🌞 மதி 64🌛 (Final)
2002ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் ரூ.60 லட்சம் கோடி மதிப்புள்ள தோரியம் தாது இந்திய கடலோரப் பகுதிகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அணுசக்தித் துறை தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது – தினகரன்.
சில தினங்களுக்குப் பின்னர்…
“அஸ்மி! இன்னும் எவ்ளோ நேரம் ரெடியாகுவ? ஆல்ரெடி லேட்..” என்று பொறுமையிழந்து கத்திக் கொண்டிருந்தான் ஜெயதேவ். அவனது மனைவியோ இன்னும் புடவை கட்டும் வேலையை முழுதாய் முடிக்கவில்லை.
கொசுவத்தைப் பிடித்தபடியே “இது என்ன சல்வாரா? இல்ல ஜீன்ஸா? எடுத்து மாட்டிட்டு உன் கூடவே கிளம்புறதுக்கு… ஷாரி கட்டணும்னா கொஞ்சம் நேரம் ஆகத் தான் செய்யும் ஜெய்… வேணும்னா நீ கிளம்பு… நான் முடிக்கிறதுக்கு இன்னும் டைம் ஆகும்” என்றாள் அஸ்மிதா.
அவளது பதிலில் எரிச்சலுற்ற ஜெயதேவ் “ஃபைவ் மினிட்ஸ் தான் உனக்கு டைம்… அதுக்குள்ள ஷாரிய ஒழுங்கா கட்டிட்டு வெளிய வர்ற… இல்லனா நான் என்ன செய்வேனு எனக்கே தெரியாது… பர்த்டே ஃபங்சன் முடிஞ்சு நான் கொஞ்சம் அவுட் ஸ்டேசன் போகணும் அஸ்மி… சோ விளையாடாம க்விக்கா ரெடியாகு” என்று ஆணையிடும் பாணியில் ஆரம்பித்து வேண்டுகோளாக முடித்தான்.
அஸ்மிதா அவனது ‘அவுட் ஸ்டேசன்’ என்ற வார்த்தையில் துணுக்குற்றவள் முதலில் சேலையைக் கட்டி முடித்தாள். விறுவிறுவென்று வெளியே வந்தவள் சோபாவில் சாய்ந்து அமர்ந்தபடி போனில் ரிஷியுடன் உரையாடிக் கொண்டிருந்தவனை கேள்வியாய் நோக்கியவள் சைகைமொழியில் அவன் எங்கே செல்லப் போகிறான் என்று கேட்க ஜெயதேவ் அவளைப் பொறுக்குமாறு சைகை காட்டிவிட்டுத் தன் பேச்சைத் தொடர்ந்தான்.
அவன் பேசி முடித்துப் போனை வைத்தவன் “கிளம்புவோமா?” என்று கேட்க அஸ்மிதா இடையில் கைவைத்து முறைத்தவள்
“அவுட் ஸ்டேசன்னு எதோ என் காதுல விழுந்துச்சு… எங்க போக ஐடியா? நானும் உன் கூட வருவேன்” என்று சொல்லவும் அவனது முகபாவமே அவளை அழைத்துச் செல்லும் எண்ணத்தில் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.
அவனது பிடிவாதத்துக்குச் சற்றும் குறைந்தது இல்லையே அவளது பிடிவாதம்.
“நானும் உன் கூட வருவேன்… இதுல யாரோட பேச்சையும் நான் கேக்க மாட்டேன்” என்றாள் அஸ்மிதா முடிவாக.
அவளது பிடிவாதம் உணர்ந்தவனாய் “அஸ்மி! நான் ஆழியூர் போறதா இருக்கேன்… அங்க வந்து நீ என்ன பண்ணப் போற?” என கேட்டான் தணிவானக்குரலில்.
அவள் அதற்கு பதிலாய் தோளை மட்டும் குலுக்கியவள் “டைம் ஆச்சு… எல்லாரும் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.. அஜ்ஜூவுக்கு வெயிட் பண்ணுறதுனா அலர்ஜி… கிளம்புவோமா?” என்று கேட்க இனி அவளிடம் பேசி பிரயோஜனமில்லை என உணர்ந்தவனாய் வீட்டை விட்டு வெளியேறினான்.
