💗அத்தியாயம் 45💗

சற்று முன்னர் நடந்த நிகழ்வு அனைவரின் நெஞ்சையும் உலுக்க சஹானாவைச் சமாதானம் செய்து உறங்கவைக்க முயன்று கொண்டிருந்தான் ராகுல். குடும்பத்தினர் அனைவரும் குழப்பத்துடன் ஹாலில் ஆங்காங்கே அமர்ந்து கொள்ள விஜயேந்திரன் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார்.

ஏதோ ரகசியத்தை மனைவியும் மகளும் மறைக்கிறார்களோ என்று குழப்பத்துடன் நெஞ்சைப் பிடித்தபடி அமர்ந்த சகோதரனை ஆதரவாக அணைத்துக் கொண்ட ராகவேந்திரன் அவருக்கு ஆறுதல் சொல்ல சாரதா ஒருபுறம் விம்மத் தொடங்கினார்.

விஜயேந்திரன் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தவர் “இப்போ அழுது என்ன பண்ணுறது? பொண்ணைக் கவனமா பார்த்துக்க வேண்டிய நேரத்துல கோட்டை விட்டுட்டு இப்போ அழுது என்ன புண்ணியம்?” என்று தலையிலடித்துக்கொண்டு அழத் துவங்கினார். ஒரு தந்தையாய் அவர் மகளின் வேதனையைக் காண அவரால் இயலவில்லை.

சாரதாவோ “எல்லா தப்பும் என் மேலே தான்… நான் தான் அந்த ரிச்சர்ட் பையன் என் கிட்ட சஹானாவோட புது ஃப்ரெண்ட் நகுலைப் பத்தி சொன்னப்போவே நான் அவளைக் கண்டிச்சருக்கணும்… அவ அந்த நகுலோட பார்ட்டிக்குப் போறதுக்கு பெர்மிசன் கேட்டப்போ குடுக்காம இருந்திருக்கணும்… அவளோட மத்த ஃப்ரெண்டு மாதிரி தான் அவனை நினைச்சு நான் அந்தப் பையனோட பார்ட்டிக்குச் சஹானா போறதுக்குச் சம்மதிச்சேங்க… அவன் இப்பிடி அவளையே சீரழிப்பானு நான் நினைச்சுப் பார்க்கலையே” என்று கதறியழுதார்.

உமாவும் மகேஷ்வரியும் அவரைத் தேற்றியவர்கள் “முடிஞ்சதைப் பத்தி பேசி வருத்தப்படாதிங்கண்ணி… இது எல்லாமே ஆறு வருசத்துக்கு முந்துன கதை… அதுக்கு அப்புறம் தான் எல்லாம் சரியாயிடுச்சே… அழாதிங்க… நீங்களே உடைஞ்சுப் போனா சஹானாவுக்கு யாரு தைரியம் சொல்லுவாங்க?” என்று சொல்லவும் துளசிக்கும் சுகன்யாவுக்கும் அந்த இரு குடும்பங்களின் ஒற்றுமையை எண்ணி ஆச்சரியமாக இருந்தது.

சாரதாவைத் தேற்றியவர்கள் அவர்களும் சிறிதுநேரம் கண்ணயரலாம் என்று அவர்களின் அறைக்குச் சென்றுவிட ஹாலில் ராகவேந்திரனின் குடும்பத்தினர் மட்டுமே மீதமிருந்தனர். மீனா சாரதாவின் கரத்தைப் பற்றியவர் “கொஞ்சம் நேரம் தூங்குங்க சாருக்கா.. இல்லைனா மனசு இப்பிடியே அலைபாய்ஞ்சிட்டே இருக்கும்” என்று சொல்ல

சாரதா அதைக் கவனிக்காதவராய் கணவரிடம் சென்று அமர்ந்தவர் அவரது கரத்தைப் பற்றிக்கொண்டார்.

கண்ணீர் வழிய “என்னை மன்னிச்சிடுங்க விஜய்.. நானும் சஹானாவும் நிறைய விஷயத்தை உங்க எல்லார் கிட்டவும் இருந்து மறைச்சிட்டோம்…. என்னை மன்னிச்சிடுங்க” என்று கதறத் துவங்க விஜயேந்திரன் மனைவியைத் தோளுடன் அணைத்துக் கொண்டார்.

