💗அத்தியாயம் 10💗

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

ஆதவன் நிலமகளிடம் இருந்து பிரியாவிடை பெறும் நேரம் வந்துவிட, வானம் செந்நிறம் பூசிக்கொண்டு அச்செய்தியை நிலமகளுக்கு அறிவித்த அப்பொன்மாலை நேரத்தில் ஸ்ரீவிவாஹா திருமண மண்டபத்தின் விளக்குகள் அனைத்தும் ஒளிர சஹானா, ராகுல் தம்பதியினரின் வரவேற்பு இனிதே ஆரம்பித்துவிட்டது.

மணமகன் ராகுல் வெள்ளைநிறச்சட்டையின் மீது சந்தனவண்ணக் கோட், அடர்பழுப்புநிற பேண்ட் சகிதம் ஜம்மென்று தயாராக, சஹானா இளஞ்சிவப்பு வண்ண லெஹங்காவில் ஒரு ராஜகுமாரி போலத் தயாராகி அழகுச்சிலையாக ஜொலித்தாள்.

இருவரும் மேடைக்கு வருகையில் பார்ப்பவரின் விழிகள் தெறித்தோடும் அளவுக்கு அனைவரும் சஹானா மற்றும் ராகுலின் ஜோடிப்பொருத்ததை வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

துளசி மேடையின் பூ அலங்காரத்தைப் போனில் புகைப்படமாய்ப் பிடித்தவள் முகத்தில் அடிக்கடி வந்து மோதும் கூந்தலை காதின் பின்புறம் ஒதுக்கிவிட்டபடி ராகுலையும், சஹானாவையும் புகைப்படம் எடுக்க முயல, யாரோ அவளது கூந்தலைக் காதின் பின்புறம் ஒதுக்கிவிடவே, அந்தக் கரத்தின் தொடுகைக்கு அவள் பழகியிருந்ததாலோ என்னவோ அவளுக்கு அக்கரத்தின் ஸ்பரிசம் வித்தியாசமாகத் தோன்றவில்லை போலும்.

புன்னகையுடன் இருவரையும் புகைப்படத்தில் அடக்கியவள் சட்டென்று திரும்ப, அவள் பின்னே நின்று கொண்டிருந்த கிருஷ்ணாவின் மீது மோதி நின்றாள் துளசி. அவள் திரும்பிய வேகத்தில் அவனை இடித்ததில் எங்கே துளசி விழிந்து விடப் போகிறாளோ என்ற அவசரத்தில் அவளை இடையோடு அணைத்து விழாமல் நிறுத்தினான் கிருஷ்ணா.

நீண்டநாட்களுக்குப் பின்னர் இருவரது பார்வையும் நேர்க்கோட்டில் சந்தித்துக் கொள்ள, பின்னணியில் ஒலித்த லைட் மியூசிக் மனதை வருட கிருஷ்ணாவின் அண்மையில் மெய் மறந்து நின்றாள் துளசி.

அவர்களின் இம்மோனநிலை கலையும் முன்னர் புகைப்படக்கலைஞரை அழைத்தச் சஹானா இருவரையும் இப்படியே புகைப்படம் எடுக்கும்படி கூற அவரும் அவள் சொன்னதை நிறைவேற்றினார்.

கேமராவின் ஃப்ளாஷ் வெட்டியதால் திடுக்கிட்டத் துளசிக்குத் தாங்கள் அந்தப் பெரிய மண்டபத்தின் நட்டநடு ஹாலில் இப்படி போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று உறைக்கவும் சட்டென்று கிருஷ்ணாவை விலக்கித் தள்ளி நிறுத்தியவள் சுற்றுமுற்றும் பார்க்க ஆரம்பித்தாள்.

சந்தேகமே வேண்டாம், நாங்கள் அனைவரும் உங்களைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லாமல் சொல்லின அந்த ஹாலில் அமர்ந்திருந்தவர்களின் விழிகள். இது போதாதென்று மேடையில் நின்ற சஹானா வேறு குறும்பாக நகைக்க, துளசி விட்டால் போதுமென்று அங்கிருந்து வேகமாக நடந்துச் சென்றாள்.

கிருஷ்ணாவும் மேடையில் நின்ற சஹானா அவனைத் தாண்டிச் செல்லும் துளசியைக் கண்ணால் காட்டவும் தலையசைத்தவன் அவளைப் பின்தொடர்ந்து ஓடினான்.

