💗அத்தியாயம் 30💗

அந்த மூச்சுத்திணறல் பிரச்சனைக்குப் பிறகு துளசி சுகன்யாவுக்கும் மீனாவுக்கும் சில மறுக்கமுடியாத கட்டளைகளை இட்டுவிட்டாள். மீனா இனி எந்த வேலையையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து உடலை வருத்திக் கொள்ளக்கூடாது என்று கிட்டத்தட்ட ஆணை மாதிரி கூறிவிட்டவள், இனியும் பிஸ்கெட், கேக் என்று ஓவனைத் தூக்கினால் அப்புறம் தான் அவரிடம் பேசவே போவதில்லை என்று மிரட்டிவிட்டிருந்தாள்.

அதே போல சுகன்யாவிடமும் அந்த மஞ்சள் நானோவை அடிக்கடி உபயோகப்படுத்த வேண்டாமென்றும், எங்காவது பக்கத்தில் சென்று வர மட்டும் அதைப் பயன்படுத்திக் கொள்ள சொன்னவள், தினமும் தானே சுகன்யாவைப் பொட்டிக்குக்கு அழைத்துச் சென்றுவிட்டு மாலையில் வீட்டில் கொண்டு விடுவதாகவும் கூறிவிட்டாள்.

சுகன்யா இதெல்லாம் சரி வராது என்று மறுக்கவே “இது நாள் வரைக்கும் நீ சொல்லி நான் எந்த விஷயத்தையும் கேக்காம இருந்ததில்லை.. முதல் தடவையா நான் ஒரு விஷயத்தைச் சொல்லுறேன். நீ கேக்க மாட்டியா சுகி?” என்று ஒரே வார்த்தையில் விஷயம் முடிந்தது என்று சொல்லாமல் சொல்லி விட்டு அடுத்த வேலையைக் கவனிக்க ஆரம்பித்தாள். அதன் பிறகு சுகன்யாவும் மறுப்பு தெரிவிக்கவில்லை.   

துளசியும் அவ்வபோது மித்ராவுடன் சென்று மீனாவை அவரது இல்லத்தில் பார்த்துவிட்டு வருவாள்.

இவ்வாறிருக்க ராகுலும் சஹானாவும் ஏதோ தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனையைப் பற்றிப் பேசுவதற்காக ஊட்டி வந்திருக்கவே வீடே கலகலவென்று இருந்தது. அன்று வார இறுதி என்பதால் துளசியும் கிருஷ்ணாவும் வீட்டிலிருந்தனர்.

ராகுலும் சஹானாவும் பேச வந்தது கிருஷ்ணாவிடம் தான். எனவே துளசி அவர்கள் பேசட்டும் என்று ஒதுங்கிவிட மூவரும் மாடி வராண்டாவில் அமர்ந்து தீவிரமாகப் பேச ஆரம்பித்தனர்.

சஹானா தான் கோவையில் ஒரு மாலில் கிரேசியை எதேச்சையாகப் பார்த்ததாகத் தமையனிடம் தெரிவித்தவள் “கிரிஷ் எனக்கு என்னவோ பயமா இருக்குடா… அவளோட முகத்துல இப்போ வரைக்கும் துளி குற்றவுணர்ச்சி கூட இல்லை… அதே பிடிவாதம், முசுட்டுத்தனம் எதுவுமே மாறலை… அவ மறுபடியும் உன் வாழ்க்கையில பிரச்சனை பண்ண வந்திருக்காளோனு டவுட்டா இருக்கு” என்று தவித்துப் போனக் குரலில் பேச

அவளைக் கையமர்த்திய ராகுல் “சஹா நீ நினைக்கிறது சரி தான்… ஆனா அவ தானா வரலை… அவளை அகிலேஷ் தான் வரவழைச்சிருக்கிறான்… கிரிஷ்! உன்னை அவன் ஏதோ ஒரு பெரிய விஷயத்துல சிக்க வைக்க பிளான் போட்டிருக்கான்… பட் என்ன பிளான்னு தான் தெரியலை… உன்னோட எக்ஸ்போர்ட் யூனிட் எல்லாம் செக்யூரிட்டி என்ன லெவல்ல இருக்கு கிரிஷ்?” என்று நண்பனை எச்சரிக்கும் விதத்தில் விசாரித்தான்.