“விடு சாரு! எல்லாத்தையும் மறந்துடு” என்ற கணவரின் முகத்தை ஏறிட்டவர்

“எப்பிடிங்க மறப்பேன்? உங்க எல்லார் கிட்டவும் சஹானாவுக்குப் பிறந்த குழந்தை செத்துப் போயிடுச்சுனு பொய் சொல்லிட்டேனே! அதை எப்பிடி மறப்பேன்? ரோஜாமொட்டு மாதிரி பிறந்து கொஞ்சநேரத்துலயே அந்தக் குழந்தையைக் குப்பைத்தொட்டியில வீசுனவளைத் தடுக்காம வேடிக்கை பார்த்தேனே, அதை எப்பிடிங்க மறப்பேன்? அந்தக் குழந்தையோட கதறல் சத்தம் இன்னும் என் காதுல கேக்குதுங்க… ஒவ்வொரு தடவையும் துளசி வீட்டுக்குப் போற வழியில அந்தப் பள்ளத்தாக்கைப் பார்க்கிறப்போ என் பொண்ணோட இரத்தத்துல உதிச்ச வாரிசை அந்த இடத்துல அம்போனு தூக்கிப் போட்டது நியாபகத்துக்கு வர்றதை எப்பிடிங்க தடுக்க முடியும்?” என்று அவர் சொல்ல சொல்ல துளசிக்கும் சுகன்யாவுக்கும் தங்கள் தலையில் யாரோ இடியை இறக்குவது போல இருந்தது.

சஹானாவின் குழந்தை இறந்துவிட்டதாக நம்பியக் கிருஷ்ணாவுக்கும் குழந்தையைக் குப்பைத்தொட்டியில் வீசியதாகச் சித்தி சொன்ன விஷயமும், அவர் சொன்ன இடமும் அதிர்ச்சியைக் கொடுத்தது. வேகமாகச் சாரதாவிடம் வந்தவன் “சித்தி! எல்லா விஷயத்தையும் மறைக்காம சொல்லுங்க ப்ளீஸ்” என்று கேட்டதும் சாரதா இத்தனை வருடமாகத் தனக்கும் மகளுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியத்தை அவரது குடும்பத்தினரிடம் கொட்டிவிட்டார்.

ஏஞ்சலினாவின் மரணத்துக்குப் பின்னர் கிருஷ்ணா இந்தியா வந்த பிறகு சஹானாவின் நடவடிக்கைகள் மிகவும் மோசமானது. ரிச்சர்ட்டின் நட்பை உதறியவள் புதிதாக நகுல் என்ற இந்தியன் ஒருவனைத் தன் நண்பன் என்று வீட்டினரிடம் அறிமுகம் செய்துவைத்தாள். மகள் மீது உள்ள நம்பிக்கையாலும், அவன் இந்தியன் என்பதாலும் சாரதாவும் விஜயேந்திரனும் அதைப் பெரிதுபடுத்தவில்லை.

ஆனால் ரிச்சர்ட் ஒருமுறை சாரதாவிடம் நகுலைப் பற்றி தனியாக வந்து எச்சரித்தான். அவன் நல்லவனில்லை என்றும் அவனது நடவடிக்கை சரியில்லை என்றும் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். சாரதா தான் அவன் சொன்னதை கண்டுகொள்ளவில்லை. கிருஷ்ணாவைப் பற்றிச் சஹானாவிடம் மூட்டிவிட்டது இவன் தானே என்ற அலட்சியம் அவருக்கு.

ஆனால் நகுலின் பார்ட்டிக்குச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்ற சஹானா நள்ளிரவு தாண்டியும் வீடு திரும்பாததால் கணவரிடம் கவலைப்பட்டவர் வேறு வழியின்றி ரிச்சர்ட்டுக்கே அழைத்தார். அவன் சொன்னத் தகவலைக் கேட்டுச் சாரதா மூர்ச்சையுற விஜயேந்திரன் தான் மீதமுள்ள விஷயத்தைக் கேட்டுவிட்டு ரிச்சர்ட் சொன்ன மருத்துவமனைக்கு விரைந்தார்.

அங்கே சஹானாவை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ந்திருந்த ரிச்சர்ட் சொன்ன வார்த்தை ‘கேங் ரேப்’. அந்த நகுலும் அவன் உடனிருந்தவர்களும் இந்த அக்கிரமத்தை நிகழ்த்திவிட்டுத் தலைமறைவாகிவிட்டனர் என்று சொன்னவன் இன்னும் சிறிது நேரத்தில் காவல்துறை அவர்களைக் கண்டுபிடித்துவிடும் என்று இருவருக்கும் நம்பிக்கை கொடுத்தான்.

