💗அத்தியாயம் 12💗
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
காலை நேரத்தில் புகைபடிந்த ஓவியம் போல இருந்த ஊட்டி மெதுமெதுவாக கதிரவனின் கதிர்கள் பரவி அப்புகை மூட்டத்தை விலக்கிவிடவும் தனது உண்மையான பசுமைநிறத்தைப் பூசிக்கொள்ள ஆரம்பித்திருந்தது.
சிறு தோட்டமும், வாகனத்தை நிறுத்த குட்டி கார் பார்க்கிங்குமாக எளிமையிலும் மின்னியது அச்சிறுவீடு. அதன் வாசலில் டாக்சி வந்து நிற்கவும் இறங்கிய ஒரு நடுத்தர வயது மனிதர் டாக்சி டிரைவரிடம் பணம் கொடுத்துவிட்டு மனைவியுடன் சேர்ந்து தங்கள் உடைமைகளை வெளியே எடுத்து வைத்துவிட்டு அந்த வீட்டை நோட்டமிட்டார் ரசனையுடன்.
“லுக் மீரா! நம்ம வீடு முன்னைக்கு இப்போ ரொம்ப அழகாயிடுச்சுல்ல…. என் பொண்ணு செடி, கொடிகளை வளர்த்து இதை ஏதோ தேவதை வாழுற வீடாட்டம் வச்சிருக்கா பாரு… அதுலயும் இந்த குட்டி டேலியா பூவும், ஜன்னல்ல படர்ந்திருக்கே அந்தக் கொடியும் எவ்ளோ அழகா இருக்குல்ல… ரெண்டோட பூவுமே எனக்குப் பிடிச்ச ரிம்சன் ரெட்” என்று கண்ணை மூடி அனுபவித்துச் சொன்னார் அந்த மூக்குக்கண்ணாடி போட்ட மனிதர்.
அவரருகில் நின்ற மீரா என்று அவரால் அழைக்கப்பட்ட அப்பெண்மணி “க்கும்… அது ரிம்சன் ரெட் இல்லை ராம்… கிரிம்சன் ரெட்… ஒரு விஷயம் என்னன்னு தெரியலைனாலும் வாய்க்கு வந்ததைச் சொல்ல வேண்டியது” என்று மோவாயைத் தோளில் இடித்துக்கொள்ள
அவர் “எது எப்பிடியோ ரெட் கலர்னு கரெக்டா சொன்னேனா இல்லையா, அங்கே நிக்கிறான் இந்த ராமமூர்த்தி. நீ இது தான் சாக்குனு என்னைக் கேலி பண்ணிச் சந்தோசப்பட்டுக்கோ மீரா.. பொண்டாட்டியாச்சேனு நான் வேணும்னா நீ கேலி பண்ணுறதைப் பொறுத்துப் போவேன்.. ஆனா என் பொண்ணு அப்பாவை யாராச்சும் ஒரு வார்த்தை சொன்னா எரிமலையா மாறிடுவா… பீ கேர்ஃபுல்” என்று பெருமையாய்ச் சொன்னபடி மூக்குக்கண்ணாடியை உயர்த்திவிட்ட மனிதரைக் கண்டு தலையிலடித்துக் கொண்டார் அவரது மனைவி..
“உங்க இம்சை உலகமகா இம்சைங்க! பேத்தி எடுத்தாச்சு, இன்னும் இந்த நக்கலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை… வயசாகுதே தவிர இந்த வாய் இன்னும் குறைய மாட்டேங்குது… ஒழுங்கா நேத்தைக்கு நைட் கால் பண்ணுனப்போவே துளசி கிட்ட நம்ம வர்றோம்னு சொல்லிருக்கலாம்… அவ காரோட பஸ் ஸ்டாண்டுக்கு வந்திருப்பா.. அதை விட்டுட்டு இந்த வயசானக் காலத்துல அவளுக்கு சர்ப்ரைஸ் குடுக்கிறேனு என்னையும் இந்தக் குளிர்ல நிறுத்தி வச்சு இவ்ளோ வக்கணையா பேசுறிங்களே! இந்த வாயை அடைக்க, சீக்கிரமே கடவுள் யாரையாச்சும் அனுப்பி வைப்பார்” என்று புலம்பித் தீர்க்க
ராமமூர்த்தி “இந்த ராமமூர்த்தியைப் பேசவிடாம பண்ணுற அளவுக்கு இன்னும் யாரும் இந்த உலகத்துல பிறக்கலை மீரா” என்று சொல்லிப் பெருமையாய் மார்த்தட்டிக் கொண்டவரைக் கண்டு முகம் சுருக்கினார் அவரது மனைவி.
