💗அத்தியாயம் 11💗

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

துளசி சஹானாவின் திருமணத்துக்குச் சென்று வந்து ஒரு வாரம் கடந்துவிட்டது. ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக அன்றைக்குப் பிறகு கிருஷ்ணா ஏனோ துளசியைத் தொடர்பு கொள்ள முயலவில்லை. அதனாலோ என்னவோ துளசிக்கு இந்த ஒரு வாரம் முழுவதும் மனம் சொத்தென்று போனதைப் போன்ற உணர்வு.

பொட்டிக்கில் கூட கடமையே என்று நேரத்தைக் கழித்தவளுக்கு எப்போதும் இருக்கும் பரபரப்பு அவளை விட்டுத் தொலைந்துப் போனதைப் போல இருந்தது. இங்கே இவ்வாறென்றால் வீட்டுக்குச் சென்றால் மித்ராவின் ‘அப்பா எப்போ வருவாங்க அம்மு?’ என்ற கேள்வி அவளுக்குள் அடிக்கடி பூகம்பத்தை உண்டு பண்ணிக்கொண்டிருந்தது.

இருபத்து நான்கு மணிநேரமும் மகளின் அப்பா பஜனையைக் கேட்டுத் துளசிக்கே வெறுத்துப் போய்விட்டது. சில நேரங்களில் பொறுமையிழந்து குழந்தையிடம் கத்திவிடுவாள் துளசி.

அப்போதெல்லாம் மீனா அவளைப் பொறுமையாக இருக்குமாறு அறிவுறுத்துபவர் “அவ குழந்தை தானே துளசி. எல்லாரையும் போலத் தனக்கும் அப்பா வேணும்னு அவ ஆசைப்படுறது ஒன்னும் தப்பில்லையே… அதுக்காக கிருஷ்ணாவைப் பத்தி நீ யோசிக்கணும்னு நான் சொல்ல வரலை துளசி… நீ மித்ராவைப் பத்தி யோசி.., யோசிச்சு நல்ல முடிவா எடும்மா” என்று சொல்லிவிடுவார்.

அவர் சொன்ன அறிவுரையை மனதின் ஒரு ஓரத்தில் அசைபோட்டுக் கொண்டிருந்தவள் அன்று காலையில் மித்ரா மீண்டும் அப்பா புராணத்தை ஆரம்பிக்கவும் எரிச்சலுடன்

“என்ன எதுக்கெடுத்தாலும் அப்பா அப்பானு புலம்பிட்டிருக்க மித்தி? உன் அப்பா இனிமே இங்கே வர மாட்டாரு… எப்போவும் போல உன் கூட நான், சுகி அத்தை, மீனு பாட்டி மூனு பேரு தான் இருப்போம்… சோ இனிமே அப்பா வர மாட்டாங்களானு நீ கேக்கக் கூடாது சரியா?” என்று அதட்டவும் மித்ரா உதட்டைப் பிதுக்கி அழுவதற்குத் தயாரானாள்.

சுகன்யா தோழியையும் மித்ராவையும் அழைத்துச் செல்ல வந்தவள், துளசி மித்ராவிடம் உச்சஸ்தாயியில் கத்திக் கொண்டிருப்பதைக் கண்டுவிட்டு “துளசி வாட் இஸ் திஸ்? அவ குழந்தைடி… ஏதோ அப்பா மேல இருக்கிற பாசத்துல பேசுனா நீ இப்பிடியா கத்தி வைப்ப?” என்றபடி அழுகையுடன் நின்ற மித்ராவை அணைத்துக் கொண்டாள்.

“ஓ! மை லிட்டில் பிரின்சஸ், ஏன்டா கண்ணம்மா அழுற? இங்கே பாரு, உனக்கு அப்பா தானே வேணும்! ஆன்ட்டி இன்னைக்கு ஈவினிங் அப்பாவை அழைச்சுட்டு வருவேனாம்… இப்போ மித்தி அழாம குட் கேர்ளா ஸ்கூலுக்குக் கிளம்புவாளாம்” என்று மித்ராவைச் சமாதானப்படுத்தி அவளைக் காரில் போய் அமரும்படி கூறிவிட்டு துளசியிடம் திரும்பினாள்.

