💗அத்தியாயம் 41💗
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
பொள்ளாச்சிக்குச் செல்ல துளசியும் மித்ராவும் ஆர்வமாகத் தங்கள் உடைமைகளை எடுத்து வைத்தனர். சாரதா இருவரது லக்கேஜையும் ஆராய்ந்தவர் துளசியிடம் “நீ கொஞ்சம் ஷேரியையும் எடுத்து வச்சுக்கோ துளசி… அங்கே போனதும் நம்ம பங்காளி வீட்டுல இருந்து புது மருமகளைப் பார்க்கணும்னு சொல்லிட்டுச் சில பேரு வருவாங்க… எதுல குத்தம் கண்டுபிடிக்கலாம்னு அலையுறவங்க கிட்ட நாம தான் முன்னேச்சரிக்கையா இருக்கணும்” என்று மருமகளிடம் கறாராகச் சொல்லிவிட்டார்.
துளசிக்கு இப்போது தான் சாரதா உண்மையான மாமியாரைப் போல நடந்து கொள்கிறார் என்று தோன்றியது. அவரது பேச்சுக்கு மறுபேச்சின்றி சுகன்யாவுடன் கோயம்புத்தூருக்கு ஒரு முறை சென்று புடவைக் கடையையே வீட்டுக்கு வாங்கி வந்தாள்.
சுகன்யா கூட “ஏய் நீ அந்த வீட்டு மருமகள்டி… உனக்கு வாங்குறதுல நியாயம் இருக்கு… நான் ஏன்டி ஷேரி கட்டிக்கணும்?” என்று முகம் சுருக்க
துளசி “சின்னவயசுல நான் ஸ்கூல்ல மிஸ் கிட்ட மாட்டிக்கிட்டேனா உன்னையும் சேர்த்து மாட்டிவிட்டுட்டு பனிஷ்மெண்ட் வாங்க வைப்பேன்ல, அது மாதிரி தான் இதுவும்” என்று சொல்லி கண் சிமிட்டி விட்டுத் தோழியின் நிறத்துக்கேற்ற புடவைகளைத் தேர்ந்தெடுக்க ஆரம்பித்தாள்.
இருவரும் ஊட்டிக்கு வந்ததும் முதல் வேலையாக அனைத்துச் சேலைகளுக்கும் பிளவுஸ் தைப்பதில் பிஸியாயினர். துளசிக்கு எப்போதுமே சுகன்யா தைத்தால் தான் சரியாக இருக்கும்.
“சுகி! எனக்கு ஸ்லீவ் கொஞ்சம் நீளமா வைடி… ஷார்ட் ஸ்லீவ் எனக்கு நல்லா இருக்காது” என்று சுகன்யாவைப் பாடாய்ப்படுத்தி தைக்க வைத்தாள்.
இவள் செய்த அலம்பல்களைக் கண்ணுற்ற கிருஷ்ணா “ஏன் இவ்ளோ டெஸ்பரேட்டா இருக்க துளசி? ஜஸ்ட் ஒரு வாரம் கோயில் திருவிழாக்குத் தானே போறோம்?” என்று அலுத்துக் கொண்டான்.
“நீ இவ்ளோ ஈஸியா சொல்லிட்டே கிரிஷ்… பட் உங்க ரிலேட்டிவ்ஸ் முன்னாடி என்னால நம்ம ஃபேமிலியோட கௌரவம் பாதிச்சிடக் கூடாதுல்ல” என்றவளின் ‘நம்ம ஃபேமிலி’ என்ற வார்த்தையில் மகிழ்ந்த கிருஷ்ணா
“நம்மளை மத்தவங்களுக்காக மாத்திக்கிட்டா தான் அவங்களுக்கு நம்மளைப் பிடிக்கும்னு நாமளே நினைச்சுக்கக் கூடாது துளசி… உண்மையான அன்போட இருக்கிறவங்க நம்ம எப்பிடி இருக்கிறோமோ அப்பிடியே நம்மளை ஏத்துப்பாங்க” என்றான் அர்த்தத்துடன்.
