💗அத்தியாயம் 24💗

ஆறு வருடங்களில் மாறாத சில விஷயங்களில் அந்த ரெஸ்ட்ராண்டும் ஒன்று. அவர்களின் பிரிவுக்குப் பிறகு துளசி அந்த இடத்தைத் தவிர்த்தாலும் ஓரிருமுறை கிளையண்டை சந்திப்பதற்காக சுகன்யாவுடன் சேர்ந்து அங்கே வந்து சென்றிருக்கிறாள். ஆனால் கிருஷ்ணாவுடன் வந்த போது இருந்த வண்ணமயமான சூழல் மாறிவிட்டது போல உணர்வாள் அவள்.

இம்முறை அவனுடன் வந்தவளுக்கு மீண்டும் பழைய அழகு திரும்பி வந்ததைப் போன்ற எண்ணம் தோன்றியது என்னவோ உண்மை. அதை மனதிற்குள் ரசித்தபடியே அவனுடன் சேர்ந்து நடந்தாலும் ஓரடி இடைவெளி விட்டே நடந்தாள்.

கிருஷ்ணா கூலர்ஸை எடுத்துக் கண்ணில் மாட்டிக்கொண்டபடி நடந்தவன் இதைக் கண்டுகொண்டவனாய் “ஸ்கேல் வச்சு அளந்த மாதிரி கரெக்டா ஒன் ஃபீட் டிஸ்டென்ஸ்ல வர்றா… டெயிலர்னு ப்ரூவ் பண்ணுறாடா கிரிஷ்” என்று மனதிற்குள் நினைத்தபடி முன்னே சென்று கொண்டிருந்தான். வெளியே சொல்லி அவளிடம் வாங்கிக் கட்டிக்கொள்ள அவன் என்ன முட்டாளா?

துளசி அவனது எண்ணத்தை உணராதவளாய் அவனைத் தொடர்ந்தவள் அங்கே வந்து சென்ற கூட்டத்தில் சில பெண்களின் விழிகள் ரசனையுடன் கிருஷ்ணாவின் மீது படிந்து மீள அவளை அறியாமல் உள்ளுக்குள் எரிச்சல் மூள்வதை அவளால் தடுக்க இயலவில்லை.

அந்த எரிச்சலை அவர்கள் மீது காட்ட இயலாதவளாய் விறுவிறுவென்று கிருஷ்ணாவின் அருகில் சென்று அவனது வேகத்துக்கு ஈடாக நடந்தபடி “முதல்ல கூலிங் கிளாஸை கழட்டு கிரிஷ்… ஊட்டி கிளைமேட்டுக்கு இது தேவையே இல்லை” என்றாள் பல்லைக் கடித்தவண்ணம்.

கிருஷ்ணாவோ “இது வெயிலுக்குப் போட்டதுனு நினைச்சியா துளசி? நெவர்… இது ஸ்டைலுக்குப் போட்டதுடி… இன்னும் வளராம சின்னப்பிள்ளையாவே இருக்க நீ” என்று அவளைக் கேலி செய்தபடி ரெஸ்ட்ராண்டினுள் நுழைய முயல அவனது கையைப் பிடித்து நிறுத்தினாள்.

என்னவென்று ஏறிட்டவனிடம் “முப்பது வயசாயிடுச்சு… இன்னும் என்னடா உனக்கு ஸ்டைல் வேண்டியது கிடக்குது? ஒழுங்கா கூலர்ஸை கழட்டு… இல்லைனா நான் உள்ளே வரமாட்டேன்” என்று அடம்பிடிக்க

கிருஷ்ணா சுற்றும் முற்றும் பார்த்தவனின் கண்கள் அவனை வருடிச் சென்ற விழிகளைக் கண்டதும் “ஓ! இது தான் மேடம் கடுப்பாக காரணமா? நாட் பேட்! கோவம்லாம் வருதே… அப்போ போகப் போக லவ்வும் வரும்” என்று கேலியாய் எண்ணிக்கொண்டான்.

கூலிங்கிளாசைக் கழற்றி தனது சட்டைப் பாக்கெட்டினுள் போட்டவன் “இன்னைக்கு காலையில இருந்து மூனு தடவை நீ எனக்கு முப்பது வயசாயிடுச்சுனு குத்திக்காட்டிட்ட… முப்பது வயசாயிடுச்சுனா ஸ்டைலா இருக்கக் கூடாதுனு எதாவது ரூல் இருக்கா?” என்று கேட்டபடி உள்ளே நுழைய

துளசி “பாதிக்கிழவன் ஆனதுக்கு அப்புறம் நீ எப்பிடி இருந்தா என்ன?” என்று அவனை வாரிவிட்டபடி அவனுடன் உள்ளே நுழைந்தாள்.

