💗அத்தியாயம் 19💗
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
கிருஷ்ணா தன்னிடம் காதலைக் கூறிய விஷயத்தை துளசி சுகன்யாவிடம் மறைக்காமல் உரைத்துவிட்டாள். சுகன்யா இது சரியா தவறா என்று ஆராயும் நிலையை எல்லாம் தனது தோழி கடந்துவிட்டாள் என்பதைப் புரிந்து கொண்டாள். எனவே அவள் இதற்கு மேல் துளசியைக் கட்டுப்படுத்த விரும்பவில்லை. அதே போலத் தான் விஷ்வாவும். ஆனால் கிருஷ்ணா தனது காதலை துளசியிடம் தெரிவித்த விஷயத்தை விஷ்வாவிடம் கூறியதும் முதல் சாராமாரியாக அவன் கிருஷ்ணாவைத் திட்டத் தான் செய்தான்.
“டேய் என்னடா பண்ணி வச்சிருக்கிற? ஆர் யூ க்ரேஸி? துரைக்குக் கொஞ்சநாள் வெயிட் பண்ண முடியாதோ? துளசி சின்னப்பொண்ணுடா… இப்போ தான் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறா… இப்போ போய் லவ்வைச் சொல்லி வச்சிருக்கியே! உன்னை என்ன தான் பண்ணுறது கிரிஷ்?”
“நான் என்ன பண்ணுறது விஷ்வா? அன்னைக்கு நான் அவுட் ஆஃப் கன்ட்ரோலா இருந்தேன்… சோ சொல்லிட்டேன்டா.. அது ஒன்னும் அவ்ளோ பெரிய தப்பு இல்லையே… நான் என்ன நாளைக்கேவா துளசியை மேரேஜ் பண்ணிக்கப் போறேன்? அவ படிச்சு அவளோட ஆசைப்படி அவ ஃபேஷன் டிசைனரா ஆனதுக்கு அப்புறம் தான் நாங்க அதைப் பத்தி யோசிக்கவே போறோம்.. அது வரைக்கும் நாங்க லவ் பேர்ட்ஸ் தான்” என்று சொல்லி விஷ்வாவைச் சமாளித்துவைத்தான் கிருஷ்ணா.
நாளாக நாளாக அவர்களின் காதல் இன்னும் வலுவானது. துளசிக்காக கிருஷ்ணா கோயம்புத்தூரை மறந்து ஊட்டி எஸ்டேட்டே கதியென்று கிடந்தான். அதற்காக முழுவதுமாக மற்றவற்றை மறந்துவிடவில்லை. அடிக்கடி கோவைக்குச் சென்று மில் வேலைகளையும் கவனித்துக் கொண்டிருந்தான்.
துளசிக்குத் தேர்வு ஆரம்பிக்கவிருந்த சமயம் தேர்வுக்குப் படிப்பதற்காகக் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அன்று கல்லூரிக்குக் கடைசி நாள் என்பதால் துளசியும் சுகன்யாவும் வெளியே சுற்றிவிட்டுச் சற்றுத் தாமதமாக வீடு திரும்புவோம் என்று ஊர் சுற்றக் கிளம்பினார்கள்.
இருவரும் சிறியளவில் அவர்களின் சுற்றுவட்டாரத்தினருக்கு உடைகளைத் தைத்துக்கொடுக்க ஆரம்பித்திருந்த சமயம் அது. எனவே அதற்குத் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் கடை கடையாக ஏறி இறங்கினர்.
அச்சமயத்தில் துளசிக்குக் கிருஷ்ணாவிடம் போனில் அழைப்பு வரவே ஆவலுடன் எடுத்தவள் “கிரிஷ் எங்கே இருக்க? நானும் சுகியும் இன்னைக்குத் திங்ஸ் வாங்கிறதுக்காக ஷாப்புக்கு வந்துருக்கோம்” என்று பேச ஆரம்பிக்கவும், சுகன்யா தங்களுக்குத் தேவையானப் பொருட்களை வாங்க ஒதுங்கிவிட்டாள்.