“எல்லாம் சரி தான்… இப்போ உங்களுக்கு வீட்டுக்குள்ள போற ஐடியா இருக்கா? இல்லையா? இந்தக் குளிர்ல ரொம்ப நேரம் நின்னா உங்களுக்கு ஒத்துக்காதுங்க.. ஒழுங்கா என் கூட வாங்க” என்ற அதட்டலுடன் லக்கேஜைத் தூக்கிக் கொண்டவர் கணவருடன் வீட்டை நோக்கி நடை போட்டார்.
ராமமூர்த்திக்கு வீட்டுக்கு அருகில் வரும் போது தான் அதன் அமைதி மூளையில் உறைத்தது. இவ்வளவு நேரத்துக்கு அவரது பேத்தி எழுந்திருப்பாள்… அவளது குரல் இந்த வீட்டை வளைய வர வேண்டுமே என்ற யோசனையுடன் கதவைத் தொட, அது தாழிடாமல் இருந்ததால் சட்டென்று திறந்து கொண்டது.
வராண்டாவைத் தாண்டி உள்ளே சென்றவர், ஹாலின் சோபாவில் ஓய்ந்து போனவளாய் கன்னத்தில் கண்ணீர் வடிந்த தடத்துடன் இடிந்து போய் அமர்ந்திருந்த துளசியைக் கண்டதும் அதிர்ச்சியில் சிலையானார்.
அவருடன் வந்த மீராவோ மகளின் முகத்திலிருக்கும் தவிப்பை உணர்ந்தவர் வீட்டின் விளக்கை போட அவ்வொளியில் திடுக்கிட்டு நிமிர்ந்த துளசி இவர்கள் இருவரையும் கண்டதும் “அப்பா! மா!’ என்று கேவலுடன் எழுந்து ஒருசேர இருவரையும் அணைத்துக் கொண்டாள்.
ராமமூர்த்தியும் மீராவும் தாங்கள் ஆசையாய்ப் பார்க்க வந்த மகளுக்கு என்னவாயிற்றோ என்று பதறியவர்களாய் ஆள் மாற்றி ஆள் அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளது அழுகையை நிறுத்த முயல, துளசி விழியில் தேக்கி வைத்திருந்த கண்ணீர் முழுவதையும் கொட்டித் தீர்த்தாள்.
மீரா அவளைத் தட்டிக்கொடுத்து சோபாவில் அமரவைத்தவர், வேகமாகச் சமையலறையை நோக்கிச் சென்று தண்ணீர் தம்ளருடன் திரும்பி வந்தார்.
குழந்தைக்குப் புகட்டுவது போல மகளுக்குத் தண்ணீரைக் கொடுத்து குடிக்க வைத்தவர், தனக்குள் எழுந்த பயத்தை மனதில் பூட்டிவைத்தபடி துளசியை ஆதுரத்துடன் பார்த்தவர் “என்னடா ஆச்சு? ஏன் நீ இப்பிடி உடைஞ்சு போயிருக்க? ஆமா, எங்கே மித்ரா?” என்று மித்ராவைத் தேட ஆரம்பிக்கவும் துளசியின் விழியில் மீண்டும் கண்ணீர் நிரம்பியது.
உணர்ச்சியற்றக் குரலில் “மித்ராவைக் காணும்மா” என்றாள் அவள்.
அவள் சொன்ன செய்தியில் திடுக்கிட்ட அவளது அன்னையும் தந்தையும் வாயில்கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் யாரென்று திரும்பி பார்க்க அங்கே சுகன்யா நடைபிணம் போல நின்றிருந்தாள்.
ராமமூர்த்தி “சுகிம்மா! துளசி என்னடா சொல்லுறா? மித்ராக்கு என்னாச்சு?” என்று அவளிடம் பதைத்துப் போன குரலில் கேட்க
சுகன்யா அழுகையை அடக்கியக்குரலில் “மித்ராவை யாரோ கடத்திட்டாங்கப்பா… ரெண்டு நாளாச்சு, குழந்தையைப் பத்தி எந்த தகவலும் போலீஸ்காரங்க சொல்ல மாட்டேங்குறாங்க” என்று கூறிவிட்டு சிலை போல நின்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சத்துக்குச் சென்றுவிட்டனர் ராமமூர்த்தியும் மீராவும். அவர்களை அறியாமல் கண்ணீர் பெருக எப்போது நடந்தது இது என்று விசாரிக்க ஆரம்பித்தனர்.