துளசி அதற்கு மறுப்பாய் தலையசைத்தவள் “நம்மளைப் பிடிச்சவங்களுக்காக நம்ம கொஞ்சம் கஷ்டப்படலாம் கிரிஷ்… அது ஒன்னும் தப்பில்லை… நான் பெருசா என்ன பண்ணிட்டேன்? நார்மலா நான் போடுற டிரஸுக்குப் பதிலா ஷேரி கட்டிக்கப் போறேன்… இதுல என்ன கஷ்டம்?” என்று கேட்க
கிருஷ்ணா “ம்ம்… அதுல உனக்கு என்ன கஷ்டம்? கஷ்டமெல்லாம் எனக்குத் தானே” என்று முனகவும் துளசி புருவம் உயர்த்தி என்னவென்று வினவ ஒன்றுமில்லை என்று மறுத்தவன் மறுநாள் காலை பொள்ளாச்சி செல்வதற்குப் புடவையில் தயாராகி நின்ற மனைவியைக் கண்டதும் கண் இமைக்க மறந்தான்.
ராகவேந்திரனும் விஜயேந்திரனும் ஒரு காரில் சாரதாவுடன் ஏறிக்கொள்ள கிருஷ்ணாவும் துளசியும் மட்டும் இன்னொரு காரில் அமர்ந்திருந்தனர். துளசி மித்ராவைத் தங்களுடன் அழைத்ததற்கு அவள் பாட்டியுடன் தான் இருப்பேன் என்று பிடிவாதமாக உரைத்துவிட்டு சாரதாவுடன் சென்றுவிடவே துளசியும் கிருஷ்ணாவும் மட்டுமே அவனது காரில் தனித்துவிடப்பட்டனர்.
கிருஷ்ணாவின் கவனம் சாலையில் இருந்ததை விட தன் அருகில் பதுமை போல அமர்ந்திருந்த மனைவியின் மீது தான் இருந்தது. பாசிப்பயிறு பச்சையில் சிவப்புவண்ண பார்டர் வைத்த சில்க் காட்டன் புடவையும் முழங்கை அளவு வைத்து தைக்கப்பட்டிருந்த பிளவுஸும் அவளது அழகை இன்னும் அதிகரிக்க, முன்பு போல இடையைத் தொட்டக் கூந்தலை ப்ரெஞ்ச் ப்ரைடாகக் கட்டியிருந்தாள். அதிலிருந்து சில கூந்தல்கற்றைகள் அவள் கன்னத்தில் விளையாடுவதைப் பொறாமையுடன் பார்த்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.
அவள் கழுத்திலிருந்த தாலிச்செயினும், நெற்றிவகிட்டுக் குங்குமமும் மணமானப் பெண்ணுக்குரிய பிரத்தியேக அழகை அவளுக்கு அள்ளி வழங்கியிருப்பதை ஒருவித பெருமூச்சுடன் பார்த்தபடி காரைச் சாலையில் செலுத்தியவன் வாய்க்குள் “ஏன்டி இவ்ளோ அழகா பிறந்து தொலைச்ச?” என்று செல்லமாக அவளைத் திட்டியபடி மிகவும் சிரமத்துடன் கண்ணை அவளிடமிருந்து பிரித்தான்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
துளசி இவையனைத்தையும் அறிந்தவள் ஒரு நமட்டுச்சிரிப்புடன் வேடிக்கை பார்ப்பதைப் போல வெளியே கண் பதித்திருந்தாள். சிறிது நேரத்தில் சுகன்யா மீனாவுடன் இணைந்து கொள்ள, மூன்று கார்களும் பொள்ளாச்சியை நோக்கிச் சென்றன.
பொள்ளாச்சியைக் கார் நெருங்கவுமே சாலையோரக்காட்சிகள் மாறத் தொடங்கின. வயல்வெளிகளும் மரங்களுமாய் ரம்மியமான இயற்கைக் காட்சிகளில் மனதைத் தொலைத்த துளசி வேடிக்கை பார்த்தபடி இடையிடையே கிருஷ்ணாவிடம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வந்தாள்.
கிருஷ்ணா “நீ இதுக்கு முன்னாடி பொள்ளாச்சியைப் பார்த்திருக்கியா?” என்று கேட்க
“யெஸ் கிரிஷ்! பார்த்திருக்கேன்” என்று வேகமாகப் பதிலளித்தாள் துளசி.
கிருஷ்ணா “எப்போ நீ அங்கே போன? ஐ மீன் எத்தனை வயசு இருக்கும்? அங்கே உனக்கு ரிலேட்டிவ்ஸ் யாரும் இருக்காங்களா?” என்று கேள்விகளை அடுக்கவும்
“ஹலோ ஹலோ! கொஞ்சம் மூச்சு விடு கிரிஷ்! நான் பொள்ளாச்சியை நேத்து கூடப் பார்த்தேனே” என்று அமர்த்தலாகச் சொல்லவே கிருஷ்ணா இவள் மீண்டும் உண்மையைப் போல பொய் சொல்லும் பழக்கத்தை ஆரம்பித்துவிட்டாள் என்று எண்ணிக் கொண்டான்.
