💗அத்தியாயம் 25💗

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

எல்க் மலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில்…

குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கிணங்க எல்க் மலை எனும் குன்றில் குறிஞ்சிக்கடவுளான முருகனின் நாற்பது அடி சிலையுடன் பச்சைப்பசேல் என்ற ரம்மியமான சூழலில் அமைந்திருந்தது அத்திருத்தலம்.

மணக்கோலத்தில் குமரக்கடவுளைக் கண்ணாரத் தரிசித்துக் கொண்டிருந்தனர் துளசியும் கிருஷ்ணாவும். இவ்வளவு நேரம் இடைவெளிவிட்டு நின்றவர்கள் அர்ச்சகர் மாலையை மாற்றிக்கொள்ளும் படி கூறவும் இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்கினர்.

வீட்டின் மூத்தப் பெண்மணிகளான சுபத்ராவும் ரங்கநாயகியும் பேரனின் கல்யாணவைபோகத்தைக் காண ஆவலுடன் நின்று கொண்டிருந்தனர். மனதுக்குள் முருகனிடம் இனியாவது எல்லாம் நல்லபடியாக நடக்கவேண்டும் என்று வேண்டுதல் வைக்கவும் தவறவில்லை அவர்கள்.

ராகவேந்திரனும், விஜயேந்திரனும் ராமமூர்த்தியுடன் சேர்ந்து பயபக்தியுடன் முருகனை வேண்டியபடி சன்னிதானத்தில் நின்று தத்தம் மக்களின் திருமணக்கோலத்தை மனமகிழ்வுடன் பார்த்துக் கொண்டிருக்க, மீராவும் சாரதாவும் கண்ணில் துளிர்த்த நீரைச் சந்தோசத்துடன் சுண்டிவிட்டுக் கொண்டனர். மீனா தான் பெறாத மகள் அவளது வருங்காலக்கணவனுக்கு மாலையிடப் போகும் அழகை நெகிழ்ச்சியுடன் கண்டு ரசித்துக் கொண்டிருந்தார்.

சஹானாவும் சுகன்யாவும் மித்ராவுடன் சேர்ந்து திருமண வைபவத்தைக் கண்டுகளித்துக்கொண்டிருக்க, ராகுலும் விஷ்வாவும் கிருஷ்ணாவைக் கேலி செய்தபடி இந்நிகழ்வுகளை வீடியோவாகப் பதிவு செய்து கொண்டிருந்தனர்.   

துளசி தன் எதிரே பட்டு வேஷ்டி சட்டையில் நெற்றியில் திருநீற்றுக்கீற்றுடன் இதழில் மந்தகாசப்புன்னகையுடன் நின்றவனின் தோற்றத்தை மனதில் நிரப்பிக் கொண்டவள், முருகனிடம் இத்திருமண வாழ்வில் தங்களுக்குள் எந்தப் புதுவகையானக் குழப்பங்களும் வந்துவிடக் கூடாது என்று வேண்டியபடி கிருஷ்ணாவின் கழுத்தில் மாலையிட்டாள்.

கிருஷ்ணா தன்னெதிரே அழகுச்சிலைக்கு உயிர் வந்ததோ என்றெண்ணும் படி பட்டாடையில் மின்னியபடி நின்றவளின் அழகில் மதிமயங்கி, அவளது கழுத்தில் மாலையைப் போட்டவனின் விரல்கள் துளசியின் கழுத்தை மாலையிடும் சாக்கில் வருடிவிட துளசி ஏறிட்டு முறைத்ததை அவன் கண்டுகொள்ளவே இல்லையே.

அர்ச்சகர் மாங்கல்யத்துடன் வந்தவர் முருகப்பெருமானை வேண்டியபடி கிருஷ்ணாவிடம் நீட்ட, அவன் அதை நடுங்கும் விரல்களால் வாங்கிக்கொண்டவன் துளசியை ஒரு கணம் பார்த்துவிட்டு மித்ராவின் புறம் திரும்ப, அச்சிறுமி மகிழ்ச்சியுடன் கட்டைவிரலை தந்தைக்கு உயர்த்திக் காட்டவும் அவளைப் பார்த்துப் புன்னகைத்தபடி துளசியின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்தான் அவன்.

