🌞 மதி 8🌛

இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை அவளைத் தேவையற்று வெறிப்பதில் ஆரம்பித்து, அவளது சம்மதமின்றி பின் தொடர்தலில் நிலைத்து, இறுதியாகப் பாலியல் தாக்குதல்களில் முடிகிறது. இந்திய தண்டனை சட்டம் 354Dயின் படி தேவையற்று ஒரு பெண்ணை பாலியல் இச்சையுடன் வெறிப்பது கூட குற்றமாகவேக் கருதப்படும்.

பேரனுடன் அமர்ந்திருந்தார் சங்கரராமன். இன்று அவன் வீட்டுக்கு வந்ததிலிருந்து அவனது முகம் சரியில்லை என்பதைக் கண்டுகொண்டவர் என்ன தான் பிரச்சனை என்று கேட்போமே என அவனைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று அமரவைத்தார்.

தேவ் அங்கே வந்தபின்னர் இவ்வளவு நேரம் இருந்த அலைக்கழிப்பு மாறி அமைதியானான். சங்கரராமன் பேரனது முகத்தை நோக்கியவர்

“என்னடா ஆச்சு கண்ணா? எதுவும் பெரிய பிரச்சனையா?” என்று வினவ

“பெரிய பிரச்சனை ஒன்னும் இல்லை தாத்தா… நான் அவசரமா செஞ்சு முடிக்க வேண்டிய ரெண்டு வேலை இருந்துச்சு… ரெண்டுமே வேற வேற ஆள் சம்பந்தப்பட்டதுனு நினைச்சேன்… ஆனா அப்பிடி இல்லை… ரெண்டுமே ஒரே ஆள் சம்பந்தப்பட்ட விஷயம் தான்” என்று விஷயத்தை இன்னும் முழுவதுமாகச் சொல்லாமல் யோசனையுடனே கூறினான்.

“தாத்தா கிட்டவே மறைமுகமா பேசிறியாடா? உன்னோட இப்போதைய பிரச்சனை சந்திரசேகரோட கெமிக்கல் பிளாண்ட் தானே… அதோட ஷேர் பத்தி தானே ரொம்ப நாளா என் கிட்ட டிஸ்கஸ் பண்ணுன?”

“ஆமா தாத்தா… ஆர்.எஸ். கெமிக்கலோட மெஜாரிட்டி ஷேர்ஸ் அவரோட ஃபேமிலி மெம்பர்ஸ் நேம்ல தான் இருக்குனு சொன்னேன்ல… இதுல சந்திரசேகருக்கு அடுத்து ஸ்ட்ராங்கான ஷேர்ஹோல்டர் அவரோட பொண்ணு அஸ்மிதா தான்” என்று சொல்லி நிறுத்தியவன் சங்கரராமன் மேலே சொல்லுமாறு கூறவே தொடர்ந்தான்.

“அந்தப் பொண்ணு கிட்ட இருக்கிற ஷேர்ஸ் மட்டும் எனக்குக் கிடைச்சதுனா நான் தான் தாத்தா அந்த கன்சர்னோட மேஜர் ஷேர்ஹோல்டரா இருப்பேன்… அதோட நான் ஒரு டிரஸ்டோட லேண்ட் பத்தி சொன்னேன்ல் அது சந்திரசேகரோட எக்ஸ் ஒய்ப் சஞ்சீவினிக்குச் சொந்தமானது தான்” என்று சொல்லி முடித்தான்.

“அஸ்மிதா நேம்ல ஷேர் இருக்கிறது எனக்கு எப்போவோ தெரியும் தேவ். என் ஃப்ரெண்ட் ராமமூர்த்தி தனக்கு அப்புறம் தன்னோட ஷேரை மூனு பங்கா பிரிக்கணும்னு முடிவெடுத்திருந்தான்… சொன்ன மாதிரியே மூனா பிரிச்சதுல ஒரு பாகம் தான் இப்போ அஸ்மிதா பேருல இருக்கிற ஷேர்ஸ்… அது உன் கைக்கு வர்றது அவ்ளோ சுலபமில்ல தேவ்”

சங்கரராமன் பேசி முடித்ததும் தேவ்வின் இதழில் ஒரு குறுஞ்சிரிப்பு மலர்ந்தது.