போனில் கிருஷ்ணா அவளைத் தான் பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூற துளசி சுற்றும் முற்றும் பார்த்தபடி அவனைத் தேடத் தொடங்கினாள். திடீரென்று பின்னே இருந்து ஒரு கரம் அவளது கண்களை மூடவும் அந்தக் கரத்தைப் பற்றியவள் அதில் கிருஷ்ணாவின் பிறந்தநாளுக்காக தான் அளித்திருந்த வெள்ளி மோதிரத்தைத் தடவிப் பார்த்து கண்ணை மூடியது கிருஷ்ணா தான் என்று அறிந்து கொண்டாள்.
“நான் உன்னைக் கண்டுபிடிச்சுட்டேன் கிரிஷ்… கையை எடு”
“ஓ! என் பேபி எவ்ளோ புத்திசாலியா வளர்ந்துட்டா”
“நீ என்னை கிண்டல் பண்ணுறியாடா?”
“ஐயோ! உன்னைலாம் கிண்டல் பண்ண முடியுமா? நீ யாரு, எப்பிடிப்பட்ட ஆளு!”
“அது! இந்தப் பயத்தை எப்போவும் மனசுல வச்சுக்கோ தம்பி… தட்ஸ் குட் ஃபார் யுவர் ஹார்ட் அண்ட் ஹெல்த்” என்று எச்சரித்தவளின் தோளில் கையைப் போட்டான் கிருஷ்ணா.
“துளசி! நீ இனிமே முழுசா படிப்புல இறங்கிடுவ… என் கூட ஸ்பெண்ட் பண்ண உனக்கு டைம் இருக்காதுல்ல… சோ இன்னைக்கு ஒரு நாள் மட்டும் என் கூட ஸ்பெண்ட் பண்ணு ப்ளீஸ்… ஐ ப்ராமிஸ் நான் ஈவினிங் ஃபைவ் ஓ கிளாக் முன்னாடியே உன்னை வீட்டுல டிராப் பண்ணிடுவேன்” என்று கழுத்தைத் தொட்டு சத்தியம் செய்ய துளசிக்குமே அவனுடன் இருக்கத் தான் விருப்பம்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
ஆனால் அவள் சுகன்யாவுடன் வந்திருந்தாளே! எனவே முடியாது என்று அவளது உதட்டைப் பிதுக்கியவள் “நான் சுகி கூட வந்திருக்கேன் கிரிஷ்… அவ என்னை எங்கேயும் போக அலோ பண்ண மாட்டாளே” என்று கூறியவளின் கன்னம் பற்றி கொஞ்சினான் கிருஷ்ணா.
“அச்சோ! இந்தக் குட்டிப்பாப்பாவை பூச்சாண்டி பிடிச்சுட்டுப் போயிடுவானோனு அந்தக் குட்டிப்பாப்பாக்கு பயம் போல” என்று கிண்டல் செய்தவனின் செவியில் விழுந்தது சுகன்யாவின் “நான் ஒன்னும் குட்டிப்பாப்பா இல்லை மிஸ்டர் கிருஷ்ணா” என்ற கணீர்க்குரல்.
கிருஷ்ணா துளசியின் கன்னத்தை விட மனமில்லாதவனாய் அவளோடு சேர்ந்து திரும்பியவன் அங்கே கத்தரிக்காய்க்கு கை கால் முளைத்தது போல நின்று கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணைப் பார்த்து யாருடா இது என்பது போல வேடிக்கைப் பார்க்க அவளோ அவன் அருகில் நின்ற துளசியைத் தன்னருகில் இழுத்துக் கொண்டாள்.
கிருஷ்ணாவுக்குப் புரிந்து போயிற்று அவள் யாரென்று. இந்த ஐந்தடி கத்தரிக்காய் தான் துளசி அவ்வளவு தூரம் பயந்த சுகன்யாவா என்று கிண்டலுடன் எண்ணிக்கொண்டான். அவனது குட்டிப்பாப்பா என்ற வார்த்தையில் அவள் எரிச்சலுற்றிருக்கிறாள் என்பதை அவள் முகபாவத்திலிருந்து அறிந்து கொண்டான் அவன்.
சுகன்யாவிடம் துளசி கிருஷ்ணாவை அறிமுகப்படுத்திவைத்தாள். சுகன்யாவுக்கும் அவனைக் குறை சொல்ல எதுவுமில்லை. பார்ப்பதற்கு கண்ணியமானவனாக இருக்கிறான். தன்னுடன் பேசிய நேரங்களிலும் அவனது பார்வை காதலுடன் துளசியையே சுற்றிச் சுற்றி வருவதைக் கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்தும் போனாள் சுகன்யா.
