💗அத்தியாயம் 40💗

கிருஷ்ணாவின் மனதில் மீண்டும் இடம்பெற துளசி பகீரதப்பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள். எப்பாடுப் பட்டேனும் தனது மனதிலுள்ள காதலை அவனிடம் நிரூபிக்க அவன் என்ன சொன்னாலும் செய்யத் தயாராக இருந்தாள் அவள்.

அதில் அவள் செய்த முதல் காரியம் முடிந்தளவு கணவனுடன் அதிக நேரம் செலவளிக்க முயன்றாள். மகளுடன் சேர்ந்து கிருஷ்ணா விளையாடும் நேரங்களில் அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து கொள்வாள். அவளுக்கு அந்த விளையாட்டு புரியாவிட்டாலும் அதைக் கவனித்துக் கொண்டிருப்பாள்.

ஆறு வயது சிறுமிக்கு ஈடாய் அவனும் ஒரு குழந்தை போல மாறும் அத்தருணங்களில் அவள் மனம் தனக்கு ஒரு மகன் பிறந்தால் அவனும் இவ்வாறு தானே குறும்புக்காரனாய் இருப்பான் என்று கற்பனை செய்து மகிழும்.

கிருஷ்ணா அலுவலகம் செல்லும் நேரங்களில் அவனுடன் சேர்ந்து பொட்டிக் செல்ல ஆரம்பித்திருந்தாள் துளசி.

சுகன்யாவிடம் தனது காரைக் கொடுத்துவிட்டு அதற்கு “சுகன்யா பாவம் கிரிஷ்… டெய்லி எனக்காக வெயிட் பண்ணி வெயிட் பண்ணி டயர்ட் ஆகிடுறா.. அந்தக் கார் அவ கிட்டவே இருக்கட்டும்… நீ எனக்கு கிப்டா குடுத்துட்டல்ல , இனிமே அதைப் பத்தி கவலைப்படாதே” என்று ஒரு காரணத்தை வேறு கறாராகச் சொல்லிவிட்டாள்.

அதற்கு மேல் அவளிடம் வாதிட விரும்பாதக் கிருஷ்ணா அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்ல ஆரம்பித்தான். அதே போல இரவு அவன் வீடு திரும்பும் நேரம் வரைத் தானும் பொட்டிக்கில் காத்திருந்து அவனுடன் வருவதாகச் சொல்லிவிட்டாள் துளசி. ஒரு வாரம் கிருஷ்ணாவும் தான் வீடு திரும்பும் போது அவனுடன் சேர்த்து அவளையும் வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தான்.

ஆனால் அவனது எரிச்சலை அதிகரிக்கும் விதமாக ஒரு செயல் நடைபெற்றது.

துளசியின் வாடிக்கையாளரான ஒரு பெண்மணியின் கணவன் தான் கிருஷ்ணாவின் எரிச்சலை ஏற்றி விட்ட அந்த ஜீவராசி. ஆம்! அடுத்தவன் மனைவியை கேடு கெட்ட எண்ணத்தோடு பார்க்கும் எந்த ஒரு ஆணும் மனித இனத்தில் சேர்த்தி இல்லையே! எனவே அவனை ஜீவராசி என்று அழைப்பதில் தவறேதும் இல்லை.

அன்றொரு நாள் வழக்கம் போல கிருஷ்ணா வரும் வரை காத்திருந்தவளிடம் யாரோ ஒரு நபர் பேசிக் கொண்டிருக்கும் போது கிருஷ்ணா வந்தான். துளசி அந்த நபரிடம் அவரது மனைவிக்கு அவர் பரிசாக அளிக்க விரும்பும் ஆடையை எப்படியெல்லாம் வடிவமைக்கப் போகிறாள் என்பதை விளக்கிக் கொண்டிருந்தாள்.

கிருஷ்ணா அவளது தொழில் ஆர்வத்தைக் கண்டு சிலிர்த்தவன் அடுத்தக் கணமே கொதித்தும் போனான். அதற்கு காரணம் அந்த வீணாய்ப் போன ஆடவனின் கவனம் எதுவுமே துளசி காட்டிய டிசைனில் இல்லை. அவனது கவனம் முழுவதும் துளசியின் மீதே இருந்தது.

