🌞 மதி 58🌛

அணுவியல் தாதுக்களை மணலில் இருந்து எடுக்க, அட்டாமிக் மினரல் டிவிசன் என்ற பிரிவின் டிபார்ட்மெண்ட் ஆப் அட்டாமிக் எனர்ஜி என்ற மத்திய அரசு துறை தான் அனுமதியளிக்க முடியும். மோனோசைட் மட்டுமே எந்த தனியார் நிறுவனமும் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. தாது மணலில் இருந்து மோனோசைட்டை பிரித்து எடுக்கப்பட்டு தனியாக தடித்த காங்கிரீட் பள்ளத்தில் சேமிக்கப்படவேண்டும். மேலும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டிப்பார்ட்மெண்ட் ஆப் அட்டாமிக் எனர்ஜிக்கு தகவல் அளிக்க வேண்டும். அதே டிப்பார்ட்மெண்ட் ஆப் அட்டாமிக் எனர்ஜி ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு  ஒரு முறையும் அந்திறுவனங்களில் ஆய்வு செய்யவேண்டும் என்பதே நடைமுறை – அரியநாயகம்.

ஆர்.எஸ் குழுமத்தின் தலைமை அலுவலகம்….

சந்திரசேகரின் முன்னே அமர்ந்திருந்தாள் அஸ்மிதா. மூக்கின் நுனி அழுததற்கு அடையாளமாய்ச் சிவந்திருக்க முகம் கலங்கி போயிருந்தது. இது வரை அவள் வாழ்க்கையில் இந்த அளவுக்கு அழுததில்லை. அவளுக்கு மாறாக சந்திரசேகரோ அவளருகே அலட்சியமாய் மொபைலை நோண்டியபடி அமர்ந்திருந்த ஜெயதேவ்வை வெறித்தபடி அமர்ந்திருந்தார்.

அவருக்கு இருந்த ஆத்திரத்துக்கு அவன் மட்டும் அஸ்மிதாவின் கணவனாக இல்லாவிட்டால் இந்நேரத்துக்கு அவர் கொலைகாரனாகி இருப்பார். அவளது மகளைப் போல ஒருத்தி அவனுக்கு மனைவியாக வாய்த்தது ஜெயதேவ் செய்த புண்ணியம். இதில் அவன் அடிக்கடி நிறுவனப்பங்குகளுக்காக அவளைப் பகடைக்காயாக்குவதில் அவருக்குத் துளியும் விருப்பமில்லை.

அதே நேரம் அஸ்மிதா மற்ற விசயங்கள் அனைத்திலும் சுதாரிப்போடு இருப்பவள் காதல் என்று வந்துவிட்டால் கண் கலங்குவது ஒரு தந்தையாக அவருக்குப் பொறுக்கவில்லை. கூடவே தகப்பன் ஸ்தானத்தில் இருந்து அவளுக்காக அவர் துரும்பைக் கூட நகர்த்தியிராத குற்றவுணர்ச்சி வேறு. மகளுக்காக முழு சொத்தையும் கூட அவர் கொடுக்க தயார் தான். ஆனால் இந்த ஜெயதேவ்வின் பேராசை இதோடு முடிவு பெறுமா என்ற கேள்வி தான் அவரை அரித்துக் கொண்டிருந்தது.

அவனோ “எனக்கு ஆர்.எஸ் மினரல்ஸோட ஷேர்ஸ் வேணும்… அந்த டிரான்ஸ்பர் நடக்கிற விசயம் நம்ம மூனு பேரை தவிர வேற யாருக்கும் தெரியக்கூடாது… மீறி தெரிஞ்சுச்சுனா உங்க பொண்ணை சஞ்சீவினி பவனத்துக்கு திருப்பி அனுப்புறதை தவிர வேற வழி கிடயாது எனக்கு” என்று அழுத்தம் திருத்தமாய் உரைத்துவிட அஸ்மிதாவின் கண்ணில் கண்ணீர்க்குளம் கட்டியது.

அதோடு “எங்கப்பா மூலமா தூது விடலாம்னு நினைக்காதிங்க சந்திரசேகர்… அவர் பேச்சை கேக்கிற பழக்கம் நாலு வருசத்துக்கு முன்னாடியே என் கிட்ட இருந்து போயிடுச்சு” என்று சந்திரசேகருக்கு இருந்த கடைசி புகலிடத்தையும் இடித்துத் தரைமட்டமாக்கி விட்டான் ஜெயதேவ்.