துளசி மண்டபத்தின் முன்னே இருக்கும் அலங்காரச்செடிகளின் அருகில் வந்து நின்றவள், வெளியே வானம் மெல்ல மெல்ல இருளைப் பூசிக்கொள்ளத் தயாராவதைக் கண்டதும் “இங்கேயும் இப்போ தான் இருட்டு ஆரம்பிக்குது போல” என்று தனக்குள் ஆறு வருடத்துக்கு முன் ஆரம்பித்த இருளை மனதில் வைத்துக் கூற

அவள் பின்னே ஓடிவந்த கிருஷ்ணாவின் காதில் அவ்வார்த்தை விழவே “இருட்டு வர்றதால தான் நிலா, நட்சத்திரங்களை நாம ரசிக்க முடியுது துளசி… அதிலயும் நான் மின்மினிபூச்சியைக் கூட விட்டு வைக்காம ரசிப்பேனாக்கும்” என்று உற்சாகமாகக் கூறியபடி வரவும், துளசி அவனிடம் முகம் கொடுத்துப் பேசவிரும்பாதவளாய் அமைதியாய் நின்றாள்.

கிருஷ்ணாவைக் கண்டதும் பிடித்து வைத்திருந்த பொறுமை பகலவனைக் கண்ட பனியாய்க் கரைய “இங்கே எதுக்கு வந்த கிரிஷ்?” என்று வெடுக்கென்று கேட்டுவிட்டுப் புருவத்தைச் சுழித்தாள் துளசி.

கிருஷ்ணா குறும்புடன் “லார்ட் கிருஷ்ணாவோட பெயர் வச்சதுக்குப் பொருத்தமா கரெக்டான இடத்துல தானே இருக்கேன்” என்று கூறவும் துளசிக்கு அவன் பேச்சு புரிபடவில்லை.

அவளது குழம்பிப் போன முகம் கொடுத்த உற்சாகத்தில் “லார்ட் கிருஷ்ணா பிருந்தாவனத்துல இருப்பாரு, அவரோட பெயரை வச்சிருக்கிற நான் என்னோட பிருந்தா இருக்கிற இடத்துல நிக்கிறேன்… இப்போ புரியுதா மை டியர் மக்கு பேபி?” என்று கேட்டபடி அவள் தலையில் செல்லமாகக் குட்ட

துளசிக்கு அவன் பேச்சு புரிந்தாலும் அவனைக் கேலி செய்ய கிடைத்த வாய்ப்பை விட விருப்பம் இல்லாமல் யாரையோ தேடுவது போல பாவனைக் காட்டவே, கிருஷ்ணா “யாரைத் தேடுற துளசி?” என்று புரியாமல் கேட்டான்.

துளசி “யாரோ உன்னோட பிருந்தானு சொன்னியே, அவங்களைத் தான் தேடுறேன்… ஆமா அவங்க எத்தனாவது கேர்ள் ஃப்ரெண்ட்?” என்று கேலியாக ஆரம்பித்து குத்தலானக் கேள்வியுடன் முடித்தாள்.

“அப்போ துளசிக்கு இன்னொரு நேம் தான் பிருந்தானு உனக்குத் தெரியாது? அப்பிடித் தானே?” என்றவனிடம் தெரியாது என்பதைப் போல தலையை இடவலமாக ஆட்டினாள் துளசி.

கிருஷ்ணா அவளை ஆழ்ந்து நோக்கியவன் “உனக்கு எல்லாமே தெரியும் துளசி…. ஆனா உன்னோட பிடிவாதம் உண்மையை ஒத்துக்கக் கூடாதுனு உன்னைக் கட்டிப்போடுது… எல்லா விஷயத்திலேயும் நீ உன் பிடிவாதம் சொல்லுற பேச்சைத் தான் கேக்குற… இது எல்லாத்துக்கும் இன்னைக்கு நான் ஃபுல்ஸ்டாப் வைக்கிறேன்… ஏன்னா நானும் உன்னாட்டம் பிடிவாதக்காரன் தான்” என்று தீர்மானத்துடன் உரைத்துவிட்டுச் சென்றவனைக் கண்டு பெருமூச்சுவிட்டபடி நின்றாள் துளசி.

