💗அத்தியாயம் 38💗

மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவிலிருந்த காவலாளி அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டார் என்று மருத்துவர் கூறிவிடவும் ராகுலை வீட்டுக்குக் கிளம்பச் சொன்ன கிருஷ்ணா, காவலாளியின் மனைவியிடம் நடந்ததை நினைத்து வருந்த வேண்டாமென்று என்று ஆறுதல் கூறினான்.

அப்பெண்மணியோ நடுஇரவு வரைக்கும் தன் கணவனுக்காக மருத்துவமனையில் காத்திருந்தவனின் பெருந்தன்மையில் திகைத்துப் போயிருந்தவர் அவனிடம் கரம் கூப்பி நன்றி சொல்லவும் கிருஷ்ணா அவரைத் தடுத்தான்.

“உங்க ஹஸ்பெண்ட் அவர் உயிரைப் பொருட்படுத்தாம எங்க மில்லை பெரிய விபத்துல இருந்து காப்பாத்திருக்காரு… நியாயப்படி நான் தான் அவருக்கு தேங்க்ஸ் சொல்லணும்… அவரைப் பத்திரமா பார்த்துக்கோங்க… கை முழுசா சரியாகிற வரைக்கும் அவர் வீட்டுலேயே ரெஸ்ட் எடுக்கட்டும்… அவரோட சேலரி மாசா மாசம் கரெக்டா வந்துடும்… நீங்க எந்தக் கவலையும் இல்லாம இருங்கம்மா” என்று சொன்னவன் அப்பெண்மணிக்குக் கடவுளாகவே தெரிந்தான்.

அதன் பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பியவன் மீண்டும் ஊட்டியை அடையும் போது கிட்டத்தட்ட அதிகாலை மூன்று மணி ஆகியிருந்தது. காரைப் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்தவனின் உடலோடு சேர்ந்து மனமும் கனத்துப் போயிருந்தது.

தங்களின் அறைக்குள் நுழைந்தவன் துளசி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை உறுதிசெய்து கொண்டபடி பூனை போல உடை மாற்றிவிட்டுப் படுத்தவன் களைப்பின் காரணமாகச் சீக்கிரத்தில் உறங்கிவிட்டான்.

மறுநாள் காலையில் எழுந்த துளசி எப்போதும் தனக்கு முன்னரே எழுந்து உடற்பயிற்சிக்கூடத்துக்குச் செல்பவன் இன்னும் உறக்கம் கலையாமல் இருப்பதைப் பார்த்துவிட்டு யோசனையுடனே குளியலறைக்குள் புகுந்தாள். அவள் குளித்து உடை மாற்றிவிட்டு வந்த பிறகும் கிருஷ்ணாவிடம் அசைவில்லை.

என்ன இவன் அடித்துப் போட்டது போன்று இப்படி உறங்குகிறான் என்று எண்ணியவள் மெதுவாக அவனை எழுப்பத் தொடங்கினாள்.

“கிரிஷ் டைம் ஆச்சு! இன்னும் தூங்கிட்டிருக்க… எழுந்திரிடா” என்றவளின் உலுக்கலில் சற்று உறக்கம் கலைந்தவன்

“தூக்கம் வருது துளசி” என்று சொல்லிவிட்டு மீண்டும் துயிலில் ஆழ்ந்தான்.

இதற்கு மேல் அவனை எழுப்பித் தொந்தரவு செய்ய விரும்பாதவள், கண்ணம்மாவிடம் கிருஷ்ணா இன்று தாமதமாகத் தான் விழிப்பான்; அவனுக்குத் தனியாக ஹாட்பாக்ஸில் உணவை எடுத்து வைக்கும் படி சொல்லிவிட்டு மாமனார்கள் மற்றும் மாமியாருடன் உணவருந்த அமர்ந்தாள்.