கிருஷ்ணா பெருமூச்சு விட்டபடி “அவனால என்னை எதுவும் பண்ண முடியாதுனு எனக்கு நம்பிக்கை இருக்கு… அதே மாதிரி கிரேசி இஸ் அன் யூஸ்லெஸ் இடியட்… அவளை நினைச்சு இவ்ளோ ஒரி பண்ணிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று சாதாரணமாகச் சொல்லவே சஹானாவுக்கும் ராகுலுக்கும் பதற்றம் குறைந்தபாடில்லை.

“அண்ணா நீ நினைக்கிற மாதிரி இல்லை… கிரேசி முட்டாள் தான்… அகில் மாதிரி முரடனைக் கூட தைரியமா ஃபேஸ் பண்ணலாம்… ஆனா முட்டாளை ஃபேஸ் பண்ணுறது ரொம்ப கஷ்டம்… ஏஞ்சலினாவோட மரணப்படுக்கையைக் கூட அவ கேவலப்படுத்திட்டாங்கிறதை மறந்துடாதே… அது தான் இன்னைக்கு வரைக்கும் துளசியை உன் கிட்ட இருந்து பிரிச்சு வைச்சுதுங்கிறதை நீ எப்போவும் நியாபகம் வச்சுக்கோ” என்று சஹானா நினைவுறுத்த 

ராகுலும் “உன்னோட ஆக்ஸிடெண்ட் நடந்ததுக்கு முக்கியக்காரணமே அகில் தான்… அப்போவும் சரி, மித்ராவைக் கடத்துனப்போவும் சரி,, நம்மாள அவனை ஆதாரத்தோடச் சட்டத்துக்கு முன்னாடி நிறுத்த முடியலை… இந்தத் தடவை அவன் வேற எதோ பிளான்ல இருக்கான்… சோ நீ கேர்லெஸ்ஸா இருக்காதே” என்று நண்பனுக்கு அறிவுறுத்தினான்.

கிருஷ்ணாவும் இருவரது பேச்சிலும் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டவன் யோசனையில் ஆழ்ந்த போது தான் மித்ராவின் அழுகுரல் கேட்டது.

கிருஷ்ணா பதறிப் போய் படிகளில் இறங்கி கீழே ஓட, ராகுலும் சஹானாவும் அவனைத் தொடர்ந்து இறங்கினர். கீழே ஹாலில் ஜூஸ் வழிந்த சேலையுடன் கண்ணம்மா நின்று கொண்டிருக்க துளசி காளி ரூபத்தில் மித்ராவிடம் கத்திக் கொண்டிருந்தாள்.

“இப்போ சாரி கேக்கப் போறியா இல்லையா மித்ரா? பண்ணுறதையும் பண்ணிட்டு அழுதா என்ன அர்த்தம்? கண்ணம்மா பாட்டி கிட்ட சாரி கேளு” என்று அவள் கோபத்தில் முகம் சிவக்க ஆவேசமாய்க் கூறவும்

மித்ரா அன்னையின் இக்கோலத்தில் ஏற்கெனவே அழத் தொடங்கியிருந்தவள் கேவலுடன் “சாரி கண்ணா பாட்டி” என்று கூறவே

கண்ணம்மா “விடுங்க சின்னம்மா! பாப்பா ஏதோ தெரியாம கொட்டிடுச்சு” என்று மித்ராவுக்கு ஏந்து பேச அடுத்த டோஸ் அவருக்குத் தான் ஆரம்பித்தது.