கிருஷ்ணா அவர்கள் வழக்கமாக அமரும் இருக்கையைத் தேடிக் கண்டுபிடித்து அமர்ந்தவன் தனக்கு எதிரே அமர்ந்தவளிடம் “நிஜமாவே எனக்கு ரொம்ப வயசாயிடுச்சா துளசி?” என்று கவலையுடன் கேட்க, துளசியால் சிரிப்பை அடக்க இயலவில்லை.

சிரிக்கத் துடித்த இதழ்களை மறைத்தபடி தலையை குனிந்து கொண்டவள் நிமிராமலே “ஆமா! உனக்கு வயசாயிடுச்சு தான்… ஏன் நீ கண்ணாடியே பார்க்க மாட்டியா?” என்று சொல்லிவிட்டுப் போனை நோண்ட ஆரம்பித்த மாதிரி பாவனை செய்தாள்.

கிருஷ்ணா தன் எதிரே குனிந்தபடி அமர்ந்திருப்பவளின் மூக்கைச் செல்லமாக நிமிண்டவும் துளசி திடுக்கிட்டு நிமிர, அவன் கண் சிமிட்டிவிட்டு இருக்கையில் வாகாகச் சாய்ந்து கொண்டபடி “பொறாமையா?” என்று கேட்டுவிட்டு புருவத்தை ஏற்றி இறக்கினான்.

துளசி இல்லையென்று சமாளிக்க முயல கிருஷ்ணா அதை நம்பினால் தானே.. இருவரும் அவரவர் வாதமே சரியென்று சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போதே சர்வர் வந்துவிட கிருஷ்ணா இருவருக்கும் சேர்த்து ஆர்டர் செய்துவிட்டான்.

மேற்கொண்டு விவாதிக்காமல் இருவரும் வந்த உணவைச் சாப்பிட ஆரம்பிக்கவும் துளசிக்கு ராமமூர்த்தியிடமிருந்து போனில் அழைப்பு வந்தது. அவள் அழைப்பை ஏற்று காதில் வைக்கப்போன நேரத்தில் கிருஷ்ணா போனைப் பிடுங்கிப் பேசத் தொடங்கினான். துளசியின் முறைப்பை எல்லாம் அவன் பொருட்படுத்தவே இல்லை.

“சொல்லுங்க மூர்த்தி அங்கிள்!” என்றபடி பேச ஆரம்பித்தவன் துளசி தன்னுடன் தான் இருக்கிறாள் என்பதைச் சொல்லிவிட மறுமுனையில் ராமமூர்த்தி என்ன சொன்னாரோ தெரியவில்லை. அதற்கு பதிலடியாக

“எப்பிடியும் கல்யாணத்துக்கு அப்புறம் அவ என்னோட தானே அங்கிள் இருக்கணும்.. அதுக்கு டிரையல் பார்த்துட்டிருக்கேனு நினைச்சுக்கோங்க… சும்மா சும்மா நீங்களும் டென்சனாகி மீரா ஆன்ட்டியையும் கடுப்பாக்காதிங்க… இன்னும் கொஞ்சநேரத்துல துளசி உங்க கண் முன்னாடி இருப்பா.. கவலைப்படாதிங்க” என்று உரைத்தவாறு போனை வைத்தான் அவன்.

துளசியிடம் போனை நீட்டவும் அதை வாங்கிக் கொண்டவள் “நீ ஏன் எப்போவும் அப்பாவை இரிட்டேட் பண்ணுற மாதிரியே நடந்துக்கிற கிரிஷ்?” என்று வினவ

கிருஷ்ணா சாப்பாட்டில கண்ணைப் பதித்தவன் “அந்த மனுசன் என்னைக்காச்சும் என்னை நம்பியிருக்கிறாரா துளசி? எப்போவும் சி.ஐ.டி மாதிரி கொஸ்டீனா கேட்டா எனக்கும் கடுப்பாகும்ல… பை த வே, நீ ஒன்னும் குழந்தை இல்லை, நானும் பிள்ளை பிடிக்கிறவன் இல்லை… ஏதோ அவரோட பொண்ணை நான் கிட்னாப் பண்ணி வச்சிருக்கிற மாதிரி ரியாக்ட் பண்ணுறாரு உன் டாடி…” என்று கிண்டலாகச் சொல்லிக்கொண்டே சாப்பிட, துளசி இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் தகராறு இந்த ஜென்மத்தில் தீராது என்று மானசீகமாகத் தலையிலடித்தபடி சாப்பிட ஆரம்பித்தாள்.

