🌞 மதி 48🌛

தாது மணல் ஆலைகளில் பிரிக்கப்பட்ட மோனசைட்டை சில தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு முறைகேடாக ஏற்றுமதி செய்வதைத் தடுக்க மத்தியச் சுரங்க அமைச்சகம் ‘தாதுமணல் கனிமங்களை இனி தனியார் நிறுவனங்கள் அள்ளக்கூடாது” என்று அரசிதழில் 20.02.2019 அன்று அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது (எண்.118)

ஆர்.எஸ் குழுமத்தின் தலைமை அலுவலகம்…

ஆட்டோவிலிருந்து இறங்கிய மானசா ஒரு முறை கட்டிடத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு உள்ளே சென்றாள். ரிசப்சனிஸ்டிடம் தனது பெயரைச் சொல்லவும் அந்த ரிசப்சனிஸ்ட் யாருக்கோ அழைத்து மானசாவின் பெயரைச் சொல்லிவிட்டு அவள் வந்திருக்கும் விவரத்தைத் தெரிவிக்கவும் சற்று நேரத்தில் மானசா காலையில் பேசிய உதவியாளர் அங்கே வந்து அவளை அழைத்துச் சென்றார்.

மீட்டிங் ஹால் என்ற அறிவிப்பு பலகை இருந்த கதவை உள்ளே தள்ளிக்கொண்டு அவருடன் சென்றபடியே அந்த பெரிய மீட்டிங் ஹாலை அடைத்துப் போடப்பட்டிருந்த நீள்வட்ட வடிவ மேஜையின் நடுநாயகமாக அமர்ந்திருந்தவனை தூரத்தில் வரும் போதே கண்களைச் சுருக்கிப் பார்த்தவள் மனதிற்குள் தன்னிடம் பேசுவதற்கு இவனுக்கு என்ன அவசியம் என்ற கேள்வியுடனும் சில ஊகங்களுடனும் அவனை நெருங்க அவர்கள் அருகில் வந்ததும் பேசிக்கொண்டிருந்த தொலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டு நிமிர்ந்தான் ஜெயதேவ்.

மானசாவுடன் நின்ற முரளிதரனை அனுப்பியவன் அவளை அமருமாறு சைகை காட்ட அவள் நாற்காலியில் அமர்ந்தாள். நொடிப்பொழுதைக் கூட வீணடிக்க விரும்பாதவள் எடுத்ததும் அவன் தன்னை அழைத்ததற்கான ஊகத்தையும், தாங்கள் போராட்டம் செய்வதன் நோக்கத்தையும் படபடத்த வார்த்தைகளில் கொட்ட ஆரம்பித்தாள்.

“நீங்க எதுக்காக என்னை வரச் சொல்லிருக்கிங்கனு புரியுது மிஸ்டர்… நாங்க புரட்டஸ்டை பாஸ் பண்ணிருக்கோமே தவிர ஸ்டாப் பண்ணல.. அதுக்காக காசு குடுத்து எங்களை விலைக்கு வாங்க டிரை பண்ணுறிங்க… அதானே உங்க ப்ளான்? ஐ அம் ரியலி சாரி மிஸ்டர் ஜெயதேவ்… உங்களோட எந்த ப்ளானும் எங்க கிட்ட வேலை செய்யாது… உங்க ஃபேக்டரியால எங்க ஊரு மக்களுக்கு எவ்ளோ பாதிப்பு தெரியுமா சார்?” என்று ஆரம்பித்தவள் மூச்சுவிடாமல் தான் பார்த்த, தன்னைப் பாதித்தச் சம்பவங்கள் அனைத்தையும் ஆதாரத்துடன் விளக்கிவிட்டு மூச்சு வாங்க அமர்ந்திருக்க, ஜெயதேவ் அவளுக்குத் தண்ணீர் நிரம்பிய கண்ணாடி தம்ளரை நீட்டினான்.

மானசாவுக்கும் அப்போது தண்ணீர் குடித்தால் தேவலை என்பது போன்ற உணர்வு எழ அவனிடமிருந்து தம்ளரை வாங்கி மடமடவென்று அதைக் காலி செய்துவிட்டு மேஜை மீது வைத்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்துவிட்டு அடுத்து என்ன என்பது போல விழிக்க ஜெயதேவ் சாவகாசமாக அவளைப் பார்த்தவன், அடுத்து கேட்ட கேள்வியில் மானசாவின் கண்ணில் லாவா குழம்பு மட்டும் தான் வரவில்லை. அவ்வளவு கோபம்!

