💗அத்தியாயம் 31💗

கிருஷ்ணாவின் கேள்விகள் ஒவ்வொன்றும் துளசியின் நெஞ்சைக் கூறுபோடத் தவறவில்லை. அதே நேரம் அவளுக்கு நீண்டநேரம் அவனைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கும் எண்ணமுமில்லை. அவனது ஏச்சுக்கள் ஏற்படுத்திய கோபத்தில் முறைத்துக் கொண்டு நின்றவள் “இதே கேள்வியை நானும் கேக்கலாமா கிரிஷ்? இதுவே மித்ரா நீ பெத்தப் பொண்ணா இருந்தா அவளை இப்பிடி செல்லம் குடுத்துக் குட்டிச்சுவரா ஆக்குவியா?” என்று பதிலுக்கு வெடித்தாள் துளசி.

கிருஷ்ணா நீண்டதொரு மூச்சை வெளியேற்றி தன்னைச் சமனப்படுத்திக் கொண்டபடி அவளைக் கூரியவிழிகளால் நோக்கியவன் “கண்டிக்கிறதுக்கும் மிரட்டுறதுக்கும் வித்தியாசம் இருக்கு துளசி… புரியாம லூசு மாதிரி பேசாத… குழந்தையை வளர்க்கிறது ஒன்னும் அவ்ளோ ஈஸி இல்லை…” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்ப

துளசி முகத்தைச் சுளித்தவள் “ஷட் அப் கிரிஷ்… யாரு எதைப் பத்தி பேசுறது ஒரு விவஸ்தை இல்லாம போச்சு… வளர்ப்பை பத்தி நீ பேசுறியா? உன்னோட வளர்ப்பு லெட்சணத்தை நான் தான் பார்த்தேனே…. யூ னோ ஒன் திங்க், சட்டையை மாத்துற மாதிரி கேர்ள் ஃப்ரெண்டை மாத்துறவனுக்குலாம் என் பொண்ணோட வளர்ப்பைப் பத்தி பேசுறதுக்குத் தகுதி இல்லை… உன்னை உன்னோட அம்மா சரியான வயசுல கண்டிச்சு வளர்த்திருந்தா நீ இப்பிடி கேவலமான நடத்தை உள்ளவனா வளர்ந்திருப்பியா?” என்று கோபத்தில் வார்த்தைகளை அள்ளி இறைத்தாள்.

கிருஷ்ணா இவ்வளவு நேரம் இருந்த கோபம் வடிய அவளது வார்த்தைகள் ஒவ்வொன்றும் வாளாய் மாறி அவனது நெஞ்சைக் குத்திக் கிழிப்பதால் உண்டாகும் வலியை அனுபவித்தபடி சிலையாய் நின்றிருந்தான்.

நான் அவ்வளவு தூரம் சொல்லியும் இன்னும் இவள் என்னை நம்பவில்லையா என்ற ஆதங்கம் ஒரு புறம்.. பிடிவாதக்காரரான இவளது தந்தையே என்னை நம்பிவிட்டார், இவள் இன்னும் எனது ஒழுக்கத்தைச் சந்தேகிக்கிறாளே என்ற வேதனை ஒரு புறமாய் மெதுவாய் ஆறத் தொடங்கிய ரணத்தில் மீண்டும் வார்த்தைகளால் தாக்கிய துளசியைப் பார்த்தபடி விரக்தியுடன் நின்றான் கிருஷ்ணா.

துளசி பேசிய வார்த்தைகளைக் கேட்டபடி சிலையாய் சமைந்தது கிருஷ்ணா மட்டுமல்ல… அவர்களின் அறைக்கு வெளியே மித்ராவைச் சமாதானம் செய்வதற்காகத் துளசியை அழைக்க வந்த சஹானாவும், துளசி கிருஷ்ணாவின் வளர்ப்பைப் பற்றி கொட்டிய வார்த்தைகளைக் கேட்டுவிட்டாள்.

அவளது மனசாட்சியோ “இது எல்லாத்துக்கும் நீ தான் காரணம் சஹானா.. உன்னால தான் கிருஷ்ணா இப்பிடி தலைகுனிஞ்சு நிக்கிறான்…. உன்னோட வளர்ப்பு தான் சரியில்லை… நீ ஆடாத ஆட்டம் ஆடுனதுக்குத் தான் அப்போ இருந்து இப்போ வரைக்கும் கிருஷ்ணா தண்டனை அனுபவிக்கிறான்…. ஆனா நீ கல்யாணம் பண்ணிட்டு புருசன் கூட எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாம உன் வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிட்ட… உனக்கும் அந்த கிரேசிக்கும் என்ன வித்தியாசம் இருக்கு? அந்தக் கிரேசியால செத்தும் ஏஞ்சலினா அசிங்கப்படுறா… உன்னால ஆறு வருசத்துக்கு அப்புறமும் கிருஷ்ணா அசிங்கப்படுறான்” என்று அவளை வெறுப்பு உமிழும் வார்த்தைகளால் திட்டத் தொடங்கியது.