இறுதியாகத் துளசியின் கனவுலோகத்தின் ராஜகுமாரன் வந்தே விட்டான் என்பதில் அவளுக்குமே மகிழ்ச்சி தான். எனவே தான் கிருஷ்ணா அவளுக்கு வைத்த “ஜிஞ்சர் பிரட்” என்ற பெயரையும் அவள் பொருட்படுத்தவில்லை.
துளசியை ஐந்து மணி வாக்கில் வீட்டில்விட்டு விடவேண்டும் என்ற நிபந்தனையோடு அவளைக் கிருஷ்ணாவுடன் அனுப்பி வைத்துவிட்டுக் கிளம்பினாள் சுகன்யா.
துளசி கிருஷ்ணாவின் காரில் அமர்ந்தவள் “நம்ம எங்கே போகப் போறோம் கிரிஷ்?” என்று கேட்க
“வேற எங்கே நம்ம பங்களாவுக்குத் தான்” என்று அவன் சொல்லவும் துளசி கண்ணை உருட்டவே “உடனே மிரட்டாதடி… ஜஸ்ட் அங்ககே போய் சாப்பிட்டுட்டு எஸ்டேட்டை ரவுண்ட் வருவோம்னு சொல்ல வந்தேன்… என்னைச் சந்தேகப்படுறதையே வேலையா வச்சிருக்கிற நீ!” விரலை நீட்டி மிரட்டியபடியே காரை அவனது எஸ்டேட்டை நோக்கிச் செலுத்த ஆரம்பித்தான் கிருஷ்ணா.
ஆனால் அங்கே ஒருவன் மறைந்திருந்து அவனையும் துளசியையும் கண்காணித்தது, அவர்களைப் புகைப்படம் எடுத்தது எதையும் கிருஷ்ணா அறியவில்லை. கிருஷ்ணாவின் கார் அங்கிருந்து அகன்றதும் போனை எடுத்து விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தான் அவன்.
“ஹலோ! அகில் சார் நான் தேவா பேசுறேன்… கிருஷ்ணா சார் இப்போ தான் ஒரு பொண்ணோட கார்ல போறாரு… நான் போட்டோ எடுத்துட்டேன் சார்… உங்களுக்கு அனுப்பிடவா?” என்றபடி நகர்ந்தவன் அளித்த தகவல்களோடு கிருஷ்ணாவும் துளசியும் அருகருகே நிற்கும் புகைப்படங்களும் அவனது போனை அடைய அவற்றை வெறித்துக் கொண்டு நின்றிருந்தான் அகிலேஷ் சக்கரவர்த்தி.
அவனது மனதில் ஏஞ்சலினாவின் நினைவு எழுந்தது.
“என்னை ஏஞ்சலினா கிட்ட கடைசி வரைக்கும் நெருங்க விடாம பண்ணிட்டு நீ மட்டும் சந்தோசமா காதலிச்சிடுவியா கிருஷ்ணா? நான் இருக்கிற வரைக்கும் அது நடக்காதுடா… என் பிஸினஸ்ல, பெர்சனல் லைஃப்ல உன்னால நான் பட்டக் கஷ்டங்கள் அதிகம்… அது எல்லாத்துக்கும் மொத்தமா உன்னைப் பழிவாங்குறதுக்கு இப்போ தான் எனக்குச் சந்தர்ப்பம் வாய்ச்சிருக்கு” என்று வெஞ்சினத்தோடு உரைத்தவன் யாருக்கோ போன் செய்து பேச ஆரம்பித்தான்.
“ஹலோ! நீ எப்பிடி இருக்க?”
“……………………………………………………….”