அவனது எண்ண ஓட்டத்தைக் கண்டுகொண்ட அவன் மனையாள் “கிரிஷ் நான் பொய் சொல்லலை… நிஜமாவே நான் பொள்ளாச்சியை நேத்து பார்த்தேன்… ஆனா டிவியில பார்த்தேன்… மிர்சி மூவி பார்த்தேனா அதுல பொள்ளாச்சியில வச்சு சில சீன்ஸ் சூட் பண்ணிருப்பாங்கனு சுகி சொன்னா… அப்போ மிர்சி பார்த்தா பொள்ளாச்சியை ஆல்ரெடி பார்த்த மாதிரி தானே” என்று சொல்ல
கிருஷ்ணா பொய்யாய்ச் சிரித்தவன் “ஏன் மிர்சியோட நிறுத்திட்ட? இன்னும் நிறைய தெலுங்கு மூவிஸ் அங்கே தான் சூட் பண்ணுனாங்க… அதையும் பார்த்துட்டு நான் பொள்ளாச்சியைச் சுத்தி பார்த்துட்டேனு ஒரு கதையை எடுத்து விடு” என்றான் கடுப்புடன்.
தான் ஆர்வமாக அவளுக்கு யாரேனும் அங்கே உறவினர்கள் இருப்பார்களா என்ற அளவுக்கு யோசித்தால் இவள் தெலுங்குப்படத்தை வைத்துத் தன்னை கிண்டல் செய்கிறாளே என்ற எரிச்சல் அவனுக்கு.
கிருஷ்ணாவின் முகம் கடுப்பதைக் கண்ட துளசி “ஓ! மை டியர் ஹப்பி… இதுக்கே கோச்சுக்கிட்டா எப்பிடி? இன்னும் நிறைய இருக்குடா” என்று செல்லம் கொஞ்சியபடி அவன் தாடையைக் கிள்ளி முத்தமிட்டுக் கொள்ள கிருஷ்ணாவின் இதழில் மீண்டும் குறுஞ்சிரிப்பு இடம்பெற்றது.
இவ்வாறான கலகலப்பான உரையாடல்களுடன் பொள்ளாச்சிக்குள் நுழைந்ததும் அவனது பாட்டி ரங்கநாயகிக்குப் போன் செய்த கிருஷ்ணா இன்னும் சில நிமிடங்களில் தாங்கள் பண்ணை வீட்டை அடைந்துவிடுவோம் என்ற தகவலைச் சொல்லிவிட்டுப் போனை வைத்தான்.
சில நிமிடங்களில் கார் சென்ற பாதையின் இருபுறமும் பசிய வயல்வெளிகளும், தென்னந்தோப்புகளும் அடர்ந்து காணப்பட இவ்வளவு அழகான இடமும் இருக்கிறதா என்று அதிசயித்தபடி துளசி வாயடைத்துப் போயிருந்தாள்.
அடர்ந்த மரக்கூட்டங்களுக்கு நடுவே கேரளாபாணி ஓடுகளுடன் கூடிய ஒரு பெரிய வீடு சிறிது சிறிதாகப் பார்வைக்குத் தட்டுப்பட, கிருஷ்ணா “துளசி அது தான் நம்ம பண்ணைவீடு” என்று காட்டவும் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த அந்த பண்ணையின் நடுநாயகமாகத் தனித்த கம்பீரத்துடன் தெரிந்த அந்த வீட்டைக் காரிலிருந்தபடியே எட்டிப் பார்த்தாள் துளசி.
சிறிது நேரத்தில் மூன்று கார்களும் அதை நெருங்கிவிட வாகனங்களை நிறுத்துவதற்காகத் தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கினான் கிருஷ்ணா. அவனைத் தொடர்ந்து இறங்கிய துளசி தன் கண் முன்னேயிருந்த அந்தப் பண்ணை வீட்டை அண்ணாந்து பார்த்தபடி நிற்க, பண்ணையில் வேலை செய்பவர்கள் காரின் சத்தம் கேட்டு ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்த்தனர்.