சாந்தினி, விஸ்வநாதன், சங்கரராமன் மூவரும் முன்னரே கிளம்பிச் சென்றுவிட இவர்கள் மட்டும் தான் தாமதித்துக் கிளம்புகின்றனர். இருவரையும் ஏற்றிக் கொண்ட கார் கிளம்பியது.
**************
ஹோட்டல் ராயல் பார்க்…
விளக்குகளால் அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்த ஹோட்டலின் உள் அலங்காரம் கண்ணைப் பறித்தது. ஹோட்டலின் பர்த்டே ஹாலில் அர்ஜூனின் பிறந்தநாள் விழா ஆரம்பமாக இருந்தது.
அர்ஜூனின் பள்ளித் தோழர்கள் பெற்றோருடன் வந்திருந்தனர். அது போக மந்தாகினியின் தோழமை வட்டத்தில் இருந்து சில பெண்கள் அவரவர் புத்திரச்செல்வங்களுடன் அக்கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தனர்.
சஞ்சீவினி தன் பெற்றோருடன் வந்திருந்தவர் மந்தாகினி மற்றும் சந்திரசேகருக்குச் சிறு புன்னகையை மட்டுமே பதிலாக அளித்துவிட்டு அர்ஜூனுக்குப் பரிசுப்பொருளை நீட்டினார். அலமேலுவும் ராஜகோபாலனும் அவர்கள் பங்குக்குப் பரிசுப்பொருட்களைக் கொடுக்க அர்ஜூன் அவற்றை ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டவன் “தேங்க்ஸ் தாத்தா… தேங்க்ஸ் பாட்டி” என்று சொன்னதோடு அவர்களைக் கட்டியணைத்து முத்தமிட்டான்.
விஸ்வநாதனும் சாந்தினியும் சங்கரராமனுடன் வந்திருக்க சந்திரசேகர் சாந்தினியிடம் “அஸ்மியும் தேவ்வும் இன்னும் வரலியே சாந்திம்மா? எதுவும் பிராப்ளம் இல்லையே” என்று வினவ
“அவங்க ரெண்டு பேரும் ஒரு நாளைக்கு ரெண்டாயிரம் தடவை சண்டை போடுறாங்கண்ணா… அது இந்நேரம் தீர்ந்திருக்கும்… ஏன்னா இப்போ தான் ஜெய் போன் பண்ணுனான்… பக்கத்துல வந்துட்டாங்களாம்… டிராபிக்ல மாட்டிக்கிட்டாங்கனு நினைக்கிறேன்” என்றார் சலிப்பாய்.
விஸ்வநாதன் நண்பரின் மகனுக்குப் பரிசுப்பொருளைக் கொடுக்க தந்தையுடன் சென்றவர் ருத்ராவிடம் தொழில் குறித்துப் பேச ஆரம்பிக்க சங்கரராமன் “ஏன்டா இங்கயும் பிசினஸ் டாக்ஸா? இஷிம்மா உன் புருசன் கிட்ட சொல்லுடா, பிசினஸ் ஸ்பீச் எல்லாமே வீட்டுக்கு வெளியே தான்னு” என்று சொல்லவும்
“கண்டிப்பா தாத்தா.. இன்னைக்கே இந்த ஆர்டரை பாஸ் பண்ணிடுவோம்” என்றாள் இஷானி அமர்த்தலாக.
நீண்டநாட்களுக்குப் பின்னர் ஒன்று கூடிய மூன்று குடும்பத்தினருக்கும் இத்தருணம் கொஞ்சம் வித்தியாசமானது தான். தங்களின் கடந்த காலப் பிரச்சனைகளால் பிரிந்திருந்தவர்கள் தங்கள் பிள்ளைகளின் நலனை வேண்டி பழைய விசயங்களை மறந்து மகிழ்ந்திருக்க முயன்றனர். அம்முயற்சியில் வெற்றியும் கண்டனர்.