கிருஷ்ணாவுக்கு இதைக் கண்டதும் உள்ளுக்குள் காந்தல் எடுக்க “துளசி கிளம்பலாமா?” என்றபடி அவள் அருகில் சென்றவன் அவளைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு,

“டு டே ஐ மிஸ் யூ சோ மச் பேபி” என்று கொஞ்ச ஆரம்பிக்கவுமே அந்த ஆடவனின் முகம் பதற்றமானது.

துளசி கிருஷ்ணாவின் வித்தியாசமான செய்கையில் குழம்பியவள் கணவனின் அருகாமை கொடுத்தப் பாதுகாப்பில் மனம் நெகிழ்ந்தவளாய்

“கிளம்பலாம் கிரிஷ்… மிஸ்டர் ஹரி அவரோட ஒய்புக்கு வெட்டிங்டேன் சர்ப்ரைஸா ஒரு லாங் ஸ்கர்ட் பிரசண்ட் பண்ண ஆசைப்படுறாரு… அதோட டிசைனைத் தான் அவருக்கு எக்ஸ்ப்ளெயின் பண்ணிட்டிருந்தேன்” என்று கள்ளமற்று உரைக்கவும் கிருஷ்ணாவின் பார்வை அந்த ஹரியைச் சுட அவன் தலை குனிந்தான்.

கிருஷ்ணா துளசியின் முகம் பார்த்துச் சிரித்தவன் ஹரியிடம் திரும்பி “இது தான் துளசியோட ஸ்பஷாலிட்டி… வேலைனு வந்துட்டா சுத்தி எந்த நாய், நரி போனாலும் கண்டுக்க மாட்டா மிஸ்டர் ஹரி…ஒர்க்ல அவ்ளோ டெடிகேசன் அவளுக்கு…

இனிமே நீங்களும் இப்பிடி லேட்டா வராதிங்க… பிகாஸ் என் துளசி கூட நான் இருக்கப் போய் கண்டவங்களும் கண்ட நேரத்துக்கு வந்தா அவங்களுக்குப் புரியுற மாதிரி பேசி அனுப்பிடுவேன்… ஆனா நீங்க இங்கே இருக்கிற நேரத்துல உங்க மிசஸ் கிட்ட எவனும் வாலாட்டுனா உங்களால என்ன பண்ண முடியும்? ஊட்டி ரொம்ப கெட்டுப் போயிடுச்சு ஹரி சார்” என்று அழுத்தமானக் குரலில் சொல்லி முடிக்க

அந்த ஹரி என்பவன் சட்டென்று எழுந்துவிட்டான். இனி இங்கே இருந்தால் தன் எதிரே நிற்பவன் தன்னைக் கொல்லாமல் விடமாட்டான் என்று புரிந்து போனது அவனுக்கும்.

“அப்போ நான் கிளம்புறேன் துளசி மேடம்… நான் நாளைக்கு டே டைம்ல வர்றேன்” என்று கிளம்ப எத்தனித்தவனைச் சொடக்கிட்டு அழைத்து நிறுத்திய கிருஷ்ணா

“அவசியமில்லை… இது தான் நீங்க இங்கே வர்ற கடைசி டைமா இருக்கணும்.. இனி உங்களை இந்த சரவுண்டிங்ல எங்கேயாச்சும் பார்த்தா விளைவுகளுக்கு நான் பொறுப்பு இல்லை” என்று எச்சரித்தவன் துளசியின் கையிலிருந்த டிசைன் பேப்பரைக் கிழித்துவிட்டு

“கிளம்புடா” என்று கர்ஜிக்க அதற்கு மேல் நிற்க பயந்த அந்த ஹரி தப்பித்தால் போதுமென்று ஓடிவிட்டான்.

