💗அத்தியாயம் 3💗

மித்ராவின் தந்தை நீ இல்லை என்ற துளசியின் கூற்றில் சுக்குநூறாக உடைந்தான் கிருஷ்ணா. ஆனால் துளசி பொய்யைக் கூட உண்மை போல் சொல்லுவதில் திறமையானவள் என்பதை அவன் அறிவான் என்பதால் இதுவும் அதைப் போன்ற ஒரு பொய் தான் என்று எண்ணிச் சமாதானமானான்.

துளசி தான் சொன்னதைக் கேட்டதும் அவன் சென்றுவிடுவான் என்றெல்லாம் எண்ணவில்லை. அவளுக்கும் தெரியும் தான் சொன்னதை அவன் எப்போதுமே நம்பப் போவதில்லை.

ஆனால் இப்போது கூட அவனது செய்கையை எண்ணிக் கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி இல்லாமல் நிற்பது தான் துளசிக்கு எரிச்சலைக் கொடுத்தது, இவனால் எப்படி இவ்வாறு சாதாரணமாகத் தன்னிடம் பேச முடிகிறது என்ற ஆதங்கம் கொடுத்த எரிச்சல் தான் அது.

கிருஷ்ணா அவளின் இந்த எண்ண ஓட்டத்தை அறியாதவனாய் “நீ சொன்னப்  பொய்யை நான் நம்பிட்டேன் துளசி… இல்லை என்ன பார்க்க உனக்கு பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா? மித்ராக்கு நான் தான் அப்பாங்கிறதுக்கு அன்னைக்கு ஒரு நைட்டே சாட்சி… இதுக்கு மேல உன் கிட்ட வேற எதையும் விளக்க விரும்பலை” என்று ஆறு வருடத்துக்கு முந்தையச் சம்பவத்தை நினைவுறுத்த

துளசி அதை வேறு விதமாகப் புரிந்து கொண்டு “அன்னைக்கு நாள் என் வாழ்க்கையில வராமலே இருந்திருக்கலாம்னு எத்தனையோ தடவை யோசிச்சிருக்கேன் கிரிஷ்… ஆனா தான் மித்ரா எனக்குக் கிடைச்சாங்கிற ஒரே காரணத்துக்காகத் தான் நான் அதை மறக்காம நியாபகம் வச்சிருக்கேன்…. மத்தப்படி உன்னையும் உன் சம்பந்தப்பட்ட எல்லா விஷயத்தையும் நான் மறந்து ரொம்ப நாளாச்சு” என்றாள் அழுத்தமானக் குரலில்.

கிருஷ்ணா “சோ நீயே ஒத்துக்கிற மித்ரா என்னோட பொண்ணு தான்னு… அப்புறம் எதுக்கு இந்தப் பொய் துளசி? நான் கடைசியா உன்னை விட்டுப் போகுறப்போ என்ன சொன்னேன்? நானா உன்னைப் பார்க்கணும்னு ஊட்டிக்கு வர டிரை பண்ண மாட்டேன்… பட் நம்ம ரெண்டு பேருல யாரு முதல்ல மத்தவங்க இடத்துக்கு வந்து அவங்க பார்வையில படுறோமோ அன்னைக்கு ஒருத்தவங்க சொல்லுறதை மத்தவங்க கேக்கணும்னு சொன்னேன் தானே!

சப்போஸ் நான் ஊட்டிக்கு வந்து உன் பார்வையில பட்டிருந்தா நீ சொன்னது மாதிரி வாழ்க்கை முழுக்க உன்னை விட்டு விலகியே இருந்திருப்பேன்… ஆனா எல்லையை தாண்டி என்னோட ஊருக்கு, என்னோட ஸ்கூலுக்கு வந்தது நீ தான் துளசி… சோ நீ நான் சொல்லுறதைக் கேட்டுத் தான் ஆகணும்” என்று தெளிவாகக் கூறிவிட்டு அங்கிருந்த சோஃபாவில் கால் மேல் கால் போட்டு சட்டமாக அமர்ந்துக் கொண்டான்.