“என் கைக்கு வர வைக்கிறதுக்கான பிளானை நான் எப்போவோ போட்டுட்டேன் தாத்தா… அது இப்போ பிரச்சனை இல்ல… என்னோட பிராப்ளம் ஷாப்பிங் மாலுக்கு அவங்க லேண்ட் குடுக்க மாட்டேனு சொல்லியிருக்காங்க… இப்போ நான் என்ன பண்ணுறது?”

“அந்த லேண்ட் உனக்கு வேண்டாம்டா கண்ணா… சஞ்சீவினி வாழ்க்கையில ஏகப்பட்ட ஏமாற்றத்தையும் துரோகத்தையும் சந்திச்சிட்டா… அந்த டிரஸ்ட் தான் அவளோட நம்பிக்கையே… அதை நம்ம கலைக்க வேண்டாம்… நீ வேற இடத்துல ஷாப்பிங் மால் ஆரம்பிக்க முடியுதானு பாரு” என்று பேரனுக்குச் சரியான அறிவுரையை வழங்கினார் சங்கரராமன்.

கூடவே “நீ சந்திரசேகரைப் பழிவாங்குறேனு சொல்லி விநாயகமூர்த்தியை கம்மியா எடை போட்டுடாதே தேவ்… சந்திரசேகர் இயல்பிலேயே மோசமானவன் இல்ல… என்னைக்கு விநாயகமூர்த்தி சேகர் வில்லாக்குள்ளவும், ஆர்.எஸ் கெமிக்கல் உள்ளேயும் காலடி எடுத்து வச்சானோ அன்னைக்கே கொஞ்சம் கொஞ்சமா சந்திரசேகரோட மூளையைச் சலவை பண்ண ஆரம்பிச்சிட்டான்.

அவனைப் பத்தி எச்சரிக்கை பண்ணுன உங்கப்பாவை சந்திரசேகரை வச்சே ஏமாத்துனான்… நானும் ராமமூர்த்தியும் ஆசையா ஆரம்பிச்ச ஆர்.எஸ்.கெமிக்கல்ஸை எங்களுக்கு அப்புறம் சந்திரசேகரும், விஸ்வநாதனும் பார்த்துப்பாங்கனு நாங்க எவ்ளோ நம்புனோம் தெரியுமா? எல்லாத்துலயும் மண்ணை அள்ளி போட்டுட்டான் அந்த விநாயகமூர்த்தி… அதோட சஞ்சீவினி சந்திரசேகருக்கு நல்லது கெட்டது சொல்லி அவனைத் திருத்திருவாளோனு பயந்து பெரியம்மா பொண்ணோட புருசன்னு தெரிஞ்சும் தன்னோட சொந்த தங்கை மந்தாகினியோட சந்திரசேகருக்கு ஏற்பட்ட உறவை நியாயப்படுத்தி சஞ்சீவினியை சேகர் வில்லாவை விட்டும் சந்திரசேகரோட வாழ்க்கையை விட்டும் ஒரேயடியா விலக்கி வச்சிட்டான்.

அவனால என்னைக்குமே சஞ்சீவினிக்கும் அவளோட குடும்பத்துக்கும் ஆபத்து தான்… அவன் சந்திரசேகரோட முதுகுக்குப் பின்னாடி ஒளிஞ்சு நின்னு தான் எதிரிகளை அடிப்பான் தேவ்… மானசா விஷயத்துல அது தான் நடந்துச்சு” என்றவரை கலங்கிய முகத்துடன் ஏறிட்டான் தேவ்.