சுகன்யா இரண்டு நாள் முன்னர் நடந்ததை அவர்களிடம் அழுகையுடன் விளக்க ஆரம்பித்தாள்.
அன்று பள்ளியில் மித்ராவை யாரோ கடத்தியது உறுதியானதும் சுகன்யா துளசிக்குத் தைரியம் சொல்லிக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றாள்.
“சார் எங்க குழந்தையைக் காணும்… கம்ப்ளைண்ட் குடுக்கணும்”
“அதோ அங்கே ரைட்டர் இருக்காரும்மா! போய் அவர் கிட்ட கம்ப்ளைண்ட் குடுங்க” என்று காவலர் ஒருவர் கைகாட்ட சுகன்யா வெடித்த அழுகையை அடக்கியபடி புகார் கொடுக்கத் தொடங்கினாள்.
அடுத்து ஆய்வாளரிடம் சென்றவர்கள் நடந்ததை ஒன்றுவிடாமல் விளக்க, ஆய்வாளர் “அப்பா கிட்ட கூட்டிட்டுப் போறேனு சொல்லிருக்கான்… அப்போ குழந்தையோட அப்பா உங்களோட இல்லையா?” என்று துளசியிடம் கேட்க அவள் தலை மட்டும் அதற்கு இல்லையென்று அசைந்தது.
ஆய்வாளர் நாற்காலியில் சாய்ந்து கொண்டவர் “அப்போ சிம்பிள்.. உங்க ஹஸ்பெண்ட் தான் உங்க பொண்ணை ஆள் வச்சு கூட்டிட்டுப் போயிருக்கணும்.. அது தெரியாம நீங்க வேற ஏன்மா எங்க நேரத்தை வேஸ்ட் ஆக்குறிங்க?” என்று சாவகாசமாகக் கூற
சுகன்யா “அதுக்கு வாய்ப்பு இல்லை சார்… இவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சு ஆறு வருசம் ஆகுது… அதுவுமில்லாம அவருக்குக் குழந்தையைக் கடத்துற அளவுக்கு மோட்டிவேசன் எதுவுமில்லை” என்று பதிலளித்தாள்.
ஆய்வாளர் கதை கேட்பது போல உம் கொட்டிக் கேட்டுக் கொண்டிருக்க, சுகன்யா “சார் பிளான் பண்ணி தான் மித்ரா கிட்னாப் ஆகிறதுக்கு முந்தினநாள் அந்த ஸ்கூலோட ஃப்ரன்ட் கேட்ல இருக்கிற சிசிடிவி கேமராவை உடைச்சிருக்காங்க..” என்று கூறிவிட்டு துளசியைப் பார்த்தாள்.
அவளோ எதுவும் பேசாமல் சிலை போல் இருக்க, சுகன்யாவே ஆய்வாளரிடம் “எப்போ சார் எங்க குழந்தை கிடைப்பா?” என்று கேட்க
அவர் “இப்போ தானே கம்ப்ளைண்ட் குடுத்திருக்கிங்க… இன்வெஸ்டிகேட் பண்ணித் தான் சொல்ல முடியும்.. இப்போ நீங்க போகலாம்” என்று கூறிவிட சுகன்யாவும் அவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் துளசியுடன் அங்கிருந்து அகன்றாள்.
ஆனால் புகார் கொடுத்து இரண்டு நாட்கள் ஆகியும் அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்று ராமமூர்த்தியிடம் கூறியவள் தான் இன்னும் சிறிதுநேரத்தில் காவல் நிலையத்துக்குச் செல்லப் போவதாகக் கூறினாள்.
தன்னுடன் வருமாறு ராமமூர்த்தியை அழைத்தவள் மீராவிடம் “மா! ரெண்டு நாளா துளசி சரியா சாப்பிடலை… வீட்டுல அம்மாவும் அழுதிட்டே இருக்காங்க… நீங்க ரெண்டு பேரையும் சமாதானப்படுத்திச் சாப்பிடவைங்கம்மா.. நானும் அப்பாவும் ஸ்டேசன் வரைக்கும் போயிட்டு வந்துடுறோம்” என்று சொல்ல, மீரா சரியென்று தலையாட்டினார்.
