💗அத்தியாயம் 28💗

துளசியின் திருமணம் முடிந்து மூன்று நாட்களில் ராமமூர்த்தியும் மீராவும் மும்பைக்குச் சென்றுவிட்டனர். வீட்டிலிருந்து கிளம்பும் போதும், காரில் ஏறும் போதும் கூட சாரதாவிடம் துளசியையும் மித்ராவையும் பார்த்துக் கொள்ளும்படி ஆயிரம் முறை கூறிவிட்டுத் தான் சென்றார் மீரா.

தங்களை விமான நிலையம் வரை வழியனுப்ப வந்த மருமகனிடம் “அவ கோவத்துல எதுவும் சொல்லிட்டா நீங்க தப்பா நினைச்சுக்காதிங்க… உங்களுக்குத் தான் அவளைப் பத்தி நல்லா தெரியுமே” என்று வேண்டிய மீராவிடம் துளசியையும் மித்ராவையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்வதாக உறுதி கொடுத்தான் கிருஷ்ணா.   

ராமமூர்த்தி மகளுக்கு அறிவுரை சொல்லவில்லை. அவரைப் பொறுத்தவரைக்கும் அவரது மகளுக்கு யாருடைய அறிவுரையும் தேவை இல்லை. அவளால் அவளது வாழ்வின் சவால்களைச் சமாளிக்க இயலும் என்ற நம்பிக்கையை மட்டும் அவளுக்குக் கொடுத்தவர்

கிருஷ்ணாவிடம் “இங்கே வர்றப்போ உன் மேல எனக்குப் பெருசா நல்ல ஒபினியன் எதுவும் இல்லை… ஆனா இப்போ எனக்குத் தெரிஞ்சவரைக்கும் உன் மேல துளசி சொன்ன கம்ப்ளெயிண்ட் எல்லாம் எனக்கு கருத்து வேறுபாடா மட்டும் தான் தோணுது… உங்க ரெண்டு பேரோட கருத்துவேறுபாட்டுக்கு நீங்க பெரிய விலை குடுத்திட்டிங்க… இனிமே அப்பிடி எதுவும் நடக்காம எந்த பிரச்சனையா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கோங்க” என்று உரைத்துவிட்டு அவன் தோளில் தட்டிவிட்டு மனைவியுடன் விமான நிலையத்துக்குள் சென்றுவிட்டார்.

அந்தக் கணத்தில் கிருஷ்ணா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தன்னை இத்தனை நாட்கள் நம்பாமல் சந்தேகப்பார்வை பார்த்தவரே எவ்வித ஆதாரமுமின்றி தனது அன்றாட செயல்பாடுகளை வைத்தே தனது குணத்தை எடை போட்டுவிட்டார் என்றால் துளசியும் கூடிய சீக்கிரமே தன்னைப் புரிந்து கொள்வாள் என்று எண்ணமே அவனுக்குள் உற்சாக ஊற்றைப் பொங்கியெழச் செய்தது.

துளசியின் விஷயத்தில் கிருஷ்ணாவின் எதிர்பார்ப்பும் பொய்க்கவில்லை. ராமமூர்த்தியும் மீராவும் கிளம்பிய கையோடு மீனாவும் சுகன்யாவை அழைத்துக் கொண்டு அவரது வீட்டுக்குக் கிளம்பிவிட, கிருஷ்ணா இவ்வளவு நாட்கள் துளசியும் சுகன்யாவும் சேர்ந்து உபயோகித்த நானோவைச் சுகன்யாவே வைத்துக் கொள்ளட்டும் என்று கூறிவிட்டான்.

துளசிக்குத் தான் இங்கே இத்தனை கார்கள் உள்ளதே என்ற ஒரே வார்த்தையில் சுகன்யாவின் வாயையும் அடைத்துவிட்டான் அவன். இருந்தாலும் தாங்கள் பயன்படுத்தியக் காரை அவளுக்குக் கொடுக்கும் எண்ணமின்றி துளசிக்காக புதிய காரை வாங்கியவன் வீட்டுப்பெரியவர்களின் அறிவுரைக்கேற்ப அந்தக் காருடன் ஈச்சனாரி வினாயகர் கோவிலில் பூஜை செய்துவிட்டு ஊட்டிக்குக் கொண்டுவந்தான்.