ஆனால் நாட்கள் தான் கழிந்ததே தவிர அந்த நகுலும் அவன் கூட்டாளிகளும் மாட்டவே இல்லை. சஹானாவும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாள். உடல் தேறிய அளவுக்கு அவளது மனம் தேறவில்லை. எப்போதும் சுவரை வெறித்த வண்ணம் அமர்ந்திருந்தவளுக்கு கொடுத்த கவுன்சலிங் அனைத்துமே வீண் என்று எண்ணும் வகையில் அவள் தற்கொலைக்கு முயலவே, விஜயேந்திரன் இனி அமெரிக்க வாழ்க்கை தங்களுக்கு நரகம் தான் என்று எண்ணியவராய் குடும்பத்தோடு இந்தியா திரும்ப முடிவெடுத்தார்.

அவர்கள் இந்தியா செல்வதற்கு விமானநிலையத்தில் நின்றிருந்த நேரம் அவர்களை வழியனுப்ப வந்த ரிச்சர்ட் “கடவுள் கண்டிப்பா தப்பு பண்ணுனவங்களைத் தண்டிப்பாருனு சொன்னேன்ல, அதே மாதிரி தண்டிச்சிட்டார்… ஆமா அங்கிள்! சஹாவோட வாழ்க்கையை நாசம் பண்ணுன நகுலையும் அவனோட ஃப்ரெண்ட்ஸையும் போலீஸ் நேத்து துரத்துனப்போ காரில தப்பிச்சவங்க ஒரு ஆக்சிடெண்ட்ல சிக்கி அந்த ஸ்பாட்லேயே செத்துட்டாங்க… கடவுள் இருக்காரு ஆன்ட்டி… நீங்க கவலைப்படாம இந்தியாவுக்குக் கிளம்புங்க… பை சஹானா” என்று சொல்லிவிட்டு அகன்றவனைக் கண்கள் பனிக்கப் பார்த்துவிட்டு விமானம் ஏறினர் விஜயேந்திரனின் குடும்பத்தினர்.

இந்தியா வந்தவர்கள் ராகவேந்திரனிடம் கூட விவரத்தைச் சொல்லாமல் குன்னூர் பங்களாவில் சஹானாவைத் தங்கவைத்தனர். அவளுக்கு மனோதத்துவ நிபுணர் மூலம் சிகிச்சையளித்த அந்தச் சமயத்தில் தான் சஹானா கருவுற்றிருப்பது தெரியவந்தது. சஹானா அதைக் கேட்ட போது அருவருத்துப் போனாள்.

அந்தக் குழந்தையைக் கலைத்தே ஆகவேண்டும் என்று அடம்பிடிக்க, மருத்துவர்களோ அவள் உடல் கருக்கலைப்பைத் தாங்கும் சக்தியுடன் அப்போது இல்லை என்று கலைப்பதற்கு மறுத்துவிட்டனர்.

அதன் பின்னர் சாரதா மகளிடம் ஒரு உயிரைக் கொல்வது பாவம் என்று சொல்லி அவளைச் சமாதானம் செய்தார். அப்படி இருப்பினும் சஹானா வெறுப்புடனே கருவைச் சுமந்தாள். எப்போதடா இந்தச் சுமை தன்னை விட்டு அகலும் என்று காத்திருந்தவள் அடிக்கடி சொல்லிக் கொள்வாள் “நீ எனக்கு வேண்டாம்… எனக்கு உன்னைப் பிடிக்கலை… நான் உன்னை வெறுக்கிறேன்… உன்னைச் சுமக்குறதை நினைச்சா எனக்கு அருவருப்பா இருக்கு” என்று தனக்குள் உருப்போட்டுக்கொள்வாள்.

இந்நிலையில் தான் எதேச்சையாகக் குன்னூருக்கு வந்த ராகவேந்திரனுக்குச் சஹானாவின் விஷயம் தெரியவர நெஞ்சைப் பிடித்தபடி சரிந்துவிட்டார் மனிதர். தன் பிரியத்துக்குரிய பெரியப்பாவின் மனவருத்தத்துக்கும் இந்தக் குழந்தை தானே காரணம் என்று சஹானா அதற்கும் சேர்த்துக் குழந்தையை வெறுத்தாள்.