மித்ரா அன்னையிடம் அமர்ந்தவள் “அம்மு அப்பா எங்கே? இன்னும் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட வரலையா?” என்று கேட்க

“அப்பாக்கு இன்னைக்கு டயர்டா இருக்குதாம்டா மித்தி… சோ லேட்டா தான் முழிச்சுப்பாராம்” என்று சொல்லி அவள் முன் தட்டை நகர்த்தினாள்.

“இனிமே நீயா தான் சாப்பிடணும்… யாரும் உனக்கு ஊட்டிவிட மாட்டோம்… ஏன்னா மித்திகுட்டி இப்போ பெரிய பொண்ணு ஆயிட்டாளாம்” என்று செல்லமாகக் கொஞ்சியே மகளை வழிக்குக் கொண்டுவந்த மருமகளின் பாங்கை பார்த்தபடி மூன்று பெரியவர்களும் சாப்பிட ஆரம்பித்தனர்.

காலையுணவு முடியவும் துளசி இன்று தானே மித்ராவைப் பள்ளியில் விட்டுவிடுவதாகச் சொல்லி அழைத்துக் கொண்டவள் பெரியவர்களிடம் சொல்லிவிட்டுக் கிளம்ப

மித்ரா “பாட்டி டாட்டா” என்று சொன்னபடி அன்னையின் பின்னே ஓடினாள்.

இருவரும் கிளம்பிச் சென்றதும் வீடே அமைதியானது போன்ற தோற்றம். அதன் பின் பெரியவர்கள் அவரவர் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தனர்.

கிருஷ்ணா துயிலில் ஆழ்ந்திருந்தவன் உறக்கம் கலைகையில் காலை பத்துமணி ஆகியிருந்தது. மெதுவாக எழுந்து சோம்பல் முறித்தவன் முதல் வேளையாக மருத்துவமனைக்குப் போன் செய்து காவலாளியின் உடல்நிலையைப் பற்றி விசாரித்துவிட்டுக் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

ஈரத்தலையுடன் வெளியே வரும் போது தான் துளசியின் போன் படுக்கை அருகில் கிடந்த டேபிளில் இருந்ததைப் பார்த்தான் கிருஷ்ணா. உடை மாற்றிவிட்டுப் போனை எடுத்தவன் அதில் ஏகப்பட்ட மிஸ்ட் கால்கள் பதிவாகியிருக்கவே ஏதோ அவசரம் போல என்று எண்ணி போனைத் திறக்க முயல, துளசியின் கடவுச்சொல் அவனுக்குத் தெரியாததால் அவனால் எதுவும் செய்ய இயலவில்லை.

எரிச்சலுடன் போனை மீண்டும் அந்த டேபிள் மீது வைத்தவன் பின்னர் ஏதோ சிந்தனை எழ அதைத் தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டபடி கீழே சென்றான்.

தந்தையும் சித்தப்பாவும் மட்டும் தனித்திருக்க அவர்களிடம் நேற்றைய நிகழ்வைச் சொன்னவன் அகிலேஷ் பற்றிய விவரங்களை மட்டும் கூறாமல் மறைத்துவிட்டான்.

ராகவேந்திரன் தொழிலில் இந்த மாதிரியான போட்டிகள் சகஜம் என்றவர் அந்தக் காவலாளியின் உடல்நிலையைப் பற்றி கிருஷ்ணாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

விஜயேந்திரன் “நேத்து நைட் ஊட்டிக்கும் கோயம்புத்தூருக்குமா அலைஞ்சு நீ டயர்டா இருப்ப கிரிஷ்… பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டிட்டு ரெஸ்ட் எடு” என்று அக்கறையுடன் கூற

கிருஷ்ணா “பத்து மணிக்கு பிரேக்ஃபாஸ்டா? நல்ல ஜோக் சித்தப்பா… கண்ணம்மா வேற லஞ்ச் பிரிபரேசன்ல இருப்பாங்க… ஒன் டே பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடலைனா ஒன்னும் ஆகிடாது” என்று நகர முற்பட

விஜயேந்திரன் “அதுல்லாம் என் மருமகள் காலையிலேயே கண்ணம்மா கிட்ட உனக்குச் சாப்பாட்டைத் தனியா ஹாட்பாக்ஸுல எடுத்து வைக்கச் சொல்லிட்டா… நீ போய் முதல்ல சாப்பிடு போ” என்று விரட்டாத குறையாக அவனைச் சாப்பிட அனுப்பிவைத்தார்.