உள்ளே வரவேற்பு நிகழ்வில் புதுமணத்தம்பதியினர் கேக்கை வெட்டி ஆரம்பிக்க நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் இனிதே ஆரம்பித்தது அந்நிகழ்வு. மித்ரா சுகன்யாவுடன் சுற்றிக் கொண்டிருக்க, மீனாவோ கிருஷ்ணாவின் பாட்டிகளிடம் பேச்சுத்துணைக்கு அமர்ந்தவர், பின்னர் அவர்களின் பேச்சில் தன்னை மறந்து கலந்து கொண்டார்.

விஷ்வா போனில் பேசிக்கொண்டு வந்தவன் மித்ராவுடன் பேசி சிரித்துக் கொண்டிருந்தச் சுகன்யாவைக் கண்டதும் தனது கோட்டில் கைப்பக்கம் உள்ள பட்டன் பிய்ந்தது நினைவில் வரவே அந்தக் கடுப்புடன் அவள் முன்னே போய் நின்றான்.

இதற்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கத் தேவையில்லை. ஏனெனில் கிருஷ்ணா, ராகுல் மற்றும் விஷ்வாவின் வரவேற்புக்கான உடையை வடிவமைத்தது சுகன்யா தான். துளசி தன்னால் முடியாது என்று அவ்வேலையைச் சுகன்யாவிடம் தள்ளிவிட்டாள்.

அவள் வடிவமைத்த கோட் பட்டனின் லெட்சணத்தை அவளிடம் சொல்ல வந்தவன் “ஊட்டியிலேயே ஃபேமஸான டிசைனர்னு தான் பேரு… ஆனா கோட்ல பட்டன் கூட வைக்கத் தெரியலை” என்று சொன்னபடி தனது கோட்டின் கைப்பகுதியைத் தொட்டுக்காட்டிச் சொல்லவும், சுகன்யாவுக்கு அதில் கீழே சிறிய கிழிச்சலுடன் பட்டன் போயிருந்தது தெரிந்தது.

மனதிற்குள் “இவன் மாட மடங்க டிரஸ்ஸைப் போட்டுட்டு எங்க டிசைனை குறை சொல்ல வந்துட்டான்” என்று குமுறியவள் அதை வெளிக்காட்டாமல் “ஐயோ சார்! இப்பிடி ஆகும்னு நான் நினைக்கவே இல்லையே!” என்று பொய்யாய் வருத்தம் காட்ட, விஷ்வா கூட அவள் மெய்யாகவே வருந்துகிறாள் என்று எண்ணிவிட்டான்.

ஆனால் அடுத்த நொடியே முகம் மாறியவள் “அவசரக்குடுக்கைத் தனமா டிரஸ்ஸைத் திணிக்க வேண்டியது, அப்புறம் டிசைனர் சரியில்லைனு எங்க தலையில மிளகாய் அரைக்கப் பார்க்கிறது…. ஹலோ நான் உன்னை விட கேடி கிளையண்டைலாம் பார்த்திருக்கேன் மேன்! இனிமே நீ போடுற டிரஸ் கிழியக்கூடாதுனா இரும்புல டிரஸ் தைச்சுப் போட்டுக்கோ… வந்துட்டான் குறை சொல்லுறதுக்கு” என்று அவனுக்குப் பதிலடி கொடுத்துவிட்டு மித்ராவைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து அகன்றாள் சுகன்யா.

விஷ்வா அவள் படபடவென்று கொட்டித் தீர்த்துவிட்டுச் சென்றதைப்  பார்த்துத் திகைத்துப் போய் நின்றான்.

மித்ராவுடன் வந்த சுகன்யாவைப் பார்த்துவிட்ட துளசி “சுகி எங்கேடி போயிருந்த? போய் அவங்களுக்கு கிப்ட் குடுத்துட்டுக் கிளம்புற வழியைப் பார்ப்போம்… இப்போ கிளம்பினா தான் நைன் ஓ க்ளாக் முன்னாடி வீட்டுக்குப் போக முடியும்” என்று கூற மீனாவையும் அழைத்துக்கொண்டு நால்வரும் மேடையை நோக்கி முன்னேறினர்.

அவர்கள் மேடையேறும் நேரத்துக்காகக் காத்திருந்தக் கிருஷ்ணா அவர்களைத் தொடர்ந்து தானும் அங்கே சென்றவன் அங்கே மைக் இருக்கிறதா என்று கேட்டுத் துளசியைக் குழம்ப வைத்தான்.