சஞ்சீவினி மந்தாகினியிடம் அஸ்மிதாவை வினாயகமூர்த்தியிடம் இருந்து காப்பாற்றியதற்கு நன்றி கூற அவரோ “நான் நிறைய தப்பு பண்ணிருக்கேன்கா… அதை மறந்துட்டு உன்னால என் பையன் கிட்ட பாசமா நடந்துக்க முடியும்னா என்னால மட்டும் உன் பொண்ணை எப்பிடியோ போகட்டும்னு விட முடியுமா? நான் பெருசா எதுவும் பண்ணலக்கா… நீ தேங்ஸ் சொல்லி என்னைச் சங்கடப்படுத்தாத” என்று சொல்லிவிட்டார்.
அதே நிலை தான் சந்திரசேகருக்கும். விஸ்வநாதன் மற்றும் சங்கரராமனிடம் சகஜமாகப் பேசியவரால் ராஜகோபாலன் மற்றும் அலமேலுவின் முகத்தில் விழிக்க சங்கடமாக இருந்தது. ஆனால் பெரியவர்கள் அவரைச் சங்கடப்படுத்தவில்லை.
தங்கள் மகளின் வாழ்க்கை அவரிடம் இருந்து என்றோ பிரிந்துவிட்ட நிலையில் அவரிடம் கோபப்பட்டு மீண்டும் பழைய சம்பவங்களை எண்ணி வருந்த அவர்களுக்கு விருப்பமில்லை என்பதே அவர்கள் சந்திரசேகரை புன்னகையுடன் எதிர்கொண்டதற்கான காரணம்.
பெரியவர்கள் நிலை இவ்வாறிருக்க இளையவர்களோ இன்னும் அஸ்மிதாவும் ஜெயதேவ்வும் இன்னும் ஏன் வரவில்லை என்று அவர்களுக்காக காத்திருக்க ஒருவழியாக இருவரும் வந்து சேர்ந்தனர்.
அஸ்மிதா வேகமாக இஷானியிடம் வந்தவள் “சாரி இஷி! நான் சீக்கிரமா தான் ரெடியாகணும்னு நினைச்சேன்டி… ஆனா எனக்கு இந்த ஷாரி சரியா வரலடி” என்று காரணம் சொல்ல அவள் போனால் போகிறது என்று மன்னித்தாள்.
ருத்ரா ஜெயதேவ்விடம் “வீட்டில இருந்து நடந்து வந்திருந்தா கூட அரைமணி நேரத்துக்கு முன்னாடி இங்க வந்திருக்கலாம்… சரியான லேசி கபிள்ஸ்” என்று சொல்லி கிண்டலடிக்க
அவனோ “ஏன் சொல்ல மாட்ட? நான் ரெடியாகி டூ ஹவர்ஸுக்கு மேல ஆகுது… உன் மருமகள் தான்யா லேட்” என்று முறுக்கிக் கொள்ள அவனைச் சமாதானம் செய்ய ஆரம்பித்தான் ருத்ரா.
இவ்வித கலாட்டாக்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம் இனிதே ஆரம்பித்தது.
அர்ஜூன் ஆவலுடன் கேக்கை வெட்டியவன் முதல் துண்டை ருத்ராவுக்கு நீட்ட அவன் அதை வாங்கிக் கொண்டவன் அதில் ஒரு சிறு துண்டை அர்ஜூனுக்கு ஊட்டிவிட்டான்.
“ஹேப்பி பர்த்டே அஜ்ஜூ… இப்போ மாதிரி எப்போவும் என் மருமகன் சந்தோசமா இதே ஸ்மைலோட இருக்கணும்” என்று சொல்லி கேக்கின் க்ரீமை எடுத்து அவன் மூக்கின் மீது சிறு பொட்டாய் வைக்க அர்ஜூன் “மாமா” என்று பொய்யாய் கோபித்தவன் ருத்ராவின் முகத்தில் கேக்கை பூசிவிட்டுத் திருப்திப்பட்டுக் கொண்டான். இஷானிக்கும் அதையே செய்தவன் அவள் சந்திரசேகரையும் மந்தாகினியையும் கண் காட்ட அவர்களிடம் சென்றான்.