இவ்வளவு அக்கறை இருக்கிறதா அவளுக்கு என்று எண்ணியபடி சாப்பிட அமர்ந்தவன் அவனது சித்தப்பா சொன்ன மாதிரி இரவில் அங்குமிங்குமாய் அலைந்ததில் கலைத்துத் தான் போயிருந்தான். அவனுக்காக வைக்கப்பட்டிருந்த தோசைகளை ஒரு துண்டு கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டதிலேயே அவனது பசியின் அளவு அவனுக்குப் புரிந்தது.

சாப்பிட்டு முடித்தவனுக்கு இப்போது உடலும் மனமும் கொஞ்சம் தெளிவானதைப் போல தோன்ற, சித்தப்பாவிடமும் தந்தையிடமும் சொல்லிவிட்டு துளசியின் பொட்டிக்கை நோக்கிக் காரை விட்டான்.

பொட்டிக் அமைந்திருந்த கட்டிட வளாகத்தின் கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு இறங்கியவன் துளசியின் பொட்டிக்கை நோக்கி நடை போட்டான்.

வெளியறைக்குள் காலடி எடுத்து வைக்கும் போதே பெண்களின் சிரிப்பொலி பலமாகக் கேட்டது.

“அக்கா நீங்க என்ன தான் சொல்லுங்க, நீங்க ஆப்டர் மேரேஜ் ரொம்பவே சேஞ்ச் ஆயிட்டிங்க… உங்க ஹேர் லெங்த் ஆனதுல இருந்து அடிக்கடி தனியா யோசிச்சு சிரிக்கிறது வரைக்கும் எல்லாமே புதுசா இருக்குக்கா… எல்லாம் கிருஷ்ணா மாமா செய்த மாயம்” என்று ஒரு பெண் கேலி செய்ய, சுகன்யாவோடு சேர்ந்து மற்ற மூவரும் சிரிக்கும் சத்தம் கிருஷ்ணாவின் காதில் தெளிவாக விழுந்தது.

துளசி அதற்கு “பிருந்தா! விட்டா நீ என்னை ஓவரா கலாய்ப்ப… எனக்கு முன்னாடிலாம் முடி எவ்ளோ நீளமா இருக்கும் தெரியுமா? அப்புறம் லாங்க் ஹேரை மேனேஜ் பண்ண முடியாதுனு கட்டையா வெட்டிட்டேன்… இப்போ ஒர்க் லோட் கொஞ்சம் குறைஞ்சதால மறுபடியும் நீளமா வளர்க்க ஆரம்பிச்சிட்டேன்… இது ஒரு குத்தமா?” என்று அவளுக்குச் சிறிதும் குறையாத கேலிக்குரலில் பதிலடி கொடுத்தாள்.

அதற்குள் மற்றொருத்தி “என்ன ஒர்க் லோட் குறைஞ்சிருக்குக்கா?” என்று அப்பாவியாய்க் கேட்டு துளசியைச் சீண்ட

முதலில் பேசிய பிருந்தா “வேற என்ன ஹேரை பராமரிக்கிற வேலை தான் அக்காவுக்குக் குறைஞ்சுப் போயிருக்கும்… அந்த வேலையைக் கிருஷ்ணா மாமா தான் பார்க்கிறாரு போல! அப்பிடி தானே துளசிக்கா?” என்று மீண்டும் துளசியைக் கேலி செய்ய

துளசி “ஏய்! அவருக்கு இருக்கிற ஒர்க் டென்சன்ல இதுக்குத் தான் அவருக்கு டைம் இருக்குது பாரு.. உன் இமேஜினேசனைக் கன்ட்ரோல் பண்ணு… ஓவர் இமேஜினேசன் உடம்புக்கு ஆகாது” என்று சிரித்தபடி சமாளிப்பதைக் கேட்டுக் கிருஷ்ணாவின் இதழிலும் குறுஞ்சிரிப்பு மலர்ந்தது.