துளசி கார் எல்லாம் வேண்டாம் என்று மறுக்க வாயெடுத்தவள் பின்னர் மாமனாரின் முகத்தைக் கண்டதும் சரியென்று சம்மதித்து கார்ச்சாவியை வாங்கிக் கொண்டாள்.

துளசி தினமும் காலையில் சீக்கிரமாகக் கண் விழிப்பவள் சிறிதுநேரம் வீட்டைச் சுற்றியுள்ள தோட்டத்தில் நடப்பாள். அந்தக் காலை வேளையில் புற்கள் பனியில் நனைந்திருக்க அதில் பாதம் பதித்து நடக்கும் சுகத்தை எக்காரணாத்துக்காகவும் அவள் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.

ரங்கநாயகியும் சுபத்ராவும் பொள்ளாச்சிக்குத் திரும்பும் வரை அவர்களும் அவளுடன் சேர்ந்து அவளுக்குப் போட்டியாக நடப்பார்கள்.  விடிந்தும் விடியாதக் காலை வேளையில் அவர்களுடன் பேசுவது அவளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். இப்போது அவர்களும் பொள்ளாச்சி சென்று விட்டதால், கடந்த ஒரு மாதமாக அவளின் நடைபயிற்சி தனிமையில் தான் கழிந்தது.

பின்னர் மித்ரா விழித்தவுடன் அவளைப் பள்ளிக்குத் தயார் செய்துவிட்டுத் தானும் பொட்டிக் செல்லுவதற்கு தயாராவாள். இந்த நேரத்தில் கிருஷ்ணாவுக்கும் அவளுக்கும் இடையே நிறைய கலாட்டாக்கள் நடைபெறும். எதாவது செய்து அவளைக் கோபப்படுத்தி பார்ப்பதை அவன் வழக்கமாகவே வைத்திருந்தான்.

அவன் செய்யும் குறும்புச்சேட்டைகள் எதையும் துளசியின் குத்தீட்டிப் பார்வையால் குறைக்க இயலவில்லை. இதற்கு பின்னர் காலையுணவை முடித்துவிட்டு மாமனார், சின்ன மாமனார் மற்றும் சின்ன மாமியாரிடம் சொல்லிக் கொண்டு பொட்டிக் கிளம்பிவிடுவாள் துளசி.

அதன் பின்னர் கிருஷ்ணா மித்ராவை அழைத்துக் கொண்டு பள்ளியில் சென்று விட்டுவிட்டு கோயம்புத்தூர் அலுவலகத்துக்குச் சென்றுவிடுவான். சில நாட்களுக்கு முன்னர் மித்ராவைப் பள்ளியில் விடுவதும், மாலையில் அழைத்து வருவதும் சஹானா மற்றும் ராகுலின் வேலையாகத் தான் இருந்தது.

ஆனால் அவர்களும் எத்தனை நாட்கள் தான் ஊட்டியிலேயே தங்கமுடியும். அவர்கள் கோயம்புத்தூர் சென்றதும் மித்ராவின் பொறுப்பு முழுவதையும் கிருஷ்ணா ஏற்றுக்கொண்டான்.

குழந்தையும் அப்பா பாசத்துக்காக ஏங்கியிருந்தவள் கிருஷ்ணாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டே தான் சுற்றுவாள். காலையில் அவனுடன் பள்ளிக்குச் சென்று இறங்கும் போது அவள் முகத்தில் மின்னும் பெருமிதம் ஒன்றே கிருஷ்ணாவுக்கு மனநிறைவை அள்ளித் தந்தது.