அவளுக்குப் பிரசவதேதி நெருங்கும் நேரத்தில் இச்சம்பவம் நடந்ததால் சஹானாவுக்குத் துணையாக குன்னூரில் ராகுலும் அவனது அம்மாவும் இருந்துகொண்டனர். ராகுலுக்கு முதலில் சஹானாவின் இந்நிலையைக் கேள்விபட்டதும் அதிர்ச்சி தான். ஆனால் அவனும் அவன் குடும்பத்தினரும் முதிர்ச்சியான மனநிலையைக் கொண்டவர்கள்.

நடந்தது ஒரு விபத்து, அதில் சஹானாவின் தவறேதும் இல்லை என்று சொன்ன உமா சஹானாவைக் கவனித்துக்கொள்ள, சாரதா விஜயேந்திரனுடன் சேர்ந்து ராகவேந்திரனது உடல்நிலை சரியாகும் வரை கோயம்புத்தூரில் இருந்தார்.

அச்சமயத்தில் தான் அகிலேஷ் தேவாவின் மூலம் ஏஞ்சலினாவின் புகைப்படங்களை ராகவேந்திரனின் பார்வைக்கு எடுத்துச் செல்ல அவர் அனைத்துக்குமே கிருஷ்ணாவின் நடத்தையே காரணம் என்றும், அவனைப் பார்த்துத் தான் சஹானாவும் அமெரிக்கக் கலாச்சாரத்துக்கு அடிமையாகிவிட்டாளென்றும் மகனை வெறுக்கத் தொடங்கினார்.

அதே நாளில் கிருஷ்ணா தந்தையின் பேச்சில் மனம் வருந்தி அகிலேஷின் சதியால் மாத்திரையின் மயக்கத்துடன் துளசியின் வீட்டில் இருந்த அதே சமயத்தில் தான் சஹானாவின் புத்திரி இந்த உலகில் அவதரித்தாள்.

சாரதா ஏற்கெனவே கிருஷ்ணாவிடம் ஊட்டிக்குச் சஹானாவுடன் வருவதாகச் சொன்னவர் வீட்டிலேயே நடந்த சுகப்பிரசவம் என்பதால் சஹானாவை ஊட்டிக்கு அழைத்துச் செல்வதாக அவளுக்குப்   பிரசவம் பார்த்த வீட்டுவேலைக்காரப் பெண்மணியிடம் சொல்லிவிட்டு அவளையும் குழந்தையையும் எடுத்துக் கொண்டுக் கிளம்பினார்.

நல்லவேளையாக அந்த நேரத்தில் ராகுலும் உமாவும் ஏதோ அவசரவேலை என்று கோயம்புத்தூர் கிளம்பிவிட சஹானாவுக்குக் குழந்தை பிறந்த விஷயம் யாருக்கும் தெரியாது.

அம்மாவும் மகளும் பச்சிளம் சிசுவுடன் ஊட்டிக்கு வந்த சமயத்தில் கார் அந்தப் பள்ளத்தாக்கைக் கடக்கும் சமயத்தில் சஹானா தனது கையில் இருக்கும் அந்தப் பெண்குழந்தையைக் கண் இமைக்காமல் பார்த்துவிட்டு அன்னையிடம் காரை நிறுத்துமாறு கூறினாள்.

சாரதாவும் ஏன் என்று கேட்காமல் காரை நிறுத்தியவர் மகள் குழந்தையுடன் இறங்கி அந்தப் பள்ளத்தாக்கை நோக்கிச் செல்லவும் பதறிப் போய்விட்டார்.

“சஹானா குழந்தையை என்ன பண்ணப் போற?” என்றபடி ஓடியவர் அவள் அங்கே உள்ள குப்பைத் தொட்டியின் அருகில் நிற்கவே கோபத்துடன் அவளை நெருங்கினார்.

சஹானாவோ தன் கரங்களில் தனது பிரதிபலிப்பாக உறங்கும் அக்குழந்தையைக் கண் இமைக்காமல் பார்த்தாள். சஹானாவையே உரித்து வைத்தாற்போன்று இருந்த அக்குழந்தையின் முதுகில் நீள்வாக்கில் ஒரு மச்சம் இருந்தது. ஏனோ அக்குழந்தையைக் காணும் போது சஹானாவுக்குத் தாய்மையுணர்வுக்குப் பதிலாக அருவருப்பே தோன்றியது.