“இப்போ பிரச்சனை என்னைப் பத்தி இல்லை.. உன்னோட உயிர்க்காதலன் கிருஷ்ணாவைப் பத்தி… ஊட்டியில தான் அவன் இப்போ இருக்கிறான்.. அங்கே அவனையே சுத்தி சுத்தி வர்றா ஒரு பொண்ணு… இப்பிடியே போனா கிருஷ்ணா உன் கனவுல கூட உனக்குக் கிடைக்க மாட்டான்”
“……………………………………………………………”
“இதை நீ கிருஷ்ணா கிட்ட தான் கேக்கணும்… நீ எந்த விதத்துல குறைஞ்சுப் போயிட்டேனு உன்னை வேண்டானு சொல்லிட்டு அவன் வேற ஒரு பொண்ணை செலக்ட் பண்ணிருக்கான்? உன் அழகுல அவ பாதி கூட வர மாட்டா… எல்லாம் உன் கையில தான் இருக்கு… இப்போ விட்டேனா நீ இந்த ஜென்மத்துல கிருஷ்ணாவைப் பத்தி யோசிக்க கூட முடியாது…
“………………………………………………………………….”
“உனக்காக எந்த ஹெல்ப் வேணும்னாலும் நான் செய்ய ரெடியா இருக்கேன்… பட் ஏஞ்சலினா தன்னோட மரணப்படுக்கையில கிருஷ்ணாவை கிஸ் பண்ணுன போட்டோ இருக்கு சொன்னியே, அது எல்லாமே எனக்கு வேணும்… நீ அதை மட்டும் எனக்கு அனுப்புஅதை வச்சே கிரிஷ்ஷை அமெரிக்கா வர வைக்கிறேன்… ஓகே! நீ போட்டோவை அனுப்பு… பை.. டேக் கேர்” என்று எதிர்முனையில் இருந்தவளிடம் உரைத்துவிட்டுப் போனை வைத்தான் அகிலேஷ்.
“கிருஷ்ணா உன்னோட வாழ்க்கையில காதல் அஸ்தமனம் ஆகுற நேரம் வந்துடுச்சுடா… காதலியோட பிரிவை நினைச்சு நீ துடிக்கிறதைப் பார்த்து நான் கண் குளிர ரசிக்கணும்… இனிமே எல்லாமே இந்த அகிலேஷ் சக்கரவர்த்தி நினைக்கிற மாதிரி தான் நடக்கும்” என்று உறுதியுடன் சொல்லிக் கொண்டான் அவன்.
*****************
எஸ்டேட் பங்களா…
கிருஷ்ணா துளசியுடன் மாடி வராண்டாவில் அமர்ந்திருக்க இருவரின் முன்னே சாப்பாடு பரப்பி வைக்கப்பட்டிருந்தது. கிருஷ்ணா தாங்கள் வரப்போகும் விஷயத்தை முன் கூட்டியே கூறிவிட்டதால் பங்களாவின் சமையல்காரரிடம் தகவல் தெரிவித்துவிட அவரும் அவன் சொன்ன அனைத்தையும் சமைத்து தயாராக வைத்திருந்தார்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
துளசி வரும்போதே பசிக்கிறது என்று சொல்லிவிட வந்ததும் வராததுமாக இருவரும் சாப்பிட அமர்ந்தனர். மாடிவராண்டாவில் வேடிக்கை பார்த்தபடி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று துளசி சொல்லிவிடவே கிருஷ்ணா அவளுடன் சேர்ந்து அனைத்தையும் மாடிக்கு எடுத்துச் சென்றான்.
இருவரும் அருகருகே அமர்ந்தவர்கள் அவர்களுக்கான உணவைத் தட்டில் போட்டுக்கொண்டு கலகலப்பாக உரையாடியபடி சாப்பிட ஆரம்பித்தனர்.
“கிரிஷ்! நான் உனக்கு ஒரு நிக் நேம் வச்சிருக்கேன் தெரியுமா? அதுவும் உன்னைப் பார்க்கிறதுக்கு முன்னாடியே” என்று துளசி கூறவும் கிருஷ்ணாவின் புருவங்கள் ஏறி இறங்கியது அழகாய்.
“என்ன நிக் நேம் பேபி?” என்றவனிடம்
“பிரின்ஸ்… நல்லா இருக்கா?” என்று ஆவலுடன் கேட்க
“சூப்பரா இருக்கு என் பேபியை மாதிரியே! நானும் உனக்கு ஒரு நிக் நேம் வச்சிருந்தேன்… பட் அதை இப்போ சேஞ்ச் பண்ணனுமே” என்று கவலை போலச் சொன்னவனிடம்
“ஏன் கிரிஷ்?” என்று பரிதாபமாக வினவினாள் துளசி.
