💗அத்தியாயம் 2💗
ஊட்டி…
அந்த மதியநேர இளம்வெயிலிலும் வீசும் காற்றில் குளிர் சிறிது மிச்சம் இருக்க, எங்கு நோக்கினும் இயற்கை அன்னை தாராளமாக தாரை வார்த்திருந்த அத்துணை அழகையும் மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்திருந்தது அந்த அழகிய மழைவாசஸ்தலம்…
சுற்றுலா வந்தவர்கள், கைடுகள், உள்ளூர்வாசிகள் என்று அனைவருமே அந்த அழகை ரசித்து அனுபவித்துக் கொண்டிருக்க ஒரே ஒருத்தி மட்டும் மனம் உலைக்களமாக கொதிக்க அமைதியின்றி நடந்து கொண்டிருந்தாள்..
அது வேறு யாருமில்லை துளசி தான்…
கோயம்புத்தூர் கொடுத்த அதிர்ச்சியை ஜீரணிக்க முடியாமல் வீட்டுக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தாள் துளசி. மித்ரா சமத்தாக சோபாவில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் அவளது அம்மாவின் பரபரப்புக்கான காரணம் புரியாமல் தன் அருகில் அமர்ந்து கன்னத்தில் கைவைத்து அவளது அம்மாவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு பெண்ணிடம் “சுகி ஆன்ட்டி அம்மு ஏன் நடந்துகிட்டே இருக்காங்க?” என்று வினவினாள்.
அவளால் சுகி ஆன்ட்டி என்று அழைக்கப்பட்டவளுக்கும் துளசியின் வயது தான் இருக்கும். துளசியைப் போன்று அவ்வளவு உயரம் இல்லையென்றாலும் சராசரி உயரத்துடன் அவளுக்கே உரித்தான திருத்தமான முகம், அகன்ற விழிகளுடன் இருந்தவள் தான் சுகன்யா. துளசிக்கு என்று இருக்கும் ஒரே ஒரு நம்பகமான தோழி அவள் மட்டும் தான்.
கோயம்புத்தூரிலிருந்து வந்ததிலிருந்து துளசியின் நடவடிக்கை எதுவும் சுகன்யாவுக்குச் சரியாகப் படவில்லை. கோயம்புத்தூரிலிருந்து கிளம்பும் போதே சுகன்யாவுக்குப் போன் செய்து திருமணவீட்டாரிடம் அன்றைக்கு உடையை காண்பிக்க வரவில்லை என்று கூறிவிடுமாறு கட்டளையிட அவள் என்றுமே இப்படி வேலையைப் பாதியில் நிறுத்தும் ஆள் இல்லை என்பதால் சுகன்யாவுக்கும் துளசியின் பேச்சு ஆச்சரியத்தையே தந்தது.
ஆனால் தோழியின் எந்தச் செய்கைக்குப் பின்னும் ஒரு காரணம் இருக்கும் என்று புரிந்து கொண்டவள் அந்த திருமணவீட்டாருக்கு அழைத்து தங்களால் இன்று வரமுடியாது என்று விளக்கிவிட்டு தோழியின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
துளசி ஆட்டோவில் வந்து இறங்குவதைக் கண்டதுமே தங்களின் வீட்டிலிருந்து அவள் வீட்டுக்குச் சென்றவளிடம் துளசி கூறிய ஒரே வார்த்தை “மித்ரா பசியா இருப்பா சுகி! அவளுக்குச் சாப்பாடு குடு” என்பது மட்டும் தான்.
சுகன்யாவும் மித்ராவுக்கு மிகவும் பிடித்த பருப்புச்சாதத்தைச் சமைத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொடுக்க குழந்தை அடம்பிடிக்காமல் அதைச் சாப்பிட ஆரம்பித்தாள்.
ஆனால் துளசி தான் வந்ததிலிருந்து அலை பாயும் மனநிலையுடன் நிலைகொள்ளாமல் உலாவிக் கொண்டிருந்தாள்.
சுகன்யா மித்ரா சாப்பிட்டு முடிக்கவும் அவளிடம் “மித்தி குட்டி! பாட்டி உனக்காக க்ரீம் பிஸ்கெட் செஞ்சிருக்காங்க.. போய் சாப்பிடு…. நான் அம்மாவை கூட்டிட்டு வர்றேன்” என்று கூறவும் மித்ரா சாப்பிட்டு முடித்தக் கிண்ணத்தை சமையலறையில் வைத்துவிட்டு அன்னையின் அறிவுரை படி கையைக் கழுவி வாயைக் கொப்புளித்து விட்டு வந்தவள் துளசியிடம் “அம்மு ஈஈஈ” என்று பற்களைக் காட்டியபடி நின்றாள்.
