கேட்க, துளசி கண்ணில் நீர் நிரம்ப ஆமென்று தலையசைத்தாள்.

பின்னர் “நான் உன்னை நம்பாம வேற யாரை நம்புவேன் கிரிஷ்? அந்த ஹாஸ்பிட்டல் பெட்ல குறும்பா என்னைப் பார்த்திட்டிருந்தியே அப்போவே நீ என் மனசுக்குள்ள வந்துட்ட கிரிஷ்… உன்னைக் கண்மூடித்தனமா காதலிச்சளவுக்கு கண்மூடித்தனமா வெறுக்கவும் செஞ்சிருக்கேன்…

நீ என்னோட வாழ்க்கையில மறுபடி வந்து எனக்கு இனொரு ஜென்மத்தைக் குடுத்திருக்க கிருஷ்… நீ என்ன சொன்னாலும் செய்ய நான் தயாரா இருக்கேன்… பிகாஸ் ஐ லவ் யூ அ லாட்” என்று சொல்லிவிட்டு

துளசி காதல் மொத்தத்தையும் கண்ணில் தேக்கியவள் தன் எதிரே நிற்பவனின் இதழில் காதல் எனும் ஓவியத்தை தன் இதழெனும் தூரிகையால் வரையத் துவங்கினாள். அதை ஆரம்பித்தது அவளாயினும் ஓவியத்தின் முடிவைத் தீர்மானித்தவன் கிருஷ்ணாவே.

இருவரும் மூச்சு விட நேரம் கொடுத்து மீண்டபோது கீழே குடும்பத்தினரின் சிரிப்புச்சத்தம் அவர்களின் செவியை நிறைத்தது. துளசி கிருஷ்ணாவின் முகத்தை நிமிர்ந்து பார்க்கத் தைரியமின்றி “நான் கீழே போறேன் கிரிஷ்” என்று உரைத்துவிட்டு ஓடினாள்.

அவளைத் தொடர்ந்து கீழே இறங்கியவனின் விழிகள் சாரதா கொடுத்த மல்லிகைச்சரத்தை அவள் சூடும் போதும், சுகன்யாவுடனும் சஹானாவுடனும் கதை பேசி சிரித்தபோதும், மித்ராவுக்குக் கதை சொல்லும் போதும், இரவுணவு உண்ண தன்னருகில் அமர்ந்த போதும் என சதாசர்வகாலமும் துளசியை மட்டுமே வலம் வந்தது.

துளசிக்குக் கணவனின் பார்வை தன்னைத் தொடர்வது உள்ளுக்குள் இனம்புரியாத உணர்வை ஏற்படுத்த, அந்த அவஸ்தையுடனே சாப்பிட்டு முடித்துவிட்டு அவனுக்கு முன்னரே அனைவரிடமும் குட் நைட் சொன்னவள் தங்களின் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

இரவு நேரமாகிவிட்டதால் வெளித்தாழ்வாரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டிருக்கவே தாழ்வாரத்திலுள்ள சாளரத்தின் வழியே வெண்ணிலவின் பால்வண்ண ஒளி கசிந்து கொண்டிருந்தது. அப்போது வீசிய மெல்லிய தென்றல் கூட அவள் மேனியை நடுங்க வைக்க அந்நேரத்தில் அவளைப் பின்னிருந்து அணைத்திருந்தன கிருஷ்ணாவின் கரங்கள்.

இவன் எப்போது வந்தான் என்று யோசிக்கும் போதே கன்னத்தில் அவன் தாடி ஏற்படுத்திய குறுகுறுப்பை உணர்ந்தவள் அடுத்து அவனது உதடுகளின் ஸ்பரிசம் கன்னத்தைத் தீண்டவும் உள்ளுக்குள் சிலிர்த்துப் போனாள். கணவனின் புறம் திரும்பியவள் அவன் கண்களிலுள்ள தேடலை உணர்ந்தாள்.

அந்தத் தேடலின் முடிவு தானே என்று அறிந்தவள் தனது கரத்தை மாலையாய்க் கோர்த்து கிருஷ்ணாவின் கழுத்தை வளைத்துக்கொள்ள அடுத்த நொடி கிருஷ்ணா அவளைத் தன் கரங்களில் ஏந்தியிருந்தான்.

ஆறு வருடக்காதலின் காத்திருப்பின் பலனாய் அவனது காதல் இராஜ்ஜியத்திற்குள் நுழைந்த அவனது ராஜகுமாரியை அணைத்தவன் செம்புலப்பெயல் நீரைப் போல அவளுடன் இரண்டறக் கலந்தான்.

தனது ராஜகுமாரனின் அணைப்பில் மெய்மறந்த துளசி “ஐ லவ் யூ கிரிஷ்… லவ் யூ அ லாட்” என்றபடி கிருஷ்ணாவின் அணைப்பில் தெரிந்த காதலில் மருகி உருகிப்போனாள்.  

இத்தனை நாட்கள் கிருஷ்ணாவும் துளசியுமாய் இருந்தவர்கள் அந்த இரவில் கிருஷ்ணதுளசியாய் மாறிப் போனார்கள். அந்த அழகியக் காதலர்களின் உண்மையானக் காதலில் நிறைந்து காதலும் காதல் சார்ந்த இடமுமாய் மாறிப் போனது அந்தப் பண்ணைவீடு.