🌞 மதி 46🌛

தாது மணல் இயற்கையிலேயே கதிரியக்கத்தன்மை கொண்டது. அதை முறையின்றி தோண்டி எடுக்கும் போது கதிரியக்கம் இன்னும் அதிகரிக்கும். மேலும் தாது மணல் பிரிப்பாலைகளில் இருந்து வெளியேறும் தூசு நுரையீரல் நோய்களையும், கதிரியக்கம் புற்றுநோயையும் ஏற்படுத்தும்.

சேகர் வில்லா…

ருத்ரா அன்று இரவு தாமதமாகத் தான் வீடு திரும்பினான். ஏனெனில் சீக்கிரமாக வீட்டுக்கு வந்தால் இஷானியை எதிர்கொள்ளும் சங்கடத்தை தவிர்க்க அவனால் முடிந்த முயற்சி அது தான். ஆனால் அவனது முயற்சியை முறியடிக்கும் விதமாக சத்தமின்றி வீட்டினுள் நுழைந்து அரவமின்றி இரவுணவை முடித்தவன் அறைக்குள் நுழைந்த போது பகல் போல விளக்கெரிந்து கொண்டிருந்தது.

அறையின் வலதுபக்க மூலையில் கிடந்த மேஜை மீது அவனது சிறுவயது ஆல்பம் கிடந்தது. இஷானியின் முகம் இன்னும் குழப்பத்துடன் இருப்பதைக் கவனித்தபடி உடை மாற்றும் அறைக்குள் சென்று டிசர்ட்டுடன் திரும்பியவன் “இன்னும் தூங்கலையா இஷி?” என்று மெதுவாக கேட்க இஷானி அவனை வெட்டுவது போல பார்த்துவிட்டு

“என் மனசுக்கு நிம்மதி இல்லைனா என்னால தூங்கமுடியாது மாமா” என்றாள் வெடுக்கென்று.

ருத்ரா வந்த உடனே வாக்குவாதமா என்று பெருமூச்சுவிட்டவன் “உன் மனசு நிம்மதி இல்லாம போற அளவுக்கு இப்போ என்ன நடந்து போச்சு?” என்று நிதானமாக கேட்க

“உங்களுக்கு எதுவுமே தெரியாதா மாமா? அந்த ஜெயதேவ் கல்யாணமானவன்னு தெரிஞ்சு ஏன் அவனுக்கும் அஸ்மிக்கும் கல்யாணம் நடக்க விட்டிங்க? நீங்க நினைச்சிருந்தா அதை தடுத்திருக்கலாம்” என்று குற்றம் சாட்டினாள் இஷானி.

ருத்ரா மொபைல் போனை நோண்டியபடியே “ஏன் தடுக்கணும்? அவன் பொண்டாட்டி இறந்து நாலு வருசம் ஆகுது… இன்னைக்கு வரைக்கும் அவன் வேற எந்தப் பொண்ணையும் திரும்பிப் பார்க்கல” என்று சொல்லவும் இஷானியால் அவனைப் போல சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலவில்லை.

“வாட்? செத்துப் போன பொண்டாட்டியோட கனவுக்காகத் தான் ஷேரை எழுதி வாங்கினேனு அந்தாளு சொல்லுறான்… அப்போ எவ்ளோ டீப்பா அவன் ஃபர்ஸ்ட் ஒய்பை காதலிச்சிருப்பான் அவன்? அப்போ எதுக்கு என் அஸ்மியை அவன் கல்யாணம் பண்ணுனான்?” என்று பொங்கியெழ

ருத்ரா கடுப்புடன் போனை படுக்கையின் மீது வீசியவன் “அப்போ காலம் முழுக்க அவன் சாமியாரா இருக்கணுமா? ஏன் பத்தாம்பசலித்தனமா பேசுற இஷி? நல்லா கேட்டுக்கோ தேவ்வோட ஃபர்ஸ்ட் ஒய்ப் மானசா மேல அவனுக்கு இருந்தது ஒரு பிரமிப்பு கலந்த காதல்… அதுல காதலை விட பிரமிப்போட சதவிகிதம் அதிகம்னு தேவ் என் கிட்ட அடிக்கடி சொல்லுவான்… டூ யூ அண்டர்ஸ்டாண்ட்?” என்று புருவம் உயர்த்தி வினவ