மாலையிலும் அவனுக்காகக் காத்திருப்பவள் தாமதமாக வந்தாலும் கோபம் கொள்ளாமல் “அப்பா’ என்ற கூவலுடன் வந்து அவனது காலைக் கட்டிக்கொள்வாள்.

அவனுடன் வீடு திரும்புபவள் துளசி வரும் வரை தாத்தாக்களுடனும் பாட்டியுடனும் அமர்ந்து பள்ளியில் நடந்தது, தாங்கள் வரும் வழியில் பார்த்த நிகழ்வுகளைப் பற்றி பேசிக்கொண்டிருப்பாள். துளசி வந்ததும் சமத்துப்பெண்ணாகப் படிக்க அமர்ந்துவிடுவாள்.

இவ்வாறு கிருஷ்ணா மற்றும் துளசியின் வாழ்க்கை மித்ராவுடன் மிக மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்தது. துளசியும் முன்பு போல கிருஷ்ணாவிடம் எடுத்ததற்கு எல்லாம் சண்டை போடுவதில்லை. குடும்பத்தினரின் பார்வை தங்களைக் கவனிப்பதை அவள் புரிந்து கொண்டதாலா, இல்லை அவளுக்கே அவன் மீது கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கை வந்ததாலா என்பதை கிருஷ்ணா இன்று வரை அறியான்.

இவ்வாறு இருக்கையில் துளசிக்கு கிருஷ்ணாவிடமும் மித்ராவிடமும் ஒரு விஷயத்தில் மட்டும் அதிருப்தி. மித்ரா இயல்பிலேயே கொஞ்சம் பிடிவாதமான குழந்தை தான். ஆனால் துளசியின் பேச்சை அவள் தட்டியதே இல்லை. துளசியுமே அவள் பிடிவாதம் பிடிக்கிறாள் என்பதற்காக அவளது அடத்துக்கு எல்லாம் துணை போவதில்லை.

ஆனால் கிருஷ்ணா அப்படி இல்லையே! தான் சம்பாதிப்பது எல்லாம் மனைவிக்கும் மகளுக்குமே என்ற எண்ணத்தில் மித்ரா கேட்டவற்றையெல்லாம், அது உடையோ, பொம்மையோ, வீடியோ கேமோ எதுவாயினும் அவன் வாங்கிக் குவித்தான் எனலாம். அவை எதையுமே அவன் குறைந்தவிலைக்கு வாங்கியதாகச் சரித்திரம் இல்லை.

துளசி விலையைப் பற்றி பேச ஆரம்பித்தால் “குழந்தையோட சந்தோசத்துக்குப் பிரைஸ் டேக் கிடையாது துளசி… அதுக்காக எவ்ளோ வேணும்னாலும் செலவளிக்கலாம்” என்ற ஒற்றை வார்த்தையில் கிருஷ்ணா அவள் வாயை அடைத்துவிடுவான். மித்ராவும் “நீங்க தான் வேர்ல்ட்லயே பெஸ்ட் அப்பா” என்று சலுகையுடன் அவன் தோளில் சாய்ந்து கதை பேச ஆரம்பித்துவிடுவாள்.

இதற்கு மேல் துளசி என்ற ஒருத்தி அங்கே நின்று கொண்டிருக்கிறாள் என்பதையே இருவரும் கண்டுகொள்ள மாட்டார்கள். கிருஷ்ணா இவ்வளவு செலவளித்துப் பொருட்களை வாங்கிக் கொடுத்தாலும் அவற்றை எல்லாம் மித்ரா ஒரு முறைக்கு மேல் பயன்படுத்துவது கூட கிடையாது.  

சரி பெரியவர்களாவது கண்டிப்பார்கள் என்றால் அவர்களும் பேத்தியின் முகத்தில் சந்தோசத்தைப் பார்ப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருப்பதால் துளசியின் சொல் அம்பலம் ஏறவில்லை.

