🌞 மதி 5 🌛

தாம்சன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேசனின் சர்வேயில் இந்தியா பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடாக முதலிடத்தைப் பெற்றதற்கு சுகாதாரம், பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள், பாலியல்ரீதியான தொந்தரவுகள், ஆள் கடத்தல் மற்றும் பாலினரீதியான வேறுபாடுகள் போன்றவை காரணங்களாகக் காட்டப்பட்டன.

துளி தொண்டு நிறுவனம்

பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் சஞ்சீவினியால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். அதில் அவருடன் சேர்த்து சட்ட ஆலோசகர், மனோதத்துவ நிபுணர், அலுவலகப்பணியாளர்கள் என இருபதுக்கும் மேற்பட்ட நபர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களின் முக்கியப்பணியே சமுதாயத்தில் பல்வேறு காரணங்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பதே. அதில் குழந்தைகளும் சமீப காலங்களில் அடக்கம் என்பது தான் வேதனைக்குரிய விஷயம். அதிலும் கடந்த சில வருடங்களில் பெண்களும் குழந்தைகளும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காகக் கடத்தப்படுவது அதிகரித்துவிட்ட நிலையில் அவர்கள் நிறுவனத்தின் பணிச்சுமை அதிகரித்தது எனலாம்.

அப்படிப்பட்டக் கும்பல்களிடம் மாட்டிக்கொண்டப் பெண்களையும் குழந்தைகளையும் காவல்துறை உதவியுடன் மீட்பது, அவர்களுக்கு கவுன்சலிங் அளிப்பது, இது பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது என இருபத்திநான்கு மணிநேரமும் அந்நிறுவனத்திலிருக்கும் அனைவருக்கும் வேலை இருந்து கொண்டே இருக்கும்.

மீட்கப்பட்ட பெண்கள் சிலரைப் பெற்றோர் தகவல் தெரிந்து அழைத்துச் சென்றுவிடுவர். இன்னும் சிலருக்குக் கவுன்சலிங் கொடுத்ததும் அவர்களே வெளியில் சென்று உலகத்தை எதிர்கொள்ளத் தயாராகி விடுவர். இந்த இரண்டிலும் சேராதவர்கள் குழந்தைகளும், சில பெண்களும் மட்டுமே. அவர்களுக்கு இந்தத் துளி நிறுவனம் மட்டுமே உலகம். இது போக சஞ்சீவினியால் மீட்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் அவரது துளி தொண்டு நிறுவனத்திலேயே பணியாற்றினர்.

குழந்தைகளுக்கும், அப்பெண்களுக்கும் கல்வியை அளிப்பதோடு வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட பயிற்சிகளை வழங்குவதற்கான செயல்திட்டம் ஒன்று அரசின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப் பட்டிருந்தது. அதற்கான ஒப்புதல் கிடைத்தப்பின்னர் வேலைவாய்ப்பு பயிற்சியை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகள் தற்போது துளியில் நடந்து கொண்டிருந்த நேரத்தில் தான் வி.என். குழுமத்திடமிருந்து அவர்களுக்கு ஒரு ஆஃபர்(?) கிடைத்தது.

அதாவது துளி நிறுவனம் தற்போது அமைந்திருக்கும் நிலத்தையும் அதன் சுற்றுப்பகுதியையும் சேர்த்து வி.என் குழுமம் வாங்க விரும்புவதாகவும், அதற்காக சஞ்சீவினி எவ்வளவு பணம் கேட்டாலும் தரத் தயாராக உள்ளதாகவும் தினந்தோறும் தகவல்கள் வந்த நிலையில் இருந்தன.

ஆனால் சஞ்சீவினியைப் பணத்தால் அசைக்க முடியாது என்பது அவர்களுக்கு இன்னும் புரியவரவில்லை. எனவே ஆள் மாற்றி ஆள் தூது வந்து கொண்டிருந்தனர் வி.என்.குழுமத்தின் தலைமை அலுவலகத்திலிருந்து.