கிருஷ்ணா அறையினுள்ளே இருந்த நாற்காலியில் தொப்பென்று அமர்ந்துவிட துளசிக்கு அவனைக் கண்டு இப்போதும் மனம் கனத்துப் போனது.

“நீ எத்தனை பட்டாலும் திருந்த மாட்டியா துளசி? இவனுக்குப் போய் பரிதாபம் பார்க்குற? நீ திட்டுன எந்த வார்த்தையும் தப்பில்ல” என்று தனக்குத் தானே கூறிக்கொண்டவள் அதற்கு மேல் அந்த அறையில் இருந்தால் கிருஷ்ணாவின் வருத்தத்தை அவளால் பார்க்க இயலாது என்பதால் கோபம் போலக் காட்டிக்கொண்டு விறுவிறுவென்று அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

அறைக்கு வெளியே வந்தவள் அங்கே கன்னத்தில் கண்ணீர்க்கோடுகளுடன் அதிர்ந்து போய் நின்ற சஹானாவைக் கண்டதும் திகைத்துப் போனாள். ஒரு வேளை கிருஷ்ணா மித்ராவைப் பெற்றவள் தானில்லை என்று திட்டியதைச் சஹானா கேட்டிருப்பாளோ என்று துணுக்குற்றவள் கையைப் பிசைந்தபடி நிற்க, சஹானா நீர் நிரம்பிய விழிகளால் துளசியை ஏறிட்டாள்.

இன்று இவளிடம் கிருஷ்ணாவைப் பற்றிய உண்மைகளைச் சொல்லாவிட்டால் இவள் காலாகாலத்துக்கும் கிருஷ்ணாவை வெறுத்துக் கொண்டே தான் இருப்பாள். கிருஷ்ணாவால் துளசியின் வெறுப்பையும் நிராகரிப்பையும் தாங்கமுடியாமல் அவன் வேறு ஏதேனும் விபரீத முடிவுக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் உள்ளுக்குள் உதறலை ஏற்படுத்த ஒரு முடிவுடன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் சஹானா.

தெளிவானக் குரலில் “துளசி உன் கிட்ட அண்ணாவைப் பத்தி கொஞ்சம் பேசணும்… என் கூட வா ப்ளீஸ்” என்று ஆரம்பித்தவளின் குரல் முடிவில் கம்மிப் போனது.

துளசிக்கு அவள் குரலிலிருந்த வருத்தம் ஏதோ செய்யவே சரியென்று தலையாட்டிவைக்க, துளசியை அழைத்துக் கொண்டு அந்த வீட்டின் தோட்டத்துக்குச் சென்றாள் சஹானா.

அங்கே சென்ற பிறகும் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று புரியாமல் அவள் தடுமாறுவதும், வழக்கத்துக்கு மாறாக உடல் நடுங்குவதுமாகவும் இருக்கவே, துளசி “உங்களுக்கு உடம்பு எதுவும் சரியில்லையா? ஏன் ஒரு மாதிரி அப்நார்மலா பிஹேவ் பண்ணுறிங்க?” என்று அக்கறையுடன் கேட்டாள்.

அதைக் கேட்டதும் சஹானாவின் உதட்டில் ஒரு விரக்தியான சிரிப்பு இழையோடியது.

“நான் சொன்னதைக் கேட்டதுக்கு அப்புறமா உனக்கு என் மேல வெறுப்பு வரலாம் துளசி… ஏன் என்னைப் பார்க்கவே உனக்கு அருவருப்பா கூட இருக்கலாம்… ஆனா இனியும் என்னால தேவையில்லாம கிரிஷ் அசிங்கப்படுறதைத் தாங்கிக்க முடியாது” என்று விம்ம ஆரம்பித்தாள்.

துளசிக்கு அவளது இந்த அழுகை முற்றிலும் புதியது. அவள் அறிந்தவரை சஹானா திறமையானவள், தைரியமானவள்… இந்த இளம்வயதில் பெரிய பொறுப்புகளைக் கவனிக்கும் ஆளுமை நிறைந்தவள்… அப்படிப்பட்டவள் உடைந்து அழும் அளவுக்கு என்ன தான் நடந்திருக்கும் என்று யோசித்துத் தவிக்க ஆரம்பித்தவளுக்கு பதிலளிக்கும் விதமாகப் பேசத் தொடங்கினாள் சஹானா.