சந்திரசேகர் நீண்டதொரு மூச்சை எடுத்து விட்டவர் மிகுந்த சிரமத்துடன் “ஓகே! இந்த ஷேர் டிரான்ஸ்பருக்கு நான் சம்மதிக்கிறேன்.. ஆனா இது தான் என் பொண்ணை வச்சு நீ ப்ளே பண்ணுற கடைசி கேமா இருக்கணும் தேவ்… இதுக்கு மேல நீ என் பொண்ணை வச்சு என்னை ப்ளாக்மெயில் பண்ண டிரை பண்ணுனா ஒரு அப்பாவா அவளை உன்னை மாதிரி பேராசைக்காரன் கிட்ட இருந்து காப்பாத்த என்ன பண்ணனுமோ அதை பண்ணுவேன்” என்று சொல்லிவிட்டு எச்சரிக்கை விடுக்க ஜெயதேவ் தனக்கு அதில் அக்கறை இல்லை என்பது போல எழுந்தவன் அஸ்மிதாவை நோக்க அவள் அவனுடன் கிளம்பாமல் இன்னும் இருக்கையிலேயே அமர்ந்திருந்தாள்.

“நீ கிளம்பு தேவ்! அவ வருவா” என்று இறுகிப்போன குரலில் உரைத்த சந்திரசேகரை வழக்கம் போல அலட்சியப்படுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினான் ஜெயதேவ்.

அவன் சென்றதும் சந்திரசேகர் மகளிடம் திரும்பியவர் “அஸ்மி இப்போவாச்சும் அப்பா சொல்லுறத கேளுடா.. இவன் உனக்கு வேண்டாம்… உனக்காக நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்டா… ஆனா அந்த தேவ் மிரட்டி நான் எதையும் செய்ய மாட்டேன்… இப்போ உனக்காக நான் ஆர்.எஸ் மினரல்ஸோட ஷேரை அவன் பேருக்கு மாத்துறேனு வச்சுப்போம், இவனுக்கு இது பழகிப்போயிடும் அஸ்மி” என்று மகளுக்குப் புரியவைக்க முயல அவளோ கண்ணீர் நிரம்பிய விழிகளால் அவரது பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

அவருக்குத் தன் மீது இருக்கும் பாசம் மட்டும் அன்றும் சரி இன்றும் சரி அதே அளவில் தான் இருக்கிறது என்ற எண்ணம் தான் அவளது கண்ணீருக்குக் காரணம். எவ்வளவு குற்றம் புரிந்திருந்தாலும் அவரது உதிரத்தில் உதித்தவள் தானே!

ஒவ்வொரு முறை ஜெயதேவ்வுடன் அவளைக் காணும் போதும் சந்திரசேகரின் கண்ணில் தோன்றும் வலி சராசரி தகப்பனாக இருக்கும் எவருக்கும் தோன்றும் ஒரு உணர்வு தான். மகளின் திருமண வாழ்க்கையின் ஆரம்பமே மிகப்பெரிய பொய்யில் தொடங்கியதால் உண்டான கலக்கம் வேறு அவரை பாடாய்படுத்தியது.

அதைப் பற்றி எண்ணும் போதெல்லாம் நெஞ்சில் சுருக்கென்ற வலி உண்டாவதை தடுக்க முடியவில்லை. அவருக்கு இருந்த ஆணவம், கர்வம், பணத்தாசை எல்லாமே மகளின் திருமணம் என்ற ஒற்றைப்புள்ளியில் முற்று பெற்றுவிட இன்றைய நிலையில் அவர் மகளின் வருங்காலத்தை எண்ணி கலங்கும் ஒரு சராசரி தந்தை மட்டுமே.

அதனால் தானோ என்னவோ அஸ்மிதாவுக்கு முன்பு போல அவரைக் கண்டால் வெறுப்பு வருவதில்லை. அவர் செய்த அனர்த்தங்களால் உண்டான கோபமானது இன்றுமே நீறு பூத்த நெருப்பாக இருந்து வந்தாலும் அவரை முன்பு போல வார்த்தைகளால் வேதனையுற செய்யவில்லை அவள். அதிலும் சந்திரசேகரின் வாஞ்சையான வார்த்தைகள் இப்போதெல்லாம் அவளுக்குக் கண்ணீரை தான் வரவழைத்தன.