கைகளால் தலையைத் தாங்கியபடி அமர்ந்திருந்தவளின் முன் சென்று நின்றவள் “லுக் அட் மீ துளசி.., நீ நினைக்கிற மாதிரி மித்ரா அவளோட அப்பாவை அவ்ளோ ஈஸியா மறந்துட மாட்டா… அதுக்குக் காரணம் ரெண்டு மூனு தடவையே பார்த்திருந்தாலும் கிருஷ்ணா அவ மேல கொட்டுன அன்பு தான்… அவன் எந்த நம்பிக்கையில இதையெல்லாம் செய்றான்னு உனக்குப் புரியாத மாதிரி எனக்கும் புரியலை… ஆனா நீ எதுக்கும் கிருஷ்ணாவைப் பத்தி கொஞ்சம் யோசிக்கிறது நல்லதுனு எனக்குத் தோணுது” என்று கடைசி வார்த்தையில் தோழியை அதிரவைத்துவிட்டு அங்கிருந்து அகன்றாள் சுகன்யா.

துளசி அவள் சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தைக்கான அர்த்தத்தை யோசித்துப் பார்த்தபடியே கால்டாக்சியில் பொட்டிக்கை அடைந்தவள், நேரே அவளுக்கான இடத்தில் சென்று அமைதியாக அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தாள்.

**************

சஹானா ஆர்.கே பவனத்துக்கு வந்திருந்தவள் தனது திருமணநாளன்று இரவு அங்கே நடந்த கலவரத்தைக் கேள்விபட்டு வருத்தத்தில் உலாவினாள். ராகுலும் பிசினஸ் விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால் சஹானாவைத் தான் திரும்பிவரும் வரை அவளது பிறந்தகத்தில் நாள்களைக் கழிக்கச் சொல்லிவிடவே அவளும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் ஆர்.கே.பவனத்தை அடைந்தாள்.

ஆனால் கேள்விப்பட்ட விவரங்கள் அனைத்தும் அவளுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்ததோடு கிருஷ்ணாவின் உயிரற்றத் தோற்றம் அவளது நெஞ்சைப் புண்ணாக்கியது.

வழக்கம் போல எல்லாம் தன்னால் தான் என்று சஹானா அழத் துவங்க, கிருஷ்ணா அவளைச் சமாதானம் செய்வதையே இந்த ஒரு வாரத்தில் முழுநேர வேலையாக்கிக் கொண்டான் என்றால் மிகையில்லை.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

ஒரு கட்டத்தில் அவளது புலம்பலில் எரிச்சலுற்றவன் “சும்மா நீ தான் காரணம்னு சொல்லாதே சஹானா…. எதுக்குமே நீ காரணமில்லை…. நான் ஒத்துக்கிறேன், யூ.எஸ்ல நம்ம இருந்தப்போ நீ என்னைக் கட்டுப்பெட்டினு கிண்டல் பண்ணி சீண்டி விட்டதால தான் நான் கேர்ள்ஸ் கூடப் பழக ஆரம்பிச்சேன்னு… நான் ஒன்னும் கட்டுப்பெட்டி கிடையாதுனு உனக்கு நிரூபிக்கணும்கிற வெறியும், ஒரு சின்னப்பொண்ணு என்னைக் கையாலாகாதவன்னு சொல்லிட்டாளேங்கிற எரிச்சலும் என் கண்ணை மறைச்சது தான் காரணம்.

பட் பிலீவ் மீ! நா இது வரைக்கும் லிமிட்டைக் கிராஸ் பண்ணி யார் கூடவும் பழகுனது இல்லை… நான் குளோஸா பழகுன ஒரே ஆளு ஏஞ்சலினா மட்டும் தான்.. அவ என்னோட நல்ல ஃப்ரெண்ட்… அவ கூட நான் இருந்த தருணங்கள்ல ஏஞ்சலினா தன்னோட கடைசிநாட்களை எண்ணிக்கிட்டிருந்தா…

அப்போ அவளோட பிரதர் அவ கூட இல்லை… நானும், அவளோட ஃப்ரெண்ட்ஸும் தான் ட்வெண்டி ஃபோர் ஹவர்சும் அவ கூடவே இருந்து அவளைக் கவனிச்சிக்கிட்டோம்… அவ பிழைச்சிடுவானு அந்தப் பொண்ணுங்களைப் போலவே நானும் நம்பிக்கையோட தான் இருந்தேன்… ஆனா நிமோனியா ஒரேயடியா அவளை எங்க கிட்ட இருந்து பிரிச்சுக் கூட்டிட்டுப் போயிடுச்சு” என்று சொல்லி நிறுத்தியவன் தோழியின் நினைவில் கலங்கியக் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

சஹானா அவன் சொல்வதைக் கேட்டு அசையாமல் நின்றாலும் அவள் கண்ணில் ஏஞ்சலினாவை நினைத்துக் கண்ணீர் குளம் கட்டியது.