சாவித்திரி இருந்தவரை கிருஷ்ணா என்றால் அனைவருக்கும் பிடிக்கும். குடும்பத்தினர் பண்ணையாட்கள் என அனைவருக்குமே அவன் செல்லப்பிள்ளை. ஆனால் சாவித்திரியின் எதிர்பாரா மரணம் கிருஷ்ணா என்ற பன்னிரெண்டு வயது சிறுவனின் மனதை வெகுவாய் பாதித்துவிட அவனது நிலையைப் பொறுக்கவியலாத ராகவேந்திரன் சாவித்திரியின் தங்கையும், தம்பி மனைவியுமான சாரதாவுடன் கிருஷ்ணாவை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்.

ஆரம்பத்தில் கிருஷ்ணாவிடம் பிரியமாக இருந்த சஹானா நாளாக நாளாக அன்னையின் கவனம் கிருஷ்ணாவிடம் செல்ல ஆரம்பிக்கவும் சாரதாவிடமிருந்து விலக ஆரம்பித்தாள்.

இவ்வாறிருக்கையில் ஒரு நாள் பள்ளிக்குச் சென்ற சஹானா பெரியவளாகிவிட்டத் தகவல் கிடைக்கவே அந்நேரம் கிருஷ்ணாவுக்கு உடல்நலமில்லை என்று அவனுடன் சாரதா மருத்துவரிடம் அழைத்துச் சென்றுவிட விஜயேந்திரன் தான் மகளை வீட்டுக்கு அழைத்துவந்தார்.

அந்தச் சமயத்தில் கூட அன்னைக்கு கிருஷ்ணா தான் முக்கியமாகப் போய்விட்டதாகக் கருதிய சஹானாவின் நெஞ்சில் இந்நிகழ்வு கிருஷ்ணாவின் மீதும் சாரதாவின் மீதும் ஆழ்ந்த வெறுப்பை உண்டு பண்ணியது. இவ்வாறிருக்கும் போது சஹானாவின் பதினைந்தாவது பிறந்தநாள் வந்தது. அதில் கலந்துகொண்ட சஹானாவின் நண்பன் ரிச்சர்ட் சாரதா கிருஷ்ணாவின் மீது உயிராக இருப்பதைக் கவனித்தவன் கிருஷ்ணாவுக்கு எதிராக அவளைத் தூண்டிவிட்டான்.

அவனது பேச்சைக் கேட்டுச் சஹானாவும் கிருஷ்ணாவையும் அவளது தாயாரையும் ஒரு பொருட்டாகக் கூட மதியாது வெறுக்கத் தொடங்கினாள். அவளுக்கு நண்பர்கள் வட்டம் அதிகரித்தது. இதன் காரணமாக அவள் மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்க ஆரம்பித்தாள்.

அவளது இந்தப் போக்கு சாரதாவுக்குக் கவலையளிக்கவே கிருஷ்ணா சஹானாவைக் கண்டித்தான். ஆனால் சஹானா அதற்கும் “பதினெட்டு வயசாகியும் நீ ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் கூட இல்லாம கையாலாகாதவனா இருக்க.. நான் என்ன உன்னை மாதிரியா?” என்று வெறுப்பைக் கக்கிவிட்டுச் சென்றாள்.

அந்த வார்த்தை கிருஷ்ணாவின் மனதை வெகுவாகப் பாதித்துவிட்டது. பதின்வயதில் ஒரு ஆண்மகனின் ஈகோவைத் தூண்டிவிட அந்த வார்த்தைகள் மிகவும் அதிகம். அதன் விளைவு ஏஞ்சலினாவைத் தன் தோழி என்று வீட்டினரிடம் தனது பதினெட்டாவது பிறந்த தினக்கொண்டாட்டத்தில் அறிமுகப்படுத்தினான் கிருஷ்ணா.

அதன் பின் ஏஞ்சலினாவும் கிருஷ்ணாவும் நெருங்கிய நண்பர்களாயினர். ஏஞ்சலினாவுக்கு அடிக்கடி உடல்நலமின்றி போகுமென்பதால் அப்போதெல்லாம் கிருஷ்ணாவும், ஏஞ்சலினாவின் மற்ற தோழிகளுமே அவளுக்குத் துணையாய் இருப்பது வழக்கம்.

இது இருவரின் கண்ணை உறுத்தியது. ஒருவன் அகிலேஷ் சக்கரவர்த்தி, ஏஞ்சலினாவை ஒரு தலையாகக் காதலித்தவன். இன்னொருத்தி கிரேசி, ஏஞ்சலினாவின் தோழி.. இவள் கிருஷ்ணாவை ஒரு தலையாகக் காதலித்து வந்தாள். இந்த இருவருக்குமே ஏஞ்சலினா கிருஷ்ணாவின் நட்பு கண்ணை உறுத்தியது. தங்கள் காதலை மறுத்த ஏஞ்சலினாவும் கிருஷ்ணாவும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக எண்ணிக்கொண்டனர் அகிலேஷும் கிரேசியும்.