அவன் சென்றதும் துளசியிடம் திரும்பிய கிருஷ்ணா “இனிமே லூசுத்தனமா எனக்காகக் காத்திருக்கேனு சொல்லி கண்டவனை எல்லாம் பொட்டிக் உள்ளே அலோ பண்ணாதடி… அதோட இன்னைக்குத் தான் லாஸ்ட், இனிமே டெய்லி ஈவினிங் நீ சுகன்யா கூட கார்ல போயிடு” என்று மறுக்க இயலாதக் குரலில் கட்டளையிட்டுவிட்டுப் பொட்டிக்கை அடைக்கச் சொல்லிவிட்டு வெளியேறினான்.

காரில் செல்லும் போதும் அவன் முகம் உர்ரென்று இருக்க துளசி அன்று அவனைச் சமாதானம் செய்ய அரும்பாடுப்பட்டுப் போனாள். அதன் பின்னர் அவன் சொன்னபடி மாலை நேரம் சுகன்யா துளசியை வீட்டில் விட்டுவிட்டுக் கிளம்பினாள்.

துளசியின் முயற்சிகள் அனைத்தும் கிருஷ்ணாவின் மனதைத் தொடாமல் இல்லை. ஒவ்வொரு முறை அவள் தனக்காக மெனக்கிடும் போது அவனது உள்ளத்தில் உற்சாகம் பொங்கும். அதே போல துளசி மீதுள்ள மனவருத்தமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. அவனுக்குமே மனைவி, மகளுடன் கழிக்கும் நேரங்கள் பொக்கிஷமாகவே தோன்றின.

இவ்வாறு இருக்கையில் துளசி இன்னொரு காரியத்தையும் செய்தாள். அதில் கிருஷ்ணா உண்மையாகவே மகிழ்ந்து போனான். எப்போதும் தலைமுடியைத் தோளோடு கத்தரித்து விடுபவள் கடந்த மூன்று மாதங்களாக வெட்டி விடாமல் பழையபடி நீளமாக வளர்க்கத் தொடங்கினாள்.

அதைப் பார்த்து கேலி செய்த சுகன்யாவையும் பொட்டிக்கிலுள்ள குறும்புக்காரிகளையும் “என் பொண்ணுக்கே என்னை விட முடி நீளமா இருக்கு… எல்லாரும் என்னை அதைச் சொல்லியே கிண்டல் பண்ணுறாங்க… சோ நான் முடியை நீளமா வளர்க்கப் போறேன்” என்று சொல்லிச் சமாளித்துவைத்தாள்.

யாருமே அவள் சொன்னதை நம்பவில்லை என்பது வேறுவிஷயம். சுகன்யா கூட நம்பாமல் “எல்லாம் கிருஷ்ணா மாமா செய்த மாயம் தான்” என்று கலாய்த்து தோழியை அடிக்கடி வெட்கப்பட வைத்தாள்.

கிருஷ்ணாவுக்குத் துளசியின் கூந்தல் அழகில் எப்போதுமே மயக்கம் உண்டு.  அப்படிப்பட்டவனிடம் முன்பு ஒரு முறை அவன் சொன்ன மாதிரி ‘லேயர் கட்’ செய்துவிட்டு வந்து “நல்லா இருக்கா கிரிஷ்?” என்று கேட்டு அவனிடமும் கேலிப்பேச்சை வாங்கிக் கட்டிக் கொண்டாள்.

“ஆறு வயசு பொண்ணுக்கு அம்மா ஆயாச்சு.. இந்த வயசுல உனக்கு ஏன் இந்த ஸ்டைல்?” என்று கேலி செய்தவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் துளசி.

“வாட்? எனக்கு வயசு ஆயிடுச்சா? உன்னை விட எனக்கு ஆறு வயசு கம்மி கிரிஷ்… மனசாட்சி இல்லாம வயசாயிடுச்சுனு சொல்லாதேடா” என்று சொன்னவள் விட்டால் அழுதுவிடுவாள் போல.

கிருஷ்ணா “அஹான்! அதெல்லாம் எனக்குத் தெரியாது…உனக்கு எப்போ கல்யாணம் ஆச்சோ அப்போவே ஓல்ட் லேடி ஆயாச்சு… இன்னும் யூத்னு சொல்லி உன்னை நீயே ஏமாத்திக்காதே துளசி” என்று சொல்லிவிட்டுச் சென்றவன் அறைவாயிலில் சென்று நின்று,

“பை த வே இந்த ஹேர்ஸ்டைல் வயசானவங்களுக்கும் நல்லா தான் இருக்கு” என்று சொல்லி அவளது கோபத்தைத் தூண்டிவிட்டுச் சென்றான் கிருஷ்ணா.

