💑துளி 3💑

ஸ்ராவணி அன்று அலுவலகத்துக்கு வேக வேகமாக தயாராகிக் கொண்டிருந்தாள். கழுத்துப் பக்கம் மடங்கியிருந்த டாப்பை இழுத்து நேராக்கியவள் கண்ணாடியில் கழுத்து வெறுமையாக இருப்பதைக் கண்டு திகைத்தாள்.  படுக்கையைப் புரட்டிப் பார்த்து0 போர்வையை உதறினாள். ஆனால் செயினை தான் காணவில்லை.

இவள் செய்த அதகளத்தை பார்த்தபடி உள்ளே வந்த மேனகா “என்னாச்சு வனி? ஏன்டி இப்பிடி கலைச்சு போடுற?” என்று கேட்க

ஸ்ராவணி பதற்றத்துடன் “என் செயினை காணும் மேகி. அதான் தூங்கறப்போ கழண்டு விழுந்துடுச்சானு பார்க்குறேன்” என்றாள் தலையணைகளை உதறிப் பார்த்தபடி.

எங்கேயும் கிடைக்காமல் போகவே “அது அப்பாவோட கிப்ட். இப்பிடி அசட்டுத்தனமா அதை தொலைச்சிட்டேனே” என்று தலையில் கைவைத்தபடி அமர்ந்துவிட்டாள்.

மேனகா அவள் அருகில் அமர்ந்தவள் “வனி!  என்னடி இந்த சின்ன விஷயத்துக்கு இவ்ளோ ஃபீல் பண்ணுற?  காரணம் இல்லாம எதுவும் நடக்காதுடி.  சீக்கிரமா உன் செயின் உன் கையில் கிடைச்சிடும்” என்றாள் நம்பிக்கை ஊட்டும் விதமாக.

அவள் சொன்னது மனதுக்கு நிம்மதியைக் கொடுக்க ஸ்ராவணி எழுந்தவள் போன் அலறவும் எடுத்துக் காதில் வைத்தாள்.

“ஹலோ ரகு! சொல்லுடா! இதோ கிளம்பிட்டோம்டா” என்றவள் மேனகாவை பார்த்து நேரமாகி விட்டது என்று மணிக்கட்டில் தட்டி சைகை காட்டிவிட்டு வேகமாக சென்று பேக்கை மாட்டிக்கொண்டு ஸ்கூட்டி சாவியை எடுத்துக்கொள்ள மேனகா வீட்டை பூட்டினாள்.

இருவரும் லிப்டில் கீழே சென்றவர்கள் தரிப்பிடத்தில் இருந்த ஸ்கூட்டியை அண்ணாசாலையில் உள்ள தங்கள் அலுவலகத்தை நோக்கி விரட்டினர்.

அலுவலக தரிப்பிடத்தில் ஸ்கூட்டியை விட்டவர்கள் நேரே சென்றது புரோடக்சன் டீமில் இருக்கும் போட்டோ எடிட்டர் ரகுவிடம் தான். அவன் தான் அந்த வாட்ச் கேமரா ஐடியாவைக் கொடுத்தவன்.

அவனது கேபினுக்குள் நுழைந்தவள் முந்தைய நாள் அணிந்திருந்த வாட்சை கழற்றி ரகுவின் டேபிளில் வைக்கவும் அவன் “அப்புறம் நேத்து பப்ல செம என்ஜாய் போல?” என்ற கேலியுடன் அதை யு.எஸ்.பி மூலம் கம்ப்யூட்டரில் இணைத்தான்.

அவனது கேலிக்கு மேனகா சிரிக்க ஸ்ராவணி கடுப்புடன் அவன் தோளில் கையிலிருந்த ஹேண்ட்பேகால் நான்கு அடிகள் போட்டாள்.

“எம்மா தெய்வமே! உனக்கு ஹெல்ப் பண்ணுனா நீ என்னையவே அடிக்கிறியே” என்று தோளைத் தடவியபடி மானிட்டரில் விழி பதித்தான்.