கிருஷ்ணா மிகுந்த சிரமத்துடன் “இந்தக் கையைப் பிடிச்சிட்டுத் தான் அவ கடைசி மூச்சை விட்டா… அதை யாரோ தேவையில்லாம தவறா சித்தரிச்சு எடுத்த அந்த ஒரே ஒரு போட்டோ தான் இன்னைக்கு வரைக்கும் என்னை அப்பா முன்னாடியும் துளசி முன்னாடியும் ஒழுக்கம் கெட்டவனா காட்டுது… உன்னையும் தேவையில்லாம குற்றவுணர்ச்சியில அழ வைக்குது… இப்போ இதைச் சொல்லி நல்லவன் பட்டம் வாங்கிக்க எனக்கு இஷ்டமில்லை சஹானா..

இதை நான் சொன்னா எல்லாருமே உன்னைத் தப்பா நினைப்பாங்க.. அதுக்கு நான் விடமாட்டேன் சஹானா… இதை உன் கிட்டச் சொன்னதுக்கு முக்கியக் காரணம் உன்னால என் நடத்தை மாறிடுச்சுனு நீ அழக்கூடாதுனு தான்.

சோ இனிமே என் செல்ல நூடுல்ஸ் எதைப் பத்தியும் நினைச்சு அழக்கூடாது. அவளைக் கட்டிக்கிட்ட ராகுலைத் தான் அழ வைக்கணும்… சரியா?” என்று கேட்க சஹானா சரியென்று தலையாட்டினாள்.

ஆனால் இவ்வளவு நடந்த பிறகு இனியும் கிருஷ்ணாவைத் தனது பெரியப்பா தவறாக எண்ணுவது அவளுக்கு வருத்தத்தைக் கொடுத்தது. அதோடு மட்டுமின்றி தேவையின்றி ஏஞ்சலினா இறப்புக்குப் பின்னும் பிறரின் பழிச்சொல்லுக்கு ஆளாவதில் சஹானாவுக்கு உடன்பாடில்லை.

எனவே “கிரிஷ் இதை துளசி கிட்ட சொன்னா அவ உன்னை மன்னிக்க வாய்ப்பு இருக்கு… பெரியப்பாவும் கூட…” என்று ஆர்வத்துடன் கூற, கிருஷ்ணா அவளைப் பார்வையாலே அடக்கியவன்

“அவங்க கிட்ட ஆதாரம் காமிச்சு நான் நல்லவன்னு நிரூபிச்சா அது அவங்களுக்கும் எனக்குமான உறவுக்கு ஏற்படுறக் கலங்கம் சஹாம்மா… அவங்க ரெண்டு பேருக்கும் நான் ஒழுக்கம் கெட்டவனாவே இருந்துட்டுப் போறேன்… காலம் வர்றப்போ அவங்க எல்லாத்தையும் புரிஞ்சுப்பாங்க” என்று அழுத்தத்துடன் உரைத்துவிட்டு சஹானாவின் அறையை விட்டு வெளியேறினான்.

சஹானா தன் அண்ணனுக்கும் ஏஞ்சலினாவுக்குமான நட்பைக் கேவலமாகச் சித்தரித்தது யாராக இருக்கக் கூடும் என்று யோசிக்கத் தொடங்கினாள். இந்த யோசனையுடன் வெளியே வந்தவளின் பார்வையில் விழுந்தார் இடிந்து போன நிலையில் நின்று கொண்டிருந்த ராகவேந்திரன்.

கிருஷ்ணா இவ்வளவு நேரம் பேசிய அனைத்தையும் ஒரு வரி விடாமல் கேட்டுவிட்டார் அவர். எப்பேர்ப்பட்ட குணம் படைத்தவனை வார்த்தைக்கு வார்த்தை ஒழுக்கம் தவறி விட்டாய் என்று சொல்லி இந்த ஆறு ஆண்டு காலமாக வதைத்திருக்கிறோம் என்ற எண்ணம் அவரது மார்புக்கூட்டுக்குள் சுருக்சுருக்கென்று வலியை உண்டாக்கியது.