இருகுடும்பத்தினரின் மனம்நிறைந்த ஆசிகளுடன் அட்சதைப்பூக்கள் விழ, நண்பர்கள் சூழ ஆறுமுகக்கடவுளின் சன்னதியில் துளசியைத் தன் சரிபாதி ஆக்கிக் கொண்டான் கிருஷ்ணா.

துளசி தனது கழுத்தில் அந்த மாங்கல்யம் விழுந்த கணத்தில் தலை நிமிர்த்தியவள் தன் எதிரே நின்று தன் கழுத்தில் மூன்று முடிச்சிட்டுக் கொண்டிருந்தவனின் விழியில் தெரிந்த காதலில் அவர்களின் அத்துணை கருத்துவேறுபாடுகள், கசப்புணர்வுகளை மறந்தவள் அவள் மனதில் மறைந்திருந்த காதல் முகத்தில் மின்னிட, புன்னகையுடன் கிருஷ்ணாவைப் பார்த்தபடி மாங்கல்யத்தை மனதாற ஏற்றுக் கொண்டாள்.

இருவருக்கும் அட்சதை தூவி ஆசிர்வதித்தார் அர்ச்சகர். அதன் பின்னர் இருவரும் மீண்டும் ஒரு முறை முருகனை மனதாற வேண்டிக்கொண்டனர். அதன் பின் வீட்டின் மூத்தப்பெண்மணிகளின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர் இருவரும்.

ரங்கநாயகியும் சுபத்ராவும் தங்களின் காலில் விழுந்தவர்களை பூரித்த உள்ளத்துடன் ஆசிர்வதித்தவர்கள் “அம்மாடி துளசி! எந்தப் பிரச்சனையா இருந்தாலும் ரெண்டு பேரும் பேசி தீர்த்துக்கோங்கடா… பிரிவு எதுக்கும் தீர்வாகாது… கிருஷ்ணா! நீ உன்னோட எந்த பொறுப்பையும் தட்டிக் கழிச்சதில்லை… அதே மாதிரி உன்னோட பொண்டாட்டியையும் பொண்ணையும் யாருக்காகவும் எதுக்காவும் விட்டுக்குடுத்துடக் கூடாதுடா… எல்லாரையும் விட்டுட்டு உனக்காக வந்தவங்கங்கிறதை மறந்துடாதேடா” என்று இருவருக்கும் அறிவுரை வழங்கி வாழ்த்த மணமக்கள் தலையாட்டி அதைக் கேட்டுக்கொண்டனர். 

அடுத்துப் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிகொண்டவர்களை ராகுல் மணக்கோலத்தில் புகைப்படம் எடுக்க வேண்டுமென்று கூறவும், சஹானா நாற்பது அடி முருகன் சிலையைக் காட்டி அங்கே எடுக்கலாம் என்று யோசனை கூற, மகளின் கரத்தைப் பற்றிக்கொண்டபடி துளசியுடன் அங்கே நடைபோட்டான் கிருஷ்ணா.

மகளுடன் சேர்ந்து முருகன் சிலை அருகில் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அடுத்து அனைவரும் குடும்பத்துடன் ஒன்றாகச் சேர்ந்து நிற்கும் அழகிய தருணத்தைக் கோயிலுக்குச் சுவாமிதரிசனத்துக்கு வந்த ஒரு பக்தர் ராகுலின் மொபைலில் படம் பிடித்துக் கொடுத்தார். 

திருமணம் இனிதே நிறைவுற்றதில் இருகுடும்பத்தினருக்கும் பெருத்த நிம்மதி. ராமமூர்த்தி ராகவேந்திரனிடமும், மீரா சாரதா மற்றும் விஜயேந்திரனிடமும் துளசியையும் மித்ராவையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறு வேண்டிக்கொண்டனர்.