பண்ணையின் கணக்குவழக்குகள், மேலாண்மை இவற்றைக் கவனித்துக் கொள்ளும் திருவேங்கடமும் அங்கே வந்திருக்க ராகவேந்திரனும் விஜயேந்திரனும் அவரிடம் நலம் விசாரித்தனர். சுகன்யா அன்னையுடன் சேர்ந்து சாரதாவிடம் சென்று நின்றுகொண்டவள் துளசியையும் கிருஷ்ணாவையும் நோக்கிக் கண்சிமிட்ட, துளசி கண்ணாலேயே “யாராச்சும் பார்த்துடப் போறாங்கடி” என்று எச்சரித்ததைக் கிருஷ்ணா கண்டுகொண்டான்.
அவளது கண்கள் பேசும் பாஷையைக் கவனித்த கிருஷ்ணா துளசியின் கரத்தைக் கோர்த்தபடி நிற்கவும் பண்ணையாட்கள் அனைவரும் சின்ன எஜமானனின் மனைவியை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
அவர்களைப் பணிக்குத் திரும்பச் சொன்ன திருவேங்கடம் கிருஷ்ணாவிடம் வரவும், அவன் அவர் காலில் விழவே துளசியும் சிறிதும் தாமதிக்காமல் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள்.
சாரதா பேத்தியுடன் நின்றவர் கணவரிடம் “என்னங்க இன்னும் அம்மாவையும் அத்தையையும் காணும்?” என்று கேட்க அவர் கேட்கும் போதே திருவேங்கடத்தின் மனைவி லெட்சுமி கையில் ஆரத்தித் தட்டுடன் வந்தார். அவர் பின்னே சிரித்தமுகத்தினராய் வந்து கொண்டிருந்தனர் அந்த இரு மூதாட்டிகளும்.
லெட்சுமி “கிருஷ்ணா உன் பொண்டாட்டியோட இப்பிடி வந்து நில்லுப்பா… உன் மகளையும் வாங்கிக்கோ” என்று சொல்ல சாரதாவிடம் இருந்து மகளை வாங்கிக்கொண்ட கிருஷ்ணா துளசியுடன் நிற்கவே, லெட்சுமி மூவருக்குமாய் ஆரத்தி எடுக்க ஆரம்பித்தார்.
ஆரத்தி எடுத்துவிட்டு அனைவரையும் வீட்டுக்குள் செல்லச் சொன்னவர் வெளியேறவும், துளசி கணவனுடனும், மகளுடனும் அந்த வீட்டுக்குள் வலதுகாலை எடுத்து வைத்து நுழைந்தாள்.
ரங்கநாயகியும் சுபத்ராவும் பேரன் குடும்பத்துடன் வந்திருந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தவர்கள் பிரயாணம் எப்படி இருந்தது என்று மீனாவிடமும், சுகன்யாவிடமும் விசாரித்தபடி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றனர்.
ராகவேந்திரன் “அம்மா பேரனும் பேத்தியும் வந்ததும் உங்களுக்கு வேற யாருமே கண்ணுக்குத் தெரியலை போல” என்று கேலி செய்ய
விஜயேந்திரன் “அம்மாவையும் அத்தையையும் இனிமே கையில பிடிக்க முடியாதுண்ணா… இன்னும் ஒரு வாரத்துக்கு அவங்க கவனம் முழுக்க பேரன், பேத்தி, கொள்ளுப்பேத்தி மேல மட்டும் தான் இருக்கும்… ஏதோ நெல்லுக்கு இறைச்ச தண்ணி புல்லுக்கும் பாயுற மாதிரி அந்தக் கவனிப்புல நமக்கும் எதாவது மிஞ்சுனா தான் உண்டுண்ணா” என்று சிறுபிள்ளை போல குறைபட
சாரதா “க்கும்… இதுக்கு முன்னாடி பசங்க குழந்தையா இருந்தப்போ இங்க வர்ற ஒவ்வொரு தடவையும் உங்களுக்கும், மாமாக்கும் பூரணகும்ப மரியாதை குடுத்து கவனிச்சாங்கல்ல… இனிமே கிரிஷ்கு தான் எல்லாம் கவனிப்பும்… இப்போ அவன் தானே இந்த வீட்டோட ராஜகுமாரன்” என்று பெருமிதமாகக் கூறினார்
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அவர்கள் பேச்சில் ஒரு காதைப் பதித்தபடி சுகன்யாவுடன் வளவளத்துக் கொண்டிருந்த துளசி, பாட்டிகளின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சியபடி அவர்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் தன் கணவனை திரும்பிப் பார்த்தாள்.