“நீங்க சும்மா இருங்கம்மா… எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு… நான் கண்டிக்கலைனா அவளுக்கு பிடிவாதமும் ஆட்டிட்டியூடும் அதிகமாயிடும்” என்றபடி மித்ராவிடம் திரும்பினாள்.

“இனிமே இப்பிடி பிஹேவ் பண்ணுனேனா நீ அம்மு கிட்ட பேசவே வேண்டாம் மித்தி… நீ பிரின்சும் இல்லை, குயினும் இல்லை… ஒரு சாதாரண சின்னப்பொண்ணு தான்… சோ சகமனுசங்களை மதிக்கணும்… இப்பிடி எடுத்தெறிஞ்சு பேசுறது, கையில கிடைக்கிறதை எடுத்து வீசுறது இதெல்லாம் இனிமே நடக்கக் கூடாது… புரிஞ்சுதா?” என்று கேட்கும் போதே குழந்தைக்கு ஒரு முறை தூக்கி வாரிப் போட்டது.  

கிருஷ்ணா துளசியின் கோபத்தையும் மித்ராவின் அழுகையையும் ஒப்பிட்டுப் பார்த்து எரிச்சலுடன் அங்கே வந்தவன் “போதும் துளசி… அவ குழந்தை.. உன்னோட கதாகாலட்சேபம் அவளுக்குப் புரியாது… சும்மா குழந்தையை இப்பிடி கத்தி வைக்காதே.. ஜூஸ் கொட்டுனதால இப்போ உலகம் அழிஞ்சுப் போச்சா என்ன?” என்று அவளிடம் கத்திவிட்டு மித்ராவை அணைத்துக் கொண்டான்.

“ஒன்னுமில்லைடா… செல்லக்குட்டி அதான் அப்பா வந்துட்டேன்ல… அழக் கூடாது… என் கன்னுக்குட்டில… மித்தி சமத்துப்பொண்ணாச்சே” என்று மகளைத் தேற்றியவனின் பார்வை துளசியை சுட்டுப் பொசுக்கியது.

அவள் அதைக் கண்டுகொள்ளாமல் கண்ணம்மாவிடம் “நீங்க டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கோங்கம்மா… நான் இதை கிளீன் பண்ணிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு கிச்சனில் சென்று துடைப்பத்துடன் வந்தவள் அதைக் கூட்டி அள்ளுகையில் அவள் கையில் கண்ணாடித்துண்டு எதுவும் கிழித்துவிடுமோ என்ற கவலை வேறு கிருஷ்ணாவுக்கு.

ஆனால் மித்ராவின் கண்ணீருக்கு முன்னர் துளசி கூடப் பெரிதாக தெரியவில்லை. மகளைத் தூக்கிக் கொண்டு அவளது அறைக்குச் சென்றுவிட்டான் அவன்.

துளசி அந்த இடத்தைச் சுத்தம் செய்துவிட்டு வந்தவள் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் ராகவேந்திரன், விஜயேந்திரன் மற்றும் சாரதாவைச் சங்கடத்துடன் எதிர்கொண்டாள். என்ன இருந்தாலும் பெரியவர்கள் முன்னிலையில் தான் மகளிடம் அப்படி கத்தியிருக்கக் கூடாது என்று எண்ணி வருந்தினாள் அவள்.

சஹானாவும் ராகுலும் கூட அதே நிலையில் தான் இருந்தனர்.