துளசி அவனைக் கண்டுகொள்ளாமல் சஹானா மற்றும் ராகுலை வாழ்த்தியவள் சுகன்யாவுடன் சேர்ந்து பரிசுப்பொருளை நீட்டிவிட்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தாள்.

புகைப்படம் எடுத்து முடிந்ததும் இருவரிடமும் தாங்கள் கிளம்புகிறோம் என்று சொல்லி விடைபெறப் போனவளைக் கிருஷ்ணாவின் “ஹலோ லேடிஸ் அண்ட் ஜென்டில்மென்” என்ற குரல் தடுத்து நிறுத்த அவன் புறம் திரும்பியவளைக் கையில் மைக்குடன் பார்த்தபடி புன்னகைத்தான் கிருஷ்ணா.

இவன் மைக்கில் என்ன சொல்ல போகிறான் என்று துளசியும் சுகன்யாவும் குழம்பிப் போய் நின்றனர்.

அதே நேரம் கீழே வரிசையாகப் போடப்பட்டிருந்த வெண்ணிற நாற்காலிகளின் முன்வரிசையில் அன்னையோடும், மாமியாரோடும் அமர்ந்திருந்த சாரதா, விஜயேந்திரன் மற்றும் ராகவேந்திரன் மூவரும் தாங்கள் எதிர்பார்த்த நேரம் வந்துவிட்டதென்று மகிழ,

ராகவேந்திரனின் நெருங்கிய நண்பர்களான சந்திரசேகர் மற்றும் தியாகராஜன் சகோதரர்கள் இனியாவது ராகவேந்திரன் நிம்மதியடைவார் என்று எண்ணி திருப்தியுற, குடும்பத்தினர் நண்பர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த நற்செய்தியை அனைவர் முன்னிலையிலும் சொல்லத் தயாரானான் கிருஷ்ணா.

“உங்க எல்லார் முன்னாடியும் நான் என்னோடக் குடும்பத்தை அறிமுகப்படுத்த விரும்புறேன்… இத்தனை நாளா ரகசியமா வச்சிருந்த விஷயம், இப்போ தான் அதைச் சொல்லுறதுக்கான சரியான நேரம் வந்திருக்கிறதா நான் நினைக்கிறேன்” என்று சொல்லி நிறுத்தியவன் துளசியைத் தன்னருகில் கரம்பற்றி இழுத்து வந்து நிறுத்திவிட்டு, அவளது இன்னொரு கரத்தைப் பற்றியபடி வந்த மித்ராவைத் தனது கைகளில் தூக்கிக் கொண்டான்.

“இவங்க ரெண்டு பேரு தான் என்னோட அழகான குடும்பம்… இவங்க மிசஸ் துளசி கிருஷ்ணா, என்னோட ஒய்ப் அண்ட் இவ தான் எங்களோட பொண்ணு மித்ரா” என்று சொல்லிவிட்டுத் தன் கையிலிருக்கும் மித்ராவின் கன்னத்தில் முத்தமிட்டவன் மைக்கைத் தணித்துவிட்டு

“மித்திக்குட்டி! நான் தான் உன் அப்பா” என்று சொல்ல மித்ராவின் கண்ணில் ஆச்சரியத்தோடு சேர்ந்த சந்தோசம் மத்தாப்பாய் மின்னியது.

அதே நேரம் கீழே நின்ற விஷ்வா தனது கரத்தைத் தட்ட ஆரம்பிக்க, கிருஷ்ணா சொன்ன செய்தி கொடுத்த மகிழ்ச்சியில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் அனைவரும் கரகோஷம் எழுப்பத் தொடங்கினர். அக்கரகோஷம் மண்டபத்தின் சுவர்களில் பட்டு எதிரொலித்தப் பின்னர் தான் துளசியும், சுகன்யாவும் அவர்களுடன் நின்றிருந்த மீனாவும் சுயநினைவுக்கே வந்தனர்.

துளசியோ கிருஷ்ணா அறிவித்தது எல்லாம் கனவில் நடப்பது போல நினைத்தவளுக்கு, அந்த பலத்தக் கரக்கோஷம் உண்மையைப் புரியவைத்தது. தாங்கள் எப்போது திருமணம் செய்து கொண்டோம், இவன் என்ன உளறிவைக்கிறான் என்று உள்ளுக்குள் ஏகப்பட்டக் கேள்விகளும், கோபமும் பீறிட்டெழுந்தது.