ஏஞ்சலினாவுக்கு நிமோனியா வந்த சமயம் அவளது அண்ணன் மார்க் வியாபார விஷயமாக வெளியூர் சென்றுவிட அச்சமயத்தில் கிருஷ்ணாவும், அந்த தோழிப்பெண்களுமே ஏஞ்சலினாவுக்கு உதவியாய் அவளுடன் இருந்து அவளைக் கவனித்துக்கொண்டனர். அதில் கிரேசியும் அடக்கம்.

ஏஞ்சலினா தான் தனது அண்ணனிடம் சொல்ல விரும்புவதை ஒரு வீடியோவாக பதிவு செய்ய சொல்லவே கிரேசி தான் அந்த வீடியோவை பதிவு செய்தாள். அதே நேரம் உயிர் பிரியும் தருவாயில் தனது சகோதரனுக்குக் கொடுக்க முடியாத முத்தத்தை சகோதரனாக எண்ணிய கிருஷ்ணாவுக்குக் கொடுத்தாள் ஏஞ்சலினா. இதைப் புரிந்து கொள்ளாத கிரேசியும் அகிலேஷும் ஏஞ்சலினாவின் மரணப்படுக்கையையும், கிருஷ்ணாவின் ஒழுக்கத்தையும் அசிங்கப்படுத்திவிட்டனர் சில புகைப்படங்கள் வாயிலாக.

இவை அனைத்துக்கும் தானே முழுமுதற்காரணம் என்று அழுதாள் சஹானா. அழுதவள் அவள் செய்துவைத்த விபரீதக்காரியத்தை இன்னும் முழுவதுமாகச் சொல்லவில்லை. எங்கே அதையும் சொல்லிவிட்டால் துளசி தன்னைச் சுத்தமாக வெறுத்துவிடுவாளோ என்ற பயம் தான் அவளுக்கு. சொல்லப் போனால் அந்தக் காரியம் சாரதாவைத் தவிர வேறு யாருக்கும் முழுவதுமாகத் தெரியாது என்பது தான் உண்மை.

துளசியோ அவளைச் சமாதானப்படுத்தும் வழியறியாது கலங்கத் தொடங்கினாள். அதேநேரம் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்ற அதிர்ச்சியில் அவளது உடல் நடுங்கத் தொடங்கியது. யாரோ ஒரு பெண் பேசினாள், எவனோ ஒருவன் போட்டோ அனுப்பினான் என்று ஒரு தவறும் செய்யாத கிருஷ்ணாவை அவள் ஆறரை வருடங்களாக வருத்தியிருக்கிறாள். அந்தக் கயவர்களுடன் சேர்ந்து அவளும் தன் ஒரு பெண்ணின் மரணப்படுக்கையைப் பற்றி கேவலமாகச் சிந்தித்திருக்கிறாள்.

அதன் பின்னரும் வார்த்தைகளால் ஒவ்வொரு முறையும் ‘ஒழுக்கமற்றவன்’ என்று சொல்லிக் கிருஷ்ணாவைக் குத்திக் கிழித்திருக்கிறாள். இதெற்கெல்லாம் எப்படி கிருஷ்ணாவிடம் மன்னிப்பு வேண்டுவது என்று குற்றவுணர்ச்சியில் தவித்தவளுக்குத் தன் மீது கோபம் பொங்கியது.

யாரோ அனுப்பிய சில புகைப்படங்களை வைத்து தனது கிருஷ்ணாவை சந்தேகித்துவிட்டோமே என்று உள்ளுக்குள் குமைந்தவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று புலப்படவில்லை. காரணம் இனிமேல் தனது அமெரிக்க வாழ்க்கையைப் பற்றி யாருக்கும் விளக்கம் கொடுக்கப்போவதில்லை என்றும், அதைப் பற்றித் தன்னிடம் துளசி பேசக்கூடாதென்றும் திருமணத்துக்கு முன்னரே கிருஷ்ணா நிபந்தனை இட்டிருந்தான். சற்று முன்னர் தான் அவனது கோபம் என்னும் சூறாவளி எத்தகையது என்று நேரில் பார்த்து அறிந்திருந்தாள் துளசி. அப்படி இருக்கையில் எவ்வாறு அவனிடம் தான் செய்து வைத்தக் காரியங்களுக்கு மன்னிப்பு வேண்டுவது என்று சிந்தித்து கலங்க ஆரம்பித்தாள் துளசி.