மூவரும் அதிலிருந்த புகைப்படங்களையும் வீடியோவையும் கம்ப்யூட்டருக்கு மாற்றியவர்கள் வீடியோவைப் பார்க்க ஆரம்பிக்க ஸ்ராவணி அவசரமாக  “ரகு ஃபர்ஸ்ட் வீடியோவை பாஸ் பண்ணு” என்று சொல்ல ரகு அவளை வினோதமாக பார்த்து வைத்தான்.

“வனி! இந்த வீடியோ போதும் அந்த அபிமன்யூவை காலி பண்ண.  இப்பிடி குடிச்சிட்டு பொண்ணுங்க கூட சுத்துறவனை எப்பிடி மக்கள் பிரதிநிதியா செலக்ட் பண்ணுவாங்கன்னு ஒரு விவாதமேடை வச்சா டி.ஆர்.பியும் எகிறும். என்ன சொல்லுற மேகி?” என்றான் அவன் சாதாரணமாக.

ஸ்ராவணி அவனை முறைத்தபடியே “அஹான்! இப்பிடி ஒரு வீடியோவ லீக் பண்ணி டி.ஆர்.பிய எகிற வச்சா சீஃப் நம்ம வேலைய காலி பண்ணிடுவாருடா எருமை!  நமக்கு தேவையானது அவனோட ஹைஃபை லைஃப்ஸ்டைல் பத்தின ஆதாரம் தானே தவிர அவனோட பெர்ஷனல் லைஃப் பத்தின தகவல் இல்லை.  இதை லீக் பண்ணி அவனை அசிங்கப்படுத்துறது பத்திரிக்கை தர்மம் இல்லடா. அந்த ஃபூட்டேஜை டெலிட் பண்ணிடு. போட்டோஸ்சை மட்டும் இந்த பெண்டிரைவ்ல குடு” என்றபடி பென்டிரைவை நீட்டினாள்.

ரகு அதில் புகைப்படத்தை காப்பி செய்து நீட்ட வாங்கிக் கொண்டு மீட்டிங் ஹாலுக்கு நடக்கத் தொடங்கினர் இருவரும்.  அதற்குள் அட்மினிஸ்ட்ரேஷன் டிப்பார்ட்மெண்டில் இருக்கும் அனு

“என்ன ரெண்டு பேரும் இவ்ளோ லேட்டா வர்றிங்க? சீஃப் வந்து ரொம்ப நேரமாச்சு. சுகா,  பூர்வி மேம், வர்தன் எல்லாரும் மீட்டிங் ஹாலுக்கு போயிட்டாங்க” என்று அறிவிக்கவும் இருவரும் லிப்டை நோக்கி ஓடினர்.

மீட்டிங் ஹாலானது மேல் தளத்தில் இருக்கவே அங்கே சென்றவர்கள் ஹாலின் கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றனர். உள்ளே மீட்டிங் ஆரம்பமாகி இருக்க டேபிளின் நடுநாயகமாக அமர்ந்திருந்தான் ஜஸ்டிஸ் டுடேவின் எம்.டி விஷ்ணு பிரகாஷ்.

உள்ளே வந்து மூச்சு வாங்க நின்றவர்களை கண்டு புன்னகைத்தவன் “என்னாச்சு என்னோட ஸ்டார் ரிப்போர்ட்டர் டைம் கரெக்டா ஃபாலோ பண்ணுவாளே! இன்னைக்கு ஏன் லேட்?” என்று கேட்க

இருவரும் விஷயத்தை சொல்லிவிட்டு அமர்ந்து தண்ணீரை குடித்தனர். வீட்டிற்கு திரும்ப நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டதால் காலை எழுவதற்கு நேரமாகிவிட்டது என்று காரணத்தை விளக்க “பன்னிரண்டு மணி வரைக்கும் ரெண்டு பேரும் பப்ல இருந்திங்களா?”  என்று ஒரு பெண்ணின் குரல் கேட்கவும் ஸ்ராவணி திருதிருவென்று விழித்தாள்.

“ஐயோ இந்த மதர் இந்தியாவ கவனிக்காம போயிட்டியே வனி” என்ற மேனகாவின் குரலில் சுதாரித்தாள் ஸ்ராவணி.