அதுவும் மகன் கடைசியில் கூறிய வாக்கியம் அந்த வலியை இன்னும் அதிகரிக்க, முகம் எல்லாம் வியர்த்துப் போய் நின்று கொண்டிருந்தவரைக் கண்டதும் சஹானா பதறிவிட்டாள்.

“என்னாச்சு பெரியப்பா?” என்றபடி அவர் அருகில் அவள் செல்லவும் ராகவேந்திரன் வேரற்ற மரம் போல மார்பைப் பிடித்தபடி சரியத் தொடங்கினார்.

சஹானா அவரைத் தாங்கிக் கொண்டவள் “கிரிஷ், டாடி எங்கே இருக்கிங்க ரெண்டு பேரும்? பெரியப்பாவுக்கு ஏதோ ஆயிடுச்சு.. சீக்கிரமா வாங்க” என்று அழுகை கலந்த குரலில் கத்தவே, ஹாலில் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்த கிருஷ்ணாவும், விஜயேந்திரனும் பதறியடித்து ஓடிவந்தனர்.

சஹானாவின் அறைவாயிலில் ராகவேந்திரன் நெஞ்சைப் பிடித்தபடி கிடந்த காட்சியைப் பார்த்த இருவரும் ஆடிப் போய்விட, கிருஷ்ணா அவரைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன் “சஹானா கீழே போய் காரை எடு… சித்தப்பா நீங்களும் கொஞ்சம் பிடிங்க” என்று கூற விஜயேந்திரன் அண்ணனை தோளோடு அணைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

கருங்கற்படிகளில் இறங்கும் போது கிருஷ்ணா அவனை அறியாமல் தாத்தாவின் மீது கோபம் கொண்டான்.

“இப்பிடி மலையுச்சியில இருக்கிற மாளிகை மாதிரி கட்டி வச்சிட்டுப் போய்ச் சேர்ந்துட்டிங்க மிஸ்டர் ராதா கிருஷ்ணன்.. இப்போ ஒரு எமர்ஜென்சினா கீழே போறதுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு” என்று கடுப்புடன் மனதுக்குள் சொல்லிக் கொண்டபடி கீழே தந்தையுடன் ஒரு வழியாக இறங்கிவிட்டான்.

அங்கே சஹானா காருடன் தயாராக நிற்கவும் தந்தையைச் சித்தப்பாவின் தோளில் சாய்த்து காருக்குள் அமரவைத்தவன், சஹானாவுடன் முன்னிருக்கையில் அமர்ந்து கொள்ள, சஹானா காரை அவர்களின் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலை நோக்கி விரட்டத் தொடங்கினாள்.

அன்றைக்குப் போக்குவரத்து நெரிச்சல் குறைவாக இருந்தது கடவுளின் அருளே! சீக்கிரமாக மருத்துவமனையை அடைந்ததும் முன்னரே போன் செய்து தகவல் தெரிவித்திருந்ததால் மருத்துவமனை ஊழியர்கள் ஸ்ட்ரெச்சருடன் காத்திருக்க, தாமதிக்காமல் ராகவேந்திரனை ஸ்ட்ரெச்சரில் கிடத்தி அவசரச்சிகிச்சைப் பிரிவை நோக்கி ஸ்ட்ரெச்சரை நகர்த்திச் சென்றனர்.

சஹானா கண்கள் கலங்கிப் போய் நிற்க, விஜயேந்திரன் அண்ணனின் நிலையைக் கண்டு கலங்கிவிட்டார். மருத்துவர் ஏற்கெனவே எச்சரித்திருந்தது அவரது நினைவில் வந்து சென்றது.

“அவருக்கு இன்னொரு தடவை அட்டாக் வந்தா அவர் அதுல இருந்து ரெகவர் ஆகுறது கொஞ்சம் சிரமம் விஜய் சார்.. அதனால கூடுமான வரைக்கும் அவருக்கு மன அழுத்தத்தைக் குடுக்கிற விஷயத்தைப் பேசாதிங்க… அவரை அமைதியான மனநிலையோட வச்சிக்கப் பாருங்க”

தற்போது அண்ணனின் அமைதி நீங்கி அவருக்கு மன அழுத்தம் வருமளவுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருப்பது அவரது புத்தியில் உரைக்க “பேரூர் பட்டீஸ்வரா! என் அண்ணனை எப்பிடியாச்சும் காப்பாத்துப்பா…” என்று உலகின் அனைத்து உயிர்களுக்கும் கடைசி புகலிடமான ஈசனிடம் சரணடைந்தார் விஜயேந்திரன்.