இப்படி இருக்கையில் துளி தொண்டு நிறுவனத்தில் பணிபுரிகின்ற சமையல் செய்யும் பெண்மணிகள் இருவரும் அவர்களின் கிராமத்தில் ஏதோ திருவிழா என்று சென்றுவிட அவர்களின் மூன்று உதவியாளர்கள் தான் இப்போது அங்கிருக்கும் குழந்தைகளுடன் சேர்த்து மொத்தம் ஐம்பது நபர்களுக்கான சமையைலைச் செய்யும் பொறுப்பை ஏற்றிருந்தனர்.

அதனால் வெளியில் சென்று காய்கறிகளை வாங்குவது என்பதெல்லாம் அவர்களால் முடியாது போகவே அலமேலு இஷானியையும் அஸ்மிதாவையும் காய்கறிகளை மொத்தமாக வாங்கி வருமாறு பணித்தார்.

அதனால் அன்றைக்குக் காலையில் சீக்கிரமாகவே நடனவகுப்பை முடித்துவிட்டாள் இஷானி. அஸ்மிதாவும் அவளும் காலையுணவை முடித்தவர்கள் வீட்டுக்கும் தொண்டுநிறுவனத்துக்கும் வேண்டிய காய்கறிகளை வாங்கக் கிளம்பினர்.

ஸ்கூட்டியை இஷானி ஓட்டிச் செல்ல அஸ்மிதா அவள் பின்னே அமர்ந்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள். இருவரும் செல்லும் போது அங்கே ஒரு பள்ளிப்பேருந்து பழுதாகி நிற்பதும், மாணவ மாணவிகள் வெயில் நின்று கொண்டிருப்பதும் அவர்கள் கண்ணில் பட்டது. ஸ்கூட்டி அவர்களைக் கடக்கும் போது தான் இருவரும் கவனித்தனர் பேருந்திலிருந்து சற்று தள்ளி தனியாக நின்று கொண்டிருந்த மூன்று மாணவர்கள் சண்டையிட்டபடி எதையோ விவாதித்துக் கொண்டிருப்பதை.

விவாதம் முற்றி அதில் இருவர் ஒரு மாணவனைப் போட்டு அடிக்க அவன் கீழே விழுந்ததில் பக்கத்தில் கிடந்த கல்லில் தலை மோதி நெற்றியிலிருந்து உதிரம் வழியத் தொடங்கியது. இவையனைத்தும் கண்ணில் இமைக்கும் நேரத்தில் நடந்துவிடவே இஷானி பதறிப்போய் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு அவனைத் தூக்கச் செல்ல அஸ்மிதா தடுமாறியபடி ஸ்கூட்டியைப் பிடித்துக்கொண்டாள்.

அதற்குள் காயப்பட்டச் சிறுவன் மயக்கமாகிவிட இருவரையும் கண்டதில் சண்டையிட்ட இரு மாணவர்களும் பேருந்தின் அருகில் ஓடிவிட பழுது நீங்கிய பேருந்து இந்த ஒரு மாணவனைக் கவனிக்காமல் வேகமெடுத்தது.

இஷானி அந்த மாணவனின் முகத்தைத் திருப்பிப் பார்த்தவள் அவளை அறியாமல் உதிரத்தின் நடுவே தெரிந்த முகத்தின் சாயலில் திடுக்கிட்டவள் “அஸ்மி இங்கே வாயேன்” என்று கத்தவும் அஸ்மிதா ஸ்கூட்டியினருகில் நின்றவள் வேகமாய் இஷானியின் அருகில் வந்தாள்.

அவளும் அந்தக் காயம்பட்ட மாணவனைக் கண்டதும் “இவன் எப்பிடி இங்கே?” என்று கேட்டபடி தனது சுடிதார் துப்பட்டாவால் இரத்தத்தைத் துடைத்தபடி

“நீ இவனைத் தூக்கிக்கோ இஷி… நம்ம ரெண்டு பேருக்கும் இடையில வச்சே ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போயிடலாம்… இரத்தம் போயிட்டே இருக்கு பாரு” என்று சொல்லவும் அவனை அணைத்தபடி தூக்கிய இஷானி தட்டுத்தடுமாறியவளாய் அவனை ஸ்கூட்டியில் அஸ்மிதாவின் முதுகில் சாயுமாறு அமரவைத்தவள் தானும் அமர்ந்து கொண்டு அவன் விழுந்துவிடாமல் பிடித்துக் கொண்டாள்.