சொல்லப் போனால் இன்றைய தினம் அவர் முன்னிலையில் அஸ்மிதாவும் ஜெயதேவ்வும் நடிப்பதாக தான் முடிவு செய்திருந்தனர். அவன் கதாபாத்திரமான பேராசைக்கார கணவனை அவன் கச்சிதமாக முடிக்க அஸ்மிதா பரிதாபத்துக்குரிய மனைவியாக கலங்கிப் போன மகளாக நடிக்க ஆரம்பித்தவள் தந்தையின் வார்த்தைகளில் கொட்டிக்கிடந்த பாசத்தில் நிஜமாகவே கலங்கிப் போனாள்.

அவர் முன்னிலையில் அவள் வடித்த கண்ணீருக்கு சந்திரசேகர் ஒரு அர்த்தம் எடுத்துக்கொள்ள அஸ்மிதாவோ தந்தையின் அன்பை முழுவதுமாக அனுபவிக்க இயலாத தனது துர்பாக்கியத்தை எண்ணித் தான் அழுது கொண்டிருந்தாள். இதை ஜெயதேவ்வும் அறியவில்லை, சந்திரசேகரும் அறியவில்லை.

அஸ்மிதா இதையெல்லாம் எண்ணி வருந்தியவள் “இந்த ஷேரை மட்டும் தேவ்வுக்கு குடுத்துடுங்க… இனிமே நான் உங்க கிட்ட எதுவும் கேட்டு வரமாட்டேன்” என்று கண்ணீர் ததும்பும் விழிகளுடன் இறைஞ்சியவளின் மனம் பேசிய வார்த்தைகளோ வேறு தான்!

சந்திரசேகர் மகளை ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டவர் “நான் சம்பாதிச்சது எல்லாமே என் பிள்ளைங்களுக்கு தானேடா! உனக்கு குடுக்காம நான் வேற யாருக்குக் குடுக்கப் போறேன்? ஆனா இது தான் அந்த தேவ்வுக்கு கடைசி முறை… இனியும் உன்னைக் காரணமா வச்சு அவன் என்னை டார்கெட் பண்ணுனா நான் ஒரு தகப்பனா கையை கட்டிட்டு வேடிக்கை பார்க்க மாட்டேன் அஸ்மி” என்றவரின் குரலில் இருந்த அழுத்தம் ஒன்றே அவர் அஸ்மிதா மீது கொண்டிருந்த பாசத்தைப் பறை சாற்றியது.

அந்நேரம் கதவு தட்டப்பட்டு சில நொடி தாமதத்துக்குப் பின்னர் வினாயகமூர்த்தி உள்ளே வரவும் அவரிடம் எதுவும் சொல்லவேண்டாமென விழியால் தந்தையிடம் இறைஞ்சினாள் அஸ்மிதா. சந்திரசேகரும் சரியென்று விழிமொழியில் பதிலளித்துவிட்டு வினாயகமூர்த்தியிடம் விசயம் என்னவென்று விசாரித்தார்.

அவரோ “குரங்கு கையில பூமாலையை குடுத்துட்டு இப்போ வருத்தப்படுறதால பூமாலை நமக்கு திரும்பவா கிடைக்க போகுது சேகர்? திட்டம் போட்டு நம்ம பொண்ணை இப்பிடி ஏமாத்திட்டானே அந்த ராஸ்கல்?” என்று சமயத்துக்குத் தகுந்தாற்போல அஸ்மிதாவின் வாழ்வில் அக்கறை கொண்டவர் போல அவர் நடிக்க அஸ்மிதாவுக்கு அவரது பேச்சில் இருந்த பொய்யான வருத்தம் புலப்படாமல் இல்லை.

ஆனால் ஜெயதேவ்வின் எச்சரிக்கையால் அதைக் காட்டிக்கொள்ளாமல் “என் தலையெழுத்து இப்பிடி தான்னு கடவுள் எழுதி வச்சிட்டாரு போல… நீங்க யாரும் அதை நினைச்சு வருத்தப்படாதிங்க… நான் மேனேஜ் பண்ணிப்பேன்” என்று பொதுப்படையாகச் சொல்லிவிட்டு தந்தையிடமும் வினாயகமூர்த்தியிடமும் விடைபெற்றவள் தன்னை வைத்து வினாயகமூர்த்தியின் மனம் திட்டம் போட ஆரம்பித்துவிட்டதை அறியவில்லை.