மூவருமே துளசியும் சஹானாவைப் போலத் தங்களின் மகள் தான் என்று ஒரே குரலில் கூறிவிடவே ராமமூர்த்தி மீராவுடன் மீனாவும் நிம்மதியடைந்தார்.

அதன் பின்னர் மற்றச் சம்பிரதாயங்களை நிறைவேற்ற அனைவரும் கிருஷ்ணாவின் எஸ்டேட் பங்களாவை நோக்கிச் சென்றனர். திருமணத்துக்குப் பின்னர் முதல் முறையாக அங்கே காலடி எடுத்து வைக்கும் துளசியை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றார் சாரதா. மித்ராவைக் கிருஷ்ணா தூக்கிக்கொள்ளவும் மகள் மற்றும் கணவன் சகிதம் தனது வலதுகாலை எடுத்து வைத்து அந்தப் பங்களாவுக்குள் நுழைந்தாள் துளசி.

அவளைத் தொடர்ந்து சஹானாவுடன் பேசியபடி சுகன்யாவும் மீனாவும் வர, ராகுலுடனும் விஷ்வாவுடனும் பேச்சு கொடுத்தவாறு ராமமூர்த்தியும் மீராவும் வந்தனர்.            

துளசியை பூஜையறையில் விளக்கேற்ற சொன்னார் சாரதா. அதன் பின்னர் நடக்கவேண்டிய சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் செய்ய வைக்கிறேன் பேர்வழி என்று கிருஷ்ணாவையும் துளசியையும் சஹானாவும் ராகுலும் போட்டுப் படுத்தியெடுக்க, சுகன்யாவும் அதில் உற்சாகத்துடனே கலந்து கொண்டாள்.

குடத்தில் மோதிரத்தையிட்டு எடுக்கச் செய்யும் சடங்கில் துளசியின் கையில் மோதிரம் தட்டுப்படுவேனா என்று அடம்பிடிக்க, கிருஷ்ணா அவளை நோக்கிக் கேலிப்புன்னகை செய்ததில் இவ்வளவு நேரம் விதியே என்று சடங்குகளில் கலந்து கொண்டவள் அவனது கேலியில் சீண்டப்பட்டவளாய் அவளும் ஆர்வத்துடன் தேட ஆரம்பித்தாள்.

இவ்வாறு ஒவ்வொரு சடங்கிலும் அவளைச் சீண்டிவிட்டு உற்சாகத்துடன் கலந்து கொள்ளவைத்தான் அவன். பெரியவர்கள் இதைக் கண்டும் காணாதது போல இருந்துவிட சஹானா இதை ராகுலிடம் சுட்டிக்காட்டி நமட்டுச்சிரிப்புடன் உலா வந்தாள்.

ஒரு பக்கம் குடும்பத்தினருக்காகத் தடபுடலான விருந்தும் தயாராகிக் கொண்டிருந்தது. துளசி மீராவிடம் கேட்டுவிட்டு கழுத்தில் அணிந்திருந்த மாலையைக் கழற்றிவிட்டு பட்டுப்புடவை மற்றும் அணிகலன்களின்   நடுநாயகமாக தாலிச்சரடு மின்ன சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

தனக்கு எதிரே சற்று தள்ளி போடப்பட்டிருந்த இருக்கையில் மகளுடன் அமர்ந்திருந்த கிருஷ்ணாவைக் கண்டதும் கோயிலில் அவன் கண்ணிலிருந்த காதல் இப்போதும் அவள் நினைவில் தோன்றி அவள் நெஞ்சை குளிர வைத்தது.

கிருஷ்ணாவும் மித்ராவை மடியில் இருத்திக்கொண்டவன், ராகுல் மற்றும் விஷ்வாவுடன் சேர்ந்து ராமமூர்த்திக்குச் சமாதான தூது அனுப்பிக் கொண்டிருந்தான்.