துளசி அவனை ஏதோ சொல்ல வரும் போது அவளுக்குப் போனில் கால் வரவே தொடுதிரையில் யாரென்றுப் பார்க்க ‘அப்பா’ என்று எழுத்துக்கள் தெரிய போனை எடுத்தவள் “அப்பா” என்று விளிக்க கிருஷ்ணா வாய்க்குள் “ஓ மை காட்! அவரா?“ என்று சொல்லிக் கொண்டான்.

துளசி ஒரு ஓரமாகச் சென்று போனில் உரையாட ஆரம்பிக்க கிருஷ்ணா அவள் பேசுவதைப் பார்த்தபடியே “இந்த மனுசனுக்குச் சும்மாவே நான்னா ஆகாது… இப்போ துளசி கிட்ட எதாவது பேசி அவ மனசைக் குழப்பிட்டாருனா என்ன பண்ணுறது?” என்று யோசிக்க ஆரம்பித்தான்.

அவனது யோசனைக்கு காரணமானவரும் துளசியின் தந்தையுமான ராமமூர்த்தி போனில் மகள் மற்றும் பேத்தியின் நலனை விசாரித்துக் கொண்டிருந்தார்.

சென்ட்ரல் எலக்ட்ரிசிட்டி அத்தாரிட்டியின் அந்தேரி மண்டல அலுவலகத்தில் உயரதிகாரியாகப் பணிபுரிந்து வந்தவருக்குத் தனியாக அங்கே சமாளிக்க முடியாது என்பதால் துணையாக அவரது மனைவி மீராவும் அவருடன் சென்றுவிட துளசி அவள் மகளுடன் சுகன்யா மற்றும் அவளின் அன்னை மீனாவின் துணையுடன் ஊட்டியிலேயே தங்கிவிட்டாள்.

மகள் கிருஷ்ணாவைப் பற்றி சொன்னதும் எடுத்த உடனே வெடிக்க ஆரம்பித்தார் மனிதர்.

“அந்த ராஸ்கல் எதுக்கு இப்போ அங்கே வந்திருக்கான்? துளசிம்மா அப்பா சொல்லுறபடி செய்.. முதல்ல நீ போலீஸ் ஸ்டேசனுக்கு கால் பண்ணு” என்று படபடக்க அவரது மனைவி என்ன இவர் திடீரென்று போலீஸ் அது இது என்று கத்துகிறார் என்று பதற்றத்துடன் அவர் அருகில் வந்து அமர்ந்து கண்ணாலேயே என்னவாயிற்று என்று வினவவும் அவர் மனைவியிடம் பொறுமை காக்கும்படி கூறிவிட்டு மகளிடம் பேச ஆரம்பித்தார்.

“என்ன நினைச்சிட்டிருக்கான் அந்த ராஸ்கல்? பணம் இருந்தா யார் வீட்டுக்குள்ளவும் ஈஸியா போயிடலாம்னு நினைப்பா? லாஸ்ட் டைம் பிரச்சனை நடந்தப்போ நீ சொன்னதுக்காக நான் அவனை விட்டுவச்சேன்.. அதை நம்ம வீக்னெஸ்ஸா நினைக்கிறானா?” என்று அவர் கோபத்துடன் பேசும்போதே மீராவுக்கு அவர் யாரைப் பற்றி பேசுகிறார் என்பது புரிந்தவிட்டது.

இத்தனை வருடத்தில் அவரையும் ஒருவன் கோபப்படுத்தியிருக்கிறான் என்றால் அது கிருஷ்ணா மட்டுமே. அவன் செய்து வைத்தக் காரியங்கள் துளசியின் வாழ்வில் குழப்பத்தை ஏற்பத்தின என்றால் அவனது செய்கைக்கு விளக்கம் கேட்ட ராமமூர்த்திக்கு இன்று வரைக்கும் அதற்கான விடையை அவன் கொடுக்காமல் இருந்தது அவருக்கு எரிச்சலோடு கூடிய கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

அவர் போனில் கத்துவது துளசியிடம் இருந்து சில அடிகள் தூரத்தில் விலகியிருக்கும் கிருஷ்ணாவின் காதில் அரைகுறையாக விழ எழுந்து அவளிடம் சென்றவன் அவள் எதிர்பாராவிதமாகப் போனை அவள் கையிலிருந்து பிடுங்கினான்.