துளசி கிருஷ்ணாவிடம் “கிரிஷ்! நீ ஓவரா செல்லம் குடுக்கிற… இது மித்ராவுக்கு நல்லது இல்லைடா… அவ இவ்ளோ அடமெண்டா வளர்ந்தா அது அவளோட ஃபியூச்சருக்கு நல்லது இல்லை” என்று பொறுமையாய் எடுத்துக் கூற   

கிருஷ்ணாவோ “மித்ராவுக்குச் செல்லம் குடுக்காம நான் யாருக்குச் செல்லம் குடுப்பேன் துளசி? ஒரு வேளை மித்ராவோட அம்மாவுக்கு அவங்களை நான் செல்லமா பார்த்துக்கலைனு வருத்தமோ?” என்று புருவம் உயர்த்தி கேலியாய் வினவ, அவனது தோளில் பட்டென்று ஒரு அடி போட்ட துளசி

“விளையாடாதே கிரிஷ்… நான் சீரியஸா பேசிட்டிருக்கேன்” என்று சீற்றத்துடன் உரைக்கவே

கிருஷ்ணா கிண்டலாகப் பார்த்தபடி “நானும் சீரியஸா தான் பேசுறேன்.. வேணும்னா சொல்லு, உன்னையும் மித்தி குட்டியை கொஞ்சுற மாதிரி கொஞ்சுறேன்” என்று சொல்லிவிட்டு அவளது மூக்கைச் செல்லமாக நிமிண்டிவிட்டு அகன்றான் அவன்.

இவன் குழந்தைக்கு மேலே இருக்கிறான் என்று அலுத்துக் கொண்டாள் துளசி. அன்று இரவு வழக்கம் போல போன் செய்த தந்தையிடம் அதைச் சொல்லி துளசி புலம்பவும்

ராமமூர்த்தி “எல்லா அப்பாக்கும் அவங்க பொண்ணு தான்டா ஃபர்ஸ்ட் பிரையாரிட்டி… அவளுக்காக எதையும் செய்யத் தயாரா இருப்பாங்க… அவ வானத்துல இருக்கிற நட்சத்திரம் வேணும்னு கேட்டா நிலாவையே கொண்டு வர்றவன் தான் நல்ல தகப்பன்.. ஃபைனலி கிருஷ்ணா ஒரு நல்ல அப்பாவா ப்ரமோட் ஆயிட்டான்” என்று சிலாகிக்க    

துளசி “நீங்களுமாப்பா? ஓகே நீங்க சொல்லுறதை நான் ஒத்துக்கிறேன்… ஆனா அந்த குழந்தை கேட்ட நட்சத்திரத்துக்குப் பதிலா நிலாவைத் தான் கொண்டுவரணும்னு இல்லையே! மின்மினிபூச்சி கூட நட்சத்திரத்துக்குச் சமமான சந்தோசத்தைக் குழந்தைக்குக் குடுக்குமே…

கிருஷ்ணாவுக்கு ஒரு விஷயம் புரியலை. குழந்தையோட ஆசை நிலாவோட நிக்காது, அதையும் தாண்டிப் போகும்னு… இந்த வயசுக்குக் கேட்டதுலாம் கைக்கு கிடைச்சா குழந்தைங்க மனசுல இந்த உலகத்துல எல்லாமே சுலபமா கிடைச்சுடும் போலனு ஒரு எண்ணம் வந்துடும்… அது கிடைக்காத பட்சத்துல அவங்க பிடிவாதமும், முரட்டுத்தனமும் தான் அதிகமாகும்… இதைச் சொன்னா கிருஷ்ணா என்னைக் கிண்டல் பண்ணுறான்” என்று மனத்தாங்கலுடன் பேசி முடித்தாள்.

தந்தையிடம் பேசிவிட்டுத் தங்களின் அறைக்குச் செல்லும் போது மித்ராவின் அறையில் சாரதா அவளுக்குக் கதை சொல்லிக் கொண்டிருப்பது துளசியின் காதில் விழுந்தது.