அதன் பின்னர் பெற்றோருக்கு ஊட்டிவிட்டவன் சஞ்சீவினிக்கும் அவரது பெற்றோருக்கும் ஊட்டிய பின்னர் அஸ்மிதாவின் பக்கம் வர அவளோ “அடேய் எல்லாருக்கும் குடுத்துட்டு எனக்கு மட்டும் கடைசியா கொண்டு வர்றியா? உன் கூட நான் டூ” என்று சொல்ல அவன் அதற்கெல்லாம் அசராமல் அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே வாயில் கேக்கைத் திணிக்க அங்கே ஒரு சிரிப்பலை விரிந்தது.
மற்ற அனைவருக்கும் ஊட்டிவிடும் அளவுக்குப் பழக்கம் இல்லாததால் அவர்களுக்கு ப்ளேட்டில் வைத்து கொடுத்தவன் அதை வெட்டி எடுத்து உதவிக்கொண்டிருந்த இஷானியிடம் “இஷிக்கா! எனக்கு ஜெய் மாமா கிட்ட குடுக்க பயமா இருக்கு” என்று தயங்க அவளோ “அவரும் ருத்ரா மாமா மாதிரி தான் அஜ்ஜூ” என்று சொன்னாலும் அவனது தயக்கம் தீரவில்லை.
இஷானி ருத்ராவை அழைத்தவள் “இவனை ஜெய் கிட்ட கூட்டிட்டு போங்க மாமா! அவரைப் பார்த்தா இவனுக்குப் பயமா இருக்குதாம்” என்று சொல்ல
“அஜ்ஜூ! அவரும் உனக்கு மாமா தான்… என் கூட பேசுற மாதிரியே அவர் கிட்டவும் நீ ஃப்ரீயா பேசலாம் விளையாடலாம்… அவரு ஒன்னும் சொல்ல மாட்டாருடா” என்றபடி மருமகனை ஜெயதேவ்விடம் அழைத்துச் செல்ல அதன் பின்னர் சில மணி நேரங்களில் அர்ஜூனே ஜெய்யிடம் வளவளக்க ஆரம்பித்துவிட்டான்.
பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் மகிழ்ச்சியிலும் நேரம் போனதே தெரியவில்லை. ஜெயதேவ் எதேச்சையாக மொபைலில் நேரம் பார்த்தவன் தானும் அஸ்மிதாவும் கிளம்ப வேண்டிய விசயத்தை வெளியிட குடும்பத்தினர் ஆயிரம் அறிவுரைகள் சொல்லி இருவரையும் வழியனுப்பி வைத்தனர். சாந்தினியும் சஞ்சீவினியும் அஸ்மிதாவிடம் விளையாட்டுத்தனமாக எங்கேயும் ஜெயதேவ்விடம் கூறாது சென்றுவிடாதே என ஒரு முறைக்கு ஆயிரம் முறை தனித்து எச்சரிக்கை செய்ய அஸ்மிதா அனைத்துக்கும் தலையாட்டி வைத்தாள்.
இஷானி அஸ்மிதாவிடம் “ஹனிமூன் விசயத்தை என் கிட்ட சொல்லலை அஸ்மி… நான் உன் மேல கோவமா இருக்கேன் போ” என்று சொல்லவும் அஸ்மிதா தயக்கத்துடன் “இல்ல இஷி… இது” என்று பேச வர ருத்ரா இடை மறித்தான்.
“இப்போ என்ன இஷி? இதுக்குப் பழி வாங்குற மாதிரி நம்ம இன்னும் கொஞ்சநாள்ல அஸ்மி கிட்டவும் ஜெய் கிட்டவும் சொல்லாம ஹனிமூன் போவோம்… டீல் ஓகேவா?” என்று கேட்க அதைக் கேட்டதும் அஸ்மிதா நகைக்க ஆரம்பித்தாள்.