அடுத்தக் கால்மணி நேரத்தில் இருவரும் ஒரு கிளினிக்கில் இருந்தனர். அந்தச் சிறுவனுக்கு உள்ளே காயத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்த செவிலியைப் பார்த்தபடியே. அவர் காயத்தைச் சுத்தம் செய்துவிட்டுக் கட்டுப்போடும் போதும் அவன் அழாமல் அமைதியாக இருந்தது தான் இருவருக்கும் ஆச்சரியம்.

இதுவே இஷானியோ அஸ்மிதாவோ அவன் இடத்தில் இருந்திருந்தால் நடந்திருக்கும் காட்சியே வேறு. அதை ஒரே நேரத்தில் நினைத்துப் பார்த்தவர்கள் ஒருவரை ஒருவர் கேலியாகப் பார்த்துக் கொண்டனர்.

அதற்குள் அச்சிறுவனுக்குச் சிகிச்சை முடிந்து அவனும் வெளியே வந்துவிட்டான். மருத்துவர் கொடுத்த மாத்திரைச்சீட்டைப் பெற்றுக்கொண்ட இருவரும் அசந்து கூட அவன் முகத்தை நோக்கவில்லை. இஷானி அவனது புத்தகப்பையை வைத்திருந்தவள் “உங்க அம்மாக்குப் போன் பண்ணு அஜ்ஜூ” என்று மெதுவாக உரைத்தவள் தனது போனை நீட்ட

“என் கிட்டவே போன் இருக்குக்கா” என்றவன் தனது புத்தகப்பையின் இரகசிய அறை போல இருந்ததை திறந்தவன் அதிலிருந்து விலையுயர்ந்த போனை எடுக்கவும் இரு பெண்களுக்கும் ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன.

அவர்களது போன்கள் கூட வெறும் சாம்சங் தான். அவன் ஆப்பிளின் புதிய வெளியீடான போனை வைத்திருக்க இஷானி மற்றும் அஸ்மிதாவின் போன்களுக்கு மட்டும் உயிர் இருந்திருந்தால் அவை அப்போதே தற்கொலை செய்திருக்கும்.

“இவ்ளோ காஸ்ட்லி மொபைலை உனக்கு யாரு வாங்கிக் குடுத்தாங்க?” – அஸ்மிதா.

“அம்மா தான் வாங்கிக் குடுத்தாங்க அஸ்மிக்கா” என்றான் அவன் பெருமிதமாக.

அஸ்மிதாவுக்கு அவனது ‘அஸ்மிக்கா’ என்ற அழைப்பில் பிடித்தமின்றி போக “லுக் அர்ஜூன்! என்னை இனிமே அக்கானு கூப்பிடக் கூடாது… என்னை மட்டுமில்ல இஷியையும் தான்… ஓகே?” என்று ஆட்காட்டிவிரலை நீட்டி எச்சரிப்பது போல சொல்லி முடிக்கவும் அர்ஜூன் என்ற அஜ்ஜூவின் முகம் வாடிப்போனது.

அதைக் கண்டு இஷானிக்கும் அஸ்மிதாவுக்கும் வருத்தம் தான் என்றாலும் இதை அனுமதிப்பது தங்களது அமைதியான வாழ்வுக்கு நல்லதன்று என்பது புரிந்திருந்ததால் அவனது முகவாட்டத்தைக் கண்டுகொள்ளாதது போல் இருக்க முயற்சித்தனர்.

இஷானி “அஸ்மி! நர்ஸ் இவனுக்குச் சாப்பாடு குடுத்து மாத்திரை போட சொல்லிருக்காங்க… லேட் பண்ணிட்டே இருந்தா நேரம் தவறிடும்” என்று நினைவுறுத்த அஸ்மிதா அர்ஜூனை அவனது வீட்டினருக்கு அழைக்கும் படி கூறினாள்.

அர்ஜூனும் ஒருவர் மாற்றி ஒருவருக்கு முயற்சித்துக் களைத்தவன் “யாருமே எடுக்கலைக்கா” என்றான் முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டபடி.