கருநீலநிற முழுநீளக்கை சட்டையை முழங்கை வரைக்கும் மடித்துவிட்டபடி, சந்தன வண்ண பேண்ட்டும் ஆளை மயக்கும் புன்னகையுமாய் நின்றவனைக் கண்டவளின் உள்ளம் அவளை அறியாமல் “பிரின்ஸ்” என்ற வார்த்தையை உச்சரித்து அடங்கியது.
துளசியின் பார்வை போன திக்கைக் கவனித்த சுகன்யா அவளது முழங்கையில் இடித்து “அடியே! போதும்டி… இது வரைக்கும் உன் புருஷனை நீ பார்த்ததே இல்லையா? விட்டா கண்ணாலேயே முழுங்கிடுவ போலயே… பாவம் கிருஷ்ணா மாமா” என்று கேலி செய்யவே, துளசி வெட்கத்தில் தலை குனிந்தாள்.
கிருஷ்ணா பாட்டிகளுடன் பேசிக்கொண்டிருந்தவன் மனைவியிடம் சுகன்யா ஏதோ சொல்லவும் அவள் வெட்கத்துடன் தலை குனிந்த அழகைக் கண்டதும் ஒரு கணம் மயங்கித் தான் போனான்.
அவளிடம் அதற்கான காரணத்தைக் கேட்க எண்ணியவன் “துளசி நம்ம லக்கேஜை ரூம்ல வச்சுட்டு வா” என்று கட்டளையிட, துளசி இவ்வளவு நேரம் வெட்கத்தில் தலை குனிந்திருந்தவள் வெடுக்கென்று நிமிர்ந்து கிருஷ்ணாவைப் பார்க்க அவன் கண்ணில் வழிந்த குறும்பில் அவள் மீண்டும் முகம் சிவந்து போனாள்.
“எந்த ரூம்னு எனக்குத் தெரியாதே கிரிஷ்?” என்று புதிய இடத்தில் தடுமாறியவளிடம்
“சரி வா! நானே ரூமைக் காட்டுறேன்… ஏய் ஜிஞ்சர் பிரெட் நீ சித்தி கூடப் போ… உனக்கும் ஆன்ட்டிக்கும் அவங்க ரூமைக் காட்டுவாங்க… மித்தி அப்பா கூட வர்றியா? என்று மனைவிடம் ஆரம்பித்து மகளிடம் முடித்தான் கிருஷ்ணா.
சுகன்யாவும் மீனாவும் தங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு சாரதாவுடன் செல்ல, மித்ராவும் தான் பாட்டியுடன் தான் இருக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு சுகன்யாவின் கரத்தைப் பற்றியபடி அவர்களுடன் சென்றுவிட்டாள்.
கிருஷ்ணா துளசியை ஏறிட்டவன் “என்னை முழுங்கிற மாதிரி பார்த்தது போதும் பிரின்சஸ்… நம்ம ரூமுக்குப் போவோமா?” என்று புன்னகை முகமாய் கேட்க துளசி அவன் கரத்தைப் பற்றித் தோளில் சாய்ந்து கொண்டவள்
“போலாமே பிரின்ஸ்” என்று கண்ணில் காதலுடன் உரைக்க நீண்டநாள் கழித்து அவர்களிடையே ‘பிரின்ஸ்’ ‘பிரின்சஸ்’ என்ற வார்த்தைகள் மீண்டும் புழக்கத்துக்கு வந்தன.
கிருஷ்ணா துளசியை தங்களின் அறைக்கு அழைத்துச் சென்றவன் அவளது உடைமைகளை அடுக்கி வைக்குமாறு மரபீரோவைக் காட்ட, துளசி மறுபேச்சின்றி தனது சேலைகளை ஹேங்கருக்கு மாற்றியவள் மரபீரோவில் உள்ள கொக்கிகளில் மாட்டிவிட்டாள்.