உள்ளுக்குள் மூண்டக் கோபத்துடன் அவனிடம் சீறச் சென்றவளின் பார்வை கீழே அமர்ந்திருந்த இரு மூதாட்டிகளின் மீதும் படியும் வேளையில், அவர்கள் புடவையின் நுனியால் கண்ணீரைத் துடைத்தக் காட்சி ஏனோ துளசிக்கு அவளது கோதை பாட்டியே அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட இப்போது தான் பேசுவது நாகரிகமில்லை என்று கருதி அமைதியானாள்.

கிருஷ்ணா சந்தோசத்தில் முகம் மின்ன நிற்கவும் மித்ரா ஆச்சரியத்துடன் பார்த்து “அப்போ நீங்க தான் என்னோட அப்பாவா அங்கிள்?” என்று கேட்க

அவன் “ஆமாடா பட்டுக்குட்டி! நான் தான் உன்னோட அப்பா… என் ஏஞ்சலுக்கு இன்னுமா சந்தேகம்?” என்று குழந்தையைப் போல முகம் சுருக்கி கேட்க

மித்ரா “இல்லப்பா!” என்றபடி அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு “நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்பா! ரினி, எட்வர்ட், வின்சி மாதிரி எனக்கும் அப்பா இருக்காங்க… ஐ லவ் யூ அப்பா” என்றபடி அவன் கன்னத்தில் மீண்டும் முத்தமிட்டாள் அவள்.

கிருஷ்ணா மித்ராவின் பாசமழையில் நனைந்தவன் மகளின் அப்பா என்ற அழைப்புக்குப் பின்னே இருக்கும் ஆறு வருட ஏக்கம் மனதை நெருட, அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

“இனிமே அப்பா உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன் மித்தி” என்றவனின் தளுதளுத்தக் குரலில் மித்ராவின் மீதான பாசம் மட்டுமே நிரம்பி வழிந்தது.

துளசி அதிர்ச்சியுடன் அக்காட்சியைக் கண்டு திகைத்து நிற்க, சஹானா அவளது கையைப் பற்றியவள் “வெல்கம் டு அவர் ஃபேமிலி துளசி… நான் உன்னை அண்ணினு கூப்பிட மாட்டேன்..  பிகாஸ் நீ என்னை விட மூனு வயசு கம்மினு அண்ணா சொன்னான்… சோ மைன்ட் பண்ணிக்காதே” என்று கேலியாய் பேசியபடி அவள் மனநிலையை மாற்ற முயன்றாள்.

ராகுலும் சிரித்தமுகமாய் “ஆமாம்மா! நானும் உன்னை துளசினு தான் கூப்பிடுவேன்.. எனக்கு கூடப்பிறந்த தங்கச்சினு யாரும் இல்லை… தம்பினு ஒரே ஒரு தொல்லை மட்டும் தான் என் கூட இருந்து என்னை இம்சை பண்ணுச்சு… இனிமே இந்த அண்ணாவுக்காக நீ அவன் கிட்ட சண்டை போடுவல்ல” என்று சினேகமாய்க் கேட்டு அவளைப் புன்னகைக்க வைக்க முயன்றான்.

ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாய் முயன்றாலும் கிருஷ்ணா என்பவன் அவள் பக்கம் திரும்பினால் தானே… அவளது கண்ணில் இருக்கும் அக்னியில் பொசுங்க அவன் இப்போதைக்குத் தயாராக இல்லை.

கிருஷ்ணா தனது மனைவி மற்றும் மகள் பற்றி அறிவிப்பு கொடுத்த விவரத்தைக் கேட்டவர்கள் புதுமணத்தம்பதியினருடன் கிருஷ்ணாவையும், துளசியையும் வாழ்த்திவிட்டுச் சென்றனர்.

அதே நேரம் கிருஷ்ணாவும் யாருக்கும் பாதகம் வந்து விடாத மாதிரி தொழில் போட்டியால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் இத்தனை ஆண்டுகள் மனைவி, மகள் பற்றி யாருக்கும் தெரிவிக்கவில்லை என்று நன்றாகவே சமாளித்தான்.