துளசி கோபத்துடன் அவனிடமிருந்து பிடுங்க முயலவும் கிருஷ்ணா அவளைக் குறும்புடன் பார்த்தபடி முத்தமிடுவது போன்று அருகில் வரவே அவள் சட்டென்று பின்னடைந்தாள்.

அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டவன் போனில் “ஹலோ மூர்த்தி அங்கிள் ஹவ் ஆர் யூ? எதுக்கு இந்த வயசான காலத்துல இப்பிடி கோபப்படுறிங்க? உங்கப் பொண்ணை நான் ஒன்னும் கடிச்சு முழுங்கிட மாட்டேன்… பயப்படாதிங்க” என்று இலகுவானக் குரலில் கூற

மறுமுனையில் ராமமூர்த்திக்கு அவனது குரலில் இருந்த இலகுபாவமே காயத்தில் உப்பைத் தடவுவது போல எரிய “யூ ஷட் அப் இடியட்… என் பொண்ணு லெவல் என்ன? உன்னோட லெவல் என்ன? அவ பெயர்ல கூட பவித்திரமானவ… உன்னை மாதிரி ஆளோட பார்வை கூட அவ மேல படக்கூடாது…” என்று படபடக்க கிருஷ்ணாவின் முகம் அதைக் கேட்டு இறுக ஆரம்பித்தது.

வயதில் பெரியவராகப் போய்விட்டாரே என்ற எண்ணத்துடன் தன்னை அமைதிப்படுத்திக் கொண்டவன் “இங்கே பாருங்க அங்கிள்! நீங்க அப்போவும் என்னை தப்பா தான் புரிஞ்சுகிட்டிங்க… இப்போவும் தப்பா தான் புரிஞ்சிட்டிருக்கிங்க” என்று ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது போலவே இப்போதும் அவருக்கு விளக்கம் கொடுக்க முன்வந்தான்.

ஆனால் ராமமூர்த்தி இது எதையுமே கேட்கும் நிலையில் இல்லையே! அவர் இன்னும் எண்ணெயிலிட்டக் கடுகாக வெடிக்க கிருஷ்ணா பொறுக்க முடியாமல் “போதும் அங்கிள்… நீங்க உங்க பொண்ணுக்காகப் பேசுறிங்க… நான் என்னோட பொண்டாட்டிக்காகவும் பொண்ணுக்காகவும் பேசுறேன்.. புரிஞ்சுக்கோங்க” என்று கூற

ராமமூர்த்தி அவனது வார்த்தையில் கோபத்தின் உச்சிக்குச் சென்றவர் “துளசி உன்னோட பொண்டாட்டியும் இல்லை., மித்ரா உன்னோட பொண்ணும் இல்லை கிருஷ்ணா” என்றார் ஆத்திரத்துடன்.

அவர் அருகில் அமர்ந்திருந்த அவரது மனைவியோ கணவரின் இரத்த அழுத்தம் அதிகரித்தால் அதன் விளைவு அவரது உடல்நலத்தை தான் சீர்குலைக்கும் என்று கவலைப்பட ஆரம்பித்தார்.

கிருஷ்ணா நிதானமாக “ஓகே அங்கிள்! ஐ அக்ரீ! துளசி என்னோட ஒய்ப் இல்லை… ஆனா மித்ரா எங்க ரெண்டு பேருக்கும் பிறந்த பொண்ணு தானே.. நான் இங்கே வந்தது துளசியை முறைப்படி என்னோட மனைவியா ஏத்துக்கிட்டு என் ஒய்ப், என் பொண்ணு கூட ஒரு சராசரியான அழகான வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கணும்னு தான்… ஒரு பொண்ணொட அப்பாவா உங்களுக்கு என்னோட நியாயம் புரியும்னு நம்புறேன்… பை” என்று கடினமானக் குரலில் கூறிவிட்டுப் போனை அணைத்து தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

துளசி அவன் கூறிய வார்த்தைகளில் எரிச்சலுற்று நின்றவள் போனுக்காகக் கையை நீட்ட கிருஷ்ணா மறதியாக தனது பாக்கெட்டில் போட்ட அவளது போனை அவள் வசம் ஒப்படைத்தான்.