சங்கரராமனுக்கு விநாயகமூர்த்தியைக் குறித்து எச்சரிப்பதாக எண்ணி பேரனின் மனதை வருத்திவிட்டோமோ என்ற யோசனையுடன் “தேவ் பழசை நினைச்சு வருத்தப்படுறியா?” என்று கேட்க

இல்லையென்று தலையசைத்து மறுத்தவன் “நான் எவ்ளோ பெரிய கையாலாகதவன்னு நினைச்சு வருத்தப்படுறேன் தாத்தா… என்னோட மனுவைக் கொன்னது யாருனு எனக்குத் தெரியும்… அவன் என் கண்ணு முன்னாடியே என் அப்பாக்குத் துரோகம் செஞ்ச ஆளோட செல்வாக்கால சட்டத்தோட பிடியில இருந்து தப்பிச்சிட்டானே! பெரிய இண்டஸ்டிரியலிஸ்டோட பையனா இருந்து என்ன பிரயோஜனம்? என்னால அந்த விநாயகமூர்த்தியை எதுவுமே பண்ண முடியலையே தாத்தா” என்று வேதனையுடன் உரைத்தவனது தோளைத் தட்டிக் கொடுத்தார் சங்கரராமன்.

“இந்திய நாட்டோட சட்டம் எப்போவுமே ஏழைகளுக்குச் செவி சாய்க்காதுனு சொல்லுவாங்க… ஆனா நம்ம விஷயத்துல பணம், செல்வாக்கு இருந்தும் நம்மளால உண்மையை உலகத்தோட பார்வைக்குக் கொண்டு வரமுடியலையே! நீ மனசைப் போட்டுக் குழப்பிக்காதேடா கண்ணா! எப்போவும் காத்து அவன் பக்கமே வீசாது…

ஒன்னை மட்டும் நியாபகம் வச்சுக்கோ… நீ அஸ்மிதாவோட ஷேரை எழுதி வாங்கினேனா அடுத்த நிமிசம் அவன் அவளை உயிரோட வச்சிருக்க மாட்டான்… அவனைப் பொறுத்தவரைக்கும் சந்திரசேகர்ங்கிற பொம்மையைத் தன்னோட கட்டுப்பாட்டுக்குள்ள வச்சுக்கணும்னா கம்பெனியோட ஷேர்ஸ் எல்லாமே குடும்பத்துக்குள்ள இருக்கணும்… ஷேர் வெளியே போகுதுனா அதுவும் அவனோட பரம எதிரியா நினைக்கிற விஸ்வநாதனோட மகன் கைக்கே போகுதுனா விநாயகம் சும்மா இருக்க மாட்டான்… இதை மறந்துடாதேடா கண்ணா” என்று சொல்லவும் தேவ் அவர் சொல்வதைக் காதில் போட்டுக்கொண்டபடி யோசனையில் ஆழ்ந்தான்.

*********

அஸ்மிதாவும் இஷானியும் நகரின் பெரிய பள்ளியின் தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தனர். அவர்கள் அருகில் சீருடையின் கோட் நுனியைத் திருகியபடி நின்றிருந்தாள் அவர்கள் துளி நிறுவனத்தில் இருக்கும் ஒரு மாணவி.

“மிஸ் இஷானி! கேம்பஸ்குள்ள நடக்கிற விஷயத்துக்கு மட்டும் தான் ஸ்கூல் ரெஸ்பான்ஸிபிள்… இப்போ நீங்க சொல்லுற பிரச்சனையைத் தீர்த்துவைக்க அந்தப் பையனோட பேரண்ட்ஸை கூப்பிட்டா அவங்க எவிடென்ஸ் கேப்பாங்கம்மா… டூ யூ ஹேவ் எனி எவிடென்ஸ்?” என்று மூக்குக்கண்ணாடியைச் சரி செய்தபடி வினவிய அந்த தலைமை ஆசிரியையை சலிப்புடன் பார்த்தனர் அஸ்மிதாவும் இஷானியும்.

“மேம்! அந்தப் பையன் இவ கிட்ட லவ் பண்ணுறேனு சொல்லிருக்கான்… இவ முடியாதுனு சொன்னதுக்கு மத்த பசங்க முன்னாடி பேசி அசிங்கப்படுத்திருக்கான்… இதுக்கு எங்கே போய் எவிடென்ஸ் கலெக்ட் பண்ணுறது மேம்? டீனேஜ்ல இது சகஜம் தான்… ஆனா எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு… ரெண்டு நாளா இவ சரியா சாப்பிடலை… வெறிச்சு வெறிச்சு பார்த்துட்டிருக்கவும் தான் இஷிக்குச் சந்தேகம் வந்து விசாரிச்சா… கேட்டா இவ அந்தப் பையனைப் பத்தி சொன்னா” – அஸ்மிதா.