“ஃபர்ஸ்ட் ஒய்ப் மேல அவ்ளோ லவ் இருந்தா தேவ் ஏன் செகண்ட் மேரேஜ் பண்ணிக்கணும்? ஷேருக்காக அஸ்மியை கல்யாணம் பண்ணிக்கலனா அப்போ அவரு அஸ்மியை லவ் பண்ணுறாரா? எப்பிடி ஒரு மனுசனால ரெண்டு பொண்ணுங்களை காதலிக்க முடியும்?” என்று கேட்டவளுக்குத் தெரிய வேண்டிய விசயத்தை கடைசி கேள்வியில் கேட்டுவிட்டாள்.

ருத்ரா அழுத்தமாக அவளைப் பார்த்தவன் “லிசன்! ஒரே நேரத்துல ஒரு மனுசனால ரெண்டு பொண்ணுங்களை காதலிக்க முடியாது தான்… ஆனா காதலிச்சப்பொண்ணு இல்லைனு ஆனதுக்கு அப்புறமும் அவன் வாழ்க்கையை வாழாம இருக்கணுமா? அப்பிடி இருந்தா தான் உங்க டிக்ஸ்னரில அவன் நல்ல மனுசனா? இது நிதர்சனத்துக்கு ஒத்து வருமா இஷி?

நல்லா கேட்டுக்கோ! மானசா மேல தேவ்வுக்கு வந்தது அவங்களோட போராடுற குணத்தால வந்த பிரமிப்போட கலந்த காதல்… அதோட மானசாவை அவன் கல்யாணம் பண்ணுனது தேவ், மானசா, ரிஷி., மானசாவோட அப்பா இந்த நாலு பேருக்கு மட்டும் தான் தெரியும்… அவங்களோட இறப்புக்குக் காரணமானவங்களைப் பழிவாங்க தேவ் செஞ்ச முயற்சியில தான் அவன் அஸ்மியை மீட் பண்ணுனான்… உனக்கு ஒரு விசயம் தெரியுமா? நாலு வருசமா வேற எந்தப் பொண்ணையும் கல்யாணம் பண்ணிக்க நினைக்காதவன் அஸ்மியை மட்டும் தான் கல்யாணம் பண்ணிக்க தயாரானான்…

அஸ்மி மேல அவனுக்கு இருக்கிற ஃபீலிங்குக்கு என்ன பேருனு எனக்குத் தெரியல… ஆனா அவளோட அவன் பழகுன தருணம் எல்லாமே உண்மைனு மட்டும் சொன்னான்… சொன்னப்போ தேவ் கண்ணுல பொய் இல்ல இஷி… அவளைப் பார்த்ததுக்கு அப்புறமா வாழ்க்கையை வாழணும்னு ஒரு பிடிப்பு வந்ததா சொன்னான்… ஒரு பொண்ணோட மனசு பொண்ணுக்குத் தான் தெரியும்னு நீங்கலாம் டயலாக் பேசுவிங்களே… அதே மாதிரி தான் அவனோட மனசுல அஸ்மி மேல இருக்கிற ஃபீலிங்கை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சுது… அதான் நான் சப்போர்ட் பண்ணுனேன்… இனியும் பண்ணுவேன்…” என்று தீர்மானமாக உரைத்தவனை இஷானியால் நம்பாமல் இருக்க முடியவில்லை

“அப்போ தேவ் அஸ்மியை லவ் பண்ணுறாரா?” என்று கண்ணை விரித்துக் கேட்டவளை உறுதியாகப் பார்வையிட்டபடியே

“அதை தேவ் கிட்ட கேட்டுக்கோ.. இப்போ எனக்கு தூக்கம் வருது…” என்றபடி படுக்கப் போனவனை தூங்க விடாமல் அவனது தலையணையை இஷானி படக்கென்று எடுத்துக்கொள்ள ருத்ரா அவளை முறைக்க ஆரம்பித்தான்.

அவளோ “நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாம நீங்க எப்பிடி தூங்க போகலாம்?”  என்று பதிலுக்கு முறைத்தாள்.

