💗அத்தியாயம் 13💗

ராமமூர்த்தி காரில் ஏறி அமர்ந்ததிலிருந்து வீட்டுக்கு வரும் வரை சுகன்யாவிடம் எதுவும் பேசவில்லை. காரை நிறுத்திவிட்டு இறங்கியவள் நேரே வீட்டுக்குள் சென்றுவிட அவரால் மேற்கொண்டு வீட்டிலிருப்போர் முன்னிலையில் அவள் கிருஷ்ணாவுக்குப் போன் செய்த விஷயத்தைப் பற்றி கேட்க முடியாத சூழ்நிலை.

வீட்டுக்குள் சென்றதும் ஒரு பக்கம் ஒளியிழந்த கண்களுடன் வெளிறிப் போய் இருந்த மகளின் முகம் அவரை வருத்த மற்றொரு புறம் பிரம்மை பிடித்தது போல அமர்ந்திருந்த மீனாவின் நிலை துளசியைக் காட்டிலும் மோசம்.

இவர்களை எப்படி சாதாரண மனநிலைக்குக் கொண்டு வருவது என்ற யோசனையுடன் ஹாலின் சோபாவில் அமர்ந்தவருக்கும் பூனைக்குட்டி போல தன்னை உரசியபடியே உலா வரும் பேத்தியின் நினைவில் நெஞ்சம் கனத்துப் போய் தான் இருந்தது.

மீரா வெளிப்பார்வைக்கு நிதானமாக இருப்பது போலத் தோன்றினாலும் அவரும் உள்ளுக்குள் கலங்கிப் போய் தான் இருந்தார். அந்தப் பிஞ்சுக்குழந்தை யாருக்கு எதிரியாக இருக்க முடியும், அவளைப் போய் கருணையின்றி திட்டமிட்டுக் கடத்தும் அவசியம் யாருக்கு இருக்கும் என்றெல்லாம் யோசித்தவாறே துளசியையும் மீராவையும் அரும்பாடு பட்டு பழச்சாறு அருந்த வைத்துக் கொண்டிருந்தார் அவர்.

இவையனைத்தையும் வேதனை நிறைந்த விழிகளுடன் அளவிட்டுக் கொண்டிருந்த சுகன்யாவுக்கு கிருஷ்ணாவின் கையில் குழந்தை கிடைத்து விட வேண்டும் என்பது தான் இப்போதைய கவலை.

அவள் கிருஷ்ணாவுக்குப் போன் செய்து சிலமணிநேரத்துக்குப் பின் அவனும் விஷ்வாவும் சுகன்யா ராமமூர்த்தியுடன் சேர்ந்து புகார் அளித்த காவல் நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர்.

கிருஷ்ணமூர்த்திக்கு அவனைக் கண்டதும் ஆறு வருடக்கோபம் மெதுமெதுவாய் வெளியே எட்டிப் பார்க்க “உன்னை யாருடா இங்கே வரச் சொன்னது? தெளிவா போய்ட்டிருந்த என் பொண்ணோட வாழ்க்கையைக் கலங்குன குட்டையாட்டம் ஆக்கிட்டு இப்போ எந்த மூஞ்சியை வச்சிகிட்டு இங்கே வந்த நீ?” என்று கர்ஜித்தவரைச் சமாளிப்பதற்குள் சுகன்யா சிரமப்பட்டுப் போனாள்.

“அப்பா ப்ளீஸ்பா! இப்போ அவனால மட்டும் தான் நமக்கு ஹெல்ப் பண்ண முடியும்.. நீங்களே பார்த்திங்க தானே! நம்ம பேச்சுக்கு எந்தளவுக்கு மரியாதை இருந்துச்சுனு… சட்டம் சாதாரண மக்களுக்கு என்னைக்குமே உதவாதுப்பா… அது இவங்களை மாதிரி பணக்காரங்களைக் கண்டா கால்ல விழுந்து பணிவிடை செய்யும்” என்று நிதர்சனத்தை உரைக்கவே ராமமூர்த்திக்கும் இப்போதைய நிலையில் தனது கோபத்தையும் தாண்டி பேத்தி நலமுடன் திரும்ப வேண்டும் என்ற எண்ணமே மேலோங்க அதற்கு மேல் கிருஷ்ணாவைத் தடுக்கவில்லை அவர்.