அதே அருவருப்புடன் “இந்தக் குழந்தை எனக்கு வேண்டாம்மா… இதைப் பார்க்கிறப்போ எனக்கு அருவருப்பா இருக்கு… இது என் கூடவே இருந்தா என் வாழ்நாள் முழுக்க நான் என்னை நினைச்சு அருவருப்பு பட்டுக்கிட்டே இருப்பேன்… இதோட அப்பானு நான் யாரைக் காட்டுவேன்மா? இவளோட சேர்த்து என்னையும் இந்த சமுதாயம் அசிங்கப்படுத்தும்… என்னால அதெல்லாம் தாங்கிக்க முடியாது” என்று சொல்ல சாரதா அதிர்ச்சியடைந்தார்.

எவ்வளவோ கெஞ்சினார், மிரட்டினார். ஆனால் சஹானா குழந்தை தனக்கு வேண்டாம் என்று பிடிவாதம் பிடித்தவள் இந்தக் குழந்தை தான் முக்கியம் என்றால் தான் இப்போதே பள்ளத்தாக்கில் குதித்துச் செத்துவிடுவேன் என்று மிரட்ட சாரதா வேறு வழியின்றி அமைதியானார்.

சஹானா குழந்தையைக் குப்பைத்தொட்டியில் வைத்தவள் திரும்பியும் பாராது காரை நோக்கி விறுவிறுவென்று நடந்து சென்றாள். குழந்தையோ இவ்வளவு நேரம் தாயின் கதகதப்பில் இருந்தவள் இப்போது வெளிப்புறத்தின் குளிர் மெதுவாக அவளது பூமேனியைத் தாக்கியதால் வீறிட்டு அழத் துவங்கினாள்.

அந்த அழுகையைக் கேட்கும் சக்தியற்று கண்ணீருடன் காரை அடைந்த சாரதா இதயத்தைக் கனமாக்கிக் கொண்டு காரை எடுத்தார்.

அதன் பின்னர் இரு குடும்பத்தினரிடமும் பிரசவத்தில் குழந்தை இறந்துவிட்டது என்று சஹானா சொல்லிவிட சாரதாவும் மௌனத்துடன் அதை ஆமோதித்தார். ஆறு வருடங்களில் யாருடைய மனதிலும் அக்குழந்தையின் நினைவு எழவில்லை.

சாரதா இதைச் சொல்லிமுடிக்கவும் கிருஷ்ணாவின் விழிகள் அவனை அறியாது துளசியைத் தேட அவளோ மித்ராவின் அறையில் அவளருகில் அமர்ந்து தூங்கும் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கிருஷ்ணா அவளைத் தேடி மித்ராவின் அறைக்குச் சென்றவன் துளசி மித்ராவைத் தூக்கிக் கொள்ளவும் “துளசி என்ன பண்ணப் போற? ஏன் மித்ராவைத் தூக்கி வச்சிருக்க? எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்” என்று கூற துளசி அதைக் கவனிக்காதவளாய் அந்த அறையை விட்டு மித்ராவுடன் வெளியேறினாள்.

ஹாலில் இருந்தவர்கள் அவள் மித்ராவைத் தூக்கிக் கொண்டு சஹானாவின் அறைக்குச் செல்வதைக் கண்டு “துளசி நில்லும்மா” என்றபடி அவள் பின்னே செல்ல அதற்குள் சஹானாவின் அறைக்கதவைத் தட்டியிருந்தாள்.

ராகுல் கதவைத் திறந்தவன் அங்கே துளசி மித்ராவைத் தூக்கிக் கொண்டு நிற்பதைக் கண்டவன் “என்னாச்சு துளசி?” என்று கேட்க துளசி அவனைக் கடந்து உள்ளே செல்லவே குழப்பத்துடன் வெளியே நின்றிருந்தவர்களைப் பார்த்தான்.

சஹானாவோ துளசி மித்ராவுடன் வருவதைக் கண்டவள் திகைத்துப் போய் படுக்கையை விட்டு எழ, துளசி மித்ராவைச் சஹானாவின் படுக்கையில் கிடத்தினாள்.