சாப்பிட்டதும் வாயைச் சுத்தமாகக் கொப்புளிக்க மித்ராவைத் துளசி சிறுவயதிலிருந்தே பழக்கியிருந்தாள். குழந்தையும் அந்தப் பழக்கத்தை மறக்காதவளாய் அன்னையிடம் வந்து தனது முத்துநிரல்களையொத்தப் பற்களைக் காட்டி நின்றாள்.
அதைக் கண்ட துளசி அவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் தளர்ந்தவளாய் மகளின் தாடையைப் பிடித்துப் பார்த்துவிட்டு “குட் கேர்ள்! எப்போவுமே சாப்பிட்டதும் வாய் கொப்புளிக்கிற பழக்கத்தை மறக்கக் கூடாது..சரியா?” என்று மகளின் முன்னுச்சி கூந்தலை தடவிக் கொடுத்தவள்
“போய் மீனா பாட்டி கிட்ட பிஸ்கெட் வாங்கிக்கோ! பட் ஒன்லி டூ பிஸ்கெட்ஸ்… அதுக்கு மேல சாப்பிடக் கூடாது” என்று பொறுப்பான அம்மாவாக அறிவுறுத்த சரியென்று தலையாட்டிவிட்டு அங்கிருந்து சுகன்யாவின் வீட்டை நோக்கி ஓடினாள்.
சுகன்யாவின் வீடு ஒன்றும் தொலைவில் இல்லை.. இரண்டு அடி எடுத்துவைத்தால் வந்துவிடும் தூரம் தான்.
அவள் ஓடிச் செல்வதைப் பார்த்தபடி நின்றவளிடம் சுகன்யா “மித்தி ரொம்பச் சீக்கிரமா வளர்ந்துட்டாள்ல” என்று கூற துளசியும் அதை ஆமோதித்தாள்.
புன்னகையுடன் “ஆமா சுகி! இத்துணூண்டு குழந்தையா என் கையில தவழ்ந்தவளுக்கு இப்போ ஆறு வயசு… காலம் ரொம்ப வேகமா ஓடிடுச்சுல்ல” என்று பெருமூச்சுடன் சொல்ல
சுகன்யா தோழியை வாஞ்சையாகப் பார்த்தபடி “காலம் வேகமா ஓடுனது மட்டுமில்லை…. எந்தக் கவலையுமில்லாம பட்டாம்பூச்சி மாதிரி சுத்திட்டிருந்த என் ஃப்ரெண்டை இப்பிடி அடியோட மாத்தவும் செஞ்சிடுச்சு” என்று வருத்தத்துடன் கூற துளசி முகம் இறுக சோபாவில் அமர்ந்தாள்.
அமர்ந்தவள் மெதுவாக “இன்னும் அந்தக் காலம் என் காலைச் சுத்துன பாம்பா என்னைத் துரத்திட்டுத் தான் இருக்கு சுகி” என்று கடினமான குரலில் கூற
சுகன்யா தோழியின் பேச்சிலிருக்கும் மறைபொருளைப் புரிந்து கொண்டவளாய் ஆனால் அதை நம்ப முடியாமல் “என்ன சொல்லுற துளசி? ஒரு வேளை….. ஒரு வேளை நீ அவனை…. இதுக்கு தான் நீ கோயம்புத்தூருக்கு தனியா போகாதேனு தலை தலையா அடிச்சேன்” என்று படபடக்க
துளசி கண்கள் கலங்க அவள் புறம் திரும்பியவள் “போன தடவை என் வாழ்க்கையில வந்து என்னோட அழகான சின்ன உலகத்தை நாசம் பண்ணிட்டுப் போனவன் மறுபடியும் வந்துடுவானோனு பயமா இருக்கு சுகி… எங்களோட சேலஞ்ச்ல நான் தோத்துப் போயிட்டேன்… அவன் எந்த நேரத்துல வேணும்னாலும் வருவான்… அவன் கிட்ட மித்ராவைப் பத்தி நான் என்ன சொல்லுறது? எனக்கு ஒரே குழப்பமா இருக்கு” என்று கண்ணீர் வடித்தபடி கோவையில் நடந்ததைக் கூற ஆரம்பிக்க
சுகன்யா அவள் சொன்ன அனைத்து விஷயங்களையும் கேட்டவள் அவளது கண்ணீரை துடைத்துவிட்டு “யூ ஆர் அ ஸ்ட்ராங்க் லேடி அண்ட் அ ப்ரேவ் மாம்! உன்னால எதையும் ஃபேஸ் பண்ண முடியும்… அவன் திரும்பி வந்தா சண்டை போடு…. குழந்தையைப் பத்தி பேச அவனுக்கு ரைட்ஸ் இல்லை துளசி… மித்ரா உன்னோட பொண்ணு… அவளை உன் கிட்ட இருந்து யாராலயும் பிரிக்க முடியாது” என்று தோழிக்கு நம்பிக்கை கொடுத்தாள்.