நாராயணன் அந்தச் சேனலின் டைரக்டர் ஆஃப் எடிட்டிங் அவளின் அருகில் அமர்ந்திருந்தவர் “வனிம்மா!  இப்போ நீ பதில் சொல்லியே ஆகணும். இல்லன்னா அடுத்த கால் உன்னோட மம்மி டாடிக்கு தான் போகும். பதில் சொல்லு” என்று காதில் சொல்லிவிட்டு நிமிர்ந்து கொண்டார்.

அதற்குள் அந்தக் குரலின் சொந்தகாரியும் அதே விஷயத்தை சொல்ல “மேம்! போட்டோஸ் எடுக்க டைம் ஆயிடுச்சு அதான்” என்று ஸ்ராவணி சமாளித்து வைத்தாள்.

“அஹான்!  இது எல்லாமே இந்த விச்சு குடுக்கிற இடம். ரிப்போர்ட்டர்னா நேரம் காலம் பாக்காம ஒர்க் பண்ணனும் தான். பட் அதுக்காக அந்த மாதிரி இடத்துல அந்த மாதிரி ஒருத்தன் கூட அவ்ளோ நேரம் இருக்கிறது உனக்கு பாதுகாப்பு இல்ல வனி. உங்க அம்மா யூ.எஸ் போறப்போ என் பொண்ணை உங்களை நம்பி தான் விட்டுட்டுப் போறேனு என் கிட்ட தான் சொல்லிட்டு போயிருக்காங்க” என்று படபடத்த அவள் வேறு யாருமில்லை!  விஷ்ணுவின் மனைவி பூர்வி தான்.

சேனலின் புரொடக்சன் டீமின் ஹெட் என்பதால் அவளும் அந்த மீட்டிங்கில் இருக்க ஸ்ராவணி அவளிடம் நடந்தை விளக்கிய பிறகு தான் அவள் அமைதியானாள்.

பின்னர் விஷ்ணுவிடம் போட்டோக்கள் அடங்கிய பென்டிரைவை நீட்டிய ஸ்ராவணி “சீஃப்  இதை எப்போ டெலிகாஸ்ட் பண்ணப் போறோம்?  இந்த போட்டோஸை பொலிட்டிக்கல் இண்டர்வியூல சுகா பேசுறப்போவே டெலிகாஸ்ட் பண்ண போறோமா?” என்று ஆர்வத்துடன் கேட்க அவன் இல்லையென்று தலையசைத்தான்.

“இதை இப்போ யூஸ் பண்ணுனாலும் ஒரு பிரயோஜனமும் இல்ல. பிகாஸ் அபிமன்யூ கண்டிப்பா வின் பண்ணிடுவான்னு எல்லா கருத்துகணிப்போட புள்ளிவிவரங்களும் தெளிவா சொல்லுது. ஆனா மினிஸ்டரோட கால்குலேசன் அவனை எம்.எல்.ஏ மட்டும் ஆக்குறது இல்ல” என்றுச் சொல்லிவிட்டு நிறுத்த அனைவரும் அவனை குழப்பத்தோடு பார்த்தனர்.

“அவங்க கட்சி வட்டாரங்கள் வேற தகவல்களை சொல்லுது. அது இப்போதைக்கு என்னால உங்க கிட்ட ஷேர் பண்ணிக்க முடியாது” என்றவனை பெருமூச்சுடன் பார்த்தனர் அனைவரும்.

பின்னர் மற்ற விவரங்களை பேசி முடித்ததும் விஷ்ணுவிடம் சொல்லிக் கொண்டு வெளியேறினர் ஸ்ராவணி, மேனகா மற்றும் அவர்கள் சேனலின் பிரபல செய்தி தொகுப்பாளரான சுலைகா நஸ்ருதீன். செல்லமாக அவளை சுகா என்று அழைப்பாள் ஸ்ராவணி.

“சோ உன்னோட  நெக்ஸ்ட் இண்டர்வியூவோட கெஸ்ட் அந்த அபிமன்யூ தானா சுகா?  ஆல் த பெஸ்ட். எப்பிடியும் பூர்வி மேம் ரைட் அப் பண்ணப் போற ஸ்கிரிப்ட் படி நீ வாழைப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரி அவனை போட்டுத் தாக்குவ. அதை பாக்குறதுக்கு வீ ஆர் ஈகர்லி வெயிட்டிங்” என்றாள் ஸ்ராவணி.