அவளைக் கேள்வியுடன் நோக்கிய அனைவரையும் ஒரு நிமிடம் பார்த்தவள் “குழந்தையை அம்மா கிட்ட இருந்து பிரிக்கிறது பாவம்… அதனால உங்க குழந்தை இனிமே உங்க கிட்ட தான் இருக்கணும்” என்று அழுத்தமாய் உரைக்க சஹானாவுக்கு உள்ளுக்குள் ஏதேதோ செய்தது.

கிருஷ்ணா செய்வதறியாது திகைத்து நிற்க, ராகவேந்திரனும், விஜயேந்திரனும் மருமகள் என்ன சொல்கிறாள் என்று புரியாமல் விழித்தனர். அதே நேரம் மீனாவும் சுகன்யாவும் மித்ராவை வளர்க்க துளசி எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தாள் என்பதை எண்ணி கண்ணீர் விட்டனர்.

சாரதா பதறிப் போனவராய் “துளசி என்னம்மா சொல்லுற? மித்ரா நீ பெத்தப் பொண்ணு” என்று கலக்கத்துடன் கூற

துளசி இடவலமாகத் தலையசைத்தவள் “நீங்க எங்கே மித்ராவை வேண்டாம்னு தூக்கிப் போட்டிங்களோ அங்கே தான் நான் அவளை என்னோட மகளா ஏத்துக்கிட்டேன்” என்ற ஒற்றை வார்த்தையில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினாள்.

ராகவேந்திரனைப் பார்த்தவள் “மாமா! நீங்க அடிக்கடி சொல்லுவிங்கள்ல மித்ரா சஹானாவோட ஜாடைனு… பொண்ணு அம்மாவோட ஜாடையில இருக்கிறது ஒன்னும் ஆச்சரியம் இல்லையே!” என்று நிறுத்தியவள்

“மித்ராவைப் பெத்தவ என் முன்னாடி வருவானு நான் கற்பனை கூட செஞ்சுப் பார்த்தது இல்லை… இன்னைக்கு வரைக்கும் அவளை என் பொண்ணா தான் வளர்த்தேன்… ஆனா அவளைப் பெத்தவங்க கதறித் துடிக்கிறப்போ என்னால சுயநலமா இருக்க முடியாது.. ஒருவேளை உங்களுக்குச் சந்தேகமா இருந்தா டி.என்.ஏ டெஸ்ட் பண்ணிப் பாருங்க” என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள். அவள் பின்னே கிருஷ்ணாவும் ஓடினான்.

சாரதா தூங்கிக் கொண்டிருக்கும் பேத்தியின் கவுன் வழியே அவள் முதுகைப் பார்த்தவர் அதில் நீளக்கோடாய் இருந்த மச்சத்தைக் கண்டதும் திகைத்துப் போனார். அவர் மட்டுமல்ல, சஹானாவும் தான் திகைத்துப் போனாள்.

எந்த மித்ராவுடன் இருக்கும் போது மனம் அமைதியாக இருக்கிறது என்று உணர்ந்தாலோ அதே மித்ராவையா அவள் ஆறு வருடங்களுக்கு முன்னர் அருவருத்துத் தூக்கியெறிந்தாள் என்ற ஆதங்கம் அவளுக்கு.

எந்தக் குழந்தையால் சமுதாயம் தன்னையும் அசிங்கப்படுத்தும் என்று எண்ணினாளோ அந்தக் குழந்தை தான் இன்று ராகவேந்திரனின் பேத்தியாக, கிருஷ்ணாவின் மகளாக சமுதாயத்தில் அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறாள் என்று அறிகையில் தனது செய்கையை எண்ணித் தன்னை அருவருத்துக் கொண்டாள் சஹானா.

உறங்கும் மித்ராவை அவளது கரங்கள் நடுங்கியபடி வருடிக்கொடுக்க அதைக் கண்டு ராகுல் நெகிழ்ந்து போனான். அவன் என்றுமே சஹானாவின் வாழ்வில் நடந்த பழைய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அவனைப் பொறுத்தவரைக்கும் அவள் என்றுமே எட்டுவயதில் அவனுடன் சண்டை பிடித்த ‘நூடுல்ஸ்’ தான்.

பல கொடும் நிகழ்வுகளுக்குப் பின்னரும் அவள் தைரியமாகத் தொழிலை மேலாண்மை செய்யும் பாங்கில் தான் அவளை விரும்பி மணந்து கொண்டான் ராகுல். அதனால் என்றைக்கும் எப்போதும் அவனால் அவளை வெறுக்க முடியாது; இந்தக் குழந்தையை வேண்டாமென்ற விஷயத்திலும் தான் அவளை வெறுக்கப் போவதில்லை என்பதை அவள் மனதில் பதியவைத்தான் அந்த அன்பானக் கணவன்.