துளசி “மித்ரா என் கிட்ட இருந்துப் போயிட்டா நான் செத்துப் போனதுக்குச் சமம் சுகி… எனக்கு என்னவோ தப்பா நடக்கப் போற மாதிரியே தோணுது” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே வெளியே ஒரு கார் வரும் இரைச்சல் கேட்க அதைக் கேட்டதும் அவளது தேகம் இரும்பு போல் இறுக ஆரம்பித்தது.
கார் நின்று கதவைத் திறக்கும் ஓசையும் அதைத் தொடர்ந்து ஷூ அணிந்த கால்களின் தட்தட்டென்ற ஒலியும் அவளின் இதயத்தில் இடியை இறக்க எச்சிலை விழுங்கியபடி வாயிலைப் பார்த்தாள் துளசி.
சிறிது நேரத்தில் அங்கே வந்து நின்றான் கிருஷ்ணா… துளசியைக் கண்டதும் அவன் இதழில் குடியேறிய அவனது அக்மார்க் குறும்புப்புன்னகை இன்றும் அவள் மனதைக் கவர மிகுந்தச் சிரமத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் துளசி.
அவனோ இது எதையும் பொருட்படுத்தாதவனாக “வாட் இஸ் திஸ் பேபி? உன்னைப் பார்க்கிறதுக்காக மலையெல்லாம் ஏறி வந்த உன்னோட பிரின்ஸை பார்க்காம முகத்தைத் திருப்பிக்கிட்டா என்ன அர்த்தம்?” என்று இலகுவானக் குரலில் கேட்டபடி வீட்டுக்குள் அடியெடுத்து வைக்க
துளசியின் அருகில் அமர்ந்திருந்த சுகன்யா வெடுக்கென்று “உன் முகத்தைப் பார்க்கப் பிடிக்கலைனு அர்த்தம்” என்று கூற அவன் அப்போது தான் அங்கே துளசியையும் தன்னையும் தவிர இன்னொரு ஜீவனும் இருக்கிறது என்பதையே உணர்ந்தான்,.
சுகன்யாவிடம் கிண்டலாக “ஜிஞ்சர்பிரெட் ஆறு வருசம் ஓடிப் போயிடுச்சு.. இன்னும் உன்னோட ஹியூமர் சென்ஸை அதே லெவல்ல மெயிண்டெயின் பண்ணுற பாரு… பட் இப்போ நான் ஜெயிச்ச சந்தோசத்துல இருக்கேன்… சோ ப்ளீஸ் நம்ம ஆர்கியூமெண்டை இன்னொரு நாள் வச்சுப்போமா?” என்று கூறிவிடவே சுகன்யா என்ன மாதிரி மனிதன் இவன் என்று எண்ணியவள் துளசியின் கண்பார்வையை உணர்ந்துப் பேச்சை நிறுத்திவிட்டாள்.
கிருஷ்ணா இருவரையும் பார்த்தவன் “துளசி உன்னோட ஃப்ரெண்டை கொஞ்சம் வெளியே அனுப்பு… எனக்கு உன் கிட்ட தனியா பேசணும்” என்று கூற துளசி சட்டென்று திரும்பி முறைத்தவள் அவன் புருவம் உயர்த்திப் பார்க்கவும் எரிச்சலுற்றாள்.