துளசி முகத்தைச் சுருக்கிக் கொண்டு கண்ணாடி முன்னே சென்று நின்றவள் தன் முகத்தை நீண்டநேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தவள் “எனக்கு நிஜமாவே வயசாயிடுச்சா?” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள்.

“கண்ணாடி பொய் சொல்லாது துளசி” என்ற கிருஷ்ணாவின் குரல் காதில் விழ, இன்னும் இவன் கிளம்பவில்லையா என்று எண்ணித் தலையைச் சிலுப்பிக்கொண்டாள் துளசி.

“நீ ஸ்னோ ஒயிட் கதை கேட்டிருக்கியா? அதுல கண்ணாடி பொய் சொல்லாது… உண்மையை மட்டும் தான் சொல்லும்” என்றபடி துளசியின் பின்னே நின்று கண்ணாடியைக் காட்டியவன்

“இப்போ இந்தக் கண்ணாடியும் உண்மையைத் தான் சொல்லுது… அது சொல்லுற உண்மை உன் காதுல விழுதா?” என்று கேட்கவும் துளசி விட்டால் இவன் தன்னைக் கலாய்த்தே காலி செய்துவிடுவான் என்று எண்ணி வேகமாக அங்கிருந்து நகரப் போனாள்.

கிருஷ்ணா அவளை நகரவிடாமல் அணைத்து நிறுத்தியவன் அவள் காதருகே குனிந்து “கண்ணாடி என்ன சொல்லுதுனு உனக்குத் தெரிஞ்சிக்க ஆசை இல்லையா துளசி?” என்று கேட்க, துளசி காதுமடலில் மோதும் அவன் மூச்சுக்காற்றின் இம்சையைப் பொறுத்துக் கொண்டவளாய் கேள்வியாய் அவனை நோக்கவே

கிருஷ்ணா ஆழ்ந்த குரலில் “இந்த உலகத்துலயே அழகான ஒருத்தி இருக்கான்னா அது என் கண் முன்னாடி நிக்கிற துளசி மட்டும் தான்னு கண்ணாடி சொல்லுது… இப்போ சொல்லு, கண்ணாடி உண்மையைத் தானே சொல்லுது” என்று குறும்பாய் வினவினான்.

துளசி வெட்கப்புன்னகையுடன் அங்கிருந்து நகர முயல அவளை இறுக்கமாய் பற்றி நிறுத்தியவன் “பதில் சொல்லிட்டுப் போடி” என்று குறும்புக்கண்ணனாய் கண் சிமிட்ட

துளசி “கண்ணாடி கூட பொய் சொல்லலாம்… ஆனா காதலிக்கிற ஒரு ஆணோட கண் பொய் சொல்லாது… உன்னோட கண் இப்போ என்ன சொல்லுது தெரியுமா?” என்று கேட்டுவிட்டுப் புருவம் உயர்த்த, கிருஷ்ணா அவளின் முகாபவத்தைக் கண்ணாடியில் ரசித்துக் கொண்டிருந்தவன் கேள்வியாய் மனைவியை நோக்கினான்.

“என் முன்னாடி நிக்கிற என்னோட மனைவியை நான் உயிருக்கு உயிரா காதலிக்கிறேன்… ஆனா அவ மேலே இன்னும் கொஞ்சமே கொஞ்சம் கோவம் இருக்குனு சொல்லுது” என்று அமர்த்தலாக உரைக்க கிருஷ்ணா அதற்கு ஆமென்றும் கூறாமல் இல்லையென்றும் மறுக்காமல் மனைவியைக் கட்டிக் கொண்டான்.

அந்நேரத்தில் சாரதா “கிரிஷ் கொஞ்சம் வாடா… பாட்டி கிட்ட இருந்து ஒரு குட் நியூஸ் வந்திருக்கு” என்று உரத்தக்குரலில் அழைக்கவும் கணவனும் மனைவியும் அது என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்துடன் கீழே சென்றனர்.