“நாங்க எங்க பிள்ளைங்களைக் காதலிக்கிறதுக்காக ஸ்கூலுக்கு அனுப்பல மேம்! இவங்க எல்லாருமே எங்களோட பொறுப்புல இருக்கிறவங்க… நாளைக்கு அந்தப் பையன் வேற எதுவும் மோசமா நடந்துகிட்டா என்ன பண்ணுறது? கேம்பஸுக்கு வெளியே நடக்குறதுக்கு ஸ்கூல் பொறுப்பாகாதுனு சொல்லுறிங்களே! இந்த ஸ்கூல்ல படிக்க வந்ததால தானே அந்தப் பையனுக்கு மலரைத் தெரிஞ்சுருக்கு… இவளை மாதிரி உங்க ஸ்கூல்ல பொண்ணுங்களோட பாதுகாப்புக்கு உங்க ஸ்கூல் என்ன கேரண்டி குடுக்கப் போகுது மேம்?” என்ற இஷானியின் குரலில் மறைக்கப்பட்டக் கோபத்துடன் ஆற்றாமையும் நிறைந்திருந்தது.

அஸ்மிதாவுக்கு இஷானியின் இந்தக் கோபம் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அதே நேரம் அவர்கள் அருகில் தலை குனிந்தபடி நின்றிருந்த மாணவி மலருக்கு அவமானத்தில் கண்ணில் நீர் பெருக ஆரம்பித்தது. அதைக் கண்டு வருந்தியபடி

“மேம்! நீங்க அந்தப் பையனைக் கூப்பிட்டு வார்ன் பண்ணுனிங்கனா நோ பிராப்ளம்… இல்லைனா நாங்க போலிஸ் மூலமா ஆக்சன் எடுக்க வேண்டியது வரும்… இது உங்க ஸ்கூலுக்குத் தான் கெட்டப்பேரை உண்டாக்கும்” என்று நிதானமாக கூறிய இஷானி அந்த மலரின் கையை அழுத்திவிட்டு

“இவ கிளாஸுக்குப் போகலாம் தானே?” என்று கேட்க அந்தத் தலைமையாசிரியை அவளை வகுப்புக்குச் செல்லுமாறு கூறிவிட்டு இஷானியிடம் பேச ஆரம்பித்தார். காவல் துறை என்றதும் சற்று கலங்கிவிட்டார் அப்பெண்மணி.

காவல்துறை வரைக்கும் சென்று விட்டால் பள்ளியின் நற்பெயருக்குக் கலங்கம் உண்டாகும் என்பதைப் புரிந்து கொண்டவர் தான் அந்தப் பையனை அழைத்து எச்சரிப்பதாகச் சொல்லவும் அஸ்மிதாவும் இஷானியும் ஒரு தலையசைப்புடன் அங்கிருந்து விடைபெற்றனர்.

அஸ்மிதா ஸ்கூட்டியை எடுத்தவள் இஷானி அமர்ந்ததும் அந்தப் பள்ளியிலிருந்து வெளியேறினாள்.

“இஷி! நீ கோவப்பட்டதை என்னால நம்பவே முடியலடி… அந்தம்மா நீ போட்ட போடுல அரண்டுப் போயிடுச்சு” என்று சொல்லி நகைத்தவள் திடீரென்று

“ஆமா மலர் எப்போ உன்னோட பிள்ளையா மாறுனா? நீ என் கிட்ட சொல்லவேல்ல பார்த்தியா?” என்று குறைபட அவள் பின்னே அமர்ந்திருந்த இஷானி நங்கென்று அவள் தலையில் குட்டினாள்.