ஆனால் அந்தக் குறும்புக்காரப்பெண் மீண்டும் “அக்காவுக்கு வெக்கம் வந்துட்டுடோய்! அக்காவுக்கே இப்பிடினா கிருஷ்ணா மாமாவோட நிலமை? ஐ திங் இப்போ கிருஷ்ணா மாமா ‘பெண்களோட கூந்தலுக்கு இயற்கையா மணம் இருக்கா? இல்லையாங்கிற ஆராய்ச்சியில இறங்கியிருப்பாருனு’ நினைக்கிறேன்” என்று கேலியாய்க் கூற, அங்கே மீண்டும் ஒரு சிரிப்பலை எழுந்தது.

இதைக் கேட்ட துளசி மனதிற்குள் “ஆமா! அவனுக்கு அது ஒன்னு தான் குறைச்சலாக்கும்… அவன் என் கூட ரெண்டு வார்த்தை பேசியே வாரக்கணக்கு ஆகுது… இதுல ஆராய்ச்சி ஒன்னு தான் பாக்கி” என்று மனதிற்குள் நொடித்துக்கொள்ள

அதற்குள் உள்ளறைக்கு வந்துவிட்ட கிருஷ்ணா வாயிலில் நின்றபடி “இல்லையே! கிருஷ்ணா மாமா இப்போ உங்க அக்காவைப் பார்க்க பொட்டிட்டுக்கு வந்துருக்காரு” என்று கேலிவிரவியக் குரலில் கூறவே, அங்கே இருந்த பெண்கள் அனைவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்கவும்

இவ்வளவு நேரம் கேலி செய்து கொண்டிருந்த பெண் “ஐயோ கிருஷ்ணா மாமா” என்று கூறியபடி அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தாள். துளசியுடன் சேர்த்து மற்றவர்களின் நிலையும் அதுவே.

கிருஷ்ணா நிதானமாக உள்ளே நுழைந்தவன் “கிருஷ்ணா மாமாவே தான்… ஏன்? டவுட்டா இருக்கா?” என்று கேட்க அந்தப் பெண்ணுடன் சேர்ந்து அனைவருமே விழித்து வைக்கவும், துளசி

“நாங்க சும்மா டைம் பாஸுக்குப் பேசிட்டிருந்தோம் கிரிஷ்” என்று சமாளித்தாள்.

கிருஷ்ணா அதை நம்பாத பாவனையுடன் “பொட்டிக்கில நல்லா வேலை பார்க்கிறிங்கயா” என்று கேலி செய்தவன், அனைவரும் ஏதோ இராணுவத்துக்கு தேர்வானதைப் போல விரைப்பாய் நிற்பதைக் கண்டதும் அடக்கமாட்டாமல் நகைக்கத் தொடங்கினான்.

அவனது சிரிப்பைக் கண்டதும் அனைவருக்கும் எங்கே இவன் தவறாக எண்ணிக்கொண்டானோ என்ற எண்ணம் அகல அவர்கள் முகத்திலும் புன்சிரிப்பு தவழ்ந்தது.

கிருஷ்ணா துளசியிடம் அவளது போனை நீட்டி “நீ போனை மறந்து வச்சிட்டு வந்துட்ட துளசி” என்று நீட்டவும் துளசி போனை வாங்கச் சென்றாள்.

அவன் போனைக் கொடுக்காமல் மீண்டும் தன் சட்டை பாக்கெட்டுக்குள் போட்டுக் கொள்ள துளசி எரிச்சலுற்றவளாய் அவனது சட்டை பாக்கெட்டிலிருந்து எடுக்கும் அவசரத்துடன் நகர்ந்தவள் பின்னர் தான் தனது நிலையை உணர்ந்தாள்.