இறுகியமுகத்துடன் அவளைப் பார்த்தவன் “துளசி நான் இப்போ போறேன்.. ஆறு வருசத்துக்கு முன்னாடி நீ எப்பிடி என்னோட பேச்சைக் காது குடுத்து கேக்கலையோ அதே மாதிரி தான் இப்போவும் நீ பிடிவாதமா என் பேச்சைக் கேக்க மாட்ற… ஆறு வருசத்துக்கு முன்னாடி சின்னப்பொண்ணு, புரிஞ்சுக்கிற பக்குவம் இன்னும் வரலைனு நினைச்சேன்.. ஆனா இப்போவும் அதே மாதிரி சைல்டிஸ்ஸா பிஹேவ் பண்ணுனா, என்னால பொறுமையா இருக்க முடியாது துளசி… சீக்கிரம் நல்ல முடிவா எடு” என்று சொல்லிவிட்டு அந்த ஹாலை விட்டு அகலத் தொடங்கியவன் சட்டென்று நின்றான்.

நின்றவன் திரும்பி துளசியைப் பார்த்தபடி “உங்க அப்பா சொன்னாரு, துளசி அவளோட பெயர்ல கூட பவித்திரத்தைத் தாங்கியிருக்கானு… இந்த கிருஷ்ணாவும் கடந்த ஆறரை வருசமா துளசியை மட்டும் தான் நினைச்சிட்டிருக்கேனு அவரோட பொண்ணுக்கே புரியலைங்கிறப்போ அவருக்கு எப்பிடி புரியப்போகுது?” என்று விரக்தியுடன் கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினான்.

வெளியேறும் போதே இந்த வீட்டில் துளசியுடன் கழித்த இனிய நிகழ்வுகள் அவன் கண் முன் வந்துச் செல்ல, வார்த்தைக்கு வார்த்தை ‘பிரின்ஸ்’ என்று அழைத்தவள் அந்த மோசமானச் சம்பவத்துக்குப் பிறகு தன்னை இவ்வளவு தூரம் வெறுக்கிறாள் என்ற எண்ணமே அவன் மனதை வருத்தியது.

சரியாக ஆறரை வருடங்களுக்கு முன்னர் இதே போல தன்னை வெறுத்த தனது தந்தையை எண்ணிப் பார்த்தவன் பெருமூச்சுடன் காரை எடுத்தான். கோயம்புத்தூர் செல்லும் வழியில் கார் விரையவே கிருஷ்ணாவின் மனம் மட்டும் ஊட்டியிலேயே தங்கிவிட்டது.

அங்கே துளசியோ அவன் சொல்லிவிட்டுச் சென்ற ஆறரை வருடக்கணக்கை யோசிக்க ஆரம்பித்திருந்தாள். அந்த ஆறு மாதங்கள்!! அவள் வாழ்வின் வசந்தகாலமென்று அப்போது அவள் கொண்டாடிய அதே ஆறு மாதங்கள்; தற்போது நினைக்கையில் அவள் வாழ்வின் இருண்டகாலமாகத் தோன்றியது.

ஆனால் அப்போதிருந்தே கிருஷ்ணா தன்னை மட்டும் தான் நேசித்திருக்கிறான் என்ற எண்ணம் துளசியின் நெஞ்சுக்குள் இளந்தென்றலை வீச வைத்தது என்னவோ உண்மை..

அதன் இதத்தை முழுமையாக அனுபவிக்கும் முன்னரே அவளது பாட்டி கோதையின் அறிவுரை நினைவுக்கு வந்தது.

“துளசி குட்டி! வாழ்க்கையில ஒவ்வொரு மனுசனுக்கும் ஒழுக்கம்கிறது ரொம்ப முக்கியம்டா.. உனக்குப் புரியுற மாதிரி சொல்லணும்னா ஒழுக்கம்கிறது மனுச உடம்போட சதையைப் போர்த்தி மூடியிருக்கிற தோல் மாதிரி… அதை நினைச்சா கழட்டி மாட்டுற உடுப்பா நினைக்கக் கூடாதுடா…

ஏன்னா மனுச உடம்புல தோல் மட்டும் இல்லைனா வெறும் ரத்தமும் சதையுமா இருக்கிற உடம்பு பார்க்கறதுக்கு எப்பிடி அருவருப்பா இருக்குமோ அதே மாதிரி தான் ஒழுக்கம் இல்லாத மனுசனும் பார்க்கிறதுக்கு அருவருப்பா தெரிவான்.. அதனால என்னைக்குமே ஒழுக்கத்தை மட்டும் கைவிட்டுடக் கூடாது… சரியா?” என்று அவர் பன்னிரெண்டு வயதில் ஒழுக்கம் என்ற வார்த்தைக்குக் கொடுத்த விளக்கத்தை இன்று வரை எள்ளளவும் மாறாது கடைபிடித்து வருபவள் துளசி.