சஹானாவும் சுகன்யாவும் மீரா, மீனா மற்றும் சாரதாவுக்கு விருந்து சமைப்பதில் கூடமாட உதவிக்கொண்டிருந்தனர்.

துளசி மட்டும் தனித்துவிடப்பட அவளருகில் வந்து அமர்ந்தனர் இரு மூதாட்டிகளும். அவர்களைக் கண்டதும் துளசி மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்கவே அவளது கரத்தைப் பற்றி தங்களருகில் அமர்த்திக் கொண்டனர்.

துளசி தயக்கத்துடன் அமரவே இருவரும் அவளிடம் கலகலப்பாக உரையாட ஆரம்பித்தனர்.

துளசி இன்னும் இயல்பாகப் பேசத் தயங்கவே ரங்கநாயகி “என்னடா இவங்க இப்பிடி இழுத்து வச்சுப்பேசுறாங்களேனு யோசிக்காதே… நீயும் சஹா மாதிரி எங்களுக்குப் பேத்தி தான்… உங்க பாட்டி பத்தி நீ ரொம்ப பெருமையா பேசுவேனு கிருஷ்ணா அடிக்கடி சொல்லுவான்… நாங்க ரெண்டு பேரும் உன்னோட பாட்டி மாதிரி தான்” என்று சொல்லவும் அவளுக்கு இவ்வளவு நேரம் இருந்த தயக்கம் அகல அவர்களுடன் உரையாட ஆரம்பித்தாள்.

நேரம் போனதே தெரியாமல் உரையாடல் நீண்டு கொண்டிருக்க, மீரா விருந்து தயார் என்று அனைவரையும் சாப்பிட அழைத்தார். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர, சதிபதி இருவரும் அருகருகே அமரவைக்கப்பட்டனர்.

சாப்பிட்டு முடிப்பதற்குள் இளையவர்களின் கலாட்டாவில் துளசி களைத்துப் போய்விட்டாள். இவ்வளவு நேரம் இருந்த மனநிலை மாறிவிட, இருவரையும் மாறி மாறி ஊட்டிவிடச் சொல்லி அவர்கள் அடித்த லூட்டியில் அவள் மிகவும் சிரமத்துடன் பொறுமையை இழுத்துப்பிடித்து வைத்துக்கொண்டாள்.   

இளையவர்களின் சேட்டைகள் மாலை வரை நீண்டது. மீரா துளசியின் உடைமைகளைக் கிருஷ்ணாவின் அறையில் வைக்கச் சொல்லிவிட பணியாட்கள் அவளது பெட்டியை கிருஷ்ணாவின் அறையை நோக்கி எடுத்துச் சென்றனர். அதே நேரம் மித்ராவுக்குத் தனியறை என்று சொன்னது தான் துளசிக்கு மனம் ஒப்பவில்லை.

“அவ சின்னப்பொண்ணு தானே அத்தை! என் கூடவே இருக்கட்டுமே” என்று அவள் மறுப்பு தெரிவிக்கத் தயாராகும் போதே கிருஷ்ணாவின் குரல் தெளிவாக அவள் காதில் விழுந்தது.

“என் பொண்ணு தன்னம்பிக்கையோட வளரணும்னு நான் ஆசைப்படுறேன்…. இருபத்து நாலு மணிநேரமும் அம்மா முந்தானையைப் பிடிச்சுட்டே அவ சுத்துனா எப்பிடி அவளுக்கு இந்த உலகத்தை ஃபேஸ் பண்ணுற தைரியம் வரும்?”

“ஆறு வயசு பொண்ணுக்கு எவ்ளோ தைரியம் இருக்கணுமோ அது மித்ராவுக்கு ஏற்கெனவே இருக்கு… நீ என்ன புதுசா ஏதோ சொல்லுற கிரிஷ்?”