“நீங்க சன் ஸ்க்ரீன் போட்டிருக்கிங்களா என்ன?” என்று கேட்டுவிட்டு அவள் முகத்தைக் கூர்ந்து கவனித்தவனின் தலையில் தான் அமர்ந்திருக்கும் நாற்காலியை எடுத்து ஒரு போடு போடலாமா என்று யோசித்தவள் இப்போதைக்கு அந்த திட்டத்தை ஒத்திவைத்தாள்.

இவன் எதாவது உபயோகமாகப் பேசுவான் என்று வீட்டை விட்டுக் கிளம்பும் போது அவள் எண்ணவில்லை தான். ஆனால் இப்படி அபத்தமாகப் பேசுவான் என்றும் எதிர்பார்க்கவில்லை. மொட்டை வெயிலில் வியர்க்க விறுவிறுக்க இவன் அலுவலகத்துக்கு வந்தவளிடம் இவன் அவளது முகத்தில் பூசியிருக்கும் சன் ஸ்க்ரீனைப் பற்றி விசாரித்தால் அவளுக்குக் கோபம் வராமல் என்ன செய்யும்?

அந்தக் கோபத்தை அடக்கும் முயற்சியில் தோல்வியுற்றவளாய் “பங்குனி வெயில்ல வர்றப்போ சன் ஸ்க்ரீன் போடாம வந்தா தான் ஆச்சரியம் சார்… ஆனா என் மூஞ்சியில போட்டிருக்க க்ரீமைப் பத்தி பேச நான் இங்க வரலை” என்றாள் கடுப்புடன்.

ஜெயதேவ் அவளது கடுப்பைக் கண்டுகொண்டவன் அதைப் பொருட்டாக எண்ணாது “ஆனா அந்த சன் ஸ்க்ரீன் தயாரிக்கிறது டைட்டானியம் டை ஆக்சைட் வேணும்… டைட்டானியம் டை ஆக்சைட் வேணும்னா நாங்க எங்களோட மினரல்சை உங்க ஏரியா சேண்ட்ல இருந்து எக்ஸ்ட்ராக்ட் பண்ணித் தான் ஆகணும்… அதால பாதிப்பு வரும்னு நான் ஒத்துக்கிறேன்… ஆனா அதால மட்டும் தான் உங்க ஏரியா பாதிக்கப்பட்டிருக்குனு சொன்னா என்னால அதை நம்ப முடியாது” என்று சொல்லிவிட்டுத் தோளைக் குலுக்கவும் மானசாவுக்குப் பொறுமை பறந்து விட்டது.

“ஏன் சார் உங்க ஃபேக்டரியால எவ்ளோ பாதிப்புனு சொன்னதுக்கு அப்புறமும் இப்பிடி கூலா பதில் சொல்ல உங்களால எப்பிடி முடியுது? இதுக்குத் தான் உங்கப்பா இந்த வி.என் மினரல்சை ஆரம்பிச்சாரா?”

“இல்லவே இல்ல… வருங்காலத்துல நீங்க இப்பிடி என் முன்னாடி வந்து நிக்கிறப்போ சன் ஸ்க்ரீன் போட்டுட்டு வரணும்னு தான் எங்கப்பா ஸ்டார்ட் பண்ணிருப்பாருனு நினைக்கிறேன்”

அவனது இப்பதிலில் நாற்காலியை விட்டு எழுந்தவள் இவன் தன்னை அழைத்தது பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு அல்ல. மாறாக தன்னை கேலிப்பொருளாக்குவதற்காக என்று எண்ணியபடி அங்கிருந்து வெளியேற எத்தவனித்தவாறு நாற்காலியை படீரென நகர்த்திவைத்தாள்.

ஜெயதேவ் தீவிரமான குரலில் “வெல்! ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்.. டெல் மீ ஒன் திங்… இப்பிடி புரட்டஸ்ட் பண்ணுறதால உங்களுக்கு என்ன கிடைக்கப் போகுது?” என்று கேட்க

அவனை முறைத்தவாறே “ஹான்! எனக்கு மீன் ரொம்ப பிடிக்கும் அதான் புரட்டஸ்ட் பண்ணுறேன்” கேலி விரவியக்குரலில் கூறிய மானசாவின் பேச்சு ஜெயதேவுக்குப் புரிபடாமல் போக