“தேவ்வுக்கு அஸ்மி மேல ஏதோ ஒரு ஃபீலிங் இருக்கு… அவனுக்குக் கொஞ்சம் டைம் குடுத்தா அவனே இதை அஸ்மி கிட்ட சொல்லிடுவான்.. அதை விட்டுட்டு இவ்ளோ சொல்லியும் சும்மா லவ் பண்ணுறானா, லவ் பண்ணுறானானு கேட்டா மனுசனுக்கு காண்டாகாதா இஷி?”  என்றவன் அவள் கையிலிருந்த தலையணையைப் பிடுங்கியவன் அதில் தலைவைத்துக் கண்ணை மூடிக்கொண்டான். அதாவது அவன் தூங்க தயாராகிவிட்டானாம்.

இதற்கு மேல் அவனை முறைப்பது வீணென உணர்ந்த இஷானி விளக்கை அணைத்துவிட்டுத் தானும் ஒரு புறம் படுத்துக்கொண்டவள் நேற்றைய தினம் போலன்றி இன்று சற்று நிம்மதியுடன் உறங்கத் தொடங்கினாள்.

*************

சோபாவில் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்த ஜெயதேவ்வின் தோற்றம் ரிஷிக்குப் பரிதாபமாக இருந்தது. அவனது தலையெழுத்தில் அமைதியான குடும்பவாழ்க்கை என்பது எழுதப்படவில்லையோ என்று மனதளவில் வருந்தியவன் தேவ்வின் தோளை ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தான்.

“ஏன் சார் வீணா டென்சன் ஆகிறிங்க? அவங்க சின்னப்பொண்ணு… நம்ம சொன்னாலும் விவரம் புரியாது… அவங்களே உங்களைப் புரிஞ்சிப்பாங்க”

தேவ் ரிஷியின் குரலில் நிமிர்ந்தவன் “ஒருவேளை நான் தான் தப்பானவனா ரிஷி? ஃபர்ஸ்ட் ஒய்பை காதலிக்கிறேனு சொல்லிட்டு இன்னைக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணிட்டு நிக்கிறேனே! நான் தப்பு பண்ணிட்டேனா ரிஷி?” என்று தவிப்பாய் கேட்க

“என்ன சார் பேசுறிங்க? அவன் அவன் பொண்டாட்டி செத்ததும் புதுமாப்பிள்ளை ஆகுறானுங்க.. நீங்க நாலு வருசம் மானசாவ தவிர வேற யாரையாச்சும் நினைச்சுப் பார்த்திருப்பிங்களா? உங்களுக்கு அஸ்மிதா மேல உண்டான ஃபீலிங்கை நீங்க என் கிட்ட சொன்னப்போ கூட அது என்னனு இப்போ வரைக்கும் புரியல ரிஷினு தானே சொன்னிங்க…” என்றான் அவனை சமாதானம் செய்யும் நோக்கத்துடன்.

“இப்போவும் எனக்குப் புரியல ரிஷி.. அவ காதலை சொன்னப்போ, எனக்காகப் படிச்சுக் கூடப் பார்க்காம கையெழுத்து போட்டப்போ, என் கூடவே எப்போவும் இருப்பேனு என்னை ஹக் பண்ணுனப்போ எனக்குள்ள உண்டான உணர்வுகளுக்கு என்ன பேருனு இப்போ வரைக்கும் எனக்குப் புரியல… இப்பிடிலாம் யோசிச்சு நான் மனுவுக்கு துரோகம் பண்ணுறேனா ரிஷி?” என்று கலக்கத்துடன் கேட்டான் ஜெயதேவ்.

இது ஒன்றும் முதல் முறை இல்லையே. துளி நிறுவனத்தில் ஜெய் என்ற பெயரில் அஸ்மிதாவை முதல் முறை கண்ட தினத்திலிருந்து, அவளது காதலை உரைத்தபோதிலிருந்து அவன் இதே கேள்வியைத் தான் ரிஷியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறான். ரிஷி என்ன தான் சமாதானம் சொன்னாலும் அஸ்மிதாவிடம் இருந்து விலகியே இருந்தவன் தனக்காக அவள் யோசிக்காமல் கையெழுத்திட்ட கணத்தில், இதயத்தில் அஸ்மிதாவின் மீதான உணர்வுகள் சற்று அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்துவதை உணர்ந்தான்.