ஜெயதேவ் “சந்தடி சாக்குல உன் ஹனிமூனுக்கு நீ ப்ளான் பண்ணிட்ட… யூ ஆர் க்ரேட் மிஸ்டர் ருத்ரா” என்று பாராட்ட ருத்ரா அந்தப் பாராட்டை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டான்.
ருத்ராவும் இஷானியும் ஹோட்டல் வாயில் வரை வந்து அவர்களை வழியனுப்பிவிட்டு மீண்டும் பர்த்டே ஹாலை நோக்கித் திரும்பும் போது இஷானி அவனிடம் “நம்ம ஹனிமூன் கிளம்பிட்டோம்னா வெங்கட் அண்ணா மட்டும் தனியா உங்க ஆபிசை எப்பிடி மேனேஜ் பண்ண முடியும்?” என்று யோசனையாய் கேட்க
“அதுலாம் எனக்குத் தெரியாது… நீ தான் ஹனிமூன் பேச்சை ஆரம்பிச்ச… சோ நம்ம ஹனிமூன் போயே ஆகணும்.. இது தான் ஃபைனல்.. இனிமே நோ மோர் ஆர்கியுமெண்ட்ஸ்… இஸ் தட் க்ளியர்?” என்றவன் அதற்கு மேல் அவளைப் பேசவிடாது அவளது தோளில் கை போட்டு அழைத்துச் சென்றான்.
கணவனின் பேச்சில் வழக்கம் போல புன்னகை மலர அவன் சொன்ன அனைத்துக்கும் சரியென தலையாட்டி வைத்தபடி அவனுடன் இணைந்து நடந்தாள் இஷானி வாழ்க்கை முழுவதும் அவனுடனான பயணத்தில் இணைந்துவிட்ட திருப்தியுடன்.
******************
ஆழியூர்…
அந்த நாஞ்சில் மண்ணில் வீசும் காற்றில் நச்சின் அளவு மட்டுப்பட்டிருந்தது. பல வருடங்களுக்குப் பின்னர் அந்த ஊரின் மக்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் உணர்ந்தனர். எந்த கருப்பு பிசாசிடம் இருந்து மானசாதேவி தன் கிராம மக்களைக் காக்க எண்ணினாலோ அந்தக் கருப்பு பிசாசை கடற்கரையிலிருந்து தோண்டி எடுத்த நிறுவனத்துக்கு அன்று மூடுவிழா.
ஆம்! ஆர்.எஸ் மினரல்ஸின் ஆழியூர் யூனிட் நிரந்தரமாக மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பான வேலைகளுக்காக தான் இரு நாட்களுக்கு முன்னர் ஜெயதேவ் சென்னையிலிருந்து அங்கே வந்திருந்தான். இரு நாட்களாக இந்த வேலை தொடர்பாக அலைந்தவனுக்கு பாலா உதவிகரமாக இருந்தான்.
இதோ இப்போது பூட்டில் அரக்கு வைத்து சீல் செய்த போது மானசாதேவியின் போராட்டத்துக்கு நல்ல முடிவு ஏற்பட்டதாக மகிழ்ந்து போனான். அவள் நின்ற அதே இடத்தில் நின்றபடி தொழிற்சாலையின் சுவரை வெறித்தவன்
“உன் போரட்டத்துக்கு நல்ல முடிவு கிடைச்சிருக்கு மனு… உன்னோட போராட்டத்தை நான் முடிச்சு வச்சிருக்கேன்… வெறும் கார்பரேட் முதலாளியா யோசிச்ச என்னை ஒரு மனுசனா யோசிக்க வச்சு என்னை மனசாட்சியோட நடந்துக்க வச்சது எல்லாமே உன்னோட கொள்கைகளும், ஜீவா சாரோட வார்த்தைகளும் மட்டும் தான் மனு… அது ரெண்டும் என்னைக்குமே என் காதுல ஒலிச்சிட்டே இருக்கும்” என்று சொன்னவனை கடல்காற்று தழுவிச் சென்றது.