கிருஷ்ணா இவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு விஷ்வாவுடன் காவல்நிலையத்துக்குள் செல்லவும் ஆய்வாளர் எழுந்து “ஹலோ சார்.. என்ன இந்தப் பக்கம்?” என்று முப்பத்திரண்டு முத்துப்பற்கள் மின்னப் பேச ஆரம்பிக்க

கிருஷ்ணா சுகன்யாவையும் ராமமூர்த்தியையும் கைகாட்டிவிட்டு “இவங்க குழந்தையைக் காணும்னு கம்ப்ளைண்ட் குடுத்தாங்களா?” என்று கேட்க

அவர் “ஆமா சார்! அந்தக் கேஸ் ஆதாரம் எதுவும் கிடைக்காம ஜவ்வா இழுக்குது… இதுங்க குழந்தைகளைப் பத்திரமா பார்த்துக்காதுங்க.. அப்புறம் பிள்ளையைக் காணும், தொல்லையைக் காணும்னு நம்ம உசுரை வாங்குதுங்க” என்று சலித்துக்கொள்ள ராமமூர்த்திக்கும் சுகன்யாவுக்கு அந்த ஆய்வாளரின் மேல் வந்த வெறுப்புக்கு அளவேயில்லை.

அவர்கள் பேசுவதற்குள் கிருஷ்ணா “காணாமப் போனது என்னோடப் பொண்ணு மித்ரா தான்… இவங்க என்னோட சிஸ்டர் இன் லா, அண்ட் இவர் என்னோட ஃபாதர் இன் லா.. கம்ப்ளைண்ட் குடுத்த துளசி என்னோட ஒய்ப்…” என்று சொன்னது தான் தாமதம் அவருக்கு முகம் செத்துவிட்டது.

ஏனெனில் அவர் விட்டேற்றியாக நடந்து கொண்டது ஊட்டியின் பெரும் தேயிலைத் எஸ்டேட்டின் உரிமையாளரின் மகளது கடத்தல் வழக்கில். அவரது மேலிடத்தில் அவனுக்கு இருக்கும் செல்வாக்கை அவர் நன்கு அறிவார்.

இதன் பின்விளைவு தனது வேலையைப் பாதிப்பதற்குள் சுதாரிக்க விரும்பியவர் “சார்… எங்களுக்கு எவிடென்ஸ் பெருசா கிடைக்கலை… அந்த ஸ்கூல்ல சிசிடிவி கேமரா ரிப்பேர் ஆகியிருந்துக்கு… அந்த வாட்ஸ்மேன் சொன்ன சாம்பல் கலர் காரை மட்டும் வச்சு கேஸை மேற்கொண்டு நகர்த்த முடியலை… அதோட கடத்துனவன் உங்க அப்பா கிட்ட கூட்டிட்டுப் போறேனு சொல்லித் தான் குழந்தையைக் கடத்தியிருக்கான்.. சோ அந்த சரவுண்டிங்ல யாருக்குமே சந்தேகம் வரலை” என்று காரணத்தை அடுக்கத் தொடங்கவும் கையுயர்த்தி அவரை நிறுத்துமாறு சைகை செய்தான் கிருஷ்ணா.

“நீங்க உங்க கடமையை ஒழுங்கா செய்யாததுக்குச் சொல்லுற சால்ஜாப்பைக் கேக்கிறதுக்காக நான் இங்கே வரலை… என் பொண்ணு எப்பிடி போனாளோ அப்பிடியே எனக்குக் கிடைக்கணும்.. இதுக்கு உங்களுக்கு என்னோட சைடில இருந்து எல்லா ஒத்துழைப்பும் கிடைக்கும்… உங்களோட விசாரணையை என் கிட்ட இருந்தே ஆரம்பிங்க” என்று நறுக்குத் தெறித்தாற் போல கூற, அவனது அக்குரல் ஆய்வாளர் நெஞ்சில் சிறிய அளவில் பூகம்பத்தை உண்டு பண்ணிவிட்டுப் பெருத்த சேதாரம் ஏதுமின்றி அடங்கியது.

அதன் பின் வேலைகள் மடமடவென்று நடந்தது. கிருஷ்ணாவிடம் இருந்தே விசாரணை ஆரம்பித்தது.

“உங்களுக்கு யார் மேலயாச்சும் சந்தேகம் இருக்குதா சார்? உங்களுக்குத் தொழில்ரீதியான போட்டி, விரோதங்கள்னு எதுவும் இருக்குதா?”