பிள்ளைகளுக்கு வளரும் போது எந்த நெறிகளைப் போதிக்கிறோமோ அது அவர்களின் நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றன. அந்நெறிகள் தான்  வாழ்வின் சிக்கலான தருணங்களில் அவர்களின் வழிகாட்டியாக மாறுகின்றன.

துளசிக்கும் பாட்டி சிறுவயதில் போதித்த நெறிகள் தான் அவளது வாழ்வின் இருண்டகாலத்தில் கூட அவளை வழிமாறாமல் இருக்க வைத்தது என்றால் மிகையில்லை.

இல்லையென்றால் பிரின்ஸ் பிரின்ஸ் என்று இவள் செய்து வைத்த பைத்தியக்காரத்தனங்கள் எல்லை மீறிச் சென்றிருக்கும். அவ்வாறு தடம்புரளாமல் தன் வாழ்வை அவள் காப்பாற்றிக் கொள்ள கோதை பாட்டியின் அறிவுரைகளே காரணம் என்று இன்றும் அவரை நன்றியோடு நினைத்துக் கொள்வாள் துளசி.

அவரின் மறைவும் அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளும் கண்ணில் நீரை வரவைக்கத் தனது அறைக்குள் சென்றவள் அங்கே புகைப்படமாகத் தொங்கும் கோதை பாட்டியையும் அவருடன் புன்னகை பூத்த முகத்துடன் நின்று கொண்டிருக்கும் அவளைப் பெற்றவர்களான ஜனார்த்தனனையும் ராதாவையும் பார்த்து “பாட்டி, அப்பா, அம்மா! நீங்க மூனு பேரும் இப்போ இருந்திருந்தா நான் இன்னைக்கு இருக்கிற நிலமையைப் பார்த்து கண்ணீர் விட்டு மனக்கஷ்டப்படுவிங்கனு தான் கடவுள் உங்களை என் கிட்ட இருந்துப் பிரிச்சிட்டாரு போல” என்று சொல்ல புகைப்படத்திலிருந்து மூவரும் அவளைப் பார்த்து மவுனமாகப் புன்னகைத்தனர்.

ஆம்! துளசியின் பெற்றோர் ஜனார்த்தனனும் ராதாவும் தான். பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னர் இதே ஊட்டியில் நடந்த கொடும்விபத்தில் ஜனார்த்தனன், ராதாவோடு சேர்ந்து கோதையும் சம்பவ இடத்திலேயே பலியாக ஜனார்த்தனனின் நண்பரான ராமமூர்த்தியும் அவரது மனைவி மீராவும் குழந்தையற்ற தங்களின் வறண்ட வாழ்வை வசந்தமாக்க துளசியைத் தங்கள் பெண்ணாகத் தத்தெடுத்துக் கொண்டனர்.

துளசியைப் பொறுத்தவரைக்கும் பெற்றோரின் அன்புக்குச் சிறிதும் குறைவில்லாத அன்பு ராமமூர்த்தி மற்றும் மீராவினதுடையது. அதனால் தான் இன்றும் அவள் தன்னை துளசி ராமமூர்த்தி என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறாள்.

அவர்களுக்கும் துளசியைப் போல ஒரு அருமையான பெண்குழந்தை மகளாகக் கிடைத்ததில் பெருமை தான். இருவரும் அவளை இளவரசி போல நடத்தியதில் பெற்றோர் மற்றும் பாட்டியின் இழப்பைச் சிறிது சிறிதாக மறக்க ஆரம்பித்தாள் துளசி.