அதே நேரம் துளசியின் வீட்டில் ராமமூர்த்தி கிருஷ்ணாவைப் பற்றி யோசித்தபடி கத்திக் கொண்டிருந்தார் மீராவிடம்.

“என் பொண்ணை அவன் கூட அனுப்பிவைச்சிட்டு நான் டென்சன்ல இருக்கேன் மீரா.. நீ கூலா கிருஷ்ணா கூடத் தானே போயிருக்கானு சொல்லுற? ஐ டோன்ட் பிலிவ் ஹிம்…”

“இப்பிடி சொன்னா என்ன அர்த்தம்? நாளைக்கு அவ கல்யாணம் ஆகிப் போனதுக்கு அப்புறம் கிருஷ்ணாவோட தான் ட்வென்ட்டி ஃபோர் ஹவர்ஸும் இருக்கணும்… அப்போ என்ன பண்ணுவிங்க? உங்க பொண்ணோட சேர்ந்து நீங்களும் மருமகன் வீட்டுக்குப் போற ஐடியால இருக்கிங்களா?”

மீரா இவ்வாறு சொல்லவும் அங்கே அமர்ந்து போனை நோண்டிக்கொண்டிருந்த சுகன்யா நமட்டுச்சிரிப்பு சிரிக்க ராமமூர்த்தி அவளை முறைத்த பின்னர் அமைதியானாள்.

இவ்வாறு நேரம் செல்ல கிருஷ்ணாவும் துளசியுடன் வீடு வந்து சேர்ந்தான். வந்தவனின் விழிகளில் மித்ரா எங்கே என்ற தேடல் இருக்க மீரா அதைப் புரிந்து கொண்டவராய் “மித்தி மீனாவோட வெளியே போயிருக்கா… நீங்க உக்காருங்க” என்று மெல்லிய புன்னகையுடன் கூறவே கிருஷ்ணா சரியென்று தலையசைத்தவன் சோபாவில் அமர்ந்தான்.

ராமமூர்த்தி அவனைக் கண்டதும் ஏதோ சொல்ல வர, சுகன்யா அவரை விழியால் அடக்கியவள் துளசியை உள்ளே செல்லுமாறு கூறிவிட்டாள்.

ராமமூர்த்தி சுகன்யாவின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு அமைதியாக அமர்ந்தவர் தன் எதிரே கால் மேல் கால் போட்டு சட்டமாய் அமர்ந்திருந்தவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி “இனிமே துளசி உன் கூட எங்கேயும் வரமாட்டா.. அவளை எந்த நம்பிக்கையில உன் கூட அனுப்பி வைக்கிறது?” என்று குத்தலாகக் கேட்க

கிருஷ்ணா “எந்த நம்பிக்கையில என் பொண்ணை உங்க கிட்ட விட்டுட்டு நான் இருக்கேனோ அதே நம்பிக்கையில தான் மூர்த்தி அங்கிள்” என்றான் எதற்கும் அசராதவனாய்.

“மித்தி என்னோட பேத்தி.. அவளை என்னை விட யாராலயும் பாதுகாப்பா பார்த்துக்க முடியாது”

“அதே மாதிரி தான், துளசி என்னோட உயிர் அங்கிள்… என் உயிரை நான் அம்போனு விட்டுட மாட்டேன்.. நம்புங்க” என்று சொல்லி அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

சில நிமிட அமைதிக்குப் பின் மீரா ஜூஸுடன் வரவும் ஹால் அமைதியானது. கிருஷ்ணாவிடம் ஜூஸை நீட்டியவர் திருமண விஷயம் குறித்து கேட்கவும் அவன் தனது குடும்பத்தார் இது பற்றி பேசுவதற்காக விரைவில் ஊட்டி வரவிருப்பதாகக் கூறினான்.