இருவரும் வாதம் செய்வதைப் பார்த்துவிட்டு அவர்களே பேசி முடிவுக்கு வரட்டும் என்று எண்ணியவராய் அங்கிருந்து மெதுவாக நழுவினார் சாரதா.

கிருஷ்ணா இந்த விஷயத்தில் பிடிவாதமாய் “உன் இஷ்டத்துக்கு நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ துளசி.. ஆனா மித்ராவுக்கு இனிமே தனி ரூம் தான்.. நீ இன்னும் அவளை கைக்குழந்தையா டிரீட் பண்ணுறது அவளுக்கு நல்லது இல்லை” என்று முடிவாய்ச் சொல்லிவிட்டு நகர்ந்தான்.

துளசி நேரடியாக மகளிடம் இது பற்றிக் கேட்கலாம் என்று எண்ணிச் சென்றவள் அங்கே மீராவிடமும், ராமமூர்த்தியிடமும் மித்ரா தனது புதிய அறையைப் பற்றி ஆர்வம் மின்ன சொல்லிக்கொண்டிருப்பதைக் கேட்டுவிட்டாள்.

“அங்கே சோட்டாபீம், மோட்டு பட்லு பிக்சர்லாம் வரைஞ்சிருக்கு தாத்தா.. எனக்குப் பிடிச்ச பிங்க் டெடியும் இருக்கு.. அப்புறம் மாதிரியே ஒரு குட்டி ஏஞ்சல் பொம்மை இருக்கு… அவளுக்கு நான் தான் டெய்லி சாப்பாடு ஊட்டிவிட்டு கவனிச்சுக்கணுமாம்… அப்பா சொன்னாங்க”

இதற்கு மேல் அவளிடம் பேசுவது வீண் என்று புரிந்து கொண்டவள் அப்படி என்ன தான் இவனிடம் இருக்கிறது என்று அவனிடம் அனைவரும் பசை போட்ட மாதிரி ஒட்டிக்கொள்கின்றனர் என்று எண்ணியவளாய் கிருஷ்ணாவை நோக்கினாள்.

அங்கே இரு குடும்பத்தார் மத்தியில் அமர்ந்தபடி இவ்வளவு நாட்கள் முகம் கொடுத்துக் கூடப் பேசாமல் இருந்த ராமமூர்த்தியையே சகஜமாக உரையாட வைத்துவிட்டச் சந்தோசத்துடன் முகம் விகசிக்கப் பேசிக்கொண்டிருந்தவனின் சிரிப்பில் அவளே ஒரு நொடி மயங்கித் தான் போனாள்.

அவனை வெறுக்கும் தானே இப்படி மயங்கினால், மற்றவர்கள் அவன் பேச்சிலும் புன்னகையில் கவிழாமல் போனால் தான் ஆச்சரியம் என்று எண்ணிக் கொண்டாள் துளசி.

மாலையில் கதிரவன் மறைய ஆரம்பிக்கவும் துளசியை சாரதா  பூஜையறையில் விளக்கேற்றுமாறு கூற அவளும் அவர் சொன்னபடி செய்துவிட்டு இரண்டு நிமிடம் கண் மூடி வணங்கிவிட்டு பூஜையறையை விட்டு சாரதாவுடன் வெளியேறினாள்.

சாரதாவிடம் “அத்தை எனக்கு இந்த சில்க் ஷாரி கட்டியிருக்கிறது கம்ஃபர்டபிளா இல்லை… நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கவா?” என்று கேட்க அவரும் சரியென்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

மீரா துளசி செல்வதைப் பார்த்தவர் சாரதாவிடம் “அண்ணி! இன்னைக்குச் சடங்கு இன்னும் பாக்கியிருக்குல்ல… அவளை வேற நல்ல புடவை கட்டி ரெடி பண்ணவா?” என்று மெதுவாகக் கேட்க