அதே நேரம் ராகவேந்திரனிலிருந்து விஜயேந்திரன் வரைக்கும் அனைவருக்குமே நடந்த நிகழ்வுகள், தொடர்ச்சியான அதிர்ச்சிகளால் மூளை ஸ்தம்பித்துவிட்டது. அவர்களின் கண்ணுக்கு மருமகள் பெரியமனுசியாகத் தெரிந்தாள்.

எந்தக் குழந்தையைத் தங்கள் வீட்டுப்பெண் அருவருப்பாகக் கருதி, சமுதாயம் தன்னைக் கேவலப்படுத்தும் என்ற காரணத்துக்காகத் தூக்கி எறிந்தாளோ அந்தக் குழந்தையைத் தன் குழந்தையாக எண்ணி, தாயும் தந்தையுமாய் வளர்த்த மருமகளின் தாய்ப்பாசத்தை எண்ணி திகைத்தனர் அவர்கள்.

அதே நேரம் கிருஷ்ணா இதே குழந்தைக்காகத் திருமணத்துக்கு முன்னரே எல்லை மீறியவன் என்ற பெரையும், துளசி தாலி கட்டிக்கொள்ளும் முன்னரே கருவுற்றவள் என்ற பெயரையும் எவ்வித அசூசையுமின்றி ஏற்றுக்கொண்டதை எண்ணி வீட்டுப்பெரியவர்கள் வாயடைத்துப் போய்விட்டனர்.

சுகன்யாவும் மீனாவும் துளசியால் மித்ரா இல்லாமல் இனி எப்படி வாழ முடியும் என்று எண்ணி வருந்தியவர்கள் கண்ணீரைத் துடைத்தவண்ணம் தங்களின் அறைக்குள் சென்று அடைபட்டுக் கொண்டனர்.

மித்ராவைச் சஹானாவிடம் ஒப்படைத்தத் துளசி தங்களின் அறையில் அமர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கவே, அங்கே வந்த கிருஷ்ணா மனைவியை அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறத் தொடங்கினான்.

துளசி கிருஷ்ணாவை நிமிர்ந்து பார்த்தவள் “கிரிஷ்! இப்போவே இங்கே இருந்து போயிடலாம்… என்னை ஊட்டிக்கே கூட்டிட்டுப் போயிடு கிரிஷ்” என்று கதற ஆரம்பிக்கவும் கிருஷ்ணா அவளை எழுப்பியவன் இருவரின் முக்கியமான உடமைகளை மட்டும் எடுத்துக் கொண்டு மனைவியை அழைத்துக் கொண்டு அந்த நள்ளிரவில் பண்ணை வீட்டை விட்டு வெளியேறினான்.

காரில் செல்லும் போது துளசி கிருஷ்ணாவிடம் எதுவும் பேசவில்லை. கணவனின் தோளில் சாய்ந்து கண் மூடியவள் மகளுடன் செலவளித்தப் பொன்னானத் தருணங்களை நினைவு கூர்ந்தாள். அவளுக்கும் மித்ராவைத் தூக்கிக் கொடுத்துவிட ஆசையில்லை.

ஆனால் உதிரம் சிந்தி அவளை இந்தப் பூவுலகுக்குக் கொண்டு வந்தவள் கலக்கத்திலிருக்கையில் தான் அவள் பெற்றப்பிள்ளையைச் சொந்த கொண்டாடுவதில் நியாயம் இல்லை என்று அவளின் மனசாட்சி அவளுக்கு எடுத்துரைக்க அதன் பேச்சை மறுக்காது கேட்டவள் சஹானா வசம் மித்ராவை ஒப்படைத்துவிட்டாள். அதே நேரம் கிருஷ்ணாவோ தனக்கு தகப்பன் ஸ்தானத்தை அளித்த அவனது செல்லமகள் இனி அவனுக்கில்லை என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள முயன்று கொண்டிருந்தான். இப்போது துளசி இழந்த நிம்மதியை மீண்டும் அவளுக்கும் கொடுப்பது எப்படி என்று புரியாமல் தவித்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தான் அக்காதல் கணவன்.