சிறிது நேரத்தில் மித்ரா வீடு திரும்பவும் அவளுடன் கொஞ்சிவிட்டுத் தான் அங்கிருந்து புறப்பட்டான் கிருஷ்ணா.

அவன் சொல்லிவிட்டுச் சென்றதை போல இரண்டே நாட்களில் வீட்டின் மூத்தப்பெண்மணிகளான ரங்கநாயகி மற்றும் சுபத்ராவுடன் சாரதா, சஹானா, விஜயேந்திரன் மற்றும் ராகவேந்திரன் துளசியின் வீட்டுக்குத் திருமணப்பேச்சுக்காக வருகை தந்தனர்.

இரு குடும்பத்து பெரியவர்களும் பேசி முடிவு செய்தபடி திருமணத்தை எளிமையாகக் கோயிலில் முடித்தால் போதும் என்ற எண்ணமே துளசிக்கும். திருமணம் குறித்து பெரிதாக எந்த எதிர்பார்ப்புமில்லாததால் அவள் அதில் அக்கறை காட்டவில்லை.

கிருஷ்ணாவோ திருமணம் என்று ஒன்று நடந்தால் மட்டும் போதுமென்ற மனநிலையில் இருந்ததால் துளசியின் நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டான். அதில் முக்கியமானது திருமணத்துக்குப் பின்னர் அவள் ஊட்டியை விட்டு நீங்கி கோவைக்கு வரமாட்டாளென்பது.

அவளது பொட்டிக், உயிர்த்தோழி சுகன்யா, அன்பான மீனும்மா எல்லாவற்றிற்கும் மேலாக அவளது குடும்பத்தினரின் நினைவான வியூபாயிண்ட் என்று அனைத்துமே உதகமண்டலத்தில் இருக்க அவள் மட்டும் எப்படி கோவை செல்லுவாள்?

சாரதா முதலில் இந்நிபந்தனையில் துணுக்குற்றாலும் பின்னர் ராகவேந்திரனுக்கும் தற்போது அமைதியான சூழல் வேண்டுமென்பதால் அனைவரும் ஊட்டி எஸ்டேட்டிலேயே தங்கிக் கொள்ளலாம் என்று மீராவிடம் கூறிவிட்டார். கூறியதோடு மட்டுமல்லாது புது மருமகள் வருவதற்குள் அந்த எஸ்டேட் பங்களாவுக்குத் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஜாகையை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று கட்டளையுமிட்டுவிட்டார்.

அதற்குப் பின்னர் திருமணத்துக்கு நாள் குறிப்பது, ஆடை அணிகலன்கள் வாங்குவது என்று எதிலும் துளசி தலையிடவில்லை. மீராவும், சாரதாவும் சுகன்யா மற்றும் சாரதாவின் உதவியுடன் அனைத்தையும் பார்த்துக்கொண்டனர்.

சஹானாவும் துளசி திருமணத்துக்கு ஒத்துக்கொண்டதால் இனி கிருஷ்ணா தனிமையில் வாழ்வை வெறுத்து சுத்தமாட்டான் என்று நிம்மதியடைந்தாள். அண்ணனின் திருமணத்துக்கு அவளும் உற்சாகத்துடன் தயாரானாள்.

ராமமூர்த்தி என்ன தான் கிருஷ்ணாவின் மீது அவருக்கு வருத்தமிருந்தாலும் அவருக்கு நன்கு தெரியும், துளசியால் கிருஷ்ணாவைத் தவிர்த்து இன்னொரு ஆடவனைக் கணவனாக ஏற்றுக்கொள்ளவே முடியாது என்பது. மகளுக்கும் பேத்திக்கும் அவனால் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையைத் தர முடியும் என்றால் அதற்கு என்றுமே தான் தடையாக நிற்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்.

அவர் இத்திருமணத்துக்கு துளசி, மித்ராவை மட்டுமே மனதில் வைத்துச் சம்மதம் தெரிவித்துவிடவில்லை. அவர் சுகன்யாவையும் அவளது தாயார் மீனாவையும் கருத்தில் கொண்டு தான் இம்முடிவுக்கு வந்தார்.