“அவ போகமாட்டா… போக வேண்டிய ஆள் நீங்க தான் மிஸ்டர் கிருஷ்ணா”
“மிஸ்டர் கிருஷ்ணாவா? ஓகே ஓகே… இப்போ நீ போடா நாயேனு சொன்னாக் கூட அது என் காதுல பிரின்ஸ்னு தான் கேக்கும்” என்று துளசியிடம் கூறிவிட்டு
சுகன்யாவிடம் திரும்பியவன் “இருபத்து நாலு வயசு ஆச்சு! இன்னும் உன் அறிவு வளரலையா? ரொம்ப நாள் கழிச்சு லவ்வர்ஸ் மீட் பண்ணிருக்கோம்.. அவங்களுக்கு பிரைவசி குடுக்கணும்கிறது கூடவா உனக்குப் புரியாது?” என்று கூற சுகன்யா திருதிருவென்று விழிக்கும் போதே கிருஷ்ணா துளசியின் கரத்தைப் பற்றி இழுத்தவன் தனது கரவளையத்துக்குள் அவளைக் கொண்டுவந்துவிட்டான்.
துளசி திடீரென்று நடந்த இந்நிகழ்வை எதிர்பார்க்கவில்லை… சுகன்யாவோ இதைக் கண்டு வாயைப் பிளக்க
கிருஷ்ணா “நான் ஒன் டூ த்ரீனு எண்ணி முடிக்கிறதுக்குள்ள நீ இடத்தைக் காலி பண்ணிடனும்… இல்லைனா சிங்கிள் பொண்ணு தேவை இல்லாம எங்களோட ரொமான்ஸை பார்க்க வேண்டியதா இருக்கும்.. எப்பிடி வசதி?” என்று கூற சுகன்யா இவன் செய்தாலும் செய்வான் என்று பதறியவளாய் விறுவிறுவென்று வெளியேறினாள் துளசியால் அவனை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன்…
துளசி அவன் கரத்தை விலக்க முயற்சித்தவளாக “சுகி போகாதே” என்று கூறிக் கொண்டே கிருஷ்ணாவை முறைத்தபடி தனது பலம் அனைத்தையும் திரட்டி அவனை விலக்கித் தள்ளினாள்.
ஆறு வருடங்களுக்குப் பின்னர் அவனது அருகாமை அவனுடன் இருந்த ஒவ்வொரு நொடியையும் நினைவுறுத்த கடைசியாக அவன் இந்த வீட்டிலிருந்து வெளியேறிய தருணத்தை எண்ணியவளின் முகம் அருவருப்பை தத்தெடுத்தது.
அதை வார்த்தைகளில் ஏந்தி “சீ! தொடாத! நீ தொட்டாலே அருவருப்பா இருக்கு” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பவும் கிருஷ்ணா இவ்வளவு நேரம் இருந்த இலகுபாவம் மாறி முகம் கடினமுற நின்றான்.
“அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும்… நீ என்னைத் தொட்டா நான் அடுத்த நிமிசமே யோசிக்காம செத்துப்போயிடுவேன் கிரிஷ்… உன்னைப் பார்த்தாலே அருவருப்பா இருக்கு… தயவு பண்ணி இங்கே இருந்து போயிடு” என்று காதை மூடிக் கொண்டு கத்தியவளை அவனால் வெறிக்க தான் முடிந்தது.
தன் கடந்தகால வரலாறு தனது பிரியத்துக்குரியவளை அந்த அளவுக்குக் காயப்படுத்தியிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டாலும் துளசி இல்லாத வாழ்வு அவனுக்கு வறண்ட பாலைவனம் என்பதால் அவள் ஏச்சு பேச்சையும் தாங்கிக் கொள்ளும் இதயத்துடன் தான் அவன் இங்கே வந்திருந்தான்.
“துளசி பாஸ்ட் இஸ் பாஸ்ட்… நீயும் நானும் போட்டுகிட்ட சேலஞ்ச் படி நீ என் கிட்ட தோத்துட்ட.. சோ இனிமே நீ என் கூட தான் இருக்கணும்.. என்னோட துளசியா….” என்று நிறுத்தியவன்
திடீரென்று பார்வையால் வீட்டைத் துளாவி விட்டு “எங்கே என் பொண்ணு?” என்று மித்ராவைத் தேட
துளசி தான் எது நடக்கக் கூடாது என்று பயந்தோமோ அது நடந்தேவிடும் போல என்று எண்ணி உள்ளுக்குள் பதறியவள் அதை மறைத்துக் கொண்டு “அவ என் பொண்ணு… உனக்கும் அவளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை கிரிஷ்” என்றாள் நிதானமாக அதே சமயம் அழுத்தமான குரலில்.