“நான் உனக்கு ஏஞ்சல்னு நேம் வச்சிருந்தேன்.. பட் நீ தான் என்னை பிரின்ஸ் ஆக்கிட்டியே! சோ இனிமே நீ எனக்கு பிரின்சஸ்…” என்று கிருஷ்ணா அழகாய் விளக்க
“வாவ் கிரிஷ்! ரெண்டுமே நல்லா இருக்குடா” என்றபடி சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்க ஆரம்பித்தாள் துளசி.
கிருஷ்ணா “நான் உன்னை விட ஆறு வயசு பெரியவன்டி! என்னை வாடா போடானு கூப்பிடுறே” என்று பொய்யாய்க் குறைபடவே
“நீ என்னோட பிரின்ஸ் ஆயிட்டல்ல, அப்புறம் மரியாதைலாம் எதிர்பார்க்கக் கூடாது… அன்பானவங்களை மரியாதை கொடுத்து கூப்பிடுறது ஏதோ தூரமா நிறுத்தி வைக்கிற மாதிரி கிரிஷ்” என்று சொல்லிவிட்டு சூப் கிண்ணத்திலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து அவன் வாயில் ஊட்டிவிட்டாள் அவள்.
கிருஷ்ணா சூப்பை குடித்தவன் “அஹான்! அப்போ மிஸ்டர் ராமமூர்த்தியையும் நீ டேய் ராமமூர்த்தினு கூப்பிடலாமே! பிகாஸ் அவரும் உனக்கு அன்பானவரு தானே” என்று கிண்டலாய் சொல்லிக் கண் சிமிட்ட, துளசி தனது தந்தையைக் கேலி செய்ததில் கடுப்பாகி அவனது புஜத்தில் கிள்ளி வைத்தாள்.
“ஆவ்! வலிக்குதுடி ராட்சசி” என்றபடி கையைத் தடவிவிட்டுக் கொண்டான் கிருஷ்ணா.
துளசி “நல்லா வலிக்கட்டும்டா! எங்க அப்பாவை நீ கிண்டல் பண்ணுவியா? கொன்னுடுவேன் ராஸ்கல்” என்று விரலை நீட்டி மிரட்ட
கிருஷ்ணா “ரொம்ப மிரட்டாதடி! இன்னும் கொஞ்சநாள் தான், நமக்கு மேரேஜ் மட்டும் ஆகட்டும்… எனக்கும் ஒரு மகள் பிறப்பா! நீ இப்போ சொல்லுறியே இதே வார்த்தையை அவ உன் கிட்டச் சொல்லுவா… ஐயோ அந்தக் காட்சியை நினைச்சா இப்போவே உள்ளுக்குள்ள ஆனந்தமா இருக்குதே… அப்போ உன் முகம் போற போக்கை நினைச்சா இன்னமும் ஆனந்தமா இருக்கு” என்று இன்னும் அதிகமாகக் கேலி செய்ய, இருவரும் செல்லமாகச் சண்டையிட்டபடியே சாப்பிட்டு முடித்தனர்.
துளசி சாப்பிட்டு விட்டுக் கையைக் கழுவிவிட்டு கிருஷ்ணாவுடன் சேர்ந்து பாத்திரங்களைக் கீழே எடுத்துச் சென்றவள் அவன் உள்ளே வைத்துவிடுவதாகச் சொல்லவும் மாடியில் வைத்துவிட்டு வந்த தனது பேக்கை எடுக்கச் சென்றாள்.
அங்கே அவளது பேக்கின் அருகில் ரிங்டோன் அடித்தபடி கிடந்தது அவனது மொபைல் போன். எடுத்தவள் யாரென்று பார்க்க ஏதோ வெளிநாட்டு எண் என்று தெரிந்ததும் யாராக இருக்கக் கூடுமென்ற ஆர்வத்துடன் அந்த அழைப்பை ஏற்றாள்.
“ஹலோ! ஹூ இஸ் திஸ்?” என்று கேட்டவளுக்கு
“ஹூ ஆர் யூ?” என்ற அமெரிக்க ஆங்கில உச்சரிப்பில் இருந்த கேள்வியுடன் கூடிய பெண்குரல் பதிலாக மறுமுனையிலிருந்து வர, யாரோ கிருஷ்ணாவிற்கு தெரிந்தவர்கள் போல என்று எண்ணினாள் துளசி.