சாரதா “இல்லை அண்ணி! கிருஷ்ணா இப்போதைக்கு துளசி இருக்கிற மனநிலையில இதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டான்.. எனக்கும் அது தான் சரினு பட்டுச்சு… அத்தையும் அம்மாவும் கூட அதான் வாழ்நாள் முழுக்க சேர்ந்து தானே இருக்கப்போறாங்கனு சுலபமா சொல்லிட்டாங்க… அதனால துளசி போய் ரெஸ்ட் எடுக்கட்டும்… எல்லாத்துக்கும் காலம் நேரம் கூடி வரணுமில்லையா?” என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

சாரதா சொன்னபடியே கிருஷ்ணாவுக்கு அவனது பழைய துளசியைப் பார்த்த பிறகு தான் தனது காதல் முழுமை பெறும் என்ற எண்ணம் அவனது நெஞ்சத்தில் ஆழ்ந்து பதிந்துவிட்டது. என்று அவள் தன்னை முழுவதுமாக நம்பி அவன் வசம் வருகிறாளோ அன்று தான் அவர்களது இனிய இல்லறம் ஆரம்பமாக வேண்டுமென்பதில் அவன் தெளிவாக இருந்தான். அவனது பேச்சை மீறும் எண்ணம் அவன் குடும்பத்தாருக்கு இல்லாததால் முடிந்தவரை அவர்களும் துளசி மற்றும் கிருஷ்ணாவின் சொந்த விஷயத்தில் தலையிட விரும்பவில்லை.

அனைவரும் ஹாலில் கிருஷ்ணாவுடன் பேசிக்கொண்டிருக்க துளசி மாடிப்படி ஏறியவள் நீண்டநாளுக்குப் பின்னர் அந்த மாடி வராண்டாவைக் கண்டு பழைய நிகழ்வுகளின் நினைவில் உணர்ச்சிவசப்பட்டவளாய் கிருஷ்ணாவின் அறைக்குள் நுழைந்தாள்.

தனது பெட்டியிலிருந்து மாற்றுடையை எடுத்தவள் அலுப்புத் தீர குளித்துவிட்டு அதை அணிந்து கொண்டாள். பின்னர் கீழே செல்ல விரும்பாதவளாய் அந்த மாடி வராண்டாவில் கிடந்த இருக்கையிலேயே அமர்ந்துவிட்டாள்.

அங்கே வீசிய குளிர்க்காற்றில் இலயித்தவள் தன்னையறியாது கண்ணயர்ந்தாள்.

கீழே அனைவரும் நேரம் போவதே தெரியாமல் ஆறரை வருடக்கதையையும் பேசிக் கொண்டிருக்க, சஹானா பேச்சுவாக்கிலேயே மித்ராவுக்கு இரவுணவை ஊட்டி முடித்தாள். சாப்பாடு உள்ளே சென்றதும் குழந்தைக்கு உறக்கம் கண்களைத் தழுவ, ராகுல் அவளைத் தூக்கிக்கொள்ள அவனுடன் மித்ராவின் அறைக்குச் சென்று குழந்தையைப் படுக்கவைத்து போர்வையை மூடிவிட்டாள் சஹானா.

அவளது முன்நெற்றி கூந்தலை ஒதுக்கிவிட்டு முத்தமிட்டவள் மறக்காமல் மின்சாரக்கணப்பைப் போட்டுவிட்டு ராகுலுடன் அந்த அறையை விட்டு அகன்றாள். மித்ராவும் மெத்தை கொடுத்த சுகத்தில் ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்றுவிட்டாள்.

கிருஷ்ணா இரவுணவுக்குத் துளசியைத் தேட, சாரதா அவள் கிருஷ்ணாவின் அறைக்குச் சென்று நீண்டநேரமாகிவிட்டது என்று கூறவே அவன் தானே சென்று அவளை அழைத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு மற்றவர்களைச் சாப்பிடச் சொன்னவன் மாடியை நோக்கிச் சென்றான்.