“யாருமே உன் காலை அட்டெண்ட் பண்ணாம இருக்கிறதுக்கு எதுக்கு உனக்கு போன்? வேஸ்ட் ஃபெல்லோஸ்” என்று எரிச்சலுடன் சற்று உரக்கவே முணுமுணுத்தாள் அஸ்மிதா.

அது அர்ஜூனின் காதில் விழவே “ஆமா அஸ்மிக்கா… அப்பா ஃபிப்டி பர்சண்டேஜ் வேஸ்ட்… அம்மா செவன்டி ஃபைவ் பர்சண்டேஜ் வேஸ்ட்… பட் வினாயகம் மாமா தான் ஹண்ட்ரெட் பர்சண்டேஜ் வேஸ்ட்” என்று பாவனையுடன் கூற இருவருக்கும் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

“இதை உங்கம்மா கேக்கணும்டா… அன்னைக்கு தேர்ட் வேர்ல்ட் வார் கட்டாயமா வரும்” என்று சொன்னபடி இஷானியிடம்

“பேசாம இவனை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் சாப்பாடு குடுத்து மருந்து குடுத்துடுவோம்… தூங்கி எழுந்திருச்சதும் அவன் ஃபேமிலியில யாராச்சும் கான்டாக்ட் பண்ணுனா அவங்களுக்குக் குடுக்க வேண்டிய மரியாதையைக் குடுத்து புள்ளைய அனுப்பி வைப்போம்” என்றபடி அவனை அழைத்துக்கொண்டு இஷானியுடன் அங்கிருந்து கிளம்பினாள் அஸ்மிதா.

ஸ்கூட்டியில் செல்லும் வழியெங்கும் அர்ஜூனின் வாய் மூடாமல் வளவளக்கவே “டேய் கொஞ்சம் அமைதியா வாடா! இல்லைனா கடையில ஃபெவிகாலை வாங்கி வாயில ஊத்திட்டுத் தான் வீட்டுக்கு கூட்டிட்டுப் போவேன்” என்று கடுகடுத்தாள் அஸ்மிதா.

ஆனால் அச்சிறுவனோ “நீ ஊத்துனாலும் என் வாயில நிக்காம ஓடிடும்கா… ஏன்னு சொல்லு பார்ப்போம்” என்று புதிர் போட

“ஏன்டா?” என்று கேட்டபடி காற்றில் பறக்கும் கூந்தலை அடக்கினாள் அஸ்மிதா.

“ஏன்னா எனக்கு ஓட்டை வாய்னு ருத்ரா மாமா சொல்லுவாரு… ஓட்டை வாயில லிக்விட் எப்பிடி நிக்கும்?” என்று அவளை மடக்கிவிட்டதாக எண்ணிக்கொள்ள

“அடேங்கப்பா! ஊருல இருக்கிற அறிவாளியை எல்லாரையும் நாடு கடத்திடுவோம்… அவங்கல்லாம் உன் கால் தூசுக்கு வருவாங்களாடா?” என்று இவ்வளவு நேரம் இருந்த இறுக்கமான மனநிலை மாறியவளாய் அஸ்மிதா கேலி செய்ய அதைக் கேட்டு நமட்டுச்சிரிப்புடன் சாலையில் கண் பதித்தாள் இஷானி.

அர்ஜூனோடு வீட்டில் வந்து இறங்கியவர்கள் தயக்கத்துடன் நடக்க அவனோ “அக்கா உங்க வீடு சூப்பரா இருக்குக்கா… எவ்ளோ பெரிய மரம்! ஐய்! வுட் ஹவுஸ் கூட இருக்கு” என்று அவனது பன்னிரண்டு வயதுக்கேற்ற ஆர்வமும் துறுதுறுப்பும் மின்னச் சொல்லிக் கொண்டே தோட்டத்தை ஆவென்று பார்த்தபடி நடந்தான்.

அவனைத் தொடர்ந்த இருவருக்கும் உள்ளுக்குள் திக்திக்கென்று இருக்க அர்ஜூன் சாதாரணமாக வீட்டினுள் நுழைந்தவன் ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்த ராஜகோபாலனைக் கண்டதும் சிறிது தயங்கினான். ஆனால் அவர் அவனைப் பார்த்ததும் மூக்குக்கண்ணாடியைச் சரி செய்துவிட்டு வாயிலை நோக்க அவரது பேத்திகள் இருவரும் மெதுவாக வீட்டினுள் அடியெடுத்துவைத்தனர்.