மித்ரா அவளது பாட்டியிடம் “அப்போ நான் பிரின்சஸ் மாதிரி வளரக்கூடாதா பாட்டி?” என்று கேட்க ‘பிரின்சஸ்’ என்ற வார்த்தை துளசியின் உள்ளத்தில் முணுக் முணுக்கென்று ஒரு வலியை உண்டாக்கிவிட்டு மறைந்தது.

சாரதா அவள் கேட்ட கேள்விக்கு “ம்ஹூம்! நீ பிரின்சஸ் மாதிரி அலங்காரப்பொம்மையா வளருறதை விட குயின் மாதிரி கம்பீரமா, தைரியமானவளா வளரணும் மித்தி குட்டி” என்று சொன்னது தனக்கே சொன்னது போலத் தோன்றியது துளசிக்கு.

தன்னால் இதற்கு மேல் அவ்வாறு இருக்க முடியுமா என்று துளசிக்குத் தெரியவில்லை. ஆனால் தன் மகள் நிச்சயமாக ஒரு அரசியின் தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் வளர்வாள் என்ற நம்பிக்கை அவள் முகத்தில் புன்னகை கீற்றைத் தோற்றுவித்தது.

அதே புன்னகையுடன் தங்களின் அறைக்குள் காலடி எடுத்து வைத்தவள் அங்கே தலையைத் தடவியபடி லேப்டாப்பின் திரையில் கண் பதித்திருந்த கிருஷ்ணாவைக் கண்டதும் இவனுக்கு என்னவாயிற்று என்று எண்ணியபடி அவனிடம் சென்றாள்.

இப்போதெல்லாம் அவர்கள் சகஜமாகப் பேசிக்கொள்வது வழக்கமாகிவிட்டதால் “என் தலையைப் பிடிச்சிட்டு உக்காந்துருக்க கிரிஷ்?” என்றபடி விரிப்பைச் சரிசெய்தாள் துளசி.

கிருஷ்ணா லேப்டாப் திரையிலிருந்து கண்ணை விலக்காமல் “தலை வலிக்குது” என்று உரைத்துவிட்டு மீண்டும் வேலையில் கண்ணானான்.

துளசி அவனது விரல்கள் நெற்றியைப் பிடித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தவள் “கீழே போய் கண்ணம்மா கிட்ட காபி போடச் சொல்லி எடுத்துட்டு வருவோம்” என்ற எண்ணத்துடன் சமையலறையை நோக்கிச் சென்றாள்.

ஆனால் கண்ணம்மா, அவர் தான் அந்த வீட்டின் முக்கியப்பணியாளர், அன்று சீக்கிரமாகவே அவரது வீட்டுக்குச் சென்றுவிட்டார். அவரைக் காணாது திகைத்த துளசி வேறு வழியின்றி தன் கையாலே கிருஷ்ணாவுக்கு காபி போட்டு எடுத்துச் சென்றாள்.

அவர்களின் அறைக்குள் நுழைந்தவள் அவன் முன்னே சென்று ஆவி பறக்கும் கோப்பையை நீட்ட கிருஷ்ணா காபியின் நறுமணத்தில் நிமிர்ந்து பார்த்தவன் ஆச்சரியப்பட்டுப் போனான்.

அவன் விழித்தபடி காபியை வாங்காமலிருக்கவும் துளசி அவனது நெற்றியில் புரண்ட கேசத்தை ஒதுக்கிவிட்டு இதமான சூடுடன் இருந்த கோப்பையை நெற்றிப்பொட்டுகளில் வைத்துவிட அந்த கோப்பையின் சூடு மெதுவாக தலைவலியைக் குறைப்பது போன்ற பிரம்மை கிருஷ்ணாவுக்கு.

துளசி “இது அப்பா சொல்லிக் குடுத்த டெக்னிக்.. கம்மி சூட்டுல உள்ள காபி கப்பை இப்பிடி நெத்தியில ஒத்தி எடுத்தா தலைவலி கொஞ்சம் குறையும்.. காபியும் குடிக்கிற சூட்டுக்கு வந்துடும்னு விளையாட்டா சொல்லுவாரு” என்றபடி அவனிடம் கோப்பையை நீட்டினாள்.