“நாங்க புரட்டஸ்ட் பண்ணி கவர்மெண்டோட கவனத்தை எங்க சைட் திருப்புனா கண்டிப்பா உங்க ஃபேக்டரிக்கு மூடுவிழா தான்… அதுக்கு அப்புறமாச்சும் எங்க ஊர் கடல் சுத்தமாகும்… கூடவே மீன் பாடு பார்க்குறவங்களும் நிம்மதியா பயமில்லாம தொழிலை கவனிப்பாங்களே.. எங்களுக்கும் குழம்பு வைக்கிறதுக்கு நல்ல மீன் கிடைக்கும்” என்று சொல்லிவிட்டுத் தானும் கேலி செய்வதில் அவனுக்குச் சளைத்தவள் அல்ல என்று நிரூபித்தவள் இதற்கு மேல் நிற்கப் பொறுமையின்றி விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறினாள்.

வெளியே வந்தவள் ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்துவிட்டாள். ஆனால் இன்னும் ஜெயதேவ்வின் கேலி ஏற்படுத்திய கோபம் அடங்கவில்லை. ஆர்.எஸ்.குழுமம் தங்களின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டது போலன்றி இவன் தன்னைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தானே என்று நம்பி சென்றது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டவள் மாலையில் வீடு திரும்பிய ஜீவானந்தத்திடம் நடந்தவற்றை ஒரு வரி விடாமல் ஒப்பித்தாள்.

“இங்கே இருந்து மத்தியான வெயில்ல ஒன்றரை மணிக்கூறு டிராவல் பண்ணி அவன் ஆபிஸுக்குப் போனா, அந்த நல்லவன் என் மூஞ்சில போட்டிருக்கிற சன் ஸ்க்ரீனை வச்சு என்னை மடக்குறானாம்பா… இந்தக் கார்பரேட்காரனுங்களுக்குச் சாதாரண மக்களோட வலி என்னைக்குமே புரியாதில்லப்பா?” என்றவளின் கேள்வியில் மிச்சமிருந்தது எங்கே தனது போராட்டம் தோற்றுவிடுமோ என்ற பயம் மட்டுமே.

ஜீவானந்தம் மகளை ஆதராவாகத் தட்டிக்கொடுத்தபடி “நம்ம எடுத்து வைக்கிற எல்லா அடியிலயும் ஜெயிச்சிட்டோம்னா நமக்கு மண்டகனம் வந்துடும் மோளே! தோத்தா தான் அனுபவம் கிடைக்கும்… எப்போவுமே வெற்றியைக் கொண்டாடுற மாதிரி தோல்வியையும் ஜீரணிக்க கத்துக்கணும்.. சரியாடா தேவி?” என்று கேட்க மானசா மத்திமமாகத் தலையாட்டி வைத்தாள்.

ஆனால் அவளது கிராமத்தை அந்தக் கரும்பிசாசிடம் இருந்து விடுவிக்க வேண்டுமென்பது அவளது இளம்பிராயக் கனவு அல்லவா! அவ்வளவு எளிதில் இந்த விசயத்தில் தோல்வியை ஏற்றுக்கொள்ள அவளுக்கு மனம் வரவில்லை.

மானசாவின் நிலை இப்படி இருக்க ஜெயதேவ் முரளிதரனை அழைத்து மினரல் ஃபேக்டரியின் விவகாரங்கள் அனைத்தையும் தனக்கு விளக்குமாறு வேண்டிக்கொள்ள அவரும் மணலைக் கடற்கரையிலிருந்து அள்ளுவதில் இருந்து இதுவரைக்கும் அவர்கள் கையிருப்பில் இருக்கும் தாதுமணலின் அளவு வரை புள்ளிவிவரத்தோடு விளக்கினார்.

“ஓகே அங்கிள்! இது வரைக்கும் எப்பிடியோ ஐ டோன்ட் நோ! பட் இனிமே இதுல எந்த முறைகேடும் நடக்கக் கூடாது… டிபார்ட்மெண்ட் ஆஃப் அட்டாமிக் எனர்ஜிக்கு அனுப்ப வேண்டிய ஆன்வல் ரிப்போர்ட் ப்ராப்பரா போய்ச் சேரணும்… அதுக்கு முன்னாடி அது என்னோட பார்வைக்கு வரணும்… அங்க இப்போ ஜி.எம்மா இருக்கிறவரை நான் பார்க்கணும்.. அவரை சென்னைக்கு வரச் சொல்லி கால் பண்ணிடுங்க… அப்புறம் ஜி.எம் போஸ்டுக்கு வேற ஒரு டேலண்டட் பெர்சனை ஹயர் பண்ணுங்க” என்று மூச்சுவிடாமல் கட்டளை இட்டு முடித்தான்.

