🌞 மதி 45🌛

மோனசைட்டில் தோரியம் உள்ளதால் அதை எப்படி கையாண்டனர் என்பது குறித்து தாதுமணல் நிறுவனங்கள் இந்திய அணுசக்தி துறைக்கு ஆண்டறிக்கை அனுப்ப வேண்டும். அதோடு இம்மணலை ஏற்றுமதி செய்யும் முன்னர் அணுசக்தித் துறையின் கனிமப்பிரிவுக்கு மாதிரிகளை அனுப்பி அந்த மணலில் மோனசைட் இல்லை என்று சான்றிதழ் பெற வேண்டும்.

இஷானி அரைகுறை மனதுடன் தான் ருத்ராவுடன் சேகர் வில்லாவுக்குள் காலடி எடுத்து வைத்திருந்தாள். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக அவள் ருத்ரா மற்றும் மந்தாகினியிடம் எதுவும் பேசாது அமைதியாய் இருந்தாள். ருத்ரா அவளை அவர்களின் அறையில் கொண்டு விட்டவன் அலுவலகத்துக்குச் செல்வதாகக் கூறிவிட்டுக் கிளம்பினான். அவன் சென்ற பின்னும் தனிமையில் அந்த அறைக்குள்ளேயே உலாத்தியவளுக்குத் தலைபாரமாக இருந்தது.

ருத்ராவின் அறை மாடியில் இருந்ததால் கீழே இறங்கியவளின் பார்வையில் வீட்டில் வேலை செய்யும் பணியாட்கள் மட்டுமே தென்பட்டனர். மற்றபடி சேகர் வில்லாவின் மனிதர்கள் அனைவரும் அவரவர் வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டனர். தலையைப் பிடித்தபடி சோபாவில் அமர்ந்தவளின் செவியில் “காபி கொண்டு வரட்டுமாம்மா?” என்ற சமையல்காரரின் கேள்வி விழவும் நிமிர்ந்தவள் வேண்டாமென்று மறுப்பாய் தலையசைத்தாள்.

ஆனால் சில நிமிடங்களில் அவர் காபியுடன் திரும்பவும் மறுப்பின்றி வாங்கி அருந்த ஆரம்பித்தாள். இரு பொட்டுகளிலும் தெறித்த வலி சற்று மட்டுப்பட்டு மூளை அமைதியானது போல ஒரு பிரம்மை.

அமைதியான தெளிந்த மனதுடன் மாடிப்படியேறியவள் அவளது அறைக்குள் புகுந்து கொண்டாள். இவ்வளவு நேரம் இருந்த அலைக்கழிப்பு மனநிலை மாறியவளாய் அறையைக் கவனிக்க ஆரம்பித்தாள். மேஜிக் மிண்ட் வண்ண நிறப்பூச்சுடன் சுவர்களில் பீச் வண்ண மலர்கள் அழகாய் வரையப்பட்டிருந்தது.

“எனக்கு பாஸ்டல் கலர்ஸ் ரொம்ப பிடிக்கும் மாமா” என்று எப்போதோ ருத்ராவிடம் சொன்ன நினைவு எழ மீண்டும் ஒரு முறை அறையிலுள்ள மற்றப் பொருட்களை உற்றுநோக்கினாள். சுவரின் வண்ணப்பூச்சிலிருந்து திரைச்சீலை வரை எல்லாமே அவளுக்குப் பிடித்த வெளிறிய பாஸ்டல் வண்ணங்களுடன் லாவண்டர் நறுமணம் வீசும் ரூம் ஸ்ப்ரே ஆக்கிரமித்திருந்த அந்த அறையின் ஒவ்வொரு அணுவிலும் இஷானியின் மீதான ருத்ராவின் காதல் வெளிப்பட்டது.

தனக்காக இவ்வளவு தூரம் யோசித்தவன், தன்னை அளவுக்கதிமாக காதலிப்பவன் அஸ்மிதாவின் காதல் கொண்ட மனதைப் பற்றி ஏன் யோசிக்கவில்லை என்ற ஆதங்கம் அவளுள் எழுந்தது. கூடவே “அஸ்மி மனசொடஞ்சு போயிடுவாளேனு தான் நான் இந்தக் கல்யாணவிசயத்துல தலையிடல” என்றவனின் வார்த்தையும் நினைவில் தோன்றியது.

சுவரில் ருத்ராவும் அர்ஜூனும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தினருகே சென்றவள் சிறிது நேரம் அந்தப் புகைப்படத்திலிருந்த ருத்ராவின் உருவத்தை விரலால் வருட விழிகள் அவளை அறியாது பனிக்கத் தொடங்கியது.