அதே நேரம் “தேங்க்யூ சோ மச் தேவ்” என்று சொன்ன மானசாதேவியின் குரல் காற்றோடு கரைந்து போனது போன்ற பிரமை ஜெயதேவ்வுக்கு.
இதே மன நிறைவுடன் மானசாதேவியின் வீட்டுக்குச் சென்றவன் அங்கே அஸ்மிதா இல்லாததைக் கண்டு திகைத்தான். அவர்கள் ஆழியூர் வந்த தினத்திலிருந்து இந்த வீட்டில் தான் வாசம் செய்கின்றனர்.
ஜெயதேவ் அலுவலவேலையாக அலைய அஸ்மிதா பாலாவின் மனைவியுடன் சேர்ந்து சுசீந்திரம், நாகராஜா கோயில், திற்பரப்பு அருவி என்று சுற்றிப் பார்த்தவள் இன்றும் அப்படி எங்கேனும் சென்றிருப்பாளோ என எண்ணியவன் பாலாவிற்கு அழைத்துக் கேட்க அவனோ இன்று அஸ்மிதாவும் தன் மனைவியும் எங்கேயும் செல்லவில்லை என்ற தகவலை கூற ஜெயதேவ் யோசனையுடன் போனை வைத்தான்.
வழக்கம் போல பாலாவின் வீட்டிலிருந்து அவர்களுக்குச் சாப்பாடு எடுத்து வரும் செல்லம்மா பாட்டி வரவும் அவரிடம் அஸ்மிதா எங்கே என்று கேட்க அவர் தான் மதியம் வந்த போதே அஸ்மிதா கடற்கரையைப் பற்றி கேட்டதால் அங்கே தான் சென்றிருப்பாள் என்று கூறி ஜெயதேவ்வின் வயிற்றில் பாலை வார்த்தார்.
உடனே வேகமாகக் கடற்கரைக்குச் சென்றவன் அங்கே மறையும் சூரியனின் கடைசிக் கதிரின் ஆரஞ்சு வண்ணத்தில் குளித்தபடி இருந்த மனைவியைக் கண்டதும் கோபமும் ரசனையும் கலந்த கலவையாக அவளை நெருங்கினான்.
அதே நேரம் அஸ்மிதா மறையும் சூரியனை ரசித்தபடி நின்றிருந்தவள் அதன் அழகில் இலயித்திருந்தாள். மணலாடையை இழந்த கடலன்னையின் இந்தத் தோற்றம் கூட அழகு தான் என எண்ணியவளுக்கு அந்தப் பொன்மாலை நேரத்தில் யாருமற்ற கடற்கரையும் அதன் மீனவக்குடியிருப்புகளும் காணக் காணத் தெவிட்டவில்லை. சூரியன் முழுவதுமாகக் கடலில் மறைய வானம் ஆரஞ்சு வண்ணத்திலிருந்து மெல்லியதாக கருமைக்குத் தாவ ஆரம்பித்திருந்தது.
கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி நின்றிருந்தவளின் குழல் கடற்காற்றின் உபயத்தால் அவள் முகத்தில் சதிராட அதை ஒதுக்கிவிட்டபடி எதேச்சையாக பக்கவாட்டில் பார்த்தவள் திடுமென்று அவள் அருகில் வந்து நின்ற ஜெயதேவ்வைக் கண்டதும் ஒரு கணம் திடுக்கிட்டாள்.
பின்னர் சீராக மூச்சு விட்டபடி “ஏன் இப்பிடி திடுதிடுப்புனு வந்து நிக்கிற? மனுஷிக்குப் பக்குனு இருக்குல்ல” என்று கேலி செய்ய
“எங்கே போனாலும் சொல்லிட்டுப் போகணும்கிறது உன் டிக்ஸ்னரியில கிழிஞ்ச பக்கத்துல கூட பிரிண்ட் ஆகல போல” என்று கேலி விரவிய குரலில் கேட்டபடி உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டான் அவன்.