சுகா யோசனையுடன் “ஆனா அத்தாவுக்கு லாஸ்ட் டைம் மினிஸ்டர் பார்த்திபனை நான் இண்டர்வியூ பண்ணதே மனத்தாங்கல் வனி” என்று சொல்லவும் மேனகாவும் ஸ்ராவணியும் இதில் அவருக்கு என்ன மனத்தாங்கல் என்பது புரியாமல் விழித்தனர்.

பின்னர் அவளை உற்சாகப்படுத்தும் விதமாக மேனகா “உங்க அப்பா அந்த பார்ட்டியோட டிஸ்டிரிக்ட் செகரட்டரினா நீ இந்த சேனலோட ஃபேமஸ் நியூஸ் ஆங்கர்டி. உன்னை மாதிரி  நாசூக்கா பேசி இண்டர்வியூ எடுக்கிற டேலண்ட் இங்க யாருக்குமே கிடயாது. இதை நெனைச்சு அவர் பெருமை தான் படணும்” என்று சொல்ல ஸ்ராவணியும் அதை ஆமோதித்தபடி அவர்களுடன் நடந்தாள்.

அந்நேரம் பார்த்து அவளை நோக்கி வந்தான் கேமராமேன் வர்தன். “வனி! இன்னைக்கு எம்.எல்.ஏ கேண்டிடேட் அபிமன்யூவோட பொதுக் கூட்டம் அவரோட தொகுதியில நடக்குது. இன்னைக்கு பாத்து ஹரி லீவ். சோ நீ தான் எங்க கூட வரணும்” என்று சொல்ல ஸ்ராவணி முகத்தைச் சுளித்தபடி மறுத்தாள்.

“நோ நோ! அவனை அகெய்ன் பாக்கவோ பேசவோ நான் விரும்பலடா வர்தன்!  நீ மேகிய கூட்டிட்டு போ” என்று மேனகாவை பிடித்து தள்ளிவிட அவளும் புறப்பட தயாராக அதற்குள் பூர்வி அவளுக்கு இன்னொரு வேலையைக் கொடுத்திருப்பதாக பியூன் வந்து சொல்லவும் ஸ்ராவணி தான் அவனுடன் போக வேண்டியதாயிற்று.

போவதற்கு முன் விஷ்ணுவிடம் சென்று கடைசியாக ஒருமுறை பேசிப் பார்க்கலாம் என்று அவனது கேபினுக்குள் சென்றாள் ஸ்ராவணி.

“சீஃப் என்னால அந்த பொதுக்கூட்டத்துக்குப் போக முடியாது. அரசியல்வாதிங்க பேசுற பொய்யைக் கேக்குற அளவுக்கு எனக்குப் பொறுமை இல்லை சீஃப்” என்று சொன்னவளை பார்த்து புன்னகைத்தான் விஷ்ணு.

“ஃபர்ஸ்ட் கொஞ்சம் அமைதியா உக்காரு” என்று அவளுக்கு நாற்காலியை காட்ட அவளும் அமர்ந்தாள்.

“நீ ஃபர்ஸ்ட் டைம் இண்டர்வியூ அட்டெண்ட் பண்ண இங்க வந்தது உனக்கு நியாபகம் இருக்கா?” என்று கேட்க அவளுக்கு இரண்டு வருடத்துக்கு முந்தைய அந்த நாள் நினைவுக்கு வந்தது.

அன்று அவளின் நேர்காணலை நடத்தியவன் விஷ்ணுவே. உள்ளே வந்து அமர்ந்தவளிடம் அவளுடைய சான்றிதழ்களை வாங்கி பார்த்தவன் அவளின் கிரேடுகளில் திருப்தியடைந்தான்.

“வெல் மிஸ் ஸ்ராவணி சுப்பிரமணியம்! உங்க கிரேட்ஸ்லாம் ரொம்ப நல்லா இருக்கு, ஒரே ஒரு கேள்வி” என்று சொல்லிவிட்டு அவளைப் பார்க்க அவள் அவனது கேள்வியை எதிர்கொள்ள தயாரானாள்.