இந்நிலை மதியம் ருத்ரா வீட்டுக்கு வரும் வரை நீடித்தது. இஷானி தனியாக இருப்பாளே என்ற யோசனையுடன் தான் அவன் இன்றைக்கு வீட்டுக்கு மதியம் வந்திருந்தான். வந்தவனிடம் பணியாட்கள் இஷானி இன்னும் மதியவுணவுக்குக் கீழே வரவில்லை என்பதைத் தெரிவிக்க அவன் தாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று அவர்களை அனுப்பி வைத்துவிட்டு அவர்களின் அறையை நோக்கிச் சென்றவனின் பார்வையில் பட்டாள் அவர்கள் அறையின் வெளியே கிடந்த சோபாவில் அமர்ந்திருந்த இஷானி.

அவளருகே சென்றவன் சாப்பிட வருமாறு அழைக்க இஷானி எதுவுமே பேசாமல் எழுந்தவள் கடமைக்கு அவனுடன் சேர்ந்து மதியவுணவை உள்ளே தள்ளினாள். அவள் இன்னும் முழு மனதுடன் தனது செய்கைகளைப் புரிந்துகொள்ளவில்லை என்பதை ருத்ராவும் அறிந்திருந்ததால் அவளிடம் தேவையின்றி பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளவில்லை. இப்போது அவர்கள் இருவருக்கும் தேவை மௌனம் மட்டுமே. பேசினால் பிரச்சனை வரும் என்று தெளிவாகத் தெரியும் தருணங்களில் வாய்க்குப் போடப்படும் பூட்டு நிறையமுறை உறவுகளை உடையாமல் பாதுகாத்துவிடும்.

இப்போது ருத்ரா இஷானியின் நிலையும் இது தான். அஸ்மிதாவின் பிரச்சனையில் ஒத்தக்கருத்தினராய் மாறும் வரையில் அமைதி காப்பதே சாலச் சிறந்தது என்பதை புரிந்துகொண்டனர் சதிபதி இருவரும். மதியவுணவுக்குப் பின்னர் ருத்ரா கிளம்பிவிட மீண்டும் தனிமைச்சிறையில் இஷானியின் பொழுது கழியத்துவங்கியது. நேரம் போகாததால் சூட்கேசில் உள்ள தனது உடைகளை வார்ட்ரோபில் அடுக்க ஆரம்பித்தாள். அப்போது இஷானியின் கையில் கிடைத்தது புகைப்படங்கள் அடங்கிய ஒரு சிறிய ஆல்பம்.

அதைப் பார்க்கும் ஆர்வத்தில் எடுத்தவள் உடைகளை அடுக்கி வைத்துவிட்டு அதிலிருந்த புகைப்படங்களைப் பார்வையிட தொடங்கினாள். அந்த ஆல்பத்தை சிறுவயது ருத்ராவும் அஸ்மிதாவுமே ஆக்கிரமித்திருந்தனர். சில இடங்களில் மந்தாகினியும் கொசுறாக அவர்களுடன் இணைந்திருந்தார். இன்னும் சிலவற்றில் சந்திரசேகரும் சஞ்சீவினியும் அஸ்மிதாவுடன் நிற்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதைக் காணும் போது எவ்வளவு அழகான தம்பதிகள் என்ற எண்ணம் இஷானிக்குள் எழுவதை அவளால் தடுக்க இயலவில்லை.

பழைய விசயங்களை யோசித்து என்ன ஆகப்போகிறது என்று எண்ணி பெருமூச்சுவிட்டபடி ஒவ்வொரு பக்கமாகப் புரட்டியவளுக்கு ஆல்பம் முடியும் போது ஒரு எண்ணம் மட்டும் உறுதியானது. அஸ்மிதாவின் மீது ருத்ராவின் அன்பு ஆழமானது என்பது தான் அது. அத்தகையவன் கண்டிப்பாகக் காரணமின்றி ஜெயதேவ்வுடன் அஸ்மிதாவின் வாழ்க்கை பிணைக்கப்படுவதை வேடிக்கை பார்த்திருக்க மாட்டான் என்பது மட்டும் அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது.

கூடவே அஸ்மிதாவே ருத்ராவின் மீது அவளுக்கு இருப்பது வருத்தம் தானே தவிர வெறுப்பு அல்ல என்று சொல்லிவிட்டாள். இவ்வளவுக்குப் பின்னர் அவனிடம் எரிந்துவிழ, முகம் சுருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதில் தெளிவானாள் இஷானி. அஸ்மிதா கூடவே மந்தாகினியிடம் கொஞ்சம் தண்மையாக நடந்து கொள்ளுமாறு கூறியதையும் மனதில் ஒரு ஓரத்தில் போட்டுவைத்தாள்.