சுகன்யா சொன்னபடி மீரா மீனாவையும் துளசியையும் அதட்டி உருட்டிச் சாப்பிடவைத்தவர் மித்ரா சீக்கிரம் வந்துவிடுவாள் என்று தைரியம் கொடுத்தார். அதே நேரம் மித்ராவும் ராமமூர்த்தியும் காவல் நிலையத்துக்கு விரைந்தனர்.
*********
ஆர்.கே மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்…
“ஹீ இஸ் ஆல்ரைட் நவ்.. பட் அவரை கேர்ஃபுல்லா பார்த்துக்கோங்க… அதிர்ச்சி தர்ற மாதிரி எதையும் அவர் கிட்டச் சொல்லாதிங்க… முடிஞ்சளவுக்கு அவர் மனசு அமைதியா இருக்கணும்… ரெகுலரா சாரை செக் பண்ண நம்ம மோகன் வருவாரு” என்று மருத்துவர் பத்துப் பக்கத்திற்கு அறிவுரை கூறிவிட்டு ராகவேந்திரனை டிஸ்சார்ஜ் செய்வதற்கு ஒப்புக்கொண்டார்.
கிருஷ்ணாவும் விஜயேந்திரனும் பெருத்த நிம்மதியுடன் மருத்துவரின் அறையை விட்டு வெளியே வந்தனர். அங்கே அவர்களுக்காகக் காத்திருந்த சாரதாவிடமும் சஹானாவிடமும் ராகவேந்திரனை நினைத்து இனி பயப்படத் தேவையில்லை என்று கூறி அவர்களை வீட்டுக்குச் செல்லுமாறு பணித்தான் கிருஷ்ணா.
“சஹாம்மா! நீயும் சித்தியும் போய் பாட்டிகளோட கண்ணுல இருக்கிற டேமை குளோஸ் பண்ணுற வேலையைப் பாருங்க… டாட் அங்கே வந்ததும் அவங்க பாட்டுக்கு அழுது வைச்சிடப் போறாங்க… நானும் சித்தப்பாவும் டிஸ்சார்ஜ் ஃபார்மாலிட்டியை முடிச்சிட்டு வர்றோம்…” என்று அவர்களை அனுப்பிவிட்டு ராகவேந்திரனை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கான வழிமுறைகளைக் கவனிக்க விஜயேந்திரனுடன் சென்றான் அவன்.
அடுத்த அரைமணி நேரத்தில் ராகவேந்திரனுடன் ஆர்.கே.பவனத்தின் வாயிலில் நின்றனர் இருவரும். சாரதா அவர்களைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு ஆரத்தி தட்டுடன் திரும்பியவர் ராகவேந்திரனுக்கு ஆரத்தியைச் சுற்றவும் அவர் “என்ன சாரும்மா நான் என்ன போருக்கா போயிட்டு வந்திருக்கேன்?” என்று கேலியாய்ப் பேச
சாரதாவுடன் உள்ளே நின்ற இரு மூதாட்டிகளும் கண்கள் பனிக்க “கிட்டத்தட்ட போர் தானே ராகவா… நீ அந்த எமதர்மன் கிட்ட சண்டை போட்டு ஜெயிச்சுட்டு வந்துருக்க..” என்று கூறிவிட்டு முன்னரே சஹானா பெரியப்பாவின் முன்னே அழக்கூடாது என்று மிரட்டியது நினைவுக்கு வரவே கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டனர்.
சாரதா மூவரையும் உள்ளே செல்லுமாறு கூற தம்பியுடனும் மைந்தனுடனும் கிட்டத்தட்ட இரண்டு நாளுக்குப் பின்னர் தனது மாளிகையினுள் நுழைந்தார் ராகவேந்திரன்.
ஹாலில் அக்கடாவென்று அமர்ந்தவரின் அருகில் அமர்ந்து கொண்ட சஹானா அவரது தோளில் சாய்ந்தபடி ஏதோ கதை பேச ஆரம்பிக்கவும் சாரதா “சஹா இது என்ன குழந்தை மாதிரி? பெரியப்பாக்கு இப்போ தான் சரியாயிருக்கு… நீ வேற அவரைப் பேசியே தொந்தரவு பண்ணாதே” என்று அதட்ட சாரதாவை கையமர்த்தினார் ராகவேந்திரன்.