மருத்துவர்களும் உள்ளே விடாமல் போராடிக் கொண்டிருக்க அவர்களின் சிலமணிநேரப் போராட்டத்தின் பலனாய் ராகவேந்திரன் அபாயக்கட்டத்தைத் தாண்டினார்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

வெளியே வந்த மருத்துவக்குழுவிடம் கிருஷ்ணா தந்தையின் நிலையை விசாரிக்க, அவர் அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டதாகக் கூறியவர்கள் அவரை இன்னும் இரண்டு நாட்களுக்குத் தங்கள் மேற்பார்வையில் வைத்திருக்க வேண்டியக் கட்டாயத்தை விளக்கிவிட்டு அங்கிருந்து அகன்றனர்.

கிருஷ்ணாவும் விஜயேந்திரனும் சற்று நிம்மதியடைந்தவர்களாய் இவ்வளவு நேரம் இருந்த பயத்தின் பலன் அப்போது அவர்களை ஓய்ந்து போகச் செய்ய தொப்பென்று இருக்கையில் அமர்ந்தனர்.

அதே நேரம் இவர்கள் ராகவேந்திரனை மருத்துவமனைக்கு அழைத்துவரும் நேரத்தில் சாரதா வீட்டில் இல்லை. மாமியாருடனும் தாயாருடனும் சேர்ந்து கோணியம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தவர், திரும்பி வந்ததும் வீட்டின் பணியாட்கள் வாயிலாக விஷயத்தைக் கேள்விப்பட்டுக் கண்ணீரும் கம்பலையுமாகச் சஹானாவை அழைத்திருந்தார். ஒரு பக்கம் தாயாரும் மாமியாரும் இடிந்து போய் அமர்ந்துவிட, மறுபக்கம் அவருக்கு உள்ளுக்குள் மருத்துவர் முன்பே எச்சரித்த விஷயம் வேறு படமாய் ஓடி அவரைப் பயமுறுத்தியது.

சஹானா சாரதாவிடம் ராகவேந்திரனுக்கு பயப்படும்படி எதுவுமில்லை என மருத்துவர்க்குழு கூறியதைத் தெரிவித்தவள் அவரைப் பயப்பட வேண்டாமென்று சொல்லிவிட்டுப் போனை வைத்தாள்.

மூடியிருந்த அவசரச் சிகிச்சைப்பிரிவின் கதவிலிருக்கும் வட்டக்கண்ணாடித் தடுப்பின் வழியே உள்ளே மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் சீராய் மூச்சு விட்டபடி படுத்திருக்கும் ராகவேந்திரனைப் பார்த்தவள் பெருமூச்சு விட்டபடி கிருஷ்ணாவுக்கு அடுத்த இருக்கையில் ஏஞ்சலினாவைப் பற்றிய யோசனையுடன் அமர்ந்து கொண்டாள்.

***********

ஊட்டி….

நேரம் நான்கு மணியைத் தொட்டுவிட பிருந்தாவையும் மற்ற மூவரையும் எப்போதும் போலக் கிளம்பச் சொன்ன துளசி சுகன்யாவுடன் சேர்ந்து பொட்டிக்கை மூடத் தொடங்கினாள்.

இன்று மித்ராவை அளவுக்கதிகமாகவே கடிந்து கொண்டதால் வருத்தத்தில் இருந்தவளிடம் சுகன்யா வேறு முகம் கொடுத்துப் பேசாமலிருக்க துளசி “ஓஹோ! சின்ன மேடமைத் திட்டுனதும் பெரிய மேடம்க்கு என் மேல கோவம் வந்துடுச்சு போல… ரெண்டு பேருக்கும் அவங்களுக்குப் பிடிச்ச ஃப்ளேவர்ல ஐஸ்க்ரீம் வாங்கிக் குடுத்து ஐஸ் வச்சிட வேண்டியது தான்” என்று எண்ணியபடி விறுவிறுவென்று லேப்டாப்பை அணைத்துப் பேக்கில் வைத்தாள்.