கிருஷ்ணா பெருவிரலால் புருவமத்தியில் தட்டிக்கொண்டவன், கண்ணை மூட அவனது நினைவில் தோன்றியது ஒரே ஒருவனின் முகம். எப்படி கிருஷ்ணாவை அழிக்கலாம் என்று வெறி கொண்டு அலைபவன் இந்த உலகிலேயே அவன் ஒருவன் மட்டுமே.

“ஏஞ்சலினாவுக்காக உன்னைப் பழிவாங்குவேன்டா.. இதுல என் சொத்து முழுக்க அழிஞ்சாலும் பரவால்ல… உன்னை நிம்மதியா இருக்கவிட மாட்டேன் கிருஷ்ணா” என்றவனின் ஆங்காரக்குரல் இப்போதும் காதுக்குள் ஒலித்து கிருஷ்ணாவின் நரம்புகளுக்குள் கோபவெறியை உண்டுபண்ண பற்களைக் கடித்தவன் “ராஸ்கல், இதுக்குப் பின்னாடி இருக்கிறது நீ தான்னு தெரிய வந்துச்சுனா அன்னைக்குத் தான் உன் வாழ்க்கையில கடைசி நாளா இருக்கும் அகிலேஷ் சக்கரவர்த்தி” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.

அவன் அருகில் அமர்ந்திருந்த விஷ்வாவின் செவியில் அகிலேஷின் பெயர் விழவும் ஆய்வாளரிடம் அவன் குறித்த தகவல்களைப் பகிரத் தொடங்கினான் விஷ்வா. தொழில் போட்டி மட்டுமல்லாது அகிலேஷுக்கும் கிருஷ்ணாவுக்கும் இடையில் சொந்தப் பிரச்சனைகளும் ஏராளம் என்று கூறியவன் சமீபத்தில் கிருஷ்ணாவின் தங்கை திருமணத்துக்கு அவன் வந்திருந்தான் என்றும் அத்திருமண வரவேற்பில் தான் கிருஷ்ணா தன் மனைவி மற்றும் மகளை உறவினர்கள் முன்னர் அறிமுகப்படுத்தினான் என்றும் கூறி முடித்தான்.

ஆய்வாளர் “அப்போ அவர் தான் இதுல சம்பந்தப்பட்டிருக்காருனு நீங்கச் சந்தேகப்படுறிங்களா?” என்று கேட்க

கிருஷ்ணா ஆவேசத்துடன் “சந்தேகம் இல்லை.. அந்தப் பைத்தியக்காரன் தான் இதுக்குக் காரணம்னு நான் உறுதியாச் சொல்லுவேன் சார்” என்றான்.

அந்த நேரத்தில் தான் விஷ்வாவுக்கு ராகுலிடம் இருந்து போனில் அழைப்பு வந்தது. ராகுல் தொழில் விஷயமாக நீலகிரி வரை சென்று திரும்பியவன் ஏதோ தொழில் விஷயமாக அவினாசி வரை செல்ல வேண்டியது வர அங்கே செல்லும் வழியில் அகிலேஷின் கையாள் என்று அந்த வட்டாரத்தில் அறியப்பட்ட தேவா காரை நிறுத்திவிட்டு யாரோ ஒரு மினிலாரி ஓட்டுனரிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்க, அந்தக் காரின் உள்ளே இருந்து ஒரு தலை வெளியே தெரியவும் அவன் பதறிப் போய் காரின் கண்ணாடியை உயர்த்திவிட்டதை ராகுல் பார்த்துவிட்டான்.

தனது காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு அவனது செயல்களைக் கண்காணித்தபடியே விஷ்வாவுக்குப் போன் செய்துவிட்டான்.

“ஆல்ரெடி கிருஷ்ணாவுக்கு நடந்த ஆக்ஸிடெண்ட்ல இவனோட பங்கு அதிகம்டா விஷ்வா.. இவன் நடவடிக்கை எதுவுமே சரியில்லை… அவன் காருல யாரையோ மறைச்சு வச்சிருக்கான்.. இப்போ சக்கரவர்த்தி குரூப்புக்கு இருக்கிற கொடவுனுக்குள்ள கார் போகுது… நான் அதுக்கு ஆப்போசிட்ல தான் நிக்கிறேன்” என்று படபடவென்று பொறிய

விஷ்வா “அவனோட கார் சாம்பல் கலராடா?” என்று கேட்க, ராகுலும் ஆமென்று உரைக்க விஷ்வா ராகுலிடம் சுருக்கமாகப் பிரச்சனையைக் கூறியவன் அவனை அங்கேயே காருடன் நிற்குமாறு சொல்லிவிட்டுப் போனை வைத்தான்.