“அவங்க செஞ்சது தப்பு தான்… அதுக்கு நானோ அம்மாவோ என்னைக்குமே அந்த லேடியை மன்னிக்க மாட்டோம்.. ஆனா அவங்க செஞ்ச துரோகத்துக்குத் தண்டனையா சந்திரசேகரோட மனைவினு பெருமையா சொல்லிக்கிட்டாலும் அவங்களுக்கு மிஸ்டர் சந்திரசேகரோட மனசுல இன்னும் முழுசா இடம் கிடைக்கல.. இந்த தண்டனை போதும்… நம்ம ஏதும் பேசி அவங்க மனசைக் கஷ்டப்படுத்த வேண்டாம் இஷி”

முன்பு எப்படியோ அஸ்மிதாவின் திருமணம் ஏற்படுத்திய அதிர்வில் இருந்த இஷானிக்கு சகோதரியின் நிலை புரிந்திருந்ததால் மந்தாகினியிடம் இனி கொஞ்சம் பொறுமையுடன் நடந்துகொள்வதாக அஸ்மிதாவிடம் வாக்களித்தாள் இஷானி. சொன்னபடியே அவளை ருத்ரா சென்ற பிறகு அறையில் வந்தவரிடம் உருகி வழிந்து அன்பைப் பொழியவில்லை என்றாலும் அவர் சொன்னதற்கு பொறுமையுடன் தலையாட்டி வைத்தாள்.

அதே நேரம் அஸ்மிதா சாந்தினி மற்றும் சங்கரராமனிடம் பேசி தன் மனக்குழப்பத்தைப் போக்க முயன்று கொண்டிருந்தாள். அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டவனைப் போல அவர்கள் ஒன்றும் அவளுக்கு முற்றிலும் புதியவர்கள் இல்லையே. இளம்வயதில் அவர்களிடம் பேசியது எல்லாம் நன்றாகவே நினைவிருந்தது. அப்போதெல்லாம் தேவ்வுடன் பழகும் சந்தர்ப்பமோ அவனைப் பார்க்கும் சந்தர்ப்பமோ அவளுக்கு வாய்த்ததில்லை.

ஏனெனில் சாந்தினிக்கு முன்பெல்லாம் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படும். பெண்கள் இல்லா வீட்டில் யார் அவரைப் பார்த்துக்கொள்ள முடியுமென எண்ணி சங்கரராமன் மருமகளின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு சாந்தினியை அவரது பிறந்தவீட்டில் தங்கிக் கொள்ளுமாறு கூறியிருந்ததால் தேவ்வும் தாயாருடனே சென்றுவிட்டான்.

பின்னர் பள்ளிப்படிப்பை உறைவிடப்பள்ளியில் முடித்தச் சமயத்தில் அவனால் அடிக்கடி வீட்டுக்கு வர முடியாது போய்விட்டது. கல்லூரி படிக்கும் போது தான் பெற்றோர் மற்றும் தாத்தாவுடன் நேரம் செலவளிக்கும் பாக்கியம் அவனுக்கு வாய்த்தது.

அதனால் தான் அஸ்மிதாவின் குடும்பத்தினருக்கு அவனது முகம் பரிச்சயமாகியிருந்தாலும் சட்டென்று நினைவில் வரவில்லை. கூடவே சந்திரசேகருக்கும் விஸ்வநாதனுக்குமான பிரச்சனை  அதைத் தொடர்ந்து சஞ்சீவினி மற்றும் சந்திரசேகரின் பிரிவுக்குப் பின்னர் சஞ்சீவினி விஸ்வநாதன் குடும்பத்தைச் சந்திப்பதை தவிர்த்தார் எனலாம்.

எப்படியாவது ஆர்.எஸ்.குழுமத்தில் இழந்த பங்குகளை மீட்டுத் தருவதாக விஸ்வநாதனுக்கு அளித்த வாக்கை அவரால் காப்பாற்ற முடியாத குற்றவுணர்ச்சி அவருக்கு,. இது எல்லாவுமாய் சேர்ந்து ஏற்படுத்திய பிரிவில் கால ஓட்டத்தில் இரு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் மறந்திருந்த வேளையில் இந்தத் திருமணம் மீண்டும் அவர்களை இணைத்துவிட்டது என்று சங்கரராமன் சொன்னதை உம் கொட்டியபடி கேட்டுக் கொண்டிருந்தாள் அஸ்மிதா.