ராமமூர்த்தியும் மீராவும் உடனில்லாத சமயத்தில் இந்த இருவரும் தான் துளசிக்கு ஆதரவாய் ஆறுதலாய் இருந்தவர்கள். துளசியை மனதில் வைத்தே சுகன்யா இந்நாள் வரை திருமணப்பேச்சை எடுத்தாலே மறுப்பு தெரிவித்துக் கொண்டிருக்க, மீனா வெளியில் சொல்லாவிட்டாலும் கணவரின் மறைவுக்குப் பின்னர் அரும்பாடு பட்டு வளர்த்த மகள் வாழ்நாள் முழுவதும் தனித்திருந்துவிடுவாளோ என்ற பயம் அவருக்கு இருந்துவந்தது.

அதே பயம் தான் ராமமூர்த்தியையும் மீராவையும் இத்திருமணத்துக்குச் சம்மதிக்கவைத்தது என்றால் அது மிகையில்லை. தங்களுக்குப் பின்னர் இந்த இரு பெண்களும் மித்ராவுடன் தனித்துவிடப் படுவார்களே என்ற அச்சம் தான் அவர்களை இந்த திருமணத்துக்கு சம்மதம் சொல்ல வைத்தது.

கிருஷ்ணாவின் வீட்டினரும் இனியாவது தங்களது குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கட்டுமென்று நிம்மதியடைந்தனர்.

இதோ மறுநாள் திருமணம். அன்றைக்கு அந்த எஸ்டேட் பங்களா கோலாகலமாக இருந்தது. சஹானாவும் சாரதாவும் ரங்கநாயகி மற்றும் சுபத்ராவுடன் சேர்ந்து மறுநாள் கோயிலுக்குக் கொண்டுச் செல்லவேண்டிய பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.

ராகுலும் விஷ்வாவும் விஜயேந்திரனுடன் திருமண வேலைகளில் உதவியாக இருக்க, கிருஷ்ணாவும் ராகவேந்திரனும் மட்டும் அமைதியாக இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

மனநிறைவுடன் அமர்ந்திருந்த ராகவேந்திரன் தன்னருகில் சிந்தனைவயப்பட்டவனாக இருந்த மகனிடம் என்னவென்று விசாரிக்க ஆரம்பித்தார்.

“நாளைக்குக் கல்யாணத்தை வச்சிட்டு நீ ஏன் இவ்ளோ ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க கிரிஷ்?”

“எனக்கு யோசனையே அகிலேஷ் பத்தி தான் டாட்.. என்னோட ஆக்சிடெண்ட்ல இருந்து இப்போ மித்ராவோட கிட்னாப்பிங் வரைக்கும் எல்லாத்துலயும் அவனோட பங்கு இருக்கு.. பட் என்னால அவனைத் தடுத்து நிறுத்த முடியலையேனு தான் யோசிச்சிட்டிருக்கேன்..”

“அவனை ஒரு பக்கமா கவனிச்சுட்டே நீ உன் வாழ்க்கையை ஆரம்பிடா… அவனோட நோக்கமே உன்னைச் சந்தோசமா வாழவிடாம பண்ணுறது தான்… நீ அவனோட அந்த நோக்கம் என்னைக்குமே நிறைவேற விட்டுடாதே கிரிஷ்… தொழில்ல உன்னை அவனால எப்போவுமே ஜெயிக்க முடியாதுனு நீ அவனுக்கு இந்த ஆறு வருசத்துல புரியவச்சிட்ட… அதே மாதிரி உன்னோட வாழ்க்கையிலயும் உன்னை அவனால தோற்கடிக்க முடியாதுனு அவனுக்குப் புரியவை” என்றெல்லாம் பேசி மகனது மனநிலையைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினார்.               

கிருஷ்ணாவின் மனநிலை இவ்வாறிருக்க துளசி வீட்டில் சுகன்யாவும் மீராவும் திருமணத்துக்கான பரபரப்பில் இருக்கவும் அவர்களை தொந்தரவு செய்யாமல் வராண்டாவில் சென்று அமர்ந்தாள். உள்ளே மித்ரா தனது உடைமைகளை மீனாவுடன் சேர்ந்து எடுத்துவைத்துக் கொண்டிருந்தாள். நாளையில் இருந்து தந்தையுடன் சேர்ந்து ஒரே வீட்டில் வசிக்கப் போகிறோம் என்ற குதூகலத்தில் இருந்தாள் துளசியின் மகள்.