ஆய்வாளரிடமும் கிருஷ்ணாவிடமும் தேவாவைப் பற்றி கூறியவன் இப்போது அந்த கொடவுனுக்குள் சென்றால் ஏதாவது ஆதாரம் சிக்க வாய்ப்புள்ளது என்று கூறவும் ஆய்வாளர் சில காவலர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.

நடப்பவை அனைத்தையும் நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டிருந்த சுகன்யாவையும் ராமமூர்த்தியையும் வீட்டுக்குச் செல்லுமாறு கிருஷ்ணா கூற இருவரும் சரியென்று தலையாட்டியபடி காவல்நிலையத்தை விட்டு வெளியேறினர்.

காரில் ஏறும்போதும் சுகன்யா “நானும் துளசியும் நடையா நடந்தும் மனசு இரங்காதவங்க பணக்காரன்னதும் கிருஷ்ணா தலையாலச் சொல்லுறதைக் காலால செய்யுறாங்க… எங்கேயும் பணத்துக்குத் தான் மதிப்பு போல” என்று எண்ணிக் கொண்டவள் எப்படியோ மித்ரா கிடைத்தால் போதும் என்று நினைத்தபடி ராமமூர்த்தியுடன் வீடு வந்து சேர்ந்தாள்.

நடந்ததை நினைவு கூர்ந்தவள் சோபாவில் சிந்தனைவயப்பட்டவராய் அமர்ந்திருந்த ராமமூர்த்தியிடம் “அப்பா! நான் கிருஷ்ணாவுக்குப் போன் பண்ணி போன காரியம் என்னாச்சுனு விசாரிக்கவா? எப்பிடியும் அவங்கப் போய் ஒரு மணிநேரத்துக்கும் மேலே ஆச்சே?” என்று கேட்க

ராமமூர்த்தி “அவங்க போன விஷயம் சரியா முடிஞ்சுச்சுனா அவனே கால் பண்ணுவான்டா… இப்போ நம்ம போன் பண்ணி எதுவும் பிரச்சனையா ஆகிடக் கூடாதும்மா” என்று சொல்லிவிட அதற்கு மேல் சுகன்யா கிருஷ்ணாவைத் தொடர்பு கொள்ள முயலவில்லை.

ஆனால் மதியம் கடந்து, மாலை மங்கி, இரவும் வந்துவிட கிருஷ்ணாவிடமிருந்து மட்டும் எத்தகவலும் வரவில்லை. ராமமூர்த்தி கிருஷ்ணாவை நம்பாவிட்டாலும் காவல்துறை மீதிருந்த நம்பிக்கையால் அமைதியாய் இருக்க, சுகன்யாவால் அப்படி இருக்க முடியவில்லை. கிருஷ்ணா இவ்விஷயத்தில் தலையிட்டது சுகன்யாவையும் ராமமூர்த்தியையும் தவிர யாருக்கும் தெரியவில்லை.

துளசி ஏன் உயிர் வாழ்கிறோம் என்னுமளவுக்கு வாழ்வை வெறுத்து ஒடுங்கிப் போய்விட்டாள். மகளுக்குப் பிடித்த லேவண்டர் வண்ண கவுனை மார்போடு அணைத்தபடி அவளது அறைக்குள் அமர்ந்து கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தாள் அவள்.

“நீ எங்கே இருக்க மித்தி? அம்மு நீ இல்லாம நல்லாவே இல்லைடா… சீக்கிரமா என் கிட்ட வந்துடு மித்தி.. நீ இல்லைனா உன் அம்முவால வாழவே முடியாது… இனிமே நான் உன்னைத் திட்டவே மாட்டேன்.. அப்புறம் உனக்குப் பிடிச்சதையோ பிடிச்சவங்களையோ பார்க்க விடாம நான் உன்னைத் தடுக்க மாட்டேன் மித்தி… என் கிட்டத் திரும்பி வந்துடுடா” என்று கேவலுடன் அந்த லேவண்டர் வண்ண கவுனைத் தடவியபடி கூறியளுக்கு மித்ராவின் பேச்சையும் சிரிப்பையும் எண்ணியபடி கண்ணை மூடினாள்.