கூடவே அவரது பேரனின் பிரதாபங்கள் அளக்கப்படவும் அஸ்மிதாவுக்குள் சுருசுருவென்று எரிச்சல் மூண்டது.

“அவன் ஒரு வேஸ்ட்ஃபெல்லோ… முதல் மனைவியை பிசினஸ் ரைவல் கிட்ட இருந்து காப்பாத்த துப்பு இல்ல… இதுல அவன் என்னை பாதுகாப்பா கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துப்பானாம்… அந்த மகாநடிகனுக்கு இவரு சப்போர்ட்”

அவளால் மனதுக்குள் பொறும மட்டும் தான் முடிந்தது. இன்னுமே ஜெயதேவ்வின் மனைவி எதனால் இறந்தாள் என்பது அவளுக்குத் தெரியவில்லை. தெரியவில்லை என்பதை விட யாரும் அவளுக்குச் சொல்லவில்லை என்பதே உண்மை. வந்து ஒருநாளில் ஜெயதேவ்வின் வாழ்க்கை அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவசரப்படுவது பேராசை என எண்ணியவள் யாரையும் அதைக் கூறுமாறு கேட்க இயலாத நிலையில் உழன்றாள்.

இத்தனைக்கும் இன்றைக்கு காலையில் அவன் மானசாவின் புகைப்படத்திடம் பேசிய வார்த்தைகளை ஒன்றுவிடாமல் கேட்டுவிட்டாள் தான். ஆனாலும் இன்னுமே ஜெயதேவ்வின் வாழ்க்கையில் தனக்கு இரண்டாமிடம் தான் என்பதை ஒரு பெண்ணாக அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

என்ன தான் அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க சாந்தினி, விஸ்வநாதன் மற்றும் சங்கரராமன் என மூவரும் முயன்றாலும் தேவ்வின் செய்கை அவளை அமைதியாக இருக்கவிடவில்லை.

இரவில் வீடு திரும்பிய ஜெயதேவ்வை கண்டுகொள்ளாமல் இருந்தவள் இரவுணவுக்குப் பின்னரும் அவன் அவர்கள் அறையிலேயே இருக்கவும் கடுப்பாகி விட்டாள். நேற்று தான் அவ்வளவு தூரம் கூறியிருக்கிறேன், இன்னும் இவன் இங்கேயே இருக்கிறானே என்ற எரிச்சலுடன்

“ஒழுங்கா நேத்து போல ஆபிஸ் ரூம்கு போயிடு… இல்லைனா” என்று மிரட்டியவளை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

“எனக்கு இருக்கிற டென்சன்ல இவ வேற. இன்னும் என்ன சொன்னா இந்தப் பொண்ணு சைலண்ட் ஆவானு தெரியலையே” என்று வாய்க்குள் முணுமுணுத்தவனின் பார்வையில் அங்கிருந்து செல்ல முடியாது என்ற செய்தி அழுத்தமாக எழுதியிருக்க அஸ்மிதா சுற்றி முற்றி பார்த்தவள் மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தாள்.

தேவ் அவளைக் கேள்வியுடன் பார்க்கும் போதே முழு பாட்டில் தண்ணீரையும் மெத்தையில் ஊற்றிவிட்டாள் அஸ்மிதா. தேவ் வேகமாக எழுந்தவன் கடுப்புடன் “பைத்தியம் பிடிச்சிருக்கா உனக்கு? எதுக்கு பெட்ல தண்ணிய ஊத்துன?” என்று கத்தவும்

“அப்பிடியாச்சும் நீ இங்க இருந்து போவியானு பார்க்கத் தான் ஊத்துனேன்… ஆனா நீ போக மாட்டல்ல… எனக்கு உன் முகத்தைப் பார்க்கவே பிடிக்கல தேவ்… உன்னைப் பார்க்கிறப்போலாம் நீ என்னைக் காதலிக்கிற மாதிரி நடிச்சது மட்டும் தான் நியாபகத்துக்கு வருது… என் தைரியம் புத்திச்சாலித்தனம் எல்லாத்தையும் புல் மேய விட்டுட்டு உன்னை மாதிரி ஒருத்தனை போய் காதலிச்சிருக்கேனேனு நினைக்கிறப்போ எனக்கு என்னைப் பத்தி யோசிச்சாலே அருவருப்பா இருக்கு தேவ்” என்றவளின் வார்த்தையில் முகம் இறுகினான் ஜெயதேவ்.