தனிமையில் அமர்ந்திருந்த துளசியின் அருகில் வந்து அமர்ந்தார் ராமமூர்த்தி. மகளது கூந்தலை வருடிக்கொடுத்தவருக்கு நாளையில் இருந்து வீட்டின் உற்சாகம் அவளுடன் சென்றுவிடும் என்ற நினைவே அவரது மனதை வருத்தியது. ஆனால் இதையெல்லாம் மகள்களைப் பெற்ற எல்லா தந்தையரும் தாங்கித் தானே ஆகவேண்டும் என்று தன் மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டார்.

மகளுக்கும் அதையே கூறிச் சமாதானப்படுத்தியவர் அவளைத் தோளில் சாய்த்துக்கொண்டார். தந்தையின் அரவணைப்பில் கண் மூடியிருந்தாள் துளசி.

சிறிது நேரத்தில் மீரா அனைவரும் இன்று ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம் என்று அழைக்க உள்ளே சென்றனர் இருவரும். அன்றைய இரவுணவின் போது அனைவருமே மனநிறைவும், வருத்தமும் கலந்த கலவையாகவே இருந்தனர்.

மறுநாள் விடியல் வரைக்கும் இம்மனநிலையே நீடித்தது. ஆனால் துளசி பட்டுப்புடவையில் அணிகலன்கள் மின்ன சுகன்யாவின் கைவண்ணத்தில் தேவதையாக மிளிர்ந்த துளசியைக் கண்டதும் அனைவருக்கும் பூரிப்பில் மனம் நெகிழ்ந்தது.

சிவப்பு நிறப்பட்டில் துளசி அலங்கார தேவதையாக இருக்க, மித்ரா அவளது அன்னையின் புடவை நிறத்திலேயே பட்டுப்பாவாடை அணிந்து குட்டித்தேவதையாக ஜொலித்தாள். சுகன்யா மறக்காமல் தோழிக்குத் திருஷ்டி கழித்தாள்.

மீராவும் மீனாவும் துளசியின் மணக்கோலத்தைக் கண்டு மகிழ்ச்சியுடன் கண் கலங்கிவிட்டனர்.

அதைக் கண்ட சுகன்யா கிண்டலாக “அடேங்கப்பா! இப்போ எதுக்கு கண் கலங்குறிங்க? எப்போவும் திரைச்சீலை மாதிரி டிரஸ்ல சுத்திட்டிருந்தவங்க இன்னைக்கு இவ்ளோ அழகா புடவை கட்டி இருக்கிறதைப் பார்த்து நீங்க பெருமைப்படணும் மம்மிஸ்..” என்று இரு தாய்மார்களையும் கலாய்த்தவளுமே அன்று பச்சைவண்ணப்பட்டில் அழகுச்சிலையாய் தான் உருமாறியிருந்தாள்.         

அனைவரையும் நானோவில் ஏறச் சொன்னவள் அவர்கள் வெளியேறியதும் துளசியைக் கட்டி அணைத்தவள் “இன்னைக்கு நான் எவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா துளசி? என் ஃப்ரெண்ட் அவளோட பிரின்ஸ் கூட சேரப்போறா.. இனிமே அவளோட வாழ்க்கையில அவளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை…” என்று சொல்ல

துளசி “ஆனா என்னோட மனசு இப்போவும் சுகியையும், மீனும்மாவையும் தான் சுத்தி சுத்தி வருது.. நான் இல்லைனா நீங்க ரெண்டு பேரும் மட்டும் தனியா இங்கே எப்பிடி இருப்பிங்க? நீயும் என் கூடவே வந்துடு சுகி” என்று சிறுகுழந்தை போலக் கூற

சுகன்யா தோழியின் அன்பில் கண்ணைக் கரித்துக்கொண்டு வர அதைக் கட்டுப்படுத்தியவாறு “ஏன் சொல்ல மாட்டே மேடம்? கிருஷ்ணா எனக்கு துளசி மட்டும் போதும், வேற எதுவும் வேண்டாம்னு சொன்னதால நீ என்னையே உன் பிறந்தவிட்டுச்சீதனமா எடுத்துட்டுப் போலாம்னு டிசைட் பண்ணிட்டப் போல?” என்று கேலி செய்து தோழியை சாதாரண மனநிலைக்குக் கொண்டு வந்தாள். இருவரும் சிரித்த முகத்துடன் வீட்டைப் பூட்டிவிட்டுக் காரில் அமர, கார் அந்த அழகான குடும்பத்தை தன்னுள் அமர்த்திக்கொண்டு கோயிலை நோக்கி விரைந்தது.