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. நான் கிரிஷ் கிட்ட குடுக்கிறேன்” என்றவளுக்கு
“கிரிஷ்ஷா?…. நீ யாரு அவனோட கரெண்ட் கேர்ள் ஃப்ரெண்டா?” என்று ஏளனத்துடன் கேட்டாள் அந்த மறுமுனையில் அழைத்திருந்த பெண்.
துளசிக்கு அந்த வார்த்தையும் அவள் பேசிய தொனியும் எரிச்சலூட்ட “எக்ஸ்யூஸ் மீ! கிருஷ்ணா இனி ஜென்மத்துக்கு உன் கூட பேசமாட்டான்… மரியாதையா போனை வை” என்று அந்த எரிச்சலைச் சற்றும் மறைக்காதக் குரலில் கூறிவிட்டுப் போனை வைக்கப் போனவளைத் தடுத்தது மறுமுனையில் கேட்ட அமெரிக்க மங்கையின் குரல்.
“ஓவரா ஆட்டிட்டியூட் காட்டாதே ஓகே! நேத்திக்கு நான், இன்னைக்கு நீ, நாளைக்கு வேற ஒருத்தி… இது தான் கிருஷ்ணாவோட லைஃப் ஸ்டைல்… இன்னைக்கு நீ என் கிட்டப் பேசுன இதே வார்த்தையை நீ ஒரு நாள் இன்னொரு பொண்ணோட வாயில இருந்து கேப்பே” என்று உரைத்துவிட்டுப் போனை வைத்துவிட்டாள் அந்த அமெரிக்கப் பெண்.
துளசி பொங்கி வந்த கடுங்கோபத்துடன் “இந்த மாதிரி ஃப்ரெண்ட் கிரிஷ்கு எப்பிடி வாய்ச்சாளோ? சீ! எவ்ளோ சீப்பா பேசுறா? இது கிரிஷ்கு தெரிஞ்சா அவன் மனசு எவ்ளோ கஷ்டப்படும்? என் ஃப்ரெண்டே என்னைப் பத்தி இப்பிடி தப்பா பேசுறாளேனு மூனு நாளுக்கு ஃபீல் பண்ணுவான்… இது அவனுக்குத் தெரியவே கூடாது” என்று எண்ணியவளாய் அவனது போனில் இருந்து அந்த அழைப்பு வந்ததற்கான ஆதாரத்தை அழித்துவிட்டுத் தனது பேக்குடன் கீழே சென்றாள் துளசி.
அவளைக் கண்டதும் மலர்ந்த கிருஷ்ணாவின் முகம் சற்று முன்னர் இருந்த கோபத்தை அழித்துவிட துளசியின் முகமும் பூவாய் மலர்ந்தது. ஓடிச் சென்று கிருஷ்ணாவை அணைத்துக் கொண்டாள் துளசி.
“நேத்திக்கு நான், இன்னைக்கு நீ, நாளைக்கு வேற ஒருத்தி” என்ற வார்த்தை காதில் ஒலிக்கவும் துளசி கிருஷ்ணாவை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
“நான் யாருக்கும் உன்னை விட்டுக்குடுக்க மாட்டேன் கிரிஷ்” என்று உறுதியாகச் சொல்லிவிட்டு அவனை அணைத்துக் கொண்டவளின் நெற்றியில் முத்தமிட்டான் கிருஷ்ணா.
“எஸ்டேட்டை சுத்திப் பார்ப்போமா பிரின்சஸ்?” என்று கேட்டவனுக்கு உற்சாகமாகத் தலையசைத்துவிட்டு அவனுடன் கிளம்பினாள் துளசி.
அந்த அமெரிக்கப் பெண் பேசியதை அப்போதே கிருஷ்ணாவிடம் சொல்லியிருந்தால் தங்கள் வாழ்வில் நிகழப்போகும் அனர்த்தங்களையும் ஆறுவருடப் பிரிவையும் தவிர்த்திருப்பாள் துளசி. ஆனால் விதி என்ற கதாசிரியன் எழுதிய கதையில் துளசியும் கிருஷ்ணாவும் ஆறு வருடங்கள் பிரிந்து வருந்தவேண்டுமென்று தீர்மானித்தப் பிறகு வேறு யாராலும் அதை மாற்ற முடியுமா என்ன!