அவன் அமைதியாக நிற்கவும் அஸ்மிதாவின் கோபம் விஸ்வரூபம் எடுத்தது. அந்தக் கோபத்தில் வார்த்தைகளின் வீரியத்தை உணராது அள்ளி வீசத் தொடங்கினாள் அவள்.

“உன் ஃபர்ஸ்ட் ஒய்பை உன்னால காப்பாத்த முடியல… இந்த லெட்சணத்துல என்னோட சேப்டிக்காக நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டியா? நீ சொல்லுறதை மத்தவங்க வேணும்னா கேட்டுட்டு உச்சிக் குளிரலாம்… ஆனா நான் சமாதானம் ஆக மாட்டேன் தேவ்… அதே மாதிரி எல்லாமே மானசாவுக்காக தான் பண்ணுறேனு நீ ஒரு வார்த்தை சொல்லுறியே, அதையும் நான் நம்ப மாட்டேன்… அவங்களை நீ உண்மையா காதலிச்சிருந்தா உன்னால எப்பிடி என்னைக் கல்யாணம் பண்ணிக்க முடிஞ்சுது? உன்னைப் பார்க்கிறப்போலாம் எனக்கு நீ மானசாவோட ஹஸ்பெண்டா மட்டும் தான் தெரியுற… அவங்களோட கனவை நிறைவேத்துறேனு சொல்லி உன் அப்பாக்கு நேர்ந்த அவமானத்துக்குப் பழி வாங்க என்னைப் பணயமா வச்சு ஷேர்சை ஏமாத்தி எழுதி வாங்குன சந்தர்ப்பவாதி நீ… உனக்கு ஒரு பொண்ணோட காதல் அவ்ளோ ஈசியா போயிடுச்சுல்ல… நீ நல்ல புருசனும் இல்ல.. நல்ல மனுசனும் இல்ல… நீ ஒரு சுயநலவாதி தேவ்”

மனதிலுள்ள கோபம் எரிமலையாய் வெடித்துச் சிதற அஸ்மிதா முகம் சிவக்க நின்ற கோலம் தேவ்விற்கு வருத்தத்தைக் கொடுத்தது என்றால் அவள் சொன்ன ‘சந்தர்ப்பவாதி, சுயநலவாதி’ என்ற வார்த்தைகள் எல்லாம் அவனுக்குள் பெரும் வலியை உண்டாக்கியது. இதற்கு மேல் இங்கேயே இருந்தால் ஒன்று அவன் அஸ்மிதாவிடம் கோபத்தை வெளிக்காட்ட வேண்டும். இல்லையென்றால் உடைந்து அழ வேண்டும்

ஆனால் இரண்டையும் அவனால் செய்ய முடியாது. ஏனோ அவனால் அஸ்மிதாவிடம் கோபப்பட முடிவதில்லை. அதே சமயம் அவன் உடைந்து அழுதால் ஆறுதல் சொல்ல அவள் பழைய அஸ்மிதாவும் இல்லை அவன் அவளது ஜெய்யும் இல்லை. தான் இப்போது ஜெயதேவ் ஆகிவிட்டதை உணர்ந்தவன் இந்நிலையில் இங்கிருந்து செல்வது தான் சிறந்தது என்ற முடிவெடுத்துவிட்டுத் தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

அவனது அலுவலக அறையின் கதவு திறக்கப்படும் சத்தமும் அதைத் தொடர்ந்து சில நிமிட இடைவெளிக்குப் பின்னர் அவனது கார் கிளம்பிச் செல்லும் சத்தமும் அஸ்மிதாவின் செவிகளில் விழுந்தது.

அதே நேரம் அஸ்மிதா தேவ்விடம் கேட்ட அதே கேள்வியை சேகர் வில்லாவில் இஷானி ருத்ராவிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“ஃபர்ஸ்ட் ஒய்ப் மேல அவ்ளோ லவ் இருந்தா தேவ் ஏன் செகண்ட் மேரேஜ் பண்ணிக்கணும்? ஷேருக்காக அஸ்மியை கல்யாணம் பண்ணிக்கலனா அப்போ அவரு அஸ்மியை லவ் பண்ணுறாரா? எப்பிடி ஒரு மனுசனால ரெண்டு பொண்ணுங்களை காதலிக்க முடியும்?”

ருத்ரா இஷானியைக் கூரியவிழிகளால் ஏறிட்டவன் நிதர்சனம் புரியாமல் பேசும் அவளது குணத்தை எண்ணி அழுவதா சிரிப்பதா என்று புரியாது சிகையைக் கோதிக்கொண்டான்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