இஷானி தாத்தாவிடம் கண் காட்டியவள் “இவனுக்குத் தலையில சின்னக்காயம் தாத்தா… அவங்க வீட்டுக்குப் போன் பண்ணுனோம்… ஆனா யாருமே எடுக்கலை… அதான் நம்ம வீட்டுக்கு…..” என்று அந்த வார்த்தையை முடிக்கும் முன்னரே கணவர் இரத்த அழுத்தத்துக்கான மாத்திரையைப் போட்டாரா என்று கேட்க வந்த அலமேலுவின் பார்வையில் பேச்சைப் பாதியிலேயே நிறுத்திவிட்டாள்.

அலமேலு உணர்ச்சியற்ற முகத்துடன் அர்ஜூனை ஏறிட அவனோ அங்கே நடப்பவற்றை ஏதோ தொலைகாட்சி நிகழ்ச்சி போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். இரு பெரியவர்களும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

இஷானி பாட்டியைத் தனியாக அழைத்துச் சென்றவள் என்ன மாதிரியான சூழ்நிலையில் தாங்கள் அவனை இங்கே அழைத்து வந்திருக்கிறோம் என்பதை விளக்கிவிட்டு

“அடிபட்டிருக்கு பாட்டி… அவன் குழந்தை தானே! பாவம்” என்று சொல்லவே அலமேலுவும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் கண்ணம்மாவிடம் ஒரு தட்டில் சாதத்தை வைத்து அர்ஜூனுக்குக் கொடுக்கும்படி சொல்லிவிட்டுத் தனது அறைக்குள் முடங்கிக் கொண்டார்.

அர்ஜூனுக்கு இன்னும் சிந்தாமல் சாப்பிடத் தெரியவில்லை. அஸ்மிதா இஷானியின் முழங்கையை இடித்தவள்

“பெத்தப்பிள்ளைக்கு ஒழுங்கா சாப்பிடக் கூடச் சொல்லிக் குடுக்காம அந்த மகாராணி அப்பிடி என்ன தான் வெட்டி முறிக்கிறாங்களோ? சை” என்று எரிச்சலுடன் முணுமுணுத்தாள்.

இஷானியோ “பாவம் அஸ்மி அவன்… அம்மா, அப்பா, ஒன்னுக்கு ரெண்டு மாமா இருந்தும் முன்னப் பின்ன தெரியாத வீட்டுல வந்து உக்காந்திருக்கான்… அவன் குழந்தையா இருக்கிறதால நம்ம மனசுல இருக்கிற விரக்தி அவனுக்குப் புரியலை” என்று கவலை நிறைந்த குரலில் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

சாப்பிட்டதும் அவன் லொடலொடவென்று பேச ஆரம்பிக்க “போதும்டா… இவ்ளோ நேரம் நீ பேசி பேசி என்னோட காதுமடல் வீங்கிடுச்சு… இப்போ மாத்திரையைப் போட்டுட்டு இஷி கூடப் போ.. அவ காட்டுற ரூம்ல தூங்கு.. அதுக்கு முன்னாடி உன் போனைக் குடு” என்று அவனை இஷானியுடன் அனுப்பிவைத்துவிட்டு அவனது போனில் உள்ள எண்களை ஆராயத் தொடங்கினாள்.

அதில் யாரையும் அழைக்கப் பிடிக்காவிட்டாலும் வேறு வழியின்றி ‘ருத்ரா மாமா’ என்று பதியப்பட்டிருந்த எண்ணுக்கு அழைக்கத் தொடங்கினாள். இந்த நல்லவனாவது அழைப்பை ஏற்பானா என்று கடுப்புடன் எண்ணமிடும் போதே “அஜ்ஜூ” என்ற ஆதுரமான ஒரு ஆணின் குரல் காதில் விழ அஸ்மிதாவுக்கு அவனது முகம் நினைவலைகளில் மிதக்கத் தொடங்கியது.

கூடவே அவன் பேசிய வார்த்தைகளும் தான்.