துளசி “பெரிய மாமா நான் மித்ரா கிட்ட கத்துனது தப்பு தான்… ஆனா…” என்று இழுக்க

ராகவேந்திரன் “இல்லம்மா! நீ கண்டிச்சதை நாங்க தப்பு சொல்ல மாட்டோம்.. அன்பு காட்டுறது மட்டும் ஒரு அம்மாவோட கடமை இல்லை… குழந்தைங்க தப்பு பண்ணுறப்போ அவங்களைக் கண்டிக்கிறதும் அம்மாவோட கடமை தான்… ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதுனு சொல்லுவாங்க… இப்போ நீ கண்டிக்கலைனா இந்தப் பிடிவாதம் மித்ராவோட நிரந்தரமான குணமா மாற வாய்ப்பிருக்கு” என்று மருமகளின் சங்கடத்தைப் போக்கும் விதமாகப் பேச

விஜயேந்திரனும் அதையே ஆமோதிக்க, இவ்வளவு நேரம் அனைத்தையும் சிலை போல நின்று பார்த்துக் கொண்டிருந்த சாரதா உணர்ச்சிவசப்பட்டவராக “நீ சரியா தான் நடந்துகிட்ட துளசி… ஒரு அம்மாவா நான் செய்யத் தவறுனதை என் மருமகள் செய்யுறது பார்த்து எனக்குச் சந்தோசம் தான்” என்று கூறிவிட்டுக் கலங்கிய கண்களுடன் தன் அறையை நோக்கி விரைந்தார்.

அதைக் கேட்டச் சஹானாவின் முகத்தில் ஒரு கணம் வேதனை படர “ம்மா” என்றபடி அவரைத் தொடர, துளசியோ சாரதாவின் வருத்தத்துக்கும், சஹானாவின் வேதனைக்கும் காரணம் புரியாமல் குழம்பினாள்.

ராகுலிடம் “அண்ணா அவங்க ரெண்டு பேரும்…..”என்று தயக்கத்துடன் இழுத்தபடி பேச

ராகுல் “பிரச்சனை ஒன்னுமில்ல துளசி… நீ டென்சன் ஆகாதே… ஏதோ பழைய நியாபகம் அத்தைக்கு வந்துடுச்சு… அவ்ளோ தான்” என்று துளசிக்குச் சமாதானம் சொன்னான்.

ஆனால் துளசியின் மனமோ “ஒரு அம்மாவா நான் செய்யத் தவறுனதை என் மருமகள் செய்யுறது பார்த்து எனக்குச் சந்தோசம் தான்” என்ற சாரதாவின் கூற்றையும் அதைத் தொடர்ந்து கலங்கிய சஹானாவையும் இணைத்துப் பார்க்கத் தொடங்கியது.

துளசி சமையலறைக்குச் சென்றவள் மீண்டும் ஒரு முறை கண்ணம்மாவிடம் மன்னிப்பு வேண்ட அவரோ “என் பேத்தி செஞ்சிருந்தா நான் பொறுத்துக்க மாட்டேனாம்மா? மித்ரா பாப்பாவும் என் பேத்தி போலத் தான்” என்று பெருந்தன்மையுடன் கூற

துளசிக்கு அந்தக் கணம் கடவுள் பெருந்தன்மையை அளவுக்கதிகமாகக் கொடுத்ததால் தான் இவர்களிடம் செல்வத்தைக் கொடுக்க மறந்துவிட்டாரோ என்று எண்ணியபடி அங்கிருந்து அகன்று தங்களின் அறையை நோக்கிச் சென்றாள்.

மாடிப்படி ஏறியவள் அறைக்குள் செல்ல மனமின்றி வராண்டாவில் கிடந்த இருக்கையிலேயே சாய்ந்து விட, மதியவெயிலுடன் இணைந்து குளிர்ந்த காற்று வீசி அச்சூழ்நிலையை இதமாக்க முயன்றது. அதை அனுபவிக்க இயலாதபடி மகளிடம் இப்படி கத்திவிட்டோமே என்ற துக்கம் அவளது தொண்டையை அடைக்கத் தொடங்கியது. ஆனால் மித்ரா செய்தது சரியென்று ஒப்புக்கொள்ள இப்போதும் அவளுக்கு மனமில்லை.