அதே நேரம் சுகன்யா ஹாலில் அமர்ந்திருந்தவர்களை ஒருவாறு தேற்றி உணவு உண்ணச் செய்தவள், துளசியை அழைக்கச் செல்ல அங்கே அவளது தோழி மித்ராவின் உடையை அணைத்தபடி தரையிலேயே படுத்துத் தூங்கிவிட்டதை அறிந்ததும், அவளது அறையில் கணப்பை மூட்டிவிட்டு தோழிக்குப் போர்வையைப் போர்த்திவிட்டவள் அவளது உறக்கம் கலையாவண்ணம் அவளது அறையின் ஜன்னல்களை மூடிவிட்டுச் சென்றாள்.

***********

காலையில் விடிந்ததும் இயந்திரம் போல விழித்தாள் துளசி. அந்தக் காலைப்பொழுதில் மகள் அடிக்கும் லூட்டிகளை எண்ணியவளுக்கு அழுகை பொத்துக்கொண்டு வரவும் குளியலறைக்குச் சென்று முகத்தைக் கழுவியவள் இயந்திரம் போலவே காலைக்கடன்களை முடித்துவிட்டு தலையில் நீர் சொட்டச் சொட்ட அங்கிருந்து வெளியேறினாள்.

உடை மாற்றும் போதும் தலையைத் துவட்டும் போதும் இவ்வளவு ஏன் கீழே கிடந்தப் போர்வையை மடித்து வைக்கும் போதும் தனக்கு உதவி செய்கிறேன் பேர்வழியென மகள் செய்யும் குறும்புத்தனங்கள் நினைவுக்கு வரவே அவளது மனம் வெயிலில் வேருடன் வீசப்பட்ட இளஞ்செடியைப் போல வாடிவிட்டது.

கலங்கிய முகத்துடன் வெளியே வந்தவள் அங்கே காபியுடன் வந்த மீராவிடம் “மா! நான் வியூ பாயிண்டுக்குப் போறேன்” என்று கூறியவளிடம் பதற்றத்துடன் வந்தார் ராமமூர்த்தி.

“நீ இப்போ அங்கே போயே ஆகணுமாடா?” என்றவரை ஏறிட்டவள்

“என் மனக்குமுறலை அங்கே போய் கொட்டுனா தான் எனக்குக் கொஞ்சம் நிம்மதியாகும்பா.. அங்கே போனா என் பொண்ணு என் கிட்ட வந்துடுவானு தோணுதுப்பா.. நான் போறேன்பா” என்று கண்ணீர் மல்கக் கூறினாள்.

ராமமூர்த்தி “போறேனு சொல்லாதேடா.. போயிட்டு வர்றேனு சொல்லு” என்று மகளின் வார்த்தையைத் திருத்தியவர் அவளைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு அவளது அறைக்குள் சென்றவர் வெளியே வந்தவரின் கையிலிருந்த ஸ்வெட்டரைக் கண்டதும் அவரது பாசத்தில் கண் கலங்கிப் போய்விட்டாள் துளசி.

அவளிடம் ஸ்வெட்டரை அணியச் சொன்னவர் “உனக்கு உன் பொண்ணைப் பத்தி கவலை.. எனக்கு என் பொண்ணைப் பத்தியும் பேத்தியைப் பத்தியும் கவலை… எனக்கு நம்பிக்கை இருக்கு… இன்னைக்குள்ள மித்ரா நம்ம கிட்ட வந்துடுவா… நீ வேணும்னா பாரு” என்று மகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாகப் பேசியவரிடம் தலையாட்டிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினாள் துளசி.

கால் போன போக்கில் அந்தக் குளிரில் நடந்தவள் இறுதியாக அந்த வியூ பாயிண்டை அடைந்து விட்டாள்.

கொண்டை ஊசி வளைவுடன் கூடிய பள்ளத்தாக்குப்பகுதி அது.. அதன் வண்ணமயமான காட்டுமலர்ச்செடிகள் நிறைந்த மேட்டுப்பகுதியில் கிடந்தது ஒரே ஒரு மரத்தினாலான பெஞ்ச். காட்டுச்செடிகளும் கொடிகளும் அதைச் சூழ்ந்திருக்க ஒவ்வொரு முறை அதில் அமரும் போதும் ஒரு தேவதையைப் போல உணர்வாள் துளசி.

அங்கிருந்து பார்த்தால் மலைமுகடுகள் கம்பீரமாக நிற்பது தெரியும்… அதன் கீழே கிடுகிடுவென்ற பள்ளம். அதோடு அந்த வளைவில் நின்ற வான் தொடும் மரங்கள் என அப்பகுதியை இயற்கையன்னை தன் கைவண்ணத்தை வஞ்சனையின்றி காட்டி பேரழகாய் மாற்றியிருந்தாள்.