அவளும் சுகன்யாவும் சேர்ந்து டிசைன்களை வரைந்து பார்த்த போர்டை ஒரு ஓரமாக நிறுத்தியவர்கள் மேஜையில் இரைந்து கிடந்த பென்சில், கலர்ப்பேனாக்களை அதற்குரிய ஸ்டாண்டுகளில் வைத்துவிட்டு அவர்களின் அறையைப் பூட்டிவிட்டு வெளியேறினர்.

துளசி தானே காரை ஓட்டுவதாகச் சொன்னவள் சுகன்யாவைப் பொட்டிக்கை மூடச் சொல்லிவிட்டாள்.

காரை பார்க்கிங்கில் இருந்து வெளியே ஓட்டிவந்தவள் சுகன்யா வரும் வரை ஹாரனை விடாமல் ஒலிக்கச் செய்யவும் சுகன்யா பொட்டிக்கின் மூடிய கதவை ஒரு முறை பார்த்துத் திருப்தியாகி திரும்பிவரவும் சரியாக இருந்தது.

சுகன்யா சிடுசிடுவென்று நானோவில் அமர்ந்தவள் “இப்போ என்ன தலை போற பிரச்சனைனு நீ ஹாரனைப் போட்டுப் பாடாப்படுத்துற துளசி?” என்றவளைக் குறும்பாகப் பார்த்த துளசி

“இப்பிடி விடாம ஹாரன் அடிச்சா உனக்குப் பிடிக்காதுல்ல, அதான்” என்று சொல்லிவிட்டு நாக்கைத் துருத்திக் காட்ட

“எனக்குப் பிடிக்காததை செஞ்சு திட்டு வாங்குறதுல அன்றும் இன்றும் நீ அதே துளசி தான்” என்று நக்கலாக மொழிந்தாள் சுகன்யா.

துளசி அவளது கேலியை ஏற்றபடி “என்னடி பண்ணுறது? ஆறு வருசமா உன் கிட்ட திட்டு வாங்காம குட் கேர்ளா பெர்பார்ம் பண்ணி எனக்கும் அலுத்துப் போச்சு சுகி” என்று குறைப்பட்டவாறே காரை ஓட்டத் துவங்கினாள்.

சுகன்யா அவள் பேசுவதைக் கேட்டுவிட்டு புருவம் உயர்த்தியவள் “நீங்க கேர்ளா மேடம்?” என்று கேட்கவும்

துளசி “அப்போ நான் கேர்ள் இல்லாம பாயா?” என்று சொல்லி உதட்டைச் சுழித்து அழகு காட்டினாள்.

“ஆறு வயசு பொண்ணுக்கு அம்மா நீ… இன்னும் நானும் கேர்ள் தானு சொல்லி ஊரை ஏமாத்துற… கேரி ஆன்”

“அஹான்! துளசி மட்டும் இவ்ளோ கியூட்டா குட்டிப்பொண்ணு மாதிரி இருக்காளேனு உனக்குப் பொறாமைடி சுகி”

இவ்வாறு பதிலுக்குப் பதில் வாயடித்தபடி இருவரும் மித்ராவின் பள்ளியை அடைந்தனர்.

காரை நிறுத்திவிட்டு இறங்கியவளிடம் சுகன்யா “துளசி எனக்கு இப்போ உன்னைப் பார்க்கிறப்போ பழைய துளசி திரும்ப வந்த மாதிரி இருக்குடி.. நீ இப்பிடியே இருடி… இது தான் நல்லா இருக்கு” என்று கனிவுடன் கூற

துளசி தலையைச் சரித்து “நீ சொல்லி நான் கேக்காம இருப்பேனா?… நானும் பழைய படி மாற டிரை பண்ணப் போறேன்… அதுக்கு நீயும் நான் என்ன சொன்னாலும் ஆமா சாமி போடாம பழைய சுகியா என் கிட்ட ஏட்டிக்குப் போட்டி பேசணும்” என்று கட்டளையிட்டவாறே தோழியின் தோளில் கை போட்டபடி மித்ராவின் பள்ளிக்குள் நுழைந்தாள்.