முன்பெல்லாம் மித்ரா இப்படி பிடிவாதம் பிடித்ததில்லை. எதற்கும் அடம் பிடிக்கவோ, கோபப்படவோ தெரியாத அன்பானச் சிறுமிக்கு எங்கிருந்து வந்தது இந்தத் திடீர் பிடிவாதமும், கோபமும் என்று யோசித்தவளின் மனக்கண்ணில் தோன்றிய ஒரே முகம் கிருஷ்ணாவினுடையது தான்.

ஆம்! கிருஷ்ணாவின் அளவற்றப் பாசமும், எல்லையற்ற செல்லமும் மித்ராவுக்குள் பிடிவாதத்தை விதைக்க, அவள் கேட்டதை மறுபேச்சின்றி வாங்கிக் கொடுக்கும் கிருஷ்ணாவின் செயலை மித்ரா மற்றவர்களிடமும் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டாள். அப்படி அவர்கள் அவள் நினைத்ததைக் கொடுக்காதபட்சத்தில் அவளுக்குக் கோபம் வரத் தொடங்கிவிட்டது.

ஆக அனைத்துக்கும் கிருஷ்ணா ஒருவனே காரணம் என்று மனதில் பதியவைத்துக் கொண்டவள், இனி இப்படி மித்ராவுக்குச் செல்லம் கொடுக்கக் கூடாதென்று அவனிடம் எடுத்துக் கூற வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

அவளது எண்ணங்களின் நாயகன் ருத்திர ரூபனாய் அவள் பின்னே நின்று கொண்டிருப்பதை அறியாது எழுந்தவள், அவன் மீது மோதிக் கீழே விழப் போகவே, வழக்கம் போல அவன் பிடித்து நிறுத்துவான் என்று எதிர்பார்த்து ஏமாந்து தானே சமாளித்து நின்றாள் துளசி.

கிருஷ்ணா அவளைச் சுட்டெரிப்பது போல வெறித்தவன் “உனக்குக் கொஞ்சமாச்சும் அறிவிருக்காடி? குழந்தையை கண்டபடி திட்டுற? அவ நடுங்கிற அளவுக்குத் திட்டிருக்க நீ… அப்பிடி என்ன பொல்லாத தப்பை பண்ணிட்டா அவ? அப்பிடியே பண்ணுனாலும் அதால ஒன்னும் இந்த உலகம் அழிஞ்சு போயிடாது… ஒரு கிளாஸ் ஜூஸுக்கு எதுக்கு குழந்தையைக் கன்னம் சிவக்கிற அளவுக்கு அறைஞ்ச? இதுவே நீ பெத்தப் பொண்ணா இருந்தா இப்பிடி அறைஞ்சிருப்பியா?” என்று வார்த்தையை நெருப்புத்துண்டங்களாய் அள்ளியெறிய, முதல் முறையாக அவனது ருத்திர ரூபத்திலும் அவன் வார்த்தைகளின் வெம்மையிலும் மனம் கலங்கி நின்றாள் துளசி.

கிருஷ்ணாவின் காதல் எவ்வளவுக்கு எவ்வளவு ஆழமானதோ அதே போலத் தான் அவனது கோபமும், மிகவும் ஆழமானது. அதை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இப்போது தான் துளசிக்கு கிடைத்திருக்கிறது… இதற்கு முன்னர் அவன் கோபப்பட்டதெல்லாம் அவள் மீதுள்ள அக்கறையால் தான்… ஆனால் இம்முறை அவனது கோபத்துக்குக் காரணியே அவள் தான் என்கையில் அதன் தாக்கம் இன்று துளசிக்குச் சற்று அதிகமாகவே இருந்தது. ஆனால் கிருஷ்ணாவின் கோபம் இன்றோடு முடிவுறப்போவதில்லை, இது ஒரு தொடர்கதை ஆகப் போகிறதென்பதை துளசி அறியவில்லை இப்போது…..