முரளிதரன் சென்றதும் பெருவிரலால் நெற்றியைக் கீறியபடி யோசித்தவன் மானசா சொன்னபடி தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தால் அது தங்கள் குழுமத்தின் கையைக் கடித்துவிடுமோ என்ற யோசனை.

இந்த விசயத்தில் அவனுடைய ஆசானின் ஆலோசனை அவனுக்குத் தேவைப்பட்டது. அவரது நினைவு தோன்றிய அடுத்த நொடி அவரது எண்ணை மொபைலில் அழுத்தியவன் அவரிடம் தான் பேச விரும்புவதாகக் கூற அவர் நாளை ஞாயிறு என்பதால் தான் வீட்டில் தான் இருப்பேனென்று சொல்லி அவனை வரச் சொல்லிவிடவே போனை வைத்தான்.

தனது தொழில் வாழ்வின் முதல் சவாலான இதை தான் திறமையாக கையாண்டால் தான் விஸ்வநாதனுக்காக தான் போட்டிருக்கும் திட்டத்தில் ஜெயிக்க முடியுமென்ற நம்பிக்கை தனக்கு வரும் என்று எண்ணினான் ஜெயதேவ்.

கூடவே மானசாவின் நினைவும் எழ “இந்தப் பொண்ணுக்கு சட்டு சட்டுனு கோவம் வருது தேவ்… கொஞ்சம் ஓவரா தான் கலாய்ச்சிட்டியோ?” என்றவனுக்கு அவளது விசயத்தில் தான் கொஞ்சம் அதிகப்படியாக ஆர்வம் காட்டுகிறோமோ என்ற கேள்வியும் தோணாமல் இல்லை.

அவன் வாழ்வில் நெருங்கிப் பழகிய பெண் என்றால் அவனது அன்னை மட்டுமே! அவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். பேச்சுத்திறமை அவரது பிறவிக்குணம் என்று கூடச் சொல்லலாம். அவரைத் தவிர்த்து அவன் சந்தித்த பெண்கள் என்றால் அவன் வகுப்பில் அவனுடன் பயின்ற மாணவிகள் மட்டுமே. அவர்களில் பெரும்பாலானோர் வகுப்பறைக்குள் எலி வந்தாலே டைனோசர் வந்துவிட்டதை போல பதறும் தைரியசாலிகள். மீதமுள்ளவர்களோ மிதமிஞ்சிய அழகு ஏற்படுத்திய கர்வத்தால் யாரையும் கண்டுகொள்ளாமல் ஆகாயத்தில் மிதக்கும் அலட்சியவாதிகள்.

மானசாவை இந்த இரண்டு வகையறாவிலும் சேர்க்க முடியாது. அவள் தைரியசாலி என்பதற்கு சான்றே தேவையில்லை. அதே சமயம் அவனது பேச்சுக்கு எதிர்ப்பேச்சு என பதிலடி கொடுத்த போது அவனுக்கு அவன் அன்னை சாந்தினியை நினைவுபடுத்தினாள் அவள்.

இந்த இளம் வயதிலேயே அவளுக்கு இருக்கும் சமூகப்பொறுப்புணர்ச்சியா அல்லது அவளது செய்கையில் அளவாகத் தெரியும் கம்பீரமா எதுவோ ஒன்று அவனை அவள் சொன்ன விசயங்களைக் காது கொடுத்து கேட்க வைத்தது.

அதே சிந்தனையுடன் வீடு திரும்பியவன் தாயிடம் மானசாவைப் பற்றி சிலாகிக்க விஸ்வநாதனும் சங்கரராமனும் அதை நமட்டுச்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சாந்தினி ஒரு படி மேலே சென்றவராய் “இப்போ தான் உனக்கு இருபத்தி நாலு ஆரம்பிச்சிருக்கு தேவ்… நீ இன்னும் எனக்கு குழந்தை தான்… இப்போவே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற எண்ணம் எங்களுக்கு இல்லடா” என்று கேலி செய்ய அதன் பொருளை உணர்ந்தவன் தாயாரைச் செல்லமாக முறைத்தபடி

“மா! அந்தப்பொண்ணு கொஞ்சம் டிஃபரண்டா இருக்கானு சொன்னது ஒரு குத்தமா? உடனே கல்யாணம்னு யோசிக்கிற அளவுக்குப் போயிட்டிங்களே! யூ ஆர் சோ மீன்” என்று கூற

“என்னடா பண்ணுறது தேவ்? உன்னை மாதிரி ஒருத்தனோட அம்மாவா பிறந்துட்டு நல்லவளாவா இருக்க முடியும்டா?” என்று அவன் காலை வாரிவிட்டுத் திருப்திப்பட்டுக் கொண்டார் சாந்தினி.