“உங்களுக்கு பிடிச்ச ஜர்னலிஸ்ட் யார்? காரணத்தோட சொல்லுங்க” என்றபடி அவளைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.

ஸ்ராவணி நிமிர்ந்து அமர்ந்தவள் “எனக்கு பிடிச்ச ஜர்னலிஸ்ட் கௌரி லங்கேஷ் மேம். அவங்க பெண்கள் உரிமை, ஜாதி பிரச்சனைனு சமுதாயத்தோட எல்லா வித பிரச்சனைகளுக்கும் குரல் குடுத்தாங்க. அவங்களோட செயல்பாடுகள் அவங்க மரணத்துக்கு காரணமா இருக்க போகுதுனு தெரிஞ்சும் தைரியமா போராடுனாங்க. போராட்டத்தோட முடிவா மரணத்தையும் ஏத்துக்கிட்டாங்க. எனக்கு அவங்களை மாதிரி ஒரு தைரியமான ஜர்னலிஸ்டா ஆகணும். அவ்ளோ தான் சார்” என்று உறுதியோடு உரைத்தவளை அன்றே இண்டர்ன்ஷிப்பில் சேருமாறு அனுப்பி வைத்தான் விஷ்ணு.

இது நடந்து இரண்டு வருடங்கள் ஆகியும் அந்நினைவுகள் அவள் மனதில் பசுமையாய் நியாபகம் இருந்தது.

விஷ்ணு “அவ்ளோ தைரியமா பேசுன என்னோட ஸ்டார் ரிப்போர்ட்டருக்கு ஒரு எம்.எல்.ஏ கேண்டிடேட்டை சமாளிக்கிறது ஒன்னும் அவ்ளோ கஷ்டமில்ல” என்று முத்தாய்ப்பாய் கூறி அவளை அனுப்பி வைத்தான்.

ஸ்ராவணி வர்தனுடன் அவன் பைக்கில் கிளம்பியவள் அந்த பொதுக்கூட்ட மேடையில் அபிமன்யூவை பார்த்ததும் “ஐயோ இவன் பேசுறதை வேற கேக்கணுமா நானு” என்று தலையிலடித்துக் கொண்டாள்.

இருந்தாலும் வேறுவழியின்றி அவன் ஆற்றிய சொற்பொழிவை கேட்டு முடித்தவள் வர்தனிடம் “கிளம்பலாமா வர்தன்?” என்று கேட்க

அவனோ “வனி வாட் இஸ் திஸ்? இன்னும் நம்ம கேண்டிடேட் கிட்ட கேள்வி எதும் கேக்கலயே?” என்று சொல்ல

அவள் கடுப்புடன் “இப்போ அது ஒன்னு தான் கொறச்சல்! அப்படி கேட்டாலும் மேடையில சுட்ட வடையை தான் இங்கேயும் சுடுவான் இந்த இடியட். என்னால இதுக்கு மேல எந்த பொய்யையும் கேக்க முடியாதுடா” என்றாள் சலிப்பாக.

வெயில் வேறு அடிக்கவே அவளால் நிற்க முடியவில்லை. அவள் அங்கிருந்து நகர முயலும் போது மேடையிலிருந்து இறங்கி வந்தான் அபிமன்யூ.

வணக்கம் சொன்னபடி அஸ்வினுடன் ஏதோ பேசிக் கொண்டு வந்தவன் நிருபர்கள் கேட்டக் கேள்விகளுக்கு பதிலளித்தபடியே நகர வர்தன் “வனி இவருக்கு இப்போவே பொலிடிஷியன் லுக் வந்துடுச்சுல்ல” என்று சிலாகிக்க ஸ்ராவணி அவனை பார்த்து பொய்யாய் அதிசயித்தாள்.

“அப்பிடியா? உங்க ஊருல ஒயிட் பேன்ட் ஒயிட் ஷேர்ட் போட்டவனெல்லாம் பொலிடிஷியனா?  நல்லா காமெடி பண்ணுற மேன். இதுக்கு நாளைக்கு சிரிக்குறேன். இப்போ கிளம்பலாமா?” என்று கிண்டலடித்தபடி வர்தனுடன் பைக் நிறுத்தியிருக்கும் இடத்திற்கு செல்ல  அவனைத் தொடர்ந்தாள்.