அதற்கு பின் இருகுடும்பத்து பெரியவர்களின் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர் கிருஷ்ணாவும் துளசியும். கிருஷ்ணா இதை மனமகிழ்வோடு செய்தாலும் துளசி இயந்திரம் போல விழுந்து எழுந்தாள் என்று தான் கூறவேண்டும்.

இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான் அகிலேஷின் உளவாளி தேவா (அவனும் நடப்பதை வேவு பார்க்க வரவேற்புக்கு வந்திருந்தான்) உடனே அகிலேஷுக்குப் போன் செய்து விவரத்தைக் கூற, அகிலேஷ் அடுத்து தேவா என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டான்.

அவன் கூறிய விஷயம் தேவாவுக்குத் தயக்கத்தை ஏற்படுத்த, அகிலேஷ் ஆணித்தரமாக இதை அவன் செய்து தான் ஆகவேண்டும் என்று கட்டளையிட்டுவிட்டு போனை வைத்தான்.

போனை வைத்தவன் கடகடவென்று சத்தமாக நகைத்துவிட்டு “கிருஷ்ணா! உனக்கும் எனக்குமான சண்டையில நீயே வாலண்டியரா உன் பொண்டாட்டி, குழந்தையை மாட்டிவிட்டுட்டியேடா.. அச்சோ பாவம்… இனிமே அவங்க ரெண்டு பேரை வச்சே உன்னை ஆட்டி வைக்கிறேன்டா” என்று ஆவேசக்குரலில் சபதமிட்டுக் கொண்டான்.

************

ஆர்.கே.பவனம்….

ஆழ்ந்த அமைதியுடன் வழக்கம் போல நீருற்றின் சளசளப்பும், இரவில் சிறகுகளைப் படபடக்கும் பறவைகளின் சத்தமும் மட்டுமே கேட்டுக் கொண்டிருக்க அந்த ஆழ்ந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு வெளிப்பட்டது அந்த மாளிகையின் ஹாலில் நூறு சதவீத கோபாக்கினியுடன் ஒலித்த துளசியின் குரல்.

கிருஷ்ணா எதுவும் பேச இயலாதவனாய் வாய் மூடி மவுனியாக நிற்க, சாரதாவும் விஜயேந்திரனும் கையைப் பிசைந்தபடி நின்று கொண்டிருந்தனர்.

நல்லவேளையாக துளசி சஹானாவும் ராகுலும் கிளம்பிய பிறகு, மித்ராவை சுகன்யாவுடனும் மீனாவுடனும் அவளது காரில் அனுப்பிவைத்துவிட்டாள் அவள். குழந்தை காரில் ஏறும்போது கூட “அம்மு! அப்பாவும் நம்ம கூட வருவாங்களா?” என்று ஏக்கத்துடன் கூறியபடியே தான் ஏறினாள்.

அதையெல்லாம் நினைத்துப் பார்த்தவள் கிருஷ்ணாவின் குடும்பத்தினருடன் ஆர்.கே.பவனத்தில் கால் பதித்ததும் மனமெல்லாம் புண்ணாக, வீட்டுக்குள் வந்ததும் கிருஷ்ணாவிடம் கத்தித் தீர்த்துவிட்டாள்.

அனைவரும் அமைதி காக்க வீட்டின் பெரியவரான ரங்கநாயகி “துளசி கொஞ்சம் பொறுமையா…..” என்று அவளை சமாதனப்படுத்த விழைந்தவரை ராகவேந்திரன் “அம்மா அவ பேசட்டும்” என்று சொல்லி தடுத்துவிட அங்கே ஒரு சங்கடமான அமைதி நிலவியது.

சுபத்ராவோ பேரன் தலைகுனிந்து நிற்பதைக் கண்டு பொறுக்காதவராய் “ஏன் ராகவா இப்போ எல்லாரும் குற்றவாளி மாதிரி என் பேரனை நடுவீட்டுல நிறுத்திவைச்சு விசாரிக்கிறிங்க? அவன் தப்பு பண்ணுனான் தான், அதை அவன் மறைக்கவோ மறுக்கவோ செய்யலையே….” என்று வெகுண்டு எழுந்தவர் துளசியிடம் வந்தார்.