மாடியை அடைந்தவன் வராண்டாவில் கிடந்த இருக்கையில் சாய்ந்து கண் மூடியிருந்தவளைக் கண்டதும் அவனை அறியாது அவன் கரங்கள் அவளை அணைக்கத் துடித்தன. அந்நேரத்தில் அவனது மூளையில் ஒரு யோசனை உதயமாகவே, விறுவிறுவென்று கீழே சென்றான் அவன்.

அங்கே உணவருந்திக் கொண்டிருக்கும் குடும்பத்தினரிடம் “துளசி தூங்கிட்டா… சித்தி நான் அவளுக்கும் எனக்கும் சாப்பாடு எடுத்துட்டுப் போறேன்… நீங்க எல்லாரும் சாப்பிட்டிட்டுத் தூங்கிடுங்க” என்று உரைத்துவிட்டு இருவருக்குமான உணவை எடுத்துக்கொண்டபடி மாடிப்படிகளில் ஏறத் தொடங்கினான்.

ராமமூர்த்திக்கு அவன் மீதிருந்த கொஞ்சநஞ்ச மனக்கசப்பும் அகன்றது என்று தான் கூறவேண்டும். மனத்திருப்தியுடன் சாப்பிட ஆரம்பித்தார் அவர்.

அன்று அனைவரும் அங்கேயே தங்கிக்கொள்வதாக ஏற்பாடு. இரவுணவை முடித்துவிட்டு அனைவரும் அவரவருக்கான அறைகளுக்குச் சென்றுவிட்டனர்.

கிருஷ்ணா மாடிக்குச் சென்றவன் வராண்டாவில் சாப்பாட்டை வைத்துவிட்டுத் துளசியை எழுப்ப அவளோ அவனது கரத்தைப் பற்றிக்கொண்டபடி உறங்க ஆரம்பித்தாள். கிருஷ்ணா அவளை எப்படி எழுப்புவது என்று யோசித்தவன் உறங்குபவளின் நெற்றியில் இதழ் பதித்து “துளசி சாப்பிட்டிட்டுத் தூங்கு… எழுந்திரி பேபி” என்று கூற, அவனது இதழின் ஸ்பரிசத்தில் கண் விழித்தாள் துளசி.

தன்னருகே இருந்தவனைக் கண்டு திடுக்கிட்டவள் சட்டென்று எழுந்துவிடவே கிருஷ்ணா சிகையைக் கோதிக்கொண்டவன் “நீ சாப்பிடலையா துளசி?” என்று கேட்கவும் துளசி அமைதியாய் சென்று வராண்டாவில் அமர்ந்தாள்.

கிருஷ்ணாவும் அவளது மனநிலையைப் புரிந்துகொண்டவனாய் அவளுடன் அமர்ந்தவன் பேசாமல் அவளுக்கும் பரிமாறிவிட்டுத் தானும் சாப்பிட ஆரம்பித்தான். சாப்பிட்டு முடிக்கும் வரை இருவருமே பேசிக்கொள்ளவில்லை.

கிருஷ்ணா பாத்திரங்களைக் கீழே சென்று வைத்துவிட்டுத் திரும்பியவன் அவனது அறைக்குள் சென்று பார்க்க, அங்கே துளசி கண் மூடி உறங்கிவிட்டிருந்தாள். அவனது மனைவியாக உரிமையுடன் அவள் இந்த அறையில் இருப்பதே அவனுக்கு பெரும் நிம்மதியை அளிக்க, அவளுக்கு அடுத்துச் சிறிது இடைவெளி விட்டு படுத்துக் கொண்டான் கிருஷ்ணா.

ஆனால் சிறிது நேரத்தில் துளசியின் பிரசன்னம் காந்தம் போல கவர. அவளை அணைத்துக்கொண்டவன் அப்படியே உறங்கிப்போனான். 

துளசியும் அவனது மார்புக்கூட்டுக்குள் ஒடுங்கியவளாய் அவனை அணைத்தபடி உறங்கிவிட்டாள். வெளியே நிலவுப்பெண்ணின் பிரகாசத்தில் அந்த அழகிய இரவு அமைதியாய் நகர்ந்தது.