கிருஷ்ணா அவள் ஏதோ கோபத்தில் சொல்கிறாள் என்று எண்ணி “உன் பொண்ணுனா அவ எனக்கும் பொண்ணு தான் துளசி…” என்றான் ஆணித்தரமாக..
துளசி “அஹான்! எனக்கு குழந்தைனா அது மித்ரா மட்டும் தான்… உனக்கு என்ன அப்பிடியா?” என்று கேலிவிரவியக் குரலில் கேட்க
கிருஷ்ணா தாடை இறுக பல்லைக் கடித்தவன் “துளசி மித்ரா மட்டும் தான் இப்போதைக்கு எனக்குனு இருக்குற குழந்தை….” என்று சொன்னவன் அடுத்த நிமிடமே குறும்பான முகபாவத்துக்கு மாறிவிட்டு “பட் அவளுக்கு தம்பியோ தங்கச்சியோ ஃப்யூச்சர்ல வர்றதுக்கு நூறு சதவீத வாய்ப்பு இருக்கு” என்று கூற
துளசி அவன் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் புரிந்து கொண்டவள் “அப்பிடி ஒரு இன்சிடெண்ட் உன் கனவுல கூட நடக்காது” என்று ஆட்காட்டிவிரலை நீட்டி மிரட்ட கிருஷ்ணா நீண்டநாள் கழித்து அவளது கோபத்தை ரசனையுடன் பார்க்க ஆரம்பித்தான்.
அதே பார்வையுடன் அவளை நெருங்கியவன் “என்னோட ஸ்வீட் பிரின்சஸ் இந்த ஆறு வருசத்துல ஒரு ஆங்க்ரி பேர்டா மாறிட்டாளே! அது தான் ஆச்சரியமா இருக்கு… கிட்ட வந்தாலே அனல் அடிக்குது துளசி” என்று கேலியாகப் பேச முயல
துளசி வேறு எதுவும் பேசாமல் “வெளியே போ கிரிஷ்…. என்னோட வாழ்க்கையில உனக்கு எந்த இடமும் இல்லை” என்று பிடிவாதத்துடன் கூறிவிட்டு நின்றாள்.
கிருஷ்ணா “அதைச் சொல்லுறதுக்கான சான்ஸை நீ என் கிட்ட மிஸ் பண்ணிட்ட துளசி… பிகாஸ் நான் சேலஞ்ச்ல ஜெயிச்சுட்டேன்… சோ நீயும் என்னோட பொண்ணும் இனி என் கூட தான் இருக்கப் போறிங்க” என்றான் வெற்றி பெற்றுவிட்ட கர்வத்துடன்
துளசி “மித்ரா உன்னோட பொண்ணு இல்லை” என்று மீண்டும் சொல்லவே கிருஷ்ணா ஆட்காட்டி விரலால் நெற்றியைக் கீறியபடி அவளைப் பார்வையால் கூறு போட
துளசி தெளிவாக “மித்ரா இஸ் நாட் யுவர் பயாலஜிக்கல் டாட்டர்” என்றாள் அழுத்தம் திருத்தமாக.
அதைக் கேட்டவன் இவ்வளவு நேரம் இருந்த குறும்புத்தனம், இலகுபாவத்தை மறந்துவிட்டு அதிர்ச்சியுடன் துளசியைப் பார்த்தான் அதிர்ச்சியுடன்.
அவனது அதிர்ச்சி கொடுத்த திருப்தியில் மிடுக்கானக் குரலில் “எஸ்! மித்ரா என்னோட பொண்ணு தான்… பட் நீ அவளோட அப்பா இல்லை” என்று துளசி கூற கிருஷ்ணா உள்ளுக்குள் ஆயிரம் துண்டுகளாக உடைந்துப் போனான்..
அவனது உள்ளம் உடைந்ததைக் கண்டு இரக்கப்படுவதா, வருத்தப்படுவதா, இல்லை ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கும் இப்படித் தானே இருந்திருக்கும் என்று எண்ணி அவனது வருத்தத்தைக் கொண்டாடுவதா என்பதை அறியாதவளாய் உணர்வின்றி நின்றாள் துளசி…
தொடரும்💗💗💗