இருவரும் வழக்கமாக நிற்குமிடத்தில் மித்ராவைத் தேட அவள் அங்கில்லை. சுகன்யா அதில் பதற்றமாகிவிட

துளசியோ “அங்கே குட்டிப்பசங்க ஹைட் அண்ட் சீக் விளையாடிட்டுருக்காங்க… மித்தியும் விளையாடப் போயிருப்பானு நினைக்கேன்.. வா அவளைக் கூட்டிட்டு வருவோம்” என்று உரைத்துவிட்டு அந்தக் குழந்தைகளிடம் சென்று மித்ராவைத் தேட, அவர்களில் ஒரு சிறுவன் மித்ரா அப்போதே ஒரு அங்கிளுடன் காரில் சென்றுவிட்டாள் என்று கூறவும் துளசிக்குத் திக்கென்றது.

“சுகி! யாருடி மித்தியைக் கூட்டிட்டுப் போயிருப்பாங்க? ஒரு வேளை கிருஷ்ணா கூட்டிட்டுப் போயிருப்பானோ?” – துளசி

“கிருஷ்ணா கூட்டிட்டுப் போனா கண்டிப்பா உனக்கு இன்ஃபார்ம் பண்ணிருப்பான்… இது கண்டிப்பா கிருஷ்ணா இல்லை துளசி… நம்ம எதுக்கும் வாட்ச்மேன் கிட்ட விசாரிப்போம்” – சுகன்யா

இருவரும் காவலாளியிடம் ஓடியவர்கள் மித்ராவின் அடையாளத்தைச் சொல்லி அவளை யாராவது அழைத்துச் சென்றார்களா என்று விசாரிக்க ஆரம்பிக்க

அவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு “ஆங்…. ஒரு குதிரைவால் போட்டக் குட்டிப்பொண்ணை ஒரு ஆளு சாம்பல் கலர் காரில கூட்டிட்டுப் போனாரும்மா… அந்தக் குட்டிப்பொண்ணு கிட்ட அப்பா கிட்டக் கூட்டிட்டுப் போறேனு சொன்னான்மா அந்தாளு” என்று கூறவும் துளசிக்கும் சுகன்யாவுக்கும் நெஞ்சம் பதைக்கத் தொடங்கியது.

“கூட்டிட்டுப் போன ஆளு எப்பிடி இருந்தானு உங்களுக்கு நியாபகம் இருக்கா?” – சுகன்யா

“மாநிறமா இருந்தான்மா.. ஊதாக்கலரு ஸ்வெட்டரு அப்புறம் மங்கி குல்லா போட்டிருந்தான்… கொஞ்சம் கனத்த ஆளு… அவன் பேச்சு கேக்கிறதுக்கு மலையாளம் கலந்த மாதிரி இருந்துச்சு…” என்றவரிடம் நன்றி கூறிய சுகன்யா பள்ளிக்கு வெளியே சிசிடிவி கேமரா எதுவும் உள்ளதா என்று விசாரிக்க

அவரோ பள்ளியின் பின்வாயிலிலும், பள்ளிக்கு உள்ளேயும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், முன்வாயில் கேமராவை யாரோ இரு நாட்களுக்கு முன்னர் சேதப்படுத்திவிட்டதாகக் கூறினார்.

துளசியும் சுகன்யாவும் இதைக் கேட்டதும் முகம் வெளிறி நின்றனர். ஏனெனில் அவர் கூறிய அங்க அடையாளங்கள் சிறிதும் கிருஷ்ணாவுக்குப் பொருந்தவில்லை.

அப்படி என்றால் கிருஷ்ணாவின் பெயரைச் சொல்லி யாரோ மித்ராவைத் திட்டமிட்டுக் கடத்தியுள்ளனர். மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காகத் தான் பள்ளியின் முன்வாயில் சிசிடிவி கேமராவைச் சேதப்படுத்தியுள்ளனர் என்பதை அறிந்து செய்வதறியாது திகைத்தனர்.

துளசி கலங்கிப் போய் நிற்க, சுகன்யா “துளசி மித்திக்கு ஒன்னும் ஆகாதுடி.. நம்ம போலீஸ் ஸ்டேசன்ல கம்ப்ளைண்ட் பண்ணிடுவோம்” என்றபடி இழுத்துச் சென்றாள். தனது மகளுக்கு என்னவாயிற்றோ என்று மனம் பதைக்க உயிரற்ற ஜடமாய் ஜீவனின்றி அவளைத் தொடர்ந்தாள் துளசி.

தொடரும்💗💗💗