அவள் சென்றதும் வினாயகமூர்த்தி ஆழியூர் யூனிட்டைப் பற்றி ஆரம்பிக்க சந்திரசேகர் “அந்த யூனிட், சதர்ன் தமிழ்நாடு ஃபுல்லா உங்க கன்ட்ரோல்ல தானே இருக்கு… நீங்க சொன்னா சரியா தான் இருக்கு… எப்போ ஆழியூர் கிளம்புறிங்க?” என்று கேட்க

“இன்னும் மூனு வாரத்துல கிளம்பணும்… தூத்துக்குடியில முக்கியமான வேலை வேற இருக்கு” என்று கூறிய வினாயகமூர்த்தியின் மனம் வேறு விதமான திட்டங்களைப் போட ஆரம்பித்துவிட்டது.

அஸ்மிதா இயல்பிலேயே முன்கோபக்காரி. அவளது இந்த முன்கோபத்தைத் தூண்டி விட்டு ஜெயதேவ்விடம் அவள் பறிகொடுத்த பங்குகளை மீண்டும் அவள் வசம் வரவைத்துவிட்டால் இத்தனை வருடங்கள் சந்திரசேகர் மந்தாகினியை பொம்மையாய் ஆட்டிவைப்பது போல அவளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாமே என்ற எண்ணம் அவருக்கு.

அதன் பின் வீணாக ஜெயதேவ்வின் குறுக்கீடு ஆர்.எஸ் கெமிக்கலுக்குள் இருக்காது என்று அவர் கணக்கு போட ஆரம்பித்திருந்தார். எப்படி மானசாதேவிக்கு எதிராக பிஜூவைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தாரோ அதே போல ஜெயதேவ்வுக்கு எதிராக அஸ்மிதாவைத் தூண்டிவிட்டு தன் காரியத்தைச் சாதித்துக்கொள்ள எண்ணினார் அவர்.

அதே எண்ணத்துடன் சோர்ந்து தெரிந்த அஸ்மிதாவிடம் பேச்சு கொடுத்தார் வினாயகமூர்த்தி. அஸ்மிதா ஏற்கெனவே அவரைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை அறிந்திருந்தவள் தன் வாழ்க்கை ஜெயதேவால் நட்டாற்றில் விடப்பட்டதே என்று ஒரு மூச்சு நடித்து தீர்த்தாள். ஜெயதேவ்வின் மனைவிக்கு இவ்வளவு நடிப்புத்திறமை கூட இல்லையென்றால் அது அந்த மகாநடிகனுக்கு நேரும் அவமானம் அல்லவா என்று தனது நடிப்புக்குக் காரணம் வேறு சொல்லிக்கொண்டாள் மனதில். கூடவே அவரது கவனம் ஜெயதேவ்வைத் தடுப்பதில் தான் இருக்கவேண்டுமே தவிர அவனது செயல்களை அவர் கண்காணிக்க கூடாது என்பதில் அஸ்மிதா கவனமாக இருந்தாள்.

தன்னை வைத்து அவனைக் குழப்ப இவர் திட்டமிடும் நேரத்தில் ஜெயதேவ் இவரது இத்தனை வருட திருட்டுத்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவான் என்பது அஸ்மிதாவின் எண்ணம்.

அவள் எண்ணியபோது அவளின் நடிப்புத்திறமையில் வினாயகமூர்த்தி அவள் சொன்னதை நம்பிவிட்டார். அதற்கு அடிப்படையே அவளது குணம் மீது அவருக்கு இருந்த நம்பிக்கை தான். அவர் அடுத்தவரின் வருத்தத்தை தனக்கு சாதகமாய் மாற்றிக்கொள்ளும் திறன் படைத்தவர். பல ஆண்டுகளுக்கு முன்னர் சந்திரசேகர், மந்தாகினியின் வருத்தங்களை தனக்காக உபயோகித்தவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிஜூவின் காதல் போன விரக்தியைக் கூட மானசாதேவிக்கு எதிராக இப்படி தானே பயன்படுத்திக் கொண்டார்.

இன்று அஸ்மிதா சிக்கிவிட்டாள் என்று மகிழ்ந்திருந்தவரிடமிருந்து விடைபெற்றாள் அஸ்மிதா. அவள் சென்று சில நொடிகளில் ஜெயதேவ் அவரது கேபினில் அவர் முன்னே பிரசன்னமானான். அவனைக் கண்டதும் அவரது உதடுகள் ஏளனமாக வளைய

“என்னாச்சு? பதறிப்போய் ஓடிவந்திருக்க போல? பொண்டாட்டி மேல அவ்ளோ பாசமா? உன்னோட உளவாளி வந்துட்டுப் போனதை நான் பார்த்துட்டேன் தேவ்… இப்போதைக்கு நீ அஸ்மிய நினைச்சு பயப்படாத” என்று அலட்சியம் ததும்பும் குரலில் உரைக்க ஜெயதேவ் அவரது தொனியில் எரிச்சலுற்றான்.