“சாரும்மா! என் பொண்ணோட பேச்சு எனக்கு என்னைக்குமே தொந்தரவு கிடையாது… நீ பேசுடா… ரெண்டு நாளா அந்த ஐ.சி.யூல பேச்சுத்துணைக்கு ஆளில்லாம தவிச்சுப் போயிட்டேன்டா” என்று தம்பியின் மகளுக்கு வக்காலத்து வாங்கி அவளது அரட்டையைக் கேட்க ஆரம்பித்தார்.
சாரதா செல்லமாக விஜயேந்திரனிடம் சலித்துக் கொண்டபடி மெர்சியை அழைத்து ராகவேந்திரனுக்கு பழச்சாறு கொண்டுவரும் படி பணித்தார்.
சிறிது நேரத்தில் பழச்சாறு வரவும் அதை ராகவேந்திரன் கையில் திணித்தவர்
“மாமா! இதைக் குடிச்சுட்டு நல்லா ரெஸ்ட் எடுங்க… உங்கப் பொண்ணு இன்னும் ரெண்டு நாளுக்கு இங்கே தான் இருப்பா… அப்புறமா ஆசை தீரப் பேசிக்கோங்க… இப்போ உடம்பை அலட்டிக்காதிங்க… நீங்க மூனு பேரும் ஆபிஸ் கிளம்புங்க” என்று வீட்டின் தலைவியாய் அனைவருக்கும் அவரவர் வேலையை நினைவூட்டி விரட்டினார்.
ரங்கநாயகியும் சுபத்ராவும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்றே என்ற நிம்மதியுடன் சிறிதுநேரம் தோட்டத்துப் பக்கம் காலாற நடப்பதற்காக அங்கிருந்து தோட்டத்தை நோக்கி சென்றனர்.
கிருஷ்ணா தந்தை பழச்சாறு அருந்தி முடித்ததும் சித்தப்பாவுடன் சேர்ந்து அவரை அவரது அறைக்குள் சென்று விட்டவன் “ரெஸ்ட் எடுங்க டாட்… மத்ததை ஈவினிங் பேசிக்கலாம்” என்று கூறிவிட்டு சித்தப்பாவுடன் நகர முனைய
அவனைத் தடுத்து நிறுத்தியது ராகவேந்திரனின் “கிருஷ்ணா நில்லுடா” என்ற வாஞ்சையானக் குரல்.
விஜயேந்திரனும் கிருஷ்ணாவும் அந்தக் குரலில் திரும்ப கிருஷ்ணாவிடம் கதவை அடைத்துவிட்டு வர ஆணையிட்டவர் மூவர் மட்டுமே அந்த அறையில் இருப்பதை உறுதி செய்துவிட்டு கிருஷ்ணாவிடம் அன்றைய சஹானாவின் பேச்சை நினைவுறுத்தினார்.
கிருஷ்ணா “அது….டாட்…. நீங்க தப்பா எதுவோ கேட்டுட்டு….” என்று தடுமாறவும்
விஜயேந்திரன் அண்ணனின் பேச்சில் உள்ள பொருளைப் புரிந்து கொண்டவராய் “அண்ணா கரெக்டா தான் புரிஞ்சிட்டிருக்காரு கிரிஷ்… இதை நேத்தே ஹாஸ்பிட்டல்ல வச்சு என் கிட்டச் சொல்லிட்டாரு… எல்லாத்துக்கும் சூத்திரதாரி சஹானா தான் தெரிஞ்சும் ஏன் இவ்ளோ நாள் அமைதியா இருந்த கிரிஷ்?” என்று வேதனை நிறைந்த குரலில் கேட்க
ராகவேந்திரனோ “ஆறு வருசமா அந்த ஒரு போட்டோவைக் காரணமா வச்சு உன்னை எவ்ளோ திட்டிட்டேன்டா ராஜா… இப்போ சொல்லுறேன்டா உன்னை மாதிரி ஒரு பிள்ளையைப் பெத்ததுக்கு நானும் சவிம்மாவும் குடுத்து வச்சிருக்கணும்… மரணப்படுக்கையில இருந்தப்போ கூட அந்தப் பொண்ணு ஏஞ்சலினா உன்னை நம்பியிருக்கா… அதனால தான் அவளோட அண்ணனுக்கு குடுக்க வேண்டியக் கடைசி முத்தத்தை உனக்கு குடுத்துருக்கா… கேக்கக்கூடாதவன் பேச்சைக் கேட்டு அதைப் போய் தப்பா நினைச்சுட்டேனேடா” என்று வருத்தம் நிறைந்த குரலில் பேசியவரை கிருஷ்ணா கண் கலங்க பார்த்தான்.