கிருஷ்ணாவோ அவள் பச்சைத்தண்ணீர் கொடுத்தாலே பாயாசமாக எண்ணிக் குடிப்பவன் இன்று அவள் தனக்காக மணக்க மணக்கப் போட்டு எடுத்துவந்த காபியையா விட்டு வைப்பான்! துளசி நீட்டிய கோப்பையை வாங்கியவன் ஒரே மடக்கில் சொட்டு விடாமல் குடித்துவிட்டான்.

கோப்பையை வாங்கிக்கொண்ட துளசி சமையலறையில் அதை அலம்பிவைத்துவிட்டுத் திரும்பும் போதும் கிருஷ்ணா லேப்டாப்பின் திரையிலேயே கவனமாக இருக்க துளசிக்கு வந்த கடுப்புக்கு அளவே இல்லை.

வேகமாக அவன் அருகில் சென்றவள் லேப்டாப்பை மூடிவிட்டு “ஒழுங்கா தூங்கு கிரிஷ்… நீ ரொம்ப நேரம் முழிச்சிருக்கப்போய் தான் உனக்கு தலைவலி வருது” என்று அதட்ட

கிருஷ்ணா அவளது அக்கறையில் நெகிழ்ந்து போனதைக் காட்டிக் கொள்ளாதவனாய் “என்ன திடீர்னு உனக்கு என் மேல இவ்ளோ அக்கறை?” என்று புருவம் உயர்த்தி வினவ

துளசி அலட்சிபாவனையுடம் அவனது லேப்டாப்பை மேஜையின் மீது வைத்துவிட்டு “அக்கறையும் இல்லை, சக்கரையும் இல்லை… நீ இப்பிடி லைட்ட போட்டு வச்சிட்டிருந்தா நான் எப்போ தூங்குறது?” என்று ஒருவாறு சமாளிக்க

கிருஷ்ணா “நீ சொன்னா நான் நம்புவேன் துளசி” என்று பொய்யாய் மெச்சுதல் பார்வை பார்த்தபடி படுக்கையில் விழுந்து கண் மூடிக்கொண்டான். காபி குடித்ததால் உறக்கம் தான் வருவேனா என்று அடம்பிடித்தது.

துளசி அவன் கண் மூடி உறங்க முயலுவதைப் பார்த்தபடி விளக்கை அணைத்தாள். அன்று அவள் படுத்ததும் உறங்கிவிட கிருஷ்ணாவுக்குத் தான் உறக்கம் வரவில்லை.

அது துளசியின் அக்கறை மனதுக்குள் ஏற்படுத்திய மாற்றமா அல்லது அவள் கையால் கொடுத்த காபி உடலுக்குள் ஏற்படுத்திய மாற்றமா என்று அவனுக்குப் புரியவில்லை. துளசி ஏதோ ஒரு வகையில் தன்னை மனதளவில் நெருங்கிவருவதைப் புரிந்துகொண்டவன் அந்த புரிதலோடு விழி மூடி நித்திராலோகத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்தான்.

வாகனங்களின் பக்கவாட்டுக் கண்ணாடிகளில் அருகில் இருப்பது போலத் தோன்றும் மற்ற வாகனங்களின் பிம்பங்கள், அருகே வரும் போது உண்மையாகவே அந்த வாகனம் நம் வாகனத்தைவிட்டு விலகித் தான் போயிருக்கும்.. இதைப் போலத் தான் கிருஷ்ணாவின் மனம் துளசி அவனை நெருங்குகிறாள் என்ற பிம்பத்தை அவனுக்கு ஏற்படுத்திவிட்டது. ஆனால் உண்மை யாதெனில் அவள் அவனை விட்டு இன்னும் விலகித் தான் இருந்தாள்.