துளசியின் பதினெட்டாவது பிறந்தநாளின் போது தான் சென்ட்ரல் எலக்ட்ரிசிட்டி அத்தாரிட்டியில் ராமமூர்த்திக்கு வேலை கிடைத்தது. அதற்கு முன்னர் குந்தா நீர்மின்சக்தி நிலையத்தில் பொறியியல் பிரிவில் பணிபுரிந்து வந்தவருக்கு அந்தப் பணி கிடைத்தது மிகப்பெரிய விஷயம். மகளையும் மனைவியையும் மும்பைக்கே அழைத்துச் சென்றுவிடுவோம் என்று எண்ணியவருக்கு துளசியின் மறுப்பே பதிலாகக் கிடைத்தது.

துளசி தனக்கு ஊட்டியை விட்டு வர விருப்பமில்லையென்றும், இங்கே தான் தனது பெற்றோர் மற்றும் பாட்டியின் நினைவுகள் நிறைந்திருப்பதாகவும் கூறியவள் தான் தினமும் விபத்தில் பாட்டியும் பெற்றோரும் இறந்த அந்த இடத்திற்குச் சென்று குறைந்தது ஐந்து நிமிடங்களாவது செலவளிக்காமல் வருவதில்லை என்ற தகவலையும் வெளியிட இத்தனை நாட்கள் இது தெரியாமல் இருந்திருக்கோமே என்று ஆச்சரியப்பட்டனர் ராமமூர்த்தியும் மீராவும்.

தினமும் அங்கே சென்று அன்றைய தினம் நடந்தவற்றை பெற்றோரும் பாட்டியும் அங்கே இருப்பதாகப் பாவித்துக் கொண்டு கடகடவென்று ஒப்பித்துவிட்டு தான் திரும்புவாள் அவள். இங்கிருந்து சென்றுவிட்டால் தன்னால் அவர்களிடம் இப்படி பேச முடியாதல்லவா என்று கூறிவிட ராமமூர்த்தியும் மீராவிடம் துளசியை வற்புறுத்த வேண்டாமென்று சொல்லிவிட்டார்.

மீராவுக்கு பதின் வயதில் இருக்கும் மகளைத் தனியாக விட்டுச் செல்வதின் தயக்கம் அகலாமல் இருக்க துளசியின் தோழி சுகன்யாவும், அவளது அன்னை மீனாவும் தான் தாங்கள் துளசியோடு இருந்து அவளைப் பார்த்துக் கொள்கிறோம்; ராமமூர்த்திக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை அவர் இழக்கக் கூடாது என்று சொல்லி இருவருக்கும் தைரியம் கொடுத்தனர். அந்த நம்பிக்கையில் தான் ராமமூர்த்தியும் மீராவும் மும்பைக்கு சென்றனர்.

அவர்கள் சென்ற பின்னர் தான் விதி கிருஷ்ணா என்பவனின் வடிவில் துளசியின் வாழ்வில் தனது முதல் சதுரங்க ஆட்டத்தை ஆட ஆரம்பித்தது.

அதன் பின்னர் நடந்த எதையும் நினைத்துப் பார்க்கப் பிடிக்காதவளாய் துளசி தனது எண்ண ஓட்டத்தைத் திசை மாற்ற முயன்று அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டாள்.

இதை விட்டால் அவள் யாரை பற்றி நினைக்கப் போகிறாள்! அவளது செல்ல மகளைப் பற்றி தான். தன் வாழ்வில் நடந்த அனர்த்தங்கள் அனைத்துக்கும் கடவுளை எங்கே குற்றம்சாட்டி விடுவாளோ என்று பயந்து தான் அனைத்துக்கும் பிராயசித்தமாக அவர் தனக்கு மித்ராவை அளித்துவிட்டார் போலும் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வாள் துளசி. இப்போதும் அப்படி நினைத்தவாறே மகளைத் தேடி தோழியின் வீட்டுக்குச் செல்ல எண்ணினாள் அவள். ஒருவழியாகக் கிருஷ்ணா அங்கிருந்து சென்றுவிட்டதால் பிரச்சனை முடிந்தது என்று எண்ணி நிம்மதியடைந்தவளாய் தோழியின் வீட்டை நோக்கி நடைபோட்டவள் அறியவில்லை அவள் முடிந்ததாய் எண்ணுவது  யாவுமே இப்போது தான் ஆரம்பித்திருக்கிறது என்பதை…..