பொட்டிக்கில் இவ்வளவு நேரம் ஒன்றுமில்லாத விஷயத்துக்கே அவ்வளவு கேலி செய்தவர்கள் இப்போது மட்டும் தான் போனை எடுத்தால் இன்னும் என்னென்ன சொல்லி கேலி செய்வார்களோ என்று எண்ணி கையைக்கட்டிக் கொண்டு அமைதி காத்தாள்.

கிருஷ்ணா அவளிடம் “உள்ளே வா! உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று சொல்லிவிட்டு அவளது கேபினுக்குள் நுழைய துளசியும் அவனைப் பின்தொடர்ந்தாள்.

உள்ளே சென்றதும் “என்ன பேசணும் கிரிஷ்? முதல்ல என் போனைக் குடு” என்று போனிலேயே கண்ணாய் இருக்க

கிருஷ்ணா புருவம் உயர்த்தியவன் “ஓகே! நீ பாஸ்வேர்ட் என்னனு சொல்லு… நான் போனை தர்றேன்” என்றான் அமர்த்தலாக.

“உனக்கு எதுக்குடா நான் பாஸ்வேர்டைச் சொல்லணும்? அதெல்லாம் சொல்ல முடியாது… நீ போனைக் குடு” என்று அடம்பிடித்தவளை ஆர்வத்துடன் பார்த்தவன் மறுப்பாய்த் தலையசைக்கவே துளசி பரிதாபமாய் முகத்தை வைத்தபடி கேட்டுப் பார்த்தாள். வார்த்தைக்கு ஆயிரம் ‘ப்ளீஸ்’ போட்டுப் பார்த்தாள். கிருஷ்ணா மசிந்தால் தானே!

இறுதியாக வேறு வழியின்றி “கிரிஷ்” என்று வாய்க்குள் முணுமுணுக்க

கிருஷ்ணா காதினருகில் கையை வைத்தவன் “என்ன சொன்ன துளசி? என் காதுல விழலை” என்று நடிக்கவும்

துளசி “கிரிஷ்… இது தான் என் பாஸ்வேர்ட்… போதுமா? போனைக் குடு இப்போ” என்று உரத்தக்குரலில் சொல்லிவிட்டு போனுக்காகக் கையை நீட்டவும் கிருஷ்ணா மறுபேச்சின்றி போனை அவள் உள்ளங்கையில் வைத்தான்.

பின்னர் சில நொடி அமைதிக்குப் பின்னர் “எனக்காகச் சாப்பாடு எடுத்து வைக்கச் சொல்லுறது, என் பேரை பாஸ்வேர்டா வைக்கிறதுலாம் நல்லா தான் இருக்கு… ஆனா நீ ஏன் என்னை நம்பாம போன துளசி?” என்று கண்ணில் சோகத்தைத் தேக்கிக் கேட்டவனுக்கு என்ன பதில் சொல்வதென்று துளசிக்குப் புரியவில்லை.

அவளது அமைதிக்கு அவனாக ஒரு அர்த்தத்தை எடுத்துக்கொண்ட கிருஷ்ணா அதன் பின்னர் எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறிவிடவே, துளசி தொப்பென்று அவளது நாற்காலியில் அமர்ந்தாள்.

இரவுநேரத்தில் நதிக்கரையில் அமர்ந்திருந்த ஒருவன் தன்னருகில் கிடந்த வைரக்கல் குவியலைக் கூழாங்கல் என்று எண்ணி ஆற்றுக்குள் வீசிவிட்டு அதிகாலை வெளிச்சத்தில் தான் அதை வைரம் என்று அறிந்து கொண்டானாம்.

துளசியும் கிட்டத்தட்ட இதே நிலையில் தான் இருந்தாள். கிருஷ்ணாவை இத்தனை நாட்கள் கூழாங்கல்லாக எண்ணித் தூக்கிவீசியவள் அவன் வைரக்கல் என்று தெரியவரும் போது அவன் அவளை விட்டு வெகுதூரம் சென்றிருந்தான்.