பிரயாணத்தில் களைத்துப் போன முகத்தைக் குளியலறைக்குச் சென்று கழுவிவிட்டு வந்தவள் அந்த அறையின் நீண்ட சாளரத்தின் வழியே வீட்டைச் சுற்றியிருக்கும் தாழ்வாரத்தையும் அதைத் தாண்டி தெரியும் செடிகொடிகளையும் பார்த்தபடியே
“கிரிஷ்! நமக்கு வயசாயிடுச்சுனா நம்ம கடைசிகாலத்தை இங்கே தான் கழிக்கணும்டா” என்று ஆசையுடன் கூற கிருஷ்ணா அவளை நெருங்கியவன் அவளைத் தன்புறம் திருப்பி அவள் கண்களைக் கூர்ந்து நோக்கியபோது அதில் தெரிந்த காதலிலும், வயோதிகத்தில் நான் உன் கரத்தைப் பற்றியபடி உன்னுடன் தான் இருப்பேன் என்ற உறுதியிலும் வியந்து போனான்.
இப்போது அவன் கண் முன்னே நிற்பது பதினெட்டு வயதில் வேறு எதைப் பற்றியும் யோசிக்காது, தான் அவளைக் காதலிப்பதாகச் சொன்ன ஒரே வார்த்தைக்காக அவனுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்த, அவனைக் கண்ணை மூடிக்கொண்டு நம்பிய அதே பழைய துளசி தான் என்பதை புரிந்து கொண்டான் கிருஷ்ணா.
எந்த நாள் தன் வாழ்வில் வராது என்று எண்ணினானோ, எந்தத் துளசி தன்னை நம்பவே மாட்டாள் என்ற முடிவுக்கு வந்திருந்தானோ அவை எல்லாம் முற்றிலும் மாறிப்போய் இதோ அந்த நாளும் வந்துவிட்டது… துளசியும் முன்பை விட அதிக நம்பிக்கையுடன் அவனைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டாள்…
இதை விட அவனுக்கு வேறு என்ன வேண்டும்… இதை எல்லாம் எண்ணும் போது அவனுக்குச் சந்தோசத்தில் கைகள் நடுங்க, அதை ஆதரவாகப் பற்றிக் கொண்டாள் துளசி.
தன் கரத்தைப் பற்றியிருக்கும் அவளது கரத்தில் முத்தமிட்டவன் “ஐ லவ் யூ துளசி” என்று ஆழ்ந்தகுரலில் சொல்லிவிட்டு அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
துளசி அவன் அணைப்பிலிருந்தபடியே “டயலாக்லாம் நல்லா தான் பேசுறடா… ஆனா உன் பொண்ணைப் பார்த்துட்டா நீ என்னை மறந்துடுவல்ல” என்று குழந்தையாய் குறைபட்டாள்.
கிருஷ்ணா அவள் சொன்னதைக் கேட்டு நகைத்தவன் “அதுக்கு நான் என்ன பண்ணுறது துளசி? மித்ரா முன்னாடி வேற யாரும் என் கண்ணுக்குத் தெரியுறது இல்லை… இது மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கே உண்டான ஒரு குணம்னு வச்சுக்கோயேன்… அவ அப்பானு சொல்லுற வார்த்தைக்கு முன்னாடி உன்னோட ‘கிரிஷ்’ ‘பிரின்ஸ்’ இதுல்லாம் கொஞ்சம் கம்மியா தான் தெரியுது” என்று மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லிவிட்டான்.
துளசிக்கு இதைக் கேட்டு உள்ளுக்குள் பெருமிதமாய் இருந்தது. தனக்காவது மித்ராவை ஆறு வருடம் வளர்த்தப் பாசம் எனலாம். ஆனால் இவனுக்கு மித்ராவின் மீது எங்கிருந்து வந்தது இவ்வளவு பாசம் என்று வியந்தவள் கணவனின் வெள்ளையுள்ளத்தை எண்ணிக் கர்வம் கொண்டாள்.
தன் கணவன், தன் ராஜகுமாரன், தன் காதலன் என்றுமே பொய்த்துப் போகவில்லை! தனக்காக காத்திருந்ததிலிருந்து, தன் மகளை மனதாற ஏற்றுக்கொண்டதிலிருந்து, தனக்கு ஊரறிய அவனது மனைவி என்ற அங்கீகாரத்தை வழங்கி அனைத்து தவறுகளையும் தன் மீது போட்டுக்கொண்டதிலிருந்து எதில் தான் அவன் சிறந்தவன் இல்லை! இவ்வாறு எண்ணும் போதே கிருஷ்ணாவின் மீதுள்ள காதல் ஆயிரம் மடங்கு பெருகுவதை உணர்ந்த துளசி கணவனின் அணைப்பில் மீண்டும் சிறைபுகுந்து கொண்டாள்.