அஸ்மிதா ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டிருந்ததால் வலிக்கும் தலையைத் தடவக் கூட இயலாது போக “அடியே ஸ்கூட்டி ஓட்டுற கேப்புல என்னைக் கொட்டிட்டேல்ல… இருடி வீட்டுக்குப் போனதும் உனக்கு இருக்கு” என்று கடுப்புடன் உரைக்க

இஷானி “ஐயோ நான் பயந்துட்டேங்க மேடம்! போடி! நீ என்னை அந்த ஜெய் மாதிரி பயந்தாங்கொள்ளினு நினைச்சியா? வீட்டுக்குப் போனதும் நீ என்ன பண்ணனுமோ பண்ணிக்கோ… அதுக்கு முன்னாடி நல்லதா ஒரு ஐஸ் க்ரீம் பார்லர்ல வண்டியை நிறுத்து… உச்சிவெயில் மண்டையைப் பிளக்குது” என்று ஐஸ் க்ரீம் ஆசை காட்டவும்

“நீ ஐஸ் க்ரீம் பார்லர்னு சொன்னதால உன்னைப் பாவப்பட்டு விடுறேன்” என்று பெரிய மனது பண்ணி அவளை மன்னித்தவள் ஸ்கூட்டியை ஒரு ஐஸ் க்ரீம் பார்லர் அருகில் நிறுத்திவிட்டு இஷானியுடன் உள்ளே சென்றாள்.

இருவரும் ஒரு மேஜையைத் தேடிப்பிடித்து அமர்ந்திருக்கையில் “அக்கா” என்ற சத்தம் கேட்கவும் ஒரு சேர திரும்பிப் பார்க்க அங்கே ருத்ராவின் கையைப் பற்றியபடி நின்றிருந்தான் அர்ஜூன்.

இவர்களை அங்கே எதிர்பார்க்காததால் அஸ்மிதாவும் இஷானியும் திகைக்க அர்ஜூன் வேகமாக ஓடிவந்து இஷானியின் அருகில் கிடந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான். அவனைத் தொடர்ந்து ருத்ராவும் இவர்களின் மேஜைக்கே சென்று அமர்ந்தான்.

சாதாரணமாக இருவரையும் பார்த்துப் புன்னகைத்தவன் “வாட் அ சர்ப்ரைஸ்? இந்நேரத்துக்கு அஸ்மிதா பாப்கார்ன் மாதிரி குதிக்கணுமே” என்று அஸ்மிதாவைக் கேலி செய்ய அவள் எதுவும் பேசாமல் அர்ஜூனை நோக்கினாள்.

“இங்க பாரு! எங்க ரெண்டு பேரையும் அக்கானு கூப்பிடாதேனு உன் கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன்? இனிமே அக்கானு கூப்பிட்டேனு வை” என்று ஆட்காட்டிவிரலை நீட்டி மிரட்ட

“போ அஸ்மிக்கா! நீ எப்போ பார்த்தாலும் இப்பிடி கோவப்பட்டுட்டே இருக்க.. இஷிக்கா தான் குட் கேர்ள்” என்று சொன்னபடி அவளது கையைப் பற்றிக் கொள்ள

அதே நேரம் ருத்ரா “ஓகே கேர்ள்ஸ்! ஐஸ் க்ரீம் ஆர்டர் பண்ணிட்டிங்களா? இல்லை மாமா ஆர்டர் பண்ணட்டுமா?” என்று கேட்க

இஷானி அவசரமாக “நீங்க ஒன்னும் எங்களுக்கு மாமா கிடையாது சார்… சும்மா அதையே சொல்லாதிங்க” என்றாள் வெடுக்கென்று.