“இனிமே அஸ்மியோட பேரை கூட நீ சொல்லக்கூடாது… அவளை எதாவது பண்ணனும்னு உனக்கு ஐடியா இருந்துச்சுனா அதுக்கு முன்னாடி நான் உன் கதைய முடிக்க ஆள் ஏற்பாடு பண்ண வேண்டியதா இருக்கும்… நான் சந்திரசேகரும் இல்ல, விஸ்வநாதனும் இல்ல, நீ ஈஸியா ஏமாத்திட்டுப் போறதுக்கு… தேவை இல்லாம அஸ்மிய இந்தப் பிரச்சனைக்குள்ள கொண்டு வந்தா நான் மனுசனா இருக்க மாட்டேன்” என்று எச்சரித்துவிட்டுச் சென்றவன் அஸ்மிதாவின் கேபினை நெருங்கியவனை ரிஷி அழைக்கவே அப்போதைக்கு அவளிடம் எச்சரிக்கும் எண்ணத்தைக் கைவிட்டான் அவன்.

அதன் பின்னர் இருவருக்கும் மாலை வரை வேலையே போதும் போதுமென்று இருந்தது. அஸ்மிதா ஜெயதேவ்விடம் இருந்து நிறுவன மேலாண்மையைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தாள்.

ஏன் இவ்வளவு வேகமாகத் தனக்கு நிறுவன மேலாண்மை பற்றிய விவரங்கள் அளிக்கப்படுகிறது என்று அஸ்மிதா முதலில் திகைத்தாலும் பின்னர் “போர்ட்ல டைரக்டர்னா சும்மா வந்துட்டுப் போறது இல்ல அஸ்மி.. கம்பெனியோட டே டு டே ஆக்டிவிட்டிஸ் பத்தி உனக்குத் தெரிஞ்சிருக்கணும்… சோ கொஞ்சம் கேர்ஃபுல்லா இதுல கான்செண்ட்ரேட் பண்ணு… எதும் டவுட்னா என் கிட்ட கேளு” என்று சொல்லிவிட்டான்.

அவளும் அதன் பின்னர் கவனத்துடனே கற்றுக்கொண்டாள். ஆனால் இன்றைய நிகழ்வில் மனம் சோர்ந்தவள் வீட்டுக்குச் செல்லாமல் நேரே துளி நிறுவனத்துக்குச் சென்றுவிட்டாள்.

அவளுக்கு அங்கே சென்றால் மனம் கொஞ்சம் நிம்மதியடையும் என எண்ணியவள் ஜெயதேவ்விடம் சொல்லவேண்டும் என்றெல்லாம் சிந்திக்கவில்லை.

ஜெயதேவ் வேலைகள் முடியவும் அவளைத் தேடியவனுக்கு அஸ்மிதாவின் உதவியாளினி அளித்த தகவல் கேட்டதும் அவனும் அவளைத் தேடி துளி நிறுவனத்தை நோக்கி பயணப்பட்டான்.

அஸ்மிதா அவனுக்கு முன்னர் அங்கே சென்றுவிட்டவள் வழக்கமாக அங்கிருந்த அலுவலகப்பணியாளர்களிடம் இரண்டு வார்த்தைகள் மரியாதை நிமித்தம் பேசியவள் அதன் பின்னர் மேரியிடம் பேசிக்கொண்டிருந்தாள். அவர் அவளது திருமணம் நடந்த விதத்தைக் கண்கூடாகப் பார்த்திருந்ததால் அவளது நலனை விசாரித்துக் கொண்டிருக்க அந்நேரம் பார்த்து மலர் ஏதோ சந்தேகம் கேட்பதற்காக வந்தவள் அஸ்மிதாவைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் கட்டிக் கொண்டாள்.

திருமணத்துக்குப் பின்னர் அவள் இங்கே வருவதே இல்லை என குறைபட்ட அந்தச் சிறுபெண்ணிடம் புன்முறுவல் பூத்த அஸ்மிதா இனி அடிக்கடி தான் வருவதாக உறுதியளிக்க அப்போது மலர் உற்சாகத்துடன் “ஜெய் அண்ணா” என்று விளித்ததில் அதிர்ந்த அஸ்மிதா அலுவலக அறையின் வாயிலை நோக்க அங்கே கையைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான் ஜெயதேவ்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