அஸ்மிதா அவனது கரத்தைப் பற்றிக் கொண்டபடி தோளில் தலை சாய்த்தவள் “நான் என்ன பண்ணுறது? என்னோட ஹப்பிக்கு ஆபிஸ் ஒர்க்ல பொண்டாட்டினு ஒருத்தி இருக்கிறது ரெண்டு நாளா நினைவு வரல… நானும் அவனை தொந்தரவு பண்ண விரும்பல… அதான் பீச்சுக்கு வந்து காத்து வாங்கிட்டிருக்கேன்” என்று கொஞ்சும் மொழியில் மிழற்ற அவளின் பேச்சில் கோபம் கரைய அவனது கரங்கள் அவளது இடையைச் சுற்றியிருந்தது.
அவன் மௌனமாக இருக்கவும் அஸ்மிதாவே பேச்சைத் தொடர்ந்தாள்.
“இன்னைக்கு ஃபேக்டரிக்கு சீல் வைக்கப் போறாங்கனு லெட்சுமி அண்ணி சொன்னாங்க… இந்நேரத்துக்கு அது முடிஞ்சிருக்கும் தானே” என்று கேட்டவளுக்கு ஒரு தலையசைப்பு அவனிடமிருந்து பதிலாக வந்தது.
“இப்போ நீ ஹேப்பியா இருக்கியோ இல்லையோ நான் ரொம்ப ஹேப்பியா ஃபீல் பண்ணுறேன் ஜெய்… எவ்ளோ பெரிய விசயத்தை நீ செஞ்சு முடிச்சிருக்க” என்று பெருமிதம் வழியும் கண்களால் தன்னவனை நோக்கியவள் எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
ஜெயதேவ் பதறியவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு “பப்ளிக்ல வச்சு கிஸ் பண்ணுற? யாராச்சும் பார்த்துட்டா என்ன பண்ணுவ?” என்று அதிர
அஸ்மிதா அலட்சியமாய் தோளை குலுக்கியவள் “என் புருசனுக்கு நான் கிஸ் பண்ணுறேன்… இதுல என்னடா இருக்கு? ஃபர்ஸ்ட் ஆப் ஆல் நீ இப்பிடி பதறாதடா… தைரியம் புருசலெட்சணம்” என என்றோ ஒரு நாள் அவனுக்குக் கற்பித்த பாடத்தை மீண்டும் நினைவுறுத்தினாள்
அவள் சொன்ன விதத்தில் பதற்றம் மறைய நகைத்தவன் “ஓகே மேடம்ஜி… இப்போ வீட்டுக்குப் போவோமா?” என்று கேட்டபடி அவள் சற்றும் எதிர்பாரா வண்ணமாய் அவளைத் தன் கரங்களில் ஏந்தி கொண்டான்.
அஸ்மிதா திகைத்து விழித்தபடி “இப்போ மட்டும் யாரும் பார்க்க மாட்டாங்களாடா?” என்று கேட்க ஜெயதேவ் தன் மூக்கை அவள் மூக்கோடு செல்லமாக உரசியவன்
“என் பொண்டாட்டிய நான் தூக்கிட்டுப் போறேன்… இதுல என்னடி இருக்கு?” என்று அவள் சொன்ன மாதிரியே சொல்லிக் காட்டியபடி அவளோடு வீட்டுக்குச் செல்லும் திசையில் நடக்க ஆரம்பித்தான்.
அதன் பின்னர் அஸ்மிதாவின் பேச்சு சத்தமும் ஜெயதேவ்வின் நகைப்பும் மட்டுமே அந்த பிரதேசத்தின் காற்றில் ஒலியாய் பரவ கடலில் கதிரவன் கரைந்ததும் வானில் சந்திரிகை எட்டிப் பார்க்க ஆரம்பித்தாள்.
இங்கே அந்த வெய்யோனும் வாழ்வில் தன் தண்மதியை இனி என்றும் தனித்திருக்க விடமாட்டேன் என்ற உறுதி பூண்டவனாய் அவளைத் தன்னோடு அணைத்தபடி வீட்டை நோக்கி நடைபோட்டான். அவர்களின் வாழ்க்கைப்பயணம் இவ்வண்ணம் ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் நீளட்டும்!
இனிதே நிறைவுற்றது!