ரிஷி அதையெல்லாம் நன்கு அறிந்திருந்ததால் “தேவிய நீங்க மேரேஜ் பண்ணுனது நீங்க சொல்லலைனா யாருக்குமே தெரிஞ்சிருக்காது… இன்னொரு விசயம் என்னன்னா ரெண்டாவது கல்யாணம் பண்ணுன ஆண்கள் எல்லாருமே முதல் மனைவிக்குத் துரோகம் பண்ணுறவங்கனு அர்த்தம் இல்ல… நீங்க நாலு வருசம் மானசாவ மட்டும் தானே மனசுல நினைச்சிருந்திங்க… துரோகம் பண்ணுறவரு நாலு வருசம் காத்திருந்து ஏன் துரோகம் பண்ணனும்?

உங்களுக்கு இப்போவாச்சும் வாழ்க்கையோட்டத்துல கலக்கணும்னு தோணுச்சேனு நான் சந்தோசப்படுறேன் சார்… அதுக்கு காரணம் அஸ்மிதா தான்… அவங்களை நீங்க உங்களோட மனைவியா முழு மனசோட ஏத்துக்கோங்க… உங்க மன நிலையை அவங்களுக்குப் புரியவைங்க… அதுக்கு முன்னாடி அவங்களுக்கும் கொஞ்சம் யோசிக்க டைம் குடுங்க” என்று சொல்லவும் தேவ் தலையாட்டி வைத்தான்.

ரிஷி அவனது முகத்தை ஒரு கணம் நோக்கியவன் “எங்கம்மா சின்ன வயசுல சொல்லுவாங்க சார், நம்ம பிறக்கிறப்போவே நம்ம வாழ்க்கைத்துணையோட பேரை கடவுள் நம்ம தலையெழுத்துல எழுதிடுவாராம்… உங்க தலையெழுத்துல தேவியோட நேம் இல்ல… அஸ்மிதாவோட நேம் தான் அழுத்தமா எழுதப்பட்டிருக்கு சார்… தேவியோட கனவை நிறைவேத்திட்டு அஸ்மிதாவோட ஒரு அழகான வாழ்க்கையை நீங்க ஆரம்பிக்கணும்.. இது தேவியோட அண்ணனா என்னோட ஆசை” என்று தன் மன எண்ணத்தை வெளிப்படுத்திவிட்டு தேவ் எப்படி உணர்கிறான் என்பதை அவன் முகத்திலிருந்தே படிக்கத் தொடங்கினான்.

ரிஷியின் பேச்சைக் கேட்ட ஜெயதேவ்வின் முகத்தில் சிந்தனை ரேகைகள் படரவும் இனி அவன் யோசிக்கட்டும் என்று ரிஷி அவனைத் தொந்தரவு செய்யவில்லை. ஜெயதேவ் அவனிடம் இன்னும் சிறிதுநேரம் பேசிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான்.

அவன் வீட்டுக்குத் திரும்பிய போது நேரம் நள்ளிரவைக் கடந்திருந்தது. சத்தமின்றி கதவைத் திறந்துவிட்டு மாடிப்படியேறியவன் தங்களின் அறையைக் கடக்கும் போது சற்று நிதானித்தான். கதவில் கைவைத்தவன் அது உட்புறமாகப் பூட்டியிருக்கவும் அஸ்மிதா தூங்கிவிட்டாள் போக என்ற யோசனையுடன் தனது அலுவலக அறையை நோக்கிச் சென்றான்.

உள்ளே சென்றவனுக்கு தனது மனபாரத்தை இறக்கிவைத்த நிம்மதியுடன் இத்தனை நாட்கள் மனதைப் பாடாய்ப்படுத்திய விசயங்களை ரிஷியிடம் பகிர்ந்ததால் உண்டான தெளிவும் சேர்ந்துகொள்ள நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஜெயதேவ்வுக்கு நிம்மதியான ஆழ்ந்த நித்திரை வாய்த்தது.