ருத்ரா இருவரையும் பொய்யானச் சலிப்புடன் பார்த்தவன் “என்ன தான் பிரச்சனை உங்களுக்கு? அவ என்னடான்னா அஜ்ஜூவை அக்கானு கூப்பிடாதேனு மிரட்டுறா… நீ என்னடானா மாமானு கூப்பிட மாட்டேனு அடம்பிடிக்கிற… சஞ்சுக்கா உங்க ரெண்டு பேருக்கும் செல்லம் குடுத்துக் கெடுத்து வச்சிருக்காங்க” என்று கூறவும்

“அப்பிடிலாம் ஒன்னுமில்ல… அன்னைக்கு உங்க அக்கா வந்து என்ன பேச்சு பேசுனாங்க? இப்போ நீங்க எங்க அம்மாவோட வளர்ப்பைக் குறை சொல்லுறிங்களா?” என்று இஷானி வரிந்து கட்டிக்கொண்டு வரவே ருத்ராவுக்கு ஆச்சரியம்.

“நீ அதிகமா பேச மாட்டேனு நான் கேள்விப்பட்டேனே… பார்த்தா அப்பிடி தெரியலை… அஸ்மி காத்து உன் மேல அடிச்சுடுச்சு போல” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அஸ்மிதாவை வம்பிழுத்தான் அவன்.

பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் எப்போதுமே அஸ்மிதாவை வம்பிழுத்து கேலி செய்வது அவனுக்கு விருப்பமான பொழுதுபோக்கு. அவளும் அவனுடன் ஏட்டிக்குப் போட்டியாகப் பேசி சண்டையிடுவாள். இறுதியில் ஐஸ் க்ரீம் என்ற ஒற்றைவார்த்தையில் அவளைச் சமாதானம் செய்வான் ருத்ரா. அந்நாட்கள் நினைவலையில் தோன்ற ஆர்டர் கேட்டு வந்த பேரரிடம் “ஃபோர் ஸ்ட்ராபெரி”என்று சொல்லவும் அஸ்மிதா முகம் சுருக்கியவள்

“மாமா எனக்கு ஸ்ட்ராபெரி பிடிக்காதுனு உங்களுக்கு மறந்து போச்சா?” என்றாள் வேகமாக. சொல்லிமுடித்த பின்னர் தான் என்ன வார்த்தை சொல்லிவிட்டோம் என்று புரிந்து தலையில் அடித்துக் கொண்டாள் அவள்.

ருத்ராவோ சிறுவயதில் வார்த்தைக்கு ஆயிரம் மாமா போடும் அஸ்மிதா மீண்டும் அவனுக்குத் திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியுடன் முகம் மலர்ந்தான்.

அவளருகில் இருந்த இஷானியைப் பார்த்தவன் “பார்த்தியா? அவ குட் கேர்ள்… எவ்ளோ அழகா மாமானு வாய் நிறைய கூப்பிடுறா… நீயும் இருக்க பாரு… அஸ்மி இவளுக்கு அப்பப்போ டிரெயினிங் குடு” என்று அறிவுறுத்திவிட்டு பேரரரிடம் “ஃபோர் பட்டர்ஸ்காட்ச்” என்று சொல்லிவிட்டுத் திரும்பினான்.

இஷானி அஸ்மிதாவை கொலைவெறியோடு நோக்க அவளோ தப்பிப்பதற்காக இஷானியைக் கவனியாதது போல வேறு பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டாள். அதற்குள் அர்ஜூன் இஷானியிடம் ஏதோ கேட்க ஆரம்பிக்கவும் அவனிடம் அமைதியாகப் பேசிக்கொண்டிருந்தவளைப் பற்றி அவனால் அனுமானிக்க முடியவில்லை.

முன்பெல்லாம் அவன் வந்தாலும் அப்படி ஒருவன் இருப்பதே தனக்கு தெரியாது என்பது போல நடந்து கொள்பவள் தற்போது தனது கேள்விக்குப் பதிலளிக்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறாளே என்ற ஆச்சரியம் அவனுக்கு. அதே நேரம் அஸ்மிதாவும் தன்னிடம் இன்று கோபப்படாமல் பொறுமையுடன் பேசுவதை எண்ணி திகைத்தவனுக்கு அன்றைய பிரச்சனைக்குப் பின்னர் அஸ்மிதா சஞ்சீவினியின் அறிவுரையைக் கேட்டு அவன் மீதுள்ள அர்த்தமற்ற கோபத்தை விலக்கிக் கொண்டாள் என்பது தெரியாது.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