“நீ படிச்சப் பொண்ணும்மா! உனக்கு நான் சொல்லித் தெரியவேண்டியது இல்லை… இவ்ளோ நேரம் என் பேரனைப் பார்த்து நீ சொன்னியே சந்தர்ப்பவாதி, ஏமாத்துக்காரன், ஒழுக்கம் கெட்டவன்னு… அதுல எதாவது ஒன்னு உண்மையா இருந்தாலும் அவன் உன் கிட்ட வந்து எனக்கு இன்னொரு வாய்ப்பு குடுனு கேட்டுருக்க மாட்டான்.

ஆயிரம் பேரு முன்னாடி உன்னைத் தன்னோட பொண்டாட்டினும், மித்ராவை அவனோட பொண்ணுனும் அறிவிச்சிருக்க மாட்டான்… அவனை உருகி உருகிக் காதலிச்சிதா சொல்லுற உனக்கு இன்னுமா அவனைப் பத்தி புரியலை?” என்று கேட்கவே, துளசியால் அந்த முதியப்பெண்மணியை எதிர்த்துப் பேச முடியாத சூழ்நிலை.

இவ்வளவு நேரம் இருந்த ஆவேசம் முழுவதுமாக வடிய அவரிடம் “நீங்க சொல்லுற மாதிரி உங்க பேரன் நல்லவனாவே இருந்துட்டுப் போகட்டும் பாட்டிமா…

ஆனா அவனைப் பார்க்கிறப்போலாம் ஆறு வருசத்துக்கு முன்னாடி அவனோட கேர்ள் ஃப்ரெண்ட் ஒருத்தி என் கிட்ட போன்ல பேசுனது தான் நியாபகம் வருது… ஒருத்தி போனா அவளுக்குப் பதிலா இன்னொருத்தினு வாழ்ந்த உங்க பேரன், நான் அவனைக் காதலிக்கிறேனு அவன் கிட்டச் சொன்னப்போவே என் கிட்ட அந்த விஷயங்களைச் சொல்லிருக்கலாமே! அப்போ இதே கிருஷ்ணா என் கிட்ட எல்லா உண்மையையும் மறைச்சு என்னைக் காதலிக்கிறேனு சொல்லி நடிச்சானே பாட்டிமா..

இப்போ நானும் என் பொண்ணும் இவனோட நிழல் கூட படாம தானே வாழ்ந்திட்டிருக்கோம்… ஏன் எங்களைத் தேவையில்லாம தொந்தரவு பண்ணனும்?” என்று வாதிட்டாள்.

சாரதா தயக்கத்துடன் “துளசி கொஞ்சம் யோசிடா… ஒரு பொண்ணால தனியா குழந்தையை வளர்க்க முடியாது… இந்த உலகம் உன்னைக் கண்டபடி பேசும்… அதுவுமில்லாம நடந்ததுல உன்னோட தவறுனு எதுவும் இல்லையே… அப்போ நீ மட்டும் ஏன் பழி சுமக்கணும்?” என்று பேசியபடி துளசியின் மனதை மாற்ற முயன்றார்.

துளசி சாரதாவை நோக்கி விரக்தியாகப் புன்னகைத்தவள் “எனக்கு பதினெட்டு வயசு இருக்கிறப்போ என் பொண்ணை நான் வாக்சினேசனுக்கு ஹாஸ்பிட்டலுக்குத் தூக்கிட்டுப் போவேன்.. அப்போ அங்கேயிருக்கிற பேஷண்ட்ல இருந்து நர்ஸ் வரைக்கும் ‘கழுத்துல தாலியில்லாம பிள்ளையோட வர்றானு’ என்னைக் கேலி பண்ணிருக்காங்க.

அவளை ப்ரீ ஸ்கூல்ல சேர்க்கப் போனப்போ அப்பா பெயரைக் கேட்டதும், நான் ஒரு சிங்கிள் மதர்னு சொன்னதுக்கு அந்த ஹெச்.எம் என்னைப் பரிதாபமா பார்த்திருக்காங்க… இவ்ளோ ஏன்? இப்போ மண்டபத்துல உங்க பையன் என்னை அவரோட பொண்டாட்டினு அறிமுகப்படுத்தினாரு, நம்ம வீட்டுக்குப் புறப்பட்டு வர்றப்போ ஒரு அம்மா ‘கழுத்துல தாலியில்லாம கிருஷ்ணாவை ஏமாத்தி பிள்ளையைப் பெத்துருக்கானு’ என் காது படவே பேசுனாங்க..