தந்தையையும் சித்தப்பாவையும் ஒருசேர மார்போடு அணைத்துக் கொண்டவன் “நீங்க ரெண்டு பேரும் என்னைப் புரிஞ்சுக்கிட்டதே எனக்குச் சந்தோசம் தான்…. இதுக்கு மேல இந்த வீட்டுல யாரும் யாரையும் நினைச்சு வருத்தப்படக்கூடாது… என்னோட அப்பாவும் சித்தப்பாவும் எப்போவும் கம்பீரமா இருக்கணுமே தவிர இப்பிடி உடைஞ்சுப் போகக் கூடாது” என்று கூறி அவர்களை நோக்கிப் புன்னகைத்தான்.
**************
காவல் நிலையத்தில் ராமமூர்த்தி ஆய்வாளரிடம் தன் பேத்தியின் நிலை என்னவாயிற்று என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
அவரது அசட்டையானப் பதிலில் வெகுண்டவர் “என்ன சார் இது? நான் கேட்ட எல்லாத்துக்கும் ஏறுக்குமாறா பதில் சொல்லிட்டிருக்கிங்க… காணாமப் போன என் பேத்தி ரொம்ப சின்னப்பொண்ணு சார்… ஆறு வயசு குழந்தை… அவளை எவனோ அப்பா கிட்டக் கூட்டிட்டுப் போறேனு சொல்லி ஏமாத்திக் கடத்திட்டுப் போயி இன்னையோட மூனு நாள் ஆகுது… இன்னும் ஒரு இன்ஃபர்மேசனும் தெரியலைனு சொன்னா என்ன அர்த்தம்?” என்று மனிதர் படபடவென்று வெடிக்க ஆரம்பித்தார்.
ஆய்வாளர் “நாங்க முயற்சி பண்ணிட்டுத் தான் இருக்கோம் சார்…. பட் எவிடன்ஸ் எதுவும் சிக்கலையே…. உங்கப் பேத்தி படிக்கிற ஸ்கூலோட சிசிடிவி கேமரா டேமேஜ் ஆகியிருக்கு… அது இருந்தா கூட வண்டி நம்பரை வச்சு அவனைக் கண்டுபிடிக்க டிரை பண்ணலாம்.. ஃபேக் நேம் ப்ளேட் வச்சிருந்தா கூட அவன் முகத்தை வச்சு அடையாளம் கண்டுபிடிக்க முயற்சிக்கலாம்… இது எதுவுமே இல்லாம நாங்க என்ன தான் பண்ண முடியும்? சொல்லுங்க” என்று சலிப்புடன் கூறிவிட்டு ஏதோ கோப்பை புரட்ட ஆரம்பித்தார்.
அதாவது நீங்கள் இருவரும் செல்லலாம் என்று சொல்லாமல் சொன்னார் அந்த ஆய்வாளர்.
ராமமூர்த்தி கோபத்துடன் ஏதோ சொல்லவர அவரைக் கையமர்த்திய சுகன்யா “அப்பா இனிமே இங்கே வேலை நடக்காது.. நம்ம போகலாம்” என்று சொன்னபடி அவரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.
காவல் நிலையத்தின் முன்னே நின்றவளின் மனதில் இந்த நேரத்தில் தங்களுக்கு உதவ கிருஷ்ணாவால் மட்டுமே முடியும் என்று தோன்றியது. துளசி என்ற சாதாரண பெண்ணின் மகளாக மித்ராவைக் கண்டுபிடிக்க ஆர்வம் காட்டாத காவல்துறை கண்டிப்பாக ஆர்.கே குழுமத்தின் தலைமை இயக்குனர் கிருஷ்ணாவின் மகளைத் தேட மும்முரத்துடன் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் போனை எடுத்துச் சஹானாவை அழைத்தாள் அவள்.
“ஹலோ சஹானா மேம்! நான் சுகன்யா பேசுறேன்… எனக்கு கிருஷ்ணா சார் நம்பர் குடுக்க முடியுமா?” என்று பேச ஆரம்பித்தவளை ஆராய்ச்சிப்பார்வை பார்த்தபடி நின்று கொண்டிருந்தார் ராமமூர்த்தி.
தொடரும்💗💗💗