அவரது பேச்சில் நகைத்தவனின் மனநிலை ஏதோ கடலில் செல்லும் படகில் இருக்கும் பயணியை ஒத்திருந்தது. அலைகள் தாழாட்ட படகு எழும்பி எழும்பி அடங்குவது போல அவனது மனதில் இனம் புரியாத உணர்வொன்று எழும்பி அடங்கியது. அதே உணர்வு மறுநாளும் தொடர்ந்தது.

மறுநாள் முக்கியமான வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிய ஜெயதேவ் நின்ற இடம் ஒரு அப்பார்ட்மெண்டின் மூன்றாவது மாடியிலுள்ள வீட்டின் முன்பு. அழைப்புமணியை அழுத்தியவனை வரவேற்றான் கதவைத் திறந்த ஒரு இளைஞன்.

வெள்ளை வெளேரென்று நெடுநெடு உயரத்துடன் நின்றிருந்தவன் ஜெயதேவைக் கண்டதும் முகம் சுருக்கி “நீங்க?” என்று இழுக்க “ஜீவா சாரை பார்க்கணும்” என்ற ஜெயதேவ்வின் குரலில் குழம்பினான்.

இவனுக்கு சித்தப்பாவிடம் என்ன வேலை என்ற யோசனையுடன் நின்றவன் “யாரு வந்திருக்காங்க ரிஷி?” என்று குரல் கொடுத்த ஜீவானந்தத்திடம் “ஜெயதேவ் வந்திருக்காரு சித்தப்பா” என்று சொல்ல ஜெயதேவ் தன் பெயரைச் சொல்லாமலே இவனுக்கு எப்படி தன்னை தெரியும் என்ற யோசனை.

ஆனால் “அடடே! ஜெய் உள்ளே வாப்பா” என்ற ஜீவானந்தத்தின் உற்சாகக் குரலும் இன்முகமும் அவனை வரவேற்றதில் தற்காலிகமாக அந்த இளைஞனை மறந்தபடி உள்ளே சென்றான் ஜெயதேவ். இந்த உலகில் அவனை ஜெய் என்று அழைப்பது அவர் ஒருவர் மட்டுமே. பெற்றோரிலிருந்து அனைவருக்கும் அவன் தேவ் தான்.

சமையலறையில் இருந்து பாட்டுச்சத்தம் கேட்டுக் கொண்டிருக்க ஜீவானந்தம் “ஊரில இருந்து என் மகனும் மகளும் வந்திருக்காங்க ஜெய்… அவளுக்குப் பாட்டு கேட்டா தான் வேலை செய்ய ஓடும்” என்று கூறியவர் அந்த இளைஞனிடம் “மோனே! வெள்ளம் கொண்டு வா” என்று சொல்லவும் அவ்விளைஞன் குளிர்சாதனப்பெட்டியிலிருந்து பாட்டிலை எடுத்து வந்து நீட்டினான்.

ஜெயதேவ் தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் போதே “அப்பா இன்னைக்கு எரிசேரி செஞ்சு அப்பளம் பொரிச்சிடவா?” என்றபடி ஹாலுக்கு வந்த மானசா அவனைக் கண்டு அதிர்ந்து நின்றாள்.

ஜெயதேவ்வுக்கும் அவளைக் கண்டு அதிர்ச்சியே!

மானசா சுதாரித்தவள் பொங்கிய சினத்துடன் “ஹலோ! எங்க வீட்டுல என்ன மேன் பண்ணுற நீ? முதல்ல எழுந்திரி” என்று மிரட்ட ஜெயதேவ் நீ என்ன மிரட்டுவது நான் என்ன கேட்பது என்ற ரீதியில் புருவத்தை ஏற்றி இறக்கி அவளது கோபத்தை அதிகரிக்கச் செய்து திருப்திப்பட்டுக் கொண்டான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருக்க ஜீவானந்தம் அவர்களுக்குள் முன்னமே அறிமுகம் நிகழ்ந்திருக்கிறதா என்று புரியாது விழித்தார்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