இது தான் உலகம் ஆன்ட்டி… இந்த உலகம் என்னைக் கேலி செஞ்சாலும், என் மேல இரக்கப்பட்டாலும், என்னை வெறுத்து ஒதுக்குனாலும் அதைக் கடந்துப் போக நான் பழகிட்டேன். இனிமே எனக்கு யாரோட துணையும் தேவைப்படாது” என்று உறுதியாய்ச் சொல்லிவிட்டாள்.

கிருஷ்ணாவோ “என்னோட துளசி எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கா.. நான் செஞ்ச தப்புக்கு அவ மட்டுமே தண்டனை அனுபவிச்சிருக்கா. ஆனா நான் இது எதுவுமே தெரியாம இருந்திருக்கேன்” என்று மனதிற்குள் வெதும்பிக் கொண்டிருந்தான்.

துளசி அந்தக் குடும்பத்தினர் அனைவரையும் நேருக்கு நேராகப் பார்த்தவள் “கடைசியா ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன். எங்களுக்கு இப்போ வரைக்கும் கல்யாணமே ஆகலை.. மித்ரா உங்க குடும்பத்து வாரிசு இல்லை. அவளுக்கும் கிருஷ்ணாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.. அவ என்னோட பொண்ணு, எனக்கு மட்டும் தான் அவ பொண்ணு… ப்ளீஸ்! இதுக்கு மேலே எங்களைத் தொந்தரவு பண்ணாதிங்க” என்று கைகூப்பிவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

அனைவராலும் அவள் கோபத்திலுள்ள நியாயத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.

கிருஷ்ணாவுக்குப் பரிந்து பேசிய சுபத்ராவுமே “வலிக்க வலிக்கப் பிள்ளையைப் பெத்து, இத்தனை வருசம் தனியாளா வளர்த்தவளுக்கு வர வேண்டிய நியாயமான கோவம் தான் இது” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டார்

ராகவேந்திரன் “துளசி ஒரு நிமிசம் நில்லுமா” என்று சொல்லவும் நின்றவள் என்னவென்று அவரைத் திரும்பிப் பார்க்க

ராகவேந்திரன் அவளிடம் வந்தவர் “உன் காரை உன் ஃப்ரெண்ட் எடுத்துட்டுப் போயிட்டா… நீ தனியா போறது சரியில்லை… நான் டிரைவரை அனுப்பிவைக்கிறேன்.. இதையும் வேண்டானு சொல்லிடாதம்மா” என்று வேண்டியவர் அவள் முன் கரங்களைக் கூப்பவும் துளசி பதறிவிட்டாள்.

“அங்கிள் கையைக் கீழே போடுங்க… நீங்க போய் என் முன்னாடி..” – துளசி.

“இல்லைமா! நான் பிள்ளையோட வளர்ப்புல கவனம் செலுத்தாததோட விளைவு, இன்னைக்கு நீ அதுக்கான தண்டனையை அனுபவிக்கிற.. உன்னால முடிஞ்சா என்னை மன்னிச்சுடும்மா” என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் நின்றால் தன்னால் சமாளிக்க முடியாது என்று புரிந்து கொண்டவர் விறுவிறுவென்று தனது அறையை நோக்கிச் சென்றுவிட்டார்.

துளசி கண்கள் கலங்க அங்கிருந்து செல்லும் ராகவேந்திரனைப் பார்த்தவள், இன்னும் தலை நிமிராது நின்ற கிருஷ்ணாவை வேதனை நிரம்பியக் கண்களால் பார்க்கவும் அவனது முகத்தில் தெரிந்தச் சோகம் அவள் மனதிலும் வலியை உண்டாக்க, தொய்ந்து போனக் கால்களுடன் ஆர்.கே பவனத்தை விட்டு வெளியேறி கருங்கல்படிகளில் இறங்கினாள்.

ராகவேந்திரன் சொன்னது போலவே கீழே டிரைவர் காருடன் காத்திருக்க, அதில் ஏறி அமர்ந்தவளின் மனம் இப்போது கூட கிருஷ்ணாவை நினைத்து வருந்தியது தான் ஆச்சரியம்.

தொடரும்💗💗💗