அன்று ஞாயிறு என்பதால் மித்ராவுக்கும் விடுமுறை. பாட்டியின் முந்தானையைப் பிடித்தபடி நின்றவள் அவளது அம்மா அப்பாவிடம் “நம்ம எல்லாருமே பொள்ளாச்சிக்குப் போகப் போறோம்ப்பா… ரங்கா பாட்டி ஊருல டெம்பிள் ஃபெஸ்டிவல்” என்று அவளுக்குத் தெரிந்த வார்த்தைகளில் விஷயத்தை விளக்கினாள்.

சாரதா “அது கோயில் திருவிழா மித்திக்குட்டி” என்று பேத்தியின் வார்த்தையைத் திருத்தியவர் அவரது மகன் மருமகளிடம்

“எப்போவும் இந்த மாசத்துல நம்ம குலதெய்வம் கோயில்ல திருவிழா வரும்ல கிரிஷ், அதுக்குத் தான் அத்தையும் அம்மாவும் நம்ம எல்லாரையும் அழைச்சிருக்காங்க… வருசாவருசம் போற மாதிரி இந்த வருசமும் நம்ம மூனு குடும்பமும் சேர்ந்து போகணும்னு மாமா சொல்லிட்டாரு… நான் உமா அண்ணி, ஈஸ்வரி அண்ணி கிட்ட விஷயத்தைச் சொல்லிட்டேன்… துளசி! இந்தத் தடவை மீனா அண்ணியையும் சுகன்யாவையும் அழைச்சிட்டுப் போலாம்னு நான் நினைக்கிறேன்… அவங்களுக்கு அங்கே வர்றதுல எந்தப் பிரச்சனையும் இருக்காதே?” என்று கேட்க

துளசி “மீனாம்மா இதைக் கேட்டா ரொம்ப சந்தோசப்படுவாங்க அத்தை… இன் பேக்ட் அவங்க சரியான பக்திபழம்… சோ கண்டிப்பா அவங்க நம்ம கூட வரச் சம்மதிச்சுடுவாங்க… சுகியை நான் சமாளிச்சிக்கிறேன்” என்று மாமியாரிடம் இன்முகத்துடன் கூறினாள்.

சஹானா வருவாளா என்று கேட்டு உறுதிபடுத்திக் கொண்டவள் அதன் பின் சுகன்யாவிடம் விஷயத்தைத் தெரிவிக்க, அவள் மறுக்கவும் “உன் கிட்ட இது வரைக்கும் நான் எதாவது கேட்டிருக்கேனா சுகி?” என்ற சோகப்பாட்டைப் பாட ஆரம்பிக்கவே, அதைக் கேட்கப் பொறுக்காத சுகன்யா,

“அம்மா தாயே! நான் வர்றேன்டி… தயவுபண்ணி இந்தப் பாட்டைப் பாடாதே… இப்பிடி பேசியே உன் காரியத்தை எல்லாம் சாதிச்சுக்கோ” என்று அன்பாகக் கடிந்து கொண்டபடி பொள்ளாச்சிக்கு வரச் சம்மதித்துவிட்டாள்.

துளசி இம்மாதிரியான திருவிழாக்களில் இதுவரைக்கும் கலந்து கொண்டதே இல்லை. மித்ராவைப் போல அவளுக்குமே இது தான் அவள் வாழ்நாளில் பார்க்கப் போகிற முதல் திருவிழா. அதனால் அம்மாவும் மகளும் உற்சாகமாய் பொள்ளாச்சி செல்லுவதற்காகப் பெட்டியை அடுக்கத் தொடங்கினர். கிருஷ்ணா வழக்கமாக ஆண்டுதோறும் அதில் கலந்து கொண்டிருப்பதால் இவர்கள் அடிக்கும் லூட்டியை ஒரு புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருந்தான். துளசி மற்றும் மித்ராவின் வாழ்வில் அடங்கியிருக்கும் இன்னும் ஒரே ஒரு இரகசியம் அங்கே தான் வெளிவரப்போகிறது என்ற உண்மையை துளசியும் கிருஷ்ணாவும் அப்போது அறிந்திருக்கவில்லை.