“உன்னை என் அக்கானு சொல்லிக்கவே எனக்கு அசிங்கமா இருக்கு… என்னை விடு, நான் இங்கே இருந்து போறேன்… உன்னைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலை” என்று கோபாவேசத்துடன் கத்திய ஒல்லியான நெடுநெடு உருவம் அவளுக்குக் கலங்கலாக நினைவுக்கு வந்தது.

பழைய நினைவுகளின் தாக்கத்தில் அமைதியானவளை “அஜ்ஜூ ஆர் யூ ஓகேடா? என்னாச்சு? நீ இந்த டைம்ல எனக்குக் கால் பண்ண மாட்டியே” என்றவனின் படபடத்தக் குரலில் நிகழ்காலத்துக்கு வந்த அஸ்மிதா

“நான் அஜ்ஜூ இல்லை… கூடப் படிக்கிற பசங்களோட சண்டை போட்டதுல அவனுக்கு நெத்தியில சின்னதா ஒரு காயம்… பயப்படுற மாதிரி எதுவுமில்லைனு டாக்டர் சொல்லிட்டாரு” என்று வார்த்தைகளை அளந்து வெளியிட்டாள் அவள்.

அவளது குரல் ருத்ராவிற்கு புரிபடாமல் போகவே “என்னாச்சு அவனுக்கு? அவன் யாரு கூடவும் சண்டைக்குப் போற டைப் இல்லையே! அவன் எப்பிடி உன் கூட அஸ்மி?” என்று உச்சபட்ச படப்படப்பில் அவன் பதற ஆரம்பிக்க

“நான் அஸ்மி இல்லை… ப்ளீஸ் கால் மீ அஸ்மிதா… அவன் இப்போ எங்க வீட்டுல தான் இருக்கான்… சஞ்சீவினி பவனத்துல” என்று அழுத்தம் திருத்தமாகத் தனது பெயரையும் வீட்டின் பெயரையும் உச்சரிக்க மறுமுனையில் இருந்தவன் இரண்டையும் கேட்டுவிட்டு ஆழ்ந்த அமைதிக்குப் போய்விட்டான்.

ஒரு புறம் குற்றவுணர்ச்சியும் மற்றொரு புறம் தயக்கமும் சேர்ந்து அவனைப் பேச விடாமல் செய்ய ‘சஞ்சீவினி பவனம்’ என்ற வார்த்தை அவனது உள்ளத்தில் விவரிக்க முடியாத சங்கடத்தைத் தோற்றிவித்தது.

பின்னர் கடினப்பட்டு வருவித்துக்கொண்ட சாதாரணக்குரலில் “ஓகே! நானே நேர்ல வந்து அவனை கூட்டிட்டுப் போறேன்” என்று சொல்லிவிட்டுப் போனை வைத்துவிட்டான்.

வீட்டிற்கு மதியவுணவுக்காக வந்தவனுக்கு இப்போது பசி மறந்து தயக்கம் வந்து ஒட்டிக்கொண்டது. எப்படி அங்கே செல்வான் அவன்? எப்படி அங்குள்ளவர்களின் முகத்தில் விழிப்பான்? இருந்தாலும் கடவுள் தனக்கு இப்படிப்பட்ட தர்மசங்கடத்தைத் தந்திருக்க வேண்டாம் என்று வருந்தியபடி சாப்பாட்டை ஒதுக்கி வைத்தவனை ஆச்சரியமாய் பார்த்த சமையல்காரம்மாவிடம் “அவங்க வந்தாங்கனா நான் சஞ்சீவினி பவனதுக்குப் போயிருக்கேனு சொல்லுங்கம்மா” என்று சொல்லிவிட்டு எழுந்தான். இதைக் கேட்டதும் தனது தமக்கை மற்றும் அவளது கணவரின் முகம் எப்படி மாறும் என்று எண்ணும் போது இவ்வளவு நேரம் இருந்த குற்றவுணர்வு, தயக்கம் எல்லாம் ராக்கெட் வேகத்தில் பறந்துவிட ஒரு அற்பச் சந்தோசம் அவன் மனதில் தோன்றியது அக்கணத்தில். அதே சந்தோசத்துடன் சஞ்சீவினி பவனத்துக்குச் செல்லக் காரை எடுத்தான் ருத்ரா.

தண்மதி ஒளிர்வாள் 🌛🌛🌛