ஆனால் கொண்டை ஊசி வளைவின் காரணமாக அங்கே சிறிதும் பெரிதுமாக கடந்த காலங்களில் நடந்திருந்த விபத்துகள் அப்பகுதியைப் பற்றிய புரளிகளை அவ்வட்டாரத்தில் தோற்றுவித்து விட்டன. இவ்வளவு ஏன் துளசியின் பெற்றோரும் அவளது பாட்டியும் விபத்தில் சிக்கி மறைந்ததும் இவ்விடத்தில் தான்.

ஆனால் இப்புரளிகள் எதுவுமே துளசியைத் தடுக்கவில்லை. ஏனெனில் அவளது வாழ்வின் பல முக்கிய நிகழ்வுகளுக்கு இந்த வியூ பாயிண்ட் தான் சாட்சியாக இருந்து வந்திருக்கிறது இது வரை…

அதனால் அவளது வருகையைத் தடை செய்யும் சக்தி அந்த அர்த்தமற்றப் புரளிகளுக்கு இல்லை.

எப்போதும் போல அந்தப் பெஞ்சில் அமர்ந்தவள் வழக்கம் போலத் தன் பெற்றோரும் பாட்டியும் இருப்பதாகப் பாவித்துப் பேசாமல் அமைதியாகச் சிலை போல அமர்ந்திருந்தாள். எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாளோ தெரியவில்லை.

வெறிக்க வெறிக்கப் பார்த்தபடி அமர்ந்திருந்தவளின் செவியில் “அம்மூமூ” என்ற மித்ராவின் அழைப்பு தேனாய்ப் பாய ஆவலுடன் திரும்பினாள் துளசி.

இவ்வளவு நேரம் மேகங்களுக்கிடையே கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த ஆதவன் தனது பொற்கதிர்களை மெதுவாக உதகமண்டலத்தின் மலைமுகடுகளில் பதிக்க ஆரம்பித்திருக்க, லேவண்டர் வண்ண ஸ்கர்ட்டில் அவளது முன்னுச்சி கூந்தலை அங்கே வீசிய இளந்தென்றல் கலைத்துவிட துளசியின் குட்டித் தேவதை நின்றிருந்தாள்.

அவளது கரத்தைப் பற்றியபடி பொன்னிற சூரியவெளிச்சத்தில் முகம் மின்ன மற்றொரு கரத்தைப் பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்தபடி நின்றான் கிருஷ்ணா.

எந்த இடத்தில் இந்த இருவரும் அவளது வாழ்க்கைக்குள் நுழைந்தனரோ அந்த இடத்திலேயே மீண்டும் அவர்களைக் கண்ட மகிழ்ச்சி பொங்கி வழிய, காணாமல் போன மகள் கண் முன் நிற்பதைக் கண்டு இத்தனை நாள் தவிப்பெல்லாம் மாயமாக, துளசி கிருஷ்ணாவையும் மித்ராவையும் நோக்கி ஓடினாள்.

அவர்கள் அருகில் சென்று நின்றவள் மகளிடம் குனிந்து அவளை மார்போடு அணைத்துக்கொண்டாள்.

“உன்னைப் காணும்னதும் அம்மு ரொம்ப பயந்துப் போயிட்டேன் தெரியுமா?” என்றபடி கண்ணீருடன் மகளின் கன்னத்தில் மாறி மாறி முத்தமழையைப் பொழிந்தவளை மித்ராவும் அணைத்துக் கொண்டாள்.

அன்னையின் கன்னத்தில் வழியும் கண்ணீரைத் தன் பூங்கரங்களால் துடைத்தவள் “அம்மு இனிமே நான் எங்கேயும் போகமாட்டேன்.. நீங்க அழாதிங்க” என்று கூறியவள் கிருஷ்ணாவின் புறம் திரும்பி “நீங்களும் குனிங்கப்பா” என்று அழகாய்க் கூற மகளின் கட்டளைக்கு அடிபணிந்து முழந்தாளிட்டான் கிருஷ்ணா.

தன் முன்னே நின்ற இருவரையும் கோலிகுண்டு கண்களால் பார்த்த மித்ரா இருவரையும் ஒரு சேர அணைத்துக்கொள்ள இருவரது கரங்களும் அவர்களை அறியாமல் உயர்ந்து மகளின் முதுகில் இணைந்து அவளைத் தங்களுடன் சேர்த்து அணைத்துக் கொண்டன.

தொடரும்💗💗💗