மறுநாள் விடியல் குழப்பமற்று தெளிவான மனநிலையுடன் எழுந்தவன் தனக்கு எதிர்புறச்சுவரில் சிரித்த மானசாவிடம் “குட் மார்னிங் மனு! இன்னும் பத்தே நாள் தான்…. அதுக்கு அப்புறம் உன்னோட கனவை படிப்படியா நிறைவேத்திக் காட்டுறதை யாராலயும் தடுக்க முடியாது… உன்னையும் சாரையும் இந்த உலகத்தை விட்டு அனுப்புனவனுக்கு நான் சரியான தண்டனையா வாங்கிக் குடுப்பேன் மனு” என்று சொல்லிவிட்டு எழுந்தவனுக்கு நேரம் ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தது. அன்று ஞாயிறு என்பதால் பெரிதாய் எந்த வேலையும் இல்லை தான். ஆனால் அவனது கவனம் இப்போது ஆர்.எஸ்.கெமிக்கல் நிறுமத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தின் மீதே இருந்தது.

அதைப் பற்றி யோசித்தபடியே கீழே சென்றவனுக்கு அங்கே தாத்தாவுடன் உரையாடியபடி இருந்த அஸ்மிதாவைக் கண்டதும் மீண்டும் அலுவலக அறைக்கே திரும்பிவிடலாமா என்ற எண்ணம். ஆனால் அதற்குள் சங்கரராமன் அவனைப் பார்த்துவிடவே வேறு வழியின்றி அவர்களின் உரையாடலில் அவனும் கலந்துகொண்டான்.

தாத்தாவுக்கும் பேரனுக்குமான வழக்கமான உரையாடல்களே. ஆனால் இம்முறை அஸ்மிதாவையும் அவர் உள்ளே இழுத்துவைக்க இருவரும் அவருக்காகவேனும் ஒருவரை ஒருவர் முறைக்காமல் சாதாரணமாகப் பேசத் தொடங்கினர்.

விஸ்வநாதனும் சாந்தினியும் இதைக் கண்டும் காணாமல் நடந்துகொண்டனர். தெரிந்ததாக காட்டிக் கொண்டால் இளையவர்கள் மீண்டும் திக்குக்கு ஒன்றாகச் சென்றுவிடுவர் என்ற அச்சம் தான் அதற்கு காரணம்.

அஸ்மிதாவின் முகத்தில் நேற்றைய இரவு நடந்த பிரச்சனையின் கலக்கம் சிறிது மிச்சமிருக்க ஜெயதேவ்வோ இன்னும் பத்து நாட்களில் நடக்கப்போகிற ஆண்டுப்பொதுக்கூட்டம் பற்றி தாத்தாவிடம் விவாதித்துக் கொண்டிருந்தான்.

இதை தூரத்திலிருந்து கணவருடன் சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்த சாந்தினி விஸ்வநாதனிடம் “ஏன் உங்க பையன் இப்பிடி இருக்கிறான்? மாமா அவனும் அஸ்மியும் கொஞ்சமாச்சும் பழகட்டும்னு தான் சின்ன வயசு பேச்சை நினைவு படுத்துனாரு…. இப்போவும் இவனுக்கு ஏ.ஜி.எம் பேச்சு தானா? உங்க பையன் தானே… உங்களை மாதிரி தானே இருப்பான்” என்று நொடித்துக் கொள்ள விஸ்வநாதன்

“ச்சே! ச்சே! தப்பே செஞ்சாலும் அதை ஒத்துக்கவோ அதுக்காக மன்னிப்பு கேக்கவோ சின்னதா கூட முயற்சி பண்ணாதப்போவே தெரியலையா, அவன் உன்னோட ஜெராக்ஸ் காப்பினு” என்று சொல்லி மனைவியின் காலை வாரிவிட்டுத் திருப்திப்பட்டுக் கொண்டார். அதன் பலனாய் சாந்தினியின் முறைப்பையும் வாங்கிக் கட்டிக்கொண்டார்.

அதே நேரம் அவர்களின் இந்தச் செல்லச்சண்டைக்குக் காரணாமானவன் மனைவி அருகில் இருந்து தனது பேச்சைக் கவனிக்கிறாள் என்ற உணர்வின்றி தாத்தாவிடம் தனது எதிர்காலத் திட்டங்களை விளக